Jun 27, 2013

இப்பதிவு...பதிவர்களுக்கிடையிலான மோதலா ?


நண்பர்களே...
இப்பதிவு இரண்டு பதிவர்களுக்கிடையிலான மோதல் எனக்கருதும் வாய்ப்பை நன்றாகவே உருவாக்கித்தரும்.
இருந்தாலும் இப்பதிவை தவிர்க்க முடியாது.
தவிர்க்கவும் கூடாது.
காரணம்  ‘வரலாறும்... கருத்தாக்கமும்’.தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் மனோரமா கதாபாத்திரத்தின் வசனம் இப்பதிவிற்கு மிகப்பொருத்தமான துவக்கமாக இருக்கும்.

 “ அவுக ஒரு பக்கம் ஆடினா...நான் ஒரு பக்கம் ஆடுறேன்.
இரண்டையும்தான் சனங்க பாக்கட்டுமே”
 _________________________________________________________________________________

நாடக கலைக்களஞ்சியம் \ 1964 \ ஆசிரியர் : அ.பாபநாசம் \ 
பதிவின் பாகம் - 4 [ நிறைவுப்பகுதி ]

நாடக சந்தர்ப்பங்கள் : 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாடக ஆசிரியர் ‘கார்லோ கோஸி’ [ Carlo Gozzi  \ 1720 - 1806 ]  36 ‘அடிப்படை சந்தர்ப்பங்களை’ கொண்டு நாடகம் எழுத முடியும் என்று கூறியுள்ளார்.
அவைகள்...
01. பிரார்த்தனை.
02. மீட்சி.
03. பழிக்குப்பழியால் ஏற்பட்ட குற்றம்.
04. ஒரு சொந்தக்காரர் மற்றொரு சொந்தக்காரர் மீது பழிக்குப்பழி வாங்குதல்.
05. அழிவு.
06. சம்பந்தம், தொடர்ச்சி.
07. துரதிர்ஷ்டத்துக்கு பலியாதல்.
08. புரட்சி.
09. துணிச்சலான காரியம்.
10. விடுகதை
11. பெண் சோரம்.
12. பிரபலம் அடைதல்.
13. இனத்தாருக்குள் விரோதம்.
14. இனத்தாருக்குள் போர்.
15. கொலையுடன் கலந்த விபச்சாரம்.
16. பைத்தியம்.
17. ஆராய்வின்மை.
18. இனத்தானை தெரியாமல் கொல்லுதல்.
19. லட்சியத்திற்காக தியாகம் செய்தல்.
20. சுற்றத்திற்காக தியாகம் செய்தல்.
21. உணர்ச்சியில் எல்லோரும் தியாகம் செய்தல்.
22. காதலித்தவளை அவசியத்திற்காக கைவிடல்.
23. உயர்ந்தவன் - தாழ்ந்தவன் போர்.
24. விபச்சாரம்.
25. காதல் கொலைகள்.
26. காதலித்தவன் காதலித்தவளின் குற்றத்தை கண்டு பிடித்தல்.
27. காதலுக்கு தடைகள்.
28. விரோதியை காதலித்தல்.
29. ஆசை.
30. கடவுளுடன் போர்.
31. குற்றமாக எடுத்த பொறாமை.
32. தவறான முடிவு.
33. காணாமல் போனவளை மீண்டும் அடைதல்.
34. மனநோய்.
35. காதலித்தவர்களின் தொலைவு.
36. காதலால் ஏற்படும் சக்திக்கு மீறிய குற்றங்கள்.

[ கார்லோ கோஸியின் 36 ‘டிராஜிக் சிச்சுவேஷன்கள்’ நல்ல வேளையாக 1964லேயே நமக்கு தமிழில் தந்து விட்டார் அ.பாபநாசம் அவர்கள்.
இன்று கார்லோ கோஸியின் 36 ‘டிராஜிக் சிச்சுவேஷன்கள்’ பற்றிய குறிப்புகள் இணையத்தில் கூட கிடைக்கவில்லை.
_________________________________________________________________________________

நண்பர்களே...
கார்லோ கோஸி 36 ‘டிராஜிக் சிச்சுவேஷன்கள்’ என பகுத்து தொகுத்து எழுதியதை,
அப்படியே மொழிபெயர்த்து நமக்கு தந்துள்ள திரு,அ.பாபநாசம் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது..

