Feb 28, 2013

சுஜாதாவும் கமலும்.



நண்பர்களே...
என் ஆசான் சுஜாதா நினைவு நாளை [பிப்ரவரி 27 ] முன்னிட்டு...
இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.



எண்பதுகளில் [ 1980s ] திரைக்கதிர் என்றொரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது.
அப்பத்திரிக்கைக்காக பெங்களூரிலிருந்து வந்த சுஜாதாவும்...
 ‘வறுமையின் நிறம் சிவப்பு’ பட சூட்டிங் முடித்து வந்த கமலும் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள்.
அன்று அவர்கள் நடத்திய விவாதம் இன்றும் பொருந்தி வருகிறது.
அதிலிருந்து சில தேன் துளிகள்...


சுஜாதா : நான்  'இஸட்'ன்னு  ஒரு பிரெஞ்ச் பிலிம் சமீபத்தில் பார்த்தேன்.
[ Z \ 1969 \ French \ Directed by : Costa - Gavras ]
அரசியலை மையமா வைச்சிகிட்டு ரொம்ப பிரமாதமா எடுத்திருக்காங்க.
தமிழ்ல ஏன் அரசியலை சம்பந்தப்படுத்தி படம் பண்ண மாட்டேங்கறீங்க ?

கமல் : உங்களுடைய ‘24 ரூபாய் தீவை’ ‘யாரோ பார்க்கிறார்கள்’ என்கிற பெயரில் படமா எடுக்க நினைச்சோம்.
முடியல.
பண்ண முடியாத சூழ்நிலை இருக்கு.
யெஸ்....இட் வாஸ் டினைட் [ Yes..It was denied ].
தீடிர்னு அந்தப்படத்தை தடை பண்ணிட்டாங்கன்னா... 
டிஸ்டிரிபியூட்டர் மாட்டிக்குவாங்க.
வட்டிக்கு வாங்கி படமெடுக்குற புரொடியூசர் காலி.
அரசியலை மையமா வைச்சு இங்கே படமெடுக்குறது கஷ்டம்.

சுஜாதா : ரொம்ப பேர் அடிபட்டாலும், சினிமா எடுக்க வந்துகிட்டே இருக்காங்க !
அதுக்கு முக்கிய காரணம் சினிமாவைப்பற்றி இருக்கிற தப்பான அபிப்ராயமும்,
அவங்களுக்குள்ளே இருக்குற சபலமும்தான்.

கமல் : சினிமா படமெடுக்க ஆபிஸ் பிடிச்ச உடனே...
ஒரு படுக்கையை மூலையில ரெடி பண்ணி போட்டுக்கிட்டவங்க நிறைய பேர் இருக்காங்க.
ஆனா அவங்க யாரும் படம் எடுக்கல.

சுஜாதா : உங்களுடைய  ‘ராஜ பார்வை’ எப்படிப்பட்ட படம் ?

கமல் : ‘குரு’ மாதிரி முழுக்க முழுக்க மசாலா படமல்ல.
படத்தின் கதை பரிட்சார்த்தமானது அல்ல.
ஆனால் டெக்னிக்கலாக உயர்ந்த படமாக தயாரிக்க முயற்சி செய்கிறோம்.
குறியீடுகளை முழுசா இப்படத்தில் ஒதுக்கி வைச்சிருக்கோம்.
தப்பித்தவறி வந்தா அது எங்களுடைய பூர்வீக பழக்கமாக இருக்கலாம்.
ஒரு தெளிவான காதல் கதை.
சந்தோஷமான முடிவு.
நாங்க கூட நினைச்சோம்.
இந்த ஹீரோவை கொன்னு பாத்தா என்னன்னு ?
சந்தோஷமான முடிவுன்னு தீர்மானிச்ச பிறகு கொல்ல முடியலையேன்னு ரொம்ப துக்கமா இருந்தது - அழுகையா வந்தது. 

ரொம்பப்பிரமாதமான படமாங்கிறது... படம் வெளி வந்தப்புறம்தான் சொல்லணும்.
ஆனா இப்படி ஒரு படம் தயாரிச்சதுக்காக நிச்சயமாக என்னை வருத்தப்பட வைக்காத படம்.

சுஜாதா : நீங்க எழுதறதையெல்லாம் நான் விடாம படிக்கிறேன்.
உங்க நடை நல்லாயிருக்கு.
எழுதறதை விட்டுடாதீங்க.
எழுத்தாளர்கிட்ட இருக்கிற முதிர்ச்சி உங்ககிட்ட இருக்கு.
இன்னும் சரியா சொல்லணும்னா ‘கனவுத்தொழிற்சாலை’ எழுதறதுக்கு நீங்கதான் சரியான ஆள்.

கமல் : நீங்க எழுதுனதுக்கே அது யாரைப்பற்றி...
இது யாரைப்பற்றின்னு எல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாங்க.
நான் எழுதினா அதை விட வம்பே வேண்டாம்.
தவிற நான் ஒரு ‘பிம்ப்’ பற்றி எழுதினேன்னு வைச்சுக்கங்க.
உடனே கேள்வி வரும்.
 “ ஹேவ் யூ எவர் பீன் எ பிம்ப்” [ Have You ever been a Pimp ] அப்படின்னு.

ஆனா சுஜாதாகிட்ட அப்படியெல்லாம் கேட்க மாட்டாங்க.
சமீபத்துல ‘ஹோமோ செக்சுவல்’ பத்தி எழுதினேன்
உடனே பல பேர் என்னை கேட்டுட்டாங்க.
நீங்க ஒரு ஹோமோ செக்சுவலான்னு.

நீங்க ஒரு முறை ‘மழைத்தல்’னு எழுதியிருந்தீங்க இல்ல!

 “பெய்யென பெய்யும் மழை.
மழைக்குமெனில் சொல் உன் தாயிடம்...
நாடு நனையட்டும்” னு நான் எழுதியிருந்தேன்.
மழைக்கும்னு சொல்றது ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னுட்டாங்க.
  
சுஜாதா : சொல்லலாம் தவறில்லை.

கமல் : சுப்ரமணிய ராஜூவோ...மாலனோ...யார்னு ஞாபகம் இல்ல.
“ கீழ் பெர்த்தில் ஒரு நல்ல நாட்டுக்கட்டை.
மனதிற்குள் படுக்க வைத்தேன்”
அப்படின்னு எழுதியிருந்தாங்க.

