Apr 29, 2012

Tomboy-2011[பிரெஞ்ச்]எங்க ஏரியா...உள்ளே வரலாம்.


புதிய தொழில் தொடங்கிய நாள் முதல்.... உலக சினிமாவை பார்க்க முடியவில்லை.
பழைய நினைவுகள்....அனுபவங்களை வைத்து பதிவு போட்டுக்கொண்டிருந்தேன்.
இருந்தாலும் உள்ளுக்குள்.... உறுத்தல் முள்... குத்திக்குடைந்து கொண்டிருந்தது.
இன்று பார்த்த டாம்பாய்....
 அந்த முள்ளின் முனையை மழுங்கச்செய்து விட்டது.

ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் தனது கர்ப்பிணி மனைவியோடும்...
தனது இரு பிள்ளைகளோடும்... புதிய ஊருக்கு குடிவருகிறார்.
மூத்த பிள்ளைக்கு... பக்கத்து பிளாட்டில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது.

ஹாய்...என் பெயர் லிசா...உன் பெயர் என்ன?

மைக்கேல்...என் பெயர் மைக்கேல்...
நாங்க இங்க புதுசா குடி வந்திருக்கோம்.

வா...இங்க எல்லோர் கூடவும் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..

புதிய இடத்தில்...புதிய நண்பர்களோடு...புதிய வாழ்க்கை கிடைக்கிறது...
பத்து வயது மைக்கேலுக்கு.
மற்ற நண்பர்களை விட லிசா ஸ்பெசலாக இருக்கிறாள்.

இருவருக்கும் பப்பி லவ் தொடங்குகிறது.
லிசா கொடுக்கும் முதல் முத்தம்... சொர்க்கத்தை தொட்டு விடும் தூரத்தில் காட்டுகிறது.

சரி...ஒரு பத்து வயது சிறுவனும்...சிறுமியும் காதலிப்பதில் என்ன புதுமை இருக்கிறது?

ஆனால் பத்து வயது மைக்கேல்...சாரா...என்கிற பெண்....
என அறியப்படும் போது படம் விஸ்வரூபம் எடுக்கிறது.

மைக்கேலாக வாழ்கின்ற சாராவின் அகவாழ்க்கை பயணத்தையும்...
புற வாழ்க்கை பயணத்தையும்...படத்தில் அழகாக....கவிதை நயமிக்க காட்சிகளாக்கி விருதுகளை அள்ளியிருக்கிறார் இயக்குனர்... Celine Sciamma.
இயக்குனர் படத்தை பார்த்தால்... சொந்த அனுபவத்தை படமாக்கியுள்ளார் என நினைக்கிறேன்.

தமிழில் பள்ளிப்பருவக்காதலை கலை நயத்துடன் சொன்னபடம்...
பன்னீர் புஷ்பங்கள்.
இப்படத்தை இயக்கியவர்கள் யார் தெரியுமா?
பாரதி-வாசு என்ற இருவர்கள்.
வெகு விரைவில் இருவருமே பிரிந்து...
ஒருவர்...சந்தானபாரதியாகவும்....
மற்றொருவர் பி.வாசுவாகவும்...
மசாலாப்பட இயக்குனர்களாக உருமாறி விட்டனர்.

இப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள்...

ஆனந்தராகம்.... கேட்கும்.... காலம்
கீழ் வானிலே....ஒளிதான் தோன்றுதே...
*************************************************
பூந்தளிர் ஆட...
பொன்மலர் சூட...
**************************************************
இவ்விரண்டு பாடலை கேட்டு ரசிக்காத தமிழர்களை நாடு கடத்தி விடலாம்.


டாம்பாய் பெற்ற விருதுகள்[தகவல் உபயம்:விக்கிப்பீடியா]
Awards
  • Tomboy won the Jury award at the 2011 Teddy Awards, given for the best film with LGBTthemes at the Berlin film festival.
  • Tomboy won the Golden Duke, the main prize of the official competition of the 2011 Odessa International Film Festival.
  • Tomboy won the Audience Award at the 2011 San Francisco Frameline Gay & Lesbian Film Festival.
  • Tomboy won Best feature Film at the 2011 Philadelphia QFest Lesbian and Gay Film Festival.
  • Tomboy won the competition at the 2011 Torino Lesbian and Gay Film Festival.
  • Tomboy was nominated for the GLAAD Media Award as Outstanding Film - Limited Release.
  • Zoé Héran was nominated for the Young Artist Award as Best Leading Young Actress in an International Feature Film. Winners will be announced on May 6, 2012.[3]



Apr 27, 2012

அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்...கிள்ளிக்கொடுத்த கருணாநிதியும்...


எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...

ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர்.
திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.
எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம்.
இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்...
எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.

தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து...
தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார்.
கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு...
நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்ப்பு,கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு
எக்கச்சக்கமா செலவு வரும்.
நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார். .

உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர்.
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர்.
வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... என இழுத்திருக்கிறார்.

அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம்.
அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்...
என தயங்கியிருக்கிறார்.

நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு..என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.
முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம்.
எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார்.
பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....
இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க...
கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....
என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு.
உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

வந்தவர்களை வரவேற்று...
சாப்பிட்டீங்களா... எனக்கேட்டு...
என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.
ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
 தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...
அந்தக்கட்சியிலேயே இரு....
நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.

ஊருக்கு வந்தவர்...
திமுகவிலிருந்து விலகி...
அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்.

சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத உதவாக்கரை ...ஈழத்தமிழன் மேல் தீடீர் பாசம் காட்டுகிறது.
அதற்க்கு... அபியின் அப்பா என்ற ஓணான் சாட்சி சொல்கிறது.

Apr 25, 2012

கடன் கேட்ட பாலுமகேந்திராவும்...கொடுக்காத கமலும்....


பாலுமகேந்திராவை காதலிக்க தொடங்கியது முள்ளும் மலரும் படத்தில்தான்.
நடிகர்கள் பெயர் திரையில் தோன்றியதும் கை தட்டி மகிழும் ரசிகர்கள் மத்தியில் டெக்னீசியன்களுக்கு கை தட்டி வரவேற்ப்போம்...
 நானும் எனது நண்பர்களும்...
அந்தப்பழக்கத்தின் பிள்ளையார் சுழி... முள்ளும் மலரும்...
கை தட்டல் வாங்கியது பாலுமகேந்திராவும்,மகேந்திரனும்.
 பாலுமகேந்திராவுக்கு ஏரிபிளக்ஸ் கேமிரா சற்று வாஞ்சையுடன் செயல்பட்டதோ என்ற சந்தேகம் இன்றும் தீரவில்லை.

பாலு மகேந்திராவின் முதல் படம் கோகிலாவில் கமல்தான் ஹீரோ...
அன்று தொடங்கிய வளர்பிறை பந்தம்....
மூன்றாம் பிறையில் இந்திய அரசின் சிறந்த நடிகர் பட்டத்தை சொந்தமாக்கியது கமலுக்கு....

பாலுமகேந்திரா பிழைக்கத்தெரியாத பிறவிக்கலைஞன்.
வெள்ளிவிழா படங்களை தந்தாலும்...வெள்ளிப்பணத்தை அள்ளுவதை பிரதானமாக்கியதில்லை.
லட்சங்களை மதிக்காமல் லட்சியத்துடன் படமெடுத்த போராளி.
இவரது காமிராவால் கவனிக்கப்படாத ஊட்டி லொகேசன்கள்.... சற்று நாணி தலை குனிந்து இருப்பதை பார்க்கலாம்.
அவர் படமெடுத்து தள்ளிய பைன் மரக்காடுகள் கர்வத்தோடு அலைவதை கண்டு களிக்கலாம்.

