நண்பர்களே...
விஸ்வரூபம் தமிழகத்தின் மாபெரும் இரு அரசியல் சக்திகளின் சதுரங்க விளையாட்டில் சிக்கி தவிக்கிறது.
தடை செய்யப்போராடும் அமைப்புகள் பகடைக்காய்களே!.
25 சதவீத இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கேரளாவில் விஸ்வரூபம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
எனவே தமிழக - கேரள எல்லைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில்,
விஸ்வரூபம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் சென்று பார்ப்பதே சாலச்சிறந்தது.
சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெருவாரியாக ‘வேலந்தாவளம்’ என்ற கேரள சிற்றூரில் உள்ள
தனலஷ்மி தியேட்டரில் பார்த்து வருகிறார்கள்.
வேலந்தாவளம் செல்லும் வழி இதோ...
பஸ்ஸில் வருபவர்கள் கோவை வந்து,
உக்கடம் பஸ் நிலையம் வாருங்கள்.
ஒரு மணி நேரத்துக்கு... ஒரு பஸ்.
வேலந்தாவளம் செல்லும் டவுண் பஸ் தயார்.
தனலஷ்மி தியேட்டர்காரர் காலை 10 மணியிலிருந்து நள்ளிரவு 3 மணி வரை தொடர்ச்சியாக ஆறு காட்சிகள் நடத்துகிறார்.
இது வரை அனைத்து காட்சிகளும் ’ஜெ’ புண்ணியத்தில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மற்ற மாவட்டத்திலிருந்து கார் மற்றும் வேன்களில் வருபவர்கள்
‘நிலாம்பூர் பை பாஸ் ரோட்டில்' போய் கோவை-பாலக்காடு சாலையை அடையுங்கள்.
சாவடி என்ற ஊரைத்தொட்டதும் இடது பக்கம் வேலந்தாவளம் செல்லும் சாலை இருக்கும்.
அச்சாலை விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து வரும் இடையூறை ஞாபகப்படுத்தும்.
குண்டும் குழியும் விதவிதமாக வந்து கொண்டே இருக்கும்.
இடையூறுகளை தாண்டி பயணிக்கும் போது தமிழக எல்லை
செக்போஸ்ட் வரும்.
எப்போது பார்த்தாலும் ஒரு தொப்பை போலிஸ் செல் போனில் பேசிக்கொண்டிருப்பார்.
அவரைத்தாண்டியதும் ஒரு சிறிய பாலம் வரும்.
பாலத்தின் முடிவில் கள்ளுக்கடை போர்டு உங்களை வரவேற்கும்.
கள்ளுக்கடை போகாமல் நேரே போனால சாலையின் வலது பக்கத்தில் தனலஷ்மி காத்திருப்பாள்.
போகும் வண்டியை சாலையின் ஓரத்தில் பார்க் செய்து விட்டு டிக்கெட் வாங்க கியூவில் நின்று விடுங்கள்.
ஒரு ஆளுக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே கொடுக்கப்படும்.
எனவே அனைவருமே கியூவில் நின்று வாங்குவது உத்தமம்.
ஒரே கட்டணம்தான்...100 ரூபாய்.
கோவை மக்கள் குனியமுத்தூர், மதுக்கரை வழியாகப்போய் நிலாம்பூர் பைபாஸ் இணையும் இடத்தை அடையலாம்.
நான் விஸ்வரூபம் இரண்டாம் முறை பார்க்க,
எனது டிவிஎஸ் ஸ்கூட்டியிலேயே ஜாலியாக சென்றேன்.
மீண்டும் சொல்கிறேன்.
விஸ்வரூபம் முழுக்க முழுக்க ANTI-அமெரிக்கன் படமே.
ANTI-இஸ்லாம் படம் அல்ல.
குரானை அனு தினமும் ஓதும் இந்திய முஸ்லீமிற்கும்...
குரானை அனு தினமும் ஓதும் ஆப்கானிஸ்தான் முஸ்லீமிற்கும்...
