Sep 13, 2013

சூப்பர் ஸ்டாரால் ஏமாற்றப்பட்ட தயாரிப்பாளர்.

நண்பர்களே...
இருபதுக்கும்  மேற்பட்ட உலகசினிமாக்களை பார்த்து விட்டேன்.
எழுதுவதற்கு, ஒரு படம் கூட தேறவில்லை.
நேற்று சில மலையாளப்படங்கள் டிவிடி வாங்கினேன்.
அதில் ஒன்று... ‘செல்லுலாய்ட்’.


பதிவுலக நண்பர் கோவை ஆ.வி.
இப்படம் பற்றி விதந்தோதி என் காதில் சங்கு ஊதியும்...
‘மாற்றுத்திறனாளியாகத்தான்’ இருந்தேன்.
நேற்றிரவு 11 மணிக்கு  ‘செல்லுலாய்ட்’ பார்த்து முடித்தேன்.
விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தூங்க முடிந்தது.
காரணம்...மலையாளத்தில் முதல் சினிமாவை தயாரித்த
J.C. டேனியல் நாடார்.


மலையாள சினிமாவின் பிதாமகன் J.C. டேனியல் நாடார், 
வாழ்க்கை வரலாற்றை... மிக நேர்த்தியான திரைக்கதையின் மூலம்...  காவியம் படைத்திருக்கிறார் இயக்குனர் கமல்.
இவரது இயக்கத்தில் வந்த ‘பெருமழைக்காலமும்’ என் தூக்கத்தை கரைத்திருக்கிறது.
சினிமாவின் வலிமையான ஆயுதங்களை பிரயோகித்து பார்வையாளர்களை வீழ்த்துவதில் சூரன் இயக்குனர் கமல்.
இவரது ஆளுமைக்கு... சமீபத்திய கட்டியம் ‘செல்லுலாய்ட்’.


ஹிந்தியில்  ‘தாதா சாகேப் பால்கே’...
தமிழில் ‘நடராஜ முதலியார்’ போன்றவர்கள்...
திரைப்பட தயாரிப்பில் ‘முதன் முதல்கள்’.
இவர்களின் தாக்கத்தால்... மலையாளத்தில் முதன் முதலாக திரைப்படம் தயாரிக்க ஆசைப்படுகிறார் பி.சி.டேனியல் நாடார்.
தலித் வகுப்பை சேர்ந்த ரோஸம்மாவை ‘ரோஸியாக்கி’  கதாநாயகியாக்குகிறார்  டேனியல் நாடார்.
கேரளாவில், தலித்தை விட தாழ்த்தப்பட்ட சமூகமாக...
மிதிக்கப்பட்ட நாடார் வகுப்பை சார்ந்தவர் ’டேனியல்’.
உயர் ஜாதி வகுப்பை சார்ந்த நாயர்களும், நம்பூதிரிகளும் படத்தை ஓட விடாமல் தடுத்து ’டேனியல் நாடாரை’ நடுத்தெருவில் நிறுத்துகின்றனர்.
கடனும்...வறுமையும்...கைகோர்த்து துரத்த..
தமிழ்நாட்டிலுள்ள ‘அகஸ்தீஸ்வரத்துக்கு’ புலம் பெயர்ந்து அங்கேயே மரித்துப்போகிறார் டேனியல் நாடார்.


இப்படத்தின் திரைக்கதை  ‘தங்கமீன்களை’ போல தறி கெட்டு ஓடவில்லை.
ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது.
சினிமா எடுத்து நலிந்து போன டேனியல் நாடார்,
பல் மருத்துவம் படித்து பிரபலமான மருத்துவராக புதுக்கோட்டையில் வாழ்ந்ததை சொல்கிறது.
புதுக்கோட்டையில் ‘ஓகோவென’ வாழும் போது...
அன்றைய  ‘சூப்பர் ஸ்டார்’ பி.யூ.சின்னப்பாவால் ஏமாற்றப்பட்டு மீண்டும் வீழ்ந்ததை  ‘விழுமியமாக்குகிறது’.
மலையாளத்தில் முதல் சினிமாவாக...
தயாரிப்பாளர் + இயக்குனர்  ‘மாடர்ன் தியேட்டர் சுந்தரம் அய்யர்’ உருவாக்கிய  ‘பாலன்’ திரைப்படம் கொண்டாடப்பட்ட போலித்தனத்தை  ‘போட்டுத்தாக்குகிறது’.
ஒரு பத்திரிக்கையாளன்,
பசியால் பரிதவிக்கும் டேனியல் நாடாருக்காக...
அரசு அதிகார வர்க்கத்திடம் போராடி...
ஜாதீய காரணங்களால் தோற்றுப்போகும் துயரத்தை துணைக்கதையாக்குகிறது.


