Mar 26, 2011

Libero[Along The Ridge]-2006 பெண்ணே நீ தாயா? பேயா?







இப்படம் விட்டோரியா டிசிகாவின் சில்ட்ரன் ஆர் வாச்சிங் அஸ் படத்தை தழுவி மீண்டும் அதே இத்தாலியிலேயே படமாக்கப்பட்டுள்ளது.



மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தை மணிரத்னம் மௌனராகமாக்கியது போல் அற்ப்புதமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர்....... எழுதி இயக்கி நடித்தும் உள்ள Kim Rossi Stuart.
தகப்பன், வந்து போகும் தாய், ஒரு மகன், ஒரு மகள்...... இவர்கள்தான் கதையை நகர்த்தும் புள்ளிகள்.ஆனால் மையப்புள்ளியாக மகனை வைத்துதான் இத்திரைப்படம் சுழல்கிறது.
ஒரு தகப்பன்.... தாயில்லாமல் இரு பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ள இயலாமையை முதல் காட்சியே விளக்கி விடுகிறது.

தொம்மி 11 வயது சிறுவன்.

அக்கா வயோலா சற்று கூடுதலான வயசு.இவர்கள் இருவருக்கும் இடையிலிருக்கும் அன்பும் நட்பும் தனித்துவமானது. தாயில்லாத குறையை போக்க தகப்பனின் கூடுதலான அரவணைப்பில் குளிர் காய்கின்றன இக்குருவிகள்.

தொம்மியை மிகப்பெரிய நீச்சல் வீரனாக்க தந்தைக்கு ஆசை. மகனுக்கோ புட்பாலின் மீது தீராத காதல். காதலுக்கு அப்பாக்கள் என்றுமே எதிரிதானே! வேண்டாவெறுப்பாய் நீச்சல் வகுப்பில் மிதக்கிறான் தொம்மி.

சின்னச்சின்ன பார்ட்டி....அவ்வப்போது குறும்பு என குழந்தைகளை முடிந்த வரை சுவாரஸ்யப்படுத்துகிறான் தந்தை.

வாழ்க்கை என்றுதான்....யாருக்குத்தான் நேர்கோட்டில் செல்லும்?

தீடீரெனெ புயலாய் வருகிறாள் தாய். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மன்னிப்பு கேட்டு கூட்டணி வைக்கிறாள் கலைஞர் போல்.

வயோலா மட்டும் ஒட்டிக்கொள்கிறாள் கே.வி.தங்கபாலு போல்.

கணவன் வேறு வழியில்லாமல்....அகலாது அதே சமயத்தில் நெருங்காது உறவு கொள்கிறான் ப.சிதம்பரம் போல்.

தொம்மி மட்டும் நெருங்கவேயில்லை இ.வி.கே இளங்கோவன் போல்.

ஒடிப்போன குற்ற உணர்ச்சியில் தாய் பிள்ளைகளிடம் பாசத்தை வெள்ளமாகப்பொழிகிறாள். வயோலா அன்பு மழையில் நனைந்து மகிழ.... தொம்மி தாமரை இலையாக இருக்கிறான்.

“ஏன் இப்படி இருக்கிறாய்?” என அங்கலாய்க்கும் தந்தையிடத்தில் தொம்மியின் பதில் இதுதான்.....

“வந்திருக்கா..... ஆனா போயிருவா....”

தாயின் மீது மகன் வீசிய மிக நியாயமான வெடிகுண்டு.


மகனின் கணிப்பை உண்மையாக்கி மீண்டும் ஒடிப்போகிறாள் தாய்.

சுனாமியால் தாக்கப்பட்ட ஜப்பான் மீண்டெழுவது போல்....

மீள்கிறது இக்குடும்பம்.....

பரஸ்பர அன்பினால்.....விட்டு கொடுத்தலினால்....

ரசிகர்களை பிழிய பிழிய அழ வைக்காமல் மிக இயல்பாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்கிறார் இயக்குனர். தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியிருக்கிறார் இயக்குனர். யாரையுமே புனிதப்படுத்தாமல் களங்கமுள்ள நிலவாக அனைவரையும் ஜொலிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

நீங்கள் வாழ்க்கையில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் உலகசினிமா இது.

