May 14, 2011

விடுதலைப்பொழுது

                                                                 விடுதலைப்பொழுது
எழுந்திரு பிள்ளாய்
இது விடுதலைப்பொழுது

இருளின் துயில் கலைகிறது
நீயோ
இழுத்துப்போர்த்தபடி
இன்னம் உறங்குதியோ?
எழுந்திரு

இதோ
விடியலில் கீழ் வானம்
ஒளி முடி தரிக்கும் உன்னதம்
உனக்குத்தரிசனமாகவில்லை

அதோ
உன் வீட்டு வாசற்படியில்
ஒளிக்குழந்தை
தொற்றித்தவழ்கிறது
ஒற்றிக்கொள் கண்களில்

கதவிடுக்கின் ஊடாக
உட் செல்லத்துடிக்கிறது
திறந்து விடு முற்றாய்
உனதகம் ஓளி பெறட்டும்

கவிதை உபயம்:சு.வில்வரத்தினம்
நூல்:உயிர்த்தெழும் காலத்திற்காக
வெளியீடு:விடியல் பதிப்பகம்

தேர்தல் நாள் அறிவித்த பின் கீழ்க்கண்ட இந்தக்கவிதையை
நெல்லை ஹோசிமின் என்றப்பெயரில் பதிவிட்டேன்.
                                                       
                                               இரத்தத்தில் எழுதியது

இனியும் எங்களால் தாங்க முடியாது.
இனியும் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது.
எங்களுடைய குதிரைகளை தின்றுவிட்டோம்.
எங்களுடைய பறவைகளையும் தின்று விட்டோம்;
எலிகளையும் பெண்களையும் தின்றுவிட்டோம்...
இன்னும் எங்கள் வயிறு காய்ந்து கொண்டுதானிருக்கிறது.

எங்கள் அரண்களை மொய்த்திருக்கிறார்கள் எதிரிகள்.
அவர்கள் நாலாயிரம் பேர்களுக்கும் மேல்;நாங்கள் நானூறு பேர்.

இனியும் வில்லிழுத்து,வசைகளல் அவர்களைத்தாக்க
வலு இல்லை எங்களிடம்;அவர்களைக் குதறத்
துடிக்கும் பற்களைக்கடித்துக்கொள்ள மட்டுமே வலு உள்ளது
எங்களிடம்.

பற்றி எரியும் இக்கவிதையை விதைத்தவர் சு.வில்வரத்தினம்.

விடியல் வெளியீடான “உயிர்த்தெழும் காலத்திற்காக” என்ற கவிதை நூலில் இது போன்ற வெடிமருந்துகள் கொட்டிக்கிடகிறது

May 3, 2011

Come Septemper-[1961-U.S.A] ஹாலிவுட் அன்பே வா

கம் செப்டம்பர் படம் உலகசினிமா அல்ல.ஆனால் நம்மை குஷிப்படுத்துவதையே தலையாய கடமை கொண்டதில் முதன்மையான படம்.புயலாக நம்மை ஆக்ரமித்து நம் மனதின் வெற்றுவெளி பிரதேசத்தில் மகிழ்ச்சி என்ற நதியை வெள்ளமாக பாய்ச்சி மிதக்க வைத்து விடும்.நகைச்சுவை என்ற ஆயுதத்தை சரமாரியாகப்பிரயோகித்து நம்மை வீழ்த்தி விடுகிறார் இயக்குனர் ராபர்ட் முல்லிகன்.

இப்படத்தின் டைட்டில் மியூசிக், படத்தின் தீம் மியூசிக்காக வளர்ந்து இன்று வரை பல திரையரங்குகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.சென்னை தேவி,காசினோ,சபையர்,பைலட் போன்ற திரையரங்குகளில் கேட்டு...கேட்டு வளர்ந்தவன் நான்.தியேட்டரில் டிக்கெட் கிடைக்காவிட்டால் கூட என் காதுகள் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து இந்த இனிய இசையை கேட்பதில் வெற்றி பெற்று விடும்.[இந்த வார ஆ.விகடனில் சுகா தனது கட்டுரையில் இப்படத்தின் இசையை குறிப்பிட்டு இருக்கிறார்]

இப்படத்தில் கதையை மட்டும் தேடாதீர்கள்.அந்த கத்தரிக்காயை கடைசி வரை உங்களால் கண்டு பிடிக்க முடியாது. ஏ.வி.எம் இப்படத்தை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து அன்பே வா எனப்பெயரிட்டு காசு பார்த்தார்கள்...பார்க்கிறார்கள்...பார்ப்பார்கள் .எம்ஜியார்,சரோஜாதேவி,நாகேஷ் கூட்டணி நம்மை வசியப்படுத்தியதில் மிக நியாயமான காரணங்கள் இருக்கிறது.ஒரிஜினலும்,காப்பியும் சம அந்தஸ்தில் நம்மை கவர்கிறது.நாகேஷ் மட்டும் ஒரிஜினலையும் தாண்டி எவரஸ்ட் சிகரமாக நிற்கிறார் தனது தனித்துவத்தால்.
கம் செப்டம்பர் கதாநாயகன் ராக் ஹட்சன்.ஆள் சும்மா தகத்தகன்னு மின்னுராரு எம்ஜியார் மாதிரி.பின்னால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த உலகின் மிகப்பிரபலம்.படத்தில் இவரது காமடி ராவடியை எழுத்தில் சொல்லமுடியாது.

கதாநாயகி ஜினா லோலாபிரிகிடா அறுபதுகளில் சகட்டுமேனிக்கு எல்லா இளைஞர்களையும் வெட்டி சாய்த்த கவர்ச்சி அருவா. “ஏய்” படத்து நமீதாவையும், “ரெண்டு”படத்து அனுஷ்காவையும் திரட்டி செய்த பால்கோவா. இவரது கிஸ் இன்றும் எனக்கு கிக்.இதுக்கு மேல ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.
மரியாதையா படத்தைப்பாருங்க.

வாலிப வயோதிக அன்பர்களே!
கம் செப்டம்பர் பாருங்கள்.இது 100%  காயகல்பம்.
பக்க விளைவுகள் கட்டாயம் உண்டு.
போலிகளிடம் ஏமாறாதீர்கள்!