Sep 28, 2013

மிஷ்கினை, நேற்று மட்டம் தட்டினோம்...இன்று கை தட்டுவோம்.

நண்பர்களே...
படம் பார்க்காதவர்கள் என் பதிவை படிக்கலாம்.
காரணம், படத்தில் உள்ள ஒரு பிரேமைப்பற்றி கூட எழுதப்போவதில்லை.


மிஷ்கின், தனது படைப்புகளை விட அதிகமாக பேசி வாங்கி கட்டியவர்.
தன் தவறை உணர்ந்து எதுவுமே பேசாமல், தன் படைப்பை பேச விட்டிருக்கிறார்.
தனது பாணியை, மிகச்சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.
வாழ்த்துக்கள் மிஷ்கின்.


‘சரக்கு காலி’...
‘அவர்கிட்ட இனிமே விஷயம் இல்ல’...
என்ற குரல்கள் ஓங்கி முன்னணியில் ஒலித்து கொண்டிருந்தது.
அனைத்திற்கும் இப்படத்தின் பின்னணி இசை மூலம் பதில் சொல்லி இருக்கிறார் ராஜா.
பின்னணி இசையில், அன்றும்...இன்றும்....என்றுமே ராஜா என்பதை
இன்றைய தலைமுறைக்கு நிரூபித்து இருக்கிறார்.


பாலா, மிஷ்கின் போன்றவர்கள் படைப்புகளில் அபூர்வமான மனிதர்களை தரிசிக்க முடியும்.
அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை.
அந்த கதாபாத்திரங்கள் தரும் அனுபவம்...
பார்வையாளனுக்கு கிடைக்கும் வரம்...அதுவே ரசனையின் பேரானந்தம்.
அதை கெடுக்க விரும்பவில்லை.

படத்தில் எல்லோருமே தங்கள் திறமைகளை நிரூபித்து இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கிடைக்க வேண்டிய நியாமான வெற்றியை தருவதன் மூலம் ரசிகர்கள்  ‘ரசனையை’ நிரூபிக்க வேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Sep 27, 2013

சிவாஜிக்கு நடிக்க தெரியாது !


நண்பர்களே...
முகநூலில் ‘சிவாஜிக்கு நடிக்க தெரியாது’ என அலறிய ஒரு நிலைத்தகவலை பார்த்தேன்.
சமீப காலமாக அந்த நபர்,
‘நான் ஆனையை செய்கிறேன்...
பூனையை செய்கிறேன்’ 
என இணையத்தில்  ‘உண்டியல் குலுக்குவதையும்’ பார்த்து வருகிறேன்.
‘தகரம் கண்டு பிடிக்காத காலத்திற்கு முன்பே உண்டியல் கண்டு பிடித்தவர் போலும்’.
மிகச்சிறப்பாக அந்த கலையை செய்து வருகிறார்.

சாதனை படைத்தவர்களை திட்ட வேண்டியது.
அதன் மூலம், அவர்களை விட உயர்ந்தவன் என மாய பிம்பத்தை ஏற்படுத்துவது.
இக்கலையில் மாஸ்டர்... சாரு.
இவர் சிஷ்ய பிள்ளையாக உருவெடுத்து கிளம்பி உள்ளார்.

கன்னடத்தில் சமீபத்தில் ஒருவர் இணையம் வழியாக பணம் திரட்டி அற்புதமாக படம் எடுத்து இருக்கிறார் என்ற செய்தி படித்தேன்.
இந்த ‘விஷப்பூச்சி’ எந்த காலத்திலும் இது போன்ற ஆக்க பூர்வமாக செயல் படப்போவதில்லை.

நண்பர்களே...
இது போன்ற  ‘அறைகுறைகளுக்கு’ பணம் அனுப்பும் பாவச்செயலை செய்யாதீர்கள்.
விஷச்செடியை வளர்த்து விடாதீர்கள்.

கீழ்க்கண்ட இணைப்பில் சென்று அந்த நபரின் நிலைத்தகவலில் உங்கள் எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிவாஜிக்கு நடிக்க தெரியாது என்ற பதிவிற்கு செல்ல...


Sep 20, 2013

மூடர் கூடத்தில்... ‘கலைஞர்’ காரெக்டர்.


நண்பர்களே...
நேற்று இரண்டாம் முறையாக  ‘மூடர் கூடம்’ பார்த்தேன்.
இன்னும் நுட்பமாக என்னால் படத்தை அணுகி பார்க்க முடிந்தது.
அதில் ஒன்றுதான்... ‘கலைஞர் காரெக்டர்’.




