Feb 22, 2012

காதலில் சொதப்புவது எப்படி?


தலைப்பிலேயே கதையை சொல்லி விட்டு திரைக்கதையை அசத்தலாக அமைத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.நகைச்சுவையை பிராதானப்படுத்தி ஜெயிப்பது சாதாரண விஷயமல்ல.
இந்த தளத்தில் கதையை சொல்லி ஜெயித்தவர் பாலு மகேந்திரா மட்டும்தான்.
இந்த தலைமுறைக்கு இந்த இயக்குனர் வரமாக கிடைத்திருக்கிறார்.
அரங்கு நிறைந்த காட்சிகளை இந்த இயக்குனருக்கு பரிசளிப்போம்.
பிற் சேர்க்கை :
இந்த படத்தை உடனே பார்க்க சொல்லி நான் விடுக்கும் வேண்டுகோள்தான் இப்பதிவு.
யாருடைய விமர்சனத்தையும் படிக்காமல் படம்பார்த்தால் இன்னும் நீங்கள் சிறப்பாக ரசிக்க முடியும்.
அணுஅணுவாக ரசித்த விசயங்களை இரண்டு வாரம் கழித்து பதிவு போடுகிறேன்  

Feb 8, 2012

The Artist-2011[france]மவுனப்புரட்சி


பிரான்ஸ்காரர்கள் எல்லா நல்ல படத்தையும் தாங்களே எடுப்பது என்று குத்தகை எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது!!!!!!.
அந்த வகையில் சமீபத்திய வரவு ஆர்டிஸ்ட்.
மவுனப்பட காலங்களில் சூப்பர் ஸ்டாராக இருந்த ஒருவரது வாழ்க்கையை 2011ல் கருப்பு வெள்ளையில்...அதுவும் மவுனப்படமாக எடுக்கும் துணிச்சல்...அடடா....
முதலில் தயாரிப்பாளர் Thomas Langmannக்கு என் முதல் மரியாதை.
இரண்டாவது இப்படத்தின் இயக்குனர் Michel Hazanavicius ...உள்ளிட்ட ஒட்டு மொத்த குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...பாராட்டுகள்.

சினிமாவில் மவுனப்படங்கள்தான் கலையின் உச்சம் என கொண்டாடுவார்கள் தீவிர சினிமா ஆர்வலர்கள்.
அதை நூற்றுக்கு நூறு சரி என உணர்ந்தேன்.
பாட்டில் ஷிப் பொட்டம்கின்,இண்டாலரன்ஸ் போன்ற மவுனப்படங்களை இது வரை பார்க்காதது மன்னிக்க முடியாத குற்றம்.
இதற்க்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை ?என்பது தெரியவில்லை.
பேசும் படங்களும்...வர்ணப்படங்களும் சினிமாவின் ஆன்மாவை சிதைத்து விட்டதாக தீவிர சினிமா ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவார்கள்.
இந்த குற்றச்சாட்டை உண்மை என ஒவ்வொரு ரசிகரும் ஆர்ட்டிஸ்ட் படம் பார்க்கும்போது உணர முடியும்.

இதுதாண்டா பின்னணி இசை என பின்னி எடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் Ludovic Bource.
பின்னணி இசை ...மோட்டிவேட்டிங் மியுசிக் என்ற தளத்தில் காட்சிக்கு காட்சி பரிணமித்து கொண்டே போகிறது.
உலகின் தலை சிற்ந்த பின்னணி இசையில் முதல் பத்து இடங்களில் தைரியமாக சேர்த்து விடலாம்.அப்பீலே வராது.இப்படத்தின் நாயக,நாயகியரின் நடிப்புக்கு இணையாக....
நடிகர் திலகத்தையும்,நடிகையர் திலகத்தையும்தான் ஈடு இணையாக சொல்ல முடியும்.
21 இஞ்ச் டிவியில் பார்த்ததிலேயே இருவர் நடிப்பிலும் மயங்கி விட்டேன்... வெள்ளித்திரையில் பார்த்தால்.... அவ்வளவுதான்..... ரசிகர் மன்றமே தொடங்கி விடுவேன்.

இப்படம் பல் வேறு பிரிவுகளில்....
ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும்....வெற்றி கிடைக்காது.
ஏனென்றால் இப்படம் மோதுவது Tree Of Life படத்தோடு.
Tree Of Life படத்திற்க்கு பக்க பலமாக உலகின் மிகப்பெரிய மதம் இருக்கிறது.
மதத்தின் முன்னால் எப்பேர்பட்ட கலையும் தோற்றுப்போகும்.
இதில் ஒளிந்திருக்கும் அரசியலை ஆஸ்கார் விருது பட்டியல் வெளியான பிறகு நீங்களே உணர்வீர்கள்.

80%நகைச்சுவையும்,20% சோகமும்,0%ஆபாசமும் கலந்து செய்த கவிதையாக இப்படம் இருப்பதால் குடும்பத்தோடு காண வேண்டிய U U U திரைப்படம்.