படத்தின் கதாநாயகி ரோஸம்மாவை...படத்தை பார்க்க விடாமல் துரத்தியடிக்கின்றனர் மேல் ஜாதி இந்துக்கள்.
ஜாதிக்கொடுமையின் கொடூர கூச்சலை உக்கிரமாக காட்டி...
பார்வையாளர் இருதயத்தில் ஆணியடிக்கிறது ‘திரைக்கதை’.
இத்திரைக்கதையின் மிக வலுவான பக்கங்கள் இவை.


இத்திரைப்படத்தின் தாக்கமும்...
தமிழ் திரைப்பட பிதாமகன்கள் வரலாறு படமாக்கப்படாத ஏக்கமும்...
இன்னும் சில தூக்கமில்லா இரவுகளை...உருவாக்கும்.

22 comments:

  1. அருமையான திரைப்படம்.. நானும் பார்த்தேன்!

    இயக்குனர் கமல் நேர்த்தியாக இயக்கிய பல படங்கள் மலயாள சினிமாவில் உண்டு!

    ReplyDelete
    Replies
    1. பெருமழைக்காலம் படத்திற்கு பின்னால் என்னை மிகவும் கவர்ந்த கமல் படம் இதுவே.

      தமிழில் இப்படி ஒரு படம் வராதா என ஏங்க வைத்து விட்டார் இயக்குனர் கமல்.
      இயக்குனர் கே.சுப்ரமணியம் பற்றி,
      அவரது நேரடி வாரிசுகளான பத்மா சுப்ரமணியம், டான்ஸ் மாஸ்டர் ரகுராம், அபஸ்வரம் ராம்ஜி போன்றோர் கூட ஒரு படமெடுத்து பதிவு செய்யாதது ஏன்?

      Delete
  2. Heading of the post misleads to Super Star Rajanikanth :-) !!

    At least give the list of 20 World Cinema films u watched.

    ReplyDelete
    Replies
    1. தலைப்பு தினத்தந்தி பாணியில் அதிரடியாக வைப்பது எனது பாணி நண்பரே.

      பார்க்கின்ற எல்லா அயல் நாட்டு சினிமா எல்லாவற்றையும் உலகசினிமா என கொண்டாடி எழுத மாட்டேன்.
      அதே போன்று பெர்க்மன் போன்று மிக உயர்ந்த தரத்தில் எடுக்கப்பட்ட படங்களையும் தவிற்து விடுவேன்.
      கமர்சியல் சினிமா பார்ப்பவர்களை உலகசினிமா வட்டத்துக்குள் கொண்டு வருவதே எனது நோக்கம்.
      அதற்கான ‘ஆரம்ப பாட உலகசினிமாக்களை’ மட்டுமே அறிமுகம் செய்து எழுதி வருகிறேன்.

      Delete
  3. //மலையாளத்தில் முதல் சினிமாவாக...
    தயாரிப்பாளர் + இயக்குனர் ‘மாடர்ன் தியேட்டர் சுந்தரம் அய்யர்’//

    அவர் அய்யர் அல்ல என நினைக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. செல்லுலாய்ட் திரைப்படத்தில் திரு.சுந்தரம்...அய்யர் என்று குறிப்பிடப்படுகிறார்.
      நான் அதையே வழி மொழிந்தேன்.

      Delete
  4. மலையாளத்தில் முதல் சினிமாவாக...
    தயாரிப்பாளர் + இயக்குனர் ‘மாடர்ன் தியேட்டர் சுந்தரம் அய்யர்’ உருவாக்கிய ‘பாலன்’ திரைப்படம் கொண்டாடப்பட்ட போலித்தனத்தை ‘போட்டுத்தாக்குகிறது’.

    #அடைப்புக்குறிக்குள் இருக்கும் சுந்தரம் அய்யர் என்பதைச் சரிபார்க்கவும். இல்லையெனில், மேல்தட்டு வர்க்க என்ற வார்த்தையினைப் பயன்படுத்தலாம். தவறான தகவல்கள், தேவையில்லாத விவாதங்களுக்கே வழிவகுக்கும். கட்டுரை ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. திரு.நடன சபாபதிக்கு அளித்த ‘பதில் பின்னூட்டமே’ தங்களுக்கும்.

      Delete

  5. ஹும்! உங்களை எல்லாம் எவ்வளவு சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதற்கு உதாரணம் இந்தப் படம் . செல்லுலாயிட் படத்தின் தமிழ் வடிவமான ஜெ.சி.டேனியல் படம் பற்றிய எனது கட்டுரை உங்களுக்கு பகுதி பகுதியாக ..
    மலையாளத்தின் முதல் பேசும் படமான பாலன் படத்தை உருவாக்கியவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரும் தமிழருமான டி.ஆர். சுந்தரம் . அனால் மலையாள சினிமா வரலாறுகளின் சுந்தரத்துக்கு உரிய மரியாதை கொடுக்காமல் ஒதுக்கி வைப்பது அவர்கள் வழக்கம் .