சுஜாதா : புதுக்கவிதையில கல்யாண்ஜி எல்லாம்...பிரமாதம்.
ஒரு வேலைக்காரி சுமாரா இருக்கிறவ...
பெருக்கிட்டிருக்கா...
தரை சுத்தமாயிடுச்சு...
மனசு குப்பையாயிடுச்சு....அப்படீங்கறார்.
நாலு பக்க கதை...அந்த இரண்டு வரிகளில் வந்துடறதே !.

கமல் : இன்னொன்று நான் படிச்சேன். 
‘கருப்பு உதடுகளின் வெளிச்ச உளறல்கள்’ அப்படின்னு...
என்ன கற்பனை பாருங்க !

சுஜாதா : இன்னொரு புதுக்கவிதை நான் படிச்சேன்... 
‘கண்ணீர்’ என்ற தலைப்பில். 
“ இதயத்தில்தானே இடி....
இங்கே ஏன் மழை?” ன்னு எழுதியிருந்தாங்க!

இன்னொருவர் இப்படி...
“ திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம்.
என் கல்யாணம் மட்டும் ஏன் நொச்சிக்குப்பத்தில் நிச்சயிக்கப்படுகிறது ?”  

கமல் : சினிமா கவிஞர்கள் பலர் பிரமாதமாக பாட்டு எழுதி இருக்காங்க.
நான் சினிமா பாட்டு புத்தகத்திலிருந்தும்...
கலைஞர் கருணாநிதி வசனம் படிச்சும்தான் தமிழ் நல்லா பேசக்கத்துகிட்டேன்.

சுஜாதா : உங்க மாதிரி ஆளோடு எவ்வளவு நேரம் பேசறதுன்னாலும் நான் தயார்.
இன்னொரு முறை மீட் பண்ணி நாம்ப பேசுவோம்.

சுஜாதா  என்ற ஜாம்பவான் இன்று நம்மிடையே இல்லை.
அவரது தமிழ் என்றும் இளமையுடன் நம்மோடு ஓடி வரும்.

சின்ன சின்ன ஆசை....Costa - Gavras - ' Z ' பற்றி பதிவு எழுத ஆசை.
அதற்கு முன் -
Costa-Gavras -  ‘மானிடத்திற்கு’ எழுதிய புதுக்கவிதை  ' AMEN ' பற்றி எழுதுவதே...சிறகடிக்கும் ஆசை.
AMEN \ 2002 \ English \ Directed by Costa-Gavras



 
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Feb 20, 2013

VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபம் முதலிடம் !.


நண்பர்களே...
‘விஸ்வரூபத்தை சீன் பை சீன் எழுது’ என அன்புக்கட்டளைகள்
வந்த வண்ணம் உள்ளது.
இரண்டாம் பாகம் வந்ததும் எழுதுகிறேன்.
அது வரை பொறுத்திருக்க...
கல்லெறிபவர்களும் காத்திருக்க.

நண்பர்களே...
விஸ்வரூபத்தை பலமுறை பார்த்துதான்...
என்னால் அர்த்தம் கட்டமைக்க முடிந்தது.
விஸ்வரூபத்தை, ஒரு முறை பார்த்து புரிந்து கொள்ள முடியாது.
ஒரு முறை பார்த்தவுடன் புரிவதற்கு இப்படம்  படைக்கப்படவில்லை.
இரண்டாம் முறை பார்கும் போது புரிவதெற்கென்றே சில காட்சிகள் படைக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபத்தை, நிருபமா கதாபாத்திரத்தின் வழியாக கொஞ்சம்
எட்டிப்பார்ப்போம்.
நிருபமா + சைக்யாட்ரிஸ்ட் வழியாகத்தான் விஸ்வரூபத்தின் முன் கதை விளக்கப்படுகிறது.
இக்காட்சியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரம் வார்த்தைகளாக வெடிக்கிறது.
படம் நெடுக  ‘வசனகர்த்தா கமல்’ தீனி போட்டாலும்,
இந்த பகுதி ஸ்பெஷல் ட்ரீட்.


நிருபமா : ஐ பிலிவ் இன் அமெரிக்கா.
என் விமோசனமே இங்கேதான் தோணித்து.
ஏழு வயசாயிருக்கும் போதே எங்கப்பா கேன்சர்ல போயிட்டார்.
ஸோ...நானும் எங்கம்மாவும் சித்தப்பா ஆத்துல ஒண்ட வேண்டியதா போச்சு.
எங்கம்மா செத்த அண்ணைக்கு... என் மனசுல ஒரு வைராக்கியம் .
எப்படியாவது இந்த மிடில் கிளாஸ் ஊழில இருந்து தப்பிக்கணும்.
அமெரிக்கா போகணும்.
பி.எச்.டி பண்ணணும்.
ஆச்சா...

ஒரு மிடில் கிளாஸ் பிராம்மணப்பெண்ணின் நரகத்தையும்...
அதிலிருந்து தப்பிக்க எத்தனிக்கும் முனைப்பையும்...
சொற்சித்திரங்களாக்கி இருக்கிறார்
‘வசனகர்த்தா கமல்’.
இந்தப்பகுதியின் இறுதி வார்த்தையான ‘ஆச்சா’ எதை குறிக்கிறது ?
இது வரை பிளாஷ்பேக்கை சரளமாக சொன்ன நிருபமா,
இனி தன்னுடைய  ‘மனதில்’ இருப்பதை எடிட் பண்ணிப்பேசப்போகிறாள்  என்பதை விளக்க ‘ஆச்சா’வை போட்டிருக்கிறார் படைப்பாளி கமல்.

நிருபமா : சொல்லி வச்சாப்ல...
நம்ம ஜெகன்நாத் மாமா இவர் ஜாதகத்தை
கொண்டு வர்றார்.
இவரும் கரெக்டா ஸ்டேட்ஸ்ல இருந்தார்.
ஸோ...

ஜெகன்நாத்தும், விஸாமும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள்.
இருவருமே திட்டமிட்டு தங்களது அமெரிக்க ஆப்பரேஷனின் ஒரு பகுதியாக இந்த திருமணத்தை திட்டமிட்டு நடத்தியது புலப்படுகிறது.
இருவருமே உற்றார் உறவினர்களிடம் கூட தங்கள் பணியை மறைப்பதை கடமையாகக்கொண்டவர்கள் என்பதும் புரிகிறது.
[ இரண்டாம் முறை பார்க்கும் போதுதான் இது விளங்கும்.]