Mar 19, 2011

Mouchette-1967 கன்னித்தாய்

முஸே திரையில் வடிக்கப்பட்ட சிற்பம்.சிற்பி ராபர்ட் பிரஸ்ஸான்.திரை உலகின் சிறந்த பத்து மேதைகளுள் ஒருவராக கொண்டாடப்படுபவர்.ரஷ்யமேதை தார்க்காவ்ஸ்கி தனக்கு மிகவும் பிடித்த பத்து படங்களில் ஒன்றாக இப்படத்தை சிறப்பிக்கிறார்.இப்படத்தின் டிரெய்லரை உருவாக்கியவர் கோடார்டு என்ற திரைமேதை.

கோணங்கள் பிலிம் சொசைட்டியில் இப்படத்தை திரையிட்டபோது திகைத்துவிட்டேன்.ஒரு அட்சரம் புரியவில்லை.இப்படத்தை புரியாத தற்குறியாக இருக்கிறோமே என்று வெட்கப்பட்டேன்.ஆனாலும் இப்படம் என் உள்ளத்தை உலுக்கியது.
படம் பார்க்கும் ரசிகனிடம் ஆயிரம் கேள்விகள் எழுப்பியுள்ளார் பிரஸ்ஸான்.அது மட்டும் புரிந்தது.கேள்விகளுக்கு விடை தெரிய படத்தை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும்.படத்தை இரண்டாம் முறை டிவிடியில் பார்த்தேன்.லேசா படம் புரிந்த மாதிரி இருந்தது.டிவிடியில் பிரஸ்ஸான் பேட்டி இரண்டு இருந்தது. “என்னடா புரிந்து விட்டது உனக்கு...போடா ஞானசூன்யம்....”என்று காறி துப்பிவிட்டார் பேட்டியில்.


திரைக்கதை அமைப்பதில் சூரன் பிரஸ்ஸான்.சிறுவயதில் நாம் படித்த கதை இது.முருகன் ஆடு மேய்க்கும் சிறுவன் வேடத்தில் நாவல் மரத்தில் இருக்க....பசியுடன் வந்த அவ்வை பாட்டி நாவல் பழத்தை பறித்து போடும்படி கேட்கிறாள்.முருகன், “சுட்டபழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?”என கேட்கிறான்.
பிரஸ்ஸான் இக்கதையை படமாக்கினால்.....
இதற்க்கப்புறம் படமாக்கமாட்டார்.ரசிகர்களாகிய நம்மை மீதி திரைக்கதையை எழுத வைப்பார்.முருகன் பழம் பறித்து போட்டதையும் மண்ணில் விழுந்த பழத்தை அவ்வை ஊதித்தின்பதையும் முருகன் “பழம் சுடுகிறதா?”எனக்கேட்டு அவ்வையின் கர்வத்தை அடக்கியதை நம்மை உணர்ந்து புரிந்து கொள்ள வைப்பது பிரஸ்ஸான் ஸ்டைல்.
முஸே என்ற பதின்வயதுப்பெண்ணை கொலை செய்கிறது சமூகம்.இதுதான் இப்படத்தின் ஒரு வரிக்கதை.
முஸேயின் முகத்தில் எப்போதும் நிரந்தர சோகம் இருக்கும்.சமூகம் ஏற்ப்படுத்திய இறுக்கம் இருக்கும்.ஆனாலும்..... அவ்வப்போது அவளது குழந்தைத்தன்மை எட்டிப்பார்க்கும்போது மட்டும் கோடி சூரியனாய் பிரகாசிக்கும்.
உதாரணத்திற்க்கு ஒரே ஒரு காட்சி.....
நாமெல்லாம் ஒதுங்கி கடந்து போகும் சாலை நடுவில் இருக்கும் மழை தேங்கிய நிலத்தில் ஜங்கென்று குதிப்பாள்.தெறிக்கும் சேற்றை சந்தனமாய் நினைத்து மகிழ்வாள்.

பள்ளியில் டீச்சர் காயப்படுதுகிறாள். “ஏய் முஸே” எனக்கூப்பிட்டு அவள் திரும்பி பார்க்கும்போது தங்கள் ஆண் குறியை காட்டி கேவலப்படுத்துகிறார்கள் சமவயது சிறுவன்கள்.பாரில் பார்ட் டைமாக வேலை செய்து சம்பாதித்த காசை பிடிங்கி குடித்து கும்மாளம் போடுகிறார்கள் தகப்பனும் சகோதரனும்.அடைக்கலம் தந்து காத்தவனே கற்பழிக்கிறான்.

