Dec 12, 2013

சென்னை திரைப்பட திருவிழா!




நண்பர்களே...இன்று சென்னை திரைப்பட திருவிழா துவங்க இருக்கிறது.
இந்த வருடம், சென்னை திரைப்பட திரு விழா படங்களின் பட்டியல் மிகச்சிறப்பாக இருக்கிறது.

நான் கோவா, கேரள திரைப்பட விழாக்களில் பார்த்து வியந்த படங்கள் இப்பட்டியலில் இருக்கிறது.

‘பார்க்க கொடுப்பினை இருப்பவர்கள் இப்படத்தை பார்க்க கடவது’ என சாபம் கொடுக்கிறேன்.

கீழ்க்கண்ட பன்னிரெண்டு படங்களும் உலக சினிமா பிரிவில் உள்ளது. 

1. Young and Beautiful |Francois Ozon |France
2. Harmony Lessons | Emir Baigazin | France-Germany-Kazakhstan
3. The Missing Picture | Rithy Panh | Cambodia-France
4. Two Mothers | Anne Zohra Berrached | Germany
5. What they don't talk about when they talk about love | Mouly Surya | Indonesia
6. Blue is the Warmest Colour | Abdellatif Kechiche | France

7.WALESA, MAN OF HOPE | Andrzej Wajda | Poland
8.LIFE FEELS GOOD | Maciej Pieprzyca | Poland
9.Mother I Love you | Janis Nords | Lativa
10.Ilo Ilo | Anthony Chen | Singapure
11.The Past (Le passé) | Asghar Farhadi | France | Italy
12.Like Father, Like Son | Hirokazu Koreeda | Japan


இந்தப்படங்களை கட்டாயம் பார்த்து விடுங்கள்.
லைக் பாதர்...லைக் சன்...என்ற படத்திற்கு ஏற்கெனவே பதிவெழுதி இருக்கிறேன்.
இன்னும் சில படங்களுக்கு சிறிய அறிமுகம் தருகிறேன்.



LIFE FEELS GOOD [ Chce Sie Zyc ] | 2013 | Maciej Pieprzyca | Poland

கோவா திரைப்பட திருவிழாவில் இப்படம் முடிந்தவுடன் உலக சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக கை தட்டி ’அரபிக்கடலை’ அடக்கினார்கள்.
ஒருவர் இயக்குனரை கட்டித்தழுவி முத்தமிட்டார்.
அப்போது பட இறுதி வரும் டைட்டில் காட்சியில்,
படத்தில் நடித்த நடிகரையும்...இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ‘ஒரிஜினல் கதாபாத்திரத்தையும்’ ஒருங்கே இருக்கும் காட்சியை கண்டதும் மீண்டும் அரங்கம் கை தட்டல் ஒலியால் அதிர்ந்தது.
அதற்கு மேலாக ‘விசில் சப்தம்’ விண்ணை முட்டியது.




இச்சம்பவம் அடுத்த நாள்  ‘நவ்ஹிந்த் டைம்ஸ்’ பத்திரிக்கையில் செய்தியாக வந்தது.
‘இந்திய ரசிகர்கள் உலக சினிமாவை விசிலடுத்து கொண்டாடுகிறார்கள்’ என்ற செய்தியே பிரதானம்.

சென்னையில் எழும் விசில் அலை, வங்காள விரிகுடாவை விரிவடையச்செய்யும் என்பதில் ஐயமில்லை.
‘தெய்வத்திருமகள் கோஷ்டியினர்’ காப்பியடிப்பார்கள் என்ற அச்சமிருக்கிறது.


நவ்ஹிந்த் டைம்ஸ் பத்திரிக்கை செய்திக்கான இணைப்பு இதோ... 

http://www.navhindtimes.in/iffi-2011/loud-whistles-india-s-way-applauding-good-movies

In Bloom | 2013 | Georgia | Directed by : Nanna Ekvtimishvili & Simon Gross.

