Dec 24, 2012

மணிரத்னம், பாரதிராஜா பற்றி இளையராஜா

நண்பர்களே...
நேற்று இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
மொத்த கோவையும் திரண்டு ராஜாவை கேட்க வந்து விட்டது.
வழக்கமான கச்சேரி போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு நிகழ்ச்சியை
நடத்தினார்.
இசை பற்றி ’குறுகிய கால’வகுப்பு எடுத்தார்.


முழுசாகப்பாடப்பட்டது முதல் நான்கு பாடல்கள்தான்.
‘ஜனனீ... ஜனனீ ’ எனத்தொடங்கி ரசிகனை மெய்மறங்க வைத்து  ‘அரஹர...அரஹர மஹாதேவ் ’...பாடலில் உக்கிரம் கொள்ள வைத்தார்.

இதற்குப்பிறகு ராஜா தனது  ‘மலரும் நினைவுகளை’ நினைவு கூர்ந்தார்.
அந்த நினைவு கூறலுக்கு சம்பந்தப்பட்ட பாடலில் சில வரிகள் மட்டும் அவராலும், குழுவினராலும் பாடப்பட்டது.
பிராக்டிஸ் இல்லாமல் பாடப்பட்டதால்,,
குழுவினர் செய்த தவறுகளை...சுட்டி காட்டி மீண்டும் திருத்தி பாட வைத்தார்.


கார்த்திக் ராஜா கேள்விகள் கேட்டு அதற்கு பதில் சொல்வது போல்
மொத்த நிகழ்ச்சியையும் கொண்டு சென்றார் ராஜா.

கார்த்திக் ராஜா : பாரதி ராஜா பற்றி சொல்லுங்களேன்.

ராஜா : இரண்டு பேருமே ஒரே ஊர்.
அதனால் உரிமையுடன் பேசி பாடல் உருவாகும்.
என்னடா ட்யூன் இது...வேற போடு எனகேட்டு வாங்கிப்போவார்.
நான் வேற படத்துக்கு, அவர் ரிஜக்ட் செய்த ட்யூனை உபயோகித்து...
பாட்டு  சூப்பர் ஹிட் ஆனதும் ‘அடடா போச்சே’ என புலம்புவார். 

அவர் என்னிடம்,
சில நேரம் சிச்சுவேஷன் சொல்லும் போது ‘என்னடா இது சிச்சுவேஷன்’ எனச்சொல்லி இருக்கிறேன். 
நானாக ஒரு ட்யூன் போட்டு  ‘இந்த பாடலுக்கு சிச்சுவேஷனை உருவாக்கு’ எனச்சொல்லி...
அவர் அப்பாடலுக்கு சிச்சுவேஷனை உருவாக்கி சூப்பர் ஹிட் ஆனதும் உண்டு. 

கார்த்திக் ராஜா : மணி ரத்னம் பற்றி...

ராஜா :  ‘தென் பாண்டிச்சீமையில தேரோடும் வீதியில’...என்ற பாடல் ட்யூனை கேட்டு விட்டு  இன்னொரு ட்யூன் கேட்டார்.
‘ஆரோரோ ஆரிரோரோ’என வேறொரு ‘தாலாட்டு’ ட்யூனை உருவாக்கி பாடிக்காட்டினேன்.
கேட்டு விட்டு ‘நன்றாக இருக்கிறது...இதை டெம்போ ஏத்தி பாஸ்ட் ட்யூனா மாத்த முடியுமா’ எனக்கேட்டார்.
அந்த ட்யூனில் உருவானதுதான்...
‘ நிலா அது வானத்து மேல...
பலானது ஓடத்து மேல’ என்ற பாடல்.

மணி ரத்னத்துக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது.
தளபதி படத்துக்கு ஒரு பாடலுக்கு ட்யூன் போட்டேன். 
வாலி பாடல் எழுதினார்.
நிறைய பாடல்களை ரிஜக்ட் செய்து அவர் செலக்ட் செய்ததுதான் ‘சின்னதாயவள் தந்த ராசாவே...
முள்ளில் தூங்கிய புது ரோசாவே’ என்ற பாடல்.
எனது தாயார் பெயரில் அந்தப்பாடலை வாலி உருவாக்கியதால்,
 உடனே தேர்வு செய்தார் மணி ரத்னம்.

கார்திக் ராஜா : கமல்ஹாசன் பற்றிச்சொல்லுங்கள்.

