நண்பர்களே...
இன்று தமிழ்நாட்டில்,
நாடகக்கலை ... நகைச்சுவை தோரணங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதனால் ‘ஆக்சிஜன்’ பெற்று உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நாடக கலைக்களஞ்சியம் \ 1964 \ ஆசிரியர் : அ.பாபநாசம் \
[ பதிவின் பாகம் - 2 ]
தீவிர நாடகங்கள்,
கூத்துப்பட்டறை, பரிக்ஷா போன்ற அமைப்புகளாலும்,
பொதுவுடமைக்கட்சியினரின் கலை, இலக்கிய மன்றத்தினராலும்
மட்டுமே நடத்தப்பட்டு...
‘கை சுடப்பட்டு’ வருகிறது.
1960 -70 வரைக்கும் நாடகம் தமிழ்நாட்டில் செழித்திருந்தது எனலாம்.
நாடகத்திலிருந்து வந்து திரை உலகில் கொடி கட்டிப்பறந்த ஜாம்பவான்களால் நாடக உலகம் செழித்திருந்தது.
திராவிட இயக்கத்தில்,
திரு.பேரறிஞர் அண்ணாத்துரையும்...
திரு.கலைஞர் கருணாநிதியும்...
திரு.பொன்மனச்செம்மல் எம்ஜியாரும்...
நாடகம் மற்றும் சினிமா மூலமாக தங்களது இயக்கத்தையும்,
தங்களையும் வளர்த்துக்கொண்டது மாற்ற முடியாத வரலாறு.
திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்,
தனது துணைவியார் டி.ஏ. மதுரத்துடன் இணைந்து...
சொந்தமாக நாடகக்கம்பெனி நடத்தி சீர்திருத்தக்கருத்துக்களை மக்களிடம் நாடகம் மூலமாக பரப்பி வந்தார்.
திரை உலகையும், நாடக உலகையும் இரு கண்களாகவே பாவித்தார்.
திரு.எம்ஜியார் அவர்கள் திரை உலக நட்சத்திரம் ஆன பிறகும் கூட,
தனக்கென ஒரு நாடகக்குழு அமைத்து...
நாடகங்கள் நடத்தி வந்தார்.
ஒரு நாடகத்தில், உடல் பருமனான நடிகரை...
தலைக்கு மேல் தூக்கி நடிக்கும் போது,
விபத்து ஏற்பட்டு கால் முறிவானது.
அந்த விபத்துக்குப்பிறகு அவர் நாடகம் நடிக்கவில்லை.
திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தனது சிவாஜி நாடகக்குழுவின் மூலமாக வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் போன்ற நாடகங்களை எழுபதுகள் வரை நடத்தி வந்தார்.
அதே போன்று எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.ராமதாஸ், சுருளிராஜன்,
மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், ஜி.சகுந்தலா, மனோரமா போன்ற முன்னணி நடிக, நடிகையர்கள் சொந்தமாக நாடகக்குழு அமைத்து நாடகத்திற்கு செழுமையூட்டினர்.
திரு.டி.கே.சண்முகம் அவர்கள் நாடகக்கம்பெனி அறுபதுகளில் கொடி கட்டிப்பறந்த நிறுவனம்.
திரு.கமல்ஹாசன் இந்தக்கம்பெனியில்தான் பால்ய வயதில் நடிப்பு பயிற்சி பெற்றார்.
இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் டி.கே.எஸ் நாடக கம்பெனிக்கு கதை எழுதி உள்ளார்.
நமது இயக்குனர்களில் கே.பாலச்சந்தர், விசு, மவுலி போன்றவர்களும்
நாடக உலகில் பங்காற்றி தனித்துவம் பெற்றவர்கள்தான்.
அரசியல் நாடகங்களுக்கு திரு.சோ அவர்களும்,
புராண நாடகங்களுக்கு திரு.ஆர்.எஸ்.மனோகர் அவர்களும்
எழுபதுகளில் கொடி கட்டிப்பறந்தார்கள்.
திரு. நடிகவேள். எம்.ஆர்.ராதா அவர்கள்,
நாடக உலகில் போராளியாக விளங்கியவர்.
அவரது நாடகங்களை தடை செய்ய முயன்ற ஆதிக்க சக்திகளை,
மக்கள் சக்தியோடு அவர் எதிர் கொண்டது பொன்னெழுத்து வரலாறு.
அவரது மாஸ்டர் பீஸ் ‘ரத்தக்கண்ணீர்’.
இன்றும் இந்த வசனங்களுக்கு ‘கை தட்டல்’ வெடிக்கும்.
அவரது வாரிசுகளான எம்.ஆர்.ஆர். வாசுவும், ராதாரவியும்
நடிகவேளின் நாடகங்களை முன்னெடுத்து சென்றனர்.
திருஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகக்குழுவை,
அவரது வாரிசு ஒய்.ஜி.மகேந்திரா பொன் விழாக்காணச்செய்தது சாதாரண வரலாறு அல்ல.
எழுபதுகளில் திரைத்துறைக்கு வந்து சாதித்தவர்கள் பெரும்பாலும் நாடகப்பின்புலம் மிக்கவர்கள்.
திரு.பாரதிராஜா, கே.பாக்யராஜ், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனச்சொல்லிக்கொண்டே போகலாம்.
திரு.கோமல் சுவாமிநாதன் அவர்கள் ‘தண்ணீர் தண்ணீர்’,
‘ஒரு இந்தியக்கனவு’ போன்ற புரட்சி நாடகங்களை நடத்தி நாடக உலகிறகு புது ரத்தம் பாய்ச்சியவர்.
எழுத்தாளர் திரு.சுஜாதாவின் நாடக புதுமை உத்திகளை...
நாடகத்தில் புகுத்தி புகழ் பெற்றார் திரு.பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள்.
எழுபதுகளில் நாடக உலகிற்கு வந்து இன்றளவும் கொடி கட்டிப்பறப்பவர்கள் எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும்தான்.
அடை மழையிலும், ரசிக வெள்ளத்தால் அரங்கை நிரப்பும் வல்லமை படைத்தவர்கள்.
என் சிற்றறிவுக்கு எட்டிய வரை இன்றைய காலம் வரை உள்ள நாடக உலகை காட்டி இருக்கிறேன்.
நான் அறியாமல் விட்டு விட்ட நாடகப்பெருந்தகைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.