May 17, 2013

பின்னணி இசைக்கு ராஜா...இளையராஜா - பாகம் 9


பாடல்கள் குறித்து ஒரு சில விமர்சனங்கள் மேலோட்டமாக நிகழ்ந்த போதும்,
திரைப்படத்தின் பின்னணி இசையாக [ background scoring ] ,
இளையராஜா நிகழ்த்திய சாதனைகள் கவனிக்கப்படாதவை.
ஏனெனில், பாடல்கள் திரையரங்குகளை கடந்து வெளியிலும் ஒலிக்கின்றன.
ஆனால் இந்தப்பின்னணி இசை திரையரங்கில் ஒலித்து,
பிலிம் சுருளுடன் தகரப்பெட்டியில் தூங்கி விடுகிறது.
அயல்நாடுகளில் வெளியிடுவது போன்று,
ஒரு படத்தின் பின்னணி இசையை,
தனி ஒலியிழையாக வெளியிடும் வழக்கம் நம்மிடையே இல்லை.
ஏனெனில், நம்மில் பெரும்பாலான இசையமைப்பாளர்கள்,
படத்தில் வருகிற பாடலின் மெட்டையே...
பின்னணி இசையாக வாசிக்கும் பழக்கம்,
நம் தமிழ் சினிமாவில் இருக்கிறது.
இந்தப்பாணியை இளையராஜாவும் கையாள்கிறார் என்ற போதிலும், அதையும் கடந்து சில சூழல்களுக்கு இவர் எழுதும் இசை அற்புதமானது.


‘ஹேராம்’ படத்தில் ‘நீ பார்த்த பார்வை...’ என்ற பாடலின்,
ப்ரீலூட் [ prelude ] ஆக வரும் பியானோவும், குரலும் இழைந்து வருகிற இசை,
நினைவுகள் மீள்கிற உணர்வையும் கடந்து,
அது தரும் அனுபவங்கள் வித்தியாசமானவை.
‘மகாநதி’ படத்தில் நாயகன்,
தன் மகளை விபச்சார விடுதியில் கண்டு கொண்டதும்,
மேலெழுகிற இசை எவ்வளவு உணர்வுபூர்வமானது !


நம் சினிமாவில் அதிகமாக பயன்படுத்தப்படும்,  ‘காதல் சூழலில்’,
இவரின் இசை குறிப்பிடத்தகுந்த இடத்தினை வகிக்கிறது.


‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்,
நாயகியிடம் தன் காதலைச்சொல்ல கடிதம் தூக்கியெறிகிற
'தொடர்ச்சியான காட்சித்துணுக்குகளில்' [ montage sequences ]
‘ஸஸமம ஸாஸஸாஸ’   எனத்துவங்கும் ஸ்வர வரிசைகள்,
காதல் வேண்டும் மனநிலையையும், கடிதத்தை நாயகி மிதித்ததும்...
ஆணின் குரலாக மேலெழும்பித்தணிகிற இசை தரும் உணர்வு அழகானது.



அதே படத்தில் வேறொரு காட்சியில்,
நாயகி மரத்தில் பெயரெழுதுகிறாள்.
நாயகன் பார்க்கிறான்.
இருவருக்குமிடையிலான தூரத்தை,
தயங்கிக்கொண்டே நெருங்க விரும்புகிற...
மனத்தவிப்பை, வயலின் இசையால் நிரப்புகிறார்.
இக்காட்சியில்,
வெறுமனே ‘ஒலிக்கான பாதையை’ [ sound track ] தவிர்த்து விட்டால்,
சாதாரணக்காட்சியை எவ்வாறு உயிருள்ளதாக இவரது இசை மாற்றி இருக்கிறது என்ற வித்தகம் நமக்குப்புரியும்.
இவை எளிதில் அடையாளம் காணச்சொல்லப்பட்ட உதாரணங்கள்.

பாடல்களை விடவும் இவரது பின்னணி இசை வலிமையானது.
ஏனெனில் பாடல்கள் அதன் ஸ்வரக்கட்டிலும், லயக்கோர்வையிலும் ரசிகனைச்சென்று சேர வேண்டிய - அவனை உற்சாகப்படுத்த வேண்டிய -
அம்சங்களை கருதி இயற்றப்படுபவை.
ஆனால் பின்னணி இசை,
முழுக்க முழுக்க இசையமைப்பாளரின் ஆளுமையை நிரூபிக்கத்தகுந்த முயற்சிகளாகவே இருக்கும்.
எனவே இளையராஜாவின் இசையை அளவிடும்போது,
அவரது பின்னணி இசையையே முதன்மையாக கருத வேண்டியது அவசியம்.