Carlo Gozzi [ 1720 - 1806 ]கார்லோஸ் கோஸி பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க...

கார்லோ கோஸி எழுதிய [ Carlo Gozzi \ 1720 - 1806 ],
36  ‘டிராஜிக் சிச்சுவேஷன்களின்’ [ 36 Tragic Situations ] ஆங்கில வடிவத்தை  ‘இணையத்தில்’ எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

மாறாக,  ‘ஜியார்ஜஸ் போல்டி’ [ Georges Polti \ 1867 - 1946 ] எழுதிய...
36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்கள்’ [ 36 Dramatic Situations ]  இணையத்தில் தாராளமாக கிடைக்கிறது.

Georges Polti [ 1867 - 1946 ]

36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்களை’ அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவினுள் செல்க... 

 கார்லோ கோஸி [ 1720 - 1806 ] எழுதியதை அடிப்படையாக வைத்து,
மிகச்சிறிய மாற்றங்களுடன் தனது கருத்தாக்கத்தை வடிவமைத்து உள்ளார் ஜியார்ஜஸ் போல்டி [ 1867 - 1946 ] .
எனவேதான்  36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்கள்’  புத்தகத்தின்
அறிமுக உரையிலேயே கார்லோ கோஸி பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.


“Gozzi maintained that there can be but thirty-six tragic situations. 
Schiller took great pains to find more, but he was unable to find even so many as Gozzi.”
Goethe.

கார்லோ கோஸி பற்றி, 

அ.பாபநாசம் குறிப்பிட்டுள்ளார்.

ஜியார்ஜஸ் போல்டியும் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கிய மேதை ‘கோத்தே’யும் குறிப்பிட்டுள்ளார்.36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்கள்’ நூலை முழுமையாக படிக்க விக்கிப்பிடீயாவிற்குள் செல்க...

நல்லவேளை... கார்லோ கோஸி கி.பி. 1720ல் பிறந்தார்.
இல்லையென்றால்,
ஜியார்ஜஸ் போல்டியின் 36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்களை’ ,
தமிழில் மொழி பெயர்த்த ‘பதிவர் கருந்தேள்’  
‘காப்பியடிப்பதில் கோஸியும் கமலும் ஒன்றே’ என்றே தனது பதிவை துவங்கி இருப்பார்.

நண்பர்களே...
யார் வேண்டுமானாலும் விதிகளை...கோட்பாடுகளை...வகுக்கலாம்.
ஆனால்,
உலகில் உள்ள அனைத்து இலக்கியங்கள், நாடகங்கள், சினிமாக்களை
இந்த விதிகளுக்குள்தான் அடக்கம் என்று சொல்ல முடியாது.
சொல்லவும் கூடாது.

கோஸி, போல்டி இருவர் எழுதிய 36  ‘விதிகளுக்குள்’

[ 1 ] ‘ரன் லோலா ரன்’ திரைப்படத்தை எப்படி அடக்குவீர்கள் ?

[ 2 ] ரஷ்ய இலக்கிய மேதை  ‘அண்டன் செக்காவ்’ எழுதிய 'பச்சோந்தி’ சிறுகதையை எந்த கோட்பாடின் கீழ் வரையறுப்பீர்கள் ?

[ 3 ] உலகிலேயே தலை சிறந்த இலக்கிய காப்பியங்கள், 
நமது ராமாயணம், மகாபாரதம். 
இந்த இரண்டிலும் இயங்கும் விதிகளை வகுக்க, 
ஆட்களும் போதாது...
அவர்களுக்கு ஆயுசும் போதாது.  

உலகம் இருக்கின்ற வரை, 
புதிய கோட்பாடுகள் புறப்பட்டு...
இலக்கியம், நாடகம், சினிமா என எல்லாவற்றையும்... 
புதுப்பித்துக்கொண்டே இருக்கும். 

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 26, 2013

நாடகமே உலகம்.


