மார்லன் பிராண்டோ தனது நடிப்பால் என்னை வசீகரித்ததை விட அவரது சுய சரிதத்தை படித்ததின் மூலமாக என்னை முழுக்க ஆட் கொண்டார்.
படிக்க...படிக்க.... என்னுள் எழுந்த அவரது உயரம் இமயமலையை கடுகாக்கும் கம்பீரம் கொணடது.
தனது பலகீனங்களை,தவறுகளை அப்பட்டமாக சுய சரிதத்தில் சொன்ன நடிகன் வேறு யாரும் இல்லை என நினைக்கிறேன்.
அஜயன் பாலா மொழி பெயர்ப்பில் எதிர் பதிப்பகத்தார் வெளியிட்ட மார்லன் பிராண்டோ என்ற நூலில் எனக்கு பிடித்த அம்சங்களில் சிலவற்றை மட்டும் உங்களொடு பகிர்ந்து கொள்கிறேன்.
சூப்பர்ஸ்டார் இமேஜில் மிதக்கும் நடிகர்கள் கட்டாயம் இதை படிக்க வேண்டும்...
‘மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை தேவ தூதராக கருதுகின்றனர்.
அந்த ஒருவருக்கு இந்த தேவதூதப்பதவி பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் மக்கள் அதை வலுக்கட்டாயமாக அவர்களிடம் திணித்து விடுகின்றனர்.
தங்களுடைய உணர்வுகளின் தேவைகளில் அந்த நபருக்காக ஆழமான ஒரு இடத்தை உருவாக்கி தருகின்றனர்.
ஏனெனில் நாம் கடவுளைப்போல சாத்தான்களை குறித்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்’.
வளர்ச்சியடைந்த நாடுகள்.... வளரும் நாடுகளுக்கு உதவி செய்வது எத்தனை போலியான நாடகம் என்பதை தோலுரித்து காட்டுகிறார் தனது எழுத்தில்....
“பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து,இந்தோனேசியா போன்ற தெற்க்காசிய நாடுகளுக்கு படப்பிடிப்பு நிமித்தம் சென்ற போது...
காலனியாதிக்கம் முடிந்த பின்னும்.... வளர்ச்சியந்த நாடுகள்...
அந்நாட்டின் பொருளாதாரங்களை சீரழிப்பதை என்னால் கண்கூடாக உணர முடிந்தது.
வெளிநாட்டு உதவி என்ற பெயரால் அந்த நாடுகளை வளர்ந்த நாடுகள் தங்களது அரசியல் சுய காரியங்களுக்கு பயன்படுத்தி சுரண்டி வருகின்றன”.
பிராண்டோவின் வார்த்தைகள் எத்தனை சத்தியம் என்பதற்க்கு...
கூடங்குளம் இன்றைய சாட்சி.
“அதிகாரத்தில் இருக்கும் தனி மனிதனோ அல்லது அரசாங்கமோ மக்களை தேசம் என்னும் பெயரால் எவ்வளவு தூரம் அடிமைகளாக்கி தன்னிஷ்டத்திற்க்கு தவறான பாதைகளில் அவர்களை அழைத்து செல்கிறது”....
பிராண்டோவின் இந்த வரிகள் கடும் மின் வெட்டை ஏற்ப்படுத்தி தமிழெகமெங்கும் கூடங்குளம் மக்களுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையை ஞாபகப்படுத்தியது என்றால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.
இந்தியாவில் பீகாரில் பயணித்து அங்கு நிலவும் சாதீயக்கொடுமைகளை ஆவணப்படமாக்கி உள்ளார் பிராண்டோ.
அதை அமெரிக்க திரையரங்குகளிலோ...தொலைக்காட்சியிலோ வெளியிட முடியவில்லை.
தனது விரக்தியை...கோபத்தை தனது வைர வரிகளில் பதிவு செய்துள்ளார்.
“அமெரிக்க மனம் இதர மக்களின் துன்பங்களின் மீது ஒரு போதும் அக்கறை கொள்வதில்லை”.
காட்பாதர் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்க பிராண்டோ போகாமல் சச்சின் லிட்டில் பெதர் என்ற அமெரிக்க பூர்வீகக்குடிமகளை அனுப்பி புரட்சி செய்தார் பிராண்டோ...
இத்தனை காலமாக இனத்தின் பெயரால் அமெரிக்க பூர்வீகக்குடிமக்கள் எவ்வளவு தூரம் பழி வாங்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிக்கையாக ஆஸ்கார் அரங்கில் வாசிக்க வைத்து உலகின் கவனத்துக்கு கொண்டு சென்ற மாபெரும் போராளி பிராண்டோ.
அது மட்டுமல்ல.... அந்த மக்களுக்காக தனது வாழ் நாளை செலவழித்துள்ளார் பிராண்டோ என்பதை அறிந்து கொள்ள முடிகிறது இந்நூலால்.
மது...மங்கை என கொண்டாட்டத்துடன் இருந்தாலும்...
உண்மையான புரட்சி கலைஞர் மார்லன் பிராண்டோதான்.
நூலின் பெயர் : மார்லன் பிராண்டோ
மொழி பெயர்ப்பு : அஜயன் பாலா
வெளியிடு : எதிர்
விலை : ரூ.250.00
தகவல் தொடர்புக்கு : 04259 226012, 98650 05084.