Showing posts with label எஸ்ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ்ராமகிருஷ்ணன். Show all posts

Jun 24, 2011

கண்ணதாசன் விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கொடுக்கலாமா?

l
கண்ணதாசன் பால் குடித்து வளர்ந்த பிள்ளை நான்.
காந்திஜிக்குப்பிறகு தனது தவறுகளை,தப்புகளை ,திருவிளையாடல்களை அப்பட்டமாக சுயசரிதை எழுதிய மகான்.

எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது சென்னை ஜாம்பஜாரில் கண்னதாசன் பேசுகிறார் என்ற போஸ்டர் பார்த்து மாலை ஆறு மணிக்கே முதல் வரிசையில் நானும் ஒருவனாக இடம் பிடித்தேன்.
இரவு பத்து மணிக்கு சந்தனசில்க் சட்டையும்,பட்டு வேட்டியுமாக மாப்பிள்ளை போல் வந்தார்.
அப்போது அவர் காமராஜரின் பக்தர்.
கலைஞரையும்,அவரது ஆட்சியையும் கிழித்தார் பாருங்கள்....அடடா...
அத்தனையும் அமில மழை ...
ஆனால் அதில் தமிழ் ஆறாக ஒடியது.
திட்டப்பட்ட கலைஞரே ரசிக்கும் ரசவாத வித்தை இருந்தது.
அறம் பாடுவதிலும் தமிழரசன் அவர்.

அவரது புகழை பேச ஆரம்பித்தால் ராமாயணம் ஆகிவிடும்.
ஒன்றிரண்டை மட்டும் உங்களோடு பகிர்கிறேன்.

அத்திக்காய்... காய்...காய்... பாடல் தெரியும் உங்களுக்கு.
அப்பாடல் பதிவின் போது ஒருவர் கேட்டிருக்கிறார்...
“முக்கியமான காயெல்லாம் சொல்லிட்டீங்க...கொத்தவரைக்காயை விட்டு விட்டீர்களே !”என பகடி பண்ணியிருக்கிறார்.
நெற்றி சுருங்கியது......அடுத்த கணமே தமிழை கொட்டியது.

“என்னை நீ காயாதே...கொற்றவரைக்காய் வெண்ணிலவே”

தமிழ்க்கடல் அல்லவா அவன்.

மணப்பந்தல் என்றொரு படம்.
 காதல் கதை.
 காதலியின் தந்தை மகளின் காதலுக்கு மறுப்பு சொல்லாமல் காதலன் வீட்டுக்கு சென்று திருமணம் பேசி முடிக்கச்செல்கிறார்.
ஆனால் அறியாமல் காதலனின் அண்ணனை பேசி முடிவு செய்து விடுகிறார்
.இந்த சிக்கல்தான் படமே.
தனது காதலனிடம் தன்னை ஒப்படைக்க தகப்பன் போனதை எண்ணி மகிழ்ந்து காதலி தனியே பாடி ஆடுகிறாள்.
இதுதான் சிச்சுவேசன்.

 'அன்று குணத்தோடு மனம் கொண்டு நின்றேன்.
இன்று குலத்தோடு மணம் பேசக்கண்டேன்...'

காதலன் பெயர் குணசேகரன்.
காதலனின் அண்ணன் பெயர் குலசேகரன்.

[பாடல் முதல் வரி....
 ஒரே ராகம்...ஒரே தாளம்...ஒரே பாடல் பாடுதம்மா...]

இரண்டு வரியில் ...இரண்டு மணி நேர படத்தின் கதையை சொன்ன நீதான் எனக்கு திருவள்ளுவர்.


நான் என்றும் கொண்டாடும் கண்ணதாசனுக்கு ஆண்டுதோறும் கோவை கண்ணதாசன் கழகம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு விழா நடத்தி கண்ணதாசன் விருது சிறந்த எழுத்தாளருக்கு வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கண்ணதாசன் விருது தமிழ்த்தாயின் இலக்கியப்புதல்வன் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.
இன்று மாலை 6.00 மணிக்கு கோவை மணி ஸ்கூல் கலையரங்கில் வைத்து அறிஞர் பெருமக்களால் வழங்கப்படுகிறது.
இந்த விருது மட்டுமல்ல...இலக்கியத்துக்கான அனைத்து விருதுகளும் அவரை வந்தடைந்து பெருமை சூடிக்கொள்ளும்.

இது என் இதயம் ஆர்ப்பரித்து சொல்லும் சத்திய வார்த்தை.