    ராமு காரியத் உருவாக்கிய நீலக்குயில் படம்தான் நேரடியான முதல் மலையாளப்படம் என்பது போல அதையே கொண்டாடுவார்கள் அவர்கள்.

    ஆனால் பாலனுக்கும் முன்பு மலையாளத்தின் முதல் (மவுனத்) திரைப்படமான விகதகுமாரன் படத்தை 1928ல் தயாரித்து இயக்கி நடித்து 1930 இல் வெளியிட்டவரும் ஜெ.சி. டேனியல் (நாடார்) என்ற தமிழர்தான் .ஆனால் டேனியலை மலையாள சினிமாவின் தந்தையாக ஏற்றுக் கொள்ள திட்டமிட்டு மறுத்தனர் மலையாளிகள் .

    என்னதான் உண்மை என்றாலும் ஒரு தமிழனை எப்படி மலையாள சினிமா உலக தந்தையாக ஏற்பது என்ற எரிச்சல் .

    அதையும் மீறி மனசாட்சி உள்ள மலையாள எழுத்தாளரான சேலங்காடு கோபால கிருஷ்ணன் என்பவர் இந்த மொழி-- இனத் துவேஷ உணர்வினைக் கடந்து ஜெ.சி.டேனியலுக்கு உரிய முக்கியத்துவம் வாங்கித்தர முடிவு செய்தார் .

    அப்போதைய முதல்வரும் தமிழர்களின் மீது துவேஷம் காட்டுவதில உச்சம் தொட்ட கேரள தலைவருமான கருணாகரனை மீறி ஜெ.சி .டேனியலுக்கு அங்கீகாரம் வாங்கித்தர கோபால கிருஷ்ணன் போராட , ஒரு நிலையில் வேறு வழியில்லாமல் மொழி இன துவேஷம் கொண்ட மலையாளிகளும் அதை ஒத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

    அதே நேரம் அவர் தமிழர் அல்ல மலையாளி என்ற பிரச்சாரமும் நடந்தது.

    இதில் என்ன அக்கிரமம் என்றால் டேனியல் கடைசி காலத்தில், தான் பிறந்த தமிழ் நாட்டில் உதவி செய்ய ஆள் இன்றி வறுமையில் வாடியபோது 'அவன் தமிழன்தானே செத்தா சாகட்டும்' என்று வேடிக்கை பார்த்த கேரள அரசுதான் , ஜெ.சி. டேனியல் செத்த பிறகு அவரை மலைளாள சினிமாவின் தந்தை என்று ஒத்துக் கொண்டது .

    ReplyDelete
  6. மலையாளத்தின் முதல் பேசும் படமான பாலன் படத்தை உருவாக்கியவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரும் தமிழருமான டி.ஆர். சுந்தரம் . அனால் மலையாள சினிமா வரலாறுகளின் சுந்தரத்துக்கு உரிய மரியாதை கொடுக்காமல் ஒதுக்கி வைப்பது அவர்கள் வழக்கம் .

    ராமு காரியத் உருவாக்கிய நீலக்குயில் படம்தான் நேரடியான முதல் மலையாளப்படம் என்பது போல அதையே கொண்டாடுவார்கள் அவர்கள்.

    ஆனால் பாலனுக்கும் முன்பு மலையாளத்தின் முதல் (மவுனத்) திரைப்படமான விகதகுமாரன் படத்தை 1928ல் தயாரித்து இயக்கி நடித்து 1930 இல் வெளியிட்டவரும் ஜெ.சி. டேனியல் (நாடார்) என்ற தமிழர்தான் .ஆனால் டேனியலை மலையாள சினிமாவின் தந்தையாக ஏற்றுக் கொள்ள திட்டமிட்டு மறுத்தனர் மலையாளிகள் .

    என்னதான் உண்மை என்றாலும் ஒரு தமிழனை எப்படி மலையாள சினிமா உலக தந்தையாக ஏற்பது என்ற எரிச்சல் .

    அதையும் மீறி மனசாட்சி உள்ள மலையாள எழுத்தாளரான சேலங்காடு கோபால கிருஷ்ணன் என்பவர் இந்த மொழி-- இனத் துவேஷ உணர்வினைக் கடந்து ஜெ.சி.டேனியலுக்கு உரிய முக்கியத்துவம் வாங்கித்தர முடிவு செய்தார் .

    அப்போதைய முதல்வரும் தமிழர்களின் மீது துவேஷம் காட்டுவதில உச்சம் தொட்ட கேரள தலைவருமான கருணாகரனை மீறி ஜெ.சி .டேனியலுக்கு அங்கீகாரம் வாங்கித்தர கோபால கிருஷ்ணன் போராட , ஒரு நிலையில் வேறு வழியில்லாமல் மொழி இன துவேஷம் கொண்ட மலையாளிகளும் அதை ஒத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

    அதே நேரம் அவர் தமிழர் அல்ல மலையாளி என்ற பிரச்சாரமும் நடந்தது.

