நண்பர்களே...
நேற்று முதல் ‘அனுஷ்காவுடன்’ ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.
டிசம்பரில் கடையை மூடிய பிறகு,
இன்று வரை எனது நண்பர்கள்தான்...
என் பொருளாதார தேவைகளை பார்த்துக்கொண்டார்கள்.
குறிப்பாக,
‘கோவை ஆனந்தாஸ்’ ஹோட்டல் அதிபர்களில் ஒருவரான...‘பரமாத்மா’,
நண்பர் ரகுநாதன்,
நண்பர் விஜய் என அனைவரும் மிகப்பெரிய அளவில் உதவினார்கள்.
திரு.அவினாஷ் என்கிற வட இந்திய நண்பர்,
தொடர்ந்து அவரது நண்பர்களிடம் சிபாரிசு செய்து,
100% அட்வான்ஸ் பணமும் கொடுத்து...
10க்கும் மேற்பட்ட ‘40’இஞ்ச் சோனி,சாம்சங் டிவிக்களை விற்க வகை செய்தார்.
‘நியாயமான லாபமும்’ அடைய வைத்தார்.
மற்றொரு நண்பர்,
தினமும் என்னிடம் போனிலும், நேரிலும் பேசி...
தைரியப்படுத்தி வந்தார்.
நான் சினிமா நிச்சயம் எடுப்பேன் ...என என்னையே நம்ப வைப்பவர்.
[ அவரது பெயரை நான் எந்த சந்தர்பத்திலும் எழுதி,
அவரது ‘ஆனந்தத்தை’ குலைக்கக்கூடாது என ஆணையிட்டுள்ளார்.]
பதிவுலக நண்பர்களில்
‘கோவை நேரம்’ ஜீவா செய்த உதவி மாளப்பெரிது.
அடிக்கடி அவரது ‘சிங்கத்தில்’ [ஸ்கார்ப்பியோ ] என்னை ஏற்றிக்கொண்டு சுற்றுவார்.
பெரிய ஹோட்டல்களில் ‘வாங்கி’ கொடுப்பார்.
நட்சத்திர ‘பார்களில்’ மிதக்க வைப்பார்.
இவரை ‘சரத்குமாராக்க’ திட்டமிட்டு உள்ளேன்.
மற்றொரு பதிவர்
‘கோவை ஆ.வி’ என் தாகம் தெரிந்தவர்.
நான் விரும்பும் புத்தம் புது திரைப்படங்களை,
‘மல்டிப்ளக்சில்’ காணச்செய்பவர்.
இவர் கூட, ‘பைக்கில் பாக்கிஸ்தான்’ வரை கூடப்போகலாம்.
காரில்?
இவர் ஒரு ‘அனாமிகா’ வைத்திருக்கிறார்.
ஒரு தடவை அதில் பயணம் செய்தேன்
அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
‘இன்சூரன்ஸ்’ பாலிசி எடுக்கும் எண்ணம்,
தீவிரமாக பீறிட்டு எழுகிறது!
இவர் அமெரிக்காவில் கார் ஓட்டியதாக,
‘நம்ப முடியாத உண்மையை’ சொல்கிறார்.
இவர் வண்டி ஓட்டும் போது,
முன்னாலும்- பின்னாலும்- பக்கவாட்டிலும்...
நூறு மைல் சுற்றளவில்...
எந்த ஒரு வாகனங்களும்,பாதசாரிகளும் வரக்கூடாது.
ஏன்? மேலே விமானம் கூட பறக்கக்கூடாது என ஆசைப்படுகிறார்.
இந்த நியாயமான ஆசையை,
இவரோடு அனாமிகாவில் பயணிப்பவர்கள் உணர்வார்கள்.
’.
[ இவரை என் படத்தில் பாடலாசிரியாராக்குகிறேன் என பொய் சொல்லி இருக்கிறேன்...என் படத்தில் பாடல்களே இல்லை என்ற தைரியத்தில்.]
அமெரிக்காவில் இருந்து பணமும், தைரியமும் கொடுத்த நண்பர் செந்தில்,
எனது ‘உடுக்கை நட்பு’.
