நண்பர்களே...
இணையத்தில் எழுதுபவர்களெல்லாம் குப்பைகள் என
எழுத்தாளர் ஜெயமோகன் புகழ்ந்து சொல்லிவிட்டார்.
அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
சத்தியசந்தன்.
ஞானப்பால் குடித்தவர். இணைய எழுத்தாளர்களை ஜெயமோகன் புகழ்ந்த கட்டுரையை படிக்க ‘இங்கே சுட்டவும்’. லூயி புனுவல் என்ற திரை மேதை உருவாக்கிய ‘நஸரின்’ என்ற திரைப்படத்தை,
‘கடல்’ என்ற திரைப்படத்தின் கதையாக்கி காவியமாக்கிய மாயவித்தைக்கு சொந்தக்காரர்.
அவரது உள்ளொளியைக்காண என்னைப்போன்ற சாமானியர்களுக்கெல்லாம் ஞானக்கண் கிடையாது.
எழுத்தாளர் பைரவன் அவர்களை இன்றைய தலைமுறைக்கு அவ்வளவாகத்தெரியாது.
எழுத்தாளர் பைரவன்தான்...ஜெயமோகனுக்கு குரு.
ஆனால் தனுது குருவை ஜெயமோகன் என்றுமே காட்டிக்கொடுக்க மாட்டார்.
அவ்வளவு தன்னடக்கம் மிக்கவர்.
இந்த ராணுவ ரகசியத்தை தோண்டி எடுத்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்குவதில் பெருமை கொள்ளும் எருமை நான்.
எழுத்தாளர் ஜெயமோகனது குருவின் சாகசங்களை...தடாலடிகளை...காணொளியில் கண்டு மகிழுங்கள்.
எழுத்தாளர் ஜெயமோகன் இணைய எழுத்தாளர்களை பாராட்டி புகழ்ந்ததுக்கு
ஒரு நண்பர் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவு எழுதி உள்ளார்.
நண்பர்களே...
இளையராஜாவும், அவரின் குரு தன்ராஜ் மாஸ்டரின் புகைப்படத்தை நான் வெகுநாட்களாக தேடி வந்தேன்.
இன்றுதான் இப்படத்தை காணும் பாக்கியம் கிட்டியது.
இப்படத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் இணையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
மேலும் இப்புகைப்படம் கிடைக்கப்பெற்ற பதிவின் இணைப்பையும் கொடுத்துள்ளேன்.
இளையராஜாவைப்பற்றி 30க்கும் மேற்ப்பட்ட பதிவை எழுதி ஒரு தொடராக வெளியிட்டு வருகிறார் ‘பால்ஹனுமான்’ என்ற பெயரில் எழுதி வரும் பதிவாளர்.
அவருக்கு என் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Hey Ram \ 2000 \ INDIA \ ஹேராம் = 034 ‘கமல்ஹாசன் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவோடு பேசிக்கொண்டிருக்கிறார்... சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்... சூதாடிக்கொண்டு இருக்கிறார்... இடர்கள் மிகுந்த அதன் ஒவ்வொரு குகையாகத்தட்டி திறந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழில் சினிமா மொழியை உருவாக்குவதற்காக, அதன் கலா பூர்வமான வேர்களை உயிர்பிப்பதற்காக அவர் தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார். இன்று தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மாதிரிகளாக கருதப்படும் அனைத்தும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கமல்ஹாசன் பரிசோதித்து பார்த்ததின் நீட்சியே’ - மனுஷ்ய புத்திரன்.
நண்பர்களே...
ஹேராமில், ராம் - மைதிலி திருமணக்காட்சிகள்,
அய்யங்கார் திருமணச்சடங்குகளை மிகச்சிறப்பாக பதிவு செய்ததை,
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மிகவும் சிலாகித்து பாராட்டி எழுதி இருக்கிறார்.
அம்புஜம் கதாபாத்திரத்தில் ஹேமமாலினி அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
கண்ணாலேயே கணவனுக்கு கட்டளை பிறப்பிப்பதும்,
கட்டளைகளை சரியாக உள்வாங்கி உப்பிலி அய்யங்கார் ‘ஆடுவதும்’ ...
கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
‘வைஷ்ணவோ ஜனதோ... தேனே கஹியேஜெ... பீடு பராயி ஜானேரே’
என, பெண் பார்க்கும் படலத்தில்...
மைதிலி, காந்திக்கு பிரியமான பாடலைப்பாட,
மைதிலியின் பெற்றோர் பெருமிதத்தில் பூரிப்பார்கள்.
மைதிலியின் குடும்பமே காந்தியின் பக்தர்கள் என்பதை இக்காட்சியிலேயே
எஸ்டாபிளிஷ் செய்திருக்கிறார் இயக்குனர் கமல்.
ராம் - மைதிலி கண்கள் கலந்து திருமணம் நடக்கிறது.
சாப்பாட்டுப்பந்தி நடக்கும் போது,
மொட்டை மாடியில் நண்பர்களோடு உரையாடுகிறான் ராம்.
ராமின் முகத்தில் கல்யாணக்களையே இருக்காது.
வேதா : என்ன...கல்யாண மாப்ள யோசிச்சிண்டிருக்கே ? ராம் : இங்க சாவகாசமாக என் கல்யாணம் நடந்திண்டிருக்கு. டெல்லியில ஒரு பெரிய விவாகரத்தே நடந்துண்டிருக்கு. ‘வேர்ல்டு பிக்கஸ்ட் பொலிட்டிக்கல் டிவ்வோர்ஸ்’ யக்ஞம் : சரி...தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சு. இந்த பாக்கிஸ்தான் பிரிஞ்சது நல்லதுங்கறேன் நானு. அந்த ரேட் கிளிஃப் செறங்கை நறுக்கி எறியற மாதிரி சர்ஜரியே பண்ணிட்டான். வேதா : யாருடா அந்த ரேட் கிளிஃப் ? யக்ஞம் : என் சித்தப்பா. வேதா : ஓஹோ... யக்ஞம் : என்னடா ஒத்துக்கறான். வேதா : சரி...ஒத்துக்கல. யாருடா அது ? ராம் : இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் பிரிக்கிற கோடு எதுன்னு நிர்ணயம் பண்ணின மகானுபாவன்.
இக்காட்சியில் உள்ள வசனத்தின் மூலம் ராம்-மைதிலி திருமணக்காலத்தை கணக்கிடலாம்.
மேலும் பிரிவினையை ஆதரிக்கும் பாத்திரமாக ‘யக்ஞம்’ காரெக்டரையும்,
பிரிவினையில் உடன்பாடில்லாத பாத்திரமாக‘ராம்’ காரெக்டரையும் படைத்துள்ளார் படைப்பாளி கமல்.
பிரிவினையில் முரண்பட்ட கருத்துக்கள் இந்துக்களிடம் நிலவியதை இக்காட்சி சித்தரிக்கிறது.
முஸ்லீம்களிடமும் முரண்பட்ட கருத்துக்கள் இருந்த்தை ‘அம்ஜத்’ காரெக்டர் மூலம் சித்தரிக்கப்பட்டிருப்பதை பின்னால் பார்க்க இருக்கிறோம்.
இந்திய - பாக்கிஸ்தான் எல்லைக்கோட்டை வகுத்த ரேட் கிளிஃப் பற்றி மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவை அணுகவும்.
வசந்தா மாமி மயக்கமாகிறார்.
யக்ஞம் டாக்டர் என்பதால் பரிசோதிக்கிறான்.
இக்காட்சியில் ‘ஸ்கிரிப்ட்டில்’ உள்ள சில வசனங்கள்,
சென்சாரால் நீக்கப்பட்டு உள்ளது.
அந்த வசனங்களை ‘அடித்து’ அடையாளப்படுத்தி உள்ளேன்.
யக்ஞம் : மாமி, 24 மணி நேரம் இருக்குமா... நீங்க கடைசியா சாப்டு ?... ம்...பட்னி... உங்களுக்கு எதுக்கு இந்த வயசில காந்தி விளையாட்டெல்லாம் ? வேலையெல்லாம் ?
