Feb 5, 2014

அடையாளம் தருபவனே...அடையாளம் பெறுவான்.


About Elly | 2009 | Iran | 119 min | Directed by : Asghar Farhadi.

இயக்குனர் அஸ்கர் பர்ஹாதியின் நான்காவது படம் இது.
ஹிட்ச்ஹாக் பாணியில் ஒரு சோசியல் திரில்லரை கொடுத்து இருக்கிறார்.


நான்கு ஜோடிகள் ஜாலியாக டூர் வருகிறார்கள்.
வழக்கமாக தங்கும் ரிஸார்டில் இடம் இல்லாததால் ஒரு ‘டஞ்சன் வில்லாவில்’ வேறு வழியில்லாமல் தங்குகிறார்கள்.
மூன்று ஜோடிகள் மட்டுமே கணவன் - மனைவி குழந்தைகளோடு வந்தவர்கள்.
ஒரு ஜோடி திருமணம் ஆகாதவர்கள்.
ஆனால் அவர்களை, திருமணம் ஆனவர்கள் என்றும், தேனிலவுக்காக வந்தவர்கள் என்றும் பொய் சொல்லி ரிஸார்டில் தங்க வைக்கிறார்கள் ஏனைய ஜோடிகள்.
காரணம் இரான் சட்டப்படி தம்பதிகள் மட்டுமே ஒன்றாக தங்க முடியும்.

திருமணமாகாத ஜோடிதான் அஹ்மத்- எல்லி.
வில்லாவை ஒட்டிய கடற்கரையில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
காவலுக்கு எல்லி.
குழந்தைகள் விளையாடிய பட்டத்தை துரத்திக்கொண்டு எல்லி ஓடுகிறாள்.
எல்லி குழந்தையாக மாறி பட்டத்தை கண்டு களிக்கும் ஷாட்டுகளாக டைரக்டர் அடுக்குகிறார்.
கட்.




ஒரு சிறுமி ஓடி வந்து, மற்றொரு சிறுவன் கடலோடு போய் விட்டான் என அழுகிறாள்.
அனைவரும் தேடி சிறுவனை காப்பாற்றி விடுகிறார்கள்.
அப்போதுதான் கண்டுபிடிக்கிறார்கள்.
‘எல்லியை காணவில்லை’.
கடலில் மூழ்கினாளா?
சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாளா?

இரண்டு கேள்விகளையும் எழுப்பி கதாபாத்திரங்கள் தேடுவதாக திரைக்கதை அமைத்து,
விளையாடி இருக்கிறார் அக்ஸர் பர்ஹாதி.
‘எல்லி’ சந்தோஷமாக இருக்கும் ஷாட்களை அடுக்கி காண்பித்ததன் மூலமாக,
பார்வையாளர்களையும் தேட வைத்து விடுகிறார் பர்ஹாதி.

கதையை அக்ஸர் பர்ஹாதி மட்டுமே எழுதவில்லை.
இன்னொரு நண்பரும் பணியாற்றி இருக்கிறார்.
இருந்தும், இயக்குனர் அக்ஸர் பர்ஹாதிக்கு பேஸ்புக்கில்,
ஸ்டேட்டஸ் போடும் நெருக்கடி வரவில்லை.

காரணம், கதை அமைக்க உதவிய நண்பர் 'Azad Jafarian' பெயரை நன்றியுடன் டைட்டிலில் பெயர் போட்டு அடையாளம் காட்டி விட்டார்.
ஏனென்றால் அக்ஸர் பர்ஹாதி,
தற்காலிக வெற்றியில் மினுங்கும் கவரிங் நகையல்ல...சொக்கத்தங்கம்.

தன்னோடு பணியாற்றியவரை அடையாளம் காட்டியதால்தான்,
ஆஸ்கார் அவரை வந்தடைந்து உலகுக்கே அவரை அடையாளம் காட்டி இருக்கிறது.