Jul 14, 2013

இயக்குனர் ஹரி, ஒரு ‘அரைகுறை’.


நண்பர்களே...
இயக்குனர் ஹரி தெற்கத்தி சீமை பழக்க வழக்கங்களை,
தனது படங்களில் சாமர்த்தியமாக நுழைத்து வருபவர்.
சிங்கம் 2 படத்திலும்,
இதே வித்தையை தொடர்ந்திருக்கிறார்.
அதற்கான  பாராட்டை பிடியுங்கள், ஹரி...முதலில்.
கை கொடுங்கள்.
அப்படியே கொஞ்சம் குனியுங்கள்.
‘நங்’.

“ ஒரு வேலை செய்தா உருப்படியா செய்யணும்.
‘அரைகுறையா’ செய்யக்கூடாது ” 

“ நிறுத்தும்...வேற யாராவது இப்படி பேசுனா...
ஜோலியைப்பாரும்னு சொல்லிருவேன்.
உம்ம மேல கொஞ்சம் மருவாதி வச்சிருக்கேன்.
சொல்லும்வே...அப்படி என்னவே செஞ்சுட்டேன் ”

“ சூர்யா, சிங்கம்-2 படத்துல...ஒரு சீன்ல...
 ‘அப்பா...நாராயணசாமியை கும்பிடறவங்க.
அதனாலே சனி,ஞாயிறு நான் - வெஜ் சாப்பிட மாட்டேன்னு’...
சொல்றாருல்லா.
தகவலை... தப்பால்ல சொல்லுதிய”

“ என்ன தப்பு”

“ நாராயணசாமியை கும்பிடறவங்க வெள்ளி, ஞாயிறுதான் அசைவம் சாப்பிட மாட்டாங்க.
நீரு..சனி,ஞாயிறுன்னு சொல்லிட்டியளே!
அப்புறம் நாராயணசாமியை கும்பிடறவங்க நெத்தியில எப்பவும் திருநாமம் இருக்கும்.
ராதாரவிக்கு படத்துல ஒரு இடத்தில கூட நாமத்தை சாத்தி காட்டலியே!”

“ ஒரு நிமிஷம்...அலோ யாரு அனுஷ்காவா? சிங்கம் 3யில கிராபிக்ஸ் எங்கே வைக்கிறதுன்னு டிஷ்கசன் போயிட்டிருக்கு” “ அலோ...ஹரி சார்வாள்...எங்க போறிய?” நண்பர்களே... ‘நாராயணசாமி’ என்றால்...
‘15 நாளில் கூடங்குளம் மின்சாரம்தான்’ ஞாபகத்துக்கு வரும்.
இந்த  ‘நாராயணசாமி’... பகவான் ஸ்ரீவிஷ்ணுவை குறிப்பதாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திரு.முத்துக்குட்டி என்பவர் பிறந்து வளர்ந்து
ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடினார்.
இவர் காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களை,
ஆதிக்க சக்திகள்... கடவுளின் பெயரால் மிகக்கொடூரமாக நடத்தி இருக்கிறார்கள்.
பெண்கள் தங்கள் மார்பை மறைத்து ஆடையணியக்கூடாது என சட்டம் போட்டிருக்கிறார்கள் ஆதிக்க சக்திகள்.


தோள் சீலை போராட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயாவிற்குள் செல்க...

‘தோள் சீலை போராட்டம்’ பற்றி நண்பர் ஜோதிஜி எழுதிய அட்டகாசமானப்பதிவைக்காண இந்த இணைப்பில் செல்க...

ஆதிக்க சக்திகளை எதிர்த்து புதிய வழிபாட்டு முறையை உருவாக்கினார் திரு.முத்துக்குட்டி அவர்கள்.
ஆலயத்தில் உருவ வழிபாடு கிடையாது.
கருவறையில் பெரிய நிலைக்கண்ணாடி + தீபம்.
இதையே வழிபடச்சொன்னார்.
பெண்கள் மார்பை மறைத்து ஆடை அணிந்துதான் கோயிலுக்கு வரவேண்டும்.
ஆண்கள் துண்டை தலைப்பாகை கட்டி வரவேண்டும்.


