Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Dec 12, 2015

படிக்கட்டுகள் = பகுதி 2



நண்பர்களே...
முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன்.


ஒரு விளம்பரப்படத்தில், இன்றும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ‘மாடலாக’ வந்தார்.
ஒரு ‘சாப்ட்வேர் கம்பெனி’ மேலாளராக அவரை ‘காஸ்டிங்’ செய்து இருந்தேன்.
அதற்கேற்ற ‘ஆடையை’ அணியச்செய்தேன்.
‘கிளையண்டுக்கு’ அந்த ஆடை பிடிக்கவில்லை.
100 வருட பராம்பரியம் மிக்க நிறுவனத்தின் உரிமையாளர்,
‘கிளிவேஜ்’ தெரியும்படி...ஆடையை ‘கிழிக்கச்சொன்னார்’.
“ நம்ம விளம்பரப்படத்துக்கு ‘கிளிவேஜ்’ தேவையில்லை” என்பதை எடுத்துச்சொல்லி ‘கன்வின்ஸ்’ செய்தேன்.
ஷூட்டிங் தொடர்ந்தது.
மதிய இடைவேளையில் ‘கிளையண்டின்’ நண்பர் மூலம் இடைஞ்சல் வந்தது.
அவர் ‘உயர்நீதிமன்ற வழக்கறிஞர்’.
என்னுடைய ‘கான்செப்டுக்கு,
புதிதாக டயலாக் எழுதி வாசித்து...
“எப்படி இருக்கிறது” என்றார்.
“ நான் உங்களுக்கு பதிலாக உயர்நீதி மன்றத்தில் வாதாடியது போல் இருக்கிறது”என்றேன்.
ஒரே டயலாக்கில் ‘தெறிக்கவிட்டேன்’.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘கிளையண்ட்’,
‘கழிவறையில் உட்கார்ந்து கண நேரம் யோசித்த ஐடியாவை’ செப்பினார்.
“ எங்களது ‘ப்ராடக்ட்டை’ ஊற்றிக்குளித்தால் ‘உடம்பு வலி’ போகும்.
எனவே ‘மாடலை’ நிர்வாணமாக குளிப்பது போல் எடுங்கள்” என்றார்.
என்ன சொன்னாலும் கேட்காமல் அடம்பிடித்தார்.
என்ன செய்தேன்?
மேக்கப்ரூமில், கதவை சாத்திக்கொண்டு அழுதேன்.
கண்ணீரை துடைக்க அவகாசம் தேவை.
பொறுத்து இருங்கள்.

Nov 28, 2015

படிக்கட்டுகள் = பகுதி 1

நண்பர்களே...
மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன்.
முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன்.


ஒரு விளம்பரப்படத்திற்கு, ‘அக்னிநட்சத்திரம் அமலா’ மாதிரி அழகான மாடலை தேர்வு செய்தேன்.
களமாக ‘நீச்சல்குளத்தை’ தேர்வு செய்தேன்.
ஆடை ‘சிங்கிள் பீஸ் ஸ்விம் சூட்’.
‘ஸ்விம் சூட்’ அணிந்து ‘மாடலும்’ வந்தார்.
எனக்கு திருப்தியாக இல்லை.
நான் ‘எதிர்பார்த்தது தெரியவில்லை’.
மேக்கப்மேனிடம் ‘காதை கடித்தேன்’.
மாடலை அழைத்துக்கொண்டு ‘மேக்கப் ரூமிற்குள்’ போனார்.
சிறிது நேரம் கழித்து, மாடலை அழைத்துக்கொண்டு திரும்ப வந்தார்.
இம்முறையும் ஏமாற்றம்.
என் ‘ஹீமோகுளோபினில்’ கோபம் கலந்து சூடாகியது.
மேக்கப்மேனை அழைத்துக்கொண்டு நான் மேக்கப் ரூமிற்கு போனேன்.
“ என்னண்ணே...நான் சொன்னது என்ன...நீங்க செஞ்சது என்ன”
“ என்னை என்ன பண்ணச்சொல்றீங்க...
ஏதாவது ‘கொஞ்சம்’ இருந்தாத்தான் ‘பேடுகீடு’ வச்சு தூக்கி நிறுத்தலாம்.
ஒண்ணுமே இல்லை.
‘ப்ளே கிரவுண்டு’ மாதிரி இருக்கு” என்றார்.
‘ஷாட்டை’ மாற்றினேன்.
‘டாப் ஆங்கி்ள்’ ‘லோ ஆங்கிளானது’.
புரியாத ‘புனித ஆத்மாக்களுக்கு’ அனுஷ்கா புரிய வைப்பார்.

Feb 25, 2014

ஸ்டேட் பேங்க் அயோக்கியத்தனம் = State Bank's Cheating

ஏழைகளுக்கு, ஸ்டேட் பேங்க் போன்ற முழுமையான அரசு வங்கிகளே வரம்.
தனியார் வங்கிகள்...சாபம்.
அவைகள்,  ‘வசதி செய்கிறேன்’ என கோவணத்தை உருவும் ‘கோடாங்கிகள்’.


நேற்று  ‘ஸ்டேட் பேங்க்’ என்னை சிதறடித்தது.
நண்பனுக்கு அத்தியாவசிய தேவைக்காக 5000 ரூபாய் அனுப்ப முடியவில்லை.
புதுசு...புதுசா சட்டமும் திட்டமும் போட்டு வச்சுருக்கானுங்க!
அயோக்கியப்பயலுங்க!!


வட இந்திய தொழிலாளர்கள், தங்கள் சம்பளத்தை அனுப்ப ஸ்டேட் பேங்கைத்தான் நம்பி இருக்கிறார்கள்.
நாள் தோறும் படையெடுக்கிறார்கள்.
அந்த நெருக்கடியை, கொசுக்கடியாக எண்ணி திட்டம் போட்டு விட்டான் ஒரு உருப்படாத உலக்கை.
ஏசி ரூமில் உலகத்தை காணும் உருப்படாத பயல்களுக்கு,
மண் குடிசையின் நிலவரம் தெரியுமா!
கரெக்டாக கலவரம் மட்டும், ஏற்படுத்துவார்கள் இந்த கயவாளிகள்.
குடிசைக்கு, குண்டு வைப்பதில் ‘டாக்டரேட்’ செய்தவன்  ‘செட்டிநாட்டு செல்லாக்காசு’.


கோடி..கோடியா பணம் நாடு விட்டு நாடு போகுது.
அதுக்கு  ‘வெளக்கு பிடிக்குது’ ரிசர்வ் வங்கி.
ஏழை பாழை அனுப்பும் 500, 1000த்துக்கு சட்டம் போடுது...திட்டம் போடுது ரிசர்வ் வங்கி மங்குணிகள்.
மண்ணு மோகனும், செட்டிநாட்டு அரசனும் ஆட்சி செய்யும் போதுதான் ஏழைகளை ஏய்ச்சு பிழைக்கும் தொழிலை வளமாக செய்யும் வங்கிகள்.


ஏழையின் நலம் அறிந்த நல்லவர்கள் ஆட்சி செய்தால் இந்த நெருக்கடிக்கு அழகாக தீர்வு காண்பார்கள்.
ஒவ்வொரு ஏடிஎம்மிலும் பணம் போட, பணம் எடுக்க வகை செய்யும் மிஷினை வாங்கி வைப்பார்கள்.
பணம் வாங்கற மிஷினை தனியார் வங்கி [ ஐசிஐசிஐ] வச்சிருக்கான்.
அட்லீஸ்ட், அதையாவது உடனடியா வாங்கி வைங்களேண்டா... அப்ரண்டிசுகளா!


பத்தாயிரத்துக்கு கீழே பணம் அனுப்பப்போனால் தனியாரிடம் திருப்பி விடுகிறது ‘ஸ்டேட் பேங்க்’.
அவன் ஸ்டேட் பேங்கு பக்கத்திலேயே பொட்டிகடை மாதிரி தொறந்து வச்சுகிட்டு உக்கார்ந்து இருக்கான்.
5000 ரூபாய் அனுப்புறதுக்கு, சுளையா 100 ரூபாய் தண்டம் அழணுமாம்.
நூறு ரூபாய் ஒரு ஏழைக்கு மிகப்பெரிய தொகை.
அரசு வங்கியான ஸ்டேட் பேங்க், இவ்வளவு நாள் 25 ரூபாய் வாங்கிட்டு அனுப்பிகிட்டு...நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு!
அதை நீக்கிட்டு, தனியாரை விட்டு கொள்ளையடிக்க வச்ச,  ‘கொள்ளையில போவான்’ யாரு!

சரி...தனியார்கிட்ட அனுப்புறியே...
அந்த தனியார், பணத்தை ஆட்டையை போட்டுட்டா...
எங்க பணத்துக்கு யார் பொறுப்பு?

உதாரணமா...கார்த்தி சீதாம்பரம்னு ஒரு தனியார்,
பணம் வாங்கி அனுப்பற வேலையை செய்யுறான்.
5000 ரூபாய் அனுப்புறதுக்கு, நூறு ரூபாய் சர்வீஸ் சார்ஜ் சேர்த்து வாங்கிட்டு, ஹோட்டல் மாதிரி ‘கம்ப்யூட்டர் பில்’ கொடுக்குறான்.
ஒரு நாள் பூரா, பல லட்சம் வசூல் பண்ணிட்டு,
மொத்த கலெக்‌ஷனையும் ஆட்டையை போட்டு,
கம்பி நீட்டிட்டான்னா...
ஏழைகளின் பணத்துக்கு யார் பொறுப்பு?

ஆன்லைன்லே அனுப்புறோம்னு சில பேர் இறுமாப்ல இருக்காங்க!
ஆன்லைன்ல அனுப்புனா, இலவசம்னு இண்ணைக்கு சொல்றான்.
நாளைக்கு, அதுக்கும் கட்டணம் போடுவான்.

