HEY RAM \ 2000 \ INDIA \ DIRECTED BY : KAMAL HASSAN \ ஹேராம் = 036
“ கமல் திரைக்கதை எழுதிய படங்களில் திரும்பத்திரும்ப வெளிப்படும் ஒரு விஷயம், அப்பா என்கிற படிமம்.
குறிப்பாக, அப்பாவிடமிருந்து விலகிப்போக விரும்பும் ஒருவன் எப்படி அப்பாவின் ஆளுமையிலிருந்து விலக முடியாதவனாக இருக்கிறான் என்பதே
அவரது ஆதார பிரச்சனை.
குடும்பத்திலிருந்து வெளியேற விரும்புவம் ஒருவனே அவரது கதாநாயகன்.
அவன் வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண்ணோடு பழகுகிறான்.
அவளைக்காதலிக்கிறான்.
திருமணம் செய்து கொள்ளும் முன்பே அவளோடு நெருக்கமாக பழகி சேர்ந்திருக்கிறான்.
பிறகு சூழலின் காரணமாக அவளை கைவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறான்.
இது தேவர் மகனில் மட்டுமில்லாது, ஹேராமிலும் இடம் பெறுகிறது.
ஒரு வகையில் இந்த ஒப்புமை ஆச்சரியப்படக்கூடியது.
தேவர் மகன், ஹேராம்...
இரண்டிலுமே இரண்டு நாயகிகள் இடம் பெறுகின்றனர்.
ஒன்று, அவன் காதலி.
மற்றொன்று, அவன் மனைவி.
காதலி... அவன் விரும்பித்தேடிக்கொண்டது.
மனைவி...அவன் முழு விருப்பமின்றி மணந்து கொள்ளப்பட்டவள்.
தேவர் மகனில்...செங்கமலமும் [ ரேவதி ],
ஹேராமில்...மைதிலியும் [ வசுந்தரா தாஸ் ],
தனது கணவனோடு உள்ள உறவைப்புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
கடந்த காலத்தில் அவனுக்கு ஒரு காதலி இருந்தாள் என்பதை அறிந்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.” -
எஸ்.ராமகிருஷ்ணன்.
நூல் : கமல் நம் காலத்து நாயகன் \ முதல் பதிப்பு \ 2011.
தொகுப்பு : மணா.
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.
[ நூலில் எஸ்.ரா ஹேராம் பற்றிய கட்டுரைக்கு,
எழுதப்பட்ட காலமும்,
கட்டுரை இடம் பெற்ற ஊடகமும் குறிப்பிடப்படவில்லை ]
நண்பர்களே...
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஒப்பீட்டு ஆய்வை இப்பதிவின் முன்னுரையாக இடம் பெறச்செய்தது மிகப்பொருத்தமான ஒன்றே.
இனி ஹேராம் திரைக்கதைக்குள் செல்வோம்.
_________________________________________________________________________________
தன் மகளை முதலிரவு அறைக்குள் அனுப்ப வந்த...
அம்புஜம் : நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா...பயப்படாத...
அறையினுள் ராம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து,
காந்தியடிகளின் ‘சத்திய சோதனை’ ஆங்கிலப்புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறான்.
மைதிலி : [ என்ன பேசுவது என்றே புரியாமல் ] பால் அங்கே இருக்கு.
ராம் : இல்ல...நான் பாலே சாப்பிடறதில்ல.
மைதிலி : ஏன் ? டாக்டர்... ப்டாதுண்ட்டாரா ?
[ ராம் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை பார்த்து ]
மைதிலி : இண்ட்ரஸ்டிங் இல்ல ?
ராம் புருவம் உயர்த்தி அவளைப்பார்க்கிறான்.
மைதிலி : [ புத்தகத்தை காட்டி ] காந்திஜீஸ் பயாகிரபி.
என் புக்தான்.
ராம் : ஓ !...ஸாரி.
புத்தகத்தை கீழே வைக்கிறான்.