பல காரணங்களால் பணத்தட்டுப்பாடு வந்தது பாலுமகேந்திராவுக்கு....
கேட்கப்போன இடங்களில் எல்லாக்கதவுகளும் சாத்திக்கொண்டன...
மிகுந்த தயக்கத்துடன் கமலுக்கு போன் செய்து...
தனது நிலையை விளக்கி இரண்டு லட்சம் கடனாக கேட்டார்.
கமல் ஆபிசுக்கு வருமாறு அழைத்தார்.

தனது கம்பீரத்தை அடகு வைத்து... கடன் வாங்க...
காமிராக்கலைஞன்.... கமல் அலுவலகத்துக்கு வந்தார்.
கமல் எப்போதும் போல் அவரை வரவேற்று பேசினார்.
உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை அனைத்து விஷயங்களையும் பேசியவர் கடன் மேட்டரை...மறந்து கூட பேசவில்லை.
சரி...கமலிடம் பைசா...பெயராது ...எனத்தீர்மானித்து...
 போறேன்...கமல்... என புறப்பட்டார்.

ஸாரி..இருங்க....நான் உங்களை வரச்சொன்ன காரணத்தை சொல்லவேயில்லையே....
எனது கம்பெனி ராஜலக்‌ஷ்மி புரடக்‌ஷனில் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன்.
நீங்கள்தான் இயக்கிதர வேண்டும்.
இந்தாங்க... அதற்க்குறிய சம்பளம்...என இருபது லட்சம் எழுதப்பட்ட செக்கை கொடுத்தார்.

அந்தப்படம்தான் சதி லீலாவதி.
தனக்கு ஜோடியாக கோவை சரளாவை போடச்சொல்லி நிர்ப்பந்தித்ததும் கமலே...
ஒரு நகைச்சுவை நடிகையை ஜோடியாக்கும் ஆண்மை....
 கமல் ஒருவருக்கு மட்டுமே இன்று வரை சாத்தியமாகி உள்ளது.
ஆனால் இன்று வரை பாலுமகேந்திரா கேட்ட கடனை கமல் கொடுக்கவேயில்லை. 

Apr 22, 2012

கமலின் நிழல் நிஜமாகிறது!

எனது பள்ளி நாட்களில் என்னை ஆக்கிரமித்தவர் சிவாஜி மட்டும்தான்....
சிவாஜி படங்கள் கிட்டத்தட்ட 60 படங்கள்...
 பத்தாம் வகுப்பு முடிப்பதற்க்குள் பார்த்து விட்டேன்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதன் முதலாக எம்ஜியார் படம்.... குலேபகாவலி பார்த்தேன்.

கிட்டத்தட்ட அதேகால கட்டத்தில்தான் கமலை திரையில் பார்த்தேன்.....
'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற படத்தில் வில்லனாக....
பயங்கரமாக சிரித்து...கோரமான முகத்தை கொண்ட தமிழ் சினிமா வில்லன்களில் மத்தியில்....
அழகான வாலிபனாக....
மயக்கும் விழிகளும்....
குரலிலேயே செக்ஸ் கலந்த வசீகரமும் கொண்ட முற்றிலும் புதிய வில்லனாக காட்சியளித்தார்.

தொடர்ந்து கமலுக்கு அதே மாதிரி படங்களை கொடுத்து கோடம்பாக்கம் அவரை மாறி மாறி கற்பழித்தது.
பாலச்சந்தர் படங்களில் மட்டும் கமலின் கலைத்தன்மை வெளிப்படும்.
அப்படி வந்த கருப்பு வெள்ளை படங்களில் மாஸ்டர்பீஸ்...
 நிழல் நிஜமாகிறது.

இப்படத்தில் கமல் வழங்கிய யதார்த்த நடிப்பை... பின் வந்த எந்த படங்களிலும் கமல் தாண்டவில்லை.
தாண்ட முயற்ச்சிக்கவில்லை என்பதுதான் நிஜம்.

இப்படத்தில் கமல் ஒரு துணை பாத்திரம்தான்.
ஷோபா அறிமுக நாயகியாக தோன்றி
படத்தில் அனைத்து நட்சத்திரங்களையும் அடித்து காலி செய்திருப்பார் நடிப்பில்....

கமல் சிவப்பு சிந்தனை கொண்ட வாலிபனாக அப்படத்தில் காட்சியளிப்பார்.
செயின் ஸ்மோக்கர்.
சாப்பிடும்போது கூட சிகரெட்தான் ஊறுகாய்.
செயின் ஸ்மோக்கர்களுக்குறிய மெல்லிய இருமலை தனது பேச்சில் இழைத்து காட்சிகளை கவிதையாக்கியிருப்பார்.

படம் வெளியான நேரத்தில்... பல முறை இப்படத்தை திரையில் பார்த்து ரசித்திருக்கிறேன்.
அதன் பிறகு இப்படத்தை பார்க்கவேயில்லை.
அந்தப்படத்தின் மீது நான் வைத்திருக்கும் அந்தஸ்திற்க்கு பங்கம் வந்து விடும் என்ற அச்சத்தினால் பார்க்க முயற்ச்சிக்கவில்லை.
படத்தின் பாடல்களை மட்டும் பலமுறை பார்த்து ரசித்து வருகிறேன்.....தனியார் தொலைக்காட்சிகளில்....

கண்னதாசனும்,மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும்,கே.பியும் இணைந்து சரித்திரம் படைத்த பாடல்கள்....

கம்பன் ஏமாந்தான்....
இளம் கன்னியரை... ஒரு மலரென்றானே....
கற்பனை செய்தானே...
கம்பன் ஏமாந்தான்.....

இலக்கணம் மாறுதோ...
இலக்கியம் ஆனதோ....
இது வரை நடித்தது.... அது என்ன வேடம்?
இது என்ன பாடம்.!

சிச்சுவேஷனில்.... இலக்கியம் படைத்திருப்பார் கண்ணதாசன்.

என் மன அடுக்குகளில் அழியா கல்வெட்டுகளாய்...கலந்திருக்கும் காட்சிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.

கமலும் சுமித்ராவும் திருடா...திருடி போல் படம் முழுக்க மோதிக்கொண்டே காதலிப்பார்கள்.
கமல் தனது நண்பன் சரத்பாபு வீட்டில் பேயிங் கெஸ்டாக சாப்பிட வருவார்.
அவரது தங்கை சுமித்ரா... கமல் லைட்டரை எடுத்து ஒளித்து வைத்திருப்பார்.
தனது கவச குண்டலத்தை தேடி கமல் அலைகையில் சுமித்ரா வீட்டு வேலைக்காரி ஷோபா போட்டு கொடுத்து விடுவார்.
“அம்மா...உங்ககிட்ட அதை கொடுக்கலயா.!”

கமல் சுமித்ராவின் பெட்ரூமிற்க்கே சென்று கட்டியணைத்து முத்தமிட முயற்ச்சிப்பார்...
சுமித்ரா திமிறி தடுத்து தள்ளி விடுகையில்...
 “எனக்கு சொந்தமான சிகரெட் லைட்டரை நீங்கள் சொந்தமாக்கி கொள்ள நினைக்கும்போது ...உங்களை சொந்தமாக்க நான் நினைத்ததில் என்ன தப்பு?”
என லாஜிக் பேசுவார்...
 தலையணை அடியில் ஒளித்து வைத்திருந்த சிகரெட் லைட்டரை வீசி எறிவார்.
அதை காட்ச் பிடித்து...
  “ஏண்டா...படவா...உனக்கு ஒளியறுதுக்கு இந்துமதியம்மா...தலைகாணி கேக்குதா”
என சுமித்ராவை அவுட் ஆக்குவார்.

