இயக்குனர் மணிவண்னன் போய் விட்டார்.
‘தம்பியை’ பார்க்க அவசரமாக போய் இருக்கிறார்.
அதுவும் புலிக்கொடியோடு புறப்பட்டு போய் இருக்கிறது...
எங்கள் கொங்கு நாட்டுத்தங்கம்.
மணிவண்ணன் இளமையில்,
கோவையில் இருந்த காலத்தில்...
‘தீவிரமான கம்யூனிஸ்ட் இயக்க போராளியாக’ இருந்தார்.
போராளிகளை, போலிஸ்
‘நக்ஸலைட்’ என அழைக்கும்.
முக்கிய நக்சல்களை
‘என்கவுண்டரில்’ போட்டுத்தள்ள திட்டமிட்டது.
லிஸ்டில், முதல் பெயர் மணிவண்ணன்.
தகவலறிந்த நண்பர்கள் மணிவண்ணனை சென்னைக்கு கடத்தினார்கள்.
அரசியல்...கலை....இரண்டும்தான்... அவரது கண்கள்.
கோவையில் இருந்த போது ஏகப்பட்ட நாடகங்கள் நடத்தி இருக்கிறார்.
சென்னையில் ‘கோடம்பாக்க’வாசியானார்.
பாரதிராஜாவுக்கு ராசியானார்.
பாக்யராஜ், பாரதிராஜாவை விட்டுப்பிரிந்து போய்...
இயக்குனர் ஆகி விட்ட்டார்.
அவரது இடத்தை நிரப்பி,
பாரதிராஜாவுக்கு கை கொடுத்தது மணிவண்ணனே.
மணிவண்னன் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக், ஷ்யாம் பெனகல் போன்ற மாமேதைகளின் தாக்கத்தில்
‘நிழல்கள்’ படக்கதையை உருவாக்கினார்.
இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் இருந்தும்,
அப்படம் தோல்வியை தழுவியது.
காரணங்களை இங்கே சொல்வதில் அர்த்தமில்லை.
நிழல்கள் \ 1980 \ தமிழ் \ கதை, வசனம் - மணிவண்ணன் \
இயக்கம் - பாரதிராஜா.
‘தமிழ் ரசிகர்களின்’ நாடி பிடித்து ‘இறங்கி அடித்த படம் ’
‘அலைகள் ஓய்வதில்லை’.
மணிவண்னன் - பாரதிராஜா கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம்.
அலைகள் ஓய்வதில்லை \ 1981 \ தமிழ் \ கதை, வசனம் - மணிவண்ணன் \
இயக்கம் - பாரதிராஜா.
‘டிக்...டிக்...டிக்...1981ல் வெளி வந்த படம்.
16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்களுக்குப்பிறகு,
கமலோடு... பாரதிராஜா இணைந்த படம்.
இப்படத்தின் சூட்டிங் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
சரிகா, மும்பையிலிருந்து சென்னை ஏர்போர்ட் வந்து இறங்குவதை,
படம் பிடிப்பதாக ஏற்பாடு.
கமல் - சரிகா இருவரும் அப்போது காதலர்கள்.
ஏதும் சொதப்பலாகி விடக்கூடாது என மெகா டென்ஷனில் இருந்தார் பாரதிராஜா.
‘ஸ்கிரிப்ட் புக் எங்கே’ என உதவியாளர் மணிவண்னனிடம் கேட்டார்.
மணிவண்னன் மற்றொரு உதவியாளரான ‘மனோபாலாவை’ கை காட்டினார்.
மனோபாலா ‘ நீங்க கொண்டு வந்திருப்பீங்கன்னு நான் நெனைச்சேன்’ என்றார் மணி வண்ணனிடம்.
‘*$*#$*<#%#’ ...மதுரை கெட்ட வார்த்தையை வெடித்தார் பார்திராஜா.
மணிவண்ணனும், மனோபாலாவும் ‘ஜெட் வேகத்தில்’ பறந்தனர்.
மீனம்பாக்கத்திலிருந்து... ‘கத்திப்பாரா ஜங்ஷன்’ வரைக்கும்
கொலை வெறியோடு துரத்தி ஓடினார் பாரதிராஜா.
சிக்கவில்லை இருவரும்.
‘இங்கிருந்தால் இனி நாம் அவ்வளவுதான்...ஊரைப்பாக்க போவோம்’ என தங்கியிருந்த அறைக்கு
‘பொட்டி கட்ட’ வந்தார்கள்.
எரிமலை...பனிமலையாக அமர்ந்திருந்தது அறையில்.
‘சரி...சரி...காலையில் சூட்டிங் வந்து சேருங்க’ .
டிக்...டிக்...டிக்...\ 1981 \ தமிழ் \ கதை, திரைக்கதை, இயக்கம் - பாரதிராஜா.
சமீபத்திய பாராதிராஜாவின் பேட்டியால் மனங்கலங்கி மணிவண்ணன் கொடுத்த பேட்டியை இந்த இணைப்பில் சென்று கேளுங்கள்...
இயக்குனர் மணிவண்ணன் பேட்டிக்கு இங்கே செல்லவும்....
இளமைக்காலங்கள் என்ற படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் தயாரிக்க திட்டமிட்டார் கோவைத்தம்பி.
ஆ. சுந்தர்ராஜன் உருவாக்கிய கதைக்கு,
அனைத்து பாடல்களையும் இளையராஜா பதிவு செய்து கொடுத்து விட்டார்.
சில காரணங்களால் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன்,
தயாரிப்பாளர் கோவைத்தம்பியோடு மனஸ்தாபம் ஏற்பட்டு
விலகி விட்டார்.
ரெகார்டு செய்யப்பட்ட அனைத்து பாடல்களையும் உள்ளடக்கி ,
புதிதாக... பொருத்தமாக... கதை எழுதி...
படத்தையும் வெற்றிப்படமாக்கினார் இயக்குனர் மணிவண்ணன்.
இளமைக்காலங்கள் \ 1983 \ தமிழ் \
கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் - மணிவண்ணன்.
இதே பாணியில் ‘ஊமை வெயில்’ என்று ஒரு படம்.
பாடல் அனைத்தும் வெளியாகி,
ஆடியோ கேசட் சூப்பர் ஹிட்டாகி விட்டது.
ஆனால் படம் ‘ட்ராப்’ ஆகி விட்டது.
அந்தப்பாடல்களுக்கும் பொருத்தமாக கதை எழுதி,
‘இங்கேயும் ஒரு கங்கை’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார் மணிவண்ணன்.
இங்கேயும் ஒரு கங்கை \ 1984 \ தமிழ் \
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மணிவண்ணன்.
மணிவண்ணன் தனது இளமைக்கால நண்பர் சத்யராஜோடு இணைந்து,
பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.
அதில் இன்றளவும் மாஸ்டர் பீஸாக இருப்பது ‘அமைதிப்படை’.
அற்புதமான ‘பொலிட்டிக்கல் சடையர் மூவி’.
இப்படத்தை இன்று வரை யாரும் மிஞ்சவில்லை.
ஏன்?...மணிவண்ணனாலேயே முடியாமல் போய் விட்டது.
அமைதிப்படை \ 1994 \ தமிழ் \
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மணிவண்ணன்.
போய் வாருங்கள் மணிவண்ணன்.
நீங்கள் திரும்பி வர... உருவாகட்டும் ‘தமிழ் ஈழம்’.