அம்புஜம் : என்ன சொல்றார் ? மஹாத்மாவை கேலி பேசற மாதிரி இருக்கே ? பாஷ்யம் : இவா வம்சமே அப்படித்தான். லோகம் பூரா ஒண்ண ஒத்துண்டாலும்...இவா ஒத்துக்க மாட்டா. என் ஒறவுக்காரன். ம்...காந்தி என்ன...பகவானையே கேலி பேசுவான். யக்ஞம் : ம்...உறவுக்காரரே... ‘ஐ யாம் ஜஸ்ட் பீயிங் பிராக்டிகல். மாமி...நான் மகாத்மாவை கேலி பேசல. ‘ஆஸ் எ டாக்டர்’...இந்த மாதிரி ஒடம்ப கவனிச்சுக்காம பட்னி கெடக்கறது தப்புன்னு சொல்றேன். அவ்வளவுதான். அம்புஜம் : நானும் நீங்களும் பட்னி கெடந்தா, மாமி மாதிரி மயக்கம்தான் வரும். மஹாத்மா பட்னி கெடந்தா சுதந்திரம் வரும். நீங்க சாப்பிட்டேளா ? யக்ஞம் : [ நக்கலான விமர்சனம் புரிந்தவனாய்...அசடு வழிய ] வயிறு திம்முன்னு நெறஞ்சுடுத்து. அம்புஜம் : அது ‘கேஸ்’ஆ இருக்கும்...போய் சாப்ட்றுங்கோ.
வசந்தா மாமி கலகலன்னு சிரிக்க இக்காட்சி நிறைவு பெறுகிறது.
இக்காட்சியில் காந்தியின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களை
கமலின் கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
காந்தியின் உண்ணாவிரதப்போரட்டம்,
அந்தக்காலத்திலேயே விமர்சிக்கப்பட்டதை...
யக்ஞம் கதாபாத்திரம் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது.
காந்தியை எந்த விமர்சனமும் இல்லாமல் பக்தர்கள் போல்,
அவரது கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதை அம்புஜம் கதாபாத்திரம் மூலம் எடுத்துக்காட்டி உள்ளார் கமல்.
இக்காட்சியில் போட்டி போட்டு யக்ஞமாக நடித்த ஒய்.ஜி. மகேந்திரனும்,
அம்புஜமாக நடித்த ஹேமமாலினியும்,
பாராட்டுக்குறியவர்கள்.
வைஷ்ணவோ ஜனதோ & வாரணம் ஆயிரம் பாடலையும்... திருமணக்காட்சிகளையும் காணொளியில் காண்க...
நண்பர்களே...
அரை நூற்றாண்டுகளாக தமிழர்களின் செவிக்குணவளித்த...
‘அழகிய தமிழ் மகன்’ நேற்று தனது இசை மூச்சை அடக்கிக்கொண்டான்.
இரண்டு திலகங்களுக்கு குரல் கொடுத்த நாவுக்கரசன் அவன்.
இனியும் அவர்களுக்கு குரல் கொடுப்பேன் என விண்ணுலகம் ஏகி விட்டான்.
அவன் விட்டுச்சென்ற குரலில் பாடி, மண்ணுலகம் என்றும் மகிழ்ந்திருக்கும்.
நான் ஆறாவது வகுப்பு படித்த நேரம்.
திருச்செந்தூர் கோவிலில் ஆவணி மாதத்திருவிழா.
டி.எம்.எஸ். கச்சேரி என்றதும் நெல்லை மாவட்டமே திரண்டு வந்து விட்டது.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஆணைப்படி டி.எம்.எஸ் அவர்கள் பக்தி பாடல்கள் மட்டும் பாடினார்.
வந்திருந்த கூட்டமோ, சினிமா ரசிகர்கள் கூட்டம்.
‘சினிமாப்பாட்டு பாடு’ என ஆர்ப்பரித்தது.
கூட்டத்தினரின் வெறிக்கூச்சல் கட்டுக்கடங்காமல் போகவே,
போலிஸ் தடியடி நடத்தியது.
கூட்டம் கலைந்து ஓடியது.
உட்கார்ந்து பாடிய டி.எம்.எஸ் எழுந்தார்.
மைக்கை கையில் எடுத்தார்....பாடினார். “ லவ் பண்ணுங்க சார்...நான் வேணாங்கல... அது லைப் பிரச்சனை சார்...அது விளையாட்டல்ல...”
லத்தியால் துரத்தி அடித்த காவல்துறையினர் நின்றனர்.
திகைத்தனர்.
ஓடிய ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்து திரும்ப வந்தது.
பாடலை பாடி முடித்த டி.எம்.எஸ்,
ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“ நீங்கள் அடிபடுவதை காணச்சகியாமல்தான் சினிமா பாட்டைப்பாடினேன்.
உங்களுக்காக சினிமாப்பாடலையும் பாடுகிறேன்.
ஆனால், அடுத்த பாடல் எனக்காக என் முருகப்பெருமானை துதித்து பக்திப்பாடல் பாடுவேன்.
ஒத்துழைப்பு தாருங்கள்” என்றார்.
அதே போன்று மாற்றிமாற்றி பாடி விழாவை நிறைவு செய்தார்.
அதிலும் எம்ஜியார்,சிவாஜி படப்பாடல்களை சம அளவில் கலந்து பாடினார்.
“ பாட்டும் நானே...பாவமும் நானே...” பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன்... உச்சரித்து நடிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த டி.எம். சவுந்தர் ராஜன்...” ஆஹா...ஆஹா...பொற்காலத்தில் அல்லவா வாழ்ந்திருக்கிறோம் ! இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த ‘சங்கங்களை’ ... என்றும் நினைவில் நிறுத்துவோம்.
HEYRAM \ 2000 \ INDIA \ ஹேராம் = 033
நண்பர்களே...
ஹேராம் தொடரை தொடர்ந்து எழுதாமல்,
‘டிமிக்கி’ கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இனி ஹேராம் தொடர், நிற்காமல் தொடரும் என உறுதியளிக்கிறேன்.
ஹேராம் தொடர் கற்றுக்கொடுத்த மிக முக்கியமான பாடம் இதுதான்... “ புதிய கருத்துக்கள் வளர வேண்டும் என்பதற்காக, எத்தனை கருத்துக்கள் வெட்டி வீசப்பட வேண்டும் ! இலக்கை சரியாக அடைவதற்கு, எத்தனை முறை குறி வைத்து அடிக்க வேண்டும் !! ” ‘ நடிகனின் பிரதான நோக்கம் ஒரு மனித ஆன்மாவின் வாழ்வை, மறு உருவாக்கம் செய்வது மட்டுமல்ல ; மாறாக, அதை ஒரு அழகான கலை நுட்பமான வடிவமைப்பில் வெளிப்படுத்துவதும் ஆகும்’ - கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி.
‘ஸ்தனிஸ்லாவ்ஸ்கி’ வகுத்த நடிப்பு இலக்கணத்தை,
ஹேராமில் அனைத்து நடிகர்களும் பின்பற்றியிருப்பதை நாம் காணலாம்.
மிகச்சிறந்த உதாரணம்...சாகேத்ராம் மைதிலியை பெண் பார்க்கும் படலம்.
வேதா என்ற ஒல்லியான இளைஞன், அழைப்பில்லாமல் தெருவிலிருந்து உப்பிலி ஐயங்கார் வீட்டுக்குள் நுழைந்து ராமை தேடுகிறான்.
வேதா : ராமா...ராமா...டேய் ராமா... வேதாடா... என்னடா இது, தாடியும் மீசையுமா ? அசல் பாஷ்யம் மாமா மாதிரியே மாறிட்ட. அவர் மாதிரியே பிரம்மச்சாரியா போகாம, ரெண்டாம் கல்யாணத்துக்கு ஒத்துண்டயே, அது வரைக்கும் சந்தோஷம்.
பாஷ்யமும், வசந்தா மாமியும் வெறுப்போடு அவனை முறைக்கிறார்கள்.
வேதா வசந்தா மாமியும் வந்திருப்பதை உணர்ந்தவனாய்... வேதா : அடடே...வசந்தா மாமி ! சவுக்கியமா இருக்கேளா ? மாமா வரலயா ?
வசந்தா மாமி : வரல... வேதா : ஏன் ? வசந்தா மாமி : வரல... வேதா : அதான் ஏன் வரலன்னு கேக்றன். வசந்தா மாமி : உடம்பு சரியில்ல. வேதா : அய்யய்யோ...உடம்பு சரியில்லயா ? நன்னாத்தானே இருந்தார். வசந்தா மாமி : போடா பிரம்மஹத்தி. ஏழு வருசமா கைகால் வெளங்காம படுத்துண்றுக்கார். வேதா : ஓ... இருக்கட்டும்...இருக்கட்டும். வசந்தா மாமி : இப்ப வந்துட்டான் பெரிசா கேக்கறதுக்கு... போடா அந்தண்ட... பாஷ்யம் : அக்கா... வசந்தா மாமி : இர்ரா...
[ உப்பிலி அய்யங்காரிடம் ] இவன் என்ன உங்களுக்கு ஒறவா ? உப்பிலி அய்யங்கார் : அய்யய்யோ; அக்ரஹாரத்துல இருக்கான். அவ்வளவுதான்.
இந்தக்காட்சியில் தோன்றும்,
வேதா என்ற காரெக்டரை நீங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருப்பீர்கள்.
