Oct 23, 2010

Katyn-2007 மரணக்காடு



ஊசியிலைக்காடு கேள்விப்பட்டு இருப்பீர்கள்.மரணக்காடு???????????
Katyn என்ற இடத்தில் 22,000 பேர்களை விதைத்து ராணுவத்தினர் உருவாக்கியது.

ஒரு பெண்ணை ஏககாலத்தில் இரண்டு பேர் கற்பழித்தால்......இதே நிலைதான் இரண்டாம் உலகப்போரில் போலந்து பெற்றது.ஒருபுறம் ஜெர்மனி..மறுபுறம் சோவியத் ரஸ்யா.
இருநாடுகளுக்கிடையே சிக்கி சீரழிந்ததை படம் பிடித்து காட்டியிருக்கிறார் அந்திரே வாஜ்டா.

1940ல் அன்னா காத்திருக்கிறாள் சோவியத் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட கணவனுக்காக.....

அன்னாவின் மாமியாரும் காத்திருக்கிறார் ஜெர்மன் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட கணவனுக்காக.....
காத்திருத்தல்தான் உண்மையான மரணதண்டனை என்கிறார் அ.முத்துலிங்கம் 'அங்கே இப்ப என்ன நேரம்?' நூலில்...[தமிழினி வெளியிடு]
ஜெர்மானியர்கள் தங்களது ஆக்கிரமிப்பு பகுதிகளில் இப்படுகொலைகளை நிகழ்த்தியது சோவியத்துதான் என்று ஆவணப்படத்தை காட்டி பிரச்சாரம் செய்கிறது.சோவியத்தும் ஒரு ஆவணப்படத்தைக்காட்டி பிரச்சாரம் செய்கிறது.

உண்மையை.... அன்னாவின் கணவனது ரத்ததில் குளித்த டைரி..... படம் பிடித்து காட்டுகிறது.
இப்படுகொலையின் அலறலை....சிதிலத்தை.....ஆவணப்படித்தியிருக்கிறது Pawel Edelman ஒளிப்பதிவு....பக்கபலமாக Krzysztof Pendereeki பின்னணி இசை.இறந்தவர்களின் இறுதிக்கதறல் இசையில் கலந்திருப்பதை இதயம் உள்ளவர்கள் மட்டுமே உணரமுடியும்.அந்த கதறலில் இயக்குனர் வாஜ்டாவின் தந்தையின் குரலும் கலந்து இருப்பதை நாம் தெரிந்து கொண்டால் சோகம் நேரடியாக....அதிரடியாக.... தாக்கும்.இதனால்தான் இவரது பெரும்பான்மை படங்களில் போரின் பேரழிவே மையக்கருவாக இருக்கும்.
படத்தினூடே வரும் குட்டிக்காதல் சிறுகதை அவலச்சுவையை அகப்படுத்துகிறது.
இப்படத்தை பார்த்துவிட்டு இடும் சிறப்பான பின்னூட்டத்திற்க்கு வாஜ்டாவின் டிரையாலஜி படங்களான
A Generation
Kanal
Ashes and Diamonds
டிவிடி பரிசாக குரியரில் அனுப்பி வைக்கிறேன்.
படம் பார்க்காதவர்களுக்கு கலைமாமணி ஜெயசித்ரா இயக்கத்தில் உருவான உலக்கசினிமா “நானே என்னுள் இல்லை”படத்தின் டிக்கெட் சிறப்பு பரிசாக வழங்கப்படும்.

Oct 20, 2010

Not one less-டீச்சரம்மா


ஜாங் யீமூ வர்த்தக சினிமாவின் மாபெரும் இயக்குனர்.பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் உருவாக்குவதே இவரது வேலை.உ.ம் ஹீரோ[ஜெட்லீ]அதே சமயத்தில் ரியலிஸ்டிக் பாணியில் பயணம் செய்து அவார்டுகளையும் வசூலையும் வாரிக்குவிப்பது உப வேலை.நியோ ரியலிஸ்டிக் பாணியில் எடுக்கப்பட்ட படம் நாட் ஒண் லெஸ்.அனைத்து நடிகர்களுமே தொழில் முறை நடிகர்கள் அல்ல.அனைவருமே கிராமத்து விதைகள்.அவர்களது ஒரிஜினல் பெயர்களே படத்திலும் பயன்படுத்தப்பட்டது.
1990களில் பயணிக்கிறது கதை.அழகிய மலைக்கிராமம்....ஓராசிரியர் பள்ளி....ஆசிரியர் ஒரு மாதவிடுமுறையில் செல்லநினைக்கிறார்.


13 வயது வீ மின்சி தற்காலிக டீச்சராக நியமிக்கிறார்.ஓரே ஒரு நிபந்தனை “பள்ளியில் ஒரு மாணவன் குறையக்கூடாது”.வீ மின்சி ஒரு வளர்ந்த குழந்தை .பள்ளி மாணவர்களை விட இவளது அறிவு கம்மி.ஒரு வழியாக வகுப்பை ஒப்பேற்றிக்கொண்டு இருக்கிறாள்.சுட்டி மாணவன் ஒருவன் தப்பி அருகில் உள்ள நகரத்துக்கு வேலைக்காக செல்கிறான்.நகரத்துக்குச்சென்று அவனை மீட்பதே கிளைமாக்ஸ்.

எல்லா காட்சிகளிலுமே நகைச்சுவை நியாயமாக இருக்கிறது.ஆனாலும் ஒரு சோகத்தை ஒளித்து வைத்திருக்கிறது.மாணவர்களும் டீச்சரும் கோக் குடிக்கும் காட்சி...பானைச்சோற்றில் ஒரு பதம்.ஆளுக்கு ஒரு சொட்டுதான் கிடைக்கிறது.ஆனாலும் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய திருப்தி அந்த முகங்களில்.. கிராமங்கள் மீது ஊடகமும் கார்ப்பரேட் கம்பனிகளும் இணைந்து தொடுக்கும் வன்முறை.... இக்காட்சி நம் முகத்தில் அறைந்து சொல்கிறது.

இயற்க்கை ஒளி மட்டும் பயன்படுத்தி காட்சிகளை ஒவியமாக்கியவர் Hou Yong .பெரும்பான்மை காட்சிகளில் ஒளிந்து கொண்டு தேவைப்படும்போது மட்டும் வெளிவந்து இசையால் நம்மை கட்டிப்போடுகிறார் சீனத்து இளையராஜா Sam Bao
உலகசினிமாவில் ஜாங் யீமூ முத்திரை பதித்த மற்ற படங்கள்
The Road Home
Raise the Red Lantern
To Live
Riding alone for thousend miles
இந்தப்படங்களையும் பார்த்துவிட்டு வாருங்கள்...எனது அகில உலக
ஜாங் யீமூ ரசிக மன்றத்தில் உறுப்பினராக சேர்த்து கொள்கிறேன்.தலைவர் பதவி கோவையில் ராஜா என்பவர் பறித்துக்கொண்டு போய்விட்டார்.