இந்த சிதம்பரம்,  ‘சர்வீஸ் டேக்ஸ்’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி  மண்டையில் மயிறு இருக்கறவன்...இல்லாதவன்னு...
எல்லோரையும் கட்ட வச்ச ஆளு.
ஏழைகளை எப்படி சுரண்டலாம்? என்பதை ஒரு நாளைக்கு நூறு முறை சிந்திக்கும் சிந்தனை சிற்பி சிதம்பரம்.
காரணம், வட்டி வாங்கி...வயிறு வளர்த்த பரம்பரை அவர்.

முன்னாடி, இது மாதிரி...ஏழைகள் வயித்திலடிக்கும் நடைமுறைக்கு, நடைபாதையில் நின்று போராடுவார்கள் கம்யூனிஸ்ட் கட்சி கடமை வீரர்கள்.
சிவப்பு கொடியை பிடிச்சுகிட்டு உசுரை கொடுத்து பத்து பேரு கத்துவாங்க!.
அந்த பாதையில் போற பத்தாயிரம் பேர் அதை பார்த்துருவாங்க!!.
பத்தாயிரம் பேர்கிட்ட இருந்து பல கோடி பேருக்கு செய்தி போய் சேர்ந்துரும்.

நம்ம நேரம்...அத்தகைய போராளிகள் போய் சேர்ந்து விட்டார்கள்.
நமக்கு வாய்ச்சது தா.பாண்டியன் வகையறாக்கள்.
அந்த தொகையறாகள், போயஸ் ரோடு தாரை நக்கி...
தாடை பெயர்ந்து கிடக்குதுகள்.

வாடி நிற்போர், வாட்டம் போக என்ன வழி?
ஏய்ச்சு பிழைப்பவனை, ஏறி மிதிக்க வந்து விட்டது தேர்தல்.
சீனாதானா போன்ற அம்பானி அடிவருடிகளை அறவே அழிப்போம்.
ஒழிப்போம்.
தெரு விளக்கில் படித்தவனை, நிதி மந்திரியாக்குவோம்.
ஏழைக்காக ஏணி ஏந்துபவனை, ஏற்றம் பெறச்செய்வோம்.
அது வரை வாடுவோம்...வதங்குவோம்...
அயோக்கியர்களை அழிக்க, அறம் பாடுவோம்.

Jul 17, 2013

‘அனுஷ்காவுடன்’ ஜாலியாக இருக்கிறேன்.



நண்பர்களே...
நேற்று முதல்  ‘அனுஷ்காவுடன்’ ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.
டிசம்பரில் கடையை மூடிய பிறகு,
இன்று வரை எனது நண்பர்கள்தான்...
என் பொருளாதார தேவைகளை பார்த்துக்கொண்டார்கள்.
குறிப்பாக,
 ‘கோவை ஆனந்தாஸ்’ ஹோட்டல் அதிபர்களில் ஒருவரான...‘பரமாத்மா’,


நண்பர் ரகுநாதன்,
நண்பர் விஜய் என அனைவரும் மிகப்பெரிய அளவில் உதவினார்கள்.

திரு.அவினாஷ் என்கிற வட இந்திய நண்பர்,
தொடர்ந்து அவரது நண்பர்களிடம் சிபாரிசு செய்து,
100% அட்வான்ஸ் பணமும் கொடுத்து...
10க்கும் மேற்பட்ட  ‘40’இஞ்ச் சோனி,சாம்சங் டிவிக்களை விற்க வகை செய்தார்.
 ‘நியாயமான லாபமும்’ அடைய வைத்தார்.

மற்றொரு நண்பர்,
தினமும் என்னிடம் போனிலும், நேரிலும் பேசி...
தைரியப்படுத்தி வந்தார்.
நான் சினிமா நிச்சயம் எடுப்பேன் ...என என்னையே நம்ப வைப்பவர்.
[ அவரது பெயரை நான் எந்த சந்தர்பத்திலும் எழுதி,
அவரது  ‘ஆனந்தத்தை’ குலைக்கக்கூடாது என ஆணையிட்டுள்ளார்.]

பதிவுலக நண்பர்களில் ‘கோவை நேரம்’ ஜீவா செய்த உதவி மாளப்பெரிது.


அடிக்கடி அவரது  ‘சிங்கத்தில்’ [ஸ்கார்ப்பியோ ] என்னை ஏற்றிக்கொண்டு சுற்றுவார்.

பெரிய ஹோட்டல்களில் ‘வாங்கி’ கொடுப்பார்.
நட்சத்திர ‘பார்களில்’ மிதக்க வைப்பார்.
இவரை ‘சரத்குமாராக்க’ திட்டமிட்டு உள்ளேன்.

மற்றொரு பதிவர் ‘கோவை ஆ.வி’  என் தாகம் தெரிந்தவர்.


நான் விரும்பும் புத்தம் புது திரைப்படங்களை,
‘மல்டிப்ளக்சில்’ காணச்செய்பவர்.
இவர் கூட,  ‘பைக்கில் பாக்கிஸ்தான்’ வரை கூடப்போகலாம்.
காரில்?

இவர் ஒரு  ‘அனாமிகா’ வைத்திருக்கிறார்.


ஒரு தடவை அதில் பயணம் செய்தேன்
அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
‘இன்சூரன்ஸ்’ பாலிசி  எடுக்கும் எண்ணம்,
தீவிரமாக பீறிட்டு எழுகிறது!

இவர் அமெரிக்காவில் கார் ஓட்டியதாக,
‘நம்ப முடியாத உண்மையை’ சொல்கிறார்.

இவர் வண்டி ஓட்டும் போது,
முன்னாலும்- பின்னாலும்- பக்கவாட்டிலும்...
நூறு மைல் சுற்றளவில்...
எந்த ஒரு வாகனங்களும்,பாதசாரிகளும் வரக்கூடாது.
ஏன்? மேலே விமானம் கூட பறக்கக்கூடாது என ஆசைப்படுகிறார்.
இந்த நியாயமான ஆசையை,
இவரோடு அனாமிகாவில் பயணிப்பவர்கள் உணர்வார்கள்.
’.
[ இவரை என் படத்தில் பாடலாசிரியாராக்குகிறேன் என பொய் சொல்லி இருக்கிறேன்...என் படத்தில் பாடல்களே இல்லை என்ற தைரியத்தில்.]

அமெரிக்காவில் இருந்து பணமும், தைரியமும் கொடுத்த நண்பர் செந்தில்,
எனது ‘உடுக்கை நட்பு’.

 ‘செஞ்சோற்று கடன்’ தீர்க்க,
இவரது பெயரை எனது  ‘கதாநாயகனுக்கு’ சூட்டி விட்டேன்.


இறுதியாக நான் நன்றி கூற நினைப்பது,
தமிழக முதல்வர் ‘அம்மா அவர்களுக்கு’.
விலையில்லா அரிசி வழங்கி என் குடுமபம் பசி தீர்த்த மாதரசி அவர்.
கடந்த நான்கு மாதமாக இந்த அரிசியில்தான் சமையல்.
என்னைப்பொறுத்த வரை இந்த அரிசி தரமாகவே இருக்கிறது.
சமைத்து சாப்பிடும் போது நன்றாகவே இருக்கிறது.
[ கலைஞர் வழங்கிய ஒரு ரூபாய் அரிசியில் சமைத்து சாப்பிட்டதில்லை.
எனவே ஒப்பிட முடியவில்லை.]

என்னைப்போல ஏழைகள்,
எத்தனை பேர்  ‘அம்மாவை’ நன்றியுடன் நினைப்பர்!!!???

இவர்கள் அனைவருக்கும், நான் ஒரு நாளும்...ஒரு உதவி...
செய்தது கிடையாது.
ஏதோ பதிவெழுதி  வருகிறேன்.
சில நல்ல படங்களின் ‘டிவிடிக்களை’ சிபாரிசு செய்து விற்றிருப்பேன்.
அவ்வளவே நான் செய்தது.

மற்றொரு முக்கியமான நன்றி,
என்னை சீண்டி...
‘கடையை’ மூட வைத்த ‘கருந்தேளார்’ அவர்களுக்குத்தான்.
அவர் மேல் ஏற்பட்ட கோபம்தான்,
விரைவில் ஒரு ‘திரைக்கதையை’ எழுதி முடிக்க  ‘உந்து சக்தியாக’ இருந்தது.
‘ஒரு காமெடி வில்லனுக்கு’ ,
அவரது பெயரை சூட்டும் வரை,
‘அந்தக்கோபம்’ பணி புரிந்து...மறைந்தது.
‘எம்.ஜி.ஆர் - கலைஞர்’ போல் அந்த ‘முன்னாள் நட்பு’...
என்றும் ‘அகலாது-நெருங்காது’ தொடரும் என்றே நினைக்கிறேன்.
 [ அவரது மற்றொரு நண்பரின் பெயரை ‘காமெடியனுக்கு’ சூட்டி உள்ளேன்.]
_________________________________________________________________________________


‘முந்தானை முடிச்சு’ பட ஆரம்பத்தின் போது,
இயக்குனர் கே.பாக்யராஜிடம்..  ‘சொல்லாமல் கொள்ளாமல்’
அவரது உதவியாளர்கள் பாண்டியராஜன், ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன் மூவரும் ஒரே நேரத்தில்  ‘சொல்லி வைத்து நின்று விட்டார்கள்’.
அந்தக்கடுப்பில் பாக்யராஜ் முந்தானை முடிச்சு படத்தில்,
தவக்களை கோஷ்டியாக மூன்று பேரை உருவாக்கி...
அதற்கேற்ப காட்சி, வசனங்களை அமைத்து  ‘பழி தீர்த்தார்’.


_________________________________________________________________________________

‘கிளைமாக்ஸ்’ காட்சியை சொல்லி,
இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
எனது ‘இடத்தை’ விற்பதாக,
பதிவெழுதி இருந்தேன் அல்லவா.
‘கமல்ஹாசன் என்னை கோடிஸ்வரனாக்கி இருக்கிறார்’ பதிவை படிக்க இந்த இணைப்பில் செல்க...

