Showing posts with label கொப்பல்லோ. Show all posts
Showing posts with label கொப்பல்லோ. Show all posts

Jul 25, 2011

GodFather- 3 [1990] கொண்டாட்டத்தின் முடிவு மரணம்.

காட்பாதர் மூன்று பாகத்தையும் வெற்றிகரமாக திரையிட்டு விட்டோம்.
நிகழ்ச்சியை ஹிந்து பத்திரிக்கை மிக விரிவாக விமர்சனமும்...செய்தியும் வெளியிட்டது.
அப்படியிருந்தும் கூட்டம் முப்பது பேரை தாண்டவில்லை.
கூட்டம் குறைவாக இருந்தாலும் நிறைவான கூட்டம்.
ஒவ்வொருவரும் காட்பாதரை பத்து தடவைக்கு மேல் படித்தவர்கள்...பார்த்தவர்கள்.

காட்பாதர் மூன்று பாகத்தையும் எடுத்த விதம் பற்றி கொப்பல்லோ,மரியோ புஸோ,அல்பசினோ.தயாரிப்பாளர்,எடிட்டர் என சகல ஜாம்பவான்களின் பேட்டி அடங்கிய ஆவணப்படமும் திரையிட்டோம்.
படத்தின் சுவையை இது மேலும் கூட்டியது.

 “காட்பாதரை மூன்று நாளாக திரையிடுகிறீர்கள்.....
தமிழகத்தின் காட்பாதர் கலைஞர் வேறு கோவையில் பொதுக்குழு கூட்டுகிறார்......
இதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா?” என நண்பர் கேட்டார்.
இது தற்ச்செயலாக நிகழ்ந்தது.அவ்வளவே...
ஆனால் காட்பாதர் மூன்று பாகத்தையும் திரையிட சரியான இடம்
திமுக பொதுக்குழுதான்.

 காட்பாதர் மூன்றாம் பாகத்தில் கொப்பல்லோ வாட்டிகனை வாட்டியிருக்கிறார்
பொதுவாக மூன்று பாகத்திலுமே மதத்தை காயடித்திருப்பார்.
இதில் நேரடியாக வாட்டிகன் ஊழலை முதன்மை படுத்தியிருக்கிறார்.
தீய சக்திகள்தான் வாட்டிகனையும் ஆளமுடியும் என்பதை தோலுரித்து காட்டியிருக்கிறார்.

கெட்டவன் நல்லவனாக வாழ விரும்புவதை நிழல் உலகம் என்றுமே விரும்பாது.
'திருந்துபவனை தீர்த்து விடு' இதுவே அவர்களது தாரக மந்திரம்.

நிழல் உலக நரியாக இப்பாகத்தில் எலிவாலா என்ற பழைய பெருச்சாளியை நடிக்க வைத்திருக்கிறார்.
இந்த கதாபாத்திரம் முதல் இரண்டு பாகத்தில் வராதது.
இக்கதாபாத்திரத்தின் தன்மையை எலிவாலாவை போட்டதிலேயே ஆடியன்சுக்கு விளக்கி விடுகிறார் கொப்பல்லோ.
ஏனென்றால் எலிவாலாவின் இமேஜ் அப்படி.
குட் பேட் அக்ளியில்..... அக்ளியாக தோன்றி தூள் கிளப்பியவறாயிற்றே!!!!!!!.

ஒரு மனிதன் செய்த தவறுகளுக்கு தன் வாழ்நாளிலேயே தண்டனை  பெறுவான் என்ற நீதி மூன்றாம் பாகத்தில்தான் சொல்லப்படுகிறது.
எனவே மூன்றாம் பாகம் மற்ற இரண்டைப்போல வெற்றி பெறவில்லை அநீதீதான் வெற்றி பெறும் என்பது இன்றைய பாக்ஸ் ஆபிஸ் சூத்திரம்.

படத்தின் இறுதிக்காட்சி வசனமே இல்லாத கவிதை.
இது எனக்கு ஏற்ப்படுத்திய அதிர்வுகள் எனக்கே எனக்கானவை .[இதை பதிவிட மாட்டேன் என்று கொப்பல்லோ மீது சத்தியம் செய்திருக்கிறேன்]
இக்காட்சி தனிப்பட்ட வரம்.....
மூன்று பாகத்தையும் பார்த்தவர்களுக்கு கொப்பல்லோ வழங்கும் ஸ்பெசல் கிப்ட்.

இப்படத்தில் மூன்று பேர் மிக அருமையாக நடித்து உள்ளனர்.
அவர்கள் யாரென்றால்....
ஒன்று அல்பசினோ....