    இதில் என்ன அக்கிரமம் என்றால் டேனியல் கடைசி காலத்தில், தான் பிறந்த தமிழ் நாட்டில் உதவி செய்ய ஆள் இன்றி வறுமையில் வாடியபோது 'அவன் தமிழன்தானே செத்தா சாகட்டும்' என்று வேடிக்கை பார்த்த கேரள அரசுதான் , ஜெ.சி. டேனியல் செத்த பிறகு அவரை மலைளாள சினிமாவின் தந்தை என்று ஒத்துக் கொண்டது .

    ReplyDelete
  7. அந்த மலையாள சினிமாவின் பிதாமகனான தமிழன் ஜெ.சி.டேனியலின் வாழ்க்கையை செல்லுலாயிட் என்ற பெயரில் -- அவர் தமிழன் என்பதையே மறைத்து , தமிழ் பேசும் பகுதியில் மலையாளி என்பது போல பொய்யாக மாய்மாலம் செய்து -- இயக்குனர் கமல் இயக்க , ஜெ.சி.டேனியலாக பிரித்விராஜும் அவர் மனைவி ஜேனட் டேனியலாக மம்தா மோகன் தாசும் நடிக்க தயாரித்து வெளியிட்டனர்.

    படம் வெற்றி பெற்றது சிறப்பான படமாக்கல் காரணமாக ஒரு தேசிய விருது ஒன்பது மாநில விருதுகளையும் பெற்றது.

    இப்போது மலையாள சினிமா உலகில், 'மலையாளி முகமூடி அணிவிக்கப்பட்ட தமிழனான ஜெ.சி. டேனியல் பெயரில் ஒரு விருதும் கூட வழங்குகிறார்கள.

    அந்த செல்லுலாயிட் படத்தை , சும்மா மொழி மாற்றம் மட்டும் மட்டும் செய்யாமல் ஏ.டி..ஆர் எனப்படும் கூடுதல் வசனப் பதிவு (A.D.R.-- Additional Dialogue Recording) என்ற தொழில்நுட்பப்படி, படத்தில் நடித்த பல நடிகர்களை மீண்டும் பேச வைத்து எடுத்து தமிழில் யோகராஜ் பால சுப்பிரமணியம் என்பவர் தயாரித்து இருக்கும் படமே ஜெ.சி.டேனியல்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் கிறிஸ்தவ நாடார் குடும்பத்தில் பிறந்த ஜோசப் செல்லப்பா டேனியலுக்கு சினிமா மீது ஆர்வம் வந்து மும்பை சென்று தண்டிராஜ் கோவிந்த பால்கேவைச் (பின்னாளில் தாதாசாகிப் பால்கே ) சந்தித்து படப்பிடிப்பு நடத்துவதைப் பார்க்கிறார் . சென்னைக்கு வந்து முதல் தமிழ்ப் படத்தை எடுத்த நடராஜ முதலியாரை பார்த்து கேமரா பற்றி அறிகிறார் .

    சமூகக் கதையை படமாக்க விரும்பி வட இந்தியாவில் இருந்து அன்றைய பிரபல நடிக ஒருத்தியை பெரும் சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு வர , அவள் அளவுக்கு மீறிய வசதிகள் கேட்டு அலட்ட , அவளை அனுப்பிவிட்டு உள்ளூரில் உள்ள ரோசம்மா என்ற தாழ்த்தப்பட்ட நாடக நடிகையை வைத்து படம் எடுக்கிறார் .

    படம் ரிலீஸ் ஆகும்போது உயர்சாதி மலையாளிகள் தாழ்த்தப்பட்ட பெண்ணை கதாநாயகியாகப் போட்டு படம் எடுப்பதா என்று ஜாதி வெறி பிடித்து படம் திரையிடப்படும் கொட்டகைக்கு தீவைக்கிறார்கள். ரோசியைக் கொலை செய்ய முயல, அவள் தப்பி தமிழ்நாட்டுக்கு ஓடி வந்து விடுகிறாள் .

    ReplyDelete
  8. மிகவும் நஷ்டப்பட்ட டேனியல் (தன் தாய் மண்ணான) தமிழ்நாட்டுக்கு வந்து பல் வைத்தியம் படித்து அகஸ்தீஸ்வரத்தில் பெரிய டாக்டர் ஆகி மீண்டும் சந்தோஷமாக வாழ்கிறார். அப்போது பிரபல நடிகர்காக இருந்த பியூ சின்னப்பாவுக்கு பல் மருத்துவம் பார்க்கும் சூழல் ஏற்பட, அவர் மூலம் மீண்டும் சினிமா ஆசை வருகிறது .

