Jan 7, 2013

கொல்லூருக்கு வாருங்கள்!


நண்பர்களே...புத்தாண்டு தினத்தன்று கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பதை 1985லிருந்து கடமையாகக்கொண்டுள்ளேன்.
ஜனவரி 1ம்தேதி அதிகாலையில் தரிசிக்க எண்பதுகளில் ஆயிரம் பேர்தான் மொத்தமே வருவார்கள்.
இளையராஜா,ஜேசுதாஸ், எஸ்.பி.பி என சினிமா வி.ஐ.பிக்களை கைக்கெட்டும் தூரத்தில் பார்க்கலாம்.


கொல்லூர் அழகிய மலை கிராமம்.
இன்று லட்சக்கணக்கில் மக்கள் வருவதால் கொல்லூர் நகரமாகி விட்டது.
நட்சத்திர ஓட்டல்கள் அதிகரித்து விட்டன.
நடுத்தர வர்க்கத்துக்கு,  ‘கொசுக்கடி’ லாட்ஜ்கள் முளைத்து விட்டன.
சாதாரண நாளில் 300 ரூபாய்...டிசம்பர் 31 மட்டும் 3000 ரூபாய்.
கோயில் நிர்வாகமும் தங்குமிடம் ஏகமாக கட்டி விட்டது.
எல்லா நாட்களும் ஒரே கட்டணம்தான்.
ஆனால், டிசம்பர் 31 தங்குவதற்கு  ‘தர்மகர்த்தாவின் கருணைப்பார்வை’ தேவை.

நான் பொதுவாக கோயில்களில் அதிகக்கூட்டம் இருந்தால் போகமாட்டேன்.
எனவே இந்தமுறை கோவையிலிருந்து டிஸம்பர் 31 அன்று வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ்ஸில் இரவு 9 மணிக்கு புறப்பட்டேன்.
ஜனவரி 1 அதிகாலை 5.30க்கு மங்களூர் போய் விட்டேன்.
அங்கிருந்து 6.20 க்கு கோவா செல்லும் பாஸஞ்சர் டிரெயினில் புறப்பட்டேன்.
மலைப்பிரதேசங்களின் வழியாக பயணிக்கும் அந்த ரயிலில் அவ்வளவு கூட்டமில்லை.
சரியாக 10.00 மணிக்கு கொல்லூர் மூகாம்பிகை ரோடு என்ற நிலையத்தில் இறங்கினேன்.
டாக்ஸி, ஆட்டோ என அவரவர் வசதிக்கு வாகனங்கள் தயாராய் இருந்தது.
பஸ்ஸில் செல்ல மெயின் ரோடு வரை நடக்க வேண்டும்.
மாருதி வேனுக்கு 500 ரூபாய்.
நான்கு பேர் கொண்ட ‘பேமிலியிடம்’ ஷேரிங் பேசி ஒட்டிக்கொண்டேன்.
தலைக்கு 100 ரூபாய்.


ஒரு மணி நேர மலைப்பயணத்தில் கொல்லூர் வந்து விட்டது.
சிருங்கேரி மடம் கட்டியிருக்கும் தங்குமிடத்தில் 300 ரூபாய்க்கே ரூம் கிடைத்தது.


கொல்லூரில்  ‘சௌபர்ணிகா’ என்ற சிறு நதி ஒடுகிறது.
ஒரு காலத்தில் மினரல் வாட்டர் போல் இருக்கும்.
இப்போது அதிக மக்கள்...அதிக அசுத்தம்.
இருந்தாலும் எனக்கு சௌபர்ணிகாவில் குளிக்க வேண்டும்.
புண்ணிய நதியை கூவம் ஆகாமல் காக்க கர்நாடக அரசு முயல வேண்டும்.
சௌபர்ணிகாவில் குளிப்பதெற்கென்றே நவராத்திரி காலங்களில்  செல்வேன்.
பொங்கிப்பெருக்கெடுத்து திமிருடன் ஓடிக்கொண்டிருப்பாள் சௌபர்ணிகா.
அமைதியான கானகத்தில் அப்போது அவளின் பெருங்கூச்சல் ஆனந்தமாயிருக்கும்.
நீச்சல் தெரிந்தால் சொர்க்கம்... தெரியாவிட்டல்  ‘நிரந்தர சொர்க்கம்’.