ஆண்களும் பெண்களும் சமமாக கருவறை வரை சென்று வழிபடலாம்.
வருகின்ற பக்தர்ளுக்கு,
பூசாரிகள் தங்கள் கைகளால் தொட்டு நெற்றியில் திருநாமம் சாத்த வேண்டும்.
சாதி, சமய வேறுபாடு இல்லாமல்,
அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக அமர்ந்து...
சம பந்தி போஜனம் செய்ய வேண்டும்.
ஆலயம் பகலில், பாடசாலையாக இருக்க வெண்டும்.
இரவில், வழிபாட்டு தலமாக மாற வேண்டும்.

‘அய்யா...சிவ..சிவ..அரகரா...அரகரா...” என தூய தமிழில் வழிபாட்டுப்பாடல்கள் இயற்றினார்.
சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைத்தார்.


இவரது அருளுரை ‘அகிலத்திரட்டு’ என்ற நூலாகும்.
இவரை பின்பற்றிய மக்கள் ‘அய்யா வழி மக்கள்’  என்றழைக்கப்பட்டார்கள்.


இன்றும் இவரை பின்பற்றி வழிபட்டு வருகிறார்கள்.
ஆனால் அவர் காட்டிய வழியில் அல்ல.
எளிமையின் சின்னமாக விளங்கிய கோயில் இன்று ஆடம்பரத்தை சுமந்து நிற்கிறது.
வானுயர்ந்த ராஜகோபுரம், கிரனைட் கற்கள் பதிக்கப்பட்ட சுவர்கள்,
மார்பிள் தரைகள் என மிரட்டி வருகிறது.
கழுத்தில் தங்கச்செயினும், பிரேஸ்லெட்டும் போட்டு ....
ஆடி, பி.எம்.டபிள்யூ, பென்ஸ் காரில் வரும் பக்தர்களுக்கு நாமம்  ‘பவ்யமாக’ இடப்படுகிறது.
ஏழைகளுக்கு ‘ஸ்மால் நாமம்’ சாத்தப்படுகிறது.


அய்யா வழி மக்கள் திருமணச்சடங்கு,
தூய தமிழில் எளிமையாக நடக்கும்.
இன்று ‘அய்யரை’ வைத்து சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்த்து நடத்துகிறார்கள்.

அய்யா வழித்தலங்களில் இன்றும் பழைய முறைப்படி,
 ‘தவணைப்பாலும், உண்பான் சோறும்’...
‘தருமமாக’ வழங்கப்படுகிறது.

தருமம் = இலவசம்.
தவணைப்பால் = பச்சரிசி சோற்றை குழைய வைத்து தண்ணீரை நிறைய ஊற்றி உப்பும் போட்டு வழங்கப்படுவது.
உண்பான் சோறு = புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு,
பச்சை மிளகாய், கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக போட்டு சமைத்து செய்யப்படும் ‘கலவை சாதம்’.

தவணைப்பால் கஞ்சி, உம்பாஞ்சோறு [ உண்பான் சோறு மருவியது ]
இரண்டுமே எனது  ‘பேவரைட்’.
இதற்காகவே இந்த வழிபாட்டுத்தலத்துக்கு போய் சாப்பிட்டு விட்டு ‘எஸ்ஸாகி’ விடுவேன்.


என்னைப்பொறுத்தவரை திரு.முத்துக்குட்டி அவர்கள் ,
‘சேகுவேரா’, ‘பிரபாகரன்’ போன்று போராளி.


காலப்போக்கில்,  ‘ஜீஸஸ் , நபிகள் நாயகம், புத்தர்’ போன்று,
இவரையும் தெய்வமாக்கி விட்டார்கள்.

இவரைப்புனிதமாக்க ‘கற்பனை வரலாற்றுப்புனைவுகளும்’ பெருகி வந்து விட்டது.

இயக்குனர் ஹரி புண்ணியத்தில் ‘கருப்பட்டி’, ‘அய்யா வழி’ பற்றி,
எனக்குத்தெரிந்த தகவல்களை சொன்னேன்.
குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.

“ அய்யா...சிவ...சிவ...அரகரா...அரகரா...

....அய்யா... அறிந்தும் அறியாமல் செய்த பிழைகளை... 
பொறுத்து ‘மாப்பு’ தரணும்”.

மாப்பு = மன்னிப்பு.

திரு.முத்துக்குட்டி அவர்கள் வரலாறை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...

அடுத்தப்பதிவு...இங்கிருந்து ஒரே ஜம்ப்...‘ஆமென்’.