இரண்டாவது அல்பசினோ....


மூன்றாவது அல்பசினோ.


கீழே உள்ள புகைப்படத்தில் வரும் காட்சி மணிரத்தினத்தின் ஒரு படத்தில் இடம் பெறுகிறது.அந்தப்படம் எது?

Jul 20, 2011

காட்பாதர் மூன்றையும் திரையிடுகிறோம்.





காட்பாதரை பதிவெழுதப்போய் காட்பாதர் வைரஸ் என்னை அட்டாக் செய்து ஒரு வழி பண்ணி விட்டது.
அந்த பித்து பிடித்த நிலையை தெளிய வைக்க காட்பாதர் மூன்று பாகத்தையும் திரையிட ஏற்பாடு செய்து விட்டேன்

.கோணங்கள் பிலிம் சொசைட்டி,கோயம்புத்தூர் சினிமா கிளப்,களம் பிலிம் சொசைட்டி மூன்றையும் இணைத்து ஒரு மாபெரும் விழாவாக கொண்டாட அடியெடுத்து உள்ளேன்.

பதிவுலக நண்பர்கள் இந்நிகழ்ச்சி பற்றி தங்கள் வலைப்பக்கத்தில் எழுதியும்... ,நிகழ்ச்சி போஸ்டரையும் விளம்பரப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
மேலும் என் இதய ராஜ்ஜியத்தில் ஒரு ஏக்கர் எழுதி தருகிறேன்.

[கோவையில் ஒரு செண்ட் இடம் கூட கிடையாது .எல்லாம் கலைஞர் பேமிலி வளைத்து போட்டு விட்டது..அதான்..இதயத்தில் இடம்...ஹி..ஹி..ஹீ..]

Jul 13, 2011

காட்பாதரை பின்னுக்கு தள்ளிய படம்!


காட்பாதரின் மகத்தான வெற்றிக்கு பிறகு பாரமவுண்ட் நிறுவனம் இரண்டாம் பாகத்தை எடுத்து காசு பார்க்கதுடித்தது.
ஹாலிவுட்டில் இது குல வழக்கம்.
கொப்பல்லாவை அணுகிய போது மறுத்து விட்டார்.
காட் பாதரின் மொத்த எஸென்சையும் கண்டு பிடித்து முதல் பாகத்திலேயே வைத்து விட்டதால் இரண்டாம் பாகம் வேலை செய்ய சுவாரஸ்யம் இருக்காது என கருதினார்.
இதுதான் ஒரு படைப்பாளின் இயற்க்கையான குணம்.
கொப்பல்லோவின் ஸ்டேட்மெண்ட் இதோ...
 “கொக்கோ கோலாவின் பார்முலா தெரிந்த பிறகு அதன் பின் ஆராய்ச்சியில் சுவாரஸ்யம் இருக்காது”
பாரமவுண்ட் தொடர்ந்து வற்ப்புறுத்தவே மீண்டும் காட்பாதரை ஆய்வு செய்தார்.
இரண்டாம் பாகத்திற்க்கான சூத்திரத்தை கண்டு பிடித்து விட்டார்.
அதன் பின் பாரமவுண்டுக்கு மூன்று கண்டிசன் போட்டார்.
முதலாவது... படைப்பு சுதந்திரம்
இரண்டாவது...மிகப்பெரிய சம்பளம்.
மூன்றாவது...படத்தின் பெயர் காட்பாதர் 2
முதல் இரண்டுக்கும் தலையாட்டிய பாரமவுண்ட் மூண்றாவதுக்கு அலறியது....
நோ....
இறுதியில் ஜெயித்தது கொப்பல்லோ!


காட்பாதரை விட காட்பாதர் 2 அதன் உள்ளடக்கம்,கட்டமைப்பு,பிரம்மாண்டம்,வசூல் எல்லாவற்றிலும் சுப்பீரியராக அமைந்து விட்டது.
வழக்கமாக இது போல் எடுக்கப்படும் தொடர் பாகங்கள் தரத்தில் பின் தங்கி விடும்.
ஹாலிவுட் வரலாற்றிலேயே முதல் பாகத்தை விஞ்சியது காட்பாதர் 2 மட்டுமே!
 இன்றும் முறியடிக்கப்படாத இச்சாதனைக்கு நாயகன் கொப்பல்லோதான்

முதல் பாகத்தின் மைய இழை... மார்லன் பிரண்டோவிடம் இருந்து அல்பசினோவிடம் பவர் டிரான்ஸ்பர் ஆவது.
மூன்று மகன்கள் இருந்தாலும் மூன்றாவது மகன் தான் தனது வாரிசாக வரமுடியும் எனக்கணித்து காய் நகர்த்துவார் பிராண்டோ.
அல்பசினோ இந்த மாபியா விளையாட்டே வேண்டாம் என ஒதுங்கிப்போய் விதியின் வசத்தால் தந்தை இடதில் அமர்த்தப்படுகிறார்.