இரு பள்ளி மாணவிகளுக்கு இடையே இருக்கும் நட்பின் ஊடாக தற்போதைய ஜார்ஜிய அரசியல், சமூக சூழலை சொல்கிறார் இயக்குனர்.

இப்படத்தில் வரும் ‘இரண்டு பெண்களில்’ ஒரு பெண் ‘மூடர் கூடத்தில்’ வரும் சிறுமியின் '14 வய்து’ தோற்றத்தை பிரதிபலிக்கிறாள்.
மிகவும் ஜாலியான படம்.



The Missing Picture | 2013 | Cambodia | Directed by Rithy Panh

உலக சினிமா ரசிகர்களுக்கு, இந்தப்படம் மிக...மிக முக்கியமானது.
களிமண் பொம்மைகளை வைத்தே படம் பண்ணி இருக்கிறார்.
பின்புலமாக கம்ப்யூட்டர் காட்சிகளை வைத்து இருக்கிறார்.
சில இடங்களில் ஆவணப்படங்களை வைத்து இருக்கிறார்.
கம்போடிய அரசியல் சரித்திரத்தை வாரி வழங்கி இருக்கிறார் இயக்குனர்.
இப்படத்தை கட்டாயம் பாருங்கள்.
பிடித்தால் பாராட்டுங்கள்.
பிடிக்கவில்லையென்றால் திட்டுங்கள்.
பார்த்து விடுங்கள்...அதுதான் முக்கியம்.


Young and Beautiful [ Jeune & Jolie ] |Francois Ozon |France

இந்தப்படத்தில் சூடான உடலுறவுக்காட்சிகள் கவித்துவமாக இருக்கிறது.
படம் முடிந்து வெளியில் வ்ரும் போது அவைகள் உங்கள் நினைவில் இருக்காது.
உடலுறவுக்காட்சியை தாண்டி வேறு விஷ்யங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கும்.
இந்த இயக்குனரின் எல்லா படங்களிலும் இந்த ‘மேஜிக்தான்’ நடக்கும்.


Mother I Love you | Janis Nords | Lativa
ஒரு சிறுவன் கட்டுப்பாடுகளை மீறி...
காட்டாறாக ஓடி விளையாடும் கொண்டாட்டங்களின் ‘அழியாத கோலங்கள்தான்’ இப்படம்.



Ilo Ilo | Anthony Chen | Singapure

அற்புதமான ‘பீல் குட் மூவி’.
வேலைக்காரிக்கும்...அவளை வேலைக்கு வைத்திருக்கும் குடும்பத்துக்கும் உள்ள உறவை மிக யதார்த்தமாக அணுகி இருக்கிறது இப்படம்.
கான் திரைப்பட விழாவில் பரிசு பெற்ற படம்.
கோவா, திருவனந்தபுரம் திரைப்பட திருவிழாக்களில் திரையிடப்பட்ட சில படங்கள் எனக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை. 

அதில் சில படங்கள் சென்னை திரைப்பட விழாவிற்கும் வருகிறது.
அந்தப்படங்களை பார்ப்பதும்...பார்க்காததும் உங்கள் விருப்பம்.


1. Vara, A Blessing | Bhutan | 2013 | Directed by : Khyentse Norbu

மிகவும் போலியான படம்.
படத்தின் உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது.
இந்தியாவில் எந்த கிராமத்தில் அனைவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள்?
தலித் மக்கள் அனைவரும் ஆங்கிலம் பேசும் அதிசயம் இப்படத்தில் இருக்கிறது.
கதைக்களமும் புதிது அல்ல.
தேஞ்சு போன ‘தேவதாசி’ கதைதான்.

