Dec 18, 2014

தாலிபன் தீவிரவாதத்தை பதிவு செய்த திரைப்படம்!.

பாக்கிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய கொடுஞ்செயலை முன்கூட்டியே பதிவு செய்த திரைப்படம் இது.
தாலிபன் கொடுங்கோலர்களின் கொடுஞ்செயலை ஆவணப்படம் போல் பதிவு செய்துள்ள இக்காவியத்தை தவற விடாதீர்கள்.


கோவாவில் திரையிட்டு, கேரளாவிலும் திரையிடவிருக்கும் காவியம் ‘Timbuktu'.
நம் சம கால படைப்பாளிகளில் மிக முக்கியமான ஆளுமை ‘சிஸாகோ’.
சிஸோகாவின் படைப்பில் சமீபத்திய வரவை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றோம் கோவாவில்.
எதிர்பார்த்து சென்றால் ஏமாற்ற சிஸாகோ ஒன்றும்...
வசந்த பாலன் அல்ல.
சிஸாகோவின் இந்தப்படம், இந்த வருடம் பார்த்தப்படங்களிலேயே மிக அழுத்தமாக அரசியல் பேசிய படம்.
தீவிர மதவாதிகளின் கையில் சிக்கிய நாட்டையும், நாட்டு மக்கள் அவஸ்தையையும் மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார்.
சிகரெட்டு, இசை, விளையாட்டு ஏன் சிரிப்பு கூட தடை செய்யப்படுகிறது.

கொடுங்கோல் அரசின் அராஜகத்தை மக்கள் எதிர் கொள்ளும் அவலத்தை பதட்டத்தோடு பதிவு செய்கிறது இத்திரைப்படம்.
அதே சமயத்தில் கொடுங்கோல் சட்டத்தை மீறுவது எப்படி என சொல்லித்தரவும் கற்று கொடுக்கிறது இத்திரைப்படம்.
உதாரணமாக ஒரு காட்சி...
கால் பந்தாட்டம் தடை செய்யப்படுகிறது.
அடக்கு முறை சட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் கால் பந்தாட்டப்போட்டியை நடத்துகிறார்கள்.
உற்சாகமாக உதைத்து விளையாடுகிறார்கள்.
பந்தை கடத்துகிறார்கள்.
கோல் போடப்படுகிறது.
உலகத்திலேயே இப்படி ஒரு கோலை யாரும் போட முடியாது.
கோல் போட்டவனை கொண்டாடுகிறார்கள்.
பார்வையாளர்களும் கொண்டாடுகிறோம்.
ஏன் தெரியுமா?
இக்கால் பந்தாட்டத்தில் ‘கால் பந்து’ கிடையாது.
கால் பந்திற்கு பதிலாக காற்றை உதைத்து ஆடப்பட்ட மாய ஆட்டம் இது.
சர்வாதிகாரத்தை சரிக்க இளைஞர்கள் ஆடிய ஆட்டம் இது.
இப்படி ஒரு ‘மாய விளையாட்டை’ அந்தோனியோனியின் ‘ப்ளோ அப்’ திரைப்படத்திலும் பார்க்கலாம்.
இந்தப்படத்தை பாருங்கள்.
நம்ம ஊர் ‘முத்தப்போராட்டம்’ பற்றியும் சிந்தியுங்கள்.
Timbutu | 2014 | France | 96 min | Directed by : Abdherrahmane Sissako.

Dec 17, 2014

வியக்க வைத்த வியட்நாம் படம் !.

சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில்,
உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம்.

கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மைப்போல எதேச்சதிகார சக்திகளால் பாதிக்கப்பட்ட நாடுகளின் படங்களை தேடிப்போய் பார்த்தேன்.
அந்த வகையில், ஒரு வியட்நாம் படம் என்னை மிகவும் பாதித்தது.
என் தமிழ்ப்படங்களோடு ஒப்பிட்டு பார்த்து,
பொறாமை கொள்ள வைத்தது.
வியட்நாம் நகரத்திலுள்ள விளிம்பு நிலை மக்களோடு 99 நிமிடம் உரையாடி விட்டு வந்தேன்.
என் ஆன்மா மீண்டும் மீண்டும் அந்தப்பகுதியையே சுற்றி சுற்றி வருகிறது.
என் வாழ்க்கையில் நான் பார்க்க நினைத்துள்ள நாடுகளில் முதன்மையாக வியட்நாமை வைத்து இருக்கிறேன்.
அமெரிக்காவை, ‘சாதாரண ரப்பர்’ செருப்பு அணிந்து எட்டி மிதித்து மண்ணை கவ்வ வைத்த மாவீரன் ‘ஹோசிமின்’ வாழ்ந்த பூமியை தொட்டு வணங்க வேண்டும்.
படத்தின் கதாநாயகி வசிக்கும் வீட்டின் வாசப்படி ‘ரயில்வே தண்டவாளம்தான்’.
ரயில் வரும் போது மட்டும் ‘போனாப்போகுதுன்னு’ வழி விட்டு விலகுவார்கள்.
ரயிலில் போகிற பயணிகள், கையை நீட்டி தண்டவாளத்தின் அருகிலிருக்கும் டீக்கடையில் சுடச்சுட தயாராகும் பஜ்ஜியை எடுத்து சாப்பிட முடியும்.
அந்த ரயில் அவர்கள் வாழ்வியலில் அன்றாடம் சந்திக்கும் நண்பனாக வந்து செல்கிறது.
நான்தான் பதட்டத்தோடு, ரயிலை...ஒவ்வொரு காட்சியிலும் அணுகினேன்.
என் பயத்தை அநாவசியமாக்கியது ‘ரயில்’.
என்னை வசியப்படுத்திய கதாபாத்திரங்கள் எக்கச்சக்கம் இத்திரைப்படத்தில்.
குறிப்பாக இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் அறிமுகம் செய்கிறேன்.
கதாநாயகியோடு கூட வசிக்கும் ஒருவன் பெண் வேடமிட்டு பாலியல் தொழில் செய்கிறான்.
அவன் பெண் வேடமிட்டால், நம்ம அனுஷ்கா மாதிரி கும்முன்னு இருப்பான்.
அதனால், அவன் தொழில் அமோகமாக நடந்து கொண்டு இருக்கும்.
இருந்தாலும், பெண் வேடமிட்டு ஏமாற்றுவது அவனை குற்றவுணர்ச்சியில் தள்ளும்.
ஆனால் ‘யதார்த்தம்’ குற்றவுணர்ச்சியை பின்னுக்கு தள்ளி விடும்.
இந்த கதாபாத்திரத்தை நம்ம ஊர் ‘கம்யூனிஸ்ட்’ கட்சிக்காரங்களுக்கு பொருத்திப்பார்க்கலாம்.
கதாநாயகி, ஒருவனை காதலித்து கர்ப்பமாகிறாள்.
தீடிரென்று அவனும் காணாமல் போகிறான்.
சூழ்நிலைகளால் ‘பாலியல்’ தொழிலைச்செய்கிறாள்.
‘வயிறு’ வளர்ந்து விட்டது.
ஆனால் அந்த காரணத்திற்காகவே ஒருவன் அடிக்கடி அவளை அழைத்து செல்கிறான்.
அவன் அவள் வயிற்றை மட்டும் தொட்டுத்தடவி விட்டு, பணத்தை அள்ளிக்கொடுத்து அனுப்பி விடுவான்.
கர்ப்பவதிகளை தொட்டு தடவுவதிலேயே அவன் ’உச்சத்தை’ அடைகிறான்.
இந்த படம் இன்னும் பல ஆச்சரியங்களை தந்து வசியப்படுத்தும்.
காத்திருந்து பார்த்து விடுங்கள்.

Flapping In The Middle Of Nowhere [ Dap Canh Giua Khong Trung ] | Vietnam | 2014 | 99 min | Directed by : Diep Hoang Nguyen .

அம்மா இங்கே...அப்பா எங்கே ?.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்...


வாலிப வயோதிக அன்பர்களே...
சின்ன வயசுலயிருந்து கண்ட கண்ட புக்கு...கண்ட கண்ட சினிமான்னு
கண்டதை தின்னு செரிமானம் இல்லாம கிடப்பீங்க!
அதனால நான் தர்ற இந்த ‘உலகசினிமா’ லேகியத்தை பல்லில படமா உருட்டி உள்ளே தள்ளினீங்கன்னா...
வகுறு செரியாகும்...பித்து பிடிச்சு கெடக்கிற புத்தி சரியாகும்.
ஐயா..இது சாதாரண லேகியம் இல்ல!.
அமேசான் காட்டுல விளையிற மூலிகைங்கிற கப்சாவும் இல்ல..
உலகம் முழுக்க இருந்த சித்தருங்க செஞ்ச சித்து விளையாட்டுதான் இந்த ‘உலக சினிமா’.
கோடம்பாக்கத்துல இருக்குற ‘கோடாங்கி’ வித்தைக்காரனுங்களுக்கு சுட்டுப்போட்டாலும் ‘உலகசினிமா’ லேகியம் செய்ய வராது.
‘வரும்...ஆனா வராதுன்னு’ இப்ப கொள்ள பயலுக சொல்லிகிட்டு திரியிறானுங்க!
சொல்றவனுங்களுக்கெல்லாம் ‘சிவபுராணம்’ காட்ட வந்துட்டாய்யா வந்துட்டான் ஒருத்தன்.
உலகத்தில இருக்கிற அத்தனை உலகசினிமா லேகியத்தையும் வருஷக்கணக்கா துங்காம கொள்ளாம உருட்டி உருட்டி தள்ளுனான் உள்ள!.
உள்ள போனதுதான வெளிய வரும்!.
‘சிவ புராணம்’ வரும் போது பாத்துக்கங்க!.
இப்போதைக்கு இந்த படத்தை பாருங்க.
இந்த படத்தில அப்படி என்னயா சீரும் சிறப்பும் கேக்கறீங்களா?
உலகசினிமாவே பாக்காத பயபுள்ளக கூட இந்தப்படத்தை பாத்தா ‘வாயைப்பொளந்திரும்’ !.
விஜய் ரசிகன் கூட வியந்து பாப்பாய்யா!.
அஜீத் ரசிகனும் அசந்துருவான்...
அப்பேர்ப்பட்ட படம்.
சும்மா...திருநெல்வேலி அல்வா மாதிரி உள்ள இறங்கும்.
சுத்தி மலை மட்டுமே இருக்குற ஒரு ஹாஸ்டல்.
தப்பிச்சு போகுது சின்னப்பொண்ணு.
துரத்திப்பிடிக்கிறாங்க டீச்சர்.
தினமும் தூங்கி எந்திரிக்கிற மாதிரி...தப்பிச்சு போற விளையாட்டு நடக்குது!.
ஏன்?
விஷயம் என்னன்னா...அந்த பொட்ட புள்ளக்கி தன் அப்பன் யாருன்னு தெரியணும்.
அப்பனை பத்தி ஒரே ஒரு குறிப்புதான் இருக்கு...
அவன், டிஷ் ஆண்டெனாவை வீடு வீடா மாட்டி கனெக்‌ஷன் கொடுக்குற பய.
அவ்வளவுதான் தெரியும்.
இப்போ ‘ராமாயி வயசுக்கு வந்திட்டா’.
அப்பவும் அடங்கல...இந்தப்பொண்ணு...
கிளம்பி போயிருது.
ஆனா..இப்போ துணைக்கு டீச்சரும் கிளம்பிட்டாங்க.
இந்த பயணம்தாங்க படம்.
செண்ட்ரல் ஸ்டேஷன், கிகுஜிரோ, கிகுஜிரோ போட்டக்குட்டி ‘நந்தலாலா’ எல்லாமே இந்த வகையறா படம்தான்.
இந்த ‘வகையறா’ எல்லாரையும் வளைச்சி கட்டி வசியப்படுத்தும்.
அதாம்யா...துணிஞ்சி ரெக்கமண்டு பண்றேன்.
சொன்னாக்கேளுங்கயா...
அடம் பிடிக்காம பாருங்கய்யா.
Natural Sciences [ Ciencias Naturales ] | 2014 | Argentina | 71 min | Directed by : Matias Lucchesi.

