Showing posts with label ஸ்பெயின். Show all posts
Showing posts with label ஸ்பெயின். Show all posts

Jul 23, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை...குற்றவாளியாக்கிய காவியம்-5 Final Part


கமினோவை ஐந்து பதிவுகளில் முடிப்பது சவாலாகவே இருந்தது.

‘குருவி’ ரசிகர்களுக்கும் புரியும்...எளிதான குறியீடுகளைப்பற்றி விளக்குவதை விலக்கி...
நிறைய காட்சிகளை, கோடார்டு பாணியில்  ‘ஜம்ப் கட்’ எடிட் செய்து...
 முடிக்க முயல்கிறேன்.

கமினோ படத்தை, கவியரசர் கண்ணதாசன் பாடலோடு ஒப்பீடு செய்யும் போது இப்பதிவு புதிய பரிமாணம் பெறுகிறது.
சாந்தி நிலையம் [1969 \ தமிழ்] என்ற  படத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் இடம் பெற்ற பாடல் இது.

கடவுள் ஒரு நாள், உலகை காண... தனியே வந்தாராம்.
கண்ணில் கண்ட மனிதரையெல்லாம், நலமா? என்றாராம்.

ஒரு மனிதன், வாழ்வே இனிமை என்றான்.
ஒரு மனிதன், அதுவே கொடுமை என்றான்.
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்.

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது.
காசும்,பணமும், ஆசையும்... இங்கே யார் தந்தது?
எல்லையில்லா நீரும் நிலமும் நான் தந்தது.
இன்பம்,துன்பம்...என்னும் எண்ணம் ஏன் வந்தது?

இறைவனுக்கே இது புரியவில்லை.
மனிதனின் கொள்கை தெரியவில்லை.

பள்ளிக்கூடம் செல்லும் வழியில், கடவுள் நின்றாராம்.
பச்சை பிள்ளை, மழலை மொழியில்... தன்னை கண்டாராம்.
உள்ளம் எங்கும், செல்வம் பொங்கும் அன்பை தந்தாராம்.
உண்மை கண்டேன்...போதும் என்று வானம் சென்றாராம்.

பாடலை முழுமையாக கேட்க...
http://oldtamilmp3.blogspot.in/2009/09/shanthi-nilayam-1969.html

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் கொண்ட  ‘சிண்ட்ரெல்லா’ கருத்தாக்கம்... கமினோ படம் நெடுகிலும் இழையோடுவதை காணலாம்.
கண்ணதாசன் பாடலின் தத்துவத்திற்கு, நேர் முரணாக... மதவாதிகள் இயங்குவதையும் காண முடியும்.

கமினோவின் விருப்பமான  ‘வியன்னா’ குழப்பமடைய வைத்தாலும்,
ஏனையவற்றை நிறைவேற்ற எண்ணுகிறார் கமினோவின் தந்தை.
சூப்பர் 8எம்.எம். கேமராவில் கமினோவை படம் பிடிக்கிறார்.
அவள் விரும்பிய  ‘அறிவியல்  புனைவு’கதை நூலை வாங்கி படித்து காட்டுகிறார்.
இக்கதையின் நாயகர்  ‘மிஸ்டர் மீபல்ஸ்’ கமீனோவின் கற்பனை காட்சிகளிலும் இடம் பெறுவார்.
 ‘மீபல்ஸின்’ தோற்றம்  ‘அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டினின்’ மினியேச்சர் போல் அமைத்திருப்பதும் குறியீடே.
ஐன்ஸ்டைன், “ Imagination is greater than knowledge ” என அறிவியலை கடந்து அழகியலுக்குள் பிரவேசித்தவர்.


கமினோவின் விருப்பமான ‘சிவப்பு வண்ண ஆடையை’ ...
சொந்த ஊரான மாட்ரிட் நகருக்கு போய் வாங்க...காரில் விரைகிறார்.
கடையில் ஷோ கேஸில்...
கமினோவுக்காகவே காத்திருந்த ‘சிவப்பு வண்ண ஆடையை’ வாங்குகிறார்.
சூப்பர் 8 எம்.எம். பிலிம் ரோலை டெவலப்பிற்கு கொடுக்கிறார்.
மகளுக்கு பிடித்தமான கேக் வாங்க...பேக்கரிக்கு செல்கிறார்.
ஜீசஸ்சும் அங்கே இருக்கிறான்.
கமினோவை விசாரிக்கிறான்.
இவர், அவர்களது  ‘சிண்ட்ரெல்லா’ நாடகம் பற்றி விசாரிக்கிறார்.
கேக் வாங்கி,விடை பெறுகிறார்.
“குட் பை ஜீசஸ்”
வெளியே வந்ததும் கடை போர்டை பார்க்கிறார்.
                                    வியன்னா பேக்கரி
எல்லா திரைகளும் விலகி...தெளிவாகிறது.
மீண்டும் உள்ளே சென்று,
 “கமினோவுக்கு தர, உன்னிடம் கடிதம் இருக்கிறதா?:”

கமினோவின் அன்பிற்குறியவனை கண்டு கொண்ட ஆனந்தத்தில் காரில் விரைகிறார்.
பக்கத்து இருக்கையில்  ‘காதலின் சின்னம்’ வரையப்பட்ட கடிதம் இருக்கிறது.
கடிதத்தை பெருமிதத்துடன் பார்க்கிறார்.
                                                        டமார்
கண நேர கவனச்சிதறல்...ராட்சத லாரியில் மோதி  நொறுங்க போதுமானதாக இருந்தது.