    சின்னப்பா கேட்டுக் கொண்டபடி மீண்டும் சென்னைக்கு வருகிறார். ஆனால் சின்னப்பாவை பார்க்க முடியவில்லை . அதே நேரம் சின்னப்பாவுக்கு வேண்டிய சிலர் டேனியலுக்கு தவறான வழிகளைக் காட்ட, மனம் போன போக்கில் வாழ்ந்து சொத்து எல்லாம் இழந்து மீண்டும் ஊர் திரும்புகிறார்.

    பல பிள்ளைகள் இருந்தும் பராமரிக்க வசதியின்றி மிக வறுமையான வாழ்க்கையை வாழ்கிறார்.

    சேலங்காடு கோபால கிருஷ்ணன் டேனியல் பற்றி அறிந்து அவரை சந்தித்து அவரது வறுமையை சொல்லி மலையாள அரசிடம் அவருக்கு உதவி செய்ய கேட்கிறார்.

    ஆனால் டேனியல் உருவாக்கிய படம் அவரது ஆறு வயது மகனால் பலப்பல வருடங்களுக்கு முன்பே எரிக்கப்பட்டு அதன் பிரதி கூட இல்லாத காரணத்தாலும், டேனியலுக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்றும் கூறி கேரள அரசு மறுக்கிறது.

    ஆனாலும் அவர் மலையாலத்தில்தானே படம் எடுத்தார் என்று கூறி, கேரளா அரசிடம் சேலங்காடு கோபால கிருஷ்ணன்போராடிக் கொண்டு இருக்கும்போதே வறுமையால் இறக்கிறார் டேனியல் .

    அதன் பிறகு, 'இனி பெரிதாக பணச் செலவு எதுவும் இல்லை' என்ற நிலையில் டேனியலை மலையாள சினிமாவின் பிதாமகன் என்று ஒத்துக் கொள்கிறது கேரள அரசு.

    டேனியல் பெயரில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் டேனியலின் இளைய மகன் ஹாரீஸ் டேனியல் ஆறு வயதில் அறியாப் பருவத்தில் டேனியல் எடுத்த மலையாளப் படத்தின் பிரதியை எரித்ததற்காக மலையாள சினிமா உலகத்திடம் மன்னிப்பு கேட்கிறாராம் . எப்புடி கதை ?

    ReplyDelete
  9. முதலில் படத்தில் பாராட்ட வேண்டிய விசயங்களைப் பாராட்டி விடுவோம்.

    அந்த ரோசம்மா என்கிற ரோசி கதாபாத்திரமும் அது தொடர்பான காட்சிகளும் மிக அருமையாக படமாக்கப்பட்டுள்ளன. பார்க்கும்போது நம்மையறியாமல் கண் கலங்கி நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது. ரோசம்மாவாக நடித்த சாந்தினியின் நடிப்பு அபாரம். இரண்டாவது பாராட்டு ஆர்ட் டைரக்டருக்கு. மிக சிறப்பான சிலிர்ப்பான உழைப்பு!

    மூன்றாவது ஜெயச் சந்திரனின் இசை . டைட்டிலே மனம் கவர ஆரம்பித்து விடுகிறது இசை . அடுத்து டேனியலாக நடித்து இருக்கும் பிரித்விராஜின் நடிப்பு. அவரது மனைவி ஜேனட்டாக நடித்த மம்தா மோகன்தாசின் நடிப்பு இவையும் ஒகே.

    ஆனால் படத்தில் உண்மையை திசை திருப்பி, ஒரு தமிழனின் வரலாற்றை எடுக்கும்போதும் அதில் தமிழ் இனத்தின் மீதான எரிச்சலைக் காட்டி இந்தப் படம் சம்மந்தப்பட்டவர்கள் அடித்திருக்கும் கூத்தும் அதன் பின்னால் உள்ள புத்திசாலித்தனமான அயோக்கியத்தனமும், உண்மையான உணர்வு உள்ளவனுக்கு ரத்தம் கொதிக்க வைக்கிறது.

    அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம் .

    ReplyDelete
  10. ஜே சி டேனியலின் குடும்பம் கன்யாகுமரி மாவட்டத்திலேயே பெரும் வசதியாக இருந்த ஒரு கிறிஸ்தவ நாடார் தமிழ்க் குடும்பம்.
    அவர்களுக்கு திருவனந்தபுரம் பகுதியில் சுமார் நூற்றி எட்டு ஏக்கர் தென்னந்தோப்பு இருந்தது. அவற்றை மலையாளிகள் அபகரிக்கப் பார்த்ததால் ஜே சி டேனியலை அங்கேயே தங்க வைத்தார் அவரது அப்பா.

    அதனால் ஜெ.சி.டேனியல் அங்கு தங்கி இருக்க வேண்டி இருந்தது . மிகப் பெரிய அறிவாளியான அவர் மலையாளமும் கற்றுக் கொண்டார் . கமல் ஹாசனின் குருவான டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் டேனியலின் மனைவி ஜேனட்டுக்கு உறவினர் .