‘செஞ்சோற்று கடன்’ தீர்க்க,
இவரது பெயரை எனது ‘கதாநாயகனுக்கு’ சூட்டி விட்டேன்.
இறுதியாக நான் நன்றி கூற நினைப்பது,
தமிழக முதல்வர் ‘அம்மா அவர்களுக்கு’.
விலையில்லா அரிசி வழங்கி என் குடுமபம் பசி தீர்த்த மாதரசி அவர்.
கடந்த நான்கு மாதமாக இந்த அரிசியில்தான் சமையல்.
என்னைப்பொறுத்த வரை இந்த அரிசி தரமாகவே இருக்கிறது.
சமைத்து சாப்பிடும் போது நன்றாகவே இருக்கிறது.
[ கலைஞர் வழங்கிய ஒரு ரூபாய் அரிசியில் சமைத்து சாப்பிட்டதில்லை.
எனவே ஒப்பிட முடியவில்லை.]
என்னைப்போல ஏழைகள்,
எத்தனை பேர் ‘அம்மாவை’ நன்றியுடன் நினைப்பர்!!!???
இவர்கள் அனைவருக்கும், நான் ஒரு நாளும்...ஒரு உதவி...
செய்தது கிடையாது.
ஏதோ பதிவெழுதி வருகிறேன்.
சில நல்ல படங்களின் ‘டிவிடிக்களை’ சிபாரிசு செய்து விற்றிருப்பேன்.
அவ்வளவே நான் செய்தது.
மற்றொரு முக்கியமான நன்றி,
என்னை சீண்டி...
‘கடையை’ மூட வைத்த
‘கருந்தேளார்’ அவர்களுக்குத்தான்.
அவர் மேல் ஏற்பட்ட கோபம்தான்,
விரைவில் ஒரு ‘திரைக்கதையை’ எழுதி முடிக்க ‘உந்து சக்தியாக’ இருந்தது.
‘ஒரு காமெடி வில்லனுக்கு’ ,
அவரது பெயரை சூட்டும் வரை,
‘அந்தக்கோபம்’ பணி புரிந்து...மறைந்தது.
‘எம்.ஜி.ஆர் - கலைஞர்’ போல் அந்த ‘முன்னாள் நட்பு’...
என்றும் ‘அகலாது-நெருங்காது’ தொடரும் என்றே நினைக்கிறேன்.
[ அவரது மற்றொரு நண்பரின் பெயரை ‘காமெடியனுக்கு’ சூட்டி உள்ளேன்.]
_________________________________________________________________________________
‘முந்தானை முடிச்சு’ பட ஆரம்பத்தின் போது,
இயக்குனர் கே.பாக்யராஜிடம்.. ‘சொல்லாமல் கொள்ளாமல்’
அவரது உதவியாளர்கள் பாண்டியராஜன், ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன் மூவரும் ஒரே நேரத்தில் ‘சொல்லி வைத்து நின்று விட்டார்கள்’.
அந்தக்கடுப்பில் பாக்யராஜ் முந்தானை முடிச்சு படத்தில்,
தவக்களை கோஷ்டியாக மூன்று பேரை உருவாக்கி...
அதற்கேற்ப காட்சி, வசனங்களை அமைத்து ‘பழி தீர்த்தார்’.
_________________________________________________________________________________
‘கிளைமாக்ஸ்’ காட்சியை சொல்லி,
இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
எனது ‘இடத்தை’ விற்பதாக,
பதிவெழுதி இருந்தேன் அல்லவா.
‘கமல்ஹாசன் என்னை கோடிஸ்வரனாக்கி இருக்கிறார்’ பதிவை படிக்க இந்த இணைப்பில் செல்க...
எனது இடத்தை விற்ற அனுபவமே ‘ஒரு திரைக்கதை’.
ஒரு ரூபாய் கூட கையில் இல்லாத, காலை வேளையில்...
எனது புரோக்கர் அழைத்தார்.
