
மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தை மணிரத்னம் மௌனராகமாக்கியது போல் அற்ப்புதமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர்....... எழுதி இயக்கி நடித்தும் உள்ள Kim Rossi Stuart.

ஒரு தகப்பன்.... தாயில்லாமல் இரு பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ள இயலாமையை முதல் காட்சியே விளக்கி விடுகிறது.
தொம்மி 11 வயது சிறுவன். 

அக்கா வயோலா சற்று கூடுதலான வயசு
.இவர்கள் இருவருக்கும் இடையிலிருக்கும் அன்பும் நட்பும் தனித்துவமானது.
தாயில்லாத குறையை போக்க தகப்பனின் கூடுதலான அரவணைப்பில் குளிர் காய்கின்றன இக்குருவிகள்.


தொம்மியை மிகப்பெரிய நீச்சல் வீரனாக்க தந்தைக்கு ஆசை. மகனுக்கோ புட்பாலின் மீது தீராத காதல். காதலுக்கு அப்பாக்கள் என்றுமே எதிரிதானே! வேண்டாவெறுப்பாய் நீச்சல் வகுப்பில் மிதக்கிறான் தொம்மி.

சின்னச்சின்ன பார்ட்டி....அவ்வப்போது குறும்பு என குழந்தைகளை முடிந்த வரை சுவாரஸ்யப்படுத்துகிறான் தந்தை. 

வாழ்க்கை என்றுதான்....யாருக்குத்தான் நேர்கோட்டில் செல்லும்?
தீடீரெனெ புயலாய் வருகிறாள் தாய்.
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மன்னிப்பு கேட்டு கூட்டணி வைக்கிறாள் கலைஞர் போல்.

வயோலா மட்டும் ஒட்டிக்கொள்கிறாள் கே.வி.தங்கபாலு போல்.
கணவன் வேறு வழியில்லாமல்....அகலாது அதே சமயத்தில் நெருங்காது உறவு கொள்கிறான் ப.சிதம்பரம் போல்.
தொம்மி மட்டும் நெருங்கவேயில்லை இ.வி.கே இளங்கோவன் போல்.
ஒடிப்போன குற்ற உணர்ச்சியில் தாய் பிள்ளைகளிடம் பாசத்தை வெள்ளமாகப்பொழிகிறாள்.
வயோலா அன்பு மழையில் நனைந்து மகிழ.... தொம்மி தாமரை இலையாக இருக்கிறான்.

“ஏன் இப்படி இருக்கிறாய்?” என அங்கலாய்க்கும் தந்தையிடத்தில் தொம்மியின் பதில் இதுதான்.....
“வந்திருக்கா..... ஆனா போயிருவா....”
தாயின் மீது மகன் வீசிய மிக நியாயமான வெடிகுண்டு.
மகனின் கணிப்பை உண்மையாக்கி மீண்டும் ஒடிப்போகிறாள் தாய்.
சுனாமியால் தாக்கப்பட்ட ஜப்பான் மீண்டெழுவது போல்....
மீள்கிறது இக்குடும்பம்.....
பரஸ்பர அன்பினால்.....விட்டு கொடுத்தலினால்....
ரசிகர்களை பிழிய பிழிய அழ வைக்காமல் மிக இயல்பாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்கிறார் இயக்குனர். தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியிருக்கிறார் இயக்குனர். யாரையுமே புனிதப்படுத்தாமல் களங்கமுள்ள நிலவாக அனைவரையும் ஜொலிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
நீங்கள் வாழ்க்கையில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் உலகசினிமா இது.