சைக்யாட்ரிஸ்ட் : புரியுது...
அதான் வயசு வித்தியாசம் கூட பாக்காம... 
மிஸ்டர்.விஸ்வநாதனை கட்டிக்க சம்மதிச்சிங்களா ?

கதாநாயகனுக்கும்...கதாநாயகிக்கும் உள்ள வயது வித்தியாசத்தை ‘பேலன்ஸ்’
செய்துள்ளார் கமல்.

நிருபமா : அப்கோர்ஸ்...இட் வாஸ் எ மேரேஜ் ஆப் கன்வீனியன்ஸ்.
அவருக்கும் இதுல என்ன சவுகரியமோ தெரியல...
தெரிஞ்சுண்டேதான் ஒத்துண்டார்...விஸ்.

சைக்யாட்ரிஸ்ட் : விஸ்...

நிருபமா : ஓ...விஸ்...என் ஹஸ்பண்ட் பேரு.

சைக்யாட்ரிஸ்ட் : ஓ...நீங்க வச்ச பெட் நேமா ?.

நிருபமா : பெட்டுமில்ல...குட்டுமில்ல.
எல்லோரும் அப்டி கூப்டா...நானும் அப்டி கூப்ட்டேன்.
ஆரம்பத்துல இருந்தே...அந்த மாதிரி கொஞ்சல்-கிஞ்சல்லாம் கிடையாது.
நான் ஹானஸ்டா அவர்ட்ட சொல்லிட்டேன்.
நான் வந்தது படிக்கத்தான்.
எனக்கு படுத்துண்டே...படிக்கிற பழக்கமில்லேன்னேன்.
அவரும் சிரிச்சுண்டே ஒத்துண்டுட்டார். 
ஹி ஹேஸ் எ கிரேட் சென்ஸ் ஆப் ஹ்யூமர்...யூ நோ.

‘படுத்துண்டே...படிக்கிற பழக்கமில்ல’...
இந்த டயலாக் மட்டும்  'குறள்' மாதிரி...
விளக்கத்தை கொஞ்சம் ‘உள்ளே போய்’ தேடணும்.

கணவனது தோற்றம்...பாடி லேங்குவேஜ்...இவற்றால் அசூயை அடைந்த நிருபமா அவனோடு செக்ஸ் வைப்பதை தவிர்க்க எண்ணியுள்ளாள்.
உடலுறவு வைத்திருந்தால்... ‘புரிந்திருப்பாள்’...
கணவனை ‘முஸ்லிம்’ என கண்டு பிடித்திருப்பாள்.
It is a Wonderful  'Situational - Logic'. 

இறுதியில் வரும் ‘ஜேம்ஸ்பாண்ட்’ காட்சியில் நிருபமா நிச்சயமாக தெரிந்திருப்பாள்.

படத்தின் கதாநாயகன் இந்துவா ? முஸ்லிமா ? என்ற சுவாரஸ்யப்புதிருக்கு விடை நிருபமா கதாபாத்திரம் சொன்னால் மட்டுமே நம்ப வேண்டும்.
கதாநாயகன் + அஷ்மிதா + ஜெகன்நாத் & கோ சொல்வதை நம்ப முடியாது.
நம்பவும் கூடாது.
ஏனென்றால், இவர்கள் பொய் சொல்வதை குலத்தொழிலாக கொண்ட உளவாளிகள்.

இரண்டாம் முறை பார்க்கும் போது  ‘புரிந்து ரசித்ததில்’...
எனக்கு மிகவும் பிடித்த சூப்பரான காட்சி இதோ...



விஸ் : மாமாஜியும்...டாக்கின்ஸனும் ஏதோ ப்ரீப் பண்ணணுமாம் நம்பளை.
ஓவர் த டின்னர்.

அஷ்மிதா [ அண்ட்ரியா ] : எப்டி ?....அதும் நிருபமா எதிர்க்க !.

விஸ் : நிருபமா டின்னருக்கு...வரல.

அஷ்மிதா : வரமாட்டான்னு... ‘ஆகாஸ்வாணி’ சொல்லித்தா ?.

விஸ் : எக்ஸாக்ட்லி. 

இந்தக்காட்சியில்,
வசன உச்சரிப்பில்...‘பிராம்மண உச்சரிப்பையும்’...
உடல் மொழியில்... பெண்மைத்தன்மையையும்...
‘விஸ் கதாபாத்திரம்’  தவிர்த்திருப்பதாக காட்சியமைத்துள்ளார் படைப்பாளி கமல்.
அஷ்மிதா காரெக்டரும் அதே போல் காஷுவலாக உரையாடும்.
உடல் மொழியும் மாறுபடும்.
பின்னால் வரும் “ இங்க எல்லோருக்குமே டபுள் ரோல்” என்ற வசனத்தை இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்.

சக உளவாளியான அஷ்மிதாவோடு உரையாடுகையில்...
‘பிராம்மண உச்சரிப்பு +  பெண் தன்மையை’ விலக்கி...
அடுத்தக்காட்சியில்...
நிருபமாவுடன் உரையாடும்போது  ‘பிராம்மண உச்சரிப்பு + பெண் தன்மையை’ தொடர்வதாக காட்சியமைத்த படைப்பாளி கமலை கலா ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.



‘ஆகாஸ்வாணி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம்...
பின்னால் வரும் ஒரு காட்சியில் அஷ்மிதா,
நிருபமாவை பார்த்து... “ உங்க ஆபிஸ் பூரா ‘பக்’ பண்ணியிருக்கோம்” எனச்சொல்லும் போது விளங்கும்.
அதாவது, நிருபமா-தீபக் அலுவலக உரையாடல்கள் முழுக்க ஒட்டுக்கேட்கப்படுகிறது என்பதை வசனம் மூலமாகவே விளக்கியுள்ளார் படைப்பாளி கமல்.
ஆகாஸ்வாணி = ஒட்டுக்கேட்கும் நடவடிக்கைக்கு ஏற்படுத்தப்பட்ட 
‘கோட் வேர்ட்’

நிருபமா-தீபக் ரகஸ்யக்காதலை தெரிந்தும்... ஒன்றுமே தெரியாதவன் போல்
உரையாடுவான் விஸ்.
இதற்கு அஷ்மிதா,ஜெகன்னாத்,டாக்கின்சன் ரியாக்‌ஷனை கவனியுங்கள்.
தேர்ந்தெடுத்த உளவாளிகளின் பாவனை இருக்கும்.
ஏனென்றால் உளவாளிகளுக்கு பொய் பேசுவதுதான் குலத்தொழில்.
மாறாக,  ‘நிருபமா-தீபக்&கோ’ பொய் பேசுவதில் தடுமாறுவதை காட்டி நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளார் படைப்பாளி கமல்.  