Dec 15, 2014

2014 உயர்ந்த விருதைப்பெற்ற...உயர்ந்த திரைப்படம் !.


கான் திரைப்படவிழாவில் உயரிய விருதைப்பெற்ற ‘விண்டர் ஸ்லீப்’ படத்தை பார்க்க கோவாவில் அடிதடி...தள்ளுமுள்ளு.
9 மணி இரவுக்காட்சிக்கு 8 மணிக்கே வரிசை கட்டி நின்றார்கள்.
என் முன்னால் நின்ற ‘பூனா பிலிம் இன்ஸ்ட்யூட் மாணவி’,
ஒரு கையில் பீர் கிளாசுடனும்...மற்றொரு கையில் சிகரெட்டுடனும்... ‘நவீன சரஸ்வதியாக’ காட்சியளித்தாள்.
“மும்பை திரைப்பட திருவாழாவில் ஏற்கெனவே பார்த்து விட்டேன்.
இது இரண்டாம் முறை” என்றாள்.
கொடுத்து வச்ச மகராசி!.
இயக்குனர் ‘சிலான்’ ஒரு சிஸ்டம் வச்சிருக்காரு!.
படம் எடுக்குறதை ‘குலத்தொழில்’ மாதிரி செய்யுறாரு.
விருது வாங்கறதை ‘சோறு திங்கற’ மாதிரி செய்யுறாரு.
பெற்ற புகழ் அனைத்தையும் ‘கக்கூஸ்ல’ மலத்தோட வெளியேத்திடுறாரு!.
இப்படி இருந்தா ‘அஜீரணம்’ வராது.
மண்டையில கொழுப்பு சேராது.
மிஷ்கின் மாதிரி பேட்டி குடுக்க தோணாது.
சிலான் எப்பவுமே என்னை ஏமாத்துவாரு!.
கடந்த படத்தை வச்சு, ஒரு சித்திரம் வரைஞ்சி உள்ளே போனா...
“ வாடா...மாப்ள!
நீ அப்படி நினைக்கிறியா...
நான் இப்படி எடுத்திருக்கேன்”
சொல்லி புது ஸ்டைல்ல பின்னுவாரு!.
அதான் ‘சிலான்’.
மனிதர்களிடையே இருக்கும் பிளவுகளை,
‘மனதால்’ நிரப்புங்கள்...
‘பணத்தால்’ நிரப்பாதீர்கள்...
என்ற செய்தியை சொல்லி இருக்கிறார் சிலான்.
கணவன்-மனைவி, சகோதரி- சகோதரன், வீட்டு உரிமையாளர்-வாடகைக்காரர் என பல தளங்களில் இருக்கும் பிரிவை அலசி ஆராய்ந்து தீர்வை சொல்லி இருக்கிறார்.
வழக்கம் போல விஷூவல் ட்ரீட்மெண்டில் கலக்கி இருக்கும் சிலான் வசனங்கள் மூலமாகவும் விளையாடுகிறார்.
பல காட்சிகளில், ஒரே கோணத்தில் காமிரா மையம் கொண்டு...
நீண்ட நெடிய ஷாட்டாக பயணித்தாலும்...
இப்படம் போரடிக்காது.
ஓவியங்களை பார்க்க அலுக்குமா என்ன!.
Winter Sleep | 2014 | Turkey | 196 min | Directed by : Nuri Bilge Ceylan.

Dec 13, 2014

இந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் !.


கோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' என் பால்ய வயது 'திருட்டுத்தனங்கள்’ பலவற்றை திருடி இத்திரைப்படத்தை உருவாக்கி விட்டார்.
எனவே இத்திரைப்படத்தை பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்...
இத்திரைப்படத்திலிருக்கும் கதாநாயகன்தான் நான்.
என் சிறு வயது கோபம்,காமம்,காதல்,பாசம்,பொறாமை அனைத்தையும் மிச்சம் வைக்காமல் பதிவு செய்து விட்டார் இயக்குனர்.
ஆனால் அற்புத காவியமாக செதுக்கி இருக்கிறார் மனுஷன்.
என் வாழ்க்கையை நான் பதிவு செய்யும் போது இச்சிறுவன் மாதிரி பவர்புல் பெர்பாமென்ஸ் பண்ணக்கூடிய சிறுவன் கிடைத்தால்தான் நான் ஜெயிக்க முடியும்.
என் வாழ்க்கையை திரையில் பார்ப்பது,
மிகுந்த பரவசத்தை கொடுத்தது.
ஒரு சிறுவன் தன் பள்ளியில் கூடப்படிக்கும் சிறுமியை விரும்புகிறான்.
அவளோ வேறு ஒருவன் கூட மிகுந்த நட்பாக இருக்கிறாள்.
பொறாமையில் வெந்து சாகிறான் இவன்.
எப்படியாவது அவளை ‘கரெக்ட்’ செய்ய துடிக்கிறான்.
அந்த வாய்ப்பை ஒரு நாய் வழங்குகிறது.
அந்த நாயார்தான் ‘சிவாஸ்’.
நம்ம ஊர் சேவல் சண்டை போல் அக்கிராமத்தில் ‘நாய் சண்டை’ நடத்துகிறார்கள்.
ஒரு நோய் தோற்று , காயமுற்று உயிருக்கு போராடும் நிலையில், அதை அக்காட்டிலேயே விட்டுச்செல்கிறார்கள்.
அந்த நாயை பாதுகாத்து வளர்க்கிறான் சிறுவன்.
சிவாஸ் தேறி, சிறுவனுக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுத்தருகிறான்.
குறிப்பாக அவன் காதலியிடம்...
அங்கீகாரம் நிரந்தரமாகி காதல் கை கூடியதா? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஒரு நுட்பமான காட்சி மிகவும் என்னை கவர்ந்தது.
அழுக்குப்பண்டாரமாய் திரியும் சிறுவனை வலுக்காட்டாயமாக இழுத்துப்போய் குளிப்பாட்டுவார் தாயார்.
அப்போது, ஒரு கணம் தாயாரின் ‘கிளிவேஜை’ பார்ப்பான் சிறுவன்.
வாவ்...வாவ்...வாட் எ ஷார்ட்&ஸ்வீட் ஷாட் !.
ஷார்ப்பா எடிட் செய்து இக்காட்சியை ஹைக்கு கவிதையாக்கி இருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் செய்த மேஜிக் காட்சி இது.
ஒன்று மிஸ்ஸாகி இருந்தாலும் இக்காட்சி விரசமாகி இருக்கும்.
உலகத்திலுள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் ஒரு நிமிடத்தில் திட்டி தீர்த்து கற்களை வீசியெறியும் காட்சி மற்றொரு ஹைக்கு.
மிச்ச ஹைக்கு கவிதைகளை வெள்ளித்திரையில் காண்க.
Sivas | Turkey | 2014 | 97 min | Directed by : Kaan Mojdeci.

Dec 12, 2014

‘புலி’ காத்த ‘கிளி’ !


தரத்தில்,‘மெட்ராஸ்’ திரைப்படத்தை விட பல மடங்கு குறைவான ஒரு திரைப்படத்தை, கோவாவில் முழுவதுமாக உட்கார்ந்து பார்த்தேன்.
வழக்கமாக அப்படி உட்கார்ந்து பார்க்க மாட்டேன்.
திரைப்பட விழாக்களில் எனக்கு கற்றுக்கொடுக்கும் ‘திரைப்படங்களை’ மட்டுமே பார்ப்பேன்.
நான் கற்றுக்கொடுக்கும் நிலையிலிருக்கும் படங்களை பார்க்கவே மாட்டேன்.
அப்படி இருந்தும் இந்தப்படத்தை நான் பார்த்ததற்கு காரணம், இத்திரைப்படம் பிறந்த நாடு ‘எத்தியோப்பியா’.
இந்த பெயர் போதும்.
மீதியை நீங்கள் எழுதிக்கொள்வீர்கள்.
சுமாரான ‘சினிமா மொழியின்’ வழியாக எத்தியோப்பிய கிராமத்து வாழ்க்கையையும், நகரத்து வாழ்க்கையையும் என்னால் தரிசிக்க முடிந்தது.
இத்திரைப்படம் உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் பின்னப்பட்டது.
எத்தியோப்பியாவில் தடை செய்யப்பட்ட படம்.
இத்திரைப்படத்தின் மாந்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
அதில் ஒருவர் ‘ஆப்ரிக்க நோபல்’ பரிசு பெற்றவரும் கூட.
அரசையும், எதேச்சதிகார மனிதர்களையும் எதிர்த்து போராடும் அந்த வீரப்பெண்மணிதான் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம்.
இப்படிப்பல சிறப்பம்சங்களை கொண்டு இருந்தது இத்திரைப்படம்.
பெண்கள் பள்ளியில் படிப்பதே குற்றம் எனக்கருதப்படும் வாழ்வியலைக்கொண்ட கிராமம்.
மீறிப்படிக்கிறாள் 12 வயது சிறுமி.
பள்ளியிலிருந்து திரும்பும் அவளை,
‘ஷோலே’ படக்கொள்ளைக்காரர்கள் போல குதிரையில் வந்து தூக்கி செல்கிறது ஒரு கூட்டம்.
கூட்டத்தின் தலைவன் அவளை கற்பழிக்கிறான்.
காரணம், ஒரு பெண்ணை கற்பழித்தால்...
கற்பழித்தவனுக்கே கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள்.
இது அந்த கிராமத்து சட்டம்.
அடுத்த நாள், நைசாக அந்தப்பெண் தப்பிச்செல்வாள்.
போகும் போது ஒரு துப்பாக்கியையும் கவர்ந்து செல்கிறாள்.
தப்பிச்செல்வதை பார்த்ததும்...துரத்துகிறார்கள்.
ஒரு கட்டத்தில், இனி ஓட முடியாது என தீர்மானித்து,
துப்பாக்கியால் குறி பார்த்து, ‘குறியை’ சுடுகிறாள்.
கற்பழித்த ‘காலி’ காலி.
போலிஸ் லாக்கப்பில் சிறை வைக்கப்படுகிறாள்.
செய்தி அறிந்து, நகரத்து பெண் வக்கில் அவளை சிறை மீட்க வருகிறார்.
சிறையிலிருந்து மீட்கவே ‘கடும் போராட்டம்’.
தொடர் போராட்டங்கள் தேவைப்படுகிறது.
அந்தப்பெண் வக்கீல்தான் ‘ஆப்ரிக்க நோபல்’பரிசு பெற்ற பெண்மணி.
படத்தில் ஒரு காட்சி என்ன பதற வைத்தது.
சிறையிலிருந்து சிறுமியை மீட்டு,
தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்து இருப்பார் வக்கீல்.
அவர் வெளியில் போயிருக்கும் போது,
டெலிபோன் மணி அடிக்கும்.
அவ்வளவுதான்...அந்தச்சிறுமி பயந்து நடுங்குவாள்.
காரணம்...அவள் வாழ்க்கையில் முதன் முறையாக டெலிபோனை பார்த்தது போலிஸ் ஸ்டேஷனில்தான்.
பிளாஷ்பேக்...
போலிஸ் ஸ்டேஷனில் டெலிபோன் மணி அடிக்கிறது.
காவல் துறை அதிகாரி பேசுகிறான்.
பேசி போனை வைத்து விட்டு அவளை மிருகத்தனமாக தாக்குகிறான்.
தொடர்ந்து டெலிபோன் மணி அடித்துக்கொண்டு இருக்க..
சிறுமி மான் போல் மருண்டு வீட்டை விட்டே ஓடுகிறாள்.
அவளைப்பொருத்த வரை டெலிபோன் மணி...சாவு மணி.
இப்படிப்பல அபூர்வக்காட்சிகளை இத்திரைப்படத்தில் தரிசித்தேன்.
இப்படத்தை ‘காவியத்தலைவனை’ கொண்டாடுபவர்கள் கட்டாயம் பார்த்து விடுங்கள்.
இந்த திரைப்படத்திலிருக்கும் குறைந்த பட்ச ‘சினிமா மொழி’ கூட...
காவியத்தலைவனில் கொஞ்சம் கூட பயன்படுத்தாமல் இருப்பதை கண்டுணர்வீர்கள்.
Difret | 2014 | Ethiopia | 99 min | Directed by : Zeresenay Derhane Mehari.
ஆப்பிரிக்க பெண் புலியின் பேட்டி இதோ...

