Showing posts with label கேரளா. Show all posts
Showing posts with label கேரளா. Show all posts

Dec 14, 2011

கேரளாவில் நான் பட்ட பாடு

டிசம்பர் 2லிருந்து 19 வரை எர்ணாக்குளத்தில் கொச்சி புத்தகக்கண்காட்சியில் இருந்தேன்.
ஊடகங்கள் முல்லைப்பெரியார் பிரச்சனையை, தினமும் தலைப்பு செய்திகளாக்கி வெடிமருந்தை நிரப்பிக்கொண்டே இருந்தது.
மேடைகளில் பேச்சாளர்கள் மனிதவெடிகுண்டுகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் பேப்பர்களை பார்த்தால் இங்குள்ளவர்கள் அதே வேலையை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
தமிழ்நாட்டிலிருந்து பத்து பேர் ஸ்டால் போட்டிருந்தோம்.
உள்ளூர பயம் ரம்பம் போல் அறுத்து கொண்டிருந்தது.
ஆனால் கேரள மக்கள் எங்கள் பயத்தை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள்.
யாருமே எங்களை விரோதி போல் பாவிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் ஸ்டாலில்நல்ல கூட்டம்...
நல்ல வியாபாரம்.
‘கேரள கவுமதி’என்ற நூற்றாண்டு கண்ட பத்திரிக்கை ஆசிரியர் என்னை பேட்டி கண்டு பத்திரிக்கையில் பிரசுரித்து என் ஸ்டாலை பிரபல்யபடுத்தி விட்டார்.

கேரளாவில் இன்றும் ஆட்டோ 15ரூபாய்க்கு வருகிறார்கள்.
அதே தூரத்திற்க்கு சென்னையில் 30ரூபாயும்...கோவையில் 40ரூபாயும் உரித்து விடுவார்கள்.
 தியேட்டரில் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் 50ரூபாய்க்கு புல் ஏசி போடுகிறார்கள்.


சரவணபவன் மாதிரி ஏ கிளாஸ் ஹோட்டலில் 45 ரூபாய்க்கு புல் மீல்ஸ் சாப்பாடு.
மொத்த கேரளாவே மிடில் கிளாஸ் சொர்க்கமாக இயங்கி கொண்டிருக்கிறது.
கேயிஸ் என்ற ஹோட்டல் பிரியாணி உலகின் டாப்10ல் அடங்கும்.
அவர்கள் உணவையே மருந்தாக்கி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
சாம்பார்,ரஸம் எல்லாவற்றிலும் பெருங்காயம்.
மீன் குழம்பில் இஞ்சி...
பாயாஸத்தில் சுக்கு...
இறால் வறுவலில் பூண்டு என சாமர்த்தியமாக இணைத்து விடுகிறார்கள்.

என்னடா ஒரே பாராட்டு மயமா இருக்கே....தலைப்புக்கு சம்பந்தம் இல்லியேன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே தலைப்புக்கு வந்துட்டேன்.
புதிய உலக சினிமா டிவிடி விற்ப்பதுக்கு படாதபாடு பட்டேன்.
இன்னும் அவர்கள் அகிரா குரோசுவா,சத்யஜித்ரே போன்ற இயக்குனர்களை தாண்டி வரவில்லை.
சமீபத்திய இயக்குனர்களில் கிம்கிடுக் மட்டுமே அறிந்து வைத்துள்ளனர்.
ரோடு ஹோம்,வே ஹோம் டிவிடி விற்ப்பதற்க்கு கதகளி ஆடவேண்டி வந்தது.
தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் புண்ணியத்தால் சர்வ சாதரணமாக உலக சினிமா அறிவுப்புரட்சியே நடந்துள்ளது என்பதை உணர முடிந்தது.

கடைசி நாள் கேரளத்து பைங்கிளி ஒன்று வந்து, ஹிரோசிமா மான் அமர் இருக்கா என்று கேட்டாள்.
சந்தோசமாக தேடி எடுத்து கொடுத்தேன்.
விஸ்காம் ஸ்டூடண்டா? எனகேட்டேன்.
ஆமாம் என்றாள் பெருமிதம் பொங்க...

மேன் வித் எ மூவி கேமரா டிவிடியை இலவசமாகக்கொடுத்தேன்....
வருங்கால மீரா நாயருக்கு...