ஒரு காலத்தில் சூப்பர்ஸ்டாராக இருந்து....
 தனது ஆஸ்தி,அந்தஸ்து,புகழ் அனைத்தும் கரைந்து....
 வெற்று மனிதனாக மரித்த தியாராஜ பாகவதர் வாழ்க்கையை...
 கருப்பு வெள்ளையில்...மவுனப்படமாகவே எடுக்கப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! என்ற ஆசை பிறந்தது.
எனது ஆசை பேராசையா?
நிராசையா?

Feb 7, 2012

திருப்பூர் வெற்றிதிருப்பூர் புத்தகக்கண்காட்சி மிகப்பிரம்மாண்ட வெற்றி பெற்று விட்டது.
9 வருடங்களின் விடா முயற்சி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளது.
வரும் வருடங்களிலும் இந்த வெற்றியை விரிவாக்க மேலும் உழைப்பார்கள் இதை நடத்துகின்ற நல்லவர்கள்.
அனைத்து கட்சியினரும் இணைந்து நடத்திய இந்த வேள்வியில்
எனக்கும் இடம் ஒதுக்கி மிகப்பெரிய கவுரவம் வழங்கி மகிழ வைத்தார்கள்.
திருப்பூர் மக்கள் என்னை கொண்டாடி விட்டார்கள்.
நன்றி திருப்பூர்.

இம்மாபெரும் வெற்றிக்கு திருப்பூர் வலைத்தள நண்பர்கள் மிகப்பெரிய சேவையை செய்துள்ளார்கள்.
எனது ஸ்டாலில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகையில் நண்பர் இயக்குனர் ரவிக்குமாரும்,பதிவுலக நண்பர் மோகன் குமாரும் அவர்களாகவே உள்ளே புகுந்து விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த அதிரடி உதவியை நான் மிக ரசித்தேன்.
கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் போட்டியில் பரிசு பெற்ற  ரவி.... திரைப்பட உலகில் மகேந்திரனாக ஜொலிக்க வாழ்த்துகிறேன்.
மோகன் எழுத்தாளராக....அதே நேரத்தில் பொருளாதாரத்தில் அம்பானியாக பிரகாசிக்க வாழ்த்துகிறேன்.

தினமும் மாலையில் எனக்கு மிகவும் பிடித்த உலகசினிமாக்களை திரையிட்டு மேலும் உலகசினிமாவுக்கு உரமூட்டினார் நண்பர் தாண்டவக்கோன்.
முதல் நாள் நிகழ்ச்சியாக...Turtles can Fly  எனப்பறந்தவர்கள் கடைசி வரை லாண்ட் ஆகவேயில்லை.
தாண்டவக்கோன் குறும் படங்கள் இனி கேன்ஸ் நோக்கி பறக்க வாழ்த்துக்கள்.
இவ்விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்கள்... புத்தக விழாவை திரைப்பட விழாவாக உருமாற்றம் செய்து விட்டது.
இதே போன்று ஈரோடு புத்தகத்திருவிழாவிலும் உலகசினிமாக்கள் திரையிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்ற ஏக்கம் என்னுள் மட்டுமல்ல...பல ஆர்வலர்கள் மத்தியிலும் உள்ளது.

திரையிடப்பட்ட படங்களின் விபரம் இதோ...
Turtles Can Fly
The Kid
Bal
Children Are Watching Us
The Kid with a Bike
Winged Migration
The Stoning of Soraya M
Quest For Fire
Come and See
Adaminte Makan Abu

தினமணி இத்திருவிழாவை வர்ணித்து அரைப்பக்க அளவில் செய்தியாக வெளியிட்டு பத்திரிக்கை தர்மத்துடன் செயல் பட்டது.
தினத்தந்தி,தினமலர் இத்திருவிழாவை பற்றிய செய்தியை புறக்கணித்து அதர்மத்துடன் செயல் பட்டது கண்டிக்க தக்கது.
விளம்பரம் தந்தால்தான் செய்தி வெளியிடுவோம் என்ற அராஜகப்போக்கு அநாகரீகமானது.
செக்ஸ் டாக்டர் விஜயத்தை விளம்பரத்தோடு செய்தி வெளியிடும் நீங்கள் அதே பாணியை புத்தகக்கண்காட்சி நடத்துபவர்களிடமும் எதிர்பார்த்தால் எப்படி? கைபேசியில் செய்திகள் விரைந்து வரும் உலகில் படிக்கும் பழக்கத்தை மறந்து விடாதே...படி..படி..எனத்தூண்டுவதே இது போன்ற புத்தக்கதிருவிழாக்களே!
காலையில் காப்பியுடன் பத்திரிக்கை படிக்கும் தொட்டில் பழக்கம்....
என் தலை முறை... சுடுகாடு போனதும் மறைந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு இப்பழக்கத்தை கடத்த உங்களுக்குத்தான் அதிக கடமை உண்டு.
பத்தாண்டுகளுக்கு மேல் விடாமல் நடத்தப்படும் புத்தகத்திருவிழாக்களுக்கு தினமும் கால் பக்கம் ஒதுக்குங்கள்.
வரவேற்பு அறையில் தமிழக மக்கள் தினமும் உங்களுக்கு இடம் ஒதுக்குவார்கள்.