இவர்களால் உபகாரம் இருக்காது; உபத்திரவம் இருக்கும்.
வசந்தா மாமி, ‘இவன் உங்களுக்கு ஒறவா ?’ என கேட்ட தொனியில் திருமணத்தையே நிறுத்தி விடும் தொனி இருக்கும்.
அதைப்புரிந்து, உப்பிலி ஐயங்கார்...
திருமண ஏற்பாடு நின்று விடப்போகிறதே என்ற பதட்டத்தோடு...
‘அய்யய்யோ ; அக்ரஹாரத்துல இருக்கான். அவ்வளவுதான்’ என்று மறுதலிப்பார்.
உப்பிலி அய்யங்காரின் பேச்சின் தொனியில் ‘வேதா ஒரு டம்மி பீசு’ என்பது பொதிந்திருக்கும்.
வேதா காரெக்டரில்...வையாபுரியும்,
வசந்தா மாமி காரெக்டரில்...நாகமணி மகாதேவனும்,
உப்பிலி அய்யங்காராக...கிரிஷ் கர்னாடும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக நாகமணி மகாதேவன்...சான்சே இல்லை.
மைதிலி பாஷ்யம், வசந்தா மாமியை சேவித்து விட்டு,
ராமையும் சேவிப்பாள்.
ராம் அவளை ஆசிர்வதிக்க எத்தனிக்கும்போது,
கையில் அபர்னா அணிவித்த மெட்டியை பார்ப்பான். குற்ற உணர்வில் ராம் தவிப்பதை எடுத்துக்காட்ட, அற்புதமாக ‘ஷாட் கம்போஸ்’ செய்திருப்பார் இயக்குனர் கமல்.
AFTERMATH [ Lad De Sma Born ] \ Denmark \ 2004 \ Directed by : Paprika Steen.
நண்பர்களே....
சோகத்திலே மிகவும் கொடியது புத்திர சோகம் என்கிறது மகாபாரதம்.
கர்ணன் படத்தில் மரணத்தின் தன்மையை கண்ணதாசன் அற்புதமாக விளக்கியிருப்பார். “ மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா... மரணத்தின் தன்மை சொல்வேன்”
பதின்வயது மகளை விபத்தில் பறிகொடுத்த பெற்றோரின்
சோகக்கதையா...‘அப்டர்மேத்’ ?
கார் பார்க் ஏரியா.... 'EXIT' பாதை...
கார்கள் எதுவும் வராததால், மரண அமைதி காக்கிறது பாதை.
இதுதான் படத்தில் முதல் ஷாட்.
மிகப்பெரிய சாலை.
தூரத்திலிருக்கும் சிக்னலை நோக்கி சில கார்கள் பயணிக்கின்றன.
விபத்தில் மகளை பறி கொடுத்த பெற்றோரின் காரும் அந்தப்பயணத்தில் இணைகிறது.
இதுதான் படத்தின் கடைசி ஷாட்.
இரு ஷாட்களுக்கிடையில் ஒரு சோகக்கவிதையை புனைந்திருக்கிறார்
இந்த பேரழகுப்பெண் இயக்குனர் Paprika Steen.
ஒரு மிகப்பெரிய சோகம் நிகழ்ந்திருக்கிறது.
அந்த சோகம் என்ன ?...என்பதை படத்துவக்கத்திலேயே கேள்வியாக்கி,
அக்கேள்விக்கான விடையை பின் தொடரும் காட்சிகளில்,
வசனங்களின் மூலமாகவும்,
விஷுவலாகவும்,
கொஞ்சம் கொஞ்சமாக திரையை விலக்கி நம்மை உணர வைக்கிறார் இயக்குனர்.
விபத்தில் மகளை பறி கொடுத்த கிளே - பிரிட் தம்பதியர்,
வழியாகத்தான் இப்படத்தின் திரைக்கதை பயணிக்கிறது.
படத்தில் மூன்று கிளைக்கதைகள் வருகிறது.
[ 1 ] கிளே -பிரிட் தம்பதியினரின் நண்பர்களாக வரும் நடுத்தர வயது தம்பதியர். இவர்கள் குழந்தைப்பேறு இல்லாமல் தவிப்பவர்கள்.
[ 2 ] ‘மெலினா’ என்ற இளம் தாயும்,
அவளால் சரி வர பராமரிக்கப்படாத ‘கேமிலி’ என்ற 6 மாத பெண் சேயும், ‘சோசியல் ஒர்க்கர்’ என்ற அரசுப்பணியை செய்யும் ’பிரிட்டின்’ கண்காணிப்பின் கீழ் வருகிறார்கள்.
கேமிலிக்கு தாயாகவும்...
‘உல்ரிக்’ என்ற புதிய காதலனுக்கு காதலியாகவும்...
ரெட்டை வாழ்க்கை வாழும் மெலினாவின் கதை இன்றைய டேனிஷ் சமுதாயத்தை பிரதிபலிக்கிறது.
மூன்று கிளைக்கதைகளும்,
‘மெயின்’ திரைக்கதையை சீராக முன்னெடுத்து செல்கின்றன.
கிளே- பிரிட் தம்பதியினர் எவ்வாறு புத்திர சோகத்தை கடந்து,
தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்கின்றனர் என்பது மட்டும் அல்ல... கிளைமேக்ஸ்.
நவீன டேனிஷ் சமுதாயத்தின் மீது இயக்குனர் வைத்துள்ள விமர்சனமும்
அடங்கி இருப்பதுதான் இப்படத்தின் தனிச்சிறப்பே.
இப்படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சிகளை விவரிக்கிறேன்.
‘கிளே’ புத்திர சோகத்தால் வெறி பிடித்து,
நூறு மீட்டர் ஓட்டப்பந்தய வீரனைப்போல பிளாட்பாரத்தில் ஓடுவான்.
சாலையில் வாகனப்போக்குவரத்து மிகுந்து இருக்கும்.
இத்தொடர் ஓட்டத்தை பல கட் ஷாட் மூலம்,
ஓட்டத்தின் வேகத்தை உணர்த்தியிருப்பார் இயக்குனர்.
ஓட்ட முடிவில், களைப்பாகி ஓடுவதை ஸ்லோ மோஷனில் படமாக்கி இருப்பார்.
மொத்த ஓட்டத்துக்கும் பின்னணியாக மெலிதான சோக இசை இழையோடி வரும்.
காட்சி முடிவில், தீடிரென்று ‘போக்குவரத்தின் பேரிரைச்சல்’ ,
வெடித்து பின்னணி இசையை விழுங்கி விடும்.
பிள்ளையை பறி கொடுத்த தம்பதிகள் உடலுறவில் ஈடுபட மாட்டார்கள்.
மாறாக பிள்ளை இல்லாத தம்பதிகள் காட்சிக்கு காட்சி உடலுறவில் ஈடுபட்டு திளைப்பார்கள்.
இந்த முரணை,
இயக்குனர் பெண் என்பதால் உடலுறவு காட்சிகளை கச்சிதமாக கையாண்டிருப்பார்.
கிளே, புத்திர சோகத்தால் பாதிக்கப்பட்டு விபத்தை ஏற்படுத்திய பெண்ணை தேடிக்கண்டு பிடித்து,
அவளை கழுத்தை நெரித்து கொல்ல முயல்கிறான்.
அந்த களேபரத்தில் மல்லாக்க விழுபவளை,
‘செக்சுவல் இம்பல்சில்’ [ Sexual Impulse ] உந்தப்பட்டு கற்பழிக்கிறான்.
ஆனால் அவளோ, அந்த உடலுறவை ரசித்து ஏற்றுக்கொள்கிறாள்.
இந்தக்காட்சியில் இருக்கும் முரண்கள் மிகவும் ரசிக்கத்தகுந்தவை.
கிளேவைப்பொருத்த வரை அவளை கற்பழித்ததையே மரண தண்டனை வழங்கியதாக கருதுகிறான். இலக்கியத்தில், செக்ஸ்...மரணம்... இரண்டுமே ஒன்றாக கருதப்படுகிறது.
பிரிட், மெலினாவின் குழந்தையை தனது குழந்தை போல் பராமரித்து
அன்பு செலுத்துகிறாள்.
கிளே...வன்முறையின் மூலமாக தனது சோகத்துக்கு விடை தேடி விட்டான்.
பிரிட்...தாய்மையின் மூலமாக தனது சோகத்துக்கு விடை கொடுக்க முயலுகிறாள்.
பிரிட் கதாபாத்திரத்தை மிக உயர்வாக்கி இருக்கிறார் ‘அழகுத்தேவதை’ இயக்குனர்.
