May 10, 2013

இளையராஜா - பாகம் 3


மார்கழியில், குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்குகளில்...
முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைவாசிகளுக்காக...
இசைக்கச்சேரிகள் நடக்கின்றன.
இவற்றில் பாடப்படும் கீர்த்தனைகள் ஏற்கெனவே எழுதப்பட்டவை.
இதன் ராகம், தாளம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை.
இது ஒருவிதத்தில் காலங்காலமாக பிரதியெடுக்கிற வேலை.
நவீன இசைக்கருவிகளுடன் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுகின்ற பாடகனின் வேலையை விட,
கொஞ்சம் கூடுதல் லாவகத்துடன், நேர்த்தியுடன் செய்கிற வேலைதான் இது.
இரண்டுமே முன்தீர்மானம் உடையவை.
ஒத்திகை செய்யப்படுபவை.
பாடப்படும் விஷயங்களை பொறுத்து உள்ளடக்க ரீதியான வித்தியாசம் இருக்கும்.
இரண்டுமே பிரதியெடுக்கிற செயலைத்தான் செய்கிறது.

இவ்வாறு பிரதியெடுக்கிற சங்கீதப்பாடகன், தனது அதிகபட்ச படைப்பாக கல்பனாஸ்வரங்கள் பாடுகிறான்.
அதில் அவன் காந்தாரத்தையும் பஞ்சமத்தையும் அசைப்பது குறித்து சிலாகிக்கின்ற இசைவிமர்சனங்கள்,
திரைத்துறையில் நிகழ்கின்ற உண்மையான இசை முயற்சிகளை கண்டு கொள்வதில்லை.
சிறந்த இசைமுயற்சிக்கு இணையான ஒன்று திரைப்படத்தில் நிகழும்போது அது எப்படி கவனிக்கப்பட முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்ததாகும் ?
மூன்றாம்தரமான வழிபாட்டுப்பாடல், சபாக்களில் ஒலிப்பதால் மட்டும்...
அது எப்படி விமர்சனத்திற்கு உண்டான தகுதியைப்பெறுகிறது ?
திரைப்படப்பாடலில் பயன்படுத்தப்படும் இசை மலிவானது, மேலோட்டமானது என்று எப்படி தீர்மானிக்கமுடியும் ?

இவ்வாறான தீர்மானங்களை உடைத்து, 
உயர்ந்த இசைக்கு ஈடான பல பரிசோதனைகளை இளையராஜா திரைப்படத்தில் நிகழ்த்தி இருக்கிறார்.

இளையராஜா போன்ற தேர்ந்த இசைப்படைப்பாளி தன் ஆழ்ந்த புலமை கொண்டு ஒரு ஸ்வரக்கோவையை எழுதி,
அதனை எந்த இசைக்கருவியில் வாசித்தால் உயிர்ப்பாக இருக்கும் என்று யோசித்து எழுதிய...
ஒரு பாடலின் வயலின் இசைக்கு...
எந்த யோசிப்புமற்று படத்தின் நாயகி தன் பின்புறத்தை ஆட்டுவாள்.
இது எவ்வளவு அபத்தமானது.
ஒரு கலைஞனின் படைப்பு,
அவன் சார்ந்த ஊடகத்தின் உள்ளாகவே கேலி செய்யப்படுகிறது.

ஒரு பொழுதுபோக்கு ஊடகத்துக்குள் சிக்கிக்கொண்டதால் மட்டுமே
இளையராஜா என்கிற கலைஞனை இவ்வளவு பிரலாபிக்க வேண்டியிருக்கிறது.
அவர் கலிபோர்னியாவில் இருந்து இசைத்தொகுதி எழுதுபவராகவோ,
ஐரோப்பிய தேசத்தின் வயலின் கலைஞராகவோ இருந்திருந்தால்
இவ்வளவு பிரயத்தனங்கள் தேவைப்படாது.

நம் அருகில், நாம் பேசுகிற மொழியில் பாடுகிற கலைஞன் என்பதாலேயே நமக்கு நேரும் அலட்சிய உணர்வு கண்டிக்கத்தக்கது.

நம் உடனிருக்கிற கலைஞனின் படைப்பின் ஆழங்களை,
பரிசோதனைகளின் விளைவுகளை கண்டறியும்போதுதான்...
மற்ற பிரதேசங்களின் சாதனைகளை அளவிட முடியும்.
அதை விடுத்து, இசைப்பரிச்சயமே இல்லாமல்,
அதன் சூக்குமங்கள் நமக்கு புரியாது என்பதால்...
வெறுமனே பாராட்டுவது, பட்டமளிப்பது...
எப்படி உண்மையான அங்கீகாரமாக இருக்க முடியும் ?


எழுதியவர் : செழியன் 
நூல்: பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள் ]
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

நண்பர்களே...
ஒரு குறிப்பிட்ட ராகத்தை கச்சேரிகளில் பாடுவதை காலம்காலமாக தவிற்தார்கள் சங்கீத வித்வான்கள்.
காரணம், அந்த ராகம் துரதிர்ஷ்டமானது என்று கருதினார்கள்.
இளையராஜா அந்த ராகத்தில் ஒரு பாடலை இயற்றி கே.ஜே.ஜேசுதாசைக்கொண்டு பாட வைத்து மூடநம்பிக்கையை தகர்த்தார்.
அந்தப்பாடல்...கமல் நடித்த ‘கலைஞன்’ படத்தில் இடம் பெற்ற
 ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா!’

தன் பாடலின் ஸ்வரக்கட்டுக்குள், லயங்களின் மித அதிர்வுக்குள்...
இளையராஜா ஒளித்து வைத்திருக்கும் படைப்பின் சூக்குமங்கள், பரிசோதனைகளை செழியன் விளக்குவதை அடுத்தப்பதிவில் காண்போம்.

கலைஞன் படப்பாடலை காணொளியில் காண்க...


7 comments:

 1. Excellent article.Thank u so much for both the writer as well as the P athivar who brought this to us.Unfortunately my Tamil fonts are not working,that's why I have to admire this in English.
  Well done,Sirs.

  ReplyDelete
 2. செழியன் எழுத்துக்கள், எப்போதும் என்னை மிகவும் வசீகரிப்பவை.
  அதிலும் இக்கட்டுரை இளையராஜா பற்றியது.
  எனவே இக்கட்டுரையை பதிவுலகிற்கு கொண்டு வருவதை கடமையாகக்கருதினேன்.

  நன்றி ஷண்முகப்பிரியன்.

  ReplyDelete
 3. wow...super information.....plscontinues to writting abt ialyaraja sir....

  ReplyDelete
 4. இப்படி எல்லாம் இசைக்கோர்வை வசியம் நம் சங்கீத பூசனங்கள் புட்டுவைக்காமல் இருந்துவிட்டார்களே!ம்ம்

  ReplyDelete
 5. உண்மை தான். கச்சேரிகளில் பாடாத பல ராகங்களில் ராஜாவின் விரல்கள் அழகாக இசை அமைத்து புரசியே செய்துள்ளார். அதிலிருந்து மூடநம்பிக்கை அகல்கிறது. மனதை இலேசாக்கி வானத்தில் பறக்கச் செய்கிறார் ராஜா அவர்கள். இவரது பெருமை ஒருவேளை காலம் கடந்த பின்னே, அவரது காலத்தின் பிறகு துதிக்கப்படும் என்பதாக உள்மனம் சொல்கிறது

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.