கோண்ங்கள் பிலிம் சொசைட்டியில் மார்ச் 25 ஞாயிறு... பவர்கட் மாலையில்... சத்யஜித்ரேயின் ஜல்சாகர் திரையிடப்பட்டது.
படத்தின் பிரிண்ட் குவாலிட்டி பார்த்து அதிசயித்துப்போனேன்.
கிரைட்டீரியான் நிறுவனத்தார் வெளியிட்ட டிவிடி அது...
அப்பா...என்னா குவாலிட்டி....
பிரேம் டூ பிரேம் ஜொலிக்குது.
ரேயின் பதினேழு படங்களை இதே மாதிரி டிஜிடல் ரீ மாஸ்டர் செய்து வெளியிட்டுள்ளார்களாம்.
எப்பா... கிரைட்டீரியா...நீ வாழ்க...உன் குலம் வாழ்க...
இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் முதன் முதலாக பெருமை தேடித்தந்த பிதாமகன் சத்யஜித்ரே.
அவரது மாஸ்டர்பீஸ் வரிசையில் பதேர் பஞ்சலி,அபராஜிதோ,
அபு சன்சார்,சாருலதா மட்டுமே அடுக்கியிருந்தேன்.
இந்த நிமிடம் முதல்.... ஜல்சாகரையும் சேர்த்து விட்டேன்.
ஒரு ஊரிலே...ஒரு ஜமீந்தார்...
நாட்டிலுள்ள இசை கலைஞர்களை வரவழைத்து...
தனது அரண்மனையில் கச்சேரி செய்ய வைத்து...
நண்பர்களோடு கூடி குடித்து...இசையை ரசிப்பதே முழு நேர தொழில்.
வறியவர்களுக்கு வாரி வளங்குவது உப தொழில்.
உட்கார்ந்து சாப்பிட்டா இமயமலையே காணாம போயிரும்.
சொத்தும் போய்...மனைவியும், மகனும் வெள்ளத்தில் போய்...
ஜமீந்தார் தனி மரமாகிறார்.
ஆசை மகன் மரணித்த அதிர்ச்சியில் கச்சேரி கொண்டாட்டங்களை நிறுத்தி விடுகிறார்.
ஜமீன் வாழ்க்கையின் எச்சமாக...
இரண்டு விசுவாச வேலைக்காரர்களும்,
மகனால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு யானையும்,ஒரு குதிரையும்,
300 ரூபாய் பணமும் மிச்சமாக இருக்கிறது.
சரஸ்வதியும்...மகா லட்சுமியும் வெளியேறி...வவ்வாலும்..சிலந்தியும் குடி புகுந்த அரண்மனையில் மீண்டும் இசை ஒலித்ததா?
படம் பாருங்கள்.
ரே ஒவியராக இருப்பதால் அவரது படங்கள் ஷாட் பை ஷாட் ஒவியங்களாக இருப்பதை நீங்கள் உணர முடியும்.
பதேர் பஞ்சலியில் ரேவுடன் இணைந்த ஒளிப்பதிவாளர் சுபர்ணோ மித்ரா.... ஜல்சாகரிலும் தனது கை வரிசையை காட்டி உள்ளார்.
ரேவும் சுபர்ணோ மித்ராவும் இணைந்ததில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.
அடிப்படையில் சுபர்ணோமித்ரா ஸ்டில் காமிரா கலைஞர்.
ஒரு திருமணத்தில் மித்ரா எடுத்த புகைப்படங்களை பார்த்து வியந்த ரே தனது பதேர் பஞ்சலி படத்தில் பணி புரிய அழைத்தார்.
அதற்க்கு மித்ரா...
“எனக்கும் ரொம்ப நாளா மூவி கேமராவை பார்க்கணும்னு ஆசை”என்றார்.
என் வாழ்நாளில்... இனி மறக்க முடியாத திரைப்படத்திலிருந்து....
மறக்க முடியாத ஒரு காட்சி...
ஜமீந்தார் தனது அரண்மனையில் மொட்டை மாடியில் நின்று பார்க்கிறார்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மருந்துக்கு கூட ஒரு மரம் இல்லை.
வறிய பிராமணனின் மார்பில் வளைந்து ...திரிந்து ...நைந்து கிடக்கும் பூணுல் போல...
ஒரு மணல் பாதை மட்டும் கிடக்கிறது.
தொலை தூரத்தில் அவருக்கும்...அவரது மகனுக்கும் பிரியமான யானை நின்று கொண்டிருக்கிறது.
அப்போது ஒரு புது பணக்காரனது கார் புழுதி பறக்க வேகமாக செல்கிறது.
அப்போது கிளம்பும் புழுதிப்புயலில் அவரது யானை மறைந்து விடுகிறது.
இத்தனை நிகழ்வுகளையும் ரே சிங்கிள் ஷாட்டில் அடக்கி இருக்கிறார்.
நான் இத்தனை வார்த்தைகளை செலவு செய்தும் அந்த ஷாட்டின் கவித்துவத்தை ஒரு சதவீதம் கொண்டு வர முடியவில்லை எழுத்தில்.....
ஏனென்றால் சினிமா...பவர்புல் விசுவல் மீடீயா.
“சூரிய உதயத்தை பார்த்து ரசிக்காதது எவ்வளவு பெரிய குற்றமோ....
அதை விடப்பெரிய குற்றம் ரேயின் படங்களை பார்க்காமலிருப்பது”
நான் சொன்னது அல்ல...
உலகசினிமாவின் பிரம்மா அகிரா குரோசுவா சொன்னது.
விக்கிப்பீடீயா உபயத்தில் இப்படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் விபரம் :
(On screen) - Begum Akhtar, Roshan Kumari, Ustad Waheed Khan, Bismillah Khan
(Off screen) - Dakhshinamohan Thakur, Ashish Kumar, Robin Mazumdar, Imrat Khan