பிரிட் கதாபாத்திரத்துக்கு நேர் முரணாக மெலினாவை படைத்திருக்கிறார்
இயக்குனர்.
இளம் வயதிலேயே தாயாகி தாய்மையின் மகத்துவம் அறியாமல் இருக்கிறாள்.
குழந்தையை, தனது வாழ்க்கைக்கு இடைஞ்சலாக... Bitter & Sweet அவஸ்தையுடன் பார்க்கிறாள்.
ஒரு காட்சியில் மெலினா ‘யு.எஸ்.ஏ’ என்ற எழுத்தை,
பெரிதாக பிரிண்ட் செய்யப்படிருக்கும் டி.ஷர்டை போட்டிருப்பாள்.
தாய்மைப்பண்பை புறக்கணித்த அமெரிக்க ‘சூது’ கலாச்சாரம்,
டென்மார்க்கில் நுழைந்து ‘கவ்வி’ விட்டதை குறியீடாக்கி உள்ளார் இயக்குனர்.
படத்தில் இடம் பெறும் இன்னொரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை,
இங்கே அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.
‘பிரிட்’ வேலை பார்க்கும் சோசியல் செண்டரின் தலைமை அதிகாரிதான் அவர்.
எல்லோரையும் கனிவுடனும், கருணையுடனும் வழி நடத்தும்
உயர் பண்புடைய அரசு அதிகாரியாக அவர் இருப்பது எனக்கு சற்று பொறாமையாக இருந்தது.
நம்மூரில் இவரைப்போன்ற அதிகாரிகளை லென்ஸ் வைத்து தேட வேண்டும்.
படம் முடிந்து கடைசி டைட்டில் கார்டு வரை பார்க்க வைத்து விடுகிறது,
பின்னணியில் வரும் ஒரு பாடல்.
அந்தப்பாட்லை கீழ்க்காணும் காணொளியில் கேட்டு உருகுங்கள்.
ஆக, ஒரு மிகப்பெரிய சோகம் நிகழ்ந்திருக்கிறது.
அதை கடக்க வேண்டி இருக்கிறது.
அந்த சோகம் என்ன ?
விபத்தில் இறந்த கிளே - பிரிட் தம்பதியின் மகளா ?
டேனிஷ் சமூக-சரித்திர விபத்தில் நிகழ்ந்த கலாச்சார சீரழிவா ?
வெளிப்படையான கருத்தாக, விபத்தையும்...
உள்ளார்ந்த கருத்தாக்கமாக, டேனிஷ் கலாச்சார சீரழிவையும்... சொல்லி இயக்குனர் இப்படத்திற்கு காவியத்தன்மையை கொடுத்திருக்கிறார்.
படத்தில் இடம் பெற்ற நடிக, நடிகையர்களும்,
அவர்கள் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரும் அடங்கிய பட்டியல் இதோ...
நண்பர்களே...
1978ம் வருட தீபாவளி அன்று,
கமல் நடித்த மூன்று படங்கள் வெளியாகியது.
1 சிகப்பு ரோஜாக்கள் - இயக்கம் : பாரதிராஜா
2 மனிதரில் இத்தனை நிறங்களா - இயக்கம் : ஆர்.சி. சக்தி
3 அவள் அப்படித்தான் - இயக்கம் : ருத்ரையா
ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியானாலும்,
காலத்தை வென்றது ‘அவள் அப்படித்தான்’ மட்டுமே!
கதைக்கான மூலக்கருவை ருத்ரையா உருவாக்க,
திரைக்கதையாக்கத்தில் இயக்குனர் கே.ராஜேஷ்வர் பணியாற்ற,
வசனத்தை அனந்து அவர்களும், எழுத்தாளர் வண்ண நிலவனும் சேர்ந்து
எழுதி இருக்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் அர்ப்பணிப்போடு உழைத்த...
பல நல்ல கலைஞர்களை இப்பதிவில் அடையாளம் காணலாம்.
‘அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கிய ருத்ரையா,
இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
அப்போதே கமலிடம் நட்பாக இருந்த காரணத்தால்,
அவரிடம் எளிதாக கால்ஷீட் வாங்கி விட்டார்.
கமல்தான் அன்று தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரம்.
தனது ‘பிஸி ஷெட்யூலில்’...கிடைத்த நேரத்தை,
‘அவள் அப்படித்தானுக்கு’ ஒதுக்கி கொடுத்து...
படத்தை முடிக்க உதவி இருக்கிறார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஸ்ரீப்ரியாவிடம் கமலே பேசி,
அனுமதி வாங்கி கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீப்ரியாதான் அன்று முன்னணி நட்சத்திரம்.
அவர் நடித்த ஆட்டுக்கார அலமேலு வெள்ளிவிழா கொண்டாடிய நேரம்.
அவர் அப்போது ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார்.
‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு வெறும் முப்பதாயிரம் ரூபாய் மட்டும் சம்பளமாக பெற்றிருக்கிறார்.
சூட்டிங் முதல் நாள் அன்று,
அன்றைய கால வழக்கப்படி தனது வீட்டிலிருந்து சேர் கொண்டு வந்திருக்கிறார் ஸ்ரீப்ரியா.
ஆனால் கமல்,ரஜினி உட்பட யாருக்குமே சேர் கிடையாது.
சூழலைப்புரிந்து கொண்டு அடுத்த நாள் முதல் சேர் கொண்டு வராமல் எல்லோரையும் போல் தரையில் அமர்ந்து பணியாற்றியிருக்கிறார்.
சாதாரண மெஸ்ஸில் இருந்து கொண்டு வரப்பட்ட,
சுமாரான சாப்பாடையே அனைவரும் சாப்பிட்டு இருக்கிறார்கள்.
கமலும்,ஸ்ரீப்ரியாவும் சூட்டிங், டப்பிங் அனைத்திலும் ரீடேக் போகாமல்,
ஒரே டேக்கில் முடித்துக்கொடுத்து பங்காற்றி இருக்கிறார்கள்.
ரஜினியும் அப்போது வளர்ந்து வரும் கலைஞராக இருந்தாலும் அவரும் பிஸியான நடிகர்தான்.
இயக்குனர் கே. பாலச்சந்தரின் வலது கரமும்,
கமலின் ஆசானுமான அனந்து அவர்கள்,
ரஜினியிடம் பேசி கால்ஷீட் வாங்கி கொடுத்திருக்கிறார்.
அந்தக்காலத்தில் இசையமைப்பாளர்தான்,
தயாரிப்பு அலுவலகத்துக்கு வரவேண்டும்.
இசையமைப்பாளர் இளையாராஜா அலுவலகத்துக்கு வருகிறார் என்பதற்காக அவசரம் அவசரமாக பேன் வாங்கி மாட்டி இருக்கிறார்கள்.
அது வரை படத்தயாரிப்பு அலுவலகத்தில் பேன் கூட கிடையாது.
ஆனால் அவர் வரும் நேரம் கரண்ட் இல்லை.
அந்த புழுக்கத்திலேதான்,
இன்றும் குளிர்ச்சியையும் இனிமையையும் தரும் டியூனை உருவாக்கி இருக்கிறார்.
இசைக்கருவிகளில்... பியானோதான் இளையாராஜாவுக்கு ‘பெட்’.
அவர் பியானோ இசையில் போட்ட ‘மாஸ்டர் பீஸ்களில் ஒன்று’ ...
‘உறவுகள் தொடர் கதை’ என்ற பாடலும் ஆகும்.
[ மற்றொன்று ‘ஹேராம்’ படப்பாடலான ‘நீ பார்த்த பார்வை’]
இப்பாடலில், இளையராஜாவின் இசையில் ‘மோனாலிஸா’ தன்மையை உணரலாம்.
கதையின் மையக்கருத்து,
ஆண்களால் பெண்ணுக்கு இழைக்கப்படும் துரோகங்கள்.
அந்த கருத்தாக்கம் , இப்பாடலில் மெல்லிய இழையாக நெய்யப்பட்டிருக்கும்.
கமல்- ரஜினி - ஸ்ரீப்ரியா - இளையாஜா கூட்டணியில் வந்த
‘இளமை ஊஞ்சலாடுகிறது'.... மெகா ஹிட் திரைப்படம்.
எனவே இப்படம் எளிதில் வியாபாரம் ஆகி விட்டது.
படம் வெளியான போது,
‘இளமை ஊஞ்சலாடுகிறது’ போன்ற படத்தை எதிர் பார்த்து சென்ற
பாமர ரசிகர்கள் தியேட்டரில் கத்தி கலாட்டா செய்திருக்கிறார்கள்.
படம் வெளியான நேரம்,
திரைப்பட மேதை மிருணாள் சென் சென்னைக்கு வந்திருக்கிறார்.