கமினோவின் மரணத்தை நோக்கி நகர்ந்த திரைக்கதை, எதிர்பாராத திருப்பமாக
தந்தையின் மரணத்தை காட்டுகிறது.
கமினோவால் ஏற்பட்ட டிராஜிடி...இப்போது பன்மடங்கு பெருகி...கருணையில்லாமல் தாக்குகிறது.
ஹிரோஷிமா,நாகசாகி போல் நொறுங்கிப்போகிறோம்.

கமினோ, தோழி அனுப்பிய கவரை பிரித்து காட்டுமாறு தாயிடம் வேண்டுகிறாள்.
 ‘ஜீசஸ் லவ்ஸ் யூ’ என அச்சிடப்பட்ட  ஜீசஸ் படத்தை  ‘குறியீடாக’ அனுப்பியிருக்கிறாள் தோழி.
கமினோவிடம் காட்டுகிறார் தாயார்.

 “தயவுசெய்து என்னிடம் காட்டுங்கள் அம்மா”
கமினோவின் கண்களில்... உயிர் போய் விட்டது தெரிய வருகிறது.
போன் வருகிறது.
கணவன் உயிர் போய் விட்டது தெரிய வருகிறது.
குலுங்கி அழுகிறார்.
யதார்த்த மனுஷியாக பரிணாமம் பெற... இப்படியா  ‘இடுக்கண்’ வர வேண்டும்?
கணவனின் இறுதி சடங்கில் கூட இறுக்கமாகவே இருக்கிறார்.
பாதிரியார்கள் வழக்கம் போல,கமினோவின் தந்தை மரணத்திற்கு...
கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

கமினோவை வழியனுப்ப பாதிரியார்கள்,டாக்டர்கள்,நர்ஸ்கள் என அனைவரும் திரண்டு விட்டனர்.
ஹாஸ்டலிலிருந்து நூரியையும் அனுப்பி வைக்கிறார்கள்.
இருக்கைகள் காலியாக இருக்க,
நூரி பஸ்ஸில்  நின்று கொண்டே பயணிப்பது...குறியீடு.

கமினோவின் ஊரான மாட்ரிட் நகரில், அவளது நண்பர்கள் நடிக்கும்  ‘சிண்ட்ரெல்லா’ நாடகம் நடைபெறுகிறது.
நாடகம் நடக்கும் இடத்தில், ஆத்ம ரீதியில் கமினோ சஞ்சரிப்பது...டயலாக் மூலம் உணர்த்தப்படுகிறது.
டாக்டர்கள் ஆக்சிஜன் செலுத்தப்படுவதை நிறுத்துகிறார்கள்.
கமினோ தனது கற்பனை உலகத்தில் பிரவேசிக்கிறாள்.

தான் விரும்பிய  ‘சிகப்பு ஆடை’ அணிந்திருக்கிறாள்.
ஜீஸசுடன் நடனம் ஆடுகிறாள்.
முத்தம் கொடுக்கிறாள்.

மரணப்படுக்கையில் படுத்திருக்கும் கமினோ முத்தம் கொடுப்பது போல் உதட்டை குவிக்கிறாள்.
தந்தை வருகிறார்.
 “அப்பா...”
தந்தையை கட்டி பிடிக்கிறாள்.
சிட்டுக்குருவிகள் கூட்டம் பறந்து... இருவரையும் கடக்கின்றன.


சிட்டுக்குருவிகள் பறப்பதை ஜன்னல் வழியாக பாதிரியார் பார்க்கிறார்.
கமினோவின் கண்கள் திறந்திருக்க,
இதழ்களில் நிரந்தர புன்னகையை விட்டு விட்டு...
ஆன்மா பறந்து விடுகிறது.

 ‘எதற்காகவோ’ பாதிரியார், வெறி பிடித்தவர் போல கை தட்ட...
டாக்டர்கள்,நர்ஸ்கள்,ஏனைய மத குருமார்கள் அனைவரும் கை தட்டலில் சேர்ந்து கொள்கிறார்கள்.
இது Faith.
ஒருங்கிணைந்த கை தட்டல்கள்... அபஸ்வரமாய் ஒலிக்கிறது.

கமினோவின் தாயும்,அக்காவும் மட்டுமே கதறியழுகிறார்கள்.
இது Human Sensuousness.

 ‘கனேனைஷேசன்’பிராஸசில், இறுதிப்பகுதியாக இறந்தவர்களை புகைப்படம் எடுப்பது வழக்கம்.
பாதிரியார் கமினோவை புகைப்படம் எடுக்கலாம் என தெரிவிக்கிறார்.
அதற்கு தாயார் எந்த சம்மதமும் தெரிவிக்காமல், கமினோவின் உடலை... மார்போடு கட்டித்தழுவி பாதுகாக்கிறார்.
அவர் மதவாத நம்பிக்கைகளுக்கு எதிராக, திரும்பி விட்டதன் குறியிடுதான் இக்காட்சி.

கமினோவில் கற்பனைக்காட்சியில் இடம் பெற்ற குறியீடுதான்...
கீழே உள்ள புகைப்படம்.
இதற்கான விளக்கத்தை முதல் பதிவில் சொல்லவில்லை.
இப்போது சொல்ல தேவையில்லை.

கமினோவின் இறுதிச்சடங்கு முடிந்த பின் வரும் காட்சிகள் அனைத்தும் குறியீடுகளாக காட்சியளிக்கிறது.

கமினோ கொடுத்த  ‘மிஸ்டர் மீபல்ஸ்’ கதைப்புத்தகத்தை ‘உபயோகமற்றவை’ என்ற கூடையில் போடாமல்...
ஷெல்பில் அடுக்கி வைக்கப்பட்ட நூல்கள் வரிசையில்....
 ‘கமினோ’ என்ற நூலுக்கு அருகில் வைத்து விட்டு குலுங்கி அழுகிறாள் நூரி.

