May 16, 2013

இசைப்பண்டிதர்களின் கோபம் -இளையராஜா - பாகம் 8


இசையின் ஏற்பாடுகளில்,
கேள்வி-பதில் என்றொரு உத்தி இருக்கிறது.
குரலுக்கும்-குரலுக்கும், இசைக்கருவிகளுக்கும்-இசைக்கருவிகளுக்கும்,
அல்லது குரலுக்கும்-இசைக்கருவிக்கும் இடையில்,
ஸ்வரஸ்தானங்களை எதிர் எதிரான திசையில் - ஒரு பிரமிடின் உச்சியிலிருந்து ஒருவர் கீழிறங்கும் போது,
அதன் எதிர் திசையில் இருந்து... ஒருவர் கீழிருந்து உச்சி நோக்கி...
ஒரே சமயத்தில் ஏறுவது போல - ஆரோஹண - அவரோஹணத்தில்
ஒரு முரணான  ‘ஒத்திசைவு இயக்கத்தை’ [ contrary motion ] 
ஏற்படுத்துவதன் மூலமும் இதை நிகழ்த்தலாம்.
இதன் மூலம் கேள்வி கேட்கிற தொனியையும்,
அதற்கு பதில் சொல்கிற பணிவையும் ஏற்படுத்த முடியும்.
இது எல்லா இசையமைப்பாளர்களாலும் பின்பற்றப்படுகிறது.
இதிலும் இவரது உத்திகள் குறிப்பிடத்தக்கவை.

 ‘அக்கரைச்சீமை அழகினிலே’ என்ற ‘ப்ரியா’ படப்பாடலின் பல்லவியில் குரலைத்தொடரும் வயலின் இசையைக்கவனியுங்கள்.
‘சுந்தரி...கண்ணால் ஒரு சேதி’ என்ற ‘தளபதி’ படப்பாடலின் பல்லவியில்,
குரலோடு இழையும் குழலிசையைக்கவனியுங்கள்.
இது போல, ‘நினைவோ... ஒரு பறவை’ என்ற  ‘சிகப்பு ரோஜாக்கள்’ படப்பாடலில் ஹம்மிங்கை மேல்ஸ்தாயிலும்,
‘பூ மாலையே...தோள் சேரவா’ என்கிற ‘பகல்நிலவு’ படப்பாடலில் கீழ்ஸ்தாயில் குரலை பயன்படுத்துகிற விதமும்,
இதற்கான உதாரணங்களில் சில.


திரைப்படத்தின் உத்தியான ‘டிஸால்வ்’ [ dissolve ] என்கிற பிம்பங்கள் ஒன்றொடொன்று கலந்து கரைந்து மீள்கிற உத்தியை,
இவர் இசையில் கையாள்கிற விதம் அழகானது.
‘நத்திங் பட் விண்ட்’ [ Nothing But Wind ] என்கிற
இசைக்கோலத்தில் வரும் இசையில்,
இவரது குழல்கள் ஒன்றொடொன்று ‘டிஸால்வ்’ ஆகிற விதம் கவனிக்கத்தகுந்தது.
இதன் ஜனரஞ்சகமான உதாரணமாக,
‘ராக்கம்மா...கையைத்தட்டு’ என்ற  ‘தளபதி’ படப்பாடலை,
தேவாரப்பாடலுடன் இணைக்கிற இடத்தைச்சொல்லலாம்.
 ‘நவீன வரைகலை’ உத்தியில்,
உருவம் படிப்படியாக மாறுகிற உத்தியை,
இசையின் ஸ்வரங்களில் நிகழ்த்துகிறது மேற்சொன்ன பாடல்.

இந்த உத்திகள் தவிர்த்து,
ராகங்களை கையாள்கிற லாவகம் இவரது மேதைமைக்கு
எளிய உதாரணங்கள்.
மோகன ராகத்தில் ‘நின்னுகோரி...’ வர்ணத்தை அந்தப்பெயரிலேயே
பல்லவியாக வைத்து இயற்றிய ‘அக்னி நட்சத்திரம்’ படப்பாடலில்,
மோகனத்தின் ஸ்வரங்களை கையாள்கிற விதம் அழகானது.  
பரதக்கலையின் உடல்மொழியென பாவிக்கப்படவேண்டிய
ராகத்தின் லட்சணங்களை,
இவர் ஒரு ஜிம்னாஸ்டிக் கலைஞனின் லாவகத்தோடும்,
அழகோடும் வெகு சாதாரணமாக கையாளும்போது,
மிகுந்த ஆச்சரியம் உண்டாகிறது.
அதே நிலையில் இது தவறானது என்று பழம் பண்டிதர்களின் விமர்சனத்திற்கும் ஆளாகிறார்.