மைதிலி : நோ...நோ...படிங்கோ.
‘டிட் யூ லைக் த புக்’
ராம் : நோ...ஐ யூஷுவலி டோண்ட் லைக் செமி பிக்ஷன்.
வேற ஒண்ணும் படிக்கிறதுக்கு கிடைக்கல...அதான்.
மைதிலி : நான் பொடவையை மாத்திண்டு வந்துட்றேன்.
பட்டுப்பொடவய கட்டிண்டு தூங்க வேண்டானுட்டா...அம்மா.
பீரோவிலிருந்து வேறு புடவையை எடுத்துக்கொண்டு மைதிலி குளியலறைக்குள் போகிறாள்.
குளியலறைக்குள் புகுந்த மைதிலி, கதவை தாழ்ப்பாள் இட்டு விட்டு,
புடவையை களையத்துவங்குகிறாள்.
ஒரு பல்லி அவள் தோள் மீது விழுகிறது.
மைதிலி அலறி விடுகிறாள்.
மைதிலி : ஆ...ஆ...ஆ....
பல்லி கீழே விழுந்து ஓடுகிறது.
காலில் ஏறி விடுமோ என பயத்தில் கத்திக்கொண்டே குதிக்கிறாள் மைதிலி.
குளியலறைக்கு வெளியிலிருக்கும் ராம் குழப்பமைடைகிறான்.
மைதிலியின் அலறல், ராமை கல்கத்தா சூழலுக்குள் நினைவினில் உந்தித்தள்ளி விடுகிறது.
ராமின் கண்கள் திறந்திருந்தும், எதையும் பார்க்காத கண்களுடன்...
தூக்கத்தில் நடப்பவன் போல் பாத்ரூம் கதவை அடைந்து தட்டுகிறான்.
ராம் : அபர்னா...அபர்னா...
‘நிஜத்திற்கும்’... ‘நினைவிற்கும்’...பிரித்து பார்க்க முடியவில்லை ராமால்.
மைதிலி கதவை திறக்கிறாள்.
ராம், குரல் கொடுப்பதை நிறுத்தி விடுகிறான்.
ஜாக்கெட் தெரியும் கோலத்தில் இருக்கும் மைதிலி அவசரமாக புடைவையை
போர்த்தி மறைக்கிறாள்.
மைதிலி : அபர்னா யாரு ?
ராம் பதில் சொல்லாமல் குளியலறைக்குள் சென்று, மூடித்தாழிட்டுக்கொண்டு
நினைவில் சூழ்ந்துள்ள ‘கல்கத்தா துயரங்களுக்கு தலை முழுக’
குளிக்க ஆரம்பிக்கிறான்.
மைதிலி வெளியே குழப்பத்தோடு காத்திருக்கிறாள்.
நனைந்த உடலுடன், ராம் நிர்வாணமாக ஒரு மூலையில் போய் ஒடுங்குகிறான்.
மெய் மறந்த நிலையில் ராம் இருக்கிறான்.
[ வெளியிலிருந்த ] மைதிலி : ஏன்னா...உங்களுக்கு ஒண்ணுமில்லியே.
ஆர் யூ ஆல் ரைட்?
நிஜ மைதிலியின் குரலுடன் கலந்து,
நனவோடை கல்கத்தா அபர்னா - கற்பழிப்பாளர்களின் குரலும் கலந்து கேட்கும் பிரமை ராமுக்கு ஏற்படுகிறது.
அல்தாப் : [ குரல் மட்டும் ] மேம் சாப்...தார்வாசா கோலோ மூம்சாப்...
மெய்ன் அல்தாப் மேம்சாப்...ஆப்கா புரானா டெய்லர் மேம்சாப்...
நையா நாப் லேனே ஆயாஹூன்.
அபர்னா : [ குரல் மட்டும் ] ராம்...ஆர் யூ ஆல் ரைட் ராம் ?