கணவர் சூப்பர் 8 எம்.எம்மில்எடுத்த,
கமினோ ஆடிப்பாடும் காட்சிகள்...
பிறந்த நாள் கொண்டாட்டங்கள்...
என கடந்த காலத்தின் தருணங்களை திரையில் பார்க்கிறார் தாயார்.

இனி, ' போலி ' மத நம்பிக்கைகளை விடுத்து...
யதார்த்த உலகில் பிரவேசிப்பார்கள் என்ற நம்பிகையை இக்குறியீடுகள் தருகின்றன.

கமினோ என்றால், ஸ்பானிஷ் மொழியில்... பாதை என்று அர்த்தம்.
பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவில் உள்ள வாழ்க்கை போராட்டத்தை கடக்க எந்த பாதையை தேர்ந்தெடுப்பது  என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர்.
அதே வேளையில் மதவாதிகள் உச்சந்தலையில் ஆணியடித்து ஆசனவாய் வரைக்கும் இறக்கியிருக்கிறார்.

                            'Aesthetics Replaces Faith'
‘மாபெரும் இயக்குனர் பெர்க்மன்’ மத நம்பிக்கைகளுக்கு மாற்றாக கலை இயங்கும் என நம்பினார்.
இக்கருத்தையே தனது படங்களின் பரப்புரையாக வைத்தார்.
கமினோ இயக்குனர் அதை... வழி மொழிந்திருக்கிறார்.

அரசியல் மாமேதை லெனின்,
 “ மனித இனம் தனக்குதானே தன்னம்பிக்கை கொள்ளும் வரை...
மத நம்பிக்கைகள் ஊன்று கோலாக இருந்து விட்டு, போகும்...”
என்ற கருத்தை சொன்னார்.

கமினோ,அவளது தந்தையும் மனித நேயம்,கலை,அறிவியல் என்ற அழகியலில் வாழ்ந்து மறைந்தார்கள்.
கமினோவின் தாயும்,அக்காவும் மதி மயக்கும் மத நம்பிக்கைகளிலிருந்து மீண்டு...தங்கள் மீது நம்பிக்கை கொண்டு அழகியலில் வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

மற்றவர்கள் எப்போது ஆரம்பிப்பார்கள்?

Jul 20, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை...குற்றவாளியாக்கிய காவியம்-Part 4


கமினோவை பார்ப்பதற்கு முன்... மேல் நாட்டு கவிதை ஒன்றை பார்ப்போம்...
மேலுலகில் கடவுள்கள் வரிசையாக நின்று கொண்டு...
பூவுலகில் நாம் படும் துன்பங்களை பார்த்து...
ரசித்து, சிரித்துக்கொண்டிருப்பார்களாம்.
ஆனால், அவர்கள் பிடித்துக்கொண்டு நின்றிருந்த...
கோல்டன் பார் லேசாக சூடானது...
என முடித்திருப்பார் கவிஞர்.
  ‘சூடானது’... ஹ்யூமன் சென்சுயஸ்னஸ்.

Human Sensuousness = Aesthetics

கமினோவில் வருகின்ற பாதிரியார்கள் சேடிஸ்ட்களாக மட்டும் இயங்குவதை படம் முழுக்க காணலாம்.

கமீனோவின் தந்தை...  நூரி ஹாஸ்டலுக்கு வருகிறார்.
கையில் நூரியின் காதலன் புகைப்படம்,அவன் எழுதிய காதல் கடிதங்கள் அடங்கிய கவரும்...கிடாரும்.
நூரியை உள்ளே வைத்துக்கொண்டே...அவள் இல்லை என பொய்யுரைக்கிறார்கள்.
கவரை மட்டும் பெற்றுக்கொண்டு... கிடாரை அனுமதிக்க மறுக்கிறார்கள்.

இந்த கிட்டார்தான் கமீனோவின் கனவுலகில் குறியீடாக வந்தது.
கமீனோ... தனது  அக்காவை, சென்சுயஸ்னஸ் நிலையில் இருப்பதாக தனது கனவுலகை வடிவமைத்திருப்பது... அந்த காரெக்டரின் உயர்தன்மையை மேலும் லிப்ட் செய்கிறது.

கமினோவை, பாதிரியார்  ' Canonization ' மெத்தடில் ‘ செய்ன்ட் ’ [Saint] ஆக்க முயற்சிக்கிறார்.
 கனேனைசேஷன் என்பதற்கு விக்கிப்பீடீயாவின் விளக்கம்...
Canonization (or canonisation) is the act by which a Christian church declares a deceased person to be a saint, upon which declaration the person is included in the canon, or list, of recognized saints. Originally, individuals were recognized as saints without any formal process (as it is still done in the Orthodox Church). The process is most commonly used in, although not limited to, theCatholic Church.


கன்னியாஸ்திரி ஒருவர்... நூரியின் காதலன் புகைப்படம் மற்றும்
காதல் கடிதங்கள் அனைத்தையும் ரகசியமாக மறைத்து விட்டு...
நூரியை மூளைச்சலவை செய்கிறார்.
அவர் பரப்புரையில் இந்த வசனத்தை மட்டும் நினைவில் கொள்வோம்.
 “ நான் பஸ்ஸில் போகும் போது, இருக்கைகள் காலியாக இருந்தால் கூட நின்று கொண்டேதான் போவேன் ”

மீண்டும் ஆப்ரேஷன்...மீண்டும் நிலமை மோசம்...
மீண்டும் பாதிரியார்... மீண்டும் கனேனைசேஷன் பிராசஸ்...
முத்தாய்ப்பாக பாதிரியார் சொல்வது,
 “ Love Jesus ”
 “ That's What I Do ” என்கிறாள் கமினோ.
‘ஜீசஸ்’ என்ற வார்த்தை,  கடவுள் என்ற பதத்திலும்...
கமீனோவின் பாய் பிரண்டின் பெயர் என்ற பதத்திலும்...
இயங்கிய, இயக்குனரின் வார்த்தை விளையாட்டை மிகவும் ரசித்தேன்.