சுமித்ரா வீட்டு வேலைக்காரனாக அனுமந்து என்ற மகத்தான நடிகன் அறிமுகமாகிஅசத்தியிருப்பார்.
அவரை.... படத்தில் எல்லோரும் செவிடன் என்றழைப்பார்கள்.

கமல்:  பெயர் என்ன?
அனுமந்து:  செவிடன்.
கமல்:  உங்க அம்மா உன்னை எப்படி கூப்பிடுவாங்க?
அனுமந்து:  செவிட்டு பொணமேன்னு கூப்பிடுவாங்க...
கமல் அதிர்ச்சியாகி....உனக்கு உங்க அம்மா ஒரு பெயர் வச்சிருப்பாங்க ...
அது என்னன்னு கேட்டுட்டு வா...

அடுத்த காட்சியில்...

அனுமந்து:  என் பெயர் காசி...
கமல்:   காசி...நல்ல பெயர்...நான் உன்னை காசின்னுதான் கூப்பிடுவேன்...போய்ட்டு நாளைக்கு வா

அனுமந்து நெகிழ்ச்சியோடு திரும்பி போகையில்...
கமல், காசி... என அழைப்பார்.
அனுமந்து திரும்பி பார்க்கையில்...
 “ உன் பெயரைச்சொல்லி கூப்பிடணும் போல இருந்துச்சு...கூப்பிடக்கூடாதா!” என உரிமையோடு கொஞ்சுவார்.
அனுமந்து ஒடி வந்து கமல் காலில் விழுவார்.
கமல் அவனை தூக்கி நிறுத்தி
அடச்செவிடா.... என்பார்.

கலை நயமும், மனித நேயமும் இக்காட்சியில் இருந்ததால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இக்காட்சியை அடி பிறழாமல் எழுத முடிகிறது.

படத்தின் மற்றொரு சுவாரஸ்யம்.... மன்மத நாயுடுவாக வந்து அசத்தும் மவுலி...
வார்த்தைக்கு வார்த்தை... வாத்சாயனா.... என்பார்.
 “எல்லோருக்கும் பேவரைட் காட்... பிள்ளையார்,முருகன்னு... இருக்கும்..
எனக்கு வாத்சாயனர்...”
ஒரு சின்ன இடைவெளி விட்டு.... “ வாத்சாயனர்....காம சூத்திரம் எழுதியவர்” என்பார்.
                           
ஷோபா இப்படத்தில்.... முதல் படத்திலேயே... நூறு படத்தில் நடித்த
அனுபவசாலி போல் ஸ்கோர் செய்திருப்பார்.

படத்தின் ஹீரோ...ஹீரோயின் இரண்டுமே ஷோபாதான்.
 “முதல் படத்திலேயே....
 இவ்வளவு கனத்தை புது முகத்தில் ஏற்றுகிறோமே என்ற அச்சத்தில்...ரசிகர்களிடம் ஷோபாவை நெருக்கமாக்க...
 படத்தின் டைட்டில் முழுக்க.... ஷோபாவின் குளோசப் முகங்களை....  விதவிதமாக காட்டினேன்”
 என பின்னாளில் பாலச்சந்தர் பேட்டியில் படித்தேன்.

ந்ல்ல படத்தை ரசிக்க கற்றுக்கொடுத்த எனது முதல் குரு...கே.பிதான்.

Apr 18, 2012

குருவுக்கு வாழ்வளித்த சிஷ்யன் ரஜினி


சிவாஜிராவ் என்ற கண்டக்டரை ரஜினிகாந்த் ஆக்கிய பிரம்மா கே.பாலச்சந்தர்.
அறிமுகப்படுத்திய இயக்குனர்களை... தயாரிப்பாளர்களை...
 திரும்பியே பார்க்காத தமிழ் திரை உலகில்....நன்றிக்கடன் செலுத்துவதில் கர்ணனாக இன்றும் ஜொலிப்பவர் ரஜினிகாந்தே.

கவிதாலயா என்ற நிறுவனம் மூலம்.... பல படங்களை தாயாரித்து இயக்கினார்  பாலச்சந்தர்.
ரஜினியை வைத்து இயக்குவதை தில்லு முல்லுவோடு நிறுத்தி கொண்டார்.
எஸ்.பி.முத்துராமன் போன்ற மசாலா பட இயக்குனர்கள் மூலம்...
 ரஜினி படங்களை தயாரிக்க மட்டுமே செய்தார்.

நூறு படங்களை தயாரித்த கவிதாலாயா நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது.
அத்தனை படங்களின் வரவு செலவை பார்த்தது கவிதாலாயா நடராஜன்.
அந்த ஊழல் பெருச்சாளி.... சமயம் பார்த்து பல கோடிகளை சுருட்டிக்கொண்டு பிரமிட் என்ற நிறுவனத்தை தொடங்கி படம் தயாரிக்க துவங்கியது.
[ஆனால் பாலச்சந்தர் வயிற்றில் அடித்து துவங்கிய... பிரமிட் நிறுவனம்... தயாரித்த ஒரு படம் கூட ஒடவில்லை]

.கடனுக்காக...கடல் மாதிரி இருந்த பங்களாவை விற்று...
 ஒரு பிளாட்டில் வாடகைக்கு சரஸ்வதி குடியேறினாள்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட அன்று நான் தூங்கவில்லை.
ஒரு வாரம் நான் விட்ட சாபங்கள் நடராஜனை எழு ஜென்மங்களுக்கும் துரத்தும்.
பாலச்சந்தர் ரசிகனான நானே கொதித்து போனேன்.
ரஜினிக்கு இருக்காதா!

அண்ணாமலையாக அவதாரம் எடுத்தார்.

குசேலன் மூலமாக மீண்டும் குருவை குபேரனாக்கிய கண்ணன் ரஜினி.

போன பதிவில் லகுட பாண்டி என்ற கொசு விடாமல் துரத்தியது.
விஷயத்தை.... முந்தைய பதிவின்.... பின்னூட்டத்தில் காண்க...
அலோ...மிஸ்டர் லகுட பாண்டி...
எம்.ஜி.யார் முதல்வராக இருந்த நேரம்...
மயிலை குருபாதம் என்றொரு தயாரிப்பாளர்....அதிமுக ரவுடி.
அவரை ரஜினி காரில்....ஒட...ஒட...  விரட்டி....
 கொல்ல முயற்ச்சித்தார்.
காம்பவுண்ட் சுவரில் மோதிநிறுத்தினார்.
ஜஸ்ட்... மிஸ்... குருபாதம்.
இந்த கொலை முயற்ச்சி கேஸ் பற்றி தெரியுமா?....லக்க்க்க்குட பாண்டி.

தனது கல்யாணம் பற்றிய செய்தியை பத்திரிக்கையாளர்களை கூட்டி அறிவித்தார்.
திருப்பதியில் நடக்கும் கல்யாணத்துக்கு யாரும் வரக்கூடாது என்றார்.
 “வந்தால்”....எனக்கேட்ட பத்திரிக்கையாளரிடம் “செருப்பால் அடிப்பேன்” என்ற உண்மையான மனிதன் ரஜினி.
நிஜத்தில் நடிக்க தெரியாது.
அந்த திறமை அவருக்கு கிடையாது.
கமலுக்கும் கிடையாது.
அதனால்தான் அவர்கள் அரசியலுக்கு வர மறுக்கிறார்கள்.