எனது இடத்தை விற்ற அனுபவமே ‘ஒரு திரைக்கதை’.
ஒரு ரூபாய் கூட கையில் இல்லாத, காலை வேளையில்...
எனது புரோக்கர் அழைத்தார்.

“ சார், கஷ்டப்பட்டு ஒரு பார்ட்டியை செட் பண்ணி இருக்கேன்.
விலையை  ‘முன்ன பின்ன’ பேசி,
அட்வான்ஸ் வாங்க வேண்டியது... உங்க கையிலதான் இருக்கு”.

எனது  ‘அனுஷ்காவை’ திறந்து பார்த்தேன்.
 கொஞ்சம் பெட்ரோலை வைத்திருந்தாள்.
 ‘பேச்சு வார்த்தை’ நடக்கும் இடத்துக்கு போய் விடலாம் என நம்பிக்கையூட்டினாள்.

மனதளவில் எந்த விலைக்கும் விற்க தயாராக இருந்தேன்.
எனது புரோக்கர்களாக,
மூன்று புரோக்கர்கள் காத்திருந்திருந்தார்கள்.
எனக்கு, எனது புரோக்கராக... ஒருவரை மட்டுமே தெரியும்.
எனக்கு தெரியாமலே, எனக்காக இன்னும் இரண்டு பேர் செயல்பட்டிருக்கிறார்கள்.
ஆக மொத்தம் இப்போது மூன்று பேர்கள்.

‘இவர் மூலமாக அவர் - அவர் மூலமாக இவர்’ என இவர்கள்
ஒரு சங்கிலித்தொடர் போல செயல்பட்டு வியாபாரம் செய்கிறார்கள்.
இவர்கள்தான் விலையை தீர்மானிக்கிறார்கள்.
இட்ம் வைத்திருப்பவரோ...வாங்குபவரோ அல்ல.
இவர்கள் வெகு அழகாக நம் ‘மைண்ட் செட்’ செய்கிறார்கள்.

அனைவரும் ‘பார்ட்டிக்காக’ ஒரு டீக்கடையில் காத்திருந்தோம்.
‘டீ..சாப்பிடலாமே’ என்றார் ஒரு புரோக்கர்.
பகீரென்றது.
எதிர்பாராத இந்த  ‘திடீர் செலவை’ நான் எதிர்பார்க்கவில்லை.
‘ பேஸ்மெண்ட் வீக்கா இருந்தாலும்...படு ஸ்ட்ராங்கா இருப்பது போல்’
ஒரு ரியாக்‌ஷனை எனது முகத்தில் தவழ விட்டேன்.
ஒரு இயக்குனருக்கு ‘இந்த மாதிரி’ நேரத்தில்தான் நடிக்க வருகிறது.
டீ வந்தது.
பில் வருவதற்குள் ‘டீக்கடை’ பையனை ஒரு லுக் விட்டேன்.
லுக் = “ ஒரு ரூபா கூட எங்கிட்ட கிடையாது’.
‘லுக்’ வேலை செய்தது.
பார்ப்பதற்கு வசதியானவர் போல இருந்த ‘புரோக்கரிடம்’ பில்லை நீட்டினான்.
நான் செல்போனை டயல் செய்து,  ‘அலோ...அலோ’ என நகர்ந்து விட்டேன்.
‘டீ கூட வாங்கிக்கொடுக்காத கஞ்சப்பிசினாறி’ என என்னை மனதில் திட்டிக்கொண்டே பில்லை கொடுத்திருப்பான் அந்த புரோக்கர்.

 ‘பார்ட்டியும்’ ஒரு புரோக்கருடன் வந்தான்.
 ‘பார்ட்டியை’ பார்த்தால் ‘ந.கொ.ப.கா -பக்ஸ்’ மாதிரி இருந்தான்.
அவனது புரோக்கர்,
‘அனைத்திற்கும் ஆசைப்பட்ட ஈஷா சாமியார் போல்’ இருந்தார்..
தொடக்க உரையாக என்னமோ பேசினார்கள்.
எதுவுமே என் மூளையில் ஏறவில்லை.
 இறுதியாக ஒரு தொகையை சொன்னார்கள்.
நான்  ‘தயாராக வைத்திருந்த’,
எனது டயலாக்கை சொன்னேன்.

“ ஓ.கே”
“டோக்கன் அட்வான்ஸ் மட்டும் இருபதாயிரம் ரூபாய் வேண்டும்.
எனக்கு அது செண்டிமெண்ட்” 

எனது ‘உடனடி பசிக்கு’ அது போதும்.
ஆனால் அவன் செக்காக கொடுத்தான்.

செக் கிடைத்த சந்தோஷத்தில்,
‘அனுஷ்கா’ பெட்ரோல் இல்லாமலேயே சந்தோஷமாக ஓடினாள்.
செக்கை பேங்கில் பிரசண்ட் செய்து விட்டு,
நண்பர் ஒருவரிடம் ஐநூறு ரூபாய் கடனாக பெற்று
‘அனுஷ்கா’ பசியை ஆற்றினேன்.

எனக்கு தெரிந்த வங்கி நண்பர்கள் அனைவரிடமும்,
தகவல் சேகரித்தேன்.
அவர்களது அறிவுரையின்படி, சரியான நேரத்திற்கு,
ஏ.டி.எம்மில் பணம் எடுக்கப்போனேன்.
என் அக்கவுண்டில்  பேலன்ஸ் 90 ரூபாய் மட்டுமே இருக்கிறது...
என சத்தியம் செய்து... பிரிண்டடித்து... கொடுத்தது.
ஆக,‘செக் கிரிடிட்’ ஆகவில்லை.
அடுத்த நாள் காலையிலும் பார்த்தேன்.
ஆகவில்லை.
 ‘செக் ரிடர்ன் ஆகி விட்டது’ என நிச்சயமாக தெரிந்தது.
பார்ட்டிக்கு போன் செய்தேன்.

அவனும் அவனது வங்கியை விசாரித்து உறுதி செய்து விட்டு வருவதாக கூறினான்.
அவன் மேல் நம்பிக்கை இழந்து,
கோவை நேரம் ஜீவாவுக்கு போன் செய்தேன்.

 “அவசரமாக ஐயாயிரம் ரூபாய் தேவை”

 “எங்கே இருக்கிறீர்கள்”

 “சரவணம்பட்டி”

 “அங்கேயே இருங்கள்.
15 நிமிடத்தில் வருகிறேன்”.

‘இல்லாதவன் இருக்கும் இடம் தேடி... உதவும் என் ஞானத்தங்கம் ஜீவா’ 
குன்றாத ஆரோக்கியம், வளரும் ஐஸ்வர்யம் பெற்று... 
என்றும் ‘ஏகப்பட்ட பத்தினிகளுக்கு விரதனாக’ வாழ வாழ்த்துகிறேன்.

பார்ட்டியும் போன் செய்தான்.
 “ என்ன காரணத்தாலோ செக் ரிடர்ண் ஆகியிருக்கிறது.
உடனே ‘கேஷ்’ கொண்டு வருகிறேன்”.

உடனே டீக்கடைக்குள் புகுந்து,
டீயும்,பப்சும் சாப்பிட்டேன்.
பில் வந்தது.

“ பொறுங்க தம்பி...நண்பர் வந்து கொண்டிருக்கிறார்”

 ‘கோவை நேரம்’ ஜீவாவை காணவில்லை.

“அடடா...நம்ம சிங்கம்... 
ஏதாவது அம்மணியை பாலோ செய்து போய் விட்டதா ? ”

கவலையில், ஆசனவாயிலில்... 
ஆர்.டி.எக்ஸ் ஓன்று வெடிக்கத்தயாரானது.

டீக்கடைக்காரன் என்னை,  
‘டேபிள் க்ளீன் பண்ண ஆள் கிடைத்து விட்டது’ போல 
என்னை ‘குறுகுறுவென’ பார்த்தான்.

‘அப்பாடா... ‘ஜீவாவின் சிங்கம்’ வந்து விட்டது’.
இந்த ‘திரில்லர் கதை’ முடிவுக்கு வந்து விட்டது.

பார்ட்டி வந்து பணம் கொடுத்தது...
இன்னும் தரவிருப்பது...
இனி எதுவுமே ‘இந்த திரில்லர்’ கதைக்கு உதவாது.
இனியெல்லாம் சுபமே.

அனுஷ்கா =


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.




Jun 7, 2013

நான் வேண்டி விரும்பி, வந்த ஒரு மரணம்.


நண்பர்களே...
திங்கள் கிழமை முதல் பதிவெழுதவில்லை.
காரணம் எனது மைத்துனர் மரணம் [ எனது மனைவியின் அண்ணன் ].

2011 ஜனவரி 1 அன்று, டாக்டர்கள் அறிவித்தனர்.
“இரண்டு கிட்னியும் 80%  பழுதாகி விட்டது.
இன்னும் ஆறு மாதத்திலிருந்து...
இரண்டு வருடத்திற்குள்....
‘முழுவதும்’ பழுதாகி ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டியது வரும்”

எனது மைத்துனருக்கு ஆறு மாதத்திலேயே ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டி வந்து விட்டது.
காரணம், சரியான மருத்துவம், உணவு, ஓய்வு...
மூன்றையும்  கடைப்பிடிக்கவில்லை.
இயல்பாகவே ஆங்கில மருத்துவம் மேல் வெறுப்பு உள்ளவர்.
அலோபதியை அலட்சியப்படுத்தி விட்டு,
சித்தா, ஆயுர்வேதம், அக்குபஞ்சர், ஹோமியோபதி,நேச்சுரோபதி என ஒன்று விடாமல் அனைத்திற்கும் தாவிக்கொண்டிருந்தார்.
விளைவு 2013 ஜூன் 3ம் தேதி மரணத்தை தழுவி விட்டார்.