எந்த ஒரு கலையும் காலத்தின் இயங்கும் தன்மைக்கேற்ப அடுத்தப்பரிமாணத்தை அடைவது தவிற்க இயலாது.
 ‘ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றையும் பாதிக்கிறது; பாதிக்கப்படவும் செய்கிறது’ என்கிற  ‘இயற்கையின் இயக்கவியல்’ பற்றிய 
மாமேதை  ‘பிரடரிக் எங்கெல்ஸின்’ மேற்கோளின்படி, 
நாகரீகம் - அதன் பயனாக இயந்திர மயமாகும் வாழ்க்கை, நகரமயமாகுதல், அதைத்தொடர்ந்து வாழ்வின் செயல்பாடுகளில் தொற்றிக்கொள்ளும் வேகம் - இவை யாவும் கலையின் பண்புகளை பாதித்து மாற்றுகின்றன.
எனவே ராகங்கள், தமது அடுத்த வளர்ச்சியாக,
இறுகிய முட்டைக்கூடுகளை உடைத்து...
சிறகு முளைத்து பறப்பது அவசியமானது.
உணர்வு சார்ந்து, காலந்தோறும் உயிர்த்து வருகிற ராகங்களை,
பண்டிதக்கோட்பாடுகளெனும் அடைத்த தாழிகளுக்குள்,
விதையென பராமரிப்பது கேலிக்குறியது !
அவை உரிய விளைநிலத்தில் கலாச்சாரம் சார்ந்து விருட்சங்களென வளர்வது அவசியமானது.

எனவே இளையாராஜாவின் பாடல்களில் ராகங்கள் கட்டுப்பாடுகள் தாண்டி அபிநயிப்பதை,
இலகுவான மொழியாக மாறுவதில் பண்டிதர்களின் கோபம் அவசியமற்றது;
படைப்பின் தீவிர உயிர்ப்பு சக்திக்கு முன் பரிதாபமானதும் கூட !
மேலும் ராகங்களின் கோட்பாடுகளுக்குள் இவர் நிகழ்த்தி காட்டிய ‘சிந்துபைரவி’ , ‘சலங்கை ஒலி’ முதலான படப்பாடல்கள்,
விதிகளை மீறுவதற்கான தகுதி - பாண்டித்யம் இவருக்கு இருப்பதைக்காட்டியது.


எழுதியவர் : செழியன்
நூல் : பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள் ]
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

நண்பர்களே...இளையராஜாவின் பின்னணி இசை குறித்து,
விஸ்தாரமான பார்வையில் செழியன் விவரிப்பதை
அடுத்தப்பதிவில் காண்போம்.

கீழ்க்கண்ட இணைப்புகளில் இளையராஜாவின் பாடல்களை கேட்டு மகிழ்க...

1 அக்கரை சீமை... அழகினிலே

2 சுந்தரி கண்ணால் ஒரு சேதி

3 நினைவோ ஒரு பறவை


6 comments:

  1. பயணங்களில் எப்போதும் இவரே துணை நிற்கிறார்...அது ஒரு சுகானுபவம்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ‘சிங்கம்’...பெரும்பாலும் இந்த ‘சித்தரின்’ பாடல்களை கேட்டுத்தான் பயணிக்கிறது.

      Delete
  2. சொல்லப்பட்ட வளர்ச்சி சிறகடித்து பறப்பது அவசியமானது தான்...

    ReplyDelete
    Replies
    1. மாடி மீது மாடி கட்டி...எம்.எஸ்.வி
      ரம்...பம்...பம்....ஆரம்பம்... இளையராஜா
      இப்போதைய வளர்ச்சி...
      மாமா...டவுசர் கழண்டுச்சு...

      Delete
  3. என் கடவுளைப் பற்றிய அருமையான பதிவு திரு.செழியனுக்கும் உங்களுக்கும் நன்றிகள்.மேலும் சிறு உதவி இந்த புத்தகத்தை அஞ்சலில் பெறுவதற்கான வழிமுறையை கூறவும் ஏனேன்றால் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் அதனால்தான் இந்த வேண்டுகோள்.நன்றி.

    ReplyDelete
  4. நினைவோ ஒரு பறவை இன்னும் அந்த வயசு மறக்க முடியாது!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.