இப்படத்தில் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
ஒருத்தொருக்கொருத்தர் சளைக்காமல் நடித்து இயக்குனர் கமலுக்கு பெருமை
சேர்த்துள்ளனர்.
HATS OFF ! ALL ACTORS !!

‘விஸ்வரூபம்’ - துளியூண்டு விமர்சனம்’ என்ற பதிவு...
எனது பதிவுகளிலேயே அதிக ‘பேஜ் விசிட்’ பெற்று...
முதலிடம் பெற்றிருக்கிறது.
நன்றி நண்பர்களே!.

VISWAROOPAM - துளியூண்டு விமர்சனம் பதிவைப்படிக்க இங்கே செல்லவும்.

இப்படத்தை குப்பை என எழுதிய ஆண் \ பெண் பதிவர்கள் அனைவருக்கும்...
ஒரு தாழ்மையான வேண்டுகோள்...

நிருபமா தீபக்குடன் ஊர் சுற்றி விட்டு வந்து படுக்கையில் படுப்பாள்.
அவளது கணவன்  ‘விஸ்’ கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு ‘குறட்டை’ ஒலி எழுப்புவதற்கு காரணம் என்ன ?

கண்டு பிடித்து... பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
ப்ளீஸ்.

அறிவிப்பு :  விஸ்வரூபத்தை பற்றி,
பதிவர்கள் கூட்டத்தை கூட்டி அழைத்தால்...
இந்தியாவில் எந்த மூலைக்கும் வந்து விவாதிக்க நான் தயார்.
போலி ஐ.டி போக்கிரிகளிடம்...வலைத்தளத்தில் கூட விவாதிக்க மாட்டேன்.
எனது நேரத்தை வீணடிக்கும் வீணர்களின் கமெண்டை ‘ஸ்பேம்’ செய்து வருகிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Feb 16, 2013

விஜயகுமாரின் வன யுத்தம்.


நண்பர்களே...
வீரப்பனின்  விஜயகுமாரின் வனயுத்தம் பார்த்தேன்.
வீரப்பன் வரலாறு என்று பார்வையாளர்களிடம்  ‘ரீல்’ ஓட்டியிருக்கிறார்கள்.

வீரப்பன் வரலாறை, ஒரு பகுதியை கர்நாடக போலிசின் பார்வையில் படமாக்கி உள்ளார்கள்.
எஞ்சிய பகுதி,தமிழக போலிஸ் பார்வையில் படமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒன்று...வீரப்பன் பார்வையில் இப்படம் படமாக்கப்பட்டிருந்தால் சென்சாரால் முடக்கப்பட்டிருக்கும்.


இயக்குனர் ரமேஷ் முதல் காட்சியிலேயே சொல்லி விடுகிறார்...
இது போலிசார் எழுதிய வீரப்பன் வரலாறு என்று.
அயோத்தியா குப்பம் வீரமணியை, டி.ஜி.பி.விஜயகுமார் என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் காட்சியை முதல் காட்சியாக வைத்ததே இதற்கு சான்று.

நாடெங்கிலும் புகழ் பெற்ற ஒருவரது வாழ்க்கையை திரைக்கதையாக்குவது மிகவும் கடினமான ஒன்று.
அதுவும் நம்ம ஊரில் மத அமைப்புக்கள்,ஜாதிச்சங்கம், பிராணிகள் வதை தடுப்புச்சட்டம்,குடி,பீடின்னு...
எல்லா எழவையும் கணக்கிலெடுத்து திரைக்கதை அமைப்பதற்கு...
தூக்கில் தொங்குவது சுகமாக இருக்கும்.
பாட்டி வடை சுட்ட கதையை...
திரைக்கதை அமைப்பதற்கே நடுக்கம் வருகிறது.

படத்தின் திரைக்கதை துண்டு துண்டாக நிற்கிறது.
இதற்கு ஏ.ஆர்.ஆர். ரமேசை குற்றம் சொல்ல முடியாது.
சட்டத்தின் துணையோடு வீரப்பன் மனைவி திரைக்கதையின் முதல் பாதியை குதறியிருக்கிறார்.
இரண்டாம் பாகத்திலிருக்கும் திரைக்கதையின் நேர்த்தியை வைத்து,
முதல் பாகத்திலிருக்கும் குளறுபடியை மன்னிக்கலாம்.

டி.ஜி.பி.விஜயகுமாரின் பாத்திரம்தான் படத்தின் ஹீரோ...
வீரப்பன்தான் வில்லன்...
இப்படி அமைக்கப்பட்டதிரைக்கதையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு,
படம் பிடிக்கும்.
ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எரியும்.

வீரப்பனாக கிஷோர்...


டி.ஜி.பி.விஜயகுமாராக அர்ஜுன்...


எட்டப்பனாக வா.மு.ச.ஜெயபாலன்...


என காஸ்டிங் கச்சிதம்.

வீரப்பன் தமிழ் தேசியப்போராளியாக உரு மாறிய வரலாற்றை திரைக்கதையில் மறைத்த வேலை... படு கச்சிதம்.

இடைவேளைக்குப்பிறகு டி.ஜி.பி. விஜயகுமாரின் ஆப்பரேஷன் திட்டங்கள் சூப்பர்ப்.
இது போன்ற திட்டங்களை நீங்கள் எந்த ஹாலிவுட் படத்திலும்
பார்த்திருக்க முடியாது.

படத்தைப்பாருங்கள்.
பொய்யையும்... நிஜத்தையும்...கண்டுணருங்கள்.

வீரப்பன் வரலாற்றில் நிறைய திரைக்கதைகள் இருக்கிறது.
நேர்மையான படைப்பாளிகளுக்காக அவைகள் காத்திருக்கிறது.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Feb 12, 2013

VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபம் துளியூண்டு விமர்சனம்.