நண்பர்களே...
திரு.அ.பாபநாசம் அவர்கள் உருவாக்கிய ‘நாடகக்கலைக்களஞ்சியம்’ என்ற நூலில் தமிழ்நாட்டின் நாடக வரலாறை எழுதி உள்ளார்.
அதை இப்பதிவில் காண்போம்.
_________________________________________________________________________________

நாடகக்கலைக்களஞ்சியம் \ 1964 \ ஆசிரியர் : அ.பாபநாசம் \
 [ பதிவின் பாகம் - 3 ]பூர்வகாலத்தில் ஆடப்பட்ட நாடகங்கள் அனைத்தும் புராணக்கதைகளே ஆகும்.
புராணக்கத்தையை தழுவி நாடகமாக ஆடிய கூத்துகளில் ‘வள்ளிக்கூத்து’ என்பது மிகப்பழமையானது.
இதைப்பற்றி தொல்காப்பியத்தின் உரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முருகக்கடவுள் வள்ளியை மணந்த வரலாறே வள்ளிக்கூத்தின் கதையாகும்.

நாடகங்கள் பூர்வகாலத்தில் ‘நாட்டிய நாடகங்களாக’ இருந்தன என்று தெரிய வருகிறது.
இதில் ‘பாலசரிதை’ என்ற நாடகம் முக்கியமான ஒன்றாகும்.
இதற்குப்பிறகு வந்த நாடகம்  ‘ராஜராஜேஸ்வரம்’ என்ற நாடகமாகும்.
இதைப்பற்றிய செய்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வடக்குப்பிரகாரத்தின் வெளியிலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டு இருக்கிறது.

17ம் நூற்றாண்டின் கடைசியில் கி.பி.1695 முதல் சில நொண்டி நாடகங்கள் இருந்ததாக தெரிய வருகிறது.
‘திருக்கச்சூர் நொண்டி நாடகம்’ என்பது இதில் ஒன்றாகும்.
இது தவிர பழனி நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் போன்ற நாடகங்களும் இருந்தன.

கி.பி. 1712 - 1779ல் வாழ்ந்த அருணாசல கவிராயர் இயற்றிய ‘இராம நாடகம்’
முக்கியமான ஒன்று.
இவரது மற்றொரு நாடகம் ‘அசோமுகி’.
இராமச்சந்திர கவிராயர் மகாபாரதக்கதையை  ‘பாரத விலாசம்’ என்று இயற்றியுள்ளார்.
இவரது மற்ற நாடகங்கள் : இரங்கூன் சண்டை நாடகம், சகுந்தலை விலாசம்,
தாருகா விலாசம்.
இந்நாடகங்களுக்கு முன்பு ‘நீலி நாடகம்’ என்று ஒரு தமிழ் நாடகம் இருந்திருக்கிறது.

வேறொரு அருணாசல கவிராயர் ‘மதன சுந்தர பிரசாத சந்தான விலாசம்’ என்ற நாடகத்தை எழுதி உள்ளார்.
இந்த நாடகம் தஞ்சாவூரில் ஆட்சி புரிந்த ஒரு சோழ அரசன்,
தன் மகள் சுகமாக வாழ வேண்டி மதன சுந்தரேஸ்வரரை வழி பட்டு வரம் பெற்ற கதையைக்கூறுவதாகும்.

   ‘மறையவர் குல வீரலிங்க பாரதி’ எழுதிய அரிச்சந்திர நாடகம் புகழ் பெற்ற நாடகமாகும்.
இது போக ஆசிரியர் பெயர் தெரியாத அரிச்சந்திர நாடகங்கள் உள்ளன.
நாராயண கவி எழுதிய ‘பாண்டிகேளி விலாசம்’ குறிப்பிடத்தக்க ஒரு நாடகம்.

சென்னை துரைதனத்தார் ஏற்படுத்தி இருக்கும்,
பழைய ஏட்டு புஸ்தக சாலையில் முப்பது தமிழ் நாடகங்களுக்கு மேல் இருக்கின்றன.
இவைகளில் முக்கியமானவைகள் : இரணிய சம்ஹார நாடகம்,
இராம நாடகம், உத்தர ராமாயண நாடகம், கந்தர் நாடகம், காத்தவராய நாடகம்.
[ சென்னை துரைதனத்தார் = பிரிட்டிஷ்காரர்கள் ;
பழைய ஏட்டு புஸ்தக சாலை = ஆவணக்காப்பகம்.]