19 comments:

 1. தோள் சேலை தொடக்க உரிமைப் போராட்டம்

  http://deviyar-illam.blogspot.in/2011/02/blog-post_17.html

  ReplyDelete
  Replies
  1. அட ஆமாம்...நீங்களும் எழுதியிருந்தீங்க...ஸாரி.
   மறந்து விட்டேன்.
   பதிவிலும் இணைத்து விடுகிறேன்...நண்பரே.

   Delete
 2. ஓம் நமசிவாய...!

  தகவல்களுக்கு நன்றி... (அண்ணன் ஜோதிஜி அவர்களின் இணைப்பிற்கும்)

  ReplyDelete
  Replies
  1. ஓம் நமச்சிவாய = சைவர்கள் சொல்லும் மந்திரம்.

   ‘அய்யா வழி’ மக்கள்...‘அய்யா உண்டு’ என்பார்கள்.

   Delete
 3. ஐயா,

  படத்துக்கு கொடுத்த காசு வேஸ்ட் ஆயிடுச்சேனு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். உங்களால இது போன்ற பல நல்ல தகவல்கள் கிடைக்கும்போது அதையெல்லாம் பொறுத்துக்கலாம்னு தோணுது. ஆனாலும் ஒரு பாடாவதி படத்துலருந்து இவ்ளோ பயனுள்ள தகவல்கள் கொடுக்க உங்களால தான் சார் முடியும்.

  //பெண்கள் தங்கள் மார்பை மறைத்து ஆடையணியக்கூடாது என சட்டம் போட்டிருக்கிறார்கள் ஆதிக்க சக்திகள்//
  இதுபோன்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் எல்லாம் எனக்கு மிகவும் புதிது. விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. மசாலா படத்திலும் ஏதாவது நல்ல விஷயங்கள் கிடைக்கும்.
   சிங்கம்2ல் இந்த இரண்டு விஷயங்கள் இடம் பெற்றதால்தான் இந்தப்பதிவை எழுத முடிந்தது.
   இல்லையென்றால் நிச்சயம் எழுதி இருக்க மாட்டேன்.
   ஹரிக்கு நன்றி.

   Delete
 4. உரிமைப் போராட்டங்கள் ஏற்பட்ட இடங்கள் குறைவு என்பதால் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டதோ ...இணைப்புகளையும் படிக்கிறேன் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற வரலாறை சொல்லிக்கொடுப்பதில்லை நமது பாடத்திட்டங்கள்.
   சொன்னாலும் தப்பும் தவறுமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது.

   Delete
 5. ஹரி செய்த அதே அறைகுறை தவறைத்தான் நீங்களும் செய்துள்ளீர்கள்...ஜீஸஸ்,புத்தர் இடைேய அல்லாஹ்வை சேர்த்திருக்க வேண்டாம்.தவறான உதாரணம் இஸ்லாமிய நண்பர்கள் இருந்தால் தெளிவுபெறவும் நண்பரே!!!!

  ReplyDelete
  Replies
  1. அறியாமல் செய்திருந்தாலும் நான் செய்தது மிகப்பெரிய தவறு.
   மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
   நபிகள் நாயகம் என்பதற்கு அல்லா எனக்குறிப்பிட்டு ஹரி செய்த தவறை போல நானும் தவறு செய்து விட்டேன்.
   இனி கவனமாக இருப்பேன்.
   தவறை சுட்டி காட்டி திருத்த உதவியதற்கு நன்றி.

   Delete
  2. மறுபடியும் தப்பு பன்னிடீன்களே, எந்த ஒரு முஸ்லிமும் நபிகள் நாயகத்தை கடவுளாக கருதியதே இல்லை. அவர் தன் உருவ படத்தை வரைவதையே தடுத்தார்கள் ஏனெனில் பின்னாளில் வரும் மக்கள் அவரை கடவுளாக மாற்ற கூடாது என்பதற்காக. மேலும் அவர்கள் செய்த உபதேசத்தில் இதுவும் ஓன்று, கிறிஸ்துவர்கள் தன் தூதரை கடவுளாக மாற்றியதை போல் நீங்கள் என்னை மாற்றதிர்கள். மேலும் குரானும் நபிகள் நாயகத்தை பற்றி பேசும்போது நீங்களும் மனிதரே என்று கூறியுள்ளது. ப்ளீஸ் தெளிவு பெரும் போது தெளிவாக பெறவும்.

