



21 வயது புரட்சிப்பெண் சோஃபி ஸ்கால்.நாஜிக்கும்பலை எதிர்த்து உருவான இயக்கம் ஒயிட் ரோஸ்.கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் போராடும் இயக்கம்.இந்த இயக்கத்தில் தனது சகோதரன் ஹன்ஸ் ஸ்காலுடன் இணைந்து போராடுகிறாள் சோஃபி. நாஜிக்கும்பலைக்கண்டித்து ஒரு நோட்டிஸ் ஒன்றை தயாரித்து மியூனிச் யூனிவர்சிட்டி வளாகத்தில் பரப்புகின்றனர் இருவரும்..நாஜிகும்பல் கைது செய்து விசாரிக்கின்றனர்.முதலில் குற்றத்தை மறுத்த சோஃபி ஆதாரங்களை அள்ளி வீச ஒத்துக்கொள்கிறாள்.விசாரணை அதிகாரி சரியான விடாக்கண்டன்.மொத்த இயக்கத்தையும் காட்டிக்கொடுக்கும்படி வலை விரிக்கிறான்.சிக்காத இந்த சிங்கக்குட்டி சாதிக்கிறாள் தானும் தமையனும் மட்டுமே பொறுப்பு என்று உறுதி காட்டுகிறாள் இந்த ஜெர்மன் நாட்டு வேலு நாச்சியார்.குற்றத்தை உறுதி செய்து கோர்ட்டுக்கு அனுப்புகிறான் அதிகாரி.

ஹிட்லரின் அடிவருடிகளே ஜட்ஜ்...அரசு வக்கீல்...குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் வக்கீல் கூட...எப்படி நீதி கிடைக்கும்??????
மரண தண்டனை பரிசாக கிடைக்கிறது .
வழக்கமாக தீர்ப்பு வழங்கப்பட்டு 99 நாள் கழித்துதான் தண்டனை நிறைவேற்றப்படும்.இந்த புரட்சி வீரர்களை அன்றேக்கொல்ல பேயாட்சி..... சாத்திரம் விதிக்கிறது.இறுதியாக தன் பெற்றோரை சந்திக்கிறாள் இந்த வீரமங்கை.இந்த ஒரு காட்சி போதும் உலகில் உள்ள அத்தனை அவார்டுகளையும் அள்ளிக்கொடுக்க......
இந்த காட்சியை விவரிக்க என் தமிழ் தாயே.....தமிழில் உள்ள அத்தனை வார்த்தைகளையும் எனக்கு வழங்கு.....
பெருமையில் கன்னம் பூரிக்க...பெருமித்தில் நெஞ்சு விடைக்க...கண்கள் மட்டும் கண்ணீரில் மிதக்க.. மகளை வாரியணைக்கும் பெற்றோர்....சிங்கங்களைப்பெற்ற சிங்கங்கள் அல்லவா!!!!!!!!!
கொலைக்களத்தில் கில்லட்டில் தலை கொடுக்க வீர நடை போட்டு செல்லும் போதும் சொல்கிறாள் ஒரு சொல்.. “வானத்தில் இன்னும் சூரியன் பிரகாசமாக இருக்கிறான்”
இந்த நல்ல உயிர்களை பறிக்க நாஜி எடுத்துக்கொண்ட நாட்கள் நான்கே நான்கு நாட்கள்.நோட்டிஸ் வீசப்பட்ட நாள்..... 1943 பிப்ரவரி 18.....உயிரைப்பறித்த நாள் 1943 பிப்ரவரி 22.....

வீரவணக்கம்....வீரவணக்கம்...சோஃபி ஸ்காலுக்கு வீரவணக்கம்.