    மலையாளிகளால் ஏய்க்கப்பட்டு சொந்தத் தமிழ் மண்ணுக்கு மீண்டும் வந்து பல் வைத்தியம் படித்து டேனியல் தொழில் செய்தபோது அவரிடம் கம்பவுண்டராக பணியாற்றியவர் , குமரி அனந்தனின் தாய்மாமன்.

    உண்மைகள் இப்படி இருக்க படத்தில் "ஜெ.சி.டேனியல் என்பவர் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து (பிறகு மொழி வாரி மாநிலப் பிரிவினையின் போது பல்லாயிரம் தமிழ் நிலப் பகுதிகளை அநியாயமாக கேரளாவிடம் ஏமாந்து விட்டுக் கொடுத்து கொஞ்சம் மட்டுமே தப்பித்து) பின்னர் தமிழ்நாட்டோடு இணைந்த பகுதியில் வாழ்ந்த மலையாளி. அதாவது நாடார்தான். ஆனால் மலையாளி ''என்று முடிந்த மட்டும் பொய் சொல்கிறார்கள் .

    ஜாதி இந்து மலையாளிகளின் துவேஷத்தால் சொத்துகளை இழந்த டேனியல் தமிழ் மண்ணுக்கு தன் சொந்த ஊருக்கு வந்தார் என்று சொல்லும் நேர்மையில்லாமல் தனது தம்பி வீட்டுக்கு தங்க வந்தார் என்று மொழிப் பூசணிக்காயை பொய்யில் மறைக்கிறார்கள்.

    ReplyDelete
  11. படத்தின் டேனியலின் நண்பராக வரும் சுந்தர்ராஜனும் உண்மையில் தமிழர்தான். டேனியலைப் போலவே பின்னாளில் மார்த்தாண்ட வர்மா என்ற மலையாளப் படத்தை எடுத்தவர் . அந்தப் படத்தின் படப்பெட்டி பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

    ஆனால் அந்தக் கதை உரிமை கமலாலயம் பப்ளிகேஷன் என்ற மலையாள பதிப்பகத்தாரிடம் இருந்ததால் ஒரு தமிழனுக்கு இவ்வளவு மரியாதையா என்று பொறாமைப் பட்டு , கதை ஒப்பந்தத்தை முறைப்படி சுந்தர்ராஜன் பதிவு செய்யாததைக் காரணம் காட்டி படத்தை முடக்கி அவரை வறுமையில் சாகடித்தார்கள்.

    அந்த சுந்தர்ராஜனின் மகள்தான் பின்னாளில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக உயர்ந்து இயக்குனர் டி. ஆர் . ராமண்ணாவை மணந்த பி.எஸ் சரோஜா .

    உண்மை இப்படி இருக்க அந்த சுந்தர்ராஜன் கதாபாத்திரத்தையே "மதராஸல தமிழ்நாட்டுக் காரங்களும் இந்தியில இந்திக் காரங்களும் படம் எடுக்கும்போது நாம 'நம்ம' மலையாளத்துல படம் எடுக்க முடியாதா ?"என்று வசனம் பேசுவதாகக் காட்டி அவரையும் மலையாளி என்று சொல்லும் அநியாயத்தை எங்கே போய் சொல்ல?

    இது எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை . டேனியலின் அம்மா தமிழ் முறைப்படி வீட்டில் சேலை கட்டும் பெண்மணியாகவே வாழ்ந்து இருக்கிறார். ஆனால் படத்தில் அவரை மலையாள முறையில் உடை அணிந்த சேச்சியாக காட்டுகிறார்கள் ... டேனியல் மலையாளி என்று தாங்கள் சொல்லும் பொய்க்கு ஒத்தாசையாக!

    உண்மையில் டேனியல் முதல் மலையாளப் படத்தை எடுத்தபோது அவர் வீட்டுக்கு முன்னாள் அவரது ஜாதியையும் தாய்மொழியையும் குறிப்பிட்டு அதோடு நாயே என்ற வார்த்தையை சேர்த்து "தமிழ்நாடு வள்ளியூருக்கு அப்பால்தான் . இங்கே உனக்கு என்ன வேலை?" என்று தொந்தரவு செய்தவர்கள் மலையாளிகள்.

    டேனியல் படம் ஓடிய திரையரங்கை அன்றைய மலையாளிகள் கொளுத்தியதற்கு காரணம் , தாழ்ந்த ஜாதிப்பெண்ணை கதாநாயகியாகப் போட்டது மட்டுமல்ல. டேனியல் ஒரு தமிழன் என்பதுவும்தான் காரணம் . ஆனால் படத்தில் டேனியல் நிற்கும் நடக்கும் இடம் எல்லாம் பின்னணியில் மலையாளம் கொஞ்சி விளையாடுகிறது.