தற்செயலாக தியேட்டரில் ‘அவள் அப்படித்தான்’ படம் பார்த்திருக்கிறார்.
ஒரு கலைத்திரைப்படம் இப்படி புறக்கணிக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு
மனம் வெதும்பி பத்திரிக்கையாளர்களை வரவழைத்து,
தனது மனக்குமுறலை வெடித்திருக்கிறார்.
‘நல்லதோர் வீணையை புழுதியில் கிடத்தியதை’ சாடி அவர் கொடுத்த பேட்டி பத்திரிக்கைகளில் வெளியானது.
பத்திரிக்கைகள் தொடர்ந்து கமல்,ரஜினி,ஸ்ரீப்ரியா,ருத்ரையாவிடம் பேட்டி வாங்கி வெளியிட்டு கலை ரசிகர்களிடம் படத்தை கொண்டு சேர்த்தன.
படம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நூறு நாட்கள் ஓடியது.
ஒளிப்பதிவு மேதை ‘மார்க்கஸ் பார்ட்லே’ ,
அந்த வருடத்திற்கான சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை
‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தை தேர்வு செய்து அறிவித்து விட்டார்.
காரணம் வண்ணப்படங்களுக்கு மட்டும்தான்,
அப்போது விருது வழங்கி வந்தார்கள்.
எனவே ‘அவள் அப்படித்தான்’ ,
மார்க்கஸ் பார்ட்லே பார்வைக்கே வரவில்லை.
ஆனால் ‘சிறந்த படத்திற்கான’ தேர்வுப்பட்டியலில் இருந்த படங்களை திரையிட்ட போது,
‘அவள் அப்படித்தானை’ பார்த்து இருக்கிறார் மார்க்கஸ் பார்ட்லே.
படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருப்பதை கண்டு,
இப்படத்திற்கும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது வழங்கப்பட வேண்டும்
என அடம் பிடித்திருக்கிறார்.
எனவே முதன் முறையாக ‘கருப்பு - வெள்ளை’ படத்திற்காக
தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டது.
அதன்படி, ‘அவள் அப்படித்தான்’ ஒளிப்பதிவாளர் நல்லுசாமிக்கு
விருது வழங்கப்பட்டது.
சிறந்த படமாக ‘அவள் அப்படித்தான்’ படத்தை,
தேர்வு செய்து விருது வழங்கினார்கள்.
அவள் அப்படித்தான் = நல்ல கலைஞர்களின் கூட்டு முயற்சி.
இப்பதிவில் இடம் பெற்ற தகவல்கள்,
ஒளிப்பதிவாளர் திரு.நல்லுசாமி பேட்டியாக,
அந்திமழை இதழில் வெளி வந்தவை.
அனைத்திற்கும் நன்றி.
மேலும் விரிவான தகவல் பெற கீழ்க்கண்ட இணைப்பிற்கு செல்லவும்.
இளையராஜாவின் பாடலை நல்லுசாமியும் ருத்ரையாவும் சேர்ந்து காவியமாக்கியதை காணொளியில் காண்க.
CNN - IBN டெலிவிஷன் நிறுவனம் இப்படத்தை இந்தியாவின் தலை சிறந்த நூறு படங்களில் ஒன்றாக தேர்வு செய்து பெருமை சேர்த்துள்ளது. இப்படம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பிடியாவை அணுகவும். http://en.wikipedia.org/wiki/Aval_Appadithan
இன்று முன்னணியில் இருக்கும் கலைஞர்கள் ஏன் இது போன்ற கலை படைப்புகள் வர உதவுவது இல்லை ?
காசு...பணம்...துட்டு...money...money... என்பதில் மட்டும் குறியா ??
சிந்திப்போம்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே...
தமிழ் சினிமாவுக்கு நல்ல நேரம் வந்தாச்சு.
பழையன கழிந்தாச்சு.
புதியன புகுந்தாச்சு.
சரியான திரைக்கதையும்,
கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான புதியமுகங்களும்,
பக்க வாத்தியங்களாக தொழில் நுட்பக்கலைஞர்களும் இருந்தால்,
ஜெயிக்கலாம் எனச்சரியான ‘நேரத்தில்’ நிரூபித்து இருக்கிறார்கள்.
விஸ்வரூபம், பரதேசி, சென்னையில் ஒரு நாள்...
இந்த படங்களின் வரிசையில் என்னை மிகவும் கவர்ந்த படம் ‘நேரம்’.
மேற்சொன்ன படங்களின் வரிசையில் ‘நேரம்’ படத்தை இணைத்திருப்பதே...
படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனுக்கு,
ஆகச்சிறந்த பாராட்டாக இருக்கும்.
கெட்ட நேரம் , ‘360’ டிகிரி சுற்றி நின்று,
பல ரூபங்களில்...பல்வேறு திசைகளில் தாக்கும்.
அதில், ஒரு திக்கில் நின்று தாக்கும் கெட்ட நேரம் மட்டும்...
கொஞ்சம் வலுவிழந்து இருக்கும்.
அந்த ‘கேப்பில்’ புகுந்து வெளியேற முடியும் ;
அதுவே நல்ல நேரம் என பாஸிட்டிவாக கதையையும்,
திரைக்கதையையும் வடிவமைத்த இயக்குனருக்கு,
எனது நன்றி கலந்த பாராட்டு.
‘ரன் லோலா ரன்’ படத்தின் இன்ஸ்பிரேஷனில் கதையை எழுதி,
திரைக்கதை அமைப்பில் வித்தியாசப்படுத்தி ஜெயித்து விட்டார் இயக்குனர்.
ஒட்டு மொத்தமாக தமிழ் சினிமாவை ‘சூது கவ்விருச்சோ’ என அச்சப்பட்டுக்கொண்டு இருந்த ‘நேரத்தில்’ ,
நம்பிக்கை ஊட்டி இருக்கிறார் இயக்குனர்.
திருடுவது... திகட்டாது,
கற்பழிப்பதே... களிப்பு,
ஏமாற்றுவதே... எதிர்காலம்,
உண்மையை...ஊத்தி மூடு,
என்று புதிய ஆத்திச்சூடி எழுதிக்கொண்டு,
‘டொரொண்டினோ’ பேரப்பிள்ளைகள்
தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என நடுங்கிப்போயிருந்தேன்.
‘அச்சம் தவிர்’ என அடைக்கலம் கொடுத்த இயக்குனரை உச்சி முகர்ந்து பாராட்டுகிறேன்.
நான் இத்தனை உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதற்கு காரணமான,
ஒரு காட்சியை மட்டும் விளக்குகிறேன்.
கதாநாயகன், தன்னுயிர் போகப்போகும் பிரச்சனையிலிருந்து தப்பிக்க,
ஒருவனை கொள்ளையடிப்பதே தீர்வு என்ற சூழ்நிலையில்,
‘கொள்ளை செய்யப்பட வேண்டியவன்’ உயிர்...
விபத்தால் கொள்ளை போகப்போகிறது என அறிந்ததும்,
உயிரைக்காப்பாற்றும் மனிதாபிமானம் கொடி கட்டி பறக்கும் காட்சிதான் என்னை வசியப்படுத்தி...ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது.
‘கொள்ளை செய்யப்பட வேண்டியவன்’ என்ற ‘பதம்’,
படம் பார்த்த நேயர்களுக்கு விளங்கும்.
நாயகியாக நடித்த ‘நஸ்ரினா’ பற்றி நாலு வார்த்தை சொல்லவில்லையென்றால் ரோட்டில் நடமாட முடியாது.
இவளை பார்க்கும் போதெல்லாம் இளையராஜாவின் ‘டிக்..டிக்..டிக்..’படப்பாடலில் வரும் ‘தகிர்தனா...திரனா...தீம் திரனா’ என்ற டியூன் ‘லூப்பில் ரிப்பீட்டாகிறது.
இந்த ‘அழகு அஞ்சலிக்கு’...
மலையாளத்தில் மார்க்கெட் போக சாபமும்,
தமிழில் நல்ல இயக்குனர்களும் கிடைக்க வரமும் வழங்குகிறேன்...
தமிழ் கூறும் நல்லுலகின் சார்பாக.
நடிகர்கள் அனைவரும் அசத்தி இருக்க,
திருஷ்டி பரிகாரமாக ‘தம்பி ராமையா’ மட்டும்.
மிகை நடிப்பில், பிரகாஷ்ராஜை தோற்கடிக்கும் ‘போரில்’ ஈடுபட்டிருக்கிறார் இவர்.
திரைக்கதையை, தங்கள் தொழில் நுடபத்தால் மேலும் மெருகேற்றியதில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளர் இருவருமே சம பங்கு.