படத்தில் வரும் ‘புரபஷனல் திருடனை’  ‘கலைஞர் கருணாநிதியோடு’ ஒப்பிட்டு பார்க்க முடிந்தது.
[ 1 ] ‘புரபஷனல் திருடன்’ தோற்றம் கலைஞரின் இளமைக்கால தோற்றத்தை அப்படியே பிரதிபலித்தது.
கலைஞரின் சுருள் முடியும்...நடு மண்டையில் எடுக்கப்பட்ட ‘நேர் உச்சியும்’ அப்படியே ‘புரபஷனல் திருடனுக்கு’ பொருந்தி வருகிறது.

[2]  ‘புரபஷனல் திருடன்’ ஆடையில் ‘கருப்பு - சிவப்பு’ வண்ணம் மட்டுமே இருக்கிறது.

[ 3 ]  ‘கலைஞர்’ மூச்சுக்கு மூச்சு, ‘கொள்கை...கொள்கை’ என கொடி பிடிப்பார்.
‘புரபஷனல் திருடனும்’  ‘எத்திக்ஸ்...எத்திக்ஸ்’ என எடுத்து...
‘அடிச்சு விடுவான்’.


மூடர் கூடத்தில் ‘கிரிக்கட் மட்டை’ அதிகாரத்தின் குறியீடாக காட்டப்பட்டு உள்ளது.
 ‘கிரிக்கெட் மட்டை’ யார் கைக்கு போகிறதோ அவர்கள்  'பவர் சென்டராக' மாறி செயல்படுவதை காண முடியும்.

‘புதிய சட்ட சபை’ - ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’...
‘மருத்துவ மனைகளாக’ மாற்றம் பெற ஆணை பிறப்பித்ததையும்...
‘அனைவரையும் தலைகீழாக நிற்க சொல்வதையும்’ பொருத்தி பார்க்க தோன்றுகிறது.

 ‘ஹேப்பி லைப்’ [ HAPPY LIFE ] என எழுதப்பட்ட பொம்மையும் ஒரு குறியீடே.
அதை விளக்க  முற்பட்டால் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்து விடும் அபாயம் இருக்கிறது.


படத்தின் கிளைமாக்ஸ், ‘ப்யூச்சர் பாஸிட்டிவ்’ தன்மையில் முடிந்து இருக்கிறது.
இயக்குனர் நவீன் மீது ‘நம்பிக்கை’ வைத்து கேட்கிறேன்.
உலகசினிமா தரத்தில் ஒரு திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்கு தரவேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Sep 18, 2013

கோபப்பட்ட கலைஞர்கள் கூடிய...மூடர் கூடம்.

நண்பர்களே...
நகைச்சுவை என்ற பெயரில்,
‘கூத்தடித்த கூத்தபிரான்கள்’ கொட்டைகளை திருகி...
‘மதுரை கோனார் கடை கோலாவாக்கி’ விட்டார்கள்...
‘மூடர் கூடம்’ படைப்பாளிகள்.
வாழ்த்துக்கள்...தோழர்களே.



மூடர் கூடத்தை,
‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்’....
 ‘வயிற்று வலி’ வந்தவர்களும் ரசிப்பார்கள்...
 ‘வலிப்பு வந்தவர்கள்’ மிக மிக ரசிப்பார்கள்.

‘மும்பை எக்ஸ்பிரஸ்ஸில்’ கமல் ஏற்றி வைத்த  ‘பிளாக் காமெடி’...
 ‘ஆரண்ய காண்டத்தில்’ அட்டகாசம் செய்து...
 ‘சூது கவ்வியதில்’ பட்டாசாக வெடித்து...
 ‘மூடர் கூடத்தில்’...இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறது.
இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருக்கிறது.


இயக்குனர் நவீன்...இந்த ‘பிளாக் காமெடி’ வகையறாவில் ஜொலித்த கமல், தியாகராஜன் குமாரராஜா, நலன் குமாரசாமி போன்றோர் வரிசையில்
இடம் பிடித்து விட்டார்.
நடிகராகவும் வசீகரித்து உள்ளார்.
அவரது பிரத்யேக ஆளுமை மிக்கக்குரலில் வசனங்கள் தீப்பிடிக்கின்றன.
நவீன் பேசும் முக்கால் வாசி வசனங்களில்,
‘சிவப்பு சிந்தனை’ சீராக இழைந்து இருக்கின்றன.