மேலும், கமினோ பாய்ண்ட் ஆப் வியுவில்...
 ஜீசஸ் என்ற வார்த்தை... பாய்பிரண்டை மட்டும் குறிக்கிறது என்பதை பார்வையாளராகிய நாம் புரிந்து கொள்கிறோம்.
படத்தில் உள்ள கேரக்டர்கள் யாருக்கும் அது புரியவில்லை.
யார் புரிந்து கொள்ளப்போகிறார்கள்? என்ற  'Isotope'
சஸ்பென்ஸ் உத்திதான்...இப்படத்தின் ஹிட்ச்ஹாக் பேவரைட் பார்முலா.

 தந்தை வீட்டுக்கு போக...நூரி கமினோவுக்கு துணையாக இருக்கிறாள்.
ஷெல்பில் கிடாரை பார்த்ததும்...மீட்டி பாடுகிறாள்.

அப்போது,
 ‘காலியாக இருக்கும் மருத்துவமனையின் நீளமான வராண்டா ஷாட்’ போடுவார் இயக்குனர்.
பாதி இருட்டு...
பாதி வெளிச்சம்...
இருட்டு முன்னணியிலும்,வெளிச்சம் பின்னணியிலும் இருக்கிறது.
நூரிக்குள் இருக்கும் மதநம்பிக்கையை, இருட்டாகவும்...
சென்சுயஸ்னஸ்ஸை, வெளிச்சமாகவும்...
இக்குறியீட்டை கொள்ளலாமா?

மறுநாள் காலையில் திரும்பி போகும் போது,விதவிதமான மாடர்ன் டிரஸ் போட்ட ஜவுளிக்கடை பொம்மைகளை சென்சுயஸ்னஸ்ஸாக பார்க்கிறாள்.
ஒரு கணம்தான்...
மண்டைக்குள் ‘ மத நம்பிக்கை ’ அபாயமணி அடிக்க...
பார்வையை உடனே புறக்கணித்து,தலையை திருப்பி நடக்கிறாள்.
‘மத நம்பிக்கை’  என்ற வட்டத்திலிருந்து நூரி மீண்டு வருவாளா? என இக்காட்சி மூலம் கேள்வி எழுப்பி உள்ளார் இயக்குனர்.

நோயின் இறுதி வட்டத்துக்குள் வந்து விட்டாள் கமீனோ.
வலியின் தாக்குதலை தாள முடியாமல் அவள் கேட்கும் கேள்விகள்...
கர்த்தரை மீண்டும் சிலுவையில் அறையும் ஆணிகள்.
தான் விரும்பிய சிகப்பு ஆடையை வாங்கித்தரவும்...
வியன்னா... கூட்டிப்போகவும் வற்புறுத்துகிறாள்.

வியன்னாவா?
தந்தை குழம்புகிறார்.
நானும் குழம்பினேன்.
அடுத்த பதிவு வரும் வரை... நீங்களும் குழம்புங்கள். 

Jul 18, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை குற்றவாளியாக்கிய காவியம்-Part 3


நண்பர்களே...ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட... பதினோரு திரைப்படங்களையும் எழுதி விட்டு, ஹேராமை தொடர எண்ணியுள்ளேன்.
அனைவரும் பொறுத்தருள்க.

கமீனோ படத்தில் காட்டப்படுவது போல்...நம்மூரிலும் கார்ப்பரேட் சாமியார்கள் ஆசிரமங்களில் மூளைச்சலவை செய்யப்படுகிறது.
முதல் நாள்  ‘நானே கடவுள்’ என்கிறான்.
அடுத்த நாளே கைதானதும்... ஜாமீனுக்கு விண்ணப்பிக்கிறான்.
கடவுளுக்கு எதற்கு ஜாமீன்? என யோசிக்க வேண்டாமா...செம்மறியாடுகள்.?
 ‘மூளைச்சலவை’ யோசிக்க விடாது.

கமீனோவை பார்க்க வரும் தோழியோடு, நாமும் இணைந்து கொள்வோம்.
நோயாளிகளுக்கு நண்பர்கள் வருகை, என்றுமே உவகைதான்.
கமீனோ,நாட்டிய நாடகம் பற்றி விசாரிக்கிறாள்.
பாய் பிரண்ட் ஜீசஸ்... அதில்தானே இருக்கிறான்!.
நாடகக்குழுவினர் அனைவரும், அதே காஸ்ட்யூமோடு கமீனோவை பார்க்க வருவதற்கு... ஜீசஸ் திட்டமிட்டுள்ளான் என்ற செய்தியை தோழி சொல்கிறாள். அந்தக்கணமே...கமீனோ  கற்பனை உலகத்தில் பிரவேசிக்கிறாள்.
அந்த பரவச உலகை காண...நமது கற்பனை குதிரையை தட்டச்சொல்லி,சாதுர்யமாக  ஒதுங்கி விடுகிறார் இயக்குனர்.

நோயின் தீவிர பரவலை தடுக்க, கீமோதெரபி சிகிச்சை நடக்கவிருப்பதாக தந்தை கனிவோடு தெரிவிக்கிறார்.
நண்பர்கள் வருகைக்கு பிறகு அச்சிகிச்சையை  ஆரம்பிக்க ஆசைப்படுகிறாள்.
காரணம்...தலை முடியை இழக்க வேண்டியது வரும் என்ற அச்சத்தால்.
 “உன் விருப்பப்படியே செய்வோம்” என ஆதுரவாக தலையை தடவுகிறார்.
முடி கொத்தாக... கையோடு வருகிறது.