தமிழ்நாடே கொதித்துப்போய் இருக்கும் மின்வெட்டு பிரச்சனைக்காக ரஜினி குரல் கொடுத்து போராடினால் தமிழ்நாடே அவரது பின்னால் திரண்டு நிற்க்கும்.
ஆனால் அவர் எப்போதும் போல...
 கோச்சடையானில் ஒளிந்து கொண்டார்..
இந்த ரஜினியை... எனக்கு என்றுமே பிடிக்காது.

Apr 16, 2012

ரஜினியை காப்பாற்றிய சிவாஜியும்...சிவாஜி வீட்டை காப்பாற்றிய ரஜினியும்...


ரஜினி குறுகிய காலங்களில் ஸ்டார் அந்தஸ்தை அடைந்து விட்டார்.
பட்டை சாராயம் சாப்பிட்ட மனிதனுக்கு.... ஸ்காட்ச், பாட்டில் பாட்டிலாக கிடைத்தது.
போதை, எதில் கிடைத்தாலும்... அதை தேடித்தேடி சுவைக்க ஆரம்பித்தார்.
கஞ்சா,ஜர்தா பீடா,ஜாதிக்காய்...என ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை மனிதன்.
ஒரு நாளைக்கு... மூன்று கால்ஷீட்டும் கொடுத்து விட்டு....
 [எட்டு மணி நேரம்... ஒரு கால்ஷீட்] 24 மணி நேரமும் ஒய்வறியா உழைப்பை வாரி வழங்கினார்.
ரசிகர்களும்...தயாரிப்பாளர்களும்...மீடியாவும் விடாமல் ரஜினியை துரத்தினார்கள்.
அவர் ஏறிய உயரத்தை தாங்க முடியாமல்... தள்ளாடினார்.

மன நிலை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில்...
 நினைத்தாலே இனிக்கும் படத்துக்காக சிங்கப்பூர் சென்ற போது... பாலச்சந்தரையே அடிக்க கை ஒங்கி விட்டார்.
 அடிக்க வந்தது ரஜினி அல்ல...மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை.... எனக்கண்டு கொண்ட இயக்குனர் பாலச்சந்தரும்...சிவாஜியும் சேர்ந்து...
 தங்களுக்கு வேண்டிய டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை அளித்து நார்மலாக்கினார்கள்.
ஆனால் மீடீயாதொடர்ந்து பைத்தியக்கார பட்டம் கட்டி கொண்டே இருந்தது.

தயாரிப்பாளர்கள் ரஜினியை வைத்து படமெடுக்க தயங்கிய காலத்தில்...
 சிவாஜி, தன்னுடைய படங்களில் ரஜினியை நடிக்க வைத்து வாழ்வளித்தார்.

எம்ஜியார் முதல்வரானதால்... சிவாஜி, தமிழ் சினிமாவில்....
 ஏக போக சக்ரவர்த்தியாக கொடி கட்டி பறந்த காலம்.
ரஜினியை... நான் வாழ வைப்பேன் ...என கை கொடுத்த சிவாஜி...
 அதே பெயரில் ஒரு படமும் கொடுத்தார்.
அந்தப்படம் ரஜினிக்கு மறு வாழ்வு கொடுத்தது.

அதற்க்கு பிறகு வந்த நல்லவனுக்கு நல்லவன்... சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உறுதி செய்தது.
அதற்க்கு முன்னால் பில்லா,ரங்கா,பொல்லாதவன் என கொடியவர்கள் பெயரிலேயே ரஜினி நடித்தார்
ந.ந படத்துக்குப்பிறகு ரஜினியின் படப்பெயர்கள் மாறின .
தர்மதுரை,மனிதன்,கை கொடுக்கும் கை.... என பாசிட்டிவ் பெயர்களுக்கு மாறினார்.
படங்களின் பெயருக்கேற்றார் போல் தானும் மாறினார்.

சிவாஜியின் படங்களை... சிவாஜி பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரித்த போது அந்தப்பணிகளை சிறப்பாக செய்தவர் அவரது தம்பி.சண்முகம்.
அவரது மறைவுக்குப்பிறகு அந்தப்பதவிக்கு வந்தவர் சிவாஜியின் மகன்
ராம் குமார்.
இவரது நிர்வாகத்தில் சிவாஜி பிலிம்ஸ் அதல பாதளத்துக்கு வந்தது.
சிவாஜி என்ற சிங்கமும்,பிரபு என்ற சிங்கக்குட்டியும் வீட்டில் இருக்க...
 சின்னி ஜெயந்த் என்ற பூனைக்குட்டியை வைத்து எந்த மடையனாவது படம் எடுப்பானா?
ஆனால் ராம் குமார் எடுப்பார்.

சிவாஜியின் மறைவுக்குப்பிறகு இன்னும் மோசமாக செயல் பட்டதன் விளைவு சிவாஜியின் கனவு இல்லமான அன்னை இல்லம் விற்பனைக்கு வந்தது.
விஷயம் கேள்விப்பட்டு ஒடி வந்த ரஜினி கை கொடுத்தார்.
பிரபுவின் தயாரிப்பில் சந்தரமுகி வந்தது...
மற்றதை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்.

ராம் குமார் நல்லவர்...மிகவும் நல்லவர்.
அந்த ஒரு தகுதி போதாதா...வியாபாரத்தில் தோற்க...!
யானை படுத்தாலும் குதிரை மட்டம்.
அவசரத்தேவைக்காக சிவாஜியின் தோட்டத்தை விற்றார்.
வாங்கிய ரியல் எஸ்டேட் வியாபாரி.... பல மடங்கு மேற்க்கொண்டு விற்று பல கோடிகளை பார்த்து விட்டார்.
அதில் சில கோடிகளை ராம் குமாரிடம் கொடுத்தார்.
“எங்களுக்கு உரிய தொகையை நீங்கள் கொடுத்து விட்டீர்கள்.
இது உங்கள் வியாபார த்திறக்கு கிடைத்த லாபம்.
இதில் எங்களுக்கு பங்கு தரத்தேவையில்லை” என திருப்பி கொடுத்த நல்லவர் ராம் குமார்.

குருவிற்க்கும் வாழ்வளித்த ரஜினியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Apr 14, 2012

ரஜினி-மனிதருள் மாணிக்கம்


ரஜினிகாந்த் என்ற மந்திரச்சொல் தமிழ் சினிமாவில் நெறைய பேரை வாழ வைத்திருக்கிறது.
அவரது எளிமை ....என்றும் எனக்கு ஆசரியத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது.

சிவாஜி அவர்கள் இறந்த அன்று பெசண்ட் நகர் சுடுகாட்டுக்கு விடியற்காலையிலேயே சென்று விட்டேன்.
அப்போதே போலிஸ் கெடுபிடி இருந்தது
.நான் அப்போது ஹோண்டா சிட்டி கார் வைத்திருந்தேன்.
அதனால் எனது காரை சுடுகாடு வாசல் வரை கேள்வியே கேட்காமல் அனுமதித்தனர்.
எனது கார் பக்கத்தில் ஒரு அம்பாஸிடர் கார் வந்து நின்றது.
அந்தக்கார் டிரைவரை... போலிஸ்காரர்....  “இங்கு நிறுத்தக்கூடாது” என விரட்டினார்.
அந்த டிரைவர்...  “சார்.... இது ரஜினி சார் கார்...சிவாஜி சார் தகனம் முடிந்ததும்...அவரை அழைத்து செல்ல வந்துள்ளேன்...”என பவ்யமாக தெரிவித்தார்.
போலிஸ்காரர் விடாமல் ... “யார் கிட்ட காது குத்தற...எடுய்யா...வண்டியை” என மிரட்டினார்.
நான் தலையிட்டு... “ இந்த வண்டி ரஜினி சார் வண்டிதான்.
அதுவும் இப்போதுதான் சமீபத்தில் வாங்கினார்”.எனதெரிவித்தேன்.
ஆச்சரியத்தில் போலிஸ்காரர் வாயை பிளந்தார்.