வசதி படைத்தவன் தர மாட்டான்....
வயிறு பசித்தவன் விட மாட்டான்’.
இதுவே இப்படத்திலுள்ள  ‘மையக்கரு’.
அம்பானிகளிடமும், ஆ.ராசாக்களிடமும்  கொள்ளையடிப்பதை கொள்கையாக்கலாம்...தப்பில்லை.

இயக்குனர் நவீனையும்...அவரது சக கூட்டாளி கலைஞர்களையும் வாழ்த்தி
வரவேற்போம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


Sep 13, 2013

சூப்பர் ஸ்டாரால் ஏமாற்றப்பட்ட தயாரிப்பாளர்.

நண்பர்களே...
இருபதுக்கும்  மேற்பட்ட உலகசினிமாக்களை பார்த்து விட்டேன்.
எழுதுவதற்கு, ஒரு படம் கூட தேறவில்லை.
நேற்று சில மலையாளப்படங்கள் டிவிடி வாங்கினேன்.
அதில் ஒன்று... ‘செல்லுலாய்ட்’.


பதிவுலக நண்பர் கோவை ஆ.வி.
இப்படம் பற்றி விதந்தோதி என் காதில் சங்கு ஊதியும்...
‘மாற்றுத்திறனாளியாகத்தான்’ இருந்தேன்.
நேற்றிரவு 11 மணிக்கு  ‘செல்லுலாய்ட்’ பார்த்து முடித்தேன்.
விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தூங்க முடிந்தது.
காரணம்...மலையாளத்தில் முதல் சினிமாவை தயாரித்த
J.C. டேனியல் நாடார்.


மலையாள சினிமாவின் பிதாமகன் J.C. டேனியல் நாடார், 
வாழ்க்கை வரலாற்றை... மிக நேர்த்தியான திரைக்கதையின் மூலம்...  காவியம் படைத்திருக்கிறார் இயக்குனர் கமல்.
இவரது இயக்கத்தில் வந்த ‘பெருமழைக்காலமும்’ என் தூக்கத்தை கரைத்திருக்கிறது.
சினிமாவின் வலிமையான ஆயுதங்களை பிரயோகித்து பார்வையாளர்களை வீழ்த்துவதில் சூரன் இயக்குனர் கமல்.
இவரது ஆளுமைக்கு... சமீபத்திய கட்டியம் ‘செல்லுலாய்ட்’.


ஹிந்தியில்  ‘தாதா சாகேப் பால்கே’...
தமிழில் ‘நடராஜ முதலியார்’ போன்றவர்கள்...
திரைப்பட தயாரிப்பில் ‘முதன் முதல்கள்’.
இவர்களின் தாக்கத்தால்... மலையாளத்தில் முதன் முதலாக திரைப்படம் தயாரிக்க ஆசைப்படுகிறார் பி.சி.டேனியல் நாடார்.
தலித் வகுப்பை சேர்ந்த ரோஸம்மாவை ‘ரோஸியாக்கி’  கதாநாயகியாக்குகிறார்  டேனியல் நாடார்.
கேரளாவில், தலித்தை விட தாழ்த்தப்பட்ட சமூகமாக...
மிதிக்கப்பட்ட நாடார் வகுப்பை சார்ந்தவர் ’டேனியல்’.
உயர் ஜாதி வகுப்பை சார்ந்த நாயர்களும், நம்பூதிரிகளும் படத்தை ஓட விடாமல் தடுத்து ’டேனியல் நாடாரை’ நடுத்தெருவில் நிறுத்துகின்றனர்.
கடனும்...வறுமையும்...கைகோர்த்து துரத்த..
தமிழ்நாட்டிலுள்ள ‘அகஸ்தீஸ்வரத்துக்கு’ புலம் பெயர்ந்து அங்கேயே மரித்துப்போகிறார் டேனியல் நாடார்.