கிளாஸ்மேட்களை...பள்ளி அறையிலேயே சந்திக்க வருகிறாள்...முடி இழந்த கோலத்தோடு.
தோழியை பார்த்து... கண்ணடிக்கிறாள்.
இங்கே, கண்ணடித்தல்...கமீனோவின் உற்சாக மனநிலைக்கு குறீயீடாகிறது.
இக்குறியீட்டின் கனோட்டேஷன்...
பார்வையாளர்களை, துன்ப நிலைக்கு தள்ளுகிறது.
நண்பர்களை கடிதம் எழுதச்சொல்லி...வேண்டி விடை பெறுகிறாள்.

அதே நேரத்தில் தந்தை, வீட்டில் கமீனோ ரகசியமாக வைத்திருந்த பொருட்களை கண்டெடுக்கிறார்.
தான் பிறந்த நாள் பரிசாக வாங்கி கொடுத்த  ‘குட்டி மியுசிக் பாகஸ்’...
‘கமீனோவின் கனவுக்காட்சியில் காட்டப்பட்ட நூரியின் காதலன்’ புகைப்படம்...
அவன் நூரிக்கு எழுதிய காதல் கடிதங்கள்...

மருத்துவமனைக்கு முதன் முதலாக அக்கா நூரி வருகிறாள்.
வந்திருப்பவள்  ‘அக்கா ’ அல்ல...
மூளைச்சலவை செய்யப்பட்ட  ‘கன்னியாஸ்திரி’...
எனப்புரிந்து கொள்கிறாள் கமீனோ.

தந்தை வருகிறார்.
பாசத்தோடு நூரியை விசாரிக்கிறார்.
 “உன்னிடம் சேர வேண்டிய பொருள்கள்...
காரில் இருக்கிறது.
எடுத்துக்கொள்”என்கிறார்.
 “அப்புறம் பார்க்கலாம் ”
 கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்...உடனே ஹாஸ்டல் போகவேண்டுமென இயந்திரமாக செயல்படுகிறாள் நூரி.
கமீனோ பகலிலிருந்தே தூங்கிகொண்டே இருக்கிறாள்...என தாயார் கூறி...நூரியோடு டின்னர் சாப்பிட கிளம்புகிறார்.

மகளின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என மெதுவாக மியூசிக் பாக்சை ஷெல்பில் வைக்கிறார்.
“கண்டு பிடிச்சிட்டீங்களா ” என்கிறாள் கமீனோ.
தாய்&சகோதரி... ' இரண்டு தீவிரவாதிகளிடமிருந்து ' தப்பிக்க தூங்குவது போல் கமீனா நடித்திருக்கிறாள் என்பது குறியீடாகிறது.
அக்கா,  காதலனை மறந்து ' பாதை ' மாறியது...தன் விஷயத்தில் நடக்காது என தெளிவாக உரைக்கிறாள் கமீனோ.

' Human Sensuousness ' என்ற இயல்பான அடிப்படையில் கமீனோவும். தந்தையும்...
முரணாக...
‘ Faith ’ என்ற அடிப்படையில் தாயும்,நூரியும் இயங்குகிறார்கள்.

முக்கியமான கடிதம் ஒன்றை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறாள் கமீனோ.

 “ போஸ்டல் டிபார்ட்மெண்டை நம்ப முடியாது.
நானே அந்த லெட்டரை வாங்கி வருகிறேன் ”

 “ தாங்க் யூ...மிஸ்டர் போஸ்ட் மேன் ”
என கமினோ தந்தையின் கன்னத்தை தடவுவது,   என் கண்களி

எழுத முடியவில்லை.ஸாரி.

Jul 16, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை... குற்றவாளியாக்கிய காவியம்-Part 2

கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் சப்-டைட்டில் இல்லாமல் பார்த்த கமினோவை...நண்பரின் உதவியால் சப்-டைட்டிலோடு திரும்ப...திரும்ப...பார்த்து வருகிறேன்.
காரணம்...கருத்துப்பிழை வந்து விடக்கூடாது என்ற பயத்தால்..

நரை,திரை,பிணி,மூப்பு,சாக்காடு இவற்றை ஆராய்ச்சி செய்தார்... சித்தார்த்தன் என்ற ராஜகுமாரன்.
ஞானம் பிறந்தது.
புத்தரானார்.
புத்தமதம் கிடைத்தது.
புத்தமதம் மனிதநேயத்தை வளர்ப்பதாக அசோக சக்ரவர்த்தியால் பரப்பப்பட்டது.
புத்தமதத்தை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு மனிதநேயத்தோடு நடந்ததா?
முள்ளிவாய்க்கால் சாட்சி சொல்லும்.

எல்லா மதங்களும் ஒரே அணிதான்.
எல்லா மக்களும் ஒரே அணிதான்...ஆனால் எதிர் அணியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வலியை ஏற்றுக்கொள்வதே கிருத்துவை அடையும் வழி என வலியுறுத்துகிறது மதம்.
மதத்தோடு... மருத்துவமும்... கை கோர்த்து கொண்ட  ‘முரண்பாட்டை’ கமினோவில் எடுத்துக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.

“மகளே...வலியை தந்த கர்த்தருக்கு நன்றி சொல்” எனக்கூறும்,
அதீத நம்பிக்கைகொண்ட கிருத்துவ தீவிரவாதியாக, தாயும்...
மதமோ...மருத்துவமோ...என் மகளை குணப்படுத்தினால் சரி...என சராசரி மனிதனாக தந்தையும்...இரு வேறு துருவங்களாக இயங்குவதை இப்படத்தில் காணமுடியும்.