எத்திப்பியோவில் இத்திரைப்படம் தடை செய்யப்பட்ட செய்தி இதோ...





Dec 6, 2014

காவியத்தலைவலி !.

காவியத்தலைவலி தாங்க முடியாமல், முகநூலில் ஆற்றிய எதிர்வினைகள் இதோ...

எ.வி. 1.
கே.பி.சுந்தராம்பாள்,எம்ஜியார்,சிவாஜி கணேசன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து இருக்கிறேன்.
இவர்கள் எல்லோரையும் விட திரு.வி.கே.இராமசாமி அவர்கள், தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் முழுக்க முழுக்க நாடக அனுபவங்களையே எழுதி இருந்தார்.
கிட்டத்தட்ட 1000 பக்கங்களுக்கு மேல் அடங்கிய ‘நாடக வரலாற்று’ பொக்கிஷம் அது.
அதிலிருந்து,அற்புதமான வரலாற்று காவியத்தை உருவாக்கலாம்.
இனி எவனுமே அதை செய்ய முடியாதபடி ‘அரைவேக்காடு காவியம்’
உருவாக்கப்பட்டு விட்டது.
வெயில், அங்காடித்தெரு வசந்தபாலன் காலில் விழலாம்..
அரவான், காவியத்தைலைவன் வசந்த பாலனை காறி உமிழலாம்.
தப்பில்லை.
எ.வி. 2.

சூரபத்மனை கதாநாயகனாக்கி நாடகம் போட்டு ஜெயித்தவர் ஆர்.எஸ்.மனோகர்.
ஆர்.எஸ்,மனோகர் நாடகம் போட்டது எழுபதுகளில்...
வெள்ளைக்காரன் காலத்துல ‘வள்ளித்திருமணம்’ நாடகம் அனைத்து ‘நாடகக்குழுக்களாலும்’ நடத்தப்பட்டது.
ராஜபார்ட் = முருகன்.
கள்ளபார்ட் = சூரபத்மன்.
கள்ளபார்ட் வசனத்தை பேச சொல்லி...ராஜபார்ட்டுக்கு ஆள் எடுக்குறாங்க!
கேட்டா ‘காவியத்தலைவன்னு’ சொல்றாங்க!.
என்னமோ போடா...நாராயணா!.
எ.வி.3.

