Showing posts with label பாலச்சந்தர். Show all posts
Showing posts with label பாலச்சந்தர். Show all posts

Apr 22, 2012

கமலின் நிழல் நிஜமாகிறது!

எனது பள்ளி நாட்களில் என்னை ஆக்கிரமித்தவர் சிவாஜி மட்டும்தான்....
சிவாஜி படங்கள் கிட்டத்தட்ட 60 படங்கள்...
 பத்தாம் வகுப்பு முடிப்பதற்க்குள் பார்த்து விட்டேன்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதன் முதலாக எம்ஜியார் படம்.... குலேபகாவலி பார்த்தேன்.

கிட்டத்தட்ட அதேகால கட்டத்தில்தான் கமலை திரையில் பார்த்தேன்.....
'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற படத்தில் வில்லனாக....
பயங்கரமாக சிரித்து...கோரமான முகத்தை கொண்ட தமிழ் சினிமா வில்லன்களில் மத்தியில்....
அழகான வாலிபனாக....
மயக்கும் விழிகளும்....
குரலிலேயே செக்ஸ் கலந்த வசீகரமும் கொண்ட முற்றிலும் புதிய வில்லனாக காட்சியளித்தார்.

தொடர்ந்து கமலுக்கு அதே மாதிரி படங்களை கொடுத்து கோடம்பாக்கம் அவரை மாறி மாறி கற்பழித்தது.
பாலச்சந்தர் படங்களில் மட்டும் கமலின் கலைத்தன்மை வெளிப்படும்.
அப்படி வந்த கருப்பு வெள்ளை படங்களில் மாஸ்டர்பீஸ்...
 நிழல் நிஜமாகிறது.

இப்படத்தில் கமல் வழங்கிய யதார்த்த நடிப்பை... பின் வந்த எந்த படங்களிலும் கமல் தாண்டவில்லை.
தாண்ட முயற்ச்சிக்கவில்லை என்பதுதான் நிஜம்.

இப்படத்தில் கமல் ஒரு துணை பாத்திரம்தான்.
ஷோபா அறிமுக நாயகியாக தோன்றி
படத்தில் அனைத்து நட்சத்திரங்களையும் அடித்து காலி செய்திருப்பார் நடிப்பில்....

கமல் சிவப்பு சிந்தனை கொண்ட வாலிபனாக அப்படத்தில் காட்சியளிப்பார்.
செயின் ஸ்மோக்கர்.
சாப்பிடும்போது கூட சிகரெட்தான் ஊறுகாய்.
செயின் ஸ்மோக்கர்களுக்குறிய மெல்லிய இருமலை தனது பேச்சில் இழைத்து காட்சிகளை கவிதையாக்கியிருப்பார்.

படம் வெளியான நேரத்தில்... பல முறை இப்படத்தை திரையில் பார்த்து ரசித்திருக்கிறேன்.
அதன் பிறகு இப்படத்தை பார்க்கவேயில்லை.
அந்தப்படத்தின் மீது நான் வைத்திருக்கும் அந்தஸ்திற்க்கு பங்கம் வந்து விடும் என்ற அச்சத்தினால் பார்க்க முயற்ச்சிக்கவில்லை.
படத்தின் பாடல்களை மட்டும் பலமுறை பார்த்து ரசித்து வருகிறேன்.....தனியார் தொலைக்காட்சிகளில்....

கண்னதாசனும்,மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும்,கே.பியும் இணைந்து சரித்திரம் படைத்த பாடல்கள்....

கம்பன் ஏமாந்தான்....
இளம் கன்னியரை... ஒரு மலரென்றானே....
கற்பனை செய்தானே...
கம்பன் ஏமாந்தான்.....

இலக்கணம் மாறுதோ...
இலக்கியம் ஆனதோ....
இது வரை நடித்தது.... அது என்ன வேடம்?
இது என்ன பாடம்.!

சிச்சுவேஷனில்.... இலக்கியம் படைத்திருப்பார் கண்ணதாசன்.

என் மன அடுக்குகளில் அழியா கல்வெட்டுகளாய்...கலந்திருக்கும் காட்சிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.

கமலும் சுமித்ராவும் திருடா...திருடி போல் படம் முழுக்க மோதிக்கொண்டே காதலிப்பார்கள்.
கமல் தனது நண்பன் சரத்பாபு வீட்டில் பேயிங் கெஸ்டாக சாப்பிட வருவார்.
அவரது தங்கை சுமித்ரா... கமல் லைட்டரை எடுத்து ஒளித்து வைத்திருப்பார்.
தனது கவச குண்டலத்தை தேடி கமல் அலைகையில் சுமித்ரா வீட்டு வேலைக்காரி ஷோபா போட்டு கொடுத்து விடுவார்.
“அம்மா...உங்ககிட்ட அதை கொடுக்கலயா.!”