ரஜினிஅம்பாஸிடர் வாங்கிய அதே நேரம் இசை அமைப்பாளர் தேவா மிட்சுபிச்ஷி லேன்சர் கார் வாங்கினார்.
இது பற்றி நெருங்கிய வட்டாரத்தில் தேவா அடித்த கமெண்ட்... “அம்பாஸிடரெல்லாம்... இந்தக்காலத்தில் தெய்வங்கள்தான் வாங்கும்.....
ரஜினி சார் தெய்வம்...
நான் சாதரண மனிதன் .அதனால்தான் லேன்சர் வாங்கினேன்”

ரஜினியை முதன் முதலில் கதாநாயகனாக போட்டு படம் தயாரித்தவர் கலைஞானம்.
படம் பைரவி.

இந்தப்படம் போஸ்டரில்தான்....
 அப்படத்தின் விநியோகஸ்தர் கலைப்புலி தாணு... 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை வழங்கினார்.
அதற்க்கு கொஞ்ச நாள் முன்புதான் சென்னை கேசினோவில் ‘ஸ்னேக்’என்ற ஆங்கிலப்படம் வெளியாகி இருந்தது.
இப்பட போஸ்டர் 'SSSSSSSSSSNAKE' என்றிருந்தது.
அதை காப்பிஅடித்து தாணு "SSSSSSSSSSUPER STAR' ரஜினி காந்த் நடிக்கும்... பைரவி.... என மிகப்பிரம்மாண்டமான போஸ்டர் அடித்து தூள் கிளப்பினார்.
படமும் சென்னை பிளாசாவில் நூறு நாட்கள் ஒடியது.
கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே சூப்பர்ஸ்டார் பட்டம் ஒட்டி விட்டது.

கலைஞானம் ஒரு பைசா முதலீடு இல்லாமல் இப்படத்தை தயாரித்தார்.
படம் சூட்டிங் துவங்கும் முன்னரே... விநியோகஸ்தர்களிடம் விற்று...
 அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்திலேயே மொத்தப்படத்தையும் எடுத்து விட்டார்.
தேவர் பிலிம்சில் கதை இலாகாவில் வேலை பார்த்த கலைஞானத்தை தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தியது
ரஜினி.
அதனால் தன்னை முதலில் கதாநாயகன் ஆக்கியவர் என்ற காரணத்திற்க்காக
கலைஞானத்துக்கு ரஜினி செய்த உதவி எண்ணிலடங்கா.
கலைஞானம் என்னிடம் சொன்னது.... “சினிமாவில் நேரில் போய் கேட்டால் கூட உதவி கிடைக்காது.
ஆனால் ரஜினி அவரே தேடி வந்து உதவி செய்வார்”.
அவரது ஸ்டைலிலே மிக உயர்வானது இதுதான்.

தேவர்தான் முதன் முதலில் ரஜினிக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தவர்.
மொத்தப்பணத்தையும் அட்வான்சாக கொடுப்பது தேவர் ஸ்டைல்.
ஒரு லட்ச ரூபாயை தட்டில் வைத்து பூ...பழங்களோடு வைத்து ஆசிர்வதித்து கொடுத்தார்.
ரஜினி லட்ச ரூபாயை முழுசாக கண்ணால பார்த்ததும் அப்போதுதான்.
அந்தப்படம்தான் தாய் மீதுசத்தியம்.
[இப்படத்தின் ஒரிஜினல் ஆங்கிலப்படத்தை இப்போதுதான் பார்த்தேன்]

தேவர் மறைந்தபிறகு அவரது வாரிசுகள் சோபிக்கவில்லை.
மொத்த சொத்தையும் அழித்து விட்டார்கள்.
கடன்காரன்களுக்கு பயந்து தேவர் மகன் சாதாரண லாட்ஜில் ஒளிந்து கிடந்தார்.
ரஜினி விஷயம் கேள்விப்பட்டு அந்த டஞ்சன் லாட்ஜுக்கு நேரிலேயே தேடிக்கொண்டு வந்து விட்டார்.
கையோடு ஒரு ஹிந்திப்பட கேசட்டும் கொண்டு போயிருந்தார்.
 “இந்த ஹிந்திப்படத்தை ரைட்ஸ் வாங்கி பண்ணுங்க .
நானே ஹீரோவா நடிக்கிறேன்.
தம்பி பிரபுவை... ஒரு காரெக்டருக்கு நானே கால்ஷீட் வாங்கித்தாரேன்.
 லாபத்தை வச்சு கடனை அடைச்சுட்டு நிம்மதியா இருங்க” என்று அபய கரம் காட்டினார்.

நேர்மை என்றால் தேவர்....ஆனால்அவரது மகன்... அந்தப்படத்தை...
 ஒரே ஏரியாவுக்கு ஐந்து பேரிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டான்.
பிராடுத்தனம் வெளியாகியதும் ஒரே பஞ்சாயத்து....
அப்போதும் ரஜினியே காப்பாற்றினார்.
முதன்முதல் அட்வான்ஸ் கொடுத்தவங்களுக்கு... இந்தப்படம்.
அடுத்ததா... அட்வான்ஸ் கொடுத்தவங்களுக்கு... அடுத்தப்படம்...
 என சாமாதானம் பண்ணி படம் வெளியாக உதவினார்.
 அந்தப்படம்தான்... தர்மத்தின் தலைவன்.
படத்தின் பெயருக்கேற்றார் போல் ரஜினி... சாட்சாத்...
 தர்மத்தின் தலைவன்தான்.

சிவாஜி சாரின் வீடு.... அன்னை இல்லம்... அவரது வாரிசுகளிடம் தங்கியிருப்பதற்க்கு காரணமும் ரஜினியே!
விபரம் அடுத்தப்பதிவில்...

இப்பதிவை எழுதிய நான்... அன்றும்...இன்றும்...என்றும்....பக்கா கமல் ரசிகன்.
செய்திகள் அனைத்தும் அக்மார்க் உண்மைகள்.

Apr 12, 2012

சுனாமி வந்திருக்க வேண்டும்!


அடடா...ஏமாற்றி விட்டாயே! சுனாமி...

வந்திருக்க வேண்டும்...
கூடங்குளம் அணு உலையை சுருட்டியிருக்க வேண்டும்...
ஆபத்தில்லை என முழங்கிய எத்தர்களை விழுங்கியிருக்க வேண்டும்...

மின் வெட்டுக்கு காரணம் நீதான்...நீதான்...என மாற்றி மாற்றி சூ*******கள்
கு***யில் சுண்ணாம்பு பூசியிருக்க வேண்டும்...

அக்கா...அக்கா...அக்கா...
என்னடி... தங்கச்சி.... தங்கச்சி.... தங்கச்சி....
பசப்பும் பாச மலர்களை பொலி போட்டிருக்க வேண்டும்....

இதயம் இனித்த.....கண்கள் பனித்த...
 கோடீஸ்வர கோமான்களை வதைத்திருக்க வேண்டும்....
தீக்குளிப்பேன்...எனக் குதிக்கும் பராசக்தி பரந்தாமனை ...
எமனையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் எழுத்தாளனை ...
கொண்டு போயிருக்க வேண்டும்.

ஒண்ணுமே செய்ய... உன்னால் கூட, முடியாமல் போனால்...
ஷார்ட் கட்டில்... கோவை வந்து....
 உலகசினிமா ரசிகனையாவது கொண்டு போ...
வெந்ததை தின்று... விதி வந்து சாக அவனால் முடியாது.