சே...மதுரை வீரன் வரலாற்றை படமாக்கிட்டாங்க!.
ப்யூட்டி பார்லர்ல இருந்து இறங்கி வந்த ப்யூட்டி குயினை ‘பொம்மியாக்கி’ இருப்பாங்க.
ஏ.ஆர்.ரஹ்மான் சிந்தசைஸர்ல இருக்குற பட்டனை பூரா அமுக்கி மியூஜிக் போட்டுருப்பாரு.
டான்ஸ் மாஸ்டர் ‘பிரபுதேவா’ மூவ்மென்ட்ஸ் கொடுத்து மதுரை வீரனை ஆட வச்சிருப்பாரு!
பத்மினிக்கு பதிலா ஹன்சிகா வந்து பரதம் ஆடி இருக்கும்.
ஜெயமோகனுக்கும் லட்சம் லட்சமா கிடைச்சு இருக்கும்.
பிரேம்ல ஒத்தை பந்தம் எரியுறதுக்கு...100 எச்.எம்.ஐ. லைட்டை எரியவிட்டு லைட்டிங் பண்ணி ‘நீரவ் ஷா’ ஒளிப்பதிவுல கலக்கி இருப்பாரு...
வசந்தபாலன் இன்னும் பல கோடி பார்த்திருக்கலாம்.
போச்சு... எல்லாம் போச்சு!.
எ.வி.4.

நாடக வாழ்க்கையை சித்தரித்த திரைப்படங்களில்,
நான் பார்த்ததை...தர வரிசைப்படுத்தி இருக்கிறேன்.
1.காவியத்தலைவன் | சித்தார்த்-வேதிகா | இயக்கம் : வசந்த பாலன்.
2. தாயில்லாமல் நானில்லை | கமல்ஹாசன் - ஸ்ரீதேவி | இயக்கம் : தியாகராஜன் .
3.ராஜபார்ட் ரங்கதுரை | சிவாஜி கணேசன் - உஷாநந்தினி | இயக்கம் : பி.மாதவன்.
1 = படு திராபை = படு மோசம்.
2 = திராபை = மோசம்.
3 = மூன்றையும் ஒப்பிடும் போது இப்படம் ‘காவியம்’.
எ.வி.5.
ராஜபார்ட் ரங்கதுரையை நேற்று மீண்டும் பார்த்தேன்.
காவியத்தலைவன் ஏற்படுத்திய விளைவு,
இப்போது, ராஜபார்ட் ரங்கதுரையை ‘காவியம்’ என கொண்டாடத்தோன்றுகிறது.
சிவாஜி கணேசன் நாடகத்துறையிலிருந்து வந்தவர் என்பதால்,
அந்த அனுபவங்கள் அவரது அசைவில் அணுஅணுவாக வெளிப்படுகிறது.
‘அல்லி அர்ஜூனன்’ நாடகத்தில் அவர் காட்டும் ‘உடல் மொழி’ ஆஹா...ஆஹா...அற்புதம்.
ஒரு நாடக நடிகன், சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களை எவ்வாறு எதிர் கொள்வான் என்பதை அவர் நடிப்பில் தரிசித்தேன்.
வாத்தியாராக நடித்த வி.கே.ராமசாமிக்கும்...நாசருக்கும் உள்ள வித்தியாசத்தை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பாக, ‘ஆச்சி’ மனோரமாவின் அட்ராசிட்டி அபாரம்.
சிவாஜி பிரேமில் இருக்கும் போது, அவரை தூக்கி அசால்டா முழுங்கி ஒரு ரியாக்‌ஷன் குடுக்குறாங்க..பாருங்க!.
எப்பேர்ப்பட்ட மாமேதைகளின் நடிப்பை பார்த்து வளர்ந்திருக்கிறேன் நான் !.
சிறு வயது சிவாஜியாக நடித்த பையன், சிவாஜியின் உடல் மொழி,பாடல் காட்சியில் அவர் வெளிப்படுத்தும் முக பாவங்களை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருக்கிறான்.
அட...சின்ன வயசு ‘ஸ்ரீதேவி’ ...என்னா போடு போட்டு இருக்கு!.
அடிச்சு சொல்றேன்...
பக்கோடாக்காதர் நடிப்புக்கு பதில் இருக்காடா...
உங்க ‘காவியத்தலைவலியில’.
ராஜபார்ட் ரங்கதுரையை ‘சுமார்’ என மதிப்பிட்டதற்கு..
மன்னிக்க வேண்டுகிறேன்.
முந்தைய பதிவிலும் திருத்தி விடுகிறேன்.
காவியத்தலைவன், தாயில்லாமல் நானில்லை படங்களோடு ஒப்பிடும் போது ‘ராஜபார்ட் ரங்கதுரை’ காவியம்.
எ.வி.6.
நேற்று ‘தாயில்லாமல் நானில்லை’ என்ற குப்பை படத்தை மீண்டும் பார்க்க முயற்சித்தேன்.
முடியல.
பாத்த வரைக்கும் சொல்றேன்.
இந்த குப்பை படத்திலிருந்து காட்சிகளை அப்படியே காப்பியடிச்சு படம் பண்ணி இருக்கானுங்க!.
அடப்பாவிங்களா...
முழு படத்தையும் பாக்க எனக்கு, திராணி இல்லை.
யாராவது முழுசா பாத்து...பட்டியல் போடுங்க!.
எ.வி. இனியும் தொடரலாம் !.

Dec 5, 2014

எல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்!.