2011ல்  ‘நடிகர் ஜெயப்பிரகாஷ்’ போல் தேஜஸாக இருந்தவர்,
கடந்த ஏப்ரல் மாதம் கடைசியாக பார்த்த போது...
கீழ்க்கண்ட சோமாலியா பிரஜை போல் தோற்றமளித்தார்.
நான் அப்போது கடவுளிடம் வேண்டினேன்.
“ கடவுளே...இவரை உன்னிடம் சீக்கிரம் அழைத்துக்கொள்...
அடுத்தமுறை இவரை உயிருடன் பார்க்கும் கஷ்டத்தை கொடுக்காதே”


இவரது மரணத்தில் ஒரு செய்தி இருக்கிறது.
 ‘அலோபதியை’ அலட்சியப்படுத்தி,
ஊரில் இருக்கும் அனைத்து ‘பதிகளையும்’ நாடி...
48 வயதுக்குள்  ‘பரமபதி’ அடைந்து விட்டார்.
‘சிக்ககெனப்பற்றினேன் உன்னை’ என அலோபதியை பற்றியிருந்தால் டயாலிசிஸ் செய்தபடி இன்னும் பத்து வருடங்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியும்.

கிட்னி பெய்லியருக்கு' எந்த மருத்துவ முறை சாலச்சிறந்தது ?
நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

Jan 13, 2013

ஐ லவ் அத்தை!.


நண்பர்களே...
புத்தாண்டு முதலே சரி வர பதிவுகள் எழுதவில்லை.
காரணம் எனது அத்தை.
எனக்கு  ‘சினிமாப்பால்’ ஊட்டிய ஞானத்தாயார்.
ஒவ்வொரு கோடை விடுமுறையும், அத்தையின் இல்லமே வேடந்தாங்கல்.
இருதயமே இல்லாத இறைவன், அவர்களுக்கு இருதய நோயை பரிசாகக்கொடுத்து பறித்து கொண்டான் உயிரை.


ஐந்தாவது படிக்கும் போதே என் தலைக்குள் சிவகாமியின் சபதத்தையும்,பொன்னியின் செல்வனையும், கடல் புறாவையும் ஏற்றி வைத்த ஏணி அவர்கள்.

சினிமா, அரசியல், இலக்கியம், சமையல், பக்தி எல்லாவற்றிலும் அரசியாக திகழ்வாள் எனக்கணித்து ‘மங்கையற்கரசி’ எனப்பெயர் வைத்தார் போலும் தாத்தா.
எனது அத்தையின் மீன் குழம்பிற்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரம ரசிகர்.

கோடிஸ்வரியாக இருந்தாலும்  ‘நடுத்தர வர்க்கத்து வாழ்வையே’ இறுதி வரை விரும்பி வாழ்ந்த பெருந்தகையாளர்.
பசியென்று வந்தவர்க்கு பாயசத்தோடு பரிமாறும் பரந்த மனசுக்காரி.
கடந்த காலத்தை எண்ணி கலங்க மாட்டாள்.
வருங்காலத்தை எண்ணி பயப்பட மாட்டாள்.
நிகழ்காலத்தை அணு அணுவாக ரசித்து வாழும் ‘ஜோர்பாவின்’ வாரிசு.

“ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைக்கோவிலை பார்க்க வேண்டும்”
என்ற என் அத்தையின் ஆசையை நிராசையாக்கிய குற்ற உணர்வு இனி என்றும் என்னுள் இருக்கும்.

எழுபதுகளில் சென்னை குரோம்பேட்டை,பல்லாவரம்,தாம்பரம் தியேட்டர்களில்  ‘ஒரே கட்டணத்தில் இரண்டு படங்கள்’ காட்டுவார்கள்.
அதனால் 30 நாள் விடுமுறையில் 60 சினிமாவிற்கு மேல் தியேட்டர்...தியேட்டராக அழைத்துச்சென்று எனக்குள் சினிமாவை விதைத்த விவசாயி என் அத்தை.

மனித உறவுகள் பண உறவுகளாகி விட்ட காரணத்தால், அவர் பெற்ற பிள்ளைகள் தடுத்தும்...  ‘எனது அண்ணன் மகன் திருமணம் செல்வேன்’
என வந்து வாழ்த்திய புனிதவதி எனது அத்தை.

அவரது பிள்ளைகளிடம் பட்ட கடனை அடைத்து விட்டேன்.
தீர்க்க முடியாத கடன் எனது அத்தையிடம் பெற்றதுதான்.
எனது படைப்புகளை அவருக்கு அர்ப்பணிப்பதன் மூலமே  ‘அக்கடனை’ தீர்க்க முடியும்.
சீக்கிரம் தீர்த்து விட ஆசிர்வதியுங்கள் அத்தை.

   

Jan 8, 2013

சொர்க்கத்திற்கு ஜீப்பில் போகலாம்!.


நண்பர்களே...
கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்து விட்டு மேலும் ஒரு நாள் தங்கினால்
 ‘சொர்க்கத்திற்கு’ போகலாம்.
ஒரு கண்டிஷன் இளைஞர்கள் மட்டுமே போக முடியும்.
முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் கட்டாயம் போகக்கூடாது.

சொர்க்கம் = குடசாத்ரி.
குடசாத்ரி கொல்லூரிலிருந்து 21 கிலோமீட்டர் தூரம் + உயரத்தில் இருக்கிறது.
‘சொர்க்கத்திற்கு’ ஜீப்பில் போக இரண்டு மணி நேரம் ஆகும்.
அதுவும் இதெற்கென்றே கொல்லூரில் உள்ள ஜீப்பில் மட்டுமே பயணிக்க முடியும்.
நடந்தும் போகலாம்.
அருமையான டிரெக்கிங் அனுபவம் உத்திரவாதம்.


குடசாத்ரி போவதற்கு மலைப்பாறைகளை உடைத்துதான் பாதை போல்’குன்ஸாக’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
அதில்தான் ‘ஜீப்கள்’ தவழ்கிறது.
பாதையில் இருக்கும் பாறைகளில் ஜீப்கள் தத்தி தத்தி ஏறுகின்றன.
பாதையில் ஒரு பக்கம் நெடிதுயர்ந்த பாறைகள்.
மறு பக்கம்  ‘பச்சை பசேல்’ பாதாளம்.
இந்தப்பாதையில்  ‘ஹேர்பின்’ வளைவுகளில் ஜீப் முன்னேறுவதே
 ‘தனி அட்வெஞ்சர் ஸ்டைல்’.
ரிவர்ஸ் எடுக்கும் போது டயர் மட்டும்தான் பாதையில் இருக்கும்.
ஜீப்பின் பின் பாகம் பாதாளத்தில் நிற்கும்.
ஜீப்பின் பின் பக்கம் இருப்பவர்கள்  ‘அனுபவித்தால்’ சொர்க்கம்...
பயந்தால் நரகம்.
இந்த திரில்லை நேரில்தான் அனுபவிக்க முடியும்.
எழுத்தில் கொண்டு வருவது  ‘பயணத்தை’ விட சிரமம்.


இந்தப்பாதையில் இது வரை விபத்தே நடந்ததில்லை.
இது மூகாம்பிகையின் அருளென்று நான் சொல்வேன்.
டிரைவர்களின் திறமையென்று  ‘கமல்’ சொல்வார்.



போகும் பாதையில் குறிப்பிட்ட தூரம் வெறும் மணல் பாதைதான்.
நமது ஜீப்பிற்கு முன்னால் வேறொரு ஜீப் போனால் அனைவரும் செவ்விந்தியர்களாக மாறி விடுவோம்.
அந்த செம்மண் புயலின் நடுவே பயணிப்பது  ‘பாலைவன அனுபவம்’.


மலை உச்சிக்கு போன பிறகு,
வழியில் புல் பிரதேசம் ஒன்று வரும்.
கண்ணுக்கு எட்டிய தூரம் புல் வெளிதான்.
மாலை நேரச்சூரியனில் அந்த புற்கள் தங்கம் போல்  ‘தகத்தகாயமாக’ ஜொலிக்கும்.
மூகாம்பிகைகையின் விசுவல் டீரிட்மெண்டை  ‘லைவாக’ பார்க்கலாம்.
இந்த அனுபவம் வேறெங்கும் கிட்டாது.

இந்த த்ரில் பயண முடிவில்தான்,
குடசாத்ரி ஆதி மூகாம்பிகை கோயில் உள்ளது.
கோவில் சிறிதுதான்.
ஒரே ஒரு பிராம்மணக்குடும்பம் மட்டும் அங்கே வசித்து பூஜை செய்து வருகின்றனர்.
மின்சாரம் கூட ஜெனரேட்டர் உபயம்தான்.
பூஜை செய்யும் அய்யர் கோமணத்தை உருவுவதில் டாக்டரேட் பெற்றுள்ளார்.
நூறு ரூபாய் தாளை காட்டினால்தான் கற்பூர ஆரத்தி.

குடசாத்ரியில் கோவிலுக்குள் அம்பாள் இல்லை.
பச்சை பசேல் பிரதேசங்களில் அவளை நீங்கள் தரிசிக்கலாம்.
அந்தப்பிரதேசத்தை அடைய நல்ல சாலை வசதி செய்யப்படவேக்கூடாது.
சொர்க்கத்திற்கு சுலபமாக போகக்கூடாது.
கஷ்டப்பட்டு அந்த இடத்தை அடைவதே எனக்கு இஷ்டம்.
நீங்கள் போகும் போது என்னைப்போலவே உணர்வீர்கள்.


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.



Dec 15, 2012

கடவுள் பாதி...மிருகம் பாதி...

நண்பர்களே...
நான் இந்த வலையுலகத்தில் எழுதிக்கொண்டிருப்பது யாருக்காக ?
எனக்காகத்தான்.
ஏனென்றால்,
எனது  ‘கிரியேட்டிவிட்டியை’ உயிர்ப்போடு இயங்க வைப்பது
வலையுலகம்தான்.