கமல் சுமித்ராவின் பெட்ரூமிற்க்கே சென்று கட்டியணைத்து முத்தமிட முயற்ச்சிப்பார்...
சுமித்ரா திமிறி தடுத்து தள்ளி விடுகையில்...
 “எனக்கு சொந்தமான சிகரெட் லைட்டரை நீங்கள் சொந்தமாக்கி கொள்ள நினைக்கும்போது ...உங்களை சொந்தமாக்க நான் நினைத்ததில் என்ன தப்பு?”
என லாஜிக் பேசுவார்...
 தலையணை அடியில் ஒளித்து வைத்திருந்த சிகரெட் லைட்டரை வீசி எறிவார்.
அதை காட்ச் பிடித்து...
  “ஏண்டா...படவா...உனக்கு ஒளியறுதுக்கு இந்துமதியம்மா...தலைகாணி கேக்குதா”
என சுமித்ராவை அவுட் ஆக்குவார்.

சுமித்ரா வீட்டு வேலைக்காரனாக அனுமந்து என்ற மகத்தான நடிகன் அறிமுகமாகிஅசத்தியிருப்பார்.
அவரை.... படத்தில் எல்லோரும் செவிடன் என்றழைப்பார்கள்.

கமல்:  பெயர் என்ன?
அனுமந்து:  செவிடன்.
கமல்:  உங்க அம்மா உன்னை எப்படி கூப்பிடுவாங்க?
அனுமந்து:  செவிட்டு பொணமேன்னு கூப்பிடுவாங்க...
கமல் அதிர்ச்சியாகி....உனக்கு உங்க அம்மா ஒரு பெயர் வச்சிருப்பாங்க ...
அது என்னன்னு கேட்டுட்டு வா...

அடுத்த காட்சியில்...

அனுமந்து:  என் பெயர் காசி...
கமல்:   காசி...நல்ல பெயர்...நான் உன்னை காசின்னுதான் கூப்பிடுவேன்...போய்ட்டு நாளைக்கு வா

அனுமந்து நெகிழ்ச்சியோடு திரும்பி போகையில்...
கமல், காசி... என அழைப்பார்.
அனுமந்து திரும்பி பார்க்கையில்...
 “ உன் பெயரைச்சொல்லி கூப்பிடணும் போல இருந்துச்சு...கூப்பிடக்கூடாதா!” என உரிமையோடு கொஞ்சுவார்.
அனுமந்து ஒடி வந்து கமல் காலில் விழுவார்.
கமல் அவனை தூக்கி நிறுத்தி
அடச்செவிடா.... என்பார்.

கலை நயமும், மனித நேயமும் இக்காட்சியில் இருந்ததால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இக்காட்சியை அடி பிறழாமல் எழுத முடிகிறது.

படத்தின் மற்றொரு சுவாரஸ்யம்.... மன்மத நாயுடுவாக வந்து அசத்தும் மவுலி...
வார்த்தைக்கு வார்த்தை... வாத்சாயனா.... என்பார்.
 “எல்லோருக்கும் பேவரைட் காட்... பிள்ளையார்,முருகன்னு... இருக்கும்..
எனக்கு வாத்சாயனர்...”
ஒரு சின்ன இடைவெளி விட்டு.... “ வாத்சாயனர்....காம சூத்திரம் எழுதியவர்” என்பார்.
                           
ஷோபா இப்படத்தில்.... முதல் படத்திலேயே... நூறு படத்தில் நடித்த
அனுபவசாலி போல் ஸ்கோர் செய்திருப்பார்.

படத்தின் ஹீரோ...ஹீரோயின் இரண்டுமே ஷோபாதான்.
 “முதல் படத்திலேயே....
 இவ்வளவு கனத்தை புது முகத்தில் ஏற்றுகிறோமே என்ற அச்சத்தில்...ரசிகர்களிடம் ஷோபாவை நெருக்கமாக்க...
 படத்தின் டைட்டில் முழுக்க.... ஷோபாவின் குளோசப் முகங்களை....  விதவிதமாக காட்டினேன்”
 என பின்னாளில் பாலச்சந்தர் பேட்டியில் படித்தேன்.

ந்ல்ல படத்தை ரசிக்க கற்றுக்கொடுத்த எனது முதல் குரு...கே.பிதான்.