சில காட்சிகளில் ‘குறும்பட பாணி’ சொதப்பல்கள் இருந்தாலும்,
பல காட்சிகளில் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி. சந்திரன், இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன், இருவருக்கும் வாழ்த்துக்கள். ஒரு நல்ல வணிக சினிமாவை தமிழுக்கு வழங்கிய, ‘நேரம்’ படக்குழுவினரை வாழ்த்தி வெற்றியை பரிசளிப்போம்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே...செழியன் அவர்கள் இளையராஜா இசையை ஆராய்ந்து எழுதிய கட்டுரையின் நிறைவுப்பகுதியை இப்பதிவில் காண இருக்கிறோம்.
‘பாரதி’ , ‘காசி’ , ‘அழகி’ முதலான படங்களில்,
இளையராஜாவின் பின்னணி இசை குறிப்பிடத்தகுந்ததாக இருந்த போதிலும்,
அது குறித்து, ஒரே ஒரு வரியில் பாராட்டி...
நமது விமர்சனங்கள் முடிந்து போகின்றன.
இது பின்னிருந்து உழைக்கின்ற கலைஞனுக்கு எவ்வளவு ஆற்றாமையையும்,
படைப்புச்சோர்வையும் தரும் !
ஒரு திரைப்படத்தின் பின்னணி இசை ஏன் சிறந்தது ?,
எவ்வாறு காட்சியின் மனவுணர்வோடு ஒத்துப்போகிறது ? அல்லது
காட்சி தரும் உணர்வையும் கடந்த மனநிலையை ஏற்படுத்துகிறது ! என்று,
இசை அறிந்தவர்கள் சொல்வதன் மூலம்,
ஒரு படத்தின் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்கிற விஷயம்,
ஒரு திரைப்பட மாணவனுக்கு அல்லது ரசிகனுக்கு -
ஏன் ? திரைப்பட இயக்குனருக்கும் தெரியும் அல்லவா ! அது போன்ற தீவிரமான, ஆழமான... ‘திரைப்பட இசை குறித்த விமர்சனங்கள்’ தமிழில் வரவேண்டும்.
புதிதாக இசை கற்கிற மாணவர்கள்,
வாசித்து பழகுவதற்கு,
‘மைக்கேல் ஜாக்சனின்’ பாடல்கள்...
‘இசைக்குறிப்புகளாக’ [ musical notation ] கிடைக்கின்றன.
அயல் நாட்டவரின் புகழ் பெற்ற எந்த இசைப்பாடலும் அச்சிடப்பட்ட ‘இசைக்குறிப்புகளாக’ கிடைக்கின்றன.
இசை, எந்த மொழிக்கும் பொதுவானதால் [ universal language ]
ஒரு இசைக்கலைஞன்,
தனது இசையை குறிப்புகளாக வெளியிடுவதன் மூலம்,
இயற்றப்பட்ட தனது படைப்பின் சூக்குமங்களை,
சாதாரணமானவர்களுக்கும் எடுத்துச்செல்ல முடிகிறது.
இளையராஜாவுக்கு அதற்கான தகுதி இருந்த போதிலும்,
அவரது சிறந்த பாடல்கள், சிறந்த பின்னணி இசை, Nothing But Wind, How To Name It முதலான இசைக்கோலங்கள் ,
ஆகியவற்றின் மூலமான இசைக்குறிப்புகளை,
ஏற்பாடுகளை [ Arrangements ],
நாம் படித்து பார்ப்பதற்கோ,
வாசித்து பழகுவதற்கோ,
அச்சிடப்பட்ட பிரதி அல்லது கைப்பிரதி எதுவுமே கிடைப்பதில்லை. இவை வெளி வந்தால், உலகெங்கிலும் உள்ள இசை மாணவர்களுக்கு அரிய பரிசாக அமையும். உலகளாவிய விமர்சனம், ஒரு தமிழ் படைப்பாளிக்கு கிடைக்கிற வாய்ப்பும் ஏற்படும்.
இளையராஜா, தனது பரிசோதனைகளின் மூலம்,
இசையின் பூட்டிய பல கதவுகளை திறந்த போதும்,
அதனுள் பிரவேசிக்கிற அடிப்படை தகுதியற்று,
விழிப்புணர்வற்று இருக்கிறோம்.
வெறுமனே போற்றிக்கொண்டு இருப்பதன் மூலம்,
வெற்றுப்பார்வையாளராக மட்டுமே இருக்கிறோம்.
இசையின் உண்மையான தரிசனங்களை கண்டு கொள்ளாமல் அல்லது
கண்டு பிடிக்க முடியாமல்,
மேலோட்டமாகப்புகழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இளையராஜா, திரைப்படம் என்கிற வலிமையான ஊடகத்தினுள் இருப்பதால்
தன் சம காலத்தில் அதிக அளவில் புகழப்பட்டிருக்கிறார்.
அதே சமயம், திரைத்துறையில் இருப்பதாலேயே,
இசை விமர்சகர்களாலும்,
இசைப்பண்டிதர்களாலும்,
அதிக அளவு புறக்கணிக்கப்பட்ட கலைஞராகவும் இருக்கிறார். உன்னதமான கலைஞன் திரைத்துறையிலிருந்து வர முடியாது என்று எந்த பண்டிதச்சட்டங்களும் சொல்லவில்லை.
‘சார்லி சாப்ளின்தான், திரைப்படத்துறையின் ஒரே மேதை’ என்று பெர்னாட்ஷா சொன்னார். அது அவரது கூற்று.
ஐஸன்ஸ்டைன், தார்கோவ்ஸ்கி, குரோசுவா, ரே என்று மேதைகளின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மேலும் மேற்சொன்ன கலைஞர்கள் மூன்றாம் தரமான பொழுதுபோக்கு திரைப்படங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டவர்கள் அல்ல. ஆனால் இந்தியப்பாரம்பரிய இசைக்கும், பொழுதுபோக்கான திரை இசைக்கும், தனது தீவிரமான படைப்புகளின் வீச்சு மூலம், அறியப்படாத சாதனைகளை நிகழ்த்தியிருக்கும், இன்றும் நிகழ்த்தும்... இளையராஜாவின் நிலை முற்றிலும் வித்தியாசமானது. இவர் ...சினிமாவின் முதல்தரமான கலைஞர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இதே விபத்து நேர்ந்தது.
தமிழ் சினிமாவில் நடித்ததன் மூலம்,
உலக அரங்கில் அதிகம் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார்.
இவரையும் நாம் வெற்று ஆரவாரத்தோடு,
போற்றிப்புகழ்ந்தோமே தவிர,
இது வரையிலும்,
அவர் நடிப்பு குறித்த உண்மையான விமர்சனத்தை செய்யவில்லை. உலகிலிருக்கும் தலை சிறந்த நடிகர்களோடு ஒப்பிடுகையில், அவர் எந்த வகையில் அவர்களுக்கு இணையானவர் என்கிற ஒப்பீடை தமிழில் இதுவரையிலும் யாரும் செய்யவில்லை. இவ்வாறான விபத்துக்களை தொடர்ந்து எப்படி அனுமதிக்க முடியும் ?
கவிஞர் கண்ணதாசன் தனது கடைசிக்காலங்களில், ‘ திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியது குறித்து வருந்துகிறேன். எனது புலமையை, தீவிர இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுத்தாமல் வீணடித்து விட்டேன்’ என்று வருந்தினார்.
இவரைப்பற்றி கவிஞர் அப்துல் ரகுமான், ‘மீன்கள் விற்கும் சந்தையில், விண்மீன்கள் விற்றவர்’ என்று எழுதினார்.
இது இளையராஜாவுக்கும் பொருந்தும்.
தமிழ் சினிமாவின் ஒப்பனை முகங்களுக்கு பின்னால்,
ஒரு அசலான கலைஞனின் படைப்பு கவனிக்கப்படாமல் போவது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது !
ஒரு கலைஞனின் ஆயுட்காலத்திற்கு பின்,
அவனது படைப்புகளை ஆய்வு செய்வதை விடவும்,
அவ்வாறான ஆய்வுகள் அவனது காலத்திலேயே நிகழ்த்தப்படுவது,
அவன் திசைகள் கடந்து...
தனது படைப்பின் எல்லைகளை,
மேலும் விஸ்தரித்து செல்கின்ற வீச்சினை,
அவனுக்குத்தரும்.
நமது மேலோட்டமான அணுகு முறையையும்,
‘தமிழ் சினிமா இசைதானே’ என்கிற அலட்சியத்தையும் விடுத்து,
ஆழமான ஆய்வு ஒன்றே,
இளையராஜா என்கிற கலைஞனின் மறைக்கப்பட்ட முகங்களை,
உலகிற்கு அறிமுகப்படுத்த முடியும்.