குளித்து விட்டு வேட்டி& துண்டு மட்டும் அணிந்து சென்றேன்.
கோவிலுக்குள் சட்டை,லுங்கி,பெர்முடா அனுமதியில்லை.
தர்மதரிசனம் கூட்டம் அதிகமாயிருந்ததால் 15 ரூபாய் கட்டண சிறப்பு வழியில் சென்றேன்.
2 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தேன்.
இப்போது திருப்பதி போல் இங்கும் ஆள் வைத்து தள்ளி விடுகிறார்கள்.
திருப்பதியில் ‘ரண்டி..ரண்டி...’ கொல்லூரில் ‘பன்னி...பன்னி...’.

தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து ‘அன்னதானம்’ கியூ.
சாப்பாடு பகல் 12 மணியிலிருந்து 2 மணி வரை.
இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரை தினமும்.
வெளியே சாப்பிடுவதை விட கோயில் அன்னதானச்சாப்பாடே திவ்யமாக இருக்கும்.
டிபன் மட்டும் ஹோட்டலில் சாப்பிடலாம்.
அதிலும் டேஸ்ட்டெல்லாம் எதிர் பார்க்காதீர்கள்.
இட்லி, வடை, மசால்தோசை உத்தமம்.
மற்றவை உயிருக்கு உத்தரவாதமில்லை.


குட்டி தூக்கம் போட்டு அறையிலேயே குளித்து விட்டு
காட்டுப்பகுதிக்கு செல்ல ஆட்டோ பிடித்தேன்.
மலைச்சாலையில் காட்டுப்பகுதிக்குள் ஐந்து கிலோ மீட்டர் சென்று இறங்கி ஆட்டோவை அனுப்பி விட்டேன்.
திரும்பி நடந்தே வந்தேன்.
மூகாம்பிகை ஆட்சி செய்யும் காடு இது.
1985 போலவே, இன்றும் அதே வனப்புடன் இருந்தது.
கர்நாடக வனத்துறைக்கு நன்றி சொல்லி,
சொர்க்கத்தில் ‘வாக்கிங்’ செய்தேன்.
டால்பி ஒலியில் விதவிதமான சப்தங்கள் கேட்டது.
இந்த இயற்கையின் இசையை எந்த இசை அமைப்பாளரும் தரமுடியாது.

இயற்கையை தரிசித்து விட்டு,
மாலை ஆறு மணிக்கு மீண்டும் அம்பாள் தரிசனத்துக்கு சென்றேன்.
தர்ம தரிசனத்திலேயே மொத்தம் பத்து பேர்தான் கியூ.
இதற்காகத்தானே ஆசைப்பட்டேன்.
நின்று நிதானமாக வழி பட்டு,
ஸ்ரீமகா காளி, ஸ்ரீமகா சரஸ்வதி, ஸ்ரீமகா லட்சுமி ஐக்கிய ஸ்வரூபணி மூகாம்பிகையுடன் பேசினேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

9 comments:

  1. சொர்க்கத்தில் ‘வாக்கிங்’ ' டால்பி ஒலியில்'
    வர்னணைகள் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. ரசித்தேன். கொல்லூருக்கு போகவேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளது. தனி நபர் செலவை தோராயமாக தெரிவிக்கமுடிமா?

    ReplyDelete
    Replies
    1. கோவையிலிருந்து சென்று வர ஒரு ஆளுக்கு இரண்டாயிரம் தாராளம்.
      வரும் போது உடுப்பி கிருஷ்ணனையும் பார்க்கலாம்.

      Delete
  2. திரும்பி வந்ததைப் பற்றி ஒண்ணும் எழுதலயே, அங்கேயே இருந்து விட்டீர்களோ என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா...திரும்பி வந்தது நினைவிலே இல்லையே!

      Delete
  3. நான் ஒரு முறை போய் உள்ளேன். உடுப்பி,கட்டில், சிருங்கேரி,தர்மஸ்தலா, கோவா என்று போய் வந்தோம்.மங்களூரில் வேன் எடுத்து போனோம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில் கோவா மட்டும் நான் போகவில்லை.
      சிருங்கேரி மட்டும் நிறைய தடவை போய் உள்ளேன்.

      Delete
  4. தலைவரே,
    நானும் போகவேண்டும் என நினைப்பேன்,முடியாமலே போகிறது,போய்வந்த அனுபவத்தை படித்ததிலேயே ஒரு திருப்தி.மிக்க நன்றி,இளையராஜாவின் மூகாம்பிகா ஆல்பம் எப்போதும் கேட்பேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      போகும் போது என்னிடம் சொல்லுங்கள்.
      அருமையான ஆன்மீக சுற்றுலா திட்டம் தயாரித்து தருகிறேன்.

      Delete
  5. சிறு வயதில் சென்றது.. அவ்வளவாக நினைவில் இல்லை. எப்போதாவது சந்தர்ப்பம் கிடைக்கும்போது செல்ல வேண்டும்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.