   Delete
 6. என்ன சார் இது கலையுலக மார்கண்டேயனே ஹீரோவுக்கு SMS-ல "படத்த பார்த்தேன், ரொம்ப பெருமையா இருக்குன்னு" சொல்லிருக்காரு. என்ன நம்ம "நாளைய இயக்குநர்"கள நெனச்சாதான் பாவமா இருக்கு, இனி தயாரிப்பாளருங்க எல்லாம் இப்படிப்பட்ட "கதை"யதான கேட்பாங்க. அதுவே குப்பைன்னு ஆகிடுச்சு அப்பறம் ஏன் சார் அதை கிளறனும்,விட்டுட்டு amen வாங்க

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...சிங்கம்2வால் நானே நேரடியாக பாதிக்கப்படுவேன்.
   இது போன்ற கதை,திரைக்கதை என்னிடம் கேட்டால் சத்தியமாக நான் அம்பேல்.
   எவ்வளவு முக்குனாலும் வராது.
   நான் என் திரைக்கதை ந.கொ.ப.காணோம்,சூ.கவ்வும்,நேரம் போன்று வித்தியாசமான திரைக்கதை அமைப்பு கொண்டது என தயாரிப்பாளர்களிடம் சொல்லி வந்தேன்.
   உடனே அவர்களும் ‘மரியாதையாக’ ஒரு பதிலை சொல்லி வருகிறார்கள்.
   இப்போது இப்படி சொன்னால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுவார்கள்.
   சிங்கத்தால் ஏற்படப்போகும் உடனடி பாதிப்பு இதுதான்.
   இனி அடுத்து வரப்போகும் கமர்சியல் படங்களும் இத்தகைய வெற்றியை பெறுமானால் ‘நல்ல சினிமாவுக்கு’ இனி சங்குதான்.

   Delete
 7. //இயக்குனர் ஹரி, ஒரு ‘அறைகுறை’. //

  "அரைகுறை" எனத் திருத்தி விடுங்களேன்! தலைப்பிலேயே திரிந்துபோன சொல்லா?

  ReplyDelete
  Replies
  1. திருத்தி விட்டேன் நண்பரே.நன்றி.

   என்னாச்சு? ...சிங்கம்2 பார்த்தேன். பதிவு எழுத ஆரம்பிச்சேன்.
   அனுஷ்கா வந்தா. ‘காட்ச்’ பிடிக்கப்போனேன்.விழுந்துட்டேன்.
   தலையில அடிபட்டிருக்கணும்.அதான் தப்பு தப்பா எழுதறேன்.

   ******************************************************
   என்னாச்சு? ...சிங்கம்2 பார்த்தேன். பதிவு எழுத ஆரம்பிச்சேன்.
   அனுஷ்கா வந்தா. ‘காட்ச்’ பிடிக்கப்போனேன்.விழுந்துட்டேன்.
   தலையில அடிபட்டிருக்கணும்.அதான் தப்பு தப்பா எழுதறேன்.

   **************************************************************
   என்னாச்சு? ...சிங்கம்2 பார்த்தேன். பதிவு எழுத ஆரம்பிச்சேன்.
   அனுஷ்கா வந்தா. ‘காட்ச்’ பிடிக்கப்போனேன்.விழுந்துட்டேன்.
   தலையில அடிபட்டிருக்கணும்.அதான் தப்பு தப்பா எழுதறேன்.

   **************************************************************

   என்னாச்சு? ...சிங்கம்2 பார்த்தேன். பதிவு எழுத ஆரம்பிச்சேன்.
   அனுஷ்கா வந்தா. ‘காட்ச்’ பிடிக்கப்போனேன்.விழுந்துட்டேன்.
   தலையில அடிபட்டிருக்கணும்.அதான் தப்பு தப்பா எழுதறேன்.


   Delete
  2. மெடுல்லா ஆப்லேங்கேட்டா வுல அனுஷ்கா ஜம்முனு உற்காந்துட்டு இருக்கிற மாதிரி தெரியுதே?

   Delete
  3. உங்களுக்கு நஸ்ரியா...எனக்கு அனுஷ்கா.

   Delete
 8. தலைப்பை வைத்தே பீதியை கிளப்புகிரீர்களே சார் ! அப்போ உங்க பட தலைப்பு எப்படி இருக்கும் !

  ReplyDelete
 9. Director ஹரி commercial thinking, then action cinema mind, world real excellent acting hero and my favorite cinema giant Guru

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.