Apr 10, 2013

பச்சோந்தி


“ கடிக்கவா செய்கிறாய்!...அசட்டு நாயே!
பசங்களே, விடாதீங்க!
இந்தக்காலத்தில் கடிக்க அனுமதி இல்லை. பிடியுங்கள் அதை”
என பஜாரில் எழுந்த கூச்சல் போலிஸ் இன்ஸ்பெக்டர் காதில் விழுந்தது.

நாய் ஊளையிடும் சப்தம் கேட்டது.
இன்ஸ்பெக்டர் சத்தம் வந்த திசையை நோக்கினார்.
கஞ்சி போட்ட பூச்சட்டையும், பட்டன் போடாத அரைக்கோட்டும் அணிந்தவர்
அந்த நாயின் பின்னங்கால்களை பிடித்துக்கொண்டிருந்தார்.
அந்த ஏரியாவை சிறு கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.

“ ஐயா, கலவரம் மாதிரி தெரிகிறதே!” என்றார் உடனிருந்த போலிஸ்காரர்.

இன்ஸ்பெக்டர் கூட்டத்தை நோக்கி விரைந்தார்.
 ‘அரைக்கோட்டு’ ரத்தம் கசியும் தனது விரலை கூட்டத்திற்கு காட்டிக்கொண்டு நிற்பதைக்கண்டார்.
“ சனியனே, உன்னை என்ன செய்கிறேன் பார்” என அவரது  ‘குடிகார முகத்தில்’ எழுதி ஒட்டியிருந்தது.
கூட்டத்தின் நடுமையத்தில் அந்தக்குற்றவாளி நாய் நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தது.
கலங்கிய அதன் கண்களில் சோகமும் பீதியும் சம அளவிலிருந்தது.

கூட்டத்தை இடித்து விலக்கி கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் முழங்கினார்.
“ என்ன இதெல்லாம்?
இங்கே ஏன் கூடி நிற்கிறீர்கள்?
நீ ஏன் விரலை உயர்த்திக்கொண்டு நிற்கிறாய்?”

“ ஐயா, எந்த வம்புமின்றி நடந்து வந்து கொண்டிருந்தேன்.
ஒரு காரணமும் இல்லாம இந்த நாய் என் விரலை கடிச்சு வச்சிருச்சு.
நான் மர வேலை செய்யறவன்.
என்னுடைய வேலை நுட்பமானது.
இன்னும் ஒரு வாரத்துக்கு என் விரலை அசைக்க கூட முடியாது.
நீங்கதான் எனக்கு இழப்பீடு வாங்கித்தரணும்.
இந்த மூர்க்கப்பிராணிகளின் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழணும்னு எந்த சட்டமும் கூறவில்லை.
இவையெல்லாம் கடிக்க ஆரம்பித்தால், வாழ்க்கையே நரக வேதனையாகி விடும்”.

“ஊம்...சரிதான்,சரிதான்...யாருடைய நாய் இது?
இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை.
நாய்களை கண்டப்படி ஓடித்திரியும்படி விடுவோருக்கு தக்க பாடம் கற்பிக்கப்போகிறேன்.
நாய்களையும், மாடுகளையும் இஷ்டத்துக்கு திரிய விட்டால் என்ன கிடைக்கும் என தெரியப்படுத்தப்போகிறேன்”

போலிஸ்காரனை நோக்கி ஆணை பிறப்பித்தார்.
“ இந்த நாய் யாருடையது என கண்டு பிடித்து அறிக்கை ஒன்றை தயார் செய்.
உடனே இந்த நாயை ஒழித்துக்கட்டியாக வேண்டும்.
வெறி பிடித்த நாயாகத்தான் இருக்க வேண்டும்.
யாருடையது இது?