ராஜா : கமல்ஹாசன் குரலில் இருக்கும்  ‘பிட்ச்’ அபூர்வமானது.
ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ் செய்து அவரை பாட வைத்தேன்.
ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு பறவை’
அந்தப்பாடலில் அவரது குரலில் இருக்கும் ‘பிட்ச்சை’ மனதில் வைத்துதான் அப்பாடலில் வரும்  ‘ஆலாபனையை’ உருவாக்கினேன்.
பிசிறில்லாமல் அவரும் பாடினார்.

மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும் 
‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’  என்ற பாடல்.
இப்பாடலை  பாட, காலையில் மலையாளப்படத்தில் நடித்து விட்டு...மத்தியானம் வந்து பாடினார்.
அந்த மலையாள பாஷையின் தாக்கத்தில்தான் ‘பன்னீர் புஷ்பங்களே’ என்ற வரியை மலையாளத்தில் உச்சரித்திருப்பார்.
அந்த வரியை உற்று கவனித்தால் உங்களுக்கே தெரியும்.

கார்த்திக் ராஜா :  ‘இசை ராணி’ பர்வீன் சுல்தானா உங்களுக்கு பிடித்த பாடகியாயிற்றே!
அவரை உங்கள் இசையில் பாட வைத்து உள்ளீர்களா? 

ராஜா : மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை  ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர்  ‘எனது இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர்.
பண்டிட் பீம்ஸென் ஜோஷி, பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, 
பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளை பாட வைத்து அப்பாடலை உருவாக்கினேன்.
இந்திய இசை மேதை  ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும் பாராட்டி சிலாகித்து பேசினார்.

 ‘பண்டிட் அஜய் சக்ரவர்த்தியை’  ‘ஹேராம்’ படத்தில் 
‘இசையில் தொடங்குதம்மா’ பாடலைப்பாட வைத்தேன்.

கார்த்திக் ராஜா : கோவையில் உங்களது அனுபவங்கள் ?

ராஜா : கோவையில் எனது காலடி படாத இடமே கிடையாது.
எனது அண்ணன் பாவலர் வரதராஜன்,பாஸ்கருடன் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக தெருத்தெருவாக பாடியிருக்கிறோம்.
இன்று கோவை மாறி விட்டது.
ஆனால் இந்த மண்ணில் எனது காலடித்தடம் அழிக்க முடியாதது.

கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம் வாங்கினேன்.
அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது.



கோவையில் மட்டுமல்ல... ‘இளையராஜாவின் காலடித்தடம்’
தமிழ் கூறும் நல் உலகில் என்றும் அழியாமல் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டே இருக்கும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

9 comments:

  1. Hats off to a great legend named Ilayaraja..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே !
      நிறைய ‘ஐயப்ப சாமிகள்’ நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

      Delete
  2. இசைஞானி இசைஞானிதான்...நிகழ்ச்சியில் இடம்பெற்ற அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா..

    ReplyDelete
    Replies
    1. ராஜாவின் பாடல் கம்போசிங்கில் அமர்ந்த மாதிரி இருந்தது.

      நிறைய பேசினார்.
      அவைகள் அனைத்தும் ஆன்மீக அனுபவங்கள்.
      வாழ்க்கை தத்துவங்கள்.
      நிலை உயரும் போது தடுமாறாமல் தன்னடக்கம் கொளவது எப்படி? என்ற உத்திகள்.

      அவற்றையே தனிப்பதிவாக்கலாம்.

      நன்றி குமரா.

      Delete
  3. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார். நேரில் பார்க்க முடியாத என்னை போன்றவர்களுக்கு உங்கள் பகிர்வின் மூலம் நேரில் பார்த்ததுபோல் அனுபவம்.

    -விஜய்

    ReplyDelete
    Replies
    1. என்னால் முடிந்த வரை எழுத்தில் கொண்டு வந்துள்ளேன்.

      டிவியில் கட்டாயம் ஒளிபரப்பாகும்.
      பார்த்து இன்புறுங்கள்.

      Delete
  4. //டிவியில் கட்டாயம் ஒளிபரப்பாகும். பார்த்து இன்புறுங்கள்.//
    எந்த டிவி என்று அதையும் சொல்லிடுங்க சார்.முன்னேற்பாட இருப்போம் இல்ல.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.