மருத்துவமனையிலிருந்து கமீனோவும்,பொற்றோரும்...நூரியிடம் போனில் பேசுவதற்கு கூட ...கிறித்துவ தீவிரவாத அமைப்பு முன் கூட்டியே திட்டமிடுகிறது...கண்காணிக்கிறது....என்பதை காட்சி ரீதியாகவும்,
வசன ரீதீயாகவும் இயக்குனர் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருகிறார்கள்.
தாயால்,கமீனோவின் அறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.
தேவாலயத்தின்....இருண்ட பகுதி போல் இருக்கிறது.
கமீனோ மாற்றியமைக்கப்பட்ட அறையை விரும்பவில்லை என்பதை...அவளது கனவுக்காட்சி விளக்குகிறது.

அவளது நேசத்திற்குரிய எலி வருகிறது.
ஜன்னல் வழியே தாவிக்குதித்து பறந்து போகிறது.
அருகிலேயே டிஸ்னி வோர்ல்ட் காட்சியளிக்கிறது.
அறையில் கட்டிலில் குதித்து கும்மாளமிடுகிறாள் கமீனோ.
அவளது அறை பழையபடி கலர்புல்லாக காட்சியளிக்கிறது.
அறை முழுக்க சிறகுகள் பஞ்சு போல் பறக்கின்றன.


தாயார் வருகிறார்.
பின்னணி இசை ஆக்ரோஷமாக மாறுகிறது.
காமிரா கோணங்களால் தாயார்...  ராட்ஷச உயரமாக காட்டப்படுகிறார்.                   கமீனோ :  “நான் நல்லாயிட்டேன்.டான்ஸ் கிளாஸ் போகப்போறேன்.”                                   தாயார் : “ நோ...உன்னால் முடியாது. அங்கே பார்.”                                                     சுட்டி காட்டிய இடத்தில் சக்கர நாற்காலி இருக்கிறது.
கமீனோ தடுமாறி விழுகிறாள்.
எழ முயல்கிறாள்.
மீண்டும்...மீண்டும்...மீண்டும்....மீண்டும் விழுகிறாள்.


மீண்டும்....
புதிய மருத்துவமனை...புதிய பரிசோதனைகள்.... 
‘ஸ்கேன்’நர்ஸ் கொடூரமாக நடந்து கொள்கிறாள்.
டூட்டி நர்ஸ் கருணையுடன் நடந்து கொள்கிறாள்.
கமீனோ : “ உங்களைப்போல் எல்லோரும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.”
‘புரிந்து கொண்ட’டூட்டி நர்ஸ்:  “ஸ்கேன் நர்ஸ் அப்படித்தான்...
ரூடாக நடந்து கொள்வாள்.
அவள் கணவன் பிரிந்து சென்றதால் அப்படி ஆகி விட்டாள்.”

மீண்டும் ஸ்கேன்...
கமீனோ : [அழுது கொண்டே] “என்னை மன்னியுங்கள்.
எனக்கு நோய்வாய்ப்பட்ட அனுபவமில்லை.
அதனால் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை.
ஸாரி...உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபிப்பேன் "
பாறை இளகியது.
ஸ்கேன் நர்ஸ் : [கமினோவின் கன்னத்தை தடவியவாறு] “ நீ ஒரு தேவதை”

கமீனோவின் பிராத்தனை பலிக்கிறது.
 ‘ஸ்கேன் நர்ஸ்’ கணவன் வந்து சேர்ந்து விடுகிறான்.
கல்மிஷம் இல்லாத கருணை உள்ளம்...பிறருக்காக  ஜெபித்தால்...
கடவுள் செவி சாய்ப்பார் என்பது குறியீடாக்கப்பட்டுள்ளது.

கமீனோவின் அக்கா நூரியை...தங்கையை மருத்துவமனக்கு சென்று பார்ப்பதை... தள்ளிப்போடும் கிருத்துவ தீவிர வாத அமைப்பு, மாதம் தோறும் அத்தை வீட்டுக்கு மட்டும் சென்று வர அனுமதிக்கிறதே!
ஏன்?
விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
நூரியின் கூடவே வரும் அந்த அமைப்பின் உறுப்பினரிடம் கத்தையாக பணத்தை ஒரு கவரில் போட்டு கொடுக்கிறார் அத்தை.
அவரும் மூளைச்சலவை செய்யப்பட்டவரே!
இந்தக்காட்சி...  ‘மாமேதை’கார்ல் மார்க்ஸின் வரிகளை ஞாபகப்படுத்துகிறது.
 “சர்ச், தனது வழிபாடு மற்றும் கோட்பாடு முறைகளில்...பெரும்  மாற்றத்தை கொண்டு வர...கேள்வி எழுப்பப்பட்டால் கூட...பொறுத்துக்கொள்ளும்.
ஆனால்,அவர்களுக்கு வருகின்ற வருமானத்தை குறைக்கின்ற வகையில்...சிறு மாற்றத்தை கொண்டு வர... கேள்வி எழுப்பப்பட்டால், பொறுத்துக்கொள்ளாது.”

ஸ்பைனல் கேன்சர்...மருத்துவ சிகிச்சைக்கு அடங்காமல்...கமீனோவை மேலும்...மேலும் சிதைப்பதை,அடுத்த பதிவில் காண்போம்.     

