1972ல் தனது முதல் படைப்பான சுயம்வரம் வெளியாகி 5 ஆண்டுகள் கழித்துதான் தனது இரண்டாவது காவியமான கொடியேற்றத்தை[1977] வெளியிட்டார்.
இப்படம் சங்கரன் குட்டி என்ற சாமான்யனின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது.திருமணத்தையும் குடும்பவாழ்க்கையையும் மற்றொரு கோணத்தில் பார்க்கிறது.
திருமணமாகாத ஒருவன் திருமணம் செய்து கொள்வதற்க்கான உரிமை எப்போதும் உண்டு.ஆனால் திருமணமான ஒருவன்,திருமணமாகாதவனாக இருக்கும் சுதந்திரத்தை இழந்து விடுகிறான்.
உலகின் யதார்த்த சித்திரங்களும் சங்கரன்குட்டியின் வாழ்க்கையனுபவங்களும்...அனுபவங்களால் சங்கரன்குட்டி அடையும் மாற்றங்களும்தான் கொடியேற்றம்.
சங்கரன்குட்டி பற்றி அடூரின் பேட்டி இதோ....
சங்கரன்குட்டி பெருந்தீனிக்காரனோ மநத புத்திக்காரனோ அல்ல.நமது வெகுஜனத்திரளிலிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் இவனும் ஒருவன்.தனக்கென ஒரு தனித்துவமோ சுயசிந்தனையோ இல்லாததுபோல் தோன்றும்.எனவே, அவனை நாம்,நம்மை விடக்கீழானவனாக நினைத்து தாழ்வாக மதிப்பிடுகிறோம்.நம்மிடையே வாழும் இப்படியான சங்கரன்குட்டிகளை நாம் அதிகமாக கண்டுகொள்வதில்லை.திருமணமாகும்வரை,குடும்பத்தைப்பற்றியோ குடும்பவாழ்க்கைக்கு அடிப்படை தேவையான பரஸ்பர அன்பைப்பற்றியோ அறியாத,வெற்றுத்தடியனாக திரிந்தவன்தான் சங்கரன்குட்டி.பல்வேறு விதமான வாழ்க்கைகளைப்பார்த்து,அதன் ஏமாற்றங்களையும்,வெறுப்புகளையும்,ஆபத்துகளையும்,துயரங்களையும்,ரகசியங்களையும்,
பொருத்தமின்மைகளையும் எல்லாம் அனுபவித்த அவனுக்குள் எங்கோ ஒளிந்து கிடந்த ஒரு தனித்துவம் மெல்லத்தலைதூக்குகிறது.உடனே மனத்தெளிவுடன் தனக்குச்சொந்தமான சிறு குடும்பத்தை நோக்கி அவன் நிறைந்த அன்புடனும் பாசத்துடனும் வந்து சேருகிறான்.
சத்யஜித்ரே முதன்முதலில் பார்த்த அடூரின் படம் கொடியேற்றம்.அந்த அனுபவம் அடூரின் வார்த்தைகளிலேயே......
ஒரு டஜன் பார்வையாளர்கள் மட்டும் அடங்கிய பிரத்யேகத்திரையிடல் அது...படம் தொடங்கி அதிகம் தாமதமாகவில்லை.சட்டென்று இறுக்கத்தை தளரச்செய்து ஒரு வெடிச்சிரிப்பு கேட்டது.அது ரேயிடமிருந்து.கதை முன்னேற முன்னேற மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள்.எல்லா சிரிப்பை விடவும் உரக்கக்கேட்டது ரேயின் உச்சமும் கனமுமான சிரிப்புதான்.
படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. “பின்னணி இசையை சுத்தமாக ஒதுக்கிவிட்டீகளே,இனிமேலும் அதை பயன்படுத்த மாட்டீர்களா?” என்று கேட்டார்.
“இந்தப்படத்தில் அதற்க்கு இடம் கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால் பயன்படுத்தவில்லை அவ்வளவுதான்”.
அடூரின் முதல் படமான சுயம்வரத்தின் இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனின் பாராட்டு இதோ... “கோபால் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தால் கூட இப்படத்தில் பின்னணி இசை சேர்ப்பதற்க்கான ஒரு இடத்தை கூட என்னால் கண்டுபிடித்திருக்க முடியாது”.
திரைப்படம் பேசத்தொடங்கிய பின்னர் பின்னணி இசை சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட படம் என்ற சிறப்பு கொடியேற்றத்துக்கு உரியது.
இப்போது வந்திருக்கும் நடுநிசிநாய்கள் இந்த உண்மையை மறைத்து வந்த பம்மாத்து படம்.வக்கிரத்தை ...வக்கிரக்காரர்களுக்காக... வக்கிரக்காரக்காரன் எடுத்த படம் நடுநிசிநாய்கள்.
அடூரின் அனுபவங்கள் மேலும் அறிய....
அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா அனுபவம்-தமிழில்:சுகுமாரன்
அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை -அக்பர் கட்டில் [தமிழில்-குளச்சல் மு.யூசுப்]
இரண்டுமே காலச்சுவடு வெளீயீடு.