2. Stray Dogs | Taiwan | 2013 | Directed by Ming-Liang-Tsai

முதல் ஷாட்டே மூணு நிமிடம்.
படிப்படியாக அதிகரித்து கொண்டு வந்து படத்தின் கடைசி ஷாட்டை பத்து நிமிடத்தில் முடித்தார் இயக்குனர்.
உதாரணமாக ‘நமீதா’ மார்பை விட நாலு மடங்கு பெரிதான ஒரு ‘ அழுகிய முட்டைகோஸை’ ஒருத்தன் சாப்பிட்டு முடிப்பதை காமிரா ஆடாமல் அசையாமல் காட்டிக்கொண்டு இருந்தது.
இக்காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கும் போது நிஜமாகவே எனக்கு ‘வயிற்றை கலக்கி விட்டது’
எந்திருச்சி  'மலஜலக்கூடம்’ சென்று, நிதானமாக...பொறுமையாக வந்தேன்.
அப்போதும் அவன் முட்டைகோஸை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
இருந்தும் இப்படத்தை இறுதி வரை என்னால் பார்க்க முடியவில்லை.
கடைசி ஷாட் 9நிமிடம் 59 செகண்ட் ஓடும் போது வெளியேறி விட்டேன்.
இன்னும் ஒரு செகண்ட் பொறுமையாக இருந்திருந்தால்,
முழு படத்தை பார்த்த பாக்கியவானாக இருந்து இருப்பேன்.

நான் மட்டும் தாய்வானில் ஆட்சி செய்து கொண்டு இருந்தால் ‘உலக சினிமா வதை சட்டம்’ கொண்டு வந்து இந்த இயக்குனரை ஆயுளுக்கும் படமெடுக்க முடியாதபடி செய்து விடுவேன்.

3. My Sweet Pepper Land | 2013 | Irag | Directed by : Hinker Saleem

கடல், தங்க மீன்கள், மரியான் போன்ற படங்களை ரசித்தவர்கள் இப்படத்தை தவறாமல் பார்த்து விடுங்கள்.
உங்களுக்கான படம் இது.

ஒரு கிராமத்தில் ஒருவன் அநியாயம் செய்து கொண்டு இருக்கிறான்.
அதை தட்டிக்கேட்க ஒருவன் வருகிறான்.
இப்படி ஒரு கதையை தமிழ் சினிமா இது வரை ‘ஒரு தடவை’ சொல்லி இருக்கிறதா?

படத்தின் இறுதிக்காட்சியில் ‘பம்பாய்’ படத்தில் மனீஷா கொய்ராலா ‘உயிரே’ என ‘ஹை ஸ்பீடில் குலுங்க குலுங்க’
ஓடி வருவாரே...
அதே போன்று இப்படக்காதாநாயகியும் ‘ ஓ...ராஜா’ என ஓடி வருவார்.
கதாநாயகனும் ‘ஓ...ராணி’ என ஓடி வருவார்.
நானும் தியேட்டரை விட்டு ஓடி வந்து விட்டேன்.

இன்னும் கொடுமையான சில படங்கள் இருக்கிறது.
அவைகள் சென்னைக்கு வராமல் ‘ சென்னை ரசிகர்களை காப்பாற்றி இருக்கிறது’.

இப்படங்களை ‘உள்ளொளி’ மூலம் தரிசித்து யாரேனும் ஒரு பதிவர் எழுதக்கூடும்.
எழுதி உயிர்மை, காட்சிப்பிழை போன்ற ‘இலக்கிய பத்திரிக்கைகளில் வந்தால்,
‘தமிழ் கூறும் நல்லுலகம்’ நன்றி சொல்ல வேண்டும்.




4 comments:

  1. சாபம் பலிக்கட்டும்... ஹிஹி... உலக சினிமா வதை சட்டமும்...!

    ReplyDelete
  2. படங்கள் பரிந்துரைத்ததற்கு நன்றி...அண்ணேன் என் அருகில் இரண்டு திரையரங்குகளில் விழா கொண்டாடுயிறாயிங்க....கட் அடிச்சிட்டுத்தான் போகணும்

    ReplyDelete
  3. சென்னையிலாவது பார்க்க முயற்சிக்கிறேன் சார்!

    ReplyDelete
  4. நானும் உங்களுடன் தான் "LIFE FEELS GOOD "இந்த காவியத்தை (GOA) பார்த்தேன்.
    பிறவி பயனை அடைந்துவிட்டதாகவே நம்புகிறேன்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.