நமது பாழ் வெளியில்,
தனது படைப்பின் விதைகளை,
தீராது விதைக்கிற கலைஞனுக்கு,
அவ்வாறான ஒரு சில துளிர்ப்புகள்தான்...
உண்மையான படைப்பூக்கமாக இருக்கும்.
தன் படைப்புகள் பற்றி அவர் நினைவு கூர்கையில்,
இது மாதிரியான அசலான அங்கீகாரங்கள்தான்,
பிராந்திய மொழியின் இசையமைப்பாளராக இருந்ததும்,
தமிழனாகப்பிறந்ததும்,
பெருமைக்குறியதாக...அவரால் உணரப்படும்.
2002 ஜூன் கணையாழி இதழில் செழியன் எழுதியது.
செழியன் அவர்களுக்கு நன்றி.
நண்பர்களே...
செழியன் அவர்கள், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பிய குரல்,
இன்றும் கவனிப்பாரற்று தேய்ந்து கிடக்கிறது.
இந்த அவலத்தை இன்னும் தொடரப்போகிறோமோ ?
சிந்திப்போம்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
நண்பர்களே...
நேற்று சனிக்கிழமை 18 - 05 - 2013 அன்று,
பதிவர் பட்டாபட்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
பதிவுலகமே இயங்காமல் மவுன அஞ்சலி செலுத்தியது.
பேஸ்புக்கில் கூட, தினமும் ஸ்டேட்டஸ் போடும் பலர்,
நேற்று கருத்திடாமல் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அனைவருக்கும் நன்றி.
கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள சிலரை நான் நன்கு அறிவேன்.
பஹ்ரைனில் குண்டு வெடித்தால் பதறுவார்கள்.
பக்கத்து வீட்டில் இழவு விழுந்து கிடக்கும் போது, பாயசம் சாப்பிடுவார்கள்.
நேற்று ஒரு ‘இலக்கிய வியாதி’ பதிவர், பதிவு போடும் போது...
அவர், ‘பாயாசம் சாப்பிடும் கோஷ்டியை’ சேர்ந்தவர் எனத்தெரிந்து கொண்டேன்.
நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று, பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள் எதுவும் வெளியிடாமல்... அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.
அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
பாடல்கள் குறித்து ஒரு சில விமர்சனங்கள் மேலோட்டமாக நிகழ்ந்த போதும்,
திரைப்படத்தின் பின்னணி இசையாக [ background scoring ] ,
இளையராஜா நிகழ்த்திய சாதனைகள் கவனிக்கப்படாதவை.
ஏனெனில், பாடல்கள் திரையரங்குகளை கடந்து வெளியிலும் ஒலிக்கின்றன.
ஆனால் இந்தப்பின்னணி இசை திரையரங்கில் ஒலித்து,
பிலிம் சுருளுடன் தகரப்பெட்டியில் தூங்கி விடுகிறது.
அயல்நாடுகளில் வெளியிடுவது போன்று,
ஒரு படத்தின் பின்னணி இசையை,
தனி ஒலியிழையாக வெளியிடும் வழக்கம் நம்மிடையே இல்லை.
ஏனெனில், நம்மில் பெரும்பாலான இசையமைப்பாளர்கள்,
படத்தில் வருகிற பாடலின் மெட்டையே...
பின்னணி இசையாக வாசிக்கும் பழக்கம்,
நம் தமிழ் சினிமாவில் இருக்கிறது.
இந்தப்பாணியை இளையராஜாவும் கையாள்கிறார் என்ற போதிலும், அதையும் கடந்து சில சூழல்களுக்கு இவர் எழுதும் இசை அற்புதமானது.
‘ஹேராம்’ படத்தில் ‘நீ பார்த்த பார்வை...’ என்ற பாடலின்,
ப்ரீலூட் [ prelude ] ஆக வரும் பியானோவும், குரலும் இழைந்து வருகிற இசை,
நினைவுகள் மீள்கிற உணர்வையும் கடந்து,
அது தரும் அனுபவங்கள் வித்தியாசமானவை. ‘மகாநதி’ படத்தில் நாயகன்,
தன் மகளை விபச்சார விடுதியில் கண்டு கொண்டதும்,
மேலெழுகிற இசை எவ்வளவு உணர்வுபூர்வமானது !
நம் சினிமாவில் அதிகமாக பயன்படுத்தப்படும், ‘காதல் சூழலில்’,
இவரின் இசை குறிப்பிடத்தகுந்த இடத்தினை வகிக்கிறது.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்,
நாயகியிடம் தன் காதலைச்சொல்ல கடிதம் தூக்கியெறிகிற
'தொடர்ச்சியான காட்சித்துணுக்குகளில்' [ montage sequences ]
‘ஸஸமம ஸாஸஸாஸ’ எனத்துவங்கும் ஸ்வர வரிசைகள்,
காதல் வேண்டும் மனநிலையையும், கடிதத்தை நாயகி மிதித்ததும்...
ஆணின் குரலாக மேலெழும்பித்தணிகிற இசை தரும் உணர்வு அழகானது.
அதே படத்தில் வேறொரு காட்சியில்,
நாயகி மரத்தில் பெயரெழுதுகிறாள்.
நாயகன் பார்க்கிறான்.
இருவருக்குமிடையிலான தூரத்தை,
தயங்கிக்கொண்டே நெருங்க விரும்புகிற...
மனத்தவிப்பை, வயலின் இசையால் நிரப்புகிறார்.
இக்காட்சியில்,
வெறுமனே ‘ஒலிக்கான பாதையை’ [ sound track ] தவிர்த்து விட்டால்,
சாதாரணக்காட்சியை எவ்வாறு உயிருள்ளதாக இவரது இசை மாற்றி இருக்கிறது என்ற வித்தகம் நமக்குப்புரியும்.
இவை எளிதில் அடையாளம் காணச்சொல்லப்பட்ட உதாரணங்கள்.
பாடல்களை விடவும் இவரது பின்னணி இசை வலிமையானது.
ஏனெனில் பாடல்கள் அதன் ஸ்வரக்கட்டிலும், லயக்கோர்வையிலும் ரசிகனைச்சென்று சேர வேண்டிய - அவனை உற்சாகப்படுத்த வேண்டிய -
அம்சங்களை கருதி இயற்றப்படுபவை.
ஆனால் பின்னணி இசை,
முழுக்க முழுக்க இசையமைப்பாளரின் ஆளுமையை நிரூபிக்கத்தகுந்த முயற்சிகளாகவே இருக்கும்.
எனவே இளையராஜாவின் இசையை அளவிடும்போது,
அவரது பின்னணி இசையையே முதன்மையாக கருத வேண்டியது அவசியம்.
இதிலும் உள்ள ஒரு சிக்கல் என்னவெனில்,
வியாபார ரீதியாயாக எடுக்கப்படும் நமது திரைப்படங்கள்,
உள்ளூர ஒரு வேகம் [ pace ] கொண்டவை.
‘காட்சித்துணுக்குகள்’ [ shots ] வேகமாக வெட்டப்படுவதையே
நம் இயக்குனர்கள் பழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ஒரு காட்சியில் அதிகமான ‘காட்சித்துணுக்குகள்’ [ shots ] இருப்பதே,
காட்சியை வேகமாக நகர்த்த உதவும் என்ற மூடப்பழக்கம் பெரும்பான்மையான இயக்குனர்களுக்கு இருக்கிறது.
நிலைத்த காட்சிகளான ‘மிஸான் சேன்’ நமது திரைப்படங்களில் குறைவு.
[ ‘மிஸான் சேன்’ என்பது, ஒரு காட்சியை துண்டு துண்டாக கூறு படாமல்,
ஒரே ‘ஷாட்’ [ shot ] ஆக எடுப்பது ] ‘மிஸான் சேன்’ காட்சியின் மீது, பார்வையாளனுக்கு நிலைத்த ஓர்மை வருமென, பிரஞ்சு ‘புதிய அலை’ திரைப்படக்கொள்கையாளர்கள் நம்பினர்; பின்பற்றினர்.
இவ்வாறு நறுக்கப்பட்ட காட்சிக்கூறுகளை,
ஒரு இசையமைப்பாளர் தனது பின்னணி இசையால் பிணைக்கிறார்.
வர்த்தக சினிமாவில் வேகம் கருதி வைக்கப்படும்,
சிறு சிறு துண்டுக்காட்சிகளுக்குள், பொருத்தமான இசையை எழுதுவது என்பது நிச்சயம் கடினமானது.
இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட நேர வரையறைக்குள்,
ஒரு துவக்கத்தையும் - முடிவையும் கொண்ட
‘இசைக்குறிப்பை’ எழுத வேண்டும்.