“ போலிஸ் ஐ.ஜியுடையது” என கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

“போலிஸ் ஐ.ஜியுடையதா! ஓஹோ...
கான்ஸ்டபிள்...என்னுடைய கோட்டை கொஞ்சம் கழட்டி விடு.
உஸ்ஸ்ஸ்...வெக்கை தாங்க முடியலையே!
மழை வரப்போகுது...அதான் இப்படி புழுங்குகிறது”

‘அரைக்கோட்டை’ நோக்கினார் இன்ஸ்பெக்டர்.
“ எனக்கு இது புரியல.
உன்னை இது கடிச்சுதா! எப்படி?
உன் விரல் எப்படி இது வாய்க்கு எட்டிச்சு?
இது சின்னஞ்சிறு நாய்.
நீயோ வாட்ட சாட்டமான ஆள்!
ஆணியில் விரலை கீறி இருப்பாய்,
இதைக்காட்டி இழப்பீடு வாங்கலாமென்று ஐடியா தோன்றி இருக்கும்.
உன்னை போன்ற ஆட்களை எனக்குத்தெரியும்.
எமகாதகனுங்க”

“ ஐயா, இந்த ஆளு எரியுற சிகரட்டை...நாயோட  மூக்கின் அடியில் வச்சு...
சுட்டு  வேடிக்கை பார்த்தார்.
உடனே அது விழுந்து புடிங்கிருச்சு.
அது ஒண்ணும் அசட்டு பிறவி இல்லையே!
இந்த ஆள் எப்பவுமே இப்படித்தான்.
சேட்டை செய்யாம இருக்க முடியாது”.

“யோவ்...போலிசு, ஏன் இப்படி புளுகுறே.
இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு எல்லா விவரமும் தெரியும்.
பொய் பேசுறது யார்?
உண்மை பேசுறது யார்னு அவருக்கு தெரியும்.
நான் சொல்வது பொய்யென்றால் நீதிபதி என்னை விசாரிக்கட்டும்.
சட்டம் சொல்லியிருக்கு...
இன்று எல்லோரும் சரிநிகர் சமானம்.
உனக்கு சொல்றேன்... ஒண்ணு.
போலிசில் எனக்கு யாரும் இல்லாம போகலை.
என் சகோதரர் ஒருவர் இருக்கிறார்”.

“இல்லை...இது ஐ.ஜி ஐயாவோட நாய் இல்லை” என்றார் போலிஸ்காரர் அழுத்தம் திருத்தமாய்.
“ ஐ.ஜி ஐயாவிடம் இம்மாதிரி சாதரண நாட்டு நாய் எதுவும் இல்லை.
அவரிடம் இருப்பவை எல்லாமே உயர் ஜாதி மோப்ப நாய்கள்”.

“ நிச்சயம்தானா?”

 “சந்தேகமே வேண்டாம் ஐயா”

“ நீ சொல்வது சரிதான்.
ஐ.ஜி ஐயாவோட நாய்கள் உயர்ரகமானவை.
இதைப்பாரேன்.
சகிக்கவில்லை.
தெருச்சனியன்.
இது மாதிரி நாயை எவனும் வீட்டில் வச்சிருப்பானா?
பைத்தியம் பிடிச்சிருச்சா உனக்கு?
பெரிய நகரங்களில் இப்படி திரிஞ்சா என்னாகும் தெரியுமா?
சட்டத்தை பற்றி யாரும் கவலைப்படமாட்டங்க.
அந்த நிமிஷமே முடிவு கட்டிருவாங்க.
எப்பா...நீ கடிபட்டு இழப்புக்கு உள்ளானவன்.
இந்த விஷயத்தை இப்படியே விட்டுறக்கூடாது.
தக்க பாடம் கற்பித்தாக வேண்டும்.
ஆமாம்...இதை உடனே செஞ்சாகணும்.

“ ஒரு வேளை ஐ.ஜி ஐயாவோட நாய்தானோ என்னமோ” என்று போலிஸ்காரர் மெதுவாக கூறி விட்டு சிந்திக்கலானார்.
‘யாருடையது என்று இது மூஞ்சியிலா எழுதி ஒட்டியிருக்கு?
அண்ணைக்கு இது மாதிரி ஒரு நாய் அவர் வீட்டு முற்றத்தில் இருந்த மாதிரி இருந்துச்சு’.

