Dec 21, 2013

சென்னை திரைப்பட விழா- ஆபத்தான அபத்தங்கள்.


நண்பர்களே...
30 நாட்களுக்குள் மூன்று திரைப்பட விழாக்களை காணும் பாக்கியம் கிடைத்தது.
30 நாடுகளை சார்ந்த 80 திரைபடங்களை கண்டேன்.
இந்த அரிய வாய்ப்பை நல்கிய கோவா, கேரளா, சென்னை திரைப்பட விழாவிற்கு நன்றி.

இணையத்திலேயே இன்று படங்கள் எளிதாக கிடைக்கும் போது,
திரைப்பட விழாவில் படங்களை சென்று பார்ப்பதில் என்ன பயன் என்ற நியாயமான கேள்வி எழும்.
தினமும் வீட்டில் சாமி கும்பிட்டாலும்,
திருவிழா நாட்களில் கூட்டத்தோடு நெருக்கி அடித்து கோவிலில் சாமி கும்பிடப்போகிறோமே...எதற்காக?
பக்தர்களுக்கு, அது ஒரு அனுபவம்...கொண்டாட்டம்.
உலக சினிமா ரசிகர்களுக்கு அத்தகைய அனுபவத்தை...கொண்டாட்டத்தை அளிப்பது திரைப்பட விழாக்களே!

கோவா, கேரள திரைப்பட சாதக, பாதகங்களை தனிப்பதிவாக்குகிறேன்.
இப்பதிவு சென்னை திரைப்பட விழா பற்றி மட்டுமே!
கோவா திரைப்பட திருவிழா மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இருபது கோடிக்கு மேல் செலவழித்து கொண்டாடப்படுகிறது.
கேரள திரைப்பட விழாவை கேரள அரசே பத்து கோடிக்கு மேல் செலவழித்து கொண்டாடுகிறது.
சென்னை திரைப்பட விழா, ‘தனியார் அமைப்பு’ ஒன்றினால் தொடர்ந்து 11 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
நிச்சயம் இந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக எந்த பலனும் இருக்காது.
இதற்காக பல மாதங்கள் உழைத்து இந்த விழாவை நடத்துகிறார்கள்.
 திரு.தங்கராஜ் என்பவரது தலைமையில் ‘இந்தோ சினி அப்ரிசியேசன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பே இந்த சிறப்பான பணியை செய்து வருகிறது.
இவர்கள் இல்லையென்றால் தமிழ் நாட்டுக்கு  ‘திரைப்பட விழா’ என்ற நாதியே இருக்காது.


‘உழக்கில் கிழக்காக’ ஆதிக்க அரசியலும் இந்த திரைப்பட விழாவில் நுழைந்து விட்டது.
தலித் அரசியலை கலையுணர்வோடும்...காவியத்தன்மையோடும் சொன்ன     ‘Fandry' [ பன்றி ] என்ற திரைப்படம் இந்த வருட விழாவில் திரையிடப்படாதது மன்னிக்க முடியாத குற்றம்.
இந்த குற்றத்தை செய்த ‘மசாலா மண்டைகள்’ உருவாக்கும் மசாலா படங்கள் மண்ணைக்கவ்வட்டும் என மண்ணை வாரி தூற்றி சாபம் கொடுக்கிறேன்.

தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் ‘சில சில்லறை காசுகளை’ விட்டெறிந்து
கருணை காட்டி வந்தது.
இந்த ஆண்டும் மிகப்பெரிய தொகையாக ‘பத்து பைசாவை’ வாரி வழங்கி பெருமை சேர்த்துக்கொண்டது.

இத்தனை ஆண்டுகள் இந்த திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டும் தீவிரமான உலக சினிமா ரசிகர்கள் சென்னையில் உருவாகவே இல்லை.
பாலியல் காட்சிகளுக்காகவும்... ‘தங்க மீன்கள்’ போன்ற நெஞ்சை நக்கும் ‘கண்ணீர் காவியங்களை’ பார்க்கவே அலை மோதுகிறார்கள்.

உயர்ந்த ரசனை உள்ளவர்களால் மட்டுமே உள் வாங்கக்கூடிய ‘த மிஸ்ஸிங் பிக்ச்சரை’ முப்பது பேர் மட்டுமே பார்த்து இருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் ஒரு  ‘சத்யஜித்ரே’...ஒரு  ‘ரித்விக் கட்டக்’ உருவாகி,
‘தமிழ் உலக சினிமாவுக்கு’ எங்கிருந்து ‘சாப விமோசனம்’ கிடைக்கும்?