“ சார், கஷ்டப்பட்டு ஒரு பார்ட்டியை செட் பண்ணி இருக்கேன்.
விலையை ‘முன்ன பின்ன’ பேசி,
அட்வான்ஸ் வாங்க வேண்டியது... உங்க கையிலதான் இருக்கு”.
எனது ‘அனுஷ்காவை’ திறந்து பார்த்தேன்.
கொஞ்சம் பெட்ரோலை வைத்திருந்தாள்.
‘பேச்சு வார்த்தை’ நடக்கும் இடத்துக்கு போய் விடலாம் என நம்பிக்கையூட்டினாள்.
மனதளவில் எந்த விலைக்கும் விற்க தயாராக இருந்தேன்.
எனது புரோக்கர்களாக,
மூன்று புரோக்கர்கள் காத்திருந்திருந்தார்கள்.
எனக்கு, எனது புரோக்கராக... ஒருவரை மட்டுமே தெரியும்.
எனக்கு தெரியாமலே, எனக்காக இன்னும் இரண்டு பேர் செயல்பட்டிருக்கிறார்கள்.
ஆக மொத்தம் இப்போது மூன்று பேர்கள்.
‘இவர் மூலமாக அவர் - அவர் மூலமாக இவர்’ என இவர்கள்
ஒரு சங்கிலித்தொடர் போல செயல்பட்டு வியாபாரம் செய்கிறார்கள்.
இவர்கள்தான் விலையை தீர்மானிக்கிறார்கள்.
இட்ம் வைத்திருப்பவரோ...வாங்குபவரோ அல்ல.
இவர்கள் வெகு அழகாக நம் ‘மைண்ட் செட்’ செய்கிறார்கள்.
அனைவரும் ‘பார்ட்டிக்காக’ ஒரு டீக்கடையில் காத்திருந்தோம்.
‘டீ..சாப்பிடலாமே’ என்றார் ஒரு புரோக்கர்.
பகீரென்றது.
எதிர்பாராத இந்த ‘திடீர் செலவை’ நான் எதிர்பார்க்கவில்லை.
‘ பேஸ்மெண்ட் வீக்கா இருந்தாலும்...படு ஸ்ட்ராங்கா இருப்பது போல்’
ஒரு ரியாக்ஷனை எனது முகத்தில் தவழ விட்டேன்.
ஒரு இயக்குனருக்கு ‘இந்த மாதிரி’ நேரத்தில்தான் நடிக்க வருகிறது.
டீ வந்தது.
பில் வருவதற்குள் ‘டீக்கடை’ பையனை ஒரு லுக் விட்டேன்.
லுக் = “ ஒரு ரூபா கூட எங்கிட்ட கிடையாது’.
‘லுக்’ வேலை செய்தது.
பார்ப்பதற்கு வசதியானவர் போல இருந்த ‘புரோக்கரிடம்’ பில்லை நீட்டினான்.
நான் செல்போனை டயல் செய்து, ‘அலோ...அலோ’ என நகர்ந்து விட்டேன்.
‘டீ கூட வாங்கிக்கொடுக்காத கஞ்சப்பிசினாறி’ என என்னை மனதில் திட்டிக்கொண்டே பில்லை கொடுத்திருப்பான் அந்த புரோக்கர்.
‘பார்ட்டியும்’ ஒரு புரோக்கருடன் வந்தான்.
‘பார்ட்டியை’ பார்த்தால் ‘ந.கொ.ப.கா -பக்ஸ்’ மாதிரி இருந்தான்.
அவனது புரோக்கர்,
‘அனைத்திற்கும் ஆசைப்பட்ட ஈஷா சாமியார் போல்’ இருந்தார்..
தொடக்க உரையாக என்னமோ பேசினார்கள்.
எதுவுமே என் மூளையில் ஏறவில்லை.
இறுதியாக ஒரு தொகையை சொன்னார்கள்.
நான் ‘தயாராக வைத்திருந்த’,
எனது டயலாக்கை சொன்னேன்.
“ ஓ.கே”
“டோக்கன் அட்வான்ஸ் மட்டும் இருபதாயிரம் ரூபாய் வேண்டும்.