நண்பர்களே...
விஸ்வரூபம் பெற வேண்டிய நியாயமான வெற்றியை பெற்று விட்டது.
பெற்ற வயிறு குளிர்ந்து விட்டது...என்பதை சமீபத்திய கமலின் பேட்டியில் உணர முடிந்தது.
“இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தோம்” என தமிழன்னை மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இஸ்லாமிய சகோதரர்களிடம் கமல் உரிமையுடன் பிரியாணி கேட்டதில் உள்ள நியாயங்களை இனி பார்ப்போம்.
அதே நேரத்தில், கமல் அமெரிக்காவிற்கு படம் நெடுகிலும் ஆப்படித்த இடங்களையும் விளக்குகிறேன்.
ஏனென்றால் பதிவர்கள் சிலர் திட்டமிட்டு,
விஸ்வரூபம் அமெரிக்காவை தூக்கி பிடித்திருப்பதாக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

[ 1 ] விஸ்வரூபம் படத்தை  ‘தீமெட்டிக் ஆக்‌ஷன் திரில்லராக’ படைக்க ஆசைப்பட்ட படைப்பாளி கமல் தனது முதல் ஷாட்டை  ‘தீமெட்டிக்காக’ புறாக்களில் ஆரம்பிக்கிறார்.
புறாக்கள் பறக்கும் கூண்டிலேயே, படத்தின்  டைட்டில்களை தொடருகிறார்.
டைட்டில் இறுதியில், ஒரு இஸ்லாமியர் ஒரு புறாவை பிடிப்பார்.
அடுத்த ஷாட்டில் பறக்க விடுவார்.
புறா அமெரிக்க கொடியை நோக்கி பறக்கும்.

புறாக்கால்களில்  ‘சீசியம்’ அடைக்கப்பட்ட குழல்களை கட்டி விட்டு, அமெரிக்க கண்காணிப்பு சாதனங்களை ஏமாற்றி...
மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பை நிகழ்த்தப்போவதாக...
பிளாஷ்பேக்கில், ஒமர் கதாநாயகனிடம் விவரிக்கும் போதுதான்...
படத்தின் ஆரம்பக்காட்சிகளுக்கு விளக்கம் கிடைக்கும்.

[ 2 ] இப்படி படம் முழுக்க, கேள்வியை ஒரு இடத்திலும்...
விடையை மற்றொரு இடத்திலும் வைத்து கமல் படைத்துள்ளார்.

[ 3 ] புரியாதவர்கள் படத்தை பலமுறை பார்க்க வேண்டும்.
சில புண்ணாக்கு பதிவர்கள், விஸ்வரூபத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என தங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.

[ 4 ] கோடம்பாக்க ஜாம்பவான்களே  நடுங்கி...ஒடுங்கி கிடக்கிறார்கள்.

[ 5 ] ‘கமல் அமெரிக்க அடிவருடி’ என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்.
ஆரம்பக்காட்சியில் அமெரிக்க கொடியை காட்டும் போது,
 ‘டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் வைத்திருப்பார்.
காமிரா  ‘செமி டாப் ஆங்கிளில்’ இருக்கும்.
நம்முடைய பார்வையில் அமெரிக்க கொடி கீழே இருக்கும்.
அமெரிக்க இயக்குனர்கள் பிற நாட்டுக்கொடியை,
இதே முறையில் ஷாட் வைத்து மட்டப்படுத்துவார்கள்.
பதிலடி கொடுத்து கமல் ஷாட் வைத்துள்ளார்.
இதெல்லாம் விளங்கி விடுமா ‘உண்மைத்தமிழனுக்கு’.

[ 6 ] கதாநாயகனை தமிழ் பேசும் இந்திய முஸ்லிமாக படைத்ததற்கு,
படைப்பாளி கமலுக்கு முதல் மரியாதை செலுத்த வேண்டும்.
அவன் பிராம்மணனாக மாறு வேடமிட்டு அமெரிக்காவில் தங்கும் போதும் ‘தொழுவதற்கு’ செல்லும் இஸ்லாமிய வழமை மாறாத தன்மையுடன் இருப்பதாக படைத்து அதன் மூலம் திரைக்கதை திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.

[ 7 ] ஒமரின் ஆட்கள் கதாநாயகனையும்,அவனது மனைவியையும் கட்டி வைத்து உதைத்து விசாரிக்கும் போது முதலில் தனது பெயர்  ‘தாபிக்’ எனக்கூறுவான்.
மேலும் மேலும் அடி விழவே...தனது பெயர்  ‘நாசர்’ என மாற்றிக்கூறுவான்.
இந்த இரண்டு பெயர்களுக்கும் உரிய கதாபாத்திரங்கள்
‘ஆப்கானிஸ்தான் பிளாஷ்பேக்கில்’ வருவார்கள்.

[ 8 ] ஒமரின் ஆட்கள் விசாரிக்கும் போது...
கதாநாயகனான, இந்திய முஸ்லீம் உளவுத்துறை அதிகாரி...
தனக்கு பிடித்தமான தாபிக்-நாசர் என்ற இரண்டு பெயர்களையும்...
தனது புனை பெயராக பயன்படுத்துகிறான் என காட்சி அமைத்துள்ளார் படைப்பாளி கமல்.
[ குழலூதும் கண்ணனை பிடித்ததால்தான்,  ‘முத்தையா’ கண்ணதாசனாக பரிணாமம் பெற்றார்]

[ 9 ] ‘தாபிக்’ ...என்பவர்  ஜிகாதி அல்ல என்றே ஒமர் அறிமுகப்படுத்துவார்.
தாபிக்,பண்புள்ள விவசாயி மற்றும் வியாபாரி என்றே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

‘நாசர்’ ...ஒமரின் மகனாக இருந்தாலும் தான் போராளியாக விரும்பவில்லை எனவும் டாக்டராவதே தனது லட்சியமாகக்கூறுவான்.
தாயிடம் விளையாடும் போது கூட அவன் டாக்டராக மாறி விளையாடுகிறான்.

[ 10 ] தாபிக், நாசர் இருவருமே, கதாநாயகனான- இந்திய உளவுத்துறை அதிகாரியின் நடவடிக்கையின் மூலமாகவே பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
இந்தக்குற்றவுணர்ச்சி கதாநாயகனுக்குள் ஊறிக்கிடப்பதை...
“ அழிக்க முடியாத பாவம் என் நெற்றியில எழுதியிருக்கு” என்ற வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.