கோடம்பாக்கத்தில் மசாலா படங்களை உருவாக்கும்  ‘மந்திரவாதிகள்’ பலரை இந்த விழாவில் பார்த்தேன்.
அத்தைகைய படங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர்களையும் இவ்விழாவில் கண்டேன்.
இவர்கள் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே!
கொடுமை.
புருவத்தை நெறிக்கிறது...நெஞ்சை நிமித்துறது...தோளை தூக்குறது...
இவனுங்க அட்டகாசம் தாங்கல!
இது போன்ற  ‘அராஜக ஆசாமிகளை’ கோவா...கேரளா திரைப்பட விழாக்களில் காண முடிவதில்லை.

சென்னை திரைப்பட விழாவில் நிறைய  ‘அம்பானிகள்’, ‘பில்கேட்ஸ்கள்’ கலந்து கொண்டார்கள்.
அவர்களது செல்போன்கள் இடையறாது ஒலித்து ‘தங்கள் இருப்பை’ தெரிவித்தன.

சென்னை திரைப்பட விழாவிற்கு  ‘அனுப்பப்படும்’ தமிழ் சினிமாக்களை மட்டும் திரையிட்டு அதில் ஒன்றை தேர்வு செய்து ‘சிறந்த படமாக’ அறிவிக்கும் காமெடியும் தொடர்ந்து நடைபெறுகிறது.
கேரள திரைப்பட விழாவில் உலகின் பல பாகங்களில் இருந்து வருகின்ற உலக சினிமாக்களோடு ‘மலையாள சினிமாவை’ மோத விடுகிறார்கள்.
என்றாவது ஒரு நாள் மலையாள சினிமாவுக்கு நிச்சயம்  வெற்றி கிட்டும்.

சென்னை திரைப்பட விழாவில் தமிழ்ப்படங்கள் மட்டுமே  ‘போட்டியில்’ கலந்து கொள்ள முடியும்.
எனவே போட்டிக்கு  ‘அன்னக்கொடி’... ‘தங்க மீன்கள்’ போன்ற  ‘திராபைகளே’  ‘திருவிழவில்’ அணி வகுத்து வருகின்றன.
எல்லாமே ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’.
இந்த ‘அபத்த போட்டியின் ஆபத்தை’ உணர்ந்த கமலும், மிஷ்கினும் தங்கள் படைப்புகளை அனுப்பவேயில்லை.
அவர்களுக்கு நன்றி.
தங்க மீன்களிடம் தோற்ற ‘பரதேசிக்கு’ ஆழ்ந்த அனுதாபங்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

5 comments:

  1. //தங்க மீன்களிடம் தோற்ற ‘பரதேசிக்கு’ ஆழ்ந்த அனுதாபங்கள்.//

    :)

    ReplyDelete
  2. இரண்டு பேர்களாவது உணர்ந்துள்ளார்களே...!

    ReplyDelete
  3. ’உலக சினிமா’ என்பதின் அர்த்தம் புரியவில்லை சார். தமிழகமும், ஆந்திராவும் கூட உலகத்துக்குள்தானே இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம் கற்பனை நாவல்கள் இருந்தாலும், ஏன் இராமயத்தையும்...மஹாபாரதத்தையும் காப்பியங்கள் என்கிறோம்.
      திரை இலக்கியத்தில் உலக சினிமா என்பது காப்பியம் என்பதற்கு சமம்.

      ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டில் எடுக்கப்படும் படங்களை ‘மூவி’ [ Movie ] எனவும்...காலத்தை விஞ்சி நிற்கும் கலைப்படங்களை
      ‘ வேர்ல்டு சினிமா’ [ World Cinema ] என அழைத்து வகைப்படுத்தினார்கள் சான்றோர்கள்.

      Delete
  4. உங்களுடைய எல்லா கட்டுரையினையும் நான் படித்ததில்லை, ஆனால் இதில் நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு நாம் தரம் தாழ்ந்து விடவில்லை என்பது என் கருத்து.
    ஒரு சாதாரணணுக்கு புரியாத சினிமாவினை ஏன் கொண்டாடுணும்? சீரியசாகவும், அழ வைக்கும் படங்கள் மட்டுமே நீங்கள் குறிப்பிடும் உலக சினிமாவாக இருக்க முடியாது.
    எங்களையும் உங்களுடன் சேர்ந்து ரசிக்க செய்யுங்கள்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.