கோவா சர்வதேச திரைப்பட விழாவில்,
அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி...
கால்வாசி காலியாகி...
இருந்த முக்கால்வாசி பேரும் முழி பிதுங்கி பார்த்த படத்தை நானும் பார்த்தேன்.
கியூவில் நிற்கும் போது...முன்னால் நின்ற 84 வயது பெரியவரிடம் பேச்சு கொடுத்தேன்.
எங்கே இருந்து வர்றீங்க?
“பிரான்ஸ்”
உங்க பேரு ?
“ கோடார்டு”
படத்தோட இயக்குனர் பேரை கேக்கல...உங்க பேரை கேட்டேன்.
“ நாந்தான் கோடார்ட்”
நீங்க கோடார்டுன்னா...நாந்தான் கமல்ஹாசன்.
நம்பிட்டேன்.
என்ன யோசிக்கிறீங்க?
நீங்க கமல்ஹாசன் என்பதை கமல்ஹாசனும் நம்பிட்டா என்ன நடக்கும்னு யோசிச்சு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டேன்.
தெய்வமே! நீங்கதான் கோடார்டு. ஒத்துக்குறேன்.
அரசாங்க மரியாதையோட ‘ரெட்கார்பெட்ல’ நடந்து வராம ஏன் க்யூவில வர்றீங்க?
‘உலகசினிமா ரசிகன்னு’ புருவத்தை உயர்த்தி...
நெஞ்ச நிமித்தி... உலா வருகிறாயே!
இந்த படத்தை எப்படி உள் வாங்கப்போறேன்னு பாக்க வந்தேன்.
ஏன் இந்த சோதனை?
பக்தர்களை சோதிப்பது ‘பரமனுக்கு’ வழக்கம்தானே!
படம் தொடங்கியது.
பர்ஸ்ட் பிரேம்லேயே ‘கோடாட்ர்ட் அட்டகாசம்’ தொடங்கியது.
தியேட்டர்ல இருந்த பாம்பு,பல்லி, பூரான், தேளு எல்லாம் தெறிச்சு வெளிய ஓடிருச்சு!.
நீ ஓடலியா!
ஐய்யா...நான் ‘உலகசினிமா ரசிகன்’.
உங்க படத்துக்கு ஓட மாட்டேன்.
ஆனா, சரித்திரப்படம்னு...தரித்திரப்படம் காமிச்சா அலறிகிட்டு ஓடிறுவேன்.
படம் ஆரம்பிச்ச உடனே,
‘ப்ரண்ட் சவுண்ட் ஸ்பீக்கர்’ அவுட் ஆகி...
சைடு ஸ்பீக்கர்ல கன்னாபின்னான்னு சவுண்டு பிச்சிகிட்டு வந்திச்சு.
பார்வையாளர்கள் அனைவரும் ‘ஆப்பரேட்டரோட அம்மாவை’ திட்ட ஆரம்பித்தார்கள்.
கிக்...கிக்..கிக்.
உங்க குசும்புதானே இது...அநாவசியமா ஆபரேட்டரை திட்டு வாங்க வச்சீட்டீங்க!.
15 நிமிடம் கழித்து...
ஒரு ஷாட்ல, இருக்குற விஷூவல்சுக்கும்...சவுண்டுக்கும் சம்பந்தம் இல்லை.
அந்த சவுண்டுக்கு உரிய விஷூவலை வேறொரு சந்தர்ப்பத்தில காமிக்கிறீங்க!
ஏன் இந்த புதிர் விளையாட்டு?
ஏன்னா...நீங்கள் மேதைகள்.
விடையை கண்டு பிடிப்பீர்கள் எனத்தெரியும்.
ஏன்னா...நானும் மேதை.
சினிமா வரலாற்றில், இது வரை கண்டிராத 3டி அற்புதம் ஒரு காட்சியில் நிகழ்ந்தது.
இதற்காகத்தான் இப்படத்தை 3டியில் எடுத்தீர்களா?
ஹாலிவுட் பசங்க அவ்வளவு பேரையும் ‘காயடிச்சிட்டீங்களே !
ஹா...ஹா...
இந்த ஷாட் மட்டும் அல்ல...
இந்த 3டி கேமராவை நான் எனக்குன்னு ஸ்பெஷலா உருவாக்குனேன்.
ஷாட் பை ஷாட்...ஏன் இப்படி தொடர்பே இல்லாம படம் எடுத்து பாமரர்களை கொல்றீங்க!
சிட்பீல்ட் எழுதிய திரை இலக்கணப்படி ஒரு படம் கூட எடுக்க மாட்டேங்கறீங்க!.
சிட்பீல்டு சின்னப்பையன்...அவன் ரூலுக்கேல்லாம் நான் படம் எடுக்க முடியுமா?
இந்த படத்தில ஒரு ரூலை உருவாக்குவேன்.
அடுத்தப்படத்துல நானே அதை உடைப்பேன்.
அப்படியே பழகிட்டேன்.
திரைக்கதை இலக்கணம் புக்கை எல்லாம் என்ன பண்றது?
உங்க ஊர்லதான் ‘போகி’ வரும்ல!.
அதுக்கு யூஸ் பண்ணுங்க.
ஒண்ணு சொல்றேன்...
எல்லா இலக்கணத்தையும் உடைங்க...
அப்போதான் கோடம்பாக்கத்துல கூட ஜெயிக்க முடியும்.
படம் முடிந்தது.
இந்த படத்தை மறுபடியும் சென்னை திரைப்பட விழாவில் பார்க்கப்போகிறேன்.
ஏன் ?.
அது.... வந்து......புரியல.
கொஞ்சம் புரியலயா? கொஞ்சம் கூட புரியலயா ?
வாங்களேன்...காப்பி சாப்டுகிட்டே ‘மிஷ்கின்’ பத்தி பேசுவோம்.
கோடார்ட் மயக்கமாகி சரிந்து விட்டார்,
“ அது ”.
Goodbye To Language [ Adieu Au Language ] | 3D Film | 2014 | France | 70 min | Directed by : Jean-Luc Godard.


Dec 4, 2014

உலகசினிமாக்களை பார்க்காதே!.

கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன்.
காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்காக மட்டும் எடுக்கப்படும் ‘போலி உலகசினிமாக்கள்’.
அவற்றையும் அடையாளம் காட்டுகிறேன்.
1. Alice in Mariland | 2014 | mexico | Directed by : Jesus Magana Vazquez.
2. Fish | Turkey | 2014 | Directed by : dervis Zaim.
3. Red Amnesia | China | 2014 | Directed by : Xiaoshuai Wang.
4. Tales | 2014 | Iran | Directed by : Rakshan Banietemad.
5 Sand Dollers | 2014 | Dominican Republic | Directed by : Laura Amelia Guzman & Israel Cardenas.
6. Party Girl | 2014 | France | Directed by : Marie Amachoukeli, Claire Burger & Samuel Theis.
7. One On One | 2014 | South Korea | Directed by : Kim Ki-duk.
தங்கமீன்கள், தலைமுறைகள், காவியத்தலைவன் போன்ற படங்களை புறக்கணித்த அடிப்படையில்தான் இப்படங்களை புறக்கணிக்கிறேன்.
மேற்கண்ட தமிழ்ப்படங்களை சிலாகிப்பவர்கள் இந்தப்படங்களை தயவு செய்து பார்த்து விடுங்கள்.
இந்தப்படங்கள் உங்களுக்கு கிளர்ச்சியூட்டலாம்.

Dec 3, 2014

‘சர்வாதிகாரியின் சரிவு’


கோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது.
இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட படமாக இது தோற்றமளித்தது.
ஜார்ஜியா அரசு மிகுந்த ஒத்துழைப்பை நல்கியதால் குறைந்த செலவே ஆனது என குறிப்பிட்டார் மக்மல்பப்.
ஒரு சர்வாதிகாரியின் வீழ்ச்சிதான் இத்திரைப்படம்.
சர்வாதிகாரி ஆண்ட நாட்டை பெயரிடாமல் வைத்து விட்டார் மக்மல்பப்.
எனவே இந்த சர்வாதிகாரியை,
சோனியா, ஜெயலலிதா, கருணாநிதி, ராஜபக்‌ஷே, மோடி என யாரோடும் பொருத்திப்பார்க்கும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறார் மக்மல்பப்.
சர்வாதிகாரி தன் பேரனுக்கு விளையாட்டு காண்பிக்க ஆசைப்படுகிறார்.
போனை எடுத்து ‘லைட்ஸ் ஆப்’ எனச்சொல்ல சொல்கிறார்.
பேரனும் சொல்கிறான்.
சென்னை போல ஒரு பெரு நகரமே இருளில் மூழ்குகிறது.
இப்போது ‘லைட்ஸ் ஆண்’ என சொல்ல சொல்கிறார்.
பேரன் சொல்கிறான்.
நகரமே ஒளிர்கிறது.
பேரன் சொல்கிறான்... “ ஹை...இந்த விளையாட்டு நல்லா இருக்கு.
உன் போஸ்ட்டுக்கு நான் எப்ப வர்றது? ”
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வாரிசுக்கு அதிகாரப்போதையை ஊட்டுவதை இதை விட சிறப்பாக படம் பிடித்து காட்ட முடியுமா !


பிரசிடெண்ட் கிளைமாக்சும், உதிரிப்பூக்கள் கிளைமாக்சும் ஒன்றே!.
இரண்டு திரைப்படங்களின் இறுதி காட்சிகளும்,
ஒரே உணர்வை தோற்றுவித்தன.
இத்திரைப்படம் கேரளா, பெங்களூர், சென்னை திரைப்பட விழாக்களில் கட்டாயம் திரையிடப்படும்.
தவற விடாதீர்கள்.
The President | Iran | 2014 | Directed by : Mohsen Makhmalbaf.

Dec 2, 2014

கோவா சர்வதேச திரைப்பட திருவிழா- 1

நண்பர்களே....
முகநூலில் எழுதுவதை தொகுத்து பதிவுலகில் வழங்க இருக்கிறேன்.
கோவா சரவதேச திரைப்பட விழாவில்,பார்த்த திரைப்படங்களை பகிர்கிறேன்.

கோவா சர்வ தேச திரைப்பட திருவிழாவில், ‘தங்க மயில்’ விருது பெற்ற 'LEVIATHAN' என்ற திரைப்படத்தை முதன்மையாக பரிந்துரைக்கிறேன்.
இயக்குனர் 'Andrey Zvyagintsev',
‘The Return' [ 2003 ] என்ற காவியத்தில் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவுச்சிக்கல்களை சித்திரமாக்கி இருந்தார்.
‘The Banishment' [ 2007 ] என்ற காவியத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவுப்போராட்டங்களை பறை சாற்றி இருந்தார்.
இத்திரைப்படத்தில் இரண்டு போராட்டங்களையும் இடம் பெறச்செய்து திரைக்கதை அமைத்துள்ளார்.
திரைக்கதையை காட்சிப்படுத்திய விதத்தில்...
சோவியத் ரஷ்யாவின் மாட்சிமையையும்...
இன்றைய ரஷ்யாவின் வீழ்ச்சியையும்...
சொல்லி இருக்கிறார்.
ஒரு மைக்ரோ சப்ஜக்டை,மேக்ரோ சப்ஜக்டாக...
மாற்றும் செப்பிடு வித்தையில் பெர்க்மன்,குரோசுவா போன்ற ஆளுமைகள் ‘மாஸ்டர்கள்’.
இயக்குனர் 'Andrey Zvyagintsev' இந்த ’மாஸ்டர்கள்’ வரிசையில் இத்திரைப்படத்தின் மூலம் இந்த வரிசையில் இடம் பெற்று விட்டார்.
Leviathan | 2014 | Russia | 141 min | Directed by : Andrey Zvyagintsev.