உலகசினிமாவின் கதையை சொல்லி வியாபாரம் செய்யும் சாதாரண வியாபாரி நான்.
 ‘உலகத்தமிழ் மாநாட்டுக்காக’ கோவை வந்திருந்த,
எனது நண்பர் திரு .செந்தில் ராஜ் கொடுத்த ஊக்கத்தில்தான்  பதிவெழுத ஆரம்பித்தேன்.
நண்பர் செந்தில் ராஜ் ‘இடுக்கண் களையும் நட்புக்கு’ இலக்கணமானவர்.
அவர் வலையுலகில்  ‘தமிழ் குறிஞ்சி’ என்ற இணைய பத்திரிக்கையை நடத்தி வருகிறார்.
நான் கமலைப்பற்றி  ‘சகலகலா வல்லவர்’ என்ற 52 வாரத்தொடரை தயாரித்து விளம்பரதாரர் சரியாக அமையாததால் நஷ்டம் அடைந்திருந்தேன்.
அவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,லண்டன் என உலகம் முழுக்க அத்தொடரை சாட்டிலைட் டிவி,கேபிள் டிவி என வியாபாரம் பண்ணி
நஷ்டத்தை ஈடு கட்டி சிறு லாபத்தையும் ஈட்டி கொடுத்தார்.

நண்பர் புண்ணியத்தால்,
வலையுலகத்தில் எழுத ஆரம்பித்த போது உலகசினிமாக்களை  ‘அறிமுகம்’ மட்டுமே செய்ய ஆரம்பித்தேன்.
விமர்சனம் செய்யவிரும்பவில்லை.
காரணம், அது மிகக்கடினமான பணி.
சொகுசாக உலகசினிமாவை அறிமுகம் செய்து கொண்டு பயணித்தேன்.

பதிவெழுத ஆரம்பித்தபோது வரவேற்று மிகப்பெரிய அறிமுகம் கொடுத்தது
பதிவர்  ‘கருந்தேள்’ ராஜேஷ்தான்.

மதி செய்த விதியால்,
ஹேராம் திரைப்படத்தை முதலில் விமர்சனம் எழுத ஆரம்பித்தேன்.
வந்தது வினை.
எதிர்ப்பு வரிசை கட்டி வந்து, வலையுலகத்திலுள்ள  ‘வசையுலகை’
புரிய வைத்தது..
அதே நேரத்தில், ஆதரவு  ‘ஏகே 47கள்’ அத்தனையையும் சிதறடித்தது.

இறுதியாக வந்த சண்டையில் ,
என்னுள் இருந்த  ‘கடவுளை’க்கடந்து... ‘மிருகம்’ மட்டும் வெளியே வந்தது.
எதிர்ப்பும் முடிவுக்கு வந்தது.
ஆனால் இந்த சண்டையில் என் கடையை நேற்று முதல் மூடி விட்டேன்.
இத்தருணத்தை மிகுந்த சந்தோஷமாக உணருகிறேன்.
10% வருத்தம்...90% மகிழ்ச்சி.
கடையை மூடி விட்டு  ‘சிவாஜியை’ 3டியில் பார்த்தேன்.
இன்று  ‘நீதானே என் பொன் வசந்தம்’.

10% வருத்தம்  =  எதையோ  ‘மிஸ்’ பண்ணிய உணர்வு .
காரணம்,
உலகசினிமாவை ஊர் ஊராகச்சென்று விற்ற போது எனக்கு கிடைத்த நட்பு வட்டாரம்.
பத்திரிக்கையாளர்கள், இலக்கியவாதிகள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், கம்யூனிஸ்ட் சித்தாந்த வாதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், குடும்பத்தலைவிகள் என... அடேயப்பா!.எவ்வளவு பேர்!!.
இன்று எனக்கு  ‘உலகசினிமா’ மூலம் உலகம் முழுக்க சொந்தங்கள் இருக்கின்றனர்.
பதிவுலகின் மூலமாக ‘உலகசினிமா சொந்தங்கள்’ இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கும்.


இனி...
நான் ‘ஜோர்பா’ போல வாழ விரும்புகிறேன்.
‘ஜோர்பா த க்ரீக்’ 
[ ZORBA The Greek \ 1964 \ Written by : Nikos Kazantzakis \ Directed by :Mihalis Kakogiannis ] என்ற உலகசினிமா அல்லது நாவல் படித்தவர்களுக்கு
சட்டென புரிந்திருக்கும்.
ஜோர்பாவுக்கு கடந்த காலமும் கிடையாது.
வருங்காலமும் கிடையாது.
நிகழ்காலத்தில் ரசித்து ருசித்து வாழ்பவன்.
“நேற்று இல்லை...நாளை இல்லை...எப்பவுமே ராஜா”.
நான்  ‘ஜோர்பா’ போல வாழ விரும்புகிறேன்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

Mar 14, 2012

காவல்கோட்டம்-வலிமை...பெருமை...[பாகம் ஒன்று]

ஜனவரியில் வாங்கிய காவல்கோட்டம் இப்போதுதான் படிக்க முடிந்தது.
சரித்திர நாவல் என்றாலே கல்கியும்...சாண்டில்யனும்தான் நமக்கு முன்னோடி தெய்வங்கள்.

சுஜாதா முதன்முறையாக ரத்தம் ஒரே நிறத்தில் புதிய பாதையை காட்டினார்.
சரித்திரமும் புதினமும் அற்ப்புதமாக கலந்து அவர் செய்த ரஸவாத வித்தையால் பிரிட்ஷ் காலத்து சென்னையை தரிசிக்க முடிந்தது.

பிரபஞ்சனது ‘வானம் வசப்படும்’... ஆனந்த ரங்கம் பிள்ளையின் டைரியை உள்வாங்கி... பிரெஞ்சு காலத்து புதுவையை படம் பிடித்து காட்டியது.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் கிபி1370 க்கு இழுத்துச்செல்கிறது.
கிட்டத்தட்ட 700 ஆண்டு வரலாற்றில் நாம் பயணிக்க முடிகிறது.

காவல் கோட்டத்தின் சிறு பகுதிதான் அரவான்.
காவல் கோட்டத்தின் ஆன்மாவை அரவானில் தரிசிக்க முடியாது.
 பசுபதி காரெக்டர் கிணற்றில் விழுந்து மாட்டிக்கொள்கையில் ஆதி காரெக்டர் கிராபிக்ஸ் மாடுகளுடன் பவனி வந்து.... விஜய் பட ரேஞ்சில்....
 ஆக்‌ஷன் காட்சி தூள் பறக்க தப்பித்து போவார்கள்.

காவல் கோட்டத்தில் சு.வெங்கடேசன் சித்தரிந்ததை காட்டியிருந்தால் யதார்த்தம் வாழ்ந்திருக்கும்.
சின்னான் கோஷ்டியினர்.... பக்கத்து கிராமத்தில் போய்....
 வேகமாக ஒடக்கூடிய மாடுகளை தேர்வு செய்து... திருடி ஒட்டிக்கொண்டு வருவார்கள்.
மாட்டு வாலின் அமைப்பை வைத்து... மாடு ஓடும் திறத்தை கணிப்பதாக.... மாட்டு சாஸ்த்திரத்தை நுழைத்திருப்பார் வெங்கடேசன்.

களவு போன ஊரில்... காவலிருப்பவர்களிடம்...
மாட்டு வியாபாரிகள் என நம்ப வைத்து... இரவில் தங்கிச்செல்ல அனுமதி பெற்று தங்கி...கிணற்றுக்குள் கட்டிலை இறக்கி...காப்பாற்றி விடிவதற்க்குள் தப்பித்து செல்வதாக சித்தரித்திருப்பார்.

காவல் கோட்டத்தில் சின்னானுக்கு ஜோடி இன்னொருத்தன் மனைவி.
இவன் மேல் கொண்ட காதலால்...தாலி கட்டிய தாய் மாமனை அறுத்து ஒதுக்கி விட்டு...அதே தாய்மாமன் தலைமையில்... சின்னானது அரை ஞாண் கொடியை தாலியாக ஏற்று மனைவியாக வாழ்கிறாள்.
இவை படமாக்கப்பட்டிருந்தால் அரவான் டெம்ப்ளேட் காதல் காட்சிகள்...
பாடாவதி பாடல் காட்சிகள்... இம்சையில்லாமல் ஒரு புது அனுபவம்....
ஒரு பரவசம் கிட்டியிருக்கும்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் ஒ.ஏ.கே.தேவர் ஊமைத்துரையாக வந்து கர்ஜிப்பார்.
காவல் கோட்டம் இவர் பிறவி ஊமை என்கிறது.
நமது பாடப்புத்தகத்தில் கட்டபொம்மன் வர்லாற்றில்....ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்துச்சென்ற போது வெள்ளையரால் கொல்லப்பட்டார் என்று ஒரு வரிச்செய்தியாக...வரலாறு சொல்லப்படும்.
அவரது வீரதீரச்செயல்கள் பக்கம் பக்கமாக காவல்கோட்டம் சித்தரிக்கிறது.
அவற்றை இரண்டாம் பாகத்தில் சொல்கிறேன்.

Mar 13, 2012

சிதம்பர ரகசியம்

பிப்ரவரி 24 முதல் மார்ச் 4ம்தேதி வரை சிதம்பரம் புத்தகக்கண்காட்சி... அண்ணாமலை பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
நானும் பங்கு பெற்றேன்.
உலகசினிமாவா!கிலோ என்ன விலை?எனக்கேட்டனர் சிதம்பரம் மக்கள்.
அது போக சிதம்பரத்தில்500ரூபாய்,1000 ரூபாய்க்கு கடுமையான தட்டுப்பாடு.
எல்லா ஊரிலும் 10 ரூபாய் நோட்டுக்குத்தான் சிரமப்படுவோம்.
சிதம்பரத்தில் 10 ரூபாய் நோட்டு மட்டும்தான் பார்க்க முடிந்தது.