இதிலும் உள்ள ஒரு சிக்கல் என்னவெனில்,
வியாபார ரீதியாயாக எடுக்கப்படும் நமது திரைப்படங்கள்,
உள்ளூர ஒரு வேகம் [ pace ] கொண்டவை.
 ‘காட்சித்துணுக்குகள்’ [ shots ] வேகமாக வெட்டப்படுவதையே
நம் இயக்குனர்கள் பழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ஒரு காட்சியில் அதிகமான ‘காட்சித்துணுக்குகள்’ [ shots ] இருப்பதே,
காட்சியை வேகமாக நகர்த்த உதவும் என்ற மூடப்பழக்கம் பெரும்பான்மையான இயக்குனர்களுக்கு இருக்கிறது.

நிலைத்த காட்சிகளான ‘மிஸான் சேன்’ நமது திரைப்படங்களில் குறைவு.
[  ‘மிஸான் சேன்’ என்பது, ஒரு காட்சியை துண்டு துண்டாக கூறு படாமல்,
ஒரே  ‘ஷாட்’ [ shot ] ஆக எடுப்பது ]
‘மிஸான் சேன்’ காட்சியின் மீது,
பார்வையாளனுக்கு நிலைத்த ஓர்மை வருமென,
பிரஞ்சு ‘புதிய அலை’ திரைப்படக்கொள்கையாளர்கள் நம்பினர்; பின்பற்றினர்.

இவ்வாறு நறுக்கப்பட்ட காட்சிக்கூறுகளை,
ஒரு இசையமைப்பாளர் தனது பின்னணி இசையால் பிணைக்கிறார்.
வர்த்தக சினிமாவில் வேகம் கருதி வைக்கப்படும்,
சிறு சிறு துண்டுக்காட்சிகளுக்குள், பொருத்தமான இசையை எழுதுவது என்பது நிச்சயம் கடினமானது.
இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட நேர வரையறைக்குள்,
ஒரு துவக்கத்தையும் - முடிவையும் கொண்ட
‘இசைக்குறிப்பை’ எழுத வேண்டும்.
இது தன்னிச்சையாக ஒரு ’இசைத்தொகுதிக்கு’,
சுதந்திரமாக  ‘இசைக்குறிப்பு’ எழுதுவதை விட மிகக்கடினமானது.

இத்தனை எல்லைகளை மீறி,  பின்னணி இசைக்கு...
ஒரு சிறந்த  ‘இசைக்குறிப்பை’ எழுதுவது என்பது மிகச்சவாலானது.
இதனால்தான் சாஸ்திரிய இசைக்கலைஞர்கள்,
திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைப்பது என்பது பெரும்பாலும் தோல்வியாகவே முடிந்திருக்கிறது.

 ‘முதல் மரியாதை’ படத்தில்,
குழல் இசைக்கிற மாட்டிடையன் தனது காதலி இறந்ததும்,
பைத்தியமான மனநிலையில்,
நெருக்கமாக இழையும் பட்டுப்புழுக்களை பார்க்கிறான்.
தலைக்குள், புழு ஊர்கிற மாதிரி...
‘டிஸ்கார்டு’ [ dischord ] போன்ற அபஸ்வர ஒலிகளால்,
இக்காட்சிக்கு இளையராஜா தரும் ‘சப்தப்படிமம்’ [ sound image ] துல்லியமானது.
இவ்வாறான உதாரணங்கள்,
அவர் இசையமைத்த ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் இருந்து சொல்லலாம்.

எழுதியவர் : செழியன்
நூல் : பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

நண்பர்களே...
செழியன் எழுதிய இத்தொடரின் இறுதி பாகத்தை,
அடுத்தப்பதிவில் காண்போம்.
    

12 comments:

  1. நண்பரே...இன்னும் ஒரு பதிவுக்கான செய்தி மட்டுமே உள்ளது.
    2002ல் செழியன் இக்கட்டுரையை கணையாழியில் எழுதி இருக்கிறார்.
    இதற்கு பின்னால் வந்த படங்களில், ராஜாவின் பங்கை யாராவது ஆய்வு செய்து எழுத வேண்டும்.

    காத்திருப்போம்.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. வார்த்தை கோர்வைகளில் சந்தேகம் வந்தது நீங்க எழுதும் ஸ்டைலை மாத்தீட்டீங்களோன்னு... ரசனை மிக்க பதிவுகள். good review.