Jul 14, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை...குற்றவாளியாக்கிய காவியம்-Part 1


ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் இரண்டாம் நாள்...
இரண்டாம் காட்சியில் காட்டப்பட்ட படம்... முதல் தரமாக இருந்தது.
மருத்துவமனையில் 14 வயது சிறுமியின் உயிர் பிரிகிறது.
பாதிரியார்கள்,டாக்டர்கள்,நர்ஸ்கள் கை தட்டுகின்றனர்.
இந்தக்காட்சி ஏற்படுத்திய அதிர்ச்சியை எழுத்தில் கொண்டு வர முடியாது.
கமினோவில்...அதிர்ச்சிகளை அடுக்கி கொண்டே போயிருக்கிறார் இயக்குனர்.
அதிர்ச்சிகள் அனைத்தும் நிஜம்.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக சப்-டைட்டில் வரவில்லை.
முதன் முதலாக... சப்-டைட்டில் இல்லாமல் ...பார்க்கும் பொன்னான வாய்ப்பு.
படத்தின் ஆன்மாவை... மிக நெருக்கமாக...சில சமயங்களில் முழுமையாக தரிசிக்க முடிந்தது.
கிடைத்த நீதி...இனி உலகசினிமாவை  ‘முதல் தடவை’ சப்-டைட்டில் இல்லாமல் பார்க்க வேண்டும்.

1985ல் Alexia Gonzalez-Barros என்ற 14 வயது வாழைக்குருத்தை  ‘நோயும்’...
‘கிருத்துவ தீவிரவாதமும்’ உருக்குலைத்த...உண்மை சம்பவத்தை படமாக்கி உள்ளார் இயக்குனர் Javier Fesser.

பிறப்பு...இறப்பு....இரண்டுக்கும் இடைப்பட்ட போராட்டமே வாழ்க்கை.
இப்போராட்டத்தை கடக்க, மதங்களும்...மருத்துவம் உள்ளிட்ட அறிவியல்களும்... உதவுகிறதா? என்ற கேள்விதான்,
இப்படத்தின் மையப்புள்ளியாக இயங்குகிறது.

 மருத்துவமனை...
உயிருக்கு போராடும் கமினோ... பாதிரியார்கள்,டாக்டர்கள்,நர்ஸ்கள்,உறவினர்கள் அனைவரும் கமினோவின் தாய் தலைமையில் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ட்ரீட்மெண்டை விட ஜெபிப்பதில்... நம்பிக்கை வைத்த கூட்டம்.

யாரிந்த கமினோ?
அவளுக்கு என்ன?
ஐந்து மாதம் பின்னோக்கி...பிளாஷ்பேக்கில் பயணிக்கிறது படம்.

பட்டாம்பூச்சிகள் படிக்கும் பள்ளிக்கூடம்.
சுறுசுறுப்பு+கலகலப்பு=கமினோ
தன் தோழியிடம் கண்ணடித்து பேசும் கமினோவை வர்ணிக்க நினைப்பதற்குள் அவளது தாயால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறாள்.
நட்ட நடு முதுகில் ஊசி ஏற்றி ரத்தம் எடுக்கப்படுகிறது.
 “டெஸ்ட் ரிசல்ட் வரட்டும்...ஒண்ணும் பயப்படத்தேவையில்லை.”
உலகம் முழுக்க டாக்டர்கள்...இதே டயலாக்தான்.

தோழியோடு டான்ஸ் கிளாசில் சேர ஆசைப்படுகிறாள்.
ஜவுளிக்கடை பொம்மை போட்டிருந்த  டிரஸ்சுக்கு ஆசைப்படுகிறாள்.
இரண்டுமே தாயால் நிராகரிக்கப்படுகிறது.
காரணம்... கர்த்தர்.
தாயார் தீவிரமான கர்த்தர் விசுவாசி.
மூத்த மகள் நூரியை, Opus Dei என்ற கிருத்துவ தீவிரவாத அமைப்பிடம் கொடுத்து விட்டாள்.
அவள்,  மூளைச்சலவை செய்யப்படுகிறாள்.
 “உன் பேமிலி நினைப்பே வரக்கூடாது...
அது பாவம்.
இனி நாங்கள்தான் பேமிலி.
இந்த எண்ணத்தை வளர்த்துக்கொள்... கர்த்தரை அடைய முடியும்.”

கமினோவுக்கு... அப்பா,அக்கா நூரி... என்றால் உயிர்.
கமினோவின் படுக்கைக்கு பக்கத்தில்,
மேரிமாதா சிலையும்,
கமினோ- நூரி இணைந்திருக்கும் புகைப்படமும் இருக்கிறது.
கமினோ தூங்கப்போகும் போது...
 “குட் நைட் அக்கா” என்பது... குறியீடு.

ஸ்டீரியோவில்... துள்ளல் இசை துடிக்க...கமினோ சுழன்றாடும் அழகை,
 மகள் அறியாமல்... சூப்பர்8 எம்.எம். கேமிராவில் படமாக்குகிறார் தந்தை.
நோய்... தனது முதல் சாட்டையை சொடுக்குகிறது.
 ‘சுளீர்’
வலியால் மகளின் நடனம் நின்று போனதை தந்தை கவனிக்கவில்லை.

 எதெற்கெடுத்தாலும் கர்த்தரை கொண்டாடும் அம்மாவிடம் பயம் மட்டுமே.
இருவருக்குமிடையே உள்ள வேறுபாட்டை காட்சி ரூபமாக சொல்லப்படுகிறது.
வீட்டிற்குள் சுதந்திரமாக வளைய வரும் சுண்டெலியை பிடிக்க பொறி வைக்கிறாள் அம்மா.
மாட்டிக்கொணட எலியை... “ மறுபடியும் மாட்டிக்கிட்டியா” என திறந்து விடுகிறாள் கமினோ.
தப்பித்து ஒடும் எலியிடம், “என்றாவது நீ எனக்கு திருப்பி நல்லது செய்வாய்” என்கிறாள்.
படத்தில் இந்த எலி மிக முக்கியமான குறியீடாக காட்டப்படுகிறது.