இரண்டாம் பாகத்தில் மார்லன் பிரண்டோ எப்படி காட்பாதராக உருவானார் என்பதையும் குடும்பத்தை கட்டிக்காத்து உறவுகள் சிதையாம ல் பிசினஸ் சாம்ராஜ்யத்தை எப்படி கட்டமைத்தார் என்பதை ஒரு கோணத்திலும்...
 பிரண்டோவிலிருந்து விலகி அல்பசினோ குடும்பத்தை சிதைத்து பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்த போராடுவதை மற்றொரு கோணத்திலும் காட்டி திரைக்கதையில் சாதனை படைத்தார்.

முதல் பாகத்திலேயே சகோதரியின் கணவரை போட்டு தள்ளியாச்சு...
இரண்டாம் பாகத்தில் அண்ணனை கொன்று விடுகிறார்.
காரணம்????????
அண்ணன் நானிருக்க தம்பி பதவிக்கு வருவதா????  என அண்ணன் தம்பியை கொல்ல முற்ச்சிக்க தம்பி தப்பித்து அண்ணனை போட்டு தள்ளுகிறான்.
 “மன்னிப்பு இத்தாலியில எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை”

தந்தைக்கு இல்லாத நெருக்கடி தனையனுக்கு...
நாலு பேர் ந்ல்லா இருக்க ஒருவரை போட்டு த்தள்ளியது பிராண்டோ காலம்.
ஒருவன் நல்லா இருக்க நாலு பேரை போட்டு தள்ளுவது அல்பசினோ காலம்.


இந்த இரண்டு பாகங்களையும் தொடர்ச்சியாக நீங்கள் பார்க்கும் போது கலைஞர் பேமிலி ஞாபகத்துக்கு வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...

இப்படத்தில் வரும் கோர்ட் சீன் மிரட்டலாக இருக்கும்.
நீதிக்கும்,மாபியாவின் சாகசத்திற்க்கும் நடக்கும் மாய விளையாட்டை ரசிக்கலாம்.
தனக்கு எதிராக சாட்சி சொல்பவனுக்கு பேதி கொடுக்க அவனது அண்ணனை தன்னோடு கூட்டிக்கொண்டு வருவார் அல்பசினோ.
அந்த ஆள் பார்ப்பதற்க்கு மத யானை தோற்றம்...
கண்களில் சினம் கொண்ட சிங்கத்தின் சீற்றம்.
ஜட்ஜிலிருந்து மொத்த கோர்ட்டே நடுங்கி விடும்.
சாட்சியாவது...மண்ணாவது...அடி..அந்தர்பல்டி....
படத்தின் உச்சபட்ச நகைச்சுவை காட்சியாக பரிணமிக்கும்.

படத்தின் ஆரம்பக்காட்சி மிக முக்கியமானது.
இத்தாலியில் லோக்கல் மாபியாவால் தந்தை கொலை செய்யப்படுகிறார்.
பழி வாங்க குடும்பத்தில் ஒருவரையும் மிஞ்சவிடக்கூடாது என்பது மாபியா மரபு.
இந்தக்காட்சிகள் எனக்கு உணர்த்தும் உண்மைகள்...
படம் பார்க்கும் ஈழத்தமிழர்கள் அனைவரும் உணர முடியும்.
பிரபாகரன் இப்படத்தை பார்த்திருக்க மாட்டார்...
பார்த்திருந்தால் ராஜீவ் காந்தியை கொன்றிருக்க மாட்டார்.
இதற்க்கு மேல் என்னால் விரிவாக எழுத முடியாது.
அடுத்தப்பதிவெழுத... இருக்க வேண்டும்.

சினிமாவின் தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்கு...புரிந்தவர்களுக்கு ஒரு செய்தி...
சோவியத் ரஷ்யாவின் இண்டலக்சுவல் மாண்டேஜ் தியரியை திரைக்கதையில் புகுத்தி வெற்றி கண்டிருக்கிறார் கொப்பல்லோ என்று எனக்குப்படுகிறது.
சரிதானா!!!!!