Apr 10, 2012

CHUNGKING EXPRESS-ஜாலியான உலகசினிமா


'சங்கிங் எக்ஸ்பிரஸ்' கோணங்கள் பிலிம் சொசைட்டியில்...
'யூபிஎஸ்' புண்ணியத்தில் தடையின்றி திரையிடப்பட்டது.
படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு, புழுக்கத்தையும்...கொசுக்கடியையும் ...
தமிழக அரசு இலவச வசதியாக.... ஏற்ப்பாடு செய்திருந்தது.


இப்படத்தை இயக்கியது வோங்கார் வாய்[Wong Kar Wai].
இவரது மாஸ்டர் பீஸ் ‘இன் தி மூட் பார் லவ்’[In The Mood For Love]
 பார்த்து விட்டீர்களா?.
இன்னும் பார்க்கவில்லையென்றால்...உலகின் தலை சிறந்த காதல் காவியத்தை பார்க்காத பாவம் வந்து சேரும்.

ஆரம்பத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணி புரிந்து புகழையும்...பணத்தையும் சம்பாதித்தவர்.
ஆனால் தன் படங்களுக்கு திரைக்கதை எழுதாமல் சூட்டிங் புறப்பட்டு விடுவார்.
தனக்கு தோன்றுவதை எடுத்து தள்ளுவார்.
இந்த ஸ்டைலில் நமது கோலிவுட் இயக்குனர்களும் படமெடுத்து பிலிம் நெகட்டிவை தின்பார்கள்.
இவர்களுக்கும் வோங்கார் வாய்க்கும் என்ன வித்தியாசம்?.
எடிட்டிங் முடிந்து... இவரது படைப்பு... படமாக வரும்.
கோலிவுட்டில் பப்படமாக வரும்.....பிச்சைக்காரன் வாந்தி போல் இருக்கும்.
எனக்கு தெரிந்து கதை,திரைக்கதை பக்காவாக ரெடி செய்து ,பிலிம் நெகட்டிவை சிக்கனமாக செலவு செய்பவர்கள் மணிரத்னமும்,கமலும்தான்.

படத்தில் இரண்டு கதை இருக்கிறது.
ஒன்று முடிந்த பின்தான்... இரண்டாவது தொடர்கிறது.
படத்தின் கதாநாயகன் போலிஸ்காரன்.
அவனது மூன்று காதல்கள்தான் படமே...
படம் தொடக்கத்திலேயே முதல் காதல் பணால்.
இரண்டாவது காதல் முற்றும் இடத்தில்தான்.... இரண்டாவது கதை ஆரம்பம்.
மூன்றாவது காதலியாக வருபவள்தான்...படத்தின் நாயகி.

ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் இவள்....பால் குடிக்காத பூனை போல் தோற்றமளிக்கும் கவர்ச்சி கேடி...சுருக்கமாக ஜெனிலியா.
 போலிஸ்காரனது முதலிரண்டு காதலிகளுமே...
 இவனால் காதலிக்கப்பட்டவர்கள்.
மூன்றாவது காதலி....இவனை காதலித்தவள்.
இவனை மட்டுமே காதலித்தவள்.

இவளது பரிசுத்தமான காதலை புரிந்து கொண்டு, இவளை ஏற்க வருகையில்  நாட்டை விட்டே போய் விடுகிறாள்.
ஏன் போனாள்?
இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா?
இக்கேள்விக்கு விடை சொல்வதில்லை என வோங்கார்வாயிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்.

'சங்கிங்' என்ற பகுதி ஹாங்காங்கில் உள்ள காங்கிரீட் காடு.
அங்கு சீனர்கள்,வெள்ளையர்கள்,கருப்பினத்தவர்கள்,இந்தியர்கள் எல்லாம் கலந்து கட்டி வாழும் பகுதி.
அன்பு-வெறுப்பு,
நம்பிக்கை-.துரோகம்,
நேர்மை-.கயமை
சரிவிகிதத்தில் இல்லாத பகுதி.
கடவுளை விட... சாத்தான் அல்லது ராஜபக்‌ஷே பவர்புல்லாக ஆட்சி செய்யுமிடம்.
வோங்கார்வாய்க்கு பேவரைட் சூட்டிங் ஸ்பாட்.
குறுகிய இடத்தில் வசிக்கும் விசாலமான மனங்களை...
 தனது வித்தியாசமான காமிரா கோண்ங்களில் படம் பிடித்து...
 நம்மை அந்த இடத்தில் வாடகை இல்லாமல் குடியமர்த்தி விடுகிறார்.
ஹாங்காங் போனால் எனது முதல் விசிட் சங்கிங்தான்.

உங்கள் நண்பர் காதலில் தோல்வியுற்று....
தேவதாஸ் இடத்தை பிடிக்க முயற்ச்சித்து கொண்டிருந்தால்....
இப்படத்தை அவரிடம் காட்டுங்கள்.
இரண்டாவது காதலியை தேடி....கார்த்திகை மாதத்து நாயாவது நிச்சயம்.

Apr 8, 2012

எழுத்தாளர் அ.முத்து லிங்கம்-ஈழத்து சுஜாதா

கட்டுரை இலக்கியத்தில்... சுஜாதாவிற்க்குப்பிறகு எனக்கு மிகவும் பிடித்தமானவர் 
அ.முத்து லிங்கம்.
பெரும்பாலும் அவரது கட்டுரைகளில் நகைச்சுவை... 10000 வாலா பட்டாஸ் போல...
வெடித்து தெறிக்கும்.
சமீபத்தில் அவரது கட்டுரை ஒன்று படித்ததில் ஆடிப்போய் விட்டேன்.
கூடங்குளம் அணு உலை வெடித்தது போல்... என்னுள் பாதிப்பு ஏற்படுத்தியது.
இதோ அவரது கட்டுரை... 


நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரே கதையை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கொடூரமான கதை உண்மையாகக்கூட இருக்கலாம். சோமாலியாவில் ஒரு தாயும் சேயும் பாலைவனத்தை கடக்கிறார்கள். மணல் தணல் போல சுடுகிறது. தாய் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஓடுவதும், மர நிழல்களில் சற்று நின்று இளைப்பாறுவதுமாக  முன்னேறுகிறாள். ஓர் இடத்தில் கால் வெந்துபோக வேதனை தாங்க முடியாமல் குழந்தையை கொதிக்கும் மணல்மேல் போட்டு அதன் மேல் ஏறி நிற்கிறாள். எத்தனை வலி என்றால் அந்தத் தாய் அப்படிச் செய்திருப்பாள் என்று நினைக்கும்போதே மனம் பதைக்கிறது.


 ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை நிறைவேறியிருக்கிறது. தண்ணீர் ஊற்றிய தீர்மானம் என்றாலும் வெற்றி வெற்றிதான். மகிழ்ச்சியில், என் உடம்பிலிருந்த அத்தனை ரத்தமும் நாளை விடியாது என்பது போல சுழன்று ஓடியது. அதிசயத்திலும் அதிசயமாக இந்தியா பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தது. சோமாலியா தாய் செய்ததுபோல இந்தியா குழந்தைமேல் ஏறி நிற்கவில்லை. குழந்தை இன்னும் இடுப்பிலே தான் இருக்கிறது. பாலைவனமோ நீண்ட தூரம். எவ்வளவு தூரத்துக்கு இந்தியா குழந்தையை காவும், எப்பொழுது கீழே போடப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.


அவரது கட்டுரை முழுவதும் படிக்க... அவரது இணைய தளத்துக்கு செல்லும் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்.
http://amuttu.net/home

என்னை பாராட்டி ஐயா திரு. முத்து லிங்கம் அவர்கள் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்கள்.
ஐயாவின் பாராட்டை தக்க வைத்துக்கொள்ள நான் உழைப்பேன்.