சரி வந்தது வந்தோம்...
புண்ணியத்தை தேடுவோம்....
என சிதம்பரம் நடராஜப்பெருமானை தரிசிக்க ....
பவுர்ணமி இரவு அர்த்த ஜாம பூசைக்கு சென்றேன்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் வரும் நேரம் அது என ராம கிருஷ்ணா மட ஸ்டால் நண்பர் வற்புறுத்தி அழைத்து சென்றார்.
மிக அளவான கூட்டம்தான்.
வாத்தியங்கள் முழங்க பெருமான் பள்ளியறைக்குப்போகும் காட்சி சிலிர்ப்பை ஏற்ப்படுத்தவில்லை.
பவர்கட்டில் கோயிலே இருட்டாக....
பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில்...
குளிர்ந்த சூழலில்...
அந்தப்பிரகாரத்தில் தெய்வீகம் இருந்தது.
பிரசாதமாக தம்ளரில் பால் கொடுத்தார்கள்.
என் வாழ் நாளில் கண்டிராத சுவை அந்தப்பாலில் இருந்தது.

அடுத்த நாள் காலையில் கோயிலுக்குப்போனேன்.
முக்கிய சன்னிதானங்களில் அர்ச்சகர்கள் பெரிய நோட்டை வைத்துக்கொண்டு  பெயர்,முகவரி,பிறந்த நாள்,நட்சத்திரம் என... இறந்த நாளைத்தவிற மீதி எல்லா டேட்டாவையும் கேட்டு...
 விபூதி பிரசாதம் அனுப்ப...
 சர்வீஸ் சார்ஜாக 1000 ரூபாய் கேட்கிறார்கள்.
 “1000 ரூபாயா! நான் அதை சிதம்பரத்தில் பார்க்கவேயில்லை” என தப்பித்து வந்தேன்.
ஆளரவமற்ற மண்டபத்தில் ஒரு வெள்ளைக்காரன் மட்டும் அங்குள்ள தூண்களை சுற்றி சுற்றி வந்தான்.
அவனோடு நானும் இணைந்து பார்த்தேன்.
நம் முன்னோர்கள் செதுக்கி வைத்த பொக்கிஷங்களை கண்டேன். நாட்டியக்கலையின் அத்தனை அம்சங்களையும் சிற்பமாக்கி வைத்துள்ளார்கள்.
அதன் அழகை வர்ணிக்க கண்ணதாசன் பிறக்க வேண்டும்.


சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் பாண்டியன்... “ பகல் உணவுக்கு புத்தூர் என்ற கிராமத்துக்கு போவோம்” என்றார்.
டவுண்பஸ்ஸில் ஏறி புத்தூர் சென்றோம்.
கொள்ளிடம் தாண்டி இருக்கிறது புத்தூர் என்ற சிற்றூர்.
ஏகப்பட்ட கார்கள்...வேன்கள் என மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.
பொறுமையாக காத்திருந்து இடம் பிடித்தோம்.
தலை வாழை இலை போட்டு சோற்றை கொட்டினார்கள்.
மிரண்டு போனேன்.
சைட் டிஷ்ஷாக சிக்கன்,இறால்,வஞ்சிர மீன் வறுவல் வாங்கி சாப்பிட்டேன்.
இதற்க்கு ஈடு இணையான சுவை உலகிலேயே இருக்காது எனச்சொல்லலாம்.
இன்றும் ஒலைக்கொட்டகையில் அமைந்திருக்கும் ஜெயராமன் சாப்பாட்டுக்கடை சுவையின் ரகசியத்தை கேட்டு தெரிந்து கொண்டேன்.
ஜெயராமன் சொந்தமாக படகு வைத்துள்ளார்.
அதில் போய் பிடித்து வரும் இறால்,மீன் மட்டுமே சமையலுக்கு உபயோகிக்கிறார்கள்.
அதனால்தான் பிரஷ்&ஸ்பெஷல் டேஸ்ட் கிடைக்கிறது.

சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சிதம்பரம் கீழ ரத வீதியில் கிருஷ்ண விலாஸ் ஒன்றே கதி... 

Feb 7, 2012

திருப்பூர் வெற்றி



திருப்பூர் புத்தகக்கண்காட்சி மிகப்பிரம்மாண்ட வெற்றி பெற்று விட்டது.
9 வருடங்களின் விடா முயற்சி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளது.
வரும் வருடங்களிலும் இந்த வெற்றியை விரிவாக்க மேலும் உழைப்பார்கள் இதை நடத்துகின்ற நல்லவர்கள்.
அனைத்து கட்சியினரும் இணைந்து நடத்திய இந்த வேள்வியில்
எனக்கும் இடம் ஒதுக்கி மிகப்பெரிய கவுரவம் வழங்கி மகிழ வைத்தார்கள்.
திருப்பூர் மக்கள் என்னை கொண்டாடி விட்டார்கள்.
நன்றி திருப்பூர்.

இம்மாபெரும் வெற்றிக்கு திருப்பூர் வலைத்தள நண்பர்கள் மிகப்பெரிய சேவையை செய்துள்ளார்கள்.
எனது ஸ்டாலில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகையில் நண்பர் இயக்குனர் ரவிக்குமாரும்,பதிவுலக நண்பர் மோகன் குமாரும் அவர்களாகவே உள்ளே புகுந்து விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த அதிரடி உதவியை நான் மிக ரசித்தேன்.
கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் போட்டியில் பரிசு பெற்ற  ரவி.... திரைப்பட உலகில் மகேந்திரனாக ஜொலிக்க வாழ்த்துகிறேன்.
மோகன் எழுத்தாளராக....அதே நேரத்தில் பொருளாதாரத்தில் அம்பானியாக பிரகாசிக்க வாழ்த்துகிறேன்.

தினமும் மாலையில் எனக்கு மிகவும் பிடித்த உலகசினிமாக்களை திரையிட்டு மேலும் உலகசினிமாவுக்கு உரமூட்டினார் நண்பர் தாண்டவக்கோன்.
முதல் நாள் நிகழ்ச்சியாக...Turtles can Fly  எனப்பறந்தவர்கள் கடைசி வரை லாண்ட் ஆகவேயில்லை.
தாண்டவக்கோன் குறும் படங்கள் இனி கேன்ஸ் நோக்கி பறக்க வாழ்த்துக்கள்.
இவ்விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்கள்... புத்தக விழாவை திரைப்பட விழாவாக உருமாற்றம் செய்து விட்டது.
இதே போன்று ஈரோடு புத்தகத்திருவிழாவிலும் உலகசினிமாக்கள் திரையிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்ற ஏக்கம் என்னுள் மட்டுமல்ல...பல ஆர்வலர்கள் மத்தியிலும் உள்ளது.

திரையிடப்பட்ட படங்களின் விபரம் இதோ...
Turtles Can Fly
The Kid
Bal
Children Are Watching Us
The Kid with a Bike
Winged Migration
The Stoning of Soraya M
Quest For Fire
Come and See
Adaminte Makan Abu

தினமணி இத்திருவிழாவை வர்ணித்து அரைப்பக்க அளவில் செய்தியாக வெளியிட்டு பத்திரிக்கை தர்மத்துடன் செயல் பட்டது.
தினத்தந்தி,தினமலர் இத்திருவிழாவை பற்றிய செய்தியை புறக்கணித்து அதர்மத்துடன் செயல் பட்டது கண்டிக்க தக்கது.
விளம்பரம் தந்தால்தான் செய்தி வெளியிடுவோம் என்ற அராஜகப்போக்கு அநாகரீகமானது.
செக்ஸ் டாக்டர் விஜயத்தை விளம்பரத்தோடு செய்தி வெளியிடும் நீங்கள் அதே பாணியை புத்தகக்கண்காட்சி நடத்துபவர்களிடமும் எதிர்பார்த்தால் எப்படி? கைபேசியில் செய்திகள் விரைந்து வரும் உலகில் படிக்கும் பழக்கத்தை மறந்து விடாதே...படி..படி..எனத்தூண்டுவதே இது போன்ற புத்தக்கதிருவிழாக்களே!
காலையில் காப்பியுடன் பத்திரிக்கை படிக்கும் தொட்டில் பழக்கம்....
என் தலை முறை... சுடுகாடு போனதும் மறைந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு இப்பழக்கத்தை கடத்த உங்களுக்குத்தான் அதிக கடமை உண்டு.
பத்தாண்டுகளுக்கு மேல் விடாமல் நடத்தப்படும் புத்தகத்திருவிழாக்களுக்கு தினமும் கால் பக்கம் ஒதுக்குங்கள்.
வரவேற்பு அறையில் தமிழக மக்கள் தினமும் உங்களுக்கு இடம் ஒதுக்குவார்கள்.

Jan 25, 2012

B S N L செய்யும் சதி

நண்பர்களே...நான் இணையத்தொடர்பு பி.எஸ்.என்.எல் வழங்கி வரும் சேவையை பயன்படுத்தி வருகிறேன்.
கடந்த ஒரு வாரமாக பிளாக்ஸ்பாட்டை தொடர்பு கொள்ள முடியாமல் சதி செய்து வருகிறது.
வேர்ட் பிரஸ், .காம் பதிவுகள் படிக்க முடிகிறது.
பிளாக்ஸ்பாட் மட்டும்தான் தகறாறு.
எனவே நண்பர்கள் யாருடைய பதிவையும் படிக்க முடிவதில்.
என்னுடைய டாஷ்போர்டு மட்டும் ஒப்பன் ஆகிறது.
வியூ பிளாக் ஓப்பன் ஆக மாட்டேன் என அடம் பிடிக்கிறது.
எனவே யாருடைய கமெண்டுக்கும் பதில் போட முடிவதில்லை.
மன்னிக்கவும்.

கடந்த மூன்று மாதமாக நான் பட்ட அவஸ்தைகள் ஒவ்வொன்றாக விலகி வருகின்றன.
நீதிமன்றத்தில் சிறு அபராதத்தொகை மட்டுமே செலுத்தி வழக்கிலிருந்து விடுதலையாகி விட்டேன்.
கடவுள் அனுக்கிரகமும்,நண்பர்கள் ஆசியுமே இவ்வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு வெளியேறி விட்டேன்.
பதிவுலக நண்பர்கள் காட்டிய பரிவு என்னை நெகிழ வைத்தது.
அனைவருக்கும் நன்றி.