தாபிக், நாசர்...இந்த இரு காரெக்டர்களின் பெயரை,
கதாநாயகனான இந்திய முஸ்லிம் தனது புனை பெயராக பயன்படுத்துவதின் மூலமாக படைப்பாளி கமல் கூறும்  'REDEMPTION SEEKING' முயற்சி விளங்குகிறதா ?

[ 11 ] தாலிபனாக பிரதிபலிக்கப்படும் ஒமரின் ஆங்கில மொழி வெறுப்பு,
பெண்ணுரிமை மறுப்பு, பாட்டு...நடனம் போன்ற கலைகளின் மீது நாட்டமுடையோருக்கு வழங்கப்படும் தண்டனைகள்...
என படைப்பாளி கமல் மிகச்சரியான அளவில் இத்திரைக்கதையில்
 ‘ஆப்கன் மீது வெள்ளைக்காரர்களால் திணிக்கப்பட்ட விளைவுகளை’ பிரச்சனைகளாக தொட்டுக்காட்டி உள்ளார்.

[ 12 ] தாலிபன் பற்றி நீங்கள் இன்னும் விரிவாகத்தெரிந்து கொள்ள,
இரண்டு உலக சினிமாக்களை பரிந்துரைக்கிறேன்.

# ஒசாமா [ OSAMA \ 2003 \ Afghanistan \ Directed by Siddiq Barmak ]


# காந்தகார் [ KANDAHAR \ 2001 \ Iran \ Directed by Mohsen Makhmalbaf ]


[ 13 ] ஆப்கானிஸ்தான் கிராமத்தை,
படை விமானங்கள் குண்டு போட்டு சீரழித்திருப்பார்கள்.
சீரழிந்த மலைக்கிராமம் திரையில் காட்டப்படும் போது,
கழுகின் குரலை மட்டும் பின்னணி சப்தமாக ஒலிக்கச்செய்திருக்கிறார் படைப்பாளி கமல்.

கழுகு = அமெரிக்க தேசியப்பறவை = பிணம் தின்னும் குணம் கொண்ட பறவை.
.
கமலை,  ‘அமெரிக்க அடி வருடி’ என அலறும் அறிவாளிகளே!
இதற்கு வேறு அர்த்தம் சொல்ல முடியுமா உங்களால் ?

[ 14 ] சரித்திரத்தின் பக்கங்களை உரசிக்கொண்டு பிறந்த வசனங்கள் இவை...
ஒமர் : அப்பன் இல்லாம வளர்ற பசங்க ரொம்ப உஷாரா இருப்பாங்க....
[ சிரித்து விட்டு ] சும்மா தமாஷ்.

விஸாம் : அப்பன் யாரென்றெ தெரியாத பசங்க...
அதை விட உஷாரா இருப்பாங்க...
[ இடைவெளி விட்டு ] தமாஷ். 

இந்த வசனத்துக்கு அர்த்தம் வேறொரு காட்சியில் கிடைக்கும்.

மூதாட்டி : பிரிட்டிஷ்காரன் வந்தான்....
ரஷ்யாக்காரன் வந்தான்....
அப்புறம் தாலிபான்...
அமெரிக்கா...
இப்ப நீ வந்திருக்க...

முன்னாடி வால் முளைத்த குரங்குகளா...

ஆப்கானிஸ்தானை சீரழித்தவர்களை...
மூதாட்டியின் வசனம் மூலமாக அம்பலப்படுத்துகிறார் படைப்பாளி கமல்.
அனைவருமே ஆப்கான் பெண்களை சீரழித்தவர்கள்தான்.
ஒமரின் தாயாரும் இப்படி சீரழிக்கப்பட்டவர்தான்.
ஒமரின் வயதை கணக்கிட்டு...
அக்காலக்கட்டத்தில் ஆப்கானில் நுழைந்தவர்களை கணக்கிட்டால்...
ஒமரின் தாயாரை சீரழித்தவர்கள் யாரெனெத்தெரியும்.

இந்த சரித்திர சோக விளைவுகளின் காரணகர்த்தாக்களை பற்றி என்றாவது
 ‘அமெரிக்க அடி வருடி’ பதிவாளர்கள் எழுதியிருக்கிறார்களா?

[ 15 ] “ அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்” ...
என்ற வசனம் நிறைய பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வசனம் பேசப்பட்ட பிறகு அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தெறிவதை படமாக்கியிருப்பார் படைப்பாளி கமல்.

அமெரிக்கர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல...
முதலில் நம்மிடம் நம்பிக்கையை விதைப்பார்கள்...
செயல்பாட்டின் மூலமாக தகர்த்தெறிவார்கள்...
என்றே இக்காட்சியின் மூலமாக விளக்குகிறார் படைப்பாளி கமல்.

இப்படத்திற்கு முழுமையான விமர்சனம்,
 ‘விஸ்வரூபம்- இரண்டாம் பாகம்’ வெளி வந்த பிறகுதான் எழுதமுடியும்...
எழுத வேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Feb 9, 2013

VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபம் நீக்கப்பட்ட கருத்துக்கள்.


நண்பர்களே...
விஸ்வரூபம் கேரளாவில் மூன்று முறையும்...
தமிழ்நாட்டில் இரண்டு முறையும் பார்த்து விட்டேன்.
எனவே நீக்கப்பட்ட வசனங்களை என்னால் எளிதில் நினைவு கூற முடியும்.
காட்சிகளில் கமல் ஒரு பிரேம் கூட நீக்கவில்லை.
ஆனால் நீக்கப்பட்டுள்ள வசனத்தில் பொதிந்திருக்கும் கருத்தை,
இனி படம் பார்ப்பவர்கள் உணர முடியாது.


படத்தில் ஆப்கன் இஸ்லாமியப்போராளியான ஒமர் குரேஷியிடம்
[ ராகுல் போஸ் ],
சக ஆப்கன் இஸ்லாமியப்போராளியான சலீம்...
ஒரு போஸ்டரை காட்டுவான்.
அதில் விஸாம் அகமத் காஷ்மீரி [ கமல்ஹாசன் ] என்ற தீவிரவாதிக்கு,
இந்திய ராணுவம் ஐந்து லட்சம் விலை வைத்திருக்கும் போஸ்டரைக்காட்டுவான்.
அப்போது ஒமர், “ ஐந்து லட்சம் எப்போ வேணும்னாலும் கிடைக்கும்.
ஆனா தமிழ் பேசும் ஜிகாதி கிடைக்கிறது கஷ்டம்” என்பான்.
 “தமிழ் பேசும் ஜிகாதி கிடைக்கிறது கஷ்டம்” என்ற வசனத்தை மட்டும் இப்போது நீக்கி விட்டார் கமல்.