    ஒரு காட்சியில் முதல் தமிழ்ப் படத்தை எடுத்த நடராஜ முதலியாரை டேனியல் சந்திப்பதாக ஒரு காட்சி . அப்போது டேனியல் ஆங்கிலத்தில் பேசும்போது நடராஜ முதலியார் "உனக்கு தமிழ் தெரியும்தானே ? அப்போ தமிழில் பேசேன் " என்கிறார் . அப்போது கூட டேனியல் தமிழ் தெரிந்த மலையாளி என்று நிறுவ முயல்கிறார்களே, தவிர அவர் தமிழன் என்பதை சொல்லாமல் மறைக்கிறார்கள்.

    ReplyDelete
  12. படத்தில் பி.யூ சின்னப்பா பற்றி சொல்லப்படும் விஷயங்கள் எல்லாம் உண்மைதான் .

    ஆனால் ஐந்து வயது முதலே குஸ்தி சிலம்பம் கத்திச சண்டை மல்யுத்தம் சுருள் பட்டா ஆகிய வீர விளையாட்டுக்களை கற்றவர் அவர். இதில் சுருள் பட்டா என்பது ஒரு விபரீத ஆயுதமாகும்.

    அதாவது கடிகாரத்தின் மெயின் ஸ்பிரிங் போன்ற இந்தக் கத்தியின் ஒரு நுனியைக் கையில் மாட்டிக் கொண்டு சுமார் 30 அல்லது 40 அடி தூரத்திலுள்ள எதிரி மீது வீசுவார்கள். கத்திச் சுருள் மின் வேகத்தில் பறந்து கொண்டு செல்லும். அதன் நுனியில் பொருத்தப்பட்ட கத்தி எதிரியின் தலையைக் கொத்திக் கொண்ட பின் மீண்டும் சுருண்டு கொண்டு வீசியவரிடமே தலையுடன் வந்து விடும்.

    இந்த சுருள் பட்டா வீசுதலுக்கு மிகுந்த பயிற்சியும் தைரியமும், அவசியமாகும். குறி தவறாகவோ, அஜாக்கிரதையாகவோ வீசினால் எதிரியின் தலைக்குப் பதில் வீசியவரின் தலையே பறிபோய் விடும்.(ரிக் ஷாக்காரன் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டையில் எம்.ஜி.ஆர் இந்த சுருள் பட்டா கத்தியைச் சுழற்றியிருப்பார்)

    தவிர 190 பவுண்டு வரை பளு தூக்கும் திறன் , உடம்பு பூராவும் பிரம்பு வளையங்களை மாட்டிக் கொண்டு தீப் பந்தங்கள் சொருகிய கம்புகளை கையில் ஏந்தி, சண்டை போடுவது ஒரு ஆபத்தான விளையாட்டு இவைகளில் எல்லாம் நிஜமாகவே வல்லவர் பி.யூ. சின்னப்பா.

    அப்பேற்பட்ட பி.யூ. சின்னப்பாவின் கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் மதன் பாப்பைநடிக்க வைத்து அவரை கோணங்கி சேட்டைகள் செய்ய வைத்து 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் இறந்து போன தமிழ் சினிமாவின் பழம்பெரும் சூப்பர் ஸ்டாரை கேவலப் படுத்தி இருக்கிறார்கள், இந்தப் படத்தில்.

    ReplyDelete
  13. இன்னொரு பெரிய அக்கிரமம் ... மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர். சுந்தரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகத்தான் அரசு அதிகாரத்தில் உள்ள மலையாள பிராமணர்கள் டேனியலை புறக்கணிக்கிறார்கள் என்பது போல ஒரு காட்சி வருவதுதான் அடப்பாவிகளா?

    முதல் மலையாளப் பேசும் படத்தை உருவாக்கிக் கொடுத்த தமிழனான டி.ஆர். சுந்தரத்துக்கு மலையாளப் பட உலகில் என்ன மரியாதை கொடுத்துக் கிழித்தீர்கள் ? ஏதாவது சினிமா தொகுப்பில் கும்பல்டி கும்பலாக சுந்தரம் படத்தைக் காட்டுவதைத்தவிர. காரணம் சேலத்துக்காரரான சுந்தரத்தை சும்மா பசப்பலாக கூட மலையாளி என்று சொல்லி விட முடியாது என்பதால்தானே?

    அப்படி இருக்க , எதோ சுந்தரத்தின் மரியாதை குறையக் கூடாது என்பதற்காகவே டேனியலுக்கு மரியாதை தரப்படுவதில்லை என்று கூறி, அதை தமிழ் நாட்டிலும் காட்டுவதன் மூலம் ஜாதி துவேஷத்தை இன்னும் வளர்த்து, தமிழன் ஒருவன் ஒருவனை அடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா?