முற்காலத்தில் ஒவ்வொரு ஆலயத்திலும் அந்த ஆலயத்தின் மகத்துவத்தை கூற அந்த ஆலய உற்சவத்தில் நாடகம் ஆடுவதுண்டு.
இதில் சேர்ந்ததுதான் ‘சுரகுரு’ நாடகம்.
இது திருக்கழுக்குன்றம் ஷேத்திரத்தின் கதையாகும்.


புராணக்கதைகளை தழுவி எழுதப்பட்ட நாடகங்கள் அநேகம் உள்ளன.
உ.ம் : கீசக நாடகம், பதினெட்டாம் போர் அலங்காரம், குசலவ நாடகம், ருக்மாங்கத நாடகம்.

பூர்விக கற்பனைக்கதைகளை தழுவி எழுதிய நாடகங்களும் உண்டு.
அவை : வீரகுமார நாடகம், காத்தவராய நாடகம், மதுரை வீர நாடகம், அதிரூபவதி நாடகம், அலங்கார ரூபவதி நாடகம்,
நந்தனார் சரித்திர கீர்த்தனை [ கோபால கிருஷ்ண பாரதியால் எழுதப்பட்டது].

சமூக நாடகத்தில் சிறந்தவை காசிவிஸ்வநாத முதலியார் எழுதிய ‘டம்பாச்சாரி விலாசம்’ என்னும் நாடகமாகும்.
கி.பி.1886ல் ‘சோழ விலாசம்’ என்ற நாடகத்தை அப்பாவுப்பிள்ளை என்பவர் எழுதி உள்ளார்.
அவர் கி.பி.1889ல் ‘இந்திரசபை’ என்ற நூதனமான நாடகத்தையும் இயற்றியுள்ளார்.

குறவஞ்சி நாடகங்களும் இருந்தன.
இதில் சிறந்தது ‘குற்றால குறவஞ்சி’.
கி.பி.1840ல் கவி குஞ்சரபாரதி அவர்கள் ‘அழகர் குறவஞ்சி’ என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

நவீன காலத்தில் எழுதப்பட்ட நாடகங்கள் : 
சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதிய மனோன்மணியம்.
இதை அகவற்பாவால் எழுதியுள்ளார்.
சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள் : லீலாவதி, சுலோசனா, மனோகரா,
பரிதிமாற்கலைஞன்  எழுதிய ரூபவதி, மானவிஜயம்.
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள்,
பி.எஸ்.ராமையாவின் பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், தேரோட்டி மகன்.
எஸ்.டி.சுந்தரத்தின் கவியின் கனவு,
அண்ணாத்துரையின் ஓர் இரவு, வேலைக்காரி,
ஜீவாவின் உயிரோவியம்,
அ.பாபநாசத்தின் உருகிய தாரகை, விசிறி, உதிரக்கிண்ணம்.
தி.ஜானகிராமனின் நாலுவேலி நிலம்.
_________________________________________________________________________________

நண்பர்களே...
இது முழுமையான தமிழ்நாட்டின் நாடக வரலாறாக இருக்க முடியாது.
திரு.அ.பாபநாசம் அவர்கள் அவர்  திரட்டிய தகவல் அடிப்படையில் மட்டுமே இதை எழுதி உள்ளார்.
நாம் இதை  படிக்கும் போதே உணர முடிகிறது.
இவருக்கு பின்னால் யாராவது இம்முயற்சியை மேற்கொண்டு இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்.
அது பற்றிய தகவல்களை நண்பர்கள் மூலம் பின்னால் தேடித்தருகிறேன்.


திரு.வி.கே.ராமசாமி அவர்கள் எழுதிய சுயசரிதை நூலில்,
அக்கால நாடகக்குழுக்கள், அவர்கள் போட்ட நாடகங்கள்,
நாடகங்களின் வெற்றி தோல்விகள், தொழில் போட்டிகள், நாடகக்குழுவினரின் வாழ்வியல் முறைகள் என ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.  

தமிழ் விக்கிப்பிடீயாவில் இன்னும் சிறப்பாக தகவல்கள் இருக்கின்றது.
விரிவான தகவல் பெற ‘தமிழ் விக்கிப்பீடீயாவிற்குள்’ செல்க...

