Jan 4, 2014

2014 - தமிழில் ‘உலக சினிமா’ நிச்சயம் வரும்.

நண்பர்களே...
உலக சினிமா என்றால்  ‘பிட்டுப்படம்’ என ‘தமிழ் சினிமா பார்க்கும் கிணற்றுத்தவளை’ கத்தி வருகிறது.
 ‘உயிர்மை’ கொடுத்த விருதில் மயிர் முளைத்து  மீசை முறுக்கித்திரிகிறது.
 ‘சுட்ட கதையை’ ‘இதுவரை யாரும் ‘சுடாத தோசை’ என
'வெங்காய விளக்கம்’ கொடுக்கிறது.
கிணற்று தவளை  ‘யுவனுக்கு’, இந்த பதிவு ‘கிருஷ்ணார்ப்பணம்’.


‘உலக சினிமா’ என்றால் பாமர ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியாது என்ற போலி பிம்பத்தை உடைத்து வருபவன் நான்.
உலக சினிமாவாகவும் இல்லாமல்,
வணிக சினிமாவாகவும் இல்லாமல்...
அரைவேக்காட்டுத்தனமாய் எடுக்கப்படும் படங்களையும்...
காட்டுத்தனமாக கத்தி காட்டிக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறேன்.
 ‘வணிக சினிமா வளையத்திற்குள்’ இருந்து கொண்டு,
ரசிகனை  ‘உலக சினிமா’ எல்லைக்கு நகர்த்தும்
‘ஓநாயும் ஆட்டுக்குட்டி’விஸ்வரூபம், பரதேசி’ போன்ற படங்களையும் கொண்டாடி வருகிறேன்.
எனது அடுத்தக்கட்ட முயற்சியாக,
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று,
 ‘கற்றதனாலாய பயனை’ வழங்கி வருகிறேன்.
இவையெல்லாம் எதற்காக?


உயர்ந்த  ‘உலக சினிமாவை’ தமிழுக்கு கொண்டு வர வேண்டும்.
ஏ.ஆர்.ரஹ்மான் நின்ற இடத்தில் தமிழ் பேசி விருது வாங்கும் படைப்பாளி வர வேண்டும்.
சத்யஜித்ரே சதம் அடித்த ‘கான் திரைப்படவிழாவில்’ என் தமிழன் மகுடம் பெற வேண்டும்.
அகந்தை பிடித்த ‘அண்டை நாட்டுக்காரன்களிடம்’,
‘எங்காளும் வந்துட்டாண்டா’ என எக்காளமிட வேண்டும்.

என் ஏக்கமெல்லாம் 2014 தீர்த்து வைத்து விடும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டது.
நீங்களும் நம்பிக்கை வையுங்கள்.
அந்த நம்பிக்கை,
‘தமிழ்நாட்டில் பிறந்த சத்யஜித்ரேயையும்...
ரித்விக் கட்டக்கையும்’ அடையாளம் காட்டும்.