நண்பரே,
உங்கள் பதிவு கண்டேன். உங்களுடைய எழுத்தும் வசீகரமானதுதான். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
அன்புடன்
அ.மு

Apr 6, 2012

OMAR MUKHTAR-The Lion Of Desert[1981]லிபியா பிரபாகரன்


ஒமர் முக்தார் சென்னை அலங்கார் தியேட்டரில் 1983 ல் வெளியாகி வெற்றிகரமாக ஒடிய படம்.
அப்போது நான் பார்த்த போது இப்படம்...நம்மூர் வீரபண்டிய கட்ட பொம்மனை ஞாபகப்படுத்தியது.
சமீபத்தில் இப்படத்தை டிவிடியில் பார்க்கும் போது....
 ஒமர் முக்தாரை... பிரபாகரனின் வடிவமாக பார்த்தேன்.
ஒமர் முக்தாராக இப்படத்தில் வாழ்ந்தவர் என்னுடைய பேவரைட்...
அண்டனி க்வீன்.
பிரம்மாண்டமாக இப்படத்தை தயார்த்து இயக்கியவர்
முஸ்தபா அக்காட்.

இத்தாலிய ராஜ பக்‌ஷே முசோலினிக்கு...
பெருத்த கவலை ..அவமானம்...
காரணம்... ஒமர் முக்தார்.

அவனது தளபதி கிராஸியானியை அழைத்து...
 “இன்று முதல் உனது பணி....ஒமர் முக்தாரை அழிப்பது” என்றான்..
அழித்தொழிப்பதில் டாக்டர் பட்டம் பெற்ற கிராஸியானி
‘நான் வந்து விட்டேன்’ என செய்தி சொல்ல ‘இளைய தளபதி’ தலைமையில் கொலைப்படையை ஏவுகிறான்.
அவன் அப்பாவி கிராம மக்களை அழித்து...
மொத்த கிராமத்தையே ‘தீ’க்கு தின்ன கொடுக்கிறான்.
அந்த கொலைகாரக்கூட்டம் மொத்தத்தையும் அழித்து...
 பதிலடி கொடுக்கிறார் ஒமர் முக்தார்.

“ஆஹா...இந்த ஒமர் முக்தார் முறுக்கல்ல...நொறுக்குவதற்க்கு” என புரிந்து கொண்டு ந்ரி வேலை செய்கிறான்.


சாமாதான பேச்சு வார்த்தை என்ற சிங்கள வலையை விரிக்கிறான்.
மூச்சு விட கிடைத்த நேரத்தில் மொத்த லிபியாவின் மூச்சை நிறுத்த படை பலத்தை பெருக்கி விடுகிறான்.


விமானங்கள் மூலமாக....
மக்கள் வசிக்கும் இடங்கள்...
பள்ளிக்கூடங்கள்...
மருத்துவமனைகள் மீது குறி வைத்து குண்டுகள் வீசி அழிக்கிறான்.
இக்காட்சிகள் ராஜ பக்‌ஷேவின் குரு.... கிராஸியானி என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக விளக்கும்.

எல்லா ஊர்களிலும் எட்டப்பன்,கிட்டு வகையறாக்கள் உண்டு.
அவர்கள் மூலமாகவும் ஒமர் முக்தாருக்கு நெருக்கடி கொடுக்கிறான்.
ஆக்கிரமிப்பு எல்கைகளை விரிவுபடுத்தியதன் மூலமாக...
ஒமர் முக்தாருக்கு கிடைத்து வந்த...
எகிப்து நாட்டின் உதவியை... கிடைக்க விடாமல் தடுக்கிறான்.

இறுதிப்போரில் ஒமர் முக்தார் கைது செய்யப்படுகிறார்.


விசாரணை நாடகம் முடிந்ததும் தூக்கிலிடப்படுகிறார்.
இக்காட்சியில் உள்ள குறியீடுகள் அனைத்தும்....
 இப்போராட்டம் தொடர்ந்து முன்னேறும்...
ஒராயிரம் ஒமர் முக்தார்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்து செல்வார்கள்.... என்பதை வெகு அழகாக ஒங்கி உரத்து சொல்கிறது.

ஒரிஜினல் ஒமர் முக்தார் படம்...

இத்தாலியர்களால் வதை செய்யப்பட்ட ....
லிபியர்களின் போராட்டத்தை சொன்ன
இப்படம்...
இத்தாலிக்காரியால் வதை செய்யப்பட்ட...
 ஈழப்போராட்டத்தையும்....பிரபாகரன் வீரத்தையும்...
 உலகிற்க்கு எடுத்து சொல்ல...
 இதே தரத்தில் எடுக்கப்பட வேண்டும் என்ற உண்மையை சொல்கிறது.
இது வரை வந்த அத்தனை படங்களும் அபத்தமானது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக....கோபத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
இது வரை படமெடுத்த அத்தனை இயக்குனர்களும் மீடீயாக்கர்கள்[MEDIOCRE].
இவர்கள் ராஜ பக்ஷேவை விட ஆபத்தானவர்கள்.

காந்தி படம் எடுத்த ரிச்சர்டு அட்டன்பரோ....
 ‘சே’ படம் எடுத்த ஸ்டீவன் சோடர்பர்க்...
லாஸ்ட் எம்பரர் எடுத்த பெட்ரோ லூசி...
இவர்கள் தரத்தில்.... பிரபாகரன் வரலாறு... படமானால்....
 உலகமே...தமிழ் ஈழம் உருவாக்க திரண்டு வரும்.

Apr 4, 2012

A Love To Avenge-தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆங்கிலப்படம்.

தமிழ்நாட்டில் அதுவும் கோவையில் எடுக்கப்பட்ட ஆங்கிலப்படம்...
ஆனால் குறும்படம்.
கோவை பி,எஸ்.ஜி கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி விஸ்காம் இறுதி ஆண்டு படிக்கும் மாண்வி எடுத்த கிரைம் குறும்படம்.
வெறும் ஆறாயிரம் படஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
யூ ட்யூப்பில் இரண்டு பாகங்களாக காணக்கிடைக்கிறது.
கீழே அதற்க்குறிய இணைப்பு கொடுத்துள்ளேன்.

முதல் பாகம் காண....
http://www.youtube.com/watch?v=fEi3RdEcgGc&list=PL922C101600EF3591&index=1&feature=plpp_video

இரண்டாம் பாகம் காண....
http://www.youtube.com/watch?v=43w-LHSPCKU&feature=relmfu

இப்படத்தை பற்றிய விமர்சனம் நான் எதுவும் சொல்லப்போவதில்லை.
சொல்லவும் கூடாது.
ஏனென்றால் படமெடுத்தது எனது ஒரே மகள் நந்தினி பாஸ்கரன்.
நிறை... குறைகளை நீங்கள் எல்லோரும் தயவு செய்து சொல்லுங்கள்.
அவளை வளர்த்துக்கொள்ள உரமாக அவை அமையட்டும்.

Apr 2, 2012

பதினைந்து லடசத்தில் படமெடுக்கலாம்!


4-4-2012 தேதியிட்ட ஆனந்த விகடனில் ஓளிப்பதிவாளர் செழியன்.. சைக்கிளிஸ்ட் படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப்பை பேட்டி கண்டு அந்த அனுபவத்தை அற்ப்புதமாக ஒரு கட்டுரையில் படம் பிடித்திருந்தார்.
அப்பெரு வெள்ளத்தில் சிலதுளிகள்....