அவளது ஒரே ஆதரவு மரணத்திற்க்காக காத்திருக்கும் நோயுற்ற தாயும் அவளது பச்சிளம் பாலகனும்.


தாய் மரணமடைய.... முக்காலமும் இல்லாமல் தவிக்கிறாள்.ஒரு குளத்தில் உருண்டு உருண்டு போய் விழுந்து உயிரை மாய்க்கிறாள் முஸே.

ஒடிப்போய் பொத்தென்று விழுந்து தற்க்கொலை செய்திருக்கலாம்...உருண்டு உருண்டு போய் உயிரை விட்டது ஏன்?

படம் பார்த்து விளக்குங்களேன் ப்ளீஸ்....

Mar 10, 2011

Winged Migration-2001 ஊரு விட்டு ஊரு வந்து


சூப்பர் பாஸ்ட் மூவி எது என்று கேட்டால் “ஸ்பீட்” என்பார்கள் பலர்.....
“டேக்கன்” என்பார்கள் சிலர்.......
விங் மைக்ரேசன் என்பார்கள் இந்த ஆவண படத்தை பார்த்த அனைவரும்.
63 சீட் வாங்க...கொடுக்க இரண்டு கட்சிகள் நடத்திய குறும்படம்தான் உலகிலேயே விறுவிறுப்பான சரண்டர் காவியம் என்று என் நண்பர் சொல்கிறார்.
நாப்பது கிலோ மீட்டர் காரில் பயணம் போங்கள்.
செல் போனில் பேசிக்கொண்டே குறுக்கே வரும் பாதசாரிகள்....
டிராபிக் விதி மதியாமல் வரும் ஆட்டோக்கள்....
மாமூல் கொடுத்த திமிரில் வரும் மண் லாரிகள்....
என ஆயிரம் காரணிகளை தவிற்த்து ஸ்தலம் போய் சேர்ந்தால்...... நீங்கள் வழி படும் கடவுள் அருள்தான் காரணம்.
ஆனால் நாப்பதாயிரம் கிலோமீட்டர் ஆக்ஸிடெண்ட் இல்லாமல் பயணிக்கிறது பறவைகள்.அந்த பயணத்தை மிக வேகமான திரைப்படமாக நமக்கு வழங்கியவர்கள்
Jacqus cluzaud,Mickel Debats,Jacques Perrin.நான்கு வருடம்,7 கண்டங்களில் படமாக்கியுள்ளார்கள்.


விறுவிறுப்பான மசாலா படத்திற்க்கான பாட்டு,நடனம்,சண்டைக்காட்சி...என அனைத்தும் உண்டு.ஏன் வில்லன் கூட உண்டு.துப்பாக்கியோடு வரும் அந்த கொடிய மிருகத்தின் பெயர் “மனிதன்”.
இந்த ஆவணப்படத்திற்க்கு இணையான பிரமிப்பு.... தயாரித்த விதத்திலும் கிடைக்கிறது .
இப்படத்திற்க்காக பதிவு செய்யப்பட்ட பிலிம் நெகட்டிவ் நீளம் எவ்வளவு தெரியுமா? அதிகம் இல்லை ஜெண்டில் மேன்.... 590 மைல் நீளம்.அவ்வளவுதான்.
இந்த செய்தி பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் காதுக்கு போனால் வந்தது ஆபத்து...600 மைல் நெகட்டிவில் எந்திரன் பார்ட் 2 எடுக்க கிளம்பி விடுவார்.
590 மைலை அழகாக வெட்டி ஒட்டி நமக்கு காண்பித்தது 89 நிமிடம்.
அதான்.... படம் பறக்குது.