“ போலிஸ் ஐ.ஜியோட நாய்தான்.
சந்தேகமே வேண்டாம்” என்று கூட்டத்திலிருந்து அந்தக்குரல் மீண்டும் ஒலித்தது.

“ ஓ! இந்த கோட்டை என் மீது மாட்டு.
ஜில் காத்து வீசுது.
குளிருது.
இதை ஐ.ஜி.ஐயாவோட வீட்டுக்கு அழைச்சுகிட்டு போ.
நான் இதைக்கண்டதாகவும்... அனுப்பி வைத்ததாகவும் சொல்.
தெருவிலே விட வேண்டாமென்று...வேண்டுகோளாக கூறி விட்டு வா.
இது விலை உயர்ந்த நாயாகத்தான் இருக்க வேண்டும்.
ஊரிலுள்ள முரடர்கள் இதன் மூக்கில் சிகரெட்டை திணிக்க முற்பட்டால் உருப்படாமல் அல்லவா போய்விடும்.
நாய் மென்மையான பிராணி!.
முட்டாளே! கையை கீழே இறக்கு.
அசிங்கமா அந்த விரலை எல்லோருக்கும் காட்டிகிட்டு நிக்காதே.
குற்றம் உன்னுடையதுதான்”.

“ ஆஹா...ஐ.ஜி ஐயாவோட வீட்டு சமையற்காரர் வருகிறாரே.
அந்தாளை  கேட்டாப்போச்சு!
யோவ்...இங்கே வாய்யா.
இந்த நாயைப்பார்.
உங்க வீட்டு நாயா இது?”

“நல்லாயிருக்கே!
இந்த மாதிரி ஒரு நாய் எங்களிடம் எந்நாளும் இருந்ததில்லை!”

“இனி யாரையும் விசாரிக்கத்தேவையில்லை” என்றார் இன்ஸ்பெக்டர்.
“ இது தெரு நாய்தான்.
இனி பேசிகிட்டு நிக்கறதில்ல அர்த்தமில்ல.
இதை இழுத்துகிட்டு போய் ஒழிச்சு கட்டு.
இதோடு விவகாரம் தீர்ந்து போகட்டும்”

“ இது எங்களுடைய நாயல்ல” என்ற சமையற்காரர் தொடர்ந்தார்.
“ இது ஐ.ஜி. ஐயாவோட சகோதரருடையது.
சில நாட்களுக்கு முன்புதான் அவர் வந்தார்.
எங்க ஐயாவுக்கு நாய்கள் பிடிக்காது.
ஆனால், ஐயாவோட சகோதரருக்கு... நாய்கள் என்றால் உயிர்”

“ என்ன! ஐ.ஜி ஐயாவோட சகோதரர் வந்திருக்காரா?” என்றார் இன்ஸ்பெக்டர்.
ஆனந்தத்தால் அவரது முகம் பூரித்து விட்டது.
“ எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி இது.
எனக்கு தெரியாம போச்சே!
இனி இங்கேயே தங்கி விடப்போகிறாரா?

“ ஆமா. இனி இங்கேதான் இருக்கப்போகிறார்”.

“ எதிர்பாராத நல்லசெய்தி!
 ‘அவருடைய’ நாயா இது!
ரொம்ப சந்தோஷம்.
வீட்டுக்கு அழைத்துச்செல்.
அற்புதமான நாய்க்குட்டி!
இந்த ஆள் விரலைக்கடிதாயா நீ?
ஹ..ஹ...ஹா..ஹா!
பரவாயில்லை.
பயப்படாதே!”

“ உர்..உர்..உர்ர்ர்ர்ர்ர் ”.

“ பொல்லாத குட்டி...புஜ்ஜூ குட்டி...
கோபம் பொத்துக்கொண்டு வருகிறது!
அருமையான நாய்க்குட்டி!”

சமையல்காரன் நாயை அழைத்துக்கொண்டு சென்றான்.
கூட்டத்தினர் ‘அரைக்கோட்டை’  பார்த்து சிரித்தனர்.