நீக்கப்பட்ட வசனத்தில் இருக்கும் உட்கருத்து...
தமிழ்நாட்டில் ஜிகாதிகள் கிடைப்பது அபூர்வம்.
ஏனென்றால் தமிழ்நாட்டில் ஜிகாதிகள் இல்லை.
ஏன் ஜிகாதிகள் உருவாகவில்லை?.
 மத நல்லிணக்க பூங்காவாகத்திகழும் தமிழ்நாட்டில், 
ஜிகாதிகள் உருவாகும் சூழல் இல்லவே இல்லை.
இந்த அருமையான உட்கருத்து பொதிந்த வசனம் நீக்கப்பட்டது
மத நல்லிணக்க வாதிகளுக்கு நஷ்டமே.


நீக்கப்பட்ட மற்றொரு வசனம்...
ஒமரும், விஸாமும் முதன் முதலாக நேரடியாக சந்திக்கும் காட்சி...

விஸாம் : நீங்க எப்படி தமிழ் கத்துகிட்டீங்க ?
ஒமர் : ஒரு வருஷம் தலைமறைவா இருந்தேன்.
கோயமுத்தூர்ல...மதுரைல...

“ கோயமுத்தூர்ல...மதுரைல”...என்ற வசனம் இப்போது நீக்கப்பட்டு விட்டது.
“தமிழ் பேசும் ஜிகாதி கிடைக்கிறது கஷ்டம்”... 
என்ற வசனத்தை ஒமர் பேசியது...
தமிழ்நாட்டில் கோவையிலும், மதுரையிலும் தலைமறைவாக இருந்த அனுபவத்தில் பேசுவதாக படைப்பாளி கமல் அமைத்திருக்கிறார்.
ஒரு வருடம் தமிழ்நாட்டில் இருந்த போதும், 
ஒமரால் தமிழ்நாட்டில் ஜிகாதிகளை உருவாக்க முடியவில்லை  என்பதே ஒமர் பேசும் வசனத்தில் இருக்கும் உட்கருத்து.

 “ கோயமுத்தூர்ல...மதுரைல”...என்ற வசனம் நீக்கப்பட்டதால்,
ஒமர் தமிழ் பேசுவதற்கான லாஜிக்கும் அடிபட்டு விட்டது.

ஏனைய நீக்கங்கள், எந்த உட்கருத்தும் இல்லாதது.
எனவே அது பற்றி விவாதிக்க வேண்டியதில்லை.

விஸ்வரூபத்தில் ஒரு படைப்பாளியாக கமல்,
இஸ்லாமியர்களை பெருமைப்படுத்திய தருணங்களை...
அடுத்தப்பதிவில் காண்போம்.

Feb 5, 2013

பதிவர்களின் எழுச்சி !.


நண்பர்களே...
கடந்த ஞாயிறு 03-02-2013 அன்று கோவைப்பதிவர்கள் சங்கம்,
பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழாவை மிகச்சிறப்பாக நடத்தியது.

பதிவர் அகிலாவின் ‘சின்னச்சின்ன சிதறல்கள்’ என்ற கவிதை நூலை வெளியிட்டவர் திரு.கண்ணன் கனகராஜ் [இலக்கிய ஆர்வலர்] .
பெற்றுக்கொண்டவர் திரு.மகேந்திரன் [ தெருவோர மனநலம் குன்றியவர்களை பராமரிக்கும் சமூக ஆர்வலர்] .

பதிவர் கோவை மு.சரளாவின் ‘மவுனத்தின் இரைச்சல்’ என்ற கவிதை நூலை வெளியிட்டவர் திரு.கோவை ஞானி [மிகப்பெரிய தமிழ் அறிஞர் ].
பெற்றுக்கொண்டவர் திரு.ஆனந்த் [ ஆசிரியர்,ஆனந்தம் மாத இதழ் ].

பதிவர் ஜீவானந்தம் எழுதிய ‘கோவை நேரம்’ என்ற பயண நூலை
வெளியிட்டவர் திரு.ஓஷோ ராஜேந்திரன் [ இலக்கிய ஆர்வலர் ].
பெற்றுக்கொண்டவர் திரு.யோகநாதன் [ ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு
பராமரிக்கும் இயற்கை ஆர்வலர் ].

அனைவருமே சிறப்பாக பேசினர்.
சிறப்புரை ஆற்றிய பதிவர் கலாகுமரன் பேச்சு ‘சுறுக்..நருக்’.

தலைமை ஏற்று உரை நிகழ்த்திய அண்ணாச்சி திரு.எட்வின் [ தமிழக வியாபாரிகள் சம்மேளனம் ] , தனது வெள்ளந்தியான பேச்சினால் அசத்தினார்.
அவர் கையை மறைத்த மோதிரம் என்னை மிகவும் கவர்ந்தது.
கரண்ட் கட்டான நேரத்தில்,  சட்னி, துவையல் அரைக்க வசதியான  ‘டூ இன் ஒன் மோதிரம்’.


நூலாசிரியர்கள் மூவரில் பெண் சிங்கங்கள் கச்சிதமாக பேசினர்.
நமது ஆண் சிங்கம் ‘கோவை நேரம்’ ஜீவா கர்ஜிப்பார் என நினைத்தேன்.
அவர் பேச ஆரம்பிக்கும் போது எனக்கு தும்மல் வந்தது.
சைலண்டாக தும்மி விட்டு பார்த்தேன்.
ஜீவா முடித்து விட்டார்.
எப்படிப்பேசுவது என தமிழக அரசியல்வாதிகள் ஜீவாவிடம் கற்றுக்கொள்வது நலம்.

ஜீவாவின் அடியொற்றி அடியேன்,  ‘இரண்டு செகண்ட்’ நன்றியுரை [அனைவருக்கும் நன்றி ] .

நூலாசிரியர்களின் உற்றார் உறவினர் என கணிசமான கூட்டம் அரங்கை
நிரப்பியது.
ஆனால் கோவைப்பதிவர்களின் கூட்டம் ‘குறுந்தொகையை’
நினைவு படுத்தியது.