இது தன்னிச்சையாக ஒரு ’இசைத்தொகுதிக்கு’,
சுதந்திரமாக ‘இசைக்குறிப்பு’ எழுதுவதை விட மிகக்கடினமானது.
இத்தனை எல்லைகளை மீறி, பின்னணி இசைக்கு...
ஒரு சிறந்த ‘இசைக்குறிப்பை’ எழுதுவது என்பது மிகச்சவாலானது.
இதனால்தான் சாஸ்திரிய இசைக்கலைஞர்கள்,
திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைப்பது என்பது பெரும்பாலும் தோல்வியாகவே முடிந்திருக்கிறது.
‘முதல் மரியாதை’ படத்தில்,
குழல் இசைக்கிற மாட்டிடையன் தனது காதலி இறந்ததும்,
பைத்தியமான மனநிலையில்,
நெருக்கமாக இழையும் பட்டுப்புழுக்களை பார்க்கிறான்.
தலைக்குள், புழு ஊர்கிற மாதிரி...
‘டிஸ்கார்டு’ [ dischord ] போன்ற அபஸ்வர ஒலிகளால்,
இக்காட்சிக்கு இளையராஜா தரும் ‘சப்தப்படிமம்’ [ sound image ] துல்லியமானது.
இவ்வாறான உதாரணங்கள்,
அவர் இசையமைத்த ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் இருந்து சொல்லலாம்.
எழுதியவர் : செழியன் நூல் : பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள் ] வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
நண்பர்களே...
செழியன் எழுதிய இத்தொடரின் இறுதி பாகத்தை,
அடுத்தப்பதிவில் காண்போம்.
இசையின் ஏற்பாடுகளில்,
கேள்வி-பதில் என்றொரு உத்தி இருக்கிறது.
குரலுக்கும்-குரலுக்கும், இசைக்கருவிகளுக்கும்-இசைக்கருவிகளுக்கும்,
அல்லது குரலுக்கும்-இசைக்கருவிக்கும் இடையில்,
ஸ்வரஸ்தானங்களை எதிர் எதிரான திசையில் - ஒரு பிரமிடின் உச்சியிலிருந்து ஒருவர் கீழிறங்கும் போது,
அதன் எதிர் திசையில் இருந்து... ஒருவர் கீழிருந்து உச்சி நோக்கி...
ஒரே சமயத்தில் ஏறுவது போல - ஆரோஹண - அவரோஹணத்தில்
ஒரு முரணான ‘ஒத்திசைவு இயக்கத்தை’ [ contrary motion ]
ஏற்படுத்துவதன் மூலமும் இதை நிகழ்த்தலாம்.
இதன் மூலம் கேள்வி கேட்கிற தொனியையும்,
அதற்கு பதில் சொல்கிற பணிவையும் ஏற்படுத்த முடியும். இது எல்லா இசையமைப்பாளர்களாலும் பின்பற்றப்படுகிறது.
இதிலும் இவரது உத்திகள் குறிப்பிடத்தக்கவை.
‘அக்கரைச்சீமை அழகினிலே’ என்ற ‘ப்ரியா’ படப்பாடலின் பல்லவியில் குரலைத்தொடரும் வயலின் இசையைக்கவனியுங்கள். ‘சுந்தரி...கண்ணால் ஒரு சேதி’ என்ற ‘தளபதி’ படப்பாடலின் பல்லவியில்,
குரலோடு இழையும் குழலிசையைக்கவனியுங்கள்.
இது போல, ‘நினைவோ... ஒரு பறவை’ என்ற ‘சிகப்பு ரோஜாக்கள்’ படப்பாடலில் ஹம்மிங்கை மேல்ஸ்தாயிலும், ‘பூ மாலையே...தோள் சேரவா’ என்கிற ‘பகல்நிலவு’ படப்பாடலில் கீழ்ஸ்தாயில் குரலை பயன்படுத்துகிற விதமும்,
இதற்கான உதாரணங்களில் சில.
திரைப்படத்தின் உத்தியான ‘டிஸால்வ்’ [ dissolve ] என்கிற பிம்பங்கள் ஒன்றொடொன்று கலந்து கரைந்து மீள்கிற உத்தியை,
இவர் இசையில் கையாள்கிற விதம் அழகானது.
‘நத்திங் பட் விண்ட்’ [ Nothing But Wind ] என்கிற
இசைக்கோலத்தில் வரும் இசையில்,
இவரது குழல்கள் ஒன்றொடொன்று ‘டிஸால்வ்’ ஆகிற விதம் கவனிக்கத்தகுந்தது.
இதன் ஜனரஞ்சகமான உதாரணமாக, ‘ராக்கம்மா...கையைத்தட்டு’ என்ற ‘தளபதி’ படப்பாடலை,
தேவாரப்பாடலுடன் இணைக்கிற இடத்தைச்சொல்லலாம்.
‘நவீன வரைகலை’ உத்தியில்,
உருவம் படிப்படியாக மாறுகிற உத்தியை,
இசையின் ஸ்வரங்களில் நிகழ்த்துகிறது மேற்சொன்ன பாடல்.
இந்த உத்திகள் தவிர்த்து,
ராகங்களை கையாள்கிற லாவகம் இவரது மேதைமைக்கு
எளிய உதாரணங்கள்.
மோகன ராகத்தில் ‘நின்னுகோரி...’ வர்ணத்தை அந்தப்பெயரிலேயே
பல்லவியாக வைத்து இயற்றிய ‘அக்னி நட்சத்திரம்’ படப்பாடலில்,
மோகனத்தின் ஸ்வரங்களை கையாள்கிற விதம் அழகானது.
பரதக்கலையின் உடல்மொழியென பாவிக்கப்படவேண்டிய
ராகத்தின் லட்சணங்களை,
இவர் ஒரு ஜிம்னாஸ்டிக் கலைஞனின் லாவகத்தோடும்,
அழகோடும் வெகு சாதாரணமாக கையாளும்போது,
மிகுந்த ஆச்சரியம் உண்டாகிறது.
அதே நிலையில் இது தவறானது என்று பழம் பண்டிதர்களின் விமர்சனத்திற்கும் ஆளாகிறார்.
எந்த ஒரு கலையும் காலத்தின் இயங்கும் தன்மைக்கேற்ப அடுத்தப்பரிமாணத்தை அடைவது தவிற்க இயலாது. ‘ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றையும் பாதிக்கிறது; பாதிக்கப்படவும் செய்கிறது’ என்கிற ‘இயற்கையின் இயக்கவியல்’ பற்றிய மாமேதை ‘பிரடரிக் எங்கெல்ஸின்’ மேற்கோளின்படி, நாகரீகம் - அதன் பயனாக இயந்திர மயமாகும் வாழ்க்கை, நகரமயமாகுதல், அதைத்தொடர்ந்து வாழ்வின் செயல்பாடுகளில் தொற்றிக்கொள்ளும் வேகம் - இவை யாவும் கலையின் பண்புகளை பாதித்து மாற்றுகின்றன.
எனவே ராகங்கள், தமது அடுத்த வளர்ச்சியாக,
இறுகிய முட்டைக்கூடுகளை உடைத்து...
சிறகு முளைத்து பறப்பது அவசியமானது.
உணர்வு சார்ந்து, காலந்தோறும் உயிர்த்து வருகிற ராகங்களை,
பண்டிதக்கோட்பாடுகளெனும் அடைத்த தாழிகளுக்குள்,
விதையென பராமரிப்பது கேலிக்குறியது !
அவை உரிய விளைநிலத்தில் கலாச்சாரம் சார்ந்து விருட்சங்களென வளர்வது அவசியமானது.
எனவே இளையாராஜாவின் பாடல்களில் ராகங்கள் கட்டுப்பாடுகள் தாண்டி அபிநயிப்பதை,
இலகுவான மொழியாக மாறுவதில் பண்டிதர்களின் கோபம் அவசியமற்றது;
படைப்பின் தீவிர உயிர்ப்பு சக்திக்கு முன் பரிதாபமானதும் கூட !
மேலும் ராகங்களின் கோட்பாடுகளுக்குள் இவர் நிகழ்த்தி காட்டிய ‘சிந்துபைரவி’ , ‘சலங்கை ஒலி’ முதலான படப்பாடல்கள்,
விதிகளை மீறுவதற்கான தகுதி - பாண்டித்யம் இவருக்கு இருப்பதைக்காட்டியது.
எழுதியவர் : செழியன் நூல் : பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள் ] வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
நண்பர்களே...இளையராஜாவின் பின்னணி இசை குறித்து,
விஸ்தாரமான பார்வையில் செழியன் விவரிப்பதை
அடுத்தப்பதிவில் காண்போம்.
கீழ்க்கண்ட இணைப்புகளில் இளையராஜாவின் பாடல்களை கேட்டு மகிழ்க...