Apr 18, 2012

குருவுக்கு வாழ்வளித்த சிஷ்யன் ரஜினி


சிவாஜிராவ் என்ற கண்டக்டரை ரஜினிகாந்த் ஆக்கிய பிரம்மா கே.பாலச்சந்தர்.
அறிமுகப்படுத்திய இயக்குனர்களை... தயாரிப்பாளர்களை...
 திரும்பியே பார்க்காத தமிழ் திரை உலகில்....நன்றிக்கடன் செலுத்துவதில் கர்ணனாக இன்றும் ஜொலிப்பவர் ரஜினிகாந்தே.

கவிதாலயா என்ற நிறுவனம் மூலம்.... பல படங்களை தாயாரித்து இயக்கினார்  பாலச்சந்தர்.
ரஜினியை வைத்து இயக்குவதை தில்லு முல்லுவோடு நிறுத்தி கொண்டார்.
எஸ்.பி.முத்துராமன் போன்ற மசாலா பட இயக்குனர்கள் மூலம்...
 ரஜினி படங்களை தயாரிக்க மட்டுமே செய்தார்.

நூறு படங்களை தயாரித்த கவிதாலாயா நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது.
அத்தனை படங்களின் வரவு செலவை பார்த்தது கவிதாலாயா நடராஜன்.
அந்த ஊழல் பெருச்சாளி.... சமயம் பார்த்து பல கோடிகளை சுருட்டிக்கொண்டு பிரமிட் என்ற நிறுவனத்தை தொடங்கி படம் தயாரிக்க துவங்கியது.
[ஆனால் பாலச்சந்தர் வயிற்றில் அடித்து துவங்கிய... பிரமிட் நிறுவனம்... தயாரித்த ஒரு படம் கூட ஒடவில்லை]

.கடனுக்காக...கடல் மாதிரி இருந்த பங்களாவை விற்று...
 ஒரு பிளாட்டில் வாடகைக்கு சரஸ்வதி குடியேறினாள்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட அன்று நான் தூங்கவில்லை.
ஒரு வாரம் நான் விட்ட சாபங்கள் நடராஜனை எழு ஜென்மங்களுக்கும் துரத்தும்.
பாலச்சந்தர் ரசிகனான நானே கொதித்து போனேன்.
ரஜினிக்கு இருக்காதா!

அண்ணாமலையாக அவதாரம் எடுத்தார்.

குசேலன் மூலமாக மீண்டும் குருவை குபேரனாக்கிய கண்ணன் ரஜினி.

போன பதிவில் லகுட பாண்டி என்ற கொசு விடாமல் துரத்தியது.
விஷயத்தை.... முந்தைய பதிவின்.... பின்னூட்டத்தில் காண்க...
அலோ...மிஸ்டர் லகுட பாண்டி...
எம்.ஜி.யார் முதல்வராக இருந்த நேரம்...
மயிலை குருபாதம் என்றொரு தயாரிப்பாளர்....அதிமுக ரவுடி.
அவரை ரஜினி காரில்....ஒட...ஒட...  விரட்டி....
 கொல்ல முயற்ச்சித்தார்.
காம்பவுண்ட் சுவரில் மோதிநிறுத்தினார்.
ஜஸ்ட்... மிஸ்... குருபாதம்.
இந்த கொலை முயற்ச்சி கேஸ் பற்றி தெரியுமா?....லக்க்க்க்குட பாண்டி.

தனது கல்யாணம் பற்றிய செய்தியை பத்திரிக்கையாளர்களை கூட்டி அறிவித்தார்.
திருப்பதியில் நடக்கும் கல்யாணத்துக்கு யாரும் வரக்கூடாது என்றார்.
 “வந்தால்”....எனக்கேட்ட பத்திரிக்கையாளரிடம் “செருப்பால் அடிப்பேன்” என்ற உண்மையான மனிதன் ரஜினி.
நிஜத்தில் நடிக்க தெரியாது.
அந்த திறமை அவருக்கு கிடையாது.
கமலுக்கும் கிடையாது.
அதனால்தான் அவர்கள் அரசியலுக்கு வர மறுக்கிறார்கள்.

தமிழ்நாடே கொதித்துப்போய் இருக்கும் மின்வெட்டு பிரச்சனைக்காக ரஜினி குரல் கொடுத்து போராடினால் தமிழ்நாடே அவரது பின்னால் திரண்டு நிற்க்கும்.
ஆனால் அவர் எப்போதும் போல...
 கோச்சடையானில் ஒளிந்து கொண்டார்..
இந்த ரஜினியை... எனக்கு என்றுமே பிடிக்காது.