இப்படத்தின் திரைக்கதை  ‘தங்கமீன்களை’ போல தறி கெட்டு ஓடவில்லை.
ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது.
சினிமா எடுத்து நலிந்து போன டேனியல் நாடார்,
பல் மருத்துவம் படித்து பிரபலமான மருத்துவராக புதுக்கோட்டையில் வாழ்ந்ததை சொல்கிறது.
புதுக்கோட்டையில் ‘ஓகோவென’ வாழும் போது...
அன்றைய  ‘சூப்பர் ஸ்டார்’ பி.யூ.சின்னப்பாவால் ஏமாற்றப்பட்டு மீண்டும் வீழ்ந்ததை  ‘விழுமியமாக்குகிறது’.
மலையாளத்தில் முதல் சினிமாவாக...
தயாரிப்பாளர் + இயக்குனர்  ‘மாடர்ன் தியேட்டர் சுந்தரம் அய்யர்’ உருவாக்கிய  ‘பாலன்’ திரைப்படம் கொண்டாடப்பட்ட போலித்தனத்தை  ‘போட்டுத்தாக்குகிறது’.
ஒரு பத்திரிக்கையாளன்,
பசியால் பரிதவிக்கும் டேனியல் நாடாருக்காக...
அரசு அதிகார வர்க்கத்திடம் போராடி...
ஜாதீய காரணங்களால் தோற்றுப்போகும் துயரத்தை துணைக்கதையாக்குகிறது.


படத்தின் கதாநாயகி ரோஸம்மாவை...படத்தை பார்க்க விடாமல் துரத்தியடிக்கின்றனர் மேல் ஜாதி இந்துக்கள்.
ஜாதிக்கொடுமையின் கொடூர கூச்சலை உக்கிரமாக காட்டி...
பார்வையாளர் இருதயத்தில் ஆணியடிக்கிறது ‘திரைக்கதை’.
இத்திரைக்கதையின் மிக வலுவான பக்கங்கள் இவை.


இத்திரைப்படத்தின் தாக்கமும்...
தமிழ் திரைப்பட பிதாமகன்கள் வரலாறு படமாக்கப்படாத ஏக்கமும்...
இன்னும் சில தூக்கமில்லா இரவுகளை...உருவாக்கும்.

Sep 6, 2013

‘ராமின் தங்க மீன்களை’ வளர்க்கலாமா? வறுக்கலாமா?


நண்பர்களே...தங்கமீன்களை பார்த்து ஒரு வாரம் ஆகி விட்டது.
ஒரு வாரத்திற்கு பதிவெழுதுவதையே தவிற்து விட்டேன்.
இருந்தும் இப்பதிவில் சூடு கிளம்பியது என்றால் அதற்கு  முழுக்க காரணம் இயக்குனர் ராம்தான்.

இரண்டாவது படத்திற்கு...
இத்தனை ஆண்டுகள் ரூம் போட்டு யோசித்து...
‘கால் வேக்காடு’ படமாக ‘தங்க மீன்களை’ உருவாக்கி இருக்கிறார்
இயக்குனர் ராம்.
முதல் படமான ‘கற்றது தமிழ்’ கூட அரை வேக்காடாக இருந்தது.
முழு வேக்காடில் படமெடுக்க இயக்குனர் ராம் முயற்சிக்க போவதும் இல்லை.
அதற்கான தகுதியும் அவரிடம் இல்லை என்பதை இரண்டாவது படம் விளக்கி விட்டது.

மேடைப்பேச்சில்...
சோனியா, மன்மோகன்சிங், சிதம்பரம் ஆகியோரை  ‘விட்டு விளாசும் போது’ ‘வட்டச்செயலாளர் வண்டு முருகனையும்’ போட்டு ‘தாளிக்கக்கூடாது’.
திரைப்படத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்?.

 ‘காட்சிக்கு காட்சி’ பார்வையாளர்களை எமோஷனலாக்கி பிளாக்மெயில் செய்வதையே தொழிலாக்கி இருக்கிறார் இயக்குனர் ராம்.
அவரது இரண்டு படங்களுமே இத்திருப்பணியை இடையறாது செய்திருக்கிறது.

கற்றது தமிழில் ஒரு அஞ்சலியை தந்தீர்கள்.
அதற்கு இணையாக இப்படத்திலும் ஒரு அற்புதமான நடிகையை தந்து உள்ளீர்கள்.
வாய்ப்பு அமைந்தால் அவர் ஒரு ‘ஷோபா...அர்ச்சனா...’ போல் உருவெடுப்பார்.

உருப்படியாக சில காட்சிகளையும்...
சில கதாபாத்திரங்களையும் படைத்து உள்ளாதால்...
கால்வாசி  கவிதை...முக்கால்வாசி அபத்தம்.

இப்பதிவு...உலகெங்கிலும் உள்ள  ‘மீனவர்களுக்கு’ சமர்ப்பணம்.