    ReplyDelete
    Replies
    1. எனது நடை தினத்தந்தி பாணி.
      இது கணையாழி பாணி.
      உலகசினிமா, இசை,ஒளிப்பதிவு,இலக்கியம் என எல்லா துறையிலும் ஜொலிக்கிறார்.
      இந்த ஆளுமை செழியனுக்கு மட்டுமே கைகூடி வந்துள்ளது.

      Delete
  3. //பாடல்கள் திரையரங்குகளை கடந்து வெளியிலும் ஒலிக்கின்றன.
    ஆனால் இந்தப்பின்னணி இசை திரையரங்கில் ஒலித்து,
    பிலிம் சுருளுடன் தகரப்பெட்டியில் தூங்கி விடுகிறது.//

    வாஸ்தவம்தாங்க ...! இதோ இப்ப படிச்ச பின்னாடிதான் அட ஆமல்லன்னு தோணுது . ரசிக்குரதுக்கும் , ரசிச்சத மத்தவங்க ரசிக்குற மாதிரி சொல்றதுக்கும் எழுதுறதுக்கும் கூட ஒரு திறம வேணும்போல ...!

    செழியன் அவங்களுக்கும் , ஒங்களுக்கும் ரெம்ப நன்றிங்கோ ...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்...கருத்துக்கும்...நன்றி ஜீவன் சுப்பு அவர்களே.

      Delete
  4. இராசாவின் இசைக் கோர்வை தொடர்பாக பல்கலைக்கழக ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இவை கோட்பாடுகள் சார்ந்த புதிய பரிமாணங்களை இசை ஆர்வலர்களுக்குத் தரும். நம் காலத்தில் வாழும் இசைமேதை இளையராசா அவர்களை அவர் வாழும் காலத்திலேயே மதிப்பளிக்கும் மானுட செயலை தமிழ்ச் சமூகம் சார்பாக சுயமாக இயங்கும் பதிவர்களின் மற்றும் முகநூல் பதிவர்களின் தன்னியல்பான கூட்டால் செய்யவேண்டும்.
    செழியனின் நூல் தொடர்பான விபரணத்தை தங்கள் பதிவினூடாகவே நான் அறிந்தேன். இராசாவின் உலகளாவிய இரசிகர்களில் நானும் ஒருவன். இவரது பின்னணி இசைக்கோர்வைகள் சிலவற்றை அவுத்திரேலியாவிலிருந் பணியாற்றும் பதிவர் கானப்பிரபா தனது வலைப்பூவில் இட்டுள்ளார்.
    உ-ம்: நாயகன் பின்னணி இசைத் தொகுப்பு : http://www.radio.kanapraba.com/?p=380

    ReplyDelete
    Replies
    1. /// இராசாவின் இசைக் கோர்வை தொடர்பாக பல்கலைக்கழக ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் ///

      நண்பர் முகிலனின் கருத்தை, செழியனும் தெரிவித்து உள்ளார்.
      இசை ஞானமும்... தமிழில் புலமையும்...
      ஒருங்கே இணையப்பெற்றவர்கள் இப்புனித வேள்வியை முன்னெடுத்துச்செல்ல வேண்டும்.

      காத்திருப்போம்.

      Delete
  5. அருமையான பதிவு நன்றி .........

    ReplyDelete
  6. என்னைப் பொறுத்தவரையில் பாடல்களில் விட பிண்ணனி இசையில் ராஜா ராஜாதான். ஒரு 3 மணிநேரம் பொறுமையாக உட்கார்ந்து படம் பார்க்க வேண்டுமானால் காட்சி அமைப்புகளுக்கு ஏற்ற பிண்ணனி இசையும் மிக முக்கியம். உதாரணமாக இதயத்தை திருடாதே. காட்சியமைப்புகளுக்கு ஏற்ற அற்புதமான பிண்ணனி இசை அமைத்திருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. இதயத்தை திருடாதே படத்தில் ஒரு காட்சியில்...ஒரு மிகப்பெரிய ஹாலில் பனி தவழ்ந்து வரும்.
      அதற்கு ராஜா போட்ட பின்னணி இசையில்...
      பனியின் வேகமும்...குளிர்ச்சியும் ஒருங்கே இருக்கும்.

      ‘ஓ...பாப்பா லாலி...என்ற பாடலில்,
      பனியின் குளிர்ச்சி உணர்த்தும் விதமாக இசையை வடிவமைத்திருப்பார்.

      Delete
  7. ஆஹா அந்த கனையாழி படிக்ககாத குறையை உங்கள் பகிர்வு போக்கு கின்றது தொடரட்டும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.