ஒன்றை தெரிந்து கொண்டேன்.
ஒரு நிகழ்ச்சியோ...திரைப்படமோ...
கஷ்டப்பட்டு தமிழக அரசிடம் 144 தடையுத்தரவு வாங்கி விட வேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Feb 2, 2013

மதிப்பிற்குரிய மணிரத்னம் அவர்களுக்கு...


வணக்கம்.
கடலில் நீச்சலும் தெரியாமல்...ஆழமும் தெரியாமல் இறங்கி உள்ளீர்கள்.
சுஜாதா என்ற மாலுமியில்லாமல்...
ஜெயமோகன் என்ற ‘டம்மி பீஸை’ நம்பி கடலில் பயணப்பட்டதை நீங்கள்  உணர்ந்திருப்பீர்கள்.
நாங்களும் மூச்சு திணறி அவஸ்தைப்பட்டோம்.

ஜெயமோகன் மிகச்சிறந்த இலக்கிய படைப்பாளி.
அவரது ‘ஏழாம் உலகம்’ ஒன்று போதும்...
ஆயிரம் ஆண்டுகள் பேசும் காவியம் அது.
ஆனால் சினிமா என்பது வேறு.
அது இலக்கியத்தை காட்டிலும் உயர்ந்தது.
அதில் அவர் மாஸ்டர் கிடையாது.

முதலில் ஜெயமோகனுக்கு,
சினிமாவின் மீது மதிப்பும்...ஆர்வமும் அறவே கிடையாது.
அவரது எழுத்துக்கள் அனைத்தையும் படித்தவர்களுக்கு இது தெரியும்.
நான் அவரிடம் நேரிடையாக மதுரையில் சந்தித்து பேசும் போது
நேரடி அனுபவமாக இதை உணர்ந்திருக்கிறேன்.

சினிமாவில் ஜெயமோகன் நுழைந்ததற்கு ஒரே காரணம், பணம்....பணம்...பணம்.
இனி யாரும் ஜெயமோகனிடம் சிக்கி சீரழியாமல் எச்சரிக்கவே இப்பதிவு.

கடல் படத்தின் கதையும் அவரது சொந்த  சரக்கல்ல.
திரை மேதை லூயி புனுவலின் ‘நஸ்ரின்’ கதையை சுட்டு...
காதல் என்ற கத்தரிக்காயை சேர்த்து  ‘கந்தர்கோலமாக்கி’ விட்டார்.
திரைக்கதை குப்பையாகிப்போனால்...எப்பேற்பட்ட இயக்குனரும் மண்ணைக்கவ்வுவர்.
இப்படத்தில், தாங்கள் அறிந்தோ அறியாமலோ அழிந்திருக்கிறீர்கள்.

ஜெயமோகன் உங்களை மோசடி செய்திருக்கிறார்.
கடற்கரை கிராம மக்கள் மேரி மாதா,இயேசுவுக்கு அப்புறம் பாதிரையாரைத்தான் வாழும் தெய்வமாக வழி படுவர்.
அரவிந்த சாமி பாதிரியாராக முதன் முதலாக ஊருக்குள் நுழையும் போது
தமிழகத்தில் எந்த கடற்கரை கிராமமும் இப்படி வரவேற்காது.
தேவாலயமும் இப்படி சீரழிந்து கிடக்காது.
நஸ்ரின் படத்தில் வரும் கிராமத்தை அப்படியே தமிழ்நாட்டுக்கு
இடம் பெயற்ததால் வந்த கோளாறு இது.


ஐந்தே வயது மூளை வளர்ச்சியுள்ள பெண்ணின் ‘கிளிவேஜ்ஜை’ ...
 ‘டெல்லி கற்பழிப்பான்’ ரசிப்பான்.
கலா ரசிகன், காறித்துப்புவான்.
எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி படமாக்கியுள்ளீர்கள்.
நல்ல வேளை டிரைலரில் இருந்த  ‘லிப் லாக்’ கிஸ்ஸை தூக்கி விட்டீர்கள்.
அக்காட்சியை படத்தில் இடம் பெற்றிருந்தால் நீங்கள் படமாக்கிய மணப்பாடு கிராமப்பெண்களே ‘வாரியலை’ தூக்கி கொண்டு வந்திருப்பார்கள்.

ஏ.ஆர். ரகுமானுக்கும் ஒரு வார்த்தை...
இப்படத்திற்கு இசை அமைப்பதற்கு முன்னால்...
அலைகள் ஓய்வதில்லை,கடலோரக்கவிதைகள் இரண்டையும் பார்த்திருக்க வேண்டும்.
டைட்டில் சாங் ஒன்று போதும்.
இவ்வளவு அபத்தமாக ஹாரிஸ் ஜெயராஜ் கூட போட்டதில்லை.
ஆடியோவில் கேட்கும் போது உருக வைத்த ஜீவனுள்ள ‘நெஞ்சுக்குள்ளே’ பாடல் படத்தில் செத்து விட்டது.

‘ஏலேய் கிச்சா’ பாடலில் பிருந்தாவின் நடன அமைப்பும்,
பாம்பே டான்சர்களின் தோற்றமும்...ஆட்டமும்...
எனக்கு வாந்தியே வந்து விட்டது.

கிளைமாக்ஸ் காட்சியில் விஷுவல் எபக்ட்ஸ்சும்,பின்னணி இசை அபாரமாக இருந்தும்...
அர்ஜூனை ‘டிப் டீ’ போல கடலுக்குள் முக்கி எடுத்து காலி பண்ணி விட்டார்கள்.


 ‘நாயகன்’ மணிரத்னம் இனி பிறக்க முடியாதுதான்.
எனவே, அலைபாயுதே மணிரத்னத்தையாவது உயிர்த்தெழச்செய்யுங்கள்.
எல்லாப்படங்களிலும் அழுது வடிந்த ஷாலினியை...
துறுதுறு சுட்டிப்பெண்ணாக்கிய மந்திரவாதி மணிரத்னத்தை இன்றும் காதலிக்கிறோம்.

 ‘கோலிவுட் கர்த்தருக்கு’ ஸ்தோத்திரம்.

நஸரின் படத்தை அறிமுகம் செய்து நான் எழுதிய பதிவைக்காண்க...