Dec 18, 2014

தாலிபன் தீவிரவாதத்தை பதிவு செய்த திரைப்படம்!.

பாக்கிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய கொடுஞ்செயலை முன்கூட்டியே பதிவு செய்த திரைப்படம் இது.
தாலிபன் கொடுங்கோலர்களின் கொடுஞ்செயலை ஆவணப்படம் போல் பதிவு செய்துள்ள இக்காவியத்தை தவற விடாதீர்கள்.


கோவாவில் திரையிட்டு, கேரளாவிலும் திரையிடவிருக்கும் காவியம் ‘Timbuktu'.
நம் சம கால படைப்பாளிகளில் மிக முக்கியமான ஆளுமை ‘சிஸாகோ’.
சிஸோகாவின் படைப்பில் சமீபத்திய வரவை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றோம் கோவாவில்.
எதிர்பார்த்து சென்றால் ஏமாற்ற சிஸாகோ ஒன்றும்...
வசந்த பாலன் அல்ல.
சிஸாகோவின் இந்தப்படம், இந்த வருடம் பார்த்தப்படங்களிலேயே மிக அழுத்தமாக அரசியல் பேசிய படம்.
தீவிர மதவாதிகளின் கையில் சிக்கிய நாட்டையும், நாட்டு மக்கள் அவஸ்தையையும் மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார்.
சிகரெட்டு, இசை, விளையாட்டு ஏன் சிரிப்பு கூட தடை செய்யப்படுகிறது.

கொடுங்கோல் அரசின் அராஜகத்தை மக்கள் எதிர் கொள்ளும் அவலத்தை பதட்டத்தோடு பதிவு செய்கிறது இத்திரைப்படம்.
அதே சமயத்தில் கொடுங்கோல் சட்டத்தை மீறுவது எப்படி என சொல்லித்தரவும் கற்று கொடுக்கிறது இத்திரைப்படம்.
உதாரணமாக ஒரு காட்சி...
கால் பந்தாட்டம் தடை செய்யப்படுகிறது.
அடக்கு முறை சட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் கால் பந்தாட்டப்போட்டியை நடத்துகிறார்கள்.
உற்சாகமாக உதைத்து விளையாடுகிறார்கள்.
பந்தை கடத்துகிறார்கள்.
கோல் போடப்படுகிறது.
உலகத்திலேயே இப்படி ஒரு கோலை யாரும் போட முடியாது.
கோல் போட்டவனை கொண்டாடுகிறார்கள்.
பார்வையாளர்களும் கொண்டாடுகிறோம்.
ஏன் தெரியுமா?
இக்கால் பந்தாட்டத்தில் ‘கால் பந்து’ கிடையாது.
கால் பந்திற்கு பதிலாக காற்றை உதைத்து ஆடப்பட்ட மாய ஆட்டம் இது.
சர்வாதிகாரத்தை சரிக்க இளைஞர்கள் ஆடிய ஆட்டம் இது.
இப்படி ஒரு ‘மாய விளையாட்டை’ அந்தோனியோனியின் ‘ப்ளோ அப்’ திரைப்படத்திலும் பார்க்கலாம்.
இந்தப்படத்தை பாருங்கள்.
நம்ம ஊர் ‘முத்தப்போராட்டம்’ பற்றியும் சிந்தியுங்கள்.
Timbutu | 2014 | France | 96 min | Directed by : Abdherrahmane Sissako.