இரண்டு மாசம் ஒரே லொக்கசனில் தொடர்ந்து சூட் பண்ணியதில் கிடைத்த அத்தனை ஷாட்களும் வைரங்கள். எதை எடுப்பது...எதை விடுப்பது என்று குழம்பாமல் கோகினூர்வைரமாக .....
ஒரு நிமிடத்திற்க்கும் குறைவான ஒரே ஒரு ஷாட்டை.... தேர்வு செய்தார் எடிட்டர் திலகம்.
வானத்தில் பறவைகள் பறப்பதை மிக அருகில் காமிராவும் பறந்து பதிவு செய்திருக்கிறது.எப்படி???????????
ஸ்டார்க்ஸ்&பெலிக்கன்ஸ் வகைப்பறவைகள் முட்டையிலிருந்து வெளி வரும்போது எதை பார்க்கிறதோ அதையே தாயாக நினைத்து பழகுமாம்.செயற்க்கை முறையில் அடை காத்து குஞ்சு வெளியே வரும்போது மனிதனை பழகவிட்டு டிரெய்னிங் கொடுத்து அந்த பறவைகளின் காலில் காமிராவைப்பொருத்தி பாலுமகேந்திராவாக்கியிருக்கிறார்கள்.
[இத்தகவலை எனக்கு சொன்னவர் என் நண்பர் ஜெயராமன்.காமிராவை திருமணம் செய்து கொண்டு காட்டிலேயே 365 நாளும் இருக்கிறார்.
உலகின் Top 50 வைல்டு லைப் போட்டாகிராபரில் இவரும் ஒருவர். ]
பாராகிளைட்,ஹாட் ஏர் பலூன்,டிரக் என உலகின் அனைத்து வாகனங்களிலும் பயணித்து படமாக்கியிருக்கிறார்கள்.ஒளிப்பதிவில் ஜாம்பவான்கள் அனைவரும் பணிபுரிந்திருக்கிறார்கள்.அதில் ஒருவர் படமாக்கும் போது தவறி விழுந்து தன்னுயிரையே பலி கொடுத்திருக்கிறார்.
இயற்க்கையை நேசிக்க நம் பிள்ளைகளுக்கு பாடம் நடத்த வேண்டாம்.இப்படத்தை காண்பியுங்கள்.அது போதும்.

Mar 4, 2011

Gigante-XXL காதல்[உருகுவே-2009]

உருகி...உருகி...காதலிக்கும் உருகுவே காதல் படம்.எழுதி இயக்கியவர் அட்ரியன் பினிஸ்.படத்தின் மொத்த வசனத்தையும் ஒரு விசிட்டிங் கார்டு பின்னால் எழுதி விட்டார் போலும்.அத்தனை சுறுக்....
ஒரு மெகா டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் கண்காணிப்பு காமராவின் மானிட்டரை கண்காணிப்பதே நம் நாயகனின் வேலை.ஆள் பார்ப்பதற்க்கு இப்போதைய பிரபு சைஸ்.மனசு சின்னதம்பி பிரபு.பணியாட்கள் செய்யும் திருட்டை ரசிக்கிறான்.சிம்ரன் சைஸில் ஜூலியா என்ற பிகரை மானிட்டரில் பார்த்ததும் காதல் வெடிக்கிறது.அதன் பின் ஐயாவின் முழு நேர வேலை அம்மணியை மானிட்டரில் தொடர்வது...வீட்டுக்கு போகும் போதும் துரத்துவது....இதுதான் ஐயா மொத்தப்படமே.
படம் முழுக்க அவள் எதிரிலேயே வராமல் கண்ணாமூச்சியாடிவிட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் பக்கத்தில் போய் ஹலோ சொல்லி அமர்கிறான்.அவ்வளவுதான் படம்னு டைரக்டரு டக்குனு முடிச்சிட்டாரு.மண்டைகாஞ்சி போச்சுன்னு எழுதினால் அதுதான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பொய்.

இப்படம் பார்த்தவர்கள் இனி எந்த மெகா மாலில் நுழைந்தாலும் இப்படத்தின் நாயகன் ஜராவையும்,நாயகி ஜூலியாவையும் கண்கள் தேடும்.இதுதான் இயக்குனரின் வெற்றி.

மிஷ்கின் கையில் இப்படத்தின் டிவிடி கிடைக்காமலிருக்க கர்த்தர் கருணை வழங்கட்டும்.

வெற்றிமாறன் பார்க்க..... வெக்காளியம்மன் வரம் தரட்டும்.
தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
பழி வங்கும் நாள் வரும்.
நாள் ஏப்ரல் 13