Jul 11, 2011

காட்பாதர்-1972[ஆங்கிலம்]வன்முறையை கொண்டாடுவோம்

காட்பாதர்-இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே ஒரு பவர் தெறிக்கும்.
கேபிடலிசம் தான் உயிர் வாழ, யாரையும் பழி வாங்கும்....
போட்டுத்தள்ளும்...
நம் ஊரிலேயே மிகச்சரியான உதாரணம்....
 சோனியா காந்தி.

1669ல் மரியோ புஸோவால் நாவலாக எழுதப்பட்டு 1972ல் பிரான்ஸிஸ் போர்டு கொப்பல்லாவால் படமாக்கப்பட்டது.

நாவலும் சரி..படமும் சரி..
இரண்டுமே உலகைக்கலக்கியது.
ஹாலிவுட்டில் சிட்டிசன்கேனை பின்னுக்கு தள்ளிவிட்டு தரத்தில் முதலிடத்தில் இன்றளவும் காட்பாதரை கொண்டாடுகிறார்கள்.
சினிமா பேச ஆரம்பித்த பிறகு அதன் அர்த்தத்தை ...வலிமையை முழுமையாக உணர்த்திய படம் காட்பாதர்.
வண்ணப்படங்களிலேயே அதன் வீர்யத்தை அற்புதமாக போர்ட்ரெய்ட் செய்த படம் காட்பாதர்.
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை காட்பாதரை பார்ப்பதை வழமையாககொண்டிருக்கிறேன்
.இன்று பார்க்கும்போது கூட படம் புத்தம் புதிதாய் தோற்றமளித்தது.
திரைப்படத்தின் அத்தனை உள்ளடக்கங்களையும் சரியாகப்பயன்படுத்தியபடம் காட்பாதர்.
ஒரு கதை எவ்வாறு திரைக்கதை அமைக்கப்படவேண்டும் என்பதற்க்கு மிகச்சரியான உதாரணம் காட்பாதர்.
முதலில் மரியோபுஸோதான் திரைக்கதையை அமைத்தார்.
சரியாக வரவில்லை.
பிறகு கொப்பல்லோ அமைத்தார்.
மொதத நாவலைப்படித்து விட்டு அதன் மூலக்கூறை பிடித்து விட்டார்.
பேமிலி V/S  பிசினஸ்.
இந்த தளத்தில்தான் இக்கதை இயங்குகிறது என்றசூத்திரத்தை கண்டுபிடித்தவர் கொப்பல்லோ.
அவராலும் ஒருகட்டத்தில் திரைக்கதையை நகர்த்த முடியவில்லை.
இதற்க்கென்றே ஹாலிவுட்டில் ஸ்கிரிப்ட் டாகடர் என்ற பிரிவு உண்டு.
அதில் ஜீனியஸான ராபர்ட் டுவென் உதவி செய்தார்.
இவர்தான் திரைமேதை ரோமன் பொலான்ஸ்கி இயக்கத்தில் வெளிவந்த
சைனா டவுண் திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்தவர்.
எத்தனை ஜீனியஸ்கள் சேர்ந்து ஒரு திரைப்படத்தை காவியமாக்குகிறார்கள்!!!!!!!!!!
.நம்ம ஊரிலே கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்....என ஒரே ஒரு பெயரைப்போட்டு கைதட்டல் வாங்கும் அயோக்கியத்தனம் இன்றும் தொடர்கிறது

உலகில் எந்தெந்த மொழிகளில் திரைப்படம் எடுக்கப்படுகிறதோ அத்தனை மொழிகளிலும் இப்படம் காப்பியடிக்கப்பட்டோ...சிதைக்கப்பட்டோ...மறு உருவாக்கம் செய்யப்பட்டோ வந்துள்ளது.
காட்பாதரை.... தமிழில்....
 சிதைக்கப்பட்டு வந்த படம் அமரன்.
காப்பியடிக்கப்பட்டு வந்த படம் நாயகன்.
அற்புதமாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட படம் தேவர் மகன்.
அதனால்தான் கமல் தைரியமாக தேவர்மகனை ஆஸ்கார் அனுப்பினார்.
“உன் காட்பாதரை என் மதுரை மண்ணில் உயிர்த்தெழ வைத்துள்ளேன்” என்று வெள்ளைக்காரனுக்கு சேதி சொல்லியதாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு திரைப்படம் எப்படி தொடங்கப்பட வேண்டும் என்பதற்க்கு இலக்கணம் காட்பாதர்.
குளோசப்பில் ஒரு முகம் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கும்.
உதவி கேட்கும்.
கவுண்டர் ஷாட்டில் மார்லன் பிராண்டோ மடியில் பூனைக்குட்டியை விரல்களால் கொஞ்சியபடிகேட்டுக்கொண்டு இருப்பார்.