திருப்பூர் புத்தகக்கண்காட்சி இன்றிலிருந்து தொடங்குகிறது.
பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறுவதால் ...ஆறாம் தேதி பதிவிடுகிறேன்.
அது வரை நன்றி கலந்த வணக்கங்கள்.

எனது இணையம் சரியாக வேலை செய்யாததற்க்கு காரணம்...
 இந்திரா அவர்கள்.... எனது பிளாக்கிற்க்கு சூனியம் வைத்து விட்டதாக நினைக்கவில்லை.

Jan 21, 2012

மிஷ்கினுக்கு என் மேல் வந்த கோபம்



சென்னை புத்தகக்கண்காட்சியில் இடம் பெற்றது பாக்கியமாகக்கருதினேன் ஜனவரி 5ம்தேதி வரை.
ஜனவரி 17ம்தேதி கண்காட்சி முடியும் போது அந்த எண்ணம் கரைந்து விட்டது.
இந்த கண்காட்சி அனுபவம் ஆயுசுக்கும் போதும்.

என் ஸ்டாலுக்கு வந்து என்னை கவரவப்படுத்திய பிரபல பதிவர்கள் ஜாக்கி சேகர்,பட்டர்பிளை சூர்யா,ரசனை சுந்தர்ஜீ,கொழந்த சரவணன்... அனைவருக்கும் நன்றி.
என்னையும் என் ஸ்டாலையும் படம் பிடித்து ஸ்பெஷல் பதிவு போட்டு நாறடித்த பதிவர்களுக்கு மிக்க நன்றி.
நாறடித்த நல்லவர்களுக்கு ஒரு வார்த்தை...
இயேசுபிரான் ஒரு விலைமாதை கல்லெறிந்தவர்களிடம் கூறுவாரே...அந்த பைபிள் வசனம்தான் எனது பதில்.

மிஷன் இம்பாசிபிள்4 போன்ற புதிய மசாலா படங்களின் டிவிடி விற்றிருந்தால் மேலும் ஒரு லட்சம் லாபம் கிடைத்திருக்கும்.
மாறாக பை சைக்கிள் தீவ்ஸ்,ரோஷமான்,பதேர் பஞ்சலி விற்று கிடைத்த 50000 ரூபாய் லாபம்... கோடி ரூபாயாக இனிக்கிறது.
ரெட் பலூனையும்,விண்ட் மைக்ரேசனையும் சொல்லி சொல்லி நூற்றுக்கணக்கான டிவிடி விற்றேன்.
அவற்றை குடும்பத்தோடு பார்த்தவ்ர்கள் என்னை பாராட்டி மகிழ்வதுதான் எனக்கு கிடைத்த வரம்.

இந்த கண்காட்சியில் ஒரிஜினல் காப்பி ரைட் டிவிடியும் வைத்திருந்தேன்.
599 ரூபாய் கொடுத்து அவதார் வாங்கியது ஒரே ஒருவர்தான்.
50 ரூபாய்க்கு அவதார் வாங்கியவர்கள் 60 பேர்.
599 ரூபாய் கொடுத்து சில்ட்ரன் ஆப் ஹெவன் ஒருவர் கூட வாங்கவில்லை.
50 ரூபாய் கொடுத்து அதே படத்தை 120 பேர் சந்தோஷமாக வாங்கிச்சென்றுள்ளனர்.

மெலினா,ஹோட்டல் ருவாண்டா,மோட்டார் சைக்கிள் டைரி,மீராநாயரின் மிசிசிபி மசாலா,தீபா மேத்தாவின் ஃபயர்,சத்யஜித்ரேவின் சில படங்கள்
99 ரூபாய்க்கு  ஒரிஜினல் டிவிடி வந்து விட்டது.
 அதைத்தான் திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் விற்கப்போகிறேன்.
இந்தப்படங்கள் 50 ரூபாய்க்கு வந்து விட்டால் இன்னும் அதிகம் விற்க்கும்.
இந்தவிலைக்கு இந்தக்கம்பெனி இறங்கி வந்து விற்றதுக்கு அடியேனும் ஒரு காரணம்.
அந்தக்கம்பெனியிடம் நான் கொடுத்த பிராமிஸ் இதுதான்.
 “50 ரூபாய்க்கு உலக சினிமா விற்றால் ஒவ்வொரு டைட்டிலுக்கும் ஆயிரம் டிவிடி நானே வாங்கி விற்க்கிறேன்”.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த விலைக்கு விற்க கீழே இறங்கி சத்தியமாக வராது.
அவர்கள் 599 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் இந்திய மக்களை
கொள்ளையடிக்கத்தான் விரும்புவர்.
ஒரிஜினல் டிவிடி என்ற பெயரில் கோடிக்கணக்கான இந்திய ரூபாய்கள் அமெரிக்காவுக்கு போகாமல் தடுப்பது என்னைப்போன்ற வியாபாரிகளே.
நியாயமாக பார்த்தால்.... அந்நிய செலாவணி சேமித்து கொடுக்கும் எங்களை ரிசர்வ் வங்கி மனசார பாராட்டவேண்டும்.

எனது ஸ்டாலுக்கு வந்து வாங்கி சந்தோஷப்பட்டட விஐபிக்கள் பலர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,இயக்குனர் விக்கிரமன்,
இயக்குனர் ரமணா,டாக்டர் ருத்ரன் ஆகியோர் என்னை அங்கீகரித்த நல் உள்ளங்கள்.
இயக்குனர் ரமணா தொண்டையில் புற்று நோய் வந்து அறுவை சிகிச்சை செய்து பேச முடியாமல் அவஸ்தைப்படுகிறார்.
அவர் மீண்டும் தனது குரலைப்பெற என்னோடு நீங்களும் பிரார்த்தியுங்கள்.

இயக்குனர் மிஷ்கின் ஸ்டாலுக்குள் வந்த உடனே எழுந்து நின்று வரவேற்றேன்.
புத்தகக்கண்காட்சியில் பைரேட்டட் டிவிடி நீ எப்படி விற்க்கலாம்?என கோபப்பட்டு உடனே வெளியேறி விட்டான்.
இதை பார்த்து கொண்டிருந்த மற்றோரு கஸ்டமர்...
 “ இந்த வார்த்தையை இவன் சொல்லக்கூடாது.
கிகுஜிரோவை திருட்டுத்தனமாக காப்பியடித்த இவன் உங்கள் மேல் கோவப்பட்டது நியாயமே இல்லை”.என என்னை சாமாதானப்படுத்தினார்.
என் ஸ்டாலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிகுஜிரோ டிவிடியை பார்த்ததும் இதுதான் நந்தலாலா என்கின்றனர்.
ஐ யாம் சாமை பார்த்து இதுதான் தெய்வத்திருமகள் என்கின்றனர்.
இப்படி நாடறிந்த படங்களை காப்பியடிப்பதற்க்கு பதில் நல்ல தமிழ்க்கதைகளை வாங்கி படமாக்குங்கள்.
நாடே போற்றும்.

சாகித்ய அகடமி பரிசு பெற்ற காவல் கோட்டம் நாவலின் ஒரு பகுதியை.... அரவான் என்ற திரைப்படமாக இயக்குனர் வசந்த பாலன் உருவாக்கி உள்ளார் என்ற நல்ல செய்தியை உங்களிடம் பகிர்வதுதான் ...
2012ல் ஆகச்சிறந்த ச்ந்தோஷம்.

Dec 14, 2011

கேரளாவில் நான் பட்ட பாடு

டிசம்பர் 2லிருந்து 19 வரை எர்ணாக்குளத்தில் கொச்சி புத்தகக்கண்காட்சியில் இருந்தேன்.
ஊடகங்கள் முல்லைப்பெரியார் பிரச்சனையை, தினமும் தலைப்பு செய்திகளாக்கி வெடிமருந்தை நிரப்பிக்கொண்டே இருந்தது.
மேடைகளில் பேச்சாளர்கள் மனிதவெடிகுண்டுகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் பேப்பர்களை பார்த்தால் இங்குள்ளவர்கள் அதே வேலையை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
தமிழ்நாட்டிலிருந்து பத்து பேர் ஸ்டால் போட்டிருந்தோம்.
உள்ளூர பயம் ரம்பம் போல் அறுத்து கொண்டிருந்தது.
ஆனால் கேரள மக்கள் எங்கள் பயத்தை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள்.
யாருமே எங்களை விரோதி போல் பாவிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் ஸ்டாலில்நல்ல கூட்டம்...
நல்ல வியாபாரம்.
‘கேரள கவுமதி’என்ற நூற்றாண்டு கண்ட பத்திரிக்கை ஆசிரியர் என்னை பேட்டி கண்டு பத்திரிக்கையில் பிரசுரித்து என் ஸ்டாலை பிரபல்யபடுத்தி விட்டார்.

கேரளாவில் இன்றும் ஆட்டோ 15ரூபாய்க்கு வருகிறார்கள்.
அதே தூரத்திற்க்கு சென்னையில் 30ரூபாயும்...கோவையில் 40ரூபாயும் உரித்து விடுவார்கள்.
 தியேட்டரில் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் 50ரூபாய்க்கு புல் ஏசி போடுகிறார்கள்.


சரவணபவன் மாதிரி ஏ கிளாஸ் ஹோட்டலில் 45 ரூபாய்க்கு புல் மீல்ஸ் சாப்பாடு.
மொத்த கேரளாவே மிடில் கிளாஸ் சொர்க்கமாக இயங்கி கொண்டிருக்கிறது.
கேயிஸ் என்ற ஹோட்டல் பிரியாணி உலகின் டாப்10ல் அடங்கும்.
அவர்கள் உணவையே மருந்தாக்கி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
சாம்பார்,ரஸம் எல்லாவற்றிலும் பெருங்காயம்.
மீன் குழம்பில் இஞ்சி...
பாயாஸத்தில் சுக்கு...
இறால் வறுவலில் பூண்டு என சாமர்த்தியமாக இணைத்து விடுகிறார்கள்.