36 நாடக சந்தர்ப்பங்களோடு,
 அடுத்தப்பதிவில் சந்திக்கிறேன்.

Jun 24, 2013

நாடகம் போட்டு...நாட்டை ஜெயித்தவர்கள்.


நண்பர்களே...
இன்று தமிழ்நாட்டில்,
நாடகக்கலை ... நகைச்சுவை தோரணங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதனால்  ‘ஆக்சிஜன்’ பெற்று  உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நாடக கலைக்களஞ்சியம் \ 1964 \ ஆசிரியர் : அ.பாபநாசம் \ 
[ பதிவின் பாகம் - 2 ]


தீவிர நாடகங்கள்,
கூத்துப்பட்டறை, பரிக்‌ஷா போன்ற அமைப்புகளாலும்,
பொதுவுடமைக்கட்சியினரின் கலை, இலக்கிய மன்றத்தினராலும்
மட்டுமே நடத்தப்பட்டு...
‘கை சுடப்பட்டு’ வருகிறது.

1960 -70 வரைக்கும் நாடகம் தமிழ்நாட்டில் செழித்திருந்தது எனலாம்.
நாடகத்திலிருந்து வந்து திரை உலகில் கொடி கட்டிப்பறந்த ஜாம்பவான்களால் நாடக உலகம் செழித்திருந்தது.

திராவிட இயக்கத்தில்,
திரு.பேரறிஞர் அண்ணாத்துரையும்...
திரு.கலைஞர் கருணாநிதியும்...
திரு.பொன்மனச்செம்மல் எம்ஜியாரும்...
நாடகம் மற்றும் சினிமா மூலமாக தங்களது இயக்கத்தையும்,
தங்களையும் வளர்த்துக்கொண்டது மாற்ற முடியாத வரலாறு.


திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்,
தனது துணைவியார் டி.ஏ. மதுரத்துடன் இணைந்து...
சொந்தமாக நாடகக்கம்பெனி நடத்தி சீர்திருத்தக்கருத்துக்களை மக்களிடம் நாடகம் மூலமாக பரப்பி வந்தார்.
திரை உலகையும், நாடக உலகையும் இரு கண்களாகவே பாவித்தார்.


திரு.எம்ஜியார் அவர்கள் திரை உலக நட்சத்திரம் ஆன பிறகும் கூட,
தனக்கென ஒரு நாடகக்குழு அமைத்து...
நாடகங்கள் நடத்தி வந்தார்.
ஒரு நாடகத்தில், உடல் பருமனான நடிகரை...
தலைக்கு மேல் தூக்கி நடிக்கும் போது,
விபத்து ஏற்பட்டு கால் முறிவானது.
அந்த விபத்துக்குப்பிறகு அவர் நாடகம் நடிக்கவில்லை.


திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தனது சிவாஜி நாடகக்குழுவின் மூலமாக வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் போன்ற நாடகங்களை எழுபதுகள் வரை நடத்தி வந்தார்.
அதே போன்று எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.ராமதாஸ், சுருளிராஜன்,
மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், ஜி.சகுந்தலா, மனோரமா போன்ற முன்னணி நடிக, நடிகையர்கள் சொந்தமாக நாடகக்குழு அமைத்து  நாடகத்திற்கு செழுமையூட்டினர்.

திரு.டி.கே.சண்முகம் அவர்கள் நாடகக்கம்பெனி அறுபதுகளில் கொடி கட்டிப்பறந்த நிறுவனம்.
திரு.கமல்ஹாசன் இந்தக்கம்பெனியில்தான் பால்ய வயதில் நடிப்பு பயிற்சி பெற்றார்.
இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் டி.கே.எஸ் நாடக கம்பெனிக்கு கதை எழுதி  உள்ளார்.


நமது இயக்குனர்களில் கே.பாலச்சந்தர், விசு, மவுலி போன்றவர்களும்
நாடக உலகில் பங்காற்றி தனித்துவம் பெற்றவர்கள்தான்.
அரசியல் நாடகங்களுக்கு திரு.சோ அவர்களும்,
புராண நாடகங்களுக்கு திரு.ஆர்.எஸ்.மனோகர் அவர்களும்
எழுபதுகளில் கொடி கட்டிப்பறந்தார்கள்.


திரு