“இருடா...உனக்கு செம்மையா தர்றேன்” என இன்ஸ்பெக்டர் அவனை மிரட்டினார்.
பிறகு தனது மேல் கோட்டை இழுத்து விட்டுக்கொண்டு பஜாரின் குறுக்கே நடந்தார்.

*********************************************************************************

நண்பர்களே...
இச்சிறு கதை,
‘ரஷ்ய இலக்கிய மாமேதை’ அந்தோன் சேகவ் [ ANTON CHEKHOV ] படைத்தது.
ரஷ்யசூழலில் எழுதப்பட்டதை நமது சூழலுக்கு ஏற்றவாறு கதையை உங்களுக்கு வழங்கியுள்ளேன்.

1904ல் அந்தோன் சேகவ் மறைந்து விட்டாலும்,
அவரது படைப்புகள் சாகா வரம் பெற்று வாழ்கின்றன்.
உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சேகவ் கொண்டாடப்படுகிறார்.
ஏனெனில் சேகவ், உண்மையை எடுத்துரைக்கிறார்...
உள்ளதை உள்ளபடிக்கூறி உள்ளத்தை ஒளி பெறச்செய்கிறார்.

மனிதனின் நிலையை மனிதனுக்கு தெரியப்படுத்தும் போது,
மனிதன் மேம்படுவான் என்று சேகவ் கூறி வந்தார்.

வாசகர்களை ஒன்றும் தெரியாத சிறு பிள்ளைகளாகவோ,
சிந்தனையற்றவர்களாகவோ கருதி,
ஒவ்வொன்றுக்கும் தாமே தீர்வை தயாரித்தளிக்க முயலவில்லை,
அவர்களுக்கு உபதேசிக்க முற்படவில்லை.
தாம் எழுதுவதை வாசகர்கள் கூர்ந்து நோக்குவர்,
சிந்தனை செய்வர்,
பிழையின்றி புரிந்து கொள்வர் என்று சேகவ் திடமாக நம்பினார்.
 
சேகவ் படைப்பை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
அந்தோன் சேகவ் 
சிறுகதைகளும் குறு நாவல்களும்.
எதிர் வெளியிடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி- 642002
தொலைபேசி : 04259 226012, 98650 05084.

அந்தோன் சேகவ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
 http://en.wikipedia.org/wiki/Anton_Chekhov 

சேகவ் படைத்த மற்றொரு சிறந்த சிறுகதையை,
நீங்கள் விரும்பினால் எழுதுகிறேன்.

"The Thirty-Six Dramatic Situations"-
both by Carlo Cozzi (1720-1806) 
and Georges Polti (1867-1946)= ற்றி விரிவாக இனி வரும் பதிவுகளில் காணலாம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

3 comments:

 1. சார் நானும் சமீபத்தில் தான் அந்தோன் சேகவின் 'சிறுகதைகளும் குறுநாவல்களும் 'புத்தகத்தை படித்து முடித்தேன்.அதில் ரா.கிருஷ்ணையா அவர்களின் மொழிபெயர்ப்பில் 'ஆறாவது வார்டு ' மிக நன்றாக இருந்தது.நீங்கள் குறிப்பிட்டுள்ள சிறுகதையான 'பச்சோந்தி ' சிறுகதையையும் ரா.கிருஷ்ணையா தான் மொழிபெயர்த்துள்ளார்.மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது சார். 'பச்சோந்தி ' சிறுகதையை அந்தோன் சேகவ் தன் இளமை காலத்திலேயே எழுதிவிட்டார் செரியாக 1884 ஆம் ஆண்டு அவர் எழுதிவிட்டார்.

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி வினோத்.

  நான் வைத்திருக்கும் புத்தகத்தில் தமிழில் மொழி பெயர்த்தவர் பற்றி விபரம் இல்லை.

  ReplyDelete
 3. முதலில் ஒரு முகத்தை மாட்டி பொருத்தமான தலைப்பை கொடுத்தவுடன் கெட்ட வார்த்தையாக பின்னூட்டத்தில் எழுத வந்தேன். தப்பித்து விட்டான். புகைப்படத்தை பார்க்கும் போதே உள்ளே நமநம.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.