என்னடா ஒரே பாராட்டு மயமா இருக்கே....தலைப்புக்கு சம்பந்தம் இல்லியேன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே தலைப்புக்கு வந்துட்டேன்.
புதிய உலக சினிமா டிவிடி விற்ப்பதுக்கு படாதபாடு பட்டேன்.
இன்னும் அவர்கள் அகிரா குரோசுவா,சத்யஜித்ரே போன்ற இயக்குனர்களை தாண்டி வரவில்லை.
சமீபத்திய இயக்குனர்களில் கிம்கிடுக் மட்டுமே அறிந்து வைத்துள்ளனர்.
ரோடு ஹோம்,வே ஹோம் டிவிடி விற்ப்பதற்க்கு கதகளி ஆடவேண்டி வந்தது.
தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் புண்ணியத்தால் சர்வ சாதரணமாக உலக சினிமா அறிவுப்புரட்சியே நடந்துள்ளது என்பதை உணர முடிந்தது.

கடைசி நாள் கேரளத்து பைங்கிளி ஒன்று வந்து, ஹிரோசிமா மான் அமர் இருக்கா என்று கேட்டாள்.
சந்தோசமாக தேடி எடுத்து கொடுத்தேன்.
விஸ்காம் ஸ்டூடண்டா? எனகேட்டேன்.
ஆமாம் என்றாள் பெருமிதம் பொங்க...

மேன் வித் எ மூவி கேமரா டிவிடியை இலவசமாகக்கொடுத்தேன்....
வருங்கால மீரா நாயருக்கு... 

Apr 26, 2011

கோ படத்தை பாருங்கள்

கோ படத்தை பாருங்கள் என்று எழுதியிருக்கிறாயே அது உலகசினிமாவா என்று கேட்டு அடிக்க வாராதீர்கள்.கொஞ்சம் பொறுங்கள்.
ஒரு சின்ன பிளாஷ் பேக்....

என் நண்பர் இயக்குனர் சுரேஷ்  “படம் பண்ணப்போறேன்.கதை டிஸ்கசனுக்கு வரணும்”என்று சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கூப்பிட்டார்.எப்போ வரணும்....எப்போ வரணும் என்று கேட்டு வேறு வழியில்லாமல் நாளைக்கு வாங்க என்று அனுமதியளித்தார்.தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் இரவு பத்துக்கு கோவையிலிருந்து புறப்பட்டேன்.சொகுசு பேருந்து என்று அதன் நெற்றியில் எழுதியிருந்தது.என்னுடைய புஷ்பேக் சீட் ஜார்ஜ் புஷ்ஷே வந்தாலும் அசையமாட்டேன் என்று சொல்லிவிட்டது.முன்னாடி இருந்த சீட் அநியாயத்துக்கு பின்னாடி சாஞ்சு வந்து என் மடியில் படுத்துக்கொண்டது.ஆனாலும் எனக்கு கோபமே வரவில்லை.ஏன்னா சீட்டில் இருந்தது தாப்சி ரேஞ்சில் இருந்தது.
பஸ் சடன்பிரேக் அடித்தால் அவள் நெற்றியில் என் உதடுகள் மோதும் ஆபத்து நிச்சயம் இருந்தது.அந்த இனிய ஆபத்துக்காக காத்திருந்தேன்.சரியாக இரவு பத்துக்கு பஸ் புறப்பட்டது.
ஹாரனைத்தவிர எல்லாமே சத்தம் போட்டது.

 எப்படியோ தூங்கி முழிச்சி பாத்தா காலை பத்து மணி.வெளியே பார்த்தா சென்னையைக்காணோம்.முன் சீட் தாப்ஸியை கேட்டேன்.ஜஸ்ட் இப்பத்தான் வேலூர் பாஸ் ஆச்சு என்று அலுத்தாள்.ஒரு வழியா ஒரு மணிக்கு கோயம்பேடு வந்துச்சி.இறங்கும்போது டிரைவரிடம் கேட்டேன்
  “ ஏன் ஒரு தடவை கூட பிரேக்கே போடலை ?”
“ராத்திரியிலிருந்து அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.”
 “வாழ்க கே.என்.நேரு” சொல்லிவிட்டு பறந்தேன்.

“ஸாரி...பஸ் லேட்”எனச்சொல்லி நுழைந்தேன். இயக்குனர் சுரேஷ்,உதவி இயக்குனர்கள் ரமேஷ்,சதீஷ், ‘கிராபிக்ஸ்’சுனில்,நான்  என மிக மெல்லிய கூட்டம்.

 “சார்..ஒரு சின்ன நாட் கிடைச்சிருக்கு...அதை பக்காவா டெவலப் பண்ணா போதும்”ஆரம்பித்தார் சுரேஷ்.
 “சூப்பர் ஹிட் படமா பண்ணிரலாம்.நாட்டை சொல்லுங்க”
 ‘ஸ்டேட் ஆப் ப்ளே’ன்னு ஒரு ஹாலிவுட் படத்தை இண்டியனைஸ் பண்ணி வச்சிருக்கேன்.

வெரிகுட்..அருமையான சப்ஜக்ட்.நானும் அந்தப்படம் பாத்திருக்கேன்.ரஸ்ஸல் குரோவ் பட்டையை கிளப்பியிருப்பாரு.

நம்ம படத்துலே நானே ஹீரோ.ஹீரோயின் இரண்டு பேரு..                       பர்ஸ்ட் ஹீரோயின் நல்ல பிரைட்& இண்டலக்சுவல்...
ரெண்டாவது லூசுப்பொண்ணு..ஆனா பக்கா கிளாமர்....

ரமேஷ்:   சார்..அந்த லூசுப்பொண்ணுக்கு சூப்பர் காமடி டிராக் வச்சிருக்கேன்.கொரியன் படம் ஒண்ணு.அதிலருந்து சுட்டது..

சுனில்: ஒப்பனிங் சீன் சும்மா பரபரன்னு ஆரம்பிக்ணும்.
நக்சலைட்டுங்க பேங்க் ராபரி பண்றாங்க...
நம்ம ஹீரோ தடுக்கிறாரு.

சதீஷ்: சார் இங்கிலீஷ் படத்துல ஹீரோ ரிப்போர்ட்டரு.நாம ஸ்டில் கேமராமேனா மாத்திரலாம்..

சுனில்: சூப்பர்..ஹீரோ துப்பாக்கியால சுடறதுக்கு பதிலா கேமராவுல ஷூட் பண்றாரா!சூப்பர்..சூப்பர்.

சுரேஷ்:சார்..இந்த சீனுக்கு நல்ல படம் சொல்லுங்க.

நான்: பேங்க் ராபரிக்கு இன் சைட் மேன் பெஸ்ட் சாய்ஸ்.
ஹீரோ சேஸிங் சீனுக்கு மிசன் இம்பாசிபிள் பார்ட் டூ பொருத்தமா இருக்கும்.டாம் கூரூஸ் பைக்ல ஸ்டண்ட்டெல்லாம் பண்ணி  துப்பாக்கியால சூட் பண்ணுவாரு.நம்ம ஹீரோ  ஸ்டில் கேமரா ஷூட் பண்ணட்டும்.ஆனா நம்மூர்ல ஏது நக்ஸலைட்?

சுரேஷ்: ஆந்திராவில இருந்து வர்றாங்க..அப்படி வச்சுக்கலாம்.

நான்:தமிழ் பேசுற நக்சலைட் ஆந்திராவில் என்ன பண்றாங்க?லாஜிக் இடிக்குதே?

சதீஷ்: சார் ...நாம தமிழ்ப்படம் எடுக்குறோம்.உலகசினிமா இல்லை.நம்ம ரசிகருங்க லாஜிக் பாக்க மாட்டாங்க.

சுரேஷ்:அப்புறம் நாம நம்மூரு ஆளும் கட்சி,எதிர்க்கட்சி மேட்டரை சரியா மிக்ஸ் பண்ணிட்டா படம் ரெடி.

சதீஷ்: சார் படம் எனக்கு விசுவலா ஒடுது.நாம ஆந்திரா என்.டி.ஆர் மேட்டரையும் நுழைச்சிரலாம்.

நான்: ஒரு சின்னப்பொண்ணை கல்யாணம் பண்ண மேட்டரா...அதை அமைதிப்படை படத்துல ஏற்க்கெனவே வச்சிட்டாங்களே!

சுரேஷ்: பரவாயில்ல சார்...அந்தப்படம் வந்து 20 வருசமாகுது.இப்ப உள்ள யங்ஸ்டருக்கு இந்த மேட்டர் புதுசா இருக்கும்.அப்புறம் ஆய்த எழுத்து சூர்யா காரெக்டரை வில்லனாக்கி...அவன் தலைமையில ஸ்டூடண்ஸ் ஆட்சி பிடிக்கிற மாதிரி வச்சுட்டா படம் 90%ரெடி.

நான்:நக்சலைட்டுக்கும் வில்லனுக்கும் உள்ள கனெக்சனை ஹீரோ தெரிஞ்சு வில்லனை ஒழிக்கிற கிளைமாக்சுக்கு நோ மேன்ஸ் லேண்ட்டுன்னு ஒரு உலகசினிமாவிலிருந்து சீன் உருவிரலாம்.

சுரேஷ்:சார் படம் ரெடி...வாய்யா முருகேசு..உக்கார்..ரெடி பண்ண கதையைக்கேளு.

கதை முழுவதும் கேட்ட முருகேஷ்:லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூஸ் சொல்றேன்..நீங்க சொன்ன மேட்டர் அப்படியே இந்த வாரம் ரீலிசான கோ படத்துல இருக்கு. நாம டூ லேட்...கே.வி.ஆனந்த் முந்திட்டாரு.

சுரேஷ்: வடை போச்சே..... எனக்கேவி..கேவி...அழ ஆரம்பித்தார்.நான் கோவைக்கு எஸ்கேப்.
நண்பர்களே.... கோ படம் பார்த்து சொல்லுங்கள்...நாங்கள் உல்டா செய்த அதே கதைதானா...கோ?