உள்ள முரண்பாடே, விஸ்வரூபத்தின் கதையாக இயங்குகிறது.
கமல் சொன்ன மாதிரி இப்படத்தை விளங்க உலக ஞானம் தேவை.
படத்தில் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியரைக்கூட இழிவு படுத்தவில்லை.
மாறாக அவர்களை தூக்கிப்பிடித்திருக்கிறார் படைப்பாளி கமல்.
அமெரிக்க தீவிரவாதத்துக்கு பதிலடியாகத்தான் ஆப்கானியர் தீவிரவாத்ததில் இறங்குவதை தெள்ளத்தெளிவாக படத்தில் காட்டப்படுகிறது.
அது கூட ஆப்கானியர்கள் செய்யும் எதிர்வினை...
மிகக்குறைவான சேதாரமே விளைவிக்கிறது.
உதாரணமாக விஸ்வரூபத்தில் வரும் ஒரு காட்சி...
அமெரிக்கர்களின் ஆணைக்கேற்ப செயல்படும்‘நேட்டோ’ ராணுவம்...
ஆப்கானிய கிராமத்தை சுக்கு நூறாக்கியதால் பெண்கள்,குழந்தைகள் உட்பட அனைவருமே பலியாகிறார்கள்.
அமெரிக்க தீவிரவாதத்துக்கு பதிலடியாக ஆப்கானியர்கள் ஒரு இளைஞனை மனித வெடிகுண்டாக்கி ஒரு ராணுவ வண்டியை சிதறடிக்கிறார்கள்.
மக்கள் சீனாவை கட்டமைத்த மாமேதை
‘மாவோ’ சொன்னதை நினைவில் கொள்க...
“ நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை நம் எதிரிகள்தான் தீர்மானிக்கின்றனர் ”.
படம் பார்க்கும் அனைவரிடமும் இக்கேள்வி எழும்...எழ வேண்டும்.
ஒரு கிராமமும்...ஒரு ராணுவ வண்டியும் ஒன்றா ?
ஆப்கானிஸ்தானை தொடர்ந்து உலக நாடுகள் காயடித்ததை ஒரு மூதாட்டியின் வசனத்தில் பொதிந்திருக்கிறார் கமல்.
“ முதல்ல பிரிட்டிஷ்காரன் வந்தான்...
அப்புறம் ரஷ்யாக்காரன்...
அப்புறம் தாலிபன்...
இப்ப நீ வந்திருக்க...”
என ஆப்கான் மூதாட்டி, கதாநாயகனான இந்திய முஸ்லீமை பார்த்து கேட்பதாக காட்சியமைத்திருக்கிறார் கமல்.
இதுதான் படத்தின் சென்டர் பாய்ண்டே.
இன்னும் சொல்லத்துடிக்கிறேன்...
படம் பார்க்காத உங்களிடம் மேலும் படத்தை சொல்லுவது கூட தீவிரவாதம்தான்.
விஸ்வரூபம் வெளியாக அவரவர் கடவுள்களை...
பிரார்த்திப்போம்...
தொழுவோம்...
வணங்குவோம்.
கோவை வலைப்பதிவர்கள் சங்கத்தின் துவக்க விழாவும்
பதிவர்கள் கோவை நேரம் ஜீவானந்தம், அகிலா, கோவை எம்.சரளா ஆகியோரது புத்தக வெளியீட்டு விழாவும் ஒருங்கே நடை பெற உள்ளது.
இணையத்தில் உலவும் தமிழ்ச்சிங்கங்களை அன்போடு அழைக்கிறோம்.
நிகழ்ச்சி முழு விபரம் இதோ...
இந்நிகழ்ச்சியை யாராவது தடை செய்ய தமிழக முதல்வரிடம் போட்டுக்கொடுத்து,
எங்களையும் விளம்பரப்படுத்தவும்.
பப்ளிக்குட்டி பண்ண சங்கத்தில் நிதி இல்லை.
ப்ளீஸ்...