ராம் தன் செவிகளை அடைத்துக்கொள்கிறான்.
கல்கத்தாவில் இறந்தவர்கள் உருவங்கள் பாத்ரூம் தரையில் தோன்றி மறைகின்றன.
அபர்னா, கழுத்தறுக்கப்பட்டு கிடக்கிறாள்.
இரத்தம் குளமாக தேங்கி கிடக்கிறது.
ராமால் கொல்லப்பட்ட அனைவரும் அங்கே இருக்கிறார்கள்...
அவனது முதலிரவுக்கு வருகை தந்தவர்கள் போல...
பல்லி ரத்தம் குடிக்கிறது...
ராம் துடிக்கிறான்.
ரத்தச்சகதியின் மீது பல்லி ஊர்ந்தும்...நடந்தும் செல்கிறது.
_________________________________________________________________________________
திரைக்கதையை முழுக்க விவரித்ததன் மூலமாக,
நீங்கள் இக்காட்சியை மறுபடி மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்திருப்பீர்கள்.
\\\ அம்புஜம் : நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா...பயப்படாத...\\\
இந்தியத்தாய்க்கும் - மகளுக்கும் இருக்கும் உறவு நெருக்கம்...
பாலியலுக்கு பக்குவப்படுத்துதல்...
இரண்டையுமே, இந்த ‘ஒரு வரி வசனத்தில்’ வெளிப்படுத்தி...
நம் குடும்ப அமைப்பு, கலாச்சாரம், பண்பாடு முதலிய பெருமைகளை உலகறியச்செய்துள்ளார் படைப்பாளி கமல்.
மேல் நாட்டு ‘டேட்டிங்’ கலாச்சாரத்தை இங்கே பரப்ப நினைக்கும் பன்னாடைகளுக்கு இக்காட்சி பாடம் புகட்டும்.
\\\ மைதிலி : [ புத்தகத்தை காட்டி ] காந்திஜீஸ் பயாகிரபி.
என் புக்தான். \\\
இந்த வசனத்தை உச்சரிக்கும் போது மைதிலியின் குரலில்
பெருமிதம் பொங்கி வழிவதைக்காணலாம்.
\\\ ராம் : நோ...ஐ யூஷுவலி டோண்ட் லைக் செமி பிக்ஷன்.
வேற ஒண்ணும் படிக்கிறதுக்கு கிடைக்கல...அதான்.\\\
ராமின் குரலில்
அலட்சியம் மேலோங்கி இருக்கும்.
‘காந்திஜீ பயாகிரபியை’... ‘செமி பிக்ஷன்’... என ராம் நக்கலடிப்பதை விரும்பாமல் மைதிலி அந்த இடத்திலிருந்து நகருவாள்.
இந்தக்குணம்... இந்தியப்பெண்களுக்கே உரித்தான பராம்பரிய குணம்!
காந்தியையும் விட்டுக்கொடுக்க முடியாமல்,
புருஷனையும் திட்ட முடியாத...
மைதிலியின் ஷண நேரத்தவிப்பை மிக அற்புதமாக தனது முகத்தில் பிரதிபலித்து காட்டியிருப்பார்
வசுந்தரா தாஸ்.
பாத்ரூமிற்குள் மைதிலி,
பல்லிக்கு பயந்து அலறுகிறாள்.
ராமிற்கு, மைதிலியின் அலறல்,
நனவோடையினால் [
Stream Of Consciousness ]...
அபர்னாவின் கதறலாக கேட்கிறது.
பார்வையாளராகிய நமக்கு இருவரது அலறலும் கேட்கிறது.
திரையில் விஷுவலாக காட்டப்படும் மைதிலியின் அலறலுக்கு பின்னணி இசை அமைக்காமல்,
ராமின் நனவோடையில் ஒலிக்கும் அபர்னாவின் கதறலுக்கு ...
பின்னணி இசை கொடுத்து...