தோழியின் டான்ஸ் பிராக்டிஸ் கிளாசுக்கு போகிறாள் கமினோ.
அங்கே, அவளது கஸினை பார்த்தவுடன்....வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன...கமினோவுக்கு.
அவனை பார்த்ததும், கமினோவின் விழிகளில் ஏற்பட்ட மின்சாரத்தை சேமித்தால்...
தமிழ்நாட்டின் மின்வெட்டை தீர்த்து விடலாம்.

சமையல் கிளாசில்... தாள முடியாத தோள் வலி ஏற்படுகிறது.
கிளாஸ் முடிந்ததும்...அடைமழையில்....பிரியமானவனை காண...
 அவனது பேக்கரிக்கு வருகிறாள்.
காதலின் சின்னமான...ஹார்ட்டினை வரைந்து  ‘ஐ லவ் ஜீசஸ்’ என எழுதப்பட்ட காதல் கடிதத்தை வைத்திருக்கிறாள்.
ஜீசஸ்...அவனது பெயர்.
பேக்கரிக்குள்...கமினோவின் கிளாஸ்மேட்டோடு...
 ஜீசஸ் அன்னியோன்னியமாக பேசுவதைக்கண்டு...நாமும் உடைந்து போகிறோம்.
அடைமழை கூட.... கமினோவின் கண்ணீர் மழையை மறைக்க முடியாமல் தோற்றுப்போகிறது.

அடைமழையில் நனைந்து வந்த கமினோ...வலியால் துடிக்கிறாள்.
அம்மா: “ நனைஞ்ச டிரஸ்ஸை கழட்டிட்டு...வேற டிரஸ் மாத்தினா சரியாயிரும்.
காலை தூக்கு...”
கமினோ வலியால் கதற மட்டும் செய்கிறாள்.
அப்பா: “ ஏங்கண்ணு...இப்படி பண்ணுற...
காலை தூக்கினாத்தானே அம்மா டிரஸ் மாத்த முடியும்...”
கமினோ: “ இல்லைப்பா...காலைத்தூக்க  நினைக்கிறேன்.
என்னால முடியல....”

நோயின்... கொடூர ஆட்டத்தின்  அத்தியாயம் துவக்கப்பட்டு விட்டது...
மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு...விளக்கப்படுகிறது.
“ஸ்பைனல் கார்டில் ஆப்பரேஷன்...உடனே செய்யப்பட வேண்டும்.
பரலைஸ் ஆவதற்கு, வாய்ப்பிருக்கும்.... கிரிட்டிக்கலான ஆப்பரேஷன்.”

ஆப்பரேஷன் அப்பட்டமாக காட்டப்பட்டு...பார்வையாளனை அதிர வைக்கிறார் இயக்குனர்.
கமினோவின் வலியை... நம் மீது படரச்செய்யும் இயக்குனரின் உத்தி...மிகச்சரியாக வேலை செய்கிறது.
அதே சமயத்தில், ரசிகனை... கிளாஸ்ட்ரோ போபிக் சூழலில் வைத்து...
 அழுந்த வைக்காமல்...ஆசுவாசப்படுத்த, ஒரு தந்திரம் செய்கிறார்.
சர்ரியலிசப்பாணியில்...படம் முழுக்க கமினோவின் கற்பனை காட்சிகளை அமைத்து...அந்த பரவச உலகில் நம்மையும் பிரவேசிக்க செய்து வெற்றி காண்கிறார் இயக்குனர்.
சர்ரியலிஸக்கலையின் மாஸ்டர்... இயக்குனர் லூயி புனுவல் தரத்தில்... இப்படத்தின் சர்ரியலிஸக்காட்சிகள்.... மிகச்சிறப்பாக இருக்கின்றன.

கமினோவின் எலி வருகிறது.
ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து எழுந்து... எலியை தொடர்ந்து ஒடுகிறாள்.
மருத்துவமனையிலிருந்து...அழகிய கடற்கரைக்கு தாவுகிறது. 
அக்கா நூரி...,அவளின் மடியில் ஒரு வாலிபன் படுத்திருக்கிறான்.
அருகில் கிட்டார் இருக்கிறது.
பாய் பிரண்ட் ஜீசஸ்... கமினோவை பார்த்து புன்னகை புரிகிறான்.
தந்தை, சூப்பர் 8 எம்.எம். கேமிராவோடு வந்து படம் பிடிக்கிறார்.
நூரி கிட்டார் வாசிக்கிறாள்.
தண்ணீரில் கமீனோ காலை நனைக்கிறாள்.
சிட்டுக்குருவிகள் சிறகடித்து பறக்கின்றன. 


சிட்டுக்குருவிகள் பறந்து கடப்பதை... மருத்துவமனை ஜன்னல் வழியே கமினோவின் தந்தை பார்க்கிறார்.
கமினோவின் தாய்... பரபரப்பாக ஆப்பரேஷன் தியேட்டரை நோக்கி வருகிறார்.
பின்னணி இசை பரபரப்பாக ஒலிக்கிறது.
காற்று கொடூரமாக வீசுகிறது.
எலி பயத்தில் பதுங்குகிறது.
எல்லோருமே மாயமாக மறைகிறார்கள்.
தண்ணீரில்... மிகப்பெரிய வட்டமாக.... பள்ளம் ஏற்பட்டு... அத்தனை நீரும் நயகரா நீர்வீழ்ச்சி போல் பாய்கிறது.
பள்ளத்திற்குள் கமீனோ இழுக்கப்பட்டு கதறிக்கொண்டே மறைகிறாள்.

இக்காட்சிகளின் குறியீட்டின் விளக்கத்தை அடுத்த பதிவில் காண்போம்.

இப்படம் மட்டுமல்ல...திருவிழாவின் அனைத்து படங்களயும், இணையத்திலிருந்து டவுண்லோடு செய்து தரும் நண்பருக்கு...
இப்பதிவை அர்ப்பணிக்கிறேன்.

டிரைலர் காண...