    படத்தில் டேனியலின் அங்கீகாரத்துக்கு போராடிய செலங்காடு கோபால கிருஷ்ணன் கதாபாத்திரம் கூட "சார் டேனியல் பொறந்ததும் இப்ப இருக்கறதும் அந்த ஊரு . அவ்வளவுதான் . முன்னாடி அந்தப் பகுதி எல்லாம் திருவாங்கூர் சமஸ்தானத்தில்தானே இருந்தது" என்று கூறுவதாகத்தான் வசனம் வருகிறதே தவிர , " அவன் தமிழனாக இருந்தால் என்ன? மலையாள சினிமாவின் பிதாமகன் அவன்தானே ?" என்று பேசுவதாக வசனம் வரவில்லை. என்ன ஒரு வஞ்சகம் !

    ReplyDelete
  14. கிளைமாக்ஸ் அயோக்கியத்தனத்தின் உச்சம்.

    படத்தில் டேனியலின் மகனாக வரும் ஹாரீஸ் நாடார் கேரளாவில் நடந்த ஒரு விழாவில் மிகப் பெருந்தன்மையோடு ஒரு விஷயம் கூறி இருக்கிறார் . " அறியாத வயதில் விவரம் புரியாமல் அந்தப் படத்தின் பிலிமை எரித்தது நினைத்தால் இப்போது வருத்தமாக இருக்கிறது " இதுதான் அவர் பேசியது .

    ஆனால் படம் எப்படி முடிக்கப்படுகிறது தெரியுமா?"ஆறு வயதில் அறியாப் பருவத்தில் என் தந்தை டேனியல் எடுத்த மலையாளப் படத்தின் பிரதியை எரித்ததற்காக, இப்போது மலையாள சினிமா உலகத்திடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்று கூறுவது போல படத்தை முடித்து இருக்கிறார்கள். என்ன ஒரு கிரிமினல் எண்ணம் .

    டேனியல் மலையாள அரசாங்கத்திடம் காசு வாங்கியா விகதகுமாரன் படத்தை எடுத்தார் . அவர் காசில் அவர் எடுத்தார் . அதனால் திட்டமிட்ட சதிகளால் ஏழையாக்கப்பட்டார்.இதில் அவர் குடும்பம் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்?

    ஒரு ஆறு வயது சிறுவன் அறியாமல் செய்த தவறுக்காகவே மலையாள சினிமா உலகிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் ... மலையாள சினிமாவின் பிதாமகனை... ஒரு தமிழன் என்ற காரணத்துக்காக பட்டினி போட்டுக் கொன்ற பாவத்துக்காக, மலையாள சினிமா உலகம் தமிழர்களிடம் எத்தனை எத்தனை மன்னிப்பு கேட்கவேண்டும்?

    ReplyDelete
  15. கேட்கலாம் .... இது எல்லாம் ஒரு பெரிய தப்பா? மலையாள சினிமா பிதாமகனை பற்றி அவர்கள் மலையாளத்தில் படம் எடுக்கும்போது அவனை மலையாளி என்றுதான் காட்டுவார்கள் . இது என்ன தப்பு ? என்று சிலர் யோசிக்கலாம் .

    அவர்களுக்கு ஒரு கேள்வி .

    சதிலீலாவதி , ராஜகுமாரி , மந்திரி குமாரி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் ஆரம்ப காலப் படங்கள் பலவற்றை அற்புதமாக இயக்கியவர ஆங்கிலேயரான எல்லிஸ் ஆர். டங்கன். அவர் இங்கிலாந்தில் பிறந்து ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட அவர் அங்கேயே படித்து பட்டம் பெற்று சிங்கமா கற்று படம் இயக்குவதற்காகவே சென்னை வந்தவர் .

    நாளை அவருடைய வாழ்க்கை வரலாற்றை இங்கே யாராவது படமாக ஒருவேளை எடுத்தால் அதில் 'எல்லிஸ் ஆர் டங்கன் பிறக்கும்போதே திருக்குறள் கேட்டு வளர்ந்தவர். அவரது அப்பா தஞ்சாவூரில் முப்போகம் நெல் விளைவித்த சீரகப் பொன்னி நெல் விவசாயி''' என்று காட்சி வைத்தால்...

    அட வெள்ளைக்காரனை விடுங்கள் . மலையாள சினிமா உலகம் பாராட்டிக் கைதட்டுமா?

    இதற்கான பதிலில் இருக்கிறது உண்மைகளின் நியாயம் !

    ReplyDelete
  16. நண்பரே...உண்மையில் நாம் இந்தப்படத்தை எடுத்து இருக்க வேண்டும்.அப்போதுதான் நமது பக்கத்தில் உள்ள நியாயம் உலகிற்கு தெரிய வந்திருக்கும்.நீங்கள் எழுதி உள்ள ‘வரலாற்று தகவல்கள்’ பிரமிக்க வைக்கின்றன. இந்த தகவல்கள் நமது ஊடகங்கள் வழியாக நம் மக்களிடம் சேர வேண்டும். உங்கள் பதிவை தக்க நேரத்தில் முகநூலில் பகிர்கிறேன்.நன்றி..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.