ஒளிப்பதிவில்.... லைட்&ஷேட் என்ற உத்தி மிகுந்த நேர்த்தியுடன் கையாளப்பட்டிருக்கும்.
இருண்ட உலகத்தின் மாமனிதன் மார்லன் பிரண்டோ என்பதை ஒளிப்பதிவு சொல்லும்.
ஏன்? ஆர்ட் டைரக்டரும் அவர் பாணியில் சொல்லியிருப்பார்.

.இருட்டை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் காட்சியிலிருந்து அப்படியே ஜம்ப்...
அடுத்தக்காட்சி .

வெளிச்சம் வெள்ளமாக தெறிக்கும் திருமணக்காட்சி.
அத்தனை முதன்மை பாத்திரங்களும் இங்கே ஆஜராகியிருப்பார்கள்.
அவர்களது குணாதிசயங்களை இந்தக்காட்சியிலேயே சொல்லி விடுவார் கொப்பல்லோ.

கொப்பல்லோவின் ஆளுமைக்கு இதோ ஒரு சாம்பிள்.....
இன்னொரு டான் காட்பாதரை பார்த்து பேச வேண்டும்.
அந்த நடிகரால் மார்லன் பிராண்டோவை பார்த்து வசனமே பேச முடியவில்லை.
 'வசனத்தை திருப்பி திருப்பி சொல்லி மனப்பாடம் பண்ணு' என்று சொல்லி விட்டு அந்த நடிகர் அவ்வாறு பிராக்டிஸ் பண்ணுவதை அவர் அறியாதவாறு சூட் செய்து படத்தில் வெகு நேர்த்தியாக இணைத்துவிட்டார்.
படத்தில் காட்பாதரை பார்க்கப்போகும்முன்னால் எப்படி பேசவேண்டும் என்பதை ஒரு மனிதன் தனியாக ஒத்திகை பார்ப்பதுபோல் இக்காட்சி ரசிகர்களுக்கு பதிவாகும்.

கொப்பல்லொ இப்படம் எடுக்க பட்ட பாட்டை தனியே ஒரு படம் பண்ணலாம்.
அவ்வளவு பாடு.
தயாரிப்பாளரான பாரமவுண்ட் கொடுத்த நெருக்கடி சொல்லி மாளாது.
மார்லன் பிராண்டோவும் இயக்குனரை வாட்டி வதைப்பதில் பிஹெச்டி வாங்கியவர்.
ஒரு கட்டத்தில் கதவை சாத்தி விட்டு கொப்பல்லோ தனிமையில் கதறி அழுதிருக்கிறார்.
அதன் பிறகு பிராண்டோ தனது சேட்டைகளை மூட்டை கட்டி விட்டு படம் முழுமையாக வர முழு மனதோடு ஒத்துழைத்தது வரலாறு.

அல்பசினோ இப்படத்தின் ஆடிசனுக்கே ஒத்துழையாமையை நல்கினார்.
அப்போது அவர் திரை உலகில் சாதாரணன்.
ஆனால் நாடக உலகில் சூப்பர் ஸ்டார்.
இவரைப்போட பாரமவுண்ட் கொடுத்த கட்டையை நீக்க கொப்பல்லோ படாத பாடுபட்டார்.
அல்பசினோ என்ற மகத்தான நடிகன் வெளிப்பட்டது காட்பாதரில்தான்.
ஆரம்பக்காட்சிகளில் அல்பசினோ முகம் பச்சிளம்பாலகனாக காட்சியளிக்கும்.

கிளைமாக்சில் நரியின் தந்திரத்தையையும், ஒநாயின் கொடூரத்தையும் கண்களில் தேக்கி பாவங்களை வெளிப்படுத்துவார் பாருங்கள்.
வர்ணிக்க வார்த்தைகளை புதிதாக உருவாக்க வேண்டும்.


இது வரை இப்படத்தை பார்க்கவில்லை என்றால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்ட்.
இனிமேலும் பார்க்கபோவதில்லை என்றால் டோட்டல் வேஸ்ட்.

இப்படத்தை முப்பதாண்டுகளாக ஆய்வு செய்து வரும் எனது நண்பர் இயக்குனர் திரு .ஆனந்தன் கொடுத்த தகவல்கள்தான் இப்பதிவில் நிரம்பி உள்ளன.
அவருக்கு நன்றி.