21 வயது வரை சினிமாவே பார்க்காதவர்.
இன்று உலகம் போற்றும் திரைப்பட இயக்குனர்.
இவரது மனைவி மெர்ஷியா,மகள்கள் சமீரா,ஹானா மூவருமே இயக்குனர்கள்.
மகன் மெய்சம் ஒளிப்பதிவாளர்.
உலகத்திரைப்பட விழாக்களில் இந்த குடும்பம் பெற்ற சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 89.

ஈரானுக்கு எதிராக படமெடுத்ததால்...குடும்பத்தோடு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.

திரைப்பட கல்லூரி பற்றி...

“இப்போது இருக்கிற கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதற்க்காக சினிமாவை ஒரு தொழிலாக கற்றுக்கொடுக்கின்றன.
அரசுப்பணியாளர் போல ஒரு சினிமாக்காரரை உருவாக்குகின்றன”

செழியன்: உங்கள் படங்கள் அனைத்திலும் தொழில் முறை அல்லாத சாதாரண மனிதர்களையே நடிக்க வைக்கிறீர்கள்.
அவர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

“நான் நடிகர்களாக தேர்ந்து எடுக்கிறவர்களைப் பிச்சை எடுக்கத் தெருவுக்கு அனுப்புவேன்.
யார் அதிகமாக பிச்சை எடுத்து வருகிறார்களோ அவர்தான் நடிகர்.
எந்த கூச்சமும் இல்லாமல் மக்களிடம் சென்று தன் ஒரு பிச்சைக்காரராக நம்ப வைக்க முடிகிறது என்றால்,அவர்தானே சிறந்த நடிகர்!”

நமது நடிகர்கள்,இயக்குனர்கள் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவுகள் கோடிக்கணக்கில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் குறைந்தது 100 பேர் இருப்பதை கேட்டு தலை சுற்றி இருக்கிறது மக்மல்பஃப்புக்கு...

“100 பேரை வைத்துக்கொண்டு எப்படி படமெடுக்க முடியும்?
உதாரணத்துக்கு வறுமை பற்றிய படமெடுக்கிறீர்கள் என்றால்,ஷாட் முடிந்ததும் 100 பேர் அதே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்பீர்களா?
எங்கள் படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
உங்கள் ரூபாய் மதிப்பில் வெறும் 15 லட்சம்.
எனது படப்பிடிப்பில் நான்,டிரைவர்,சமையற்காரர்,நடிகர் எல்லாம் சேர்த்து
8 பேர்தான் இருப்போம்.”

“சினிமா இங்கு மிகவும் கெட்டுப்போன நிலையில் இருக்கிறது.
ஒரு தொழிலாக இருந்தாலும்,சினிமாவாக இருந்தாலும், நிறையப்பணம் முதலீடு செய்யப்படுகிறது என்றால்,அதை வைத்து லாபம் பார்க்கவே எல்லோரும் நினைப்பார்கள்.
நல்ல படம் எடுக்க யார் நினைப்பார்கள்?
செலவை குறைக்க வேண்டும்.

எனது மகள் ‘புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆப் ஷேம்’ என்றொரு படம் எடுத்தாள்.
இது வீடுகளில் நாம் பயன்படுத்தும் கையளவு டிஜிடல் கேமாராவினால் எடுக்கப்பட்டது.
செலவு உங்கள் பணத்தில் வெறும் 8 லட்ச ரூபாய்.
திரைப்பட விழாக்களில் அது ஈட்டிய பணம் 15 லட்சம்.
அதுதான் அடுத்தப்படத்துக்கான மூலதனம்.
இந்தியாவில் கதைக்கா பஞ்சம்?
சாலையில்தான் எத்தனை கதைகள்!

நானும், எனது மனைவி மெர்ஷியாவும் நேற்று பிரசாத் லேப்பிலிருந்து வரும்போது ஒரு கடையில் நின்றோம்.
அந்தக்கடையில் பழச்சாறு வாங்கி குடிக்க முயன்றபோது ,என் கால்களை யாரோ சுரண்டினார்கள்.
திரும்பி பார்த்தேன்.
அழுக்கான ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான்.
அவன் என் கையில் இருந்த பழச்சாறை கேட்டான்.
நானும் மறுக்காமல் அவனிடம் கொடுத்து விட்டு,அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன்.
அது வரைக்கும் அவன் செய்ததில் எதுவும் இல்லை.
அதற்க்கு மேல் அவன் செய்ததுதான் தீராத ஆச்சரியமாக இருந்தது.

என்னிடம் இருந்த பழச்சாறு குவளையை வாங்கியதும் அவன் உடனே குடிக்கவில்லை.
அதை எடுத்துக்கொண்டு நடந்து சென்றான்.
அவனது உடைகள் அவ்வளவு அழுக்காக இருந்தன.
என்றாலும்,சாலையை கடந்த அவன் அங்கு இருந்த திண்டில் ஒரு செய்தி தாளை விரித்து உட்கார்ந்தான்.
அதில் ஒரு ராஜாவைப்போல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு,
போகும்... வரும்.... வாகனங்களையும், மனிதர்களையும்
ஏளனமாகப்பார்த்துக் கொண்டே அந்த பழச்சாறை பருகினான்.
 நான் அசந்து விட்டேன்.
அந்தச்சிறுவனை பின் தொடருங்கள்.
அங்கு ஒரு கதை நிச்சயமாக இருக்கிறது.
அதுதான் சினிமா.
இரானிய சினிமா ஒளிர்கிறது என்றால்,அதன் காரணம் என்ன?
அதில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகமாக இருக்கின்றார்கள்.
அவர்கள்தானே நமது உண்மையான ஆன்மா”

“இங்கு எனது படங்கள் ,மெர்ஷியாவின் படங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது.
என்னைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று என்னிடமே பிரதி இல்லை.
ஆனால் உங்கள் ஊரில் கிடைக்கிறது.
 இரண்டு பிரதி வாங்கினேன்”

இந்த வரிகளை படித்தபோது... உலகசினிமாவை ஊர் ஊராக விற்ற நான் பெருமிதத்தால் பூரித்துப்போனேன்
நிறை குடம்... மக்மல்பஃப்...
பாராட்டுகிறார்.

மிஷ்கின் போன்ற குறைகுடங்கள்தான் திட்டும்.

மக்பல்பஃப் படைப்புகள்[தகவல் உபயம் விக்கிப்பீடியா] :

Films banned in Iran
Film appearances

[edit]Books on Makhmalbaf

[edit]Films about Makhmalbaf

  • The Closed Eyes of Mohsen
  • Close up, by Abbas Kiarostami, 1990
  • Friendly Persuasion: Iranian Cinema After the Revolution
  • Cinema Is Nation's Language
  • The Dumb Man's Dream
  • Who's Who?
  • Salam Cinema (German)"
  • Cinema Is Nation's Language (Tadjik)"


Apr 1, 2012

புதிய தொழில் தொடங்குகிறேன்

நண்பர்களே!
என்னுடைய ஹாலிவுட் டிவிடி ஷாப்பி இன்று முதல்
நந்தினி எலெக்ட்ரானிக்ஸ் ஷாப்பி என பெயர் மாற்றம் பெறுகிறது.



பெயரின் மாற்றத்திற்கேற்ப இனி எனது கடையில்
ப்ளூ ரே பிளையர்,
ஹோம் தியேட்டர்,புல் ஹெச்டி... எல் சி டி மற்றும்
எல் இ டி டிவிக்கள் விற்பனை செய்யப்போகிறேன்.
வாடிக்கையாளர்களும்,நண்பர்களும் வாழ்த்தி வரவேற்று நல்லாதரவு தருமாறு அன்போடு வேண்டுகிறேன்.