எனக்கு அது செண்டிமெண்ட்”
எனது ‘உடனடி பசிக்கு’ அது போதும்.
ஆனால் அவன் செக்காக கொடுத்தான்.
செக் கிடைத்த சந்தோஷத்தில்,
‘அனுஷ்கா’ பெட்ரோல் இல்லாமலேயே சந்தோஷமாக ஓடினாள்.
செக்கை பேங்கில் பிரசண்ட் செய்து விட்டு,
நண்பர் ஒருவரிடம் ஐநூறு ரூபாய் கடனாக பெற்று
‘அனுஷ்கா’ பசியை ஆற்றினேன்.
எனக்கு தெரிந்த வங்கி நண்பர்கள் அனைவரிடமும்,
தகவல் சேகரித்தேன்.
அவர்களது அறிவுரையின்படி, சரியான நேரத்திற்கு,
ஏ.டி.எம்மில் பணம் எடுக்கப்போனேன்.
என் அக்கவுண்டில் பேலன்ஸ் 90 ரூபாய் மட்டுமே இருக்கிறது...
என சத்தியம் செய்து... பிரிண்டடித்து... கொடுத்தது.
ஆக,‘செக் கிரிடிட்’ ஆகவில்லை.
அடுத்த நாள் காலையிலும் பார்த்தேன்.
ஆகவில்லை.
‘செக் ரிடர்ன் ஆகி விட்டது’ என நிச்சயமாக தெரிந்தது.
பார்ட்டிக்கு போன் செய்தேன்.
அவனும் அவனது வங்கியை விசாரித்து உறுதி செய்து விட்டு வருவதாக கூறினான்.
அவன் மேல் நம்பிக்கை இழந்து,
கோவை நேரம் ஜீவாவுக்கு போன் செய்தேன்.
“அவசரமாக ஐயாயிரம் ரூபாய் தேவை”
“எங்கே இருக்கிறீர்கள்”
“சரவணம்பட்டி”
“அங்கேயே இருங்கள்.
15 நிமிடத்தில் வருகிறேன்”.
‘இல்லாதவன் இருக்கும் இடம் தேடி... உதவும் என் ஞானத்தங்கம் ஜீவா’
குன்றாத ஆரோக்கியம், வளரும் ஐஸ்வர்யம் பெற்று...
என்றும் ‘ஏகப்பட்ட பத்தினிகளுக்கு விரதனாக’ வாழ வாழ்த்துகிறேன்.
பார்ட்டியும் போன் செய்தான்.
“ என்ன காரணத்தாலோ செக் ரிடர்ண் ஆகியிருக்கிறது.
உடனே ‘கேஷ்’ கொண்டு வருகிறேன்”.
உடனே டீக்கடைக்குள் புகுந்து,
டீயும்,பப்சும் சாப்பிட்டேன்.
பில் வந்தது.
“ பொறுங்க தம்பி...நண்பர் வந்து கொண்டிருக்கிறார்”
‘கோவை நேரம்’ ஜீவாவை காணவில்லை.
“அடடா...நம்ம சிங்கம்...
ஏதாவது அம்மணியை பாலோ செய்து போய் விட்டதா ? ”
கவலையில், ஆசனவாயிலில்...
ஆர்.டி.எக்ஸ் ஓன்று வெடிக்கத்தயாரானது.
டீக்கடைக்காரன் என்னை,
‘டேபிள் க்ளீன் பண்ண ஆள் கிடைத்து விட்டது’ போல
என்னை ‘குறுகுறுவென’ பார்த்தான்.
‘அப்பாடா... ‘ஜீவாவின் சிங்கம்’ வந்து விட்டது’.
இந்த ‘திரில்லர் கதை’ முடிவுக்கு வந்து விட்டது.
பார்ட்டி வந்து பணம் கொடுத்தது...
இன்னும் தரவிருப்பது...
இனி எதுவுமே ‘இந்த திரில்லர்’ கதைக்கு உதவாது.
இனியெல்லாம் சுபமே.
அனுஷ்கா =
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.