ரசிகர்களை நனவோடையில் ஆழ்த்தி ‘கல்கத்தாவுக்கு’ அழைத்து செல்கிறார் இளையராஜா.
இரண்டு ஜீனியஸ்கள் ஒன்றாக சங்கமித்ததால் நமக்கு கிடைத்த பொக்கிஷம் இந்தக்காட்சி.
அவலத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் ராஜாவின் இசை,
மைதிலி கதவைத்திறந்ததும்...நொடி நேரத்தில் மெல்லிசையாக மாறி சாந்தமாக ஒலிக்கும்.
மீண்டும் ராம் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டு கதவடைத்ததும்,
ராஜாவின் ‘துன்பியல் இசை’ ...
காட்சியில் இடம் பெறும் சப்தங்களுக்கு...
இடையூறு செய்யாமல் ரசிகனுக்கு அவலச்சுவையை கூட்டுவதில்
தன் பங்கை செவ்வனே செய்கிறது.
அடித்துச்சொல்கிறேன்..
உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களான ஜான் வில்லியம்ஸ்,
ஜெர்ரி கோல்ட் ஸ்மித், எனியோ மரிக்கோன் போன்றவர்களை தாண்டி இருக்கிறார் ராஜா.
இப்படி ஒரு காட்சியை லட்டு மாதிரி கமல் அமைச்சு கொடுக்க,
கொடி பிடிச்சு ஆடியிருக்கார் நம்ம ஆளு.
ஆஸ்கார் வாங்கிய இசை அமைப்பாளர்கள்,
தயவு செய்து இந்த தரத்தை எட்ட முயற்சிக்கவும்.
அபர்னா நினைப்பு, கல்கத்தா துயரம் இவைகள் ஏற்படுத்திய உள்ளக்கொதிப்பை தணிக்க ராம் ‘தலை முழுகுகிறான்’.
இறுதியாக ‘கரண்ட் ஷாக்கில்’ உடம்பு உதறுவது போல் உடல் மொழியை ஏற்படுத்தி நம்மை ஆகர்ஷிக்கிறார் கமல்.
இக்காட்சியில் நடிகர் கமலை பாராட்டுவதா !
வடிவமைத்த இயக்குனர் கமலை பாராட்டுவதா !!
ஒரே வார்த்தை...கொன்னுட்டீங்க கமல்.
‘நனவோடைக்காட்சிகளை’ படமாக்குவதில் உலகிலேயே
ஈடு இணையற்ற மாஸ்டர்
‘ இயக்குனர் மாமேதை இங்மர் பெர்க்மன்’ மட்டுமே.
ராமின் குளியலறைக்காட்சியின் மூலமாக ‘பெர்க்மனுக்கு’ இணையாக உயர்ந்து விட்டார் கமல்.
மைதிலியின் மீது விழுந்த பல்லியும்...
இரத்த சகதிக்குள் துடிக்கும் பல்லியும்...
ஒன்றல்ல.
ஏனென்றால் ராம் பார்க்கும் போது வெற்றுத்தரையாக இருப்பது...
மெல்ல மெல்ல இரத்தக்குளமாக உருவெடுக்கும்.
அதில் ஊர்ந்து போய் இரத்தத்தை குடிக்கிறது ‘பல்லி’.
இக்காட்சி சரியான ‘பெர்க்மன்தனம்’.
பல்லி = நனவோடை.
இரத்தம் = கல்கத்தா துயரம்.
இது போன்ற காட்சியை பாமர ரசிகன் புரிந்து கொள்வான் என நம்பி 2000ல் படமெடுத்த கமலுக்கு...
ராயல் சல்யூட்.
‘பெர்க்மனை’ உண்மையாக புரிந்து கொண்ட ரசிகன்,
இக்காட்சியை அமைத்த கமலைக்கொண்டாடுவான்.
‘நனவோடை’ பற்றி ஹேராமின் முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியுள்ளேன்.
ஹேராம் = 031 பதிவிற்குச்செல்ல...
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.