May 12, 2013

இளையராஜா - பாகம் 4

‘ஒரு கலைஞனை எந்த விமர்சனமுமற்று ஏற்றுக்கொள்வதுதான் அவனது படைப்புக்கு நாம் தருகின்ற கொலைத்தண்டனை’ - 
                                                       ழான் போல் சார்த்தர்.

ஆரம்ப காலத்தில் சினிமா பார்ப்பதே ஒழுக்க குறைவான செயலாகவும்,
அதில் வேஷம் கட்டுகிற நடிகர்கள் கூத்தாடிகளாகவும் பார்க்கப்பட்டனர்.
அதிலிருந்து முன்னகர்ந்து அவர்களைக்கலைஞர்களாக பார்க்கப்பழகிய பின்னரும்,
சினிமாவுக்கு வாசிக்கிற இசைக்கலைஞனை...
பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒத்துக்கொண்டு விமர்சிக்கிற நிலைமை இங்கு இல்லை.

எந்தக்கலைவடிவமாக இருந்தாலும் அதனுள் இருந்து ஒரு கலைஞன் தன்னை எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறான் என்பதுதான் முக்கியமானது.
அகழ்வாராய்ச்சி செய்து புதைந்த கலைச்செல்வங்களை மீட்டெடுக்கிற நாம்,
ந்ம் காலத்தில் நிகழ்கிற கலை முயற்சியை எப்படி புறக்கணிக்க முடியும் ?

திரைப்படப்பாடல் என்கிற,
தீர்மானிக்கப்பட்ட மூன்று முதல் ஐந்து நிமிடத்திற்குள்ளான
நேரம் மற்றும் சூழல் வரையறைக்குள்,
இளையராஜா நிகழ்த்திய தீவிரமான இசை வெளிப்பாடை பார்ப்போம்.

 ‘நிழல்கள்’ படத்தில் ‘பூங்கதவே... தாழ் திறவாய்’ என்றொரு பாடல் இருக்கிறது.
இந்தப்பாடலின் பிரிலூடைக்கவனியுங்கள் .
[  Prelude = ஒரு பாடலின் முன் இசைக்கப்படுகிற இசை ]

2 / 4  என்கிற காலக்குறிப்பின் [ time signature ] தாளத்திற்கேற்ப 34 பார் நிகழ்கிறது.
[ Bar என்பது இரண்டு அழுத்தமான தட்டுதலுக்கு - strong beats -  இடையே உள்ள
இசைப்பகுதி ]
இதன் பிரிலூட் தமிழ்ப்பாடல்களிலேயே நீளமான முன் இசைப்பகுதி உள்ள பாடல் இதுவாகத்தான் இருக்கும்.
வயலினும், குழலும், வீணையும் இழைந்து இழைந்து மேலோங்கி, தயங்கிப்பின்நகர்ந்து, ஒன்றையொன்று சுவீகரித்துத்தேய்ந்து அற்புதமான கணத்தை நிகழ்த்துகிறது.

இது போலவே  ‘ராஜபார்வை’ படத்தில் கண் தெரியாத நாயகன்,
படத்தின் துவக்கத்தில் வயலின் கூட்டிசை நிகழ்த்துவதாக ஒரு காட்சி வரும்.
அதில் வரும் வயலின் ஸ்வரக்கலவை அற்புதமானது.
ஆனாலும் இது கவனிப்பற்று, பிம்பங்களின் மீதான சப்த ஒப்பனை போல கரைந்து விட்டது.

மேற்ச்சொன்ன இரண்டு முயற்சிகள்தான் பின்னாளில் இளையராஜா வெளியிட்ட  ‘எப்படிப்பெயரிடுவது ?’ [ How to name It ? ],
‘காற்றைத்தவிர ஒன்றுமில்லை’ [ Nothing But Wind ] என்கிற இசைக்கோலங்களுக்கான பரிசோதனை முயற்சிக்கு வித்திட்ட துவக்கம் எனலாம்.

ஒரு பாடலின் பல்லவி முடிந்ததும் வருகிற இசையை,
‘முதல் பின்னனி இசை’ [ first background music ] என்றும்,
சரணம் முடிந்து வருகிற இசையை,
‘இரண்டாவது பின்னணி இசை’ [ second BGM ] என்றும் அழைக்கிறார்கள்.
முதல், இரண்டாவது பின்னணி இசை இரண்டையும் பெரும்பாலும் ஒரே இசையாக வாசிப்பதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இளையராஜா இந்த முதல், இரண்டு பின்னணி இசைகளையும் வெவ்வேறாக எழுதினார்.
ஒரு பாடலுக்கு இடையிலான இரண்டு விதமான பின்னணி இசைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் வெவ்வேறு விதமான பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதை அறிய முடியும்.


எழுதியவர் : செழியன்
நூல் : பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள் ]
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.

நண்பர்களே,
பாரம்பரிய இசை விதிகளுக்கு முரணாக, அழகிய இசை மீறல்களை
இளையராஜா நிகழ்த்தியதை...
எடுத்துக்காட்டுகளுடன் செழியன் விளக்குவதை...
அடுத்தப்பதிவில் பார்ப்போம்.

14 comments:

 1. "ஒரு பாடலின் பல்லவி முடிந்ததும் வருகிற இசையை,
  ‘முதல் பின்னனி இசை’ [ first background music ] என்றும்,
  சரணம் முடிந்து வருகிற இசையை,
  ‘இரண்டாவது பின்னணி இசை’ [ second BGM ] என்றும் அழைக்கிறார்கள்.
  முதல், இரண்டாவது பின்னணி இசை இரண்டையும் பெரும்பாலும் ஒரே இசையாக வாசிப்பதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
  இளையராஜா இந்த முதல், இரண்டு பின்னணி இசைகளையும் வெவ்வேறாக எழுதினார்.:"

  எல்லோரும் இதையே சொன்னா எப்படி? பழைய பாடல்ல பின்னணி இசையே கிடையாதா பின்ன? எனக்கும் ராஜா பாட்டு ரொம்ப பிடிக்கும். அதுக்ககாக இப்படி எல்லாமா சொல்றது?வேற ஒரு தளத்தில நான் இந்தப் பதிவை படிச்சேன். கொஞ்சம் நடுநிலையா இருப்பதா எனக்கு படுது.
  http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/05/vi-65.html

  ReplyDelete
  Replies
  1. இளையராஜாவுக்கு முந்தைய காலத்திலேயே சில பாடல்களுக்கு இரண்டாம் பின்னணி இசையை வேறுபடுத்தி காட்டியிருக்கலாம்.
   இளையராஜா தொடர்ந்து அந்த பாணியை கடைப்பிடித்து வந்தார்.

   /// எல்லோரும் இதையே சொன்னா எப்படி? பழைய பாடல்ல பின்னணி இசையே கிடையாதா பின்ன? ///

   அடுத்தப்பதிவு உங்கள் சலிப்புக்கு விடையாக இருக்கும்.

   எம்.எஸ்.வியின் சாதனைகளை யாரும் மறுக்க முடியாது.
   மறக்கவும் முடியாது.
   திரு.காரிகன், எம்.எஸ்.வியின் சாதனைகளை இன்னும் ஆழமாக ஆராய்ந்து எழுதி இருக்கலாம்.
   இருந்தாலும் மெல்லிசை மன்னரின் பெருமையை பறை சாற்றி இது வரை வந்த கட்டுரைகளில் இதுவே மணி மகுடம்.

   Delete
  2. இப்போது பெரும்பாலானவர்கள் மறந்து விட்ட எம் எஸ் வி என்ற மகா இசைக் கலைஞனைப் பற்றி நான் எனக்குத் தெரிந்தவைகளை எழுதியுள்ளேன். இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து எழுதியிருக்கலாம் என்ற உங்கள் கருத்தை ஏற்கிறேன். மணிமகுடம் என்று நீங்கள் அதை குறிப்பிட்டது குறித்து மகிழ்ச்சியே. உங்கள் பாராட்டுக்கு நன்றி உலக சினிமா ரசிகரே.

   Delete
  3. நான் மிகவும் நேசிக்கும் எம்.எஸ்.வி பற்றி அற்புதமான கட்டுரையை வழங்கியதற்கு நன்றி.
   தாங்கள் அக்கட்டுரையை திரைமணத்தில் இணைத்து இன்னும் பல வாசகர்களை சென்றடையச்செய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

   Delete
 2. Prelude,Bar,Time Signature,1st BGM,2nd BGM என்று புதிய விசயங்களை கற்பித்திருக்கிறீர்கள். நன்றி

  ReplyDelete
 3. Prelude,Time Signature, Bar, 1st BGM, 2nd BGM என அதை தமிழிலிலும் புரியும் படி சொன்னதற்கு நன்றி.இது வரை இவ்வார்த்தைகளை அர்த்தம் தெரியாமல் தான் வாசித்துக் கொண்டிருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கணையாழி பத்திரிக்கையில், ஒரு கட்டுரைத்தொடரில் இதை செழியன் மிக எளிதாக விளக்கியுள்ளார்.
   நான் அதை பதிவுலகில் பதிந்துள்ளேன்.
   என் பணி அவ்வளவே.
   உங்கள் பாராட்டு திரு. செழியன் அவர்களையே சாரும்.

   Delete
 4. Pls provide the purchase link for the book.

  Thanks

  ReplyDelete
  Replies
  1. காலச்சுவடு பதிப்பகம்,
   669, கே.பி.சாலை,
   நாகர்கோயில் - 629 001.

   போன் : 04652 402888

   Delete
 5. கலக்கல் பதிவு

  ReplyDelete
 6. இசை பற்றிய பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. இத்தொடரின் நோக்கமே அதுதானே.
   நன்றி நண்பரே.

   Delete
 7. அருமையான ஆய்வு செழியனுடையது.
  வெறுமனே துதிபாடலாக இருக்காது ராஜாவின் இசையை TECHNICAL ஆக ஆய்வு செய்துள்ளார். தமிழ் இசை உலகத்துக்கு அற்புதமான இசை ஞானம் உள்ள ஆய்வாளர் கிடைத்துள்ளார்.

  ReplyDelete
 8. உண்மையில் ராஜாவின் ஒவ்வொரு புதுப்பரிமானத்தை தமிழ்சினிமா நிராகரித்துவிட்டது என்பதே சாலப்பொருத்தம்! என்ன செய்வது இந்த ஊடக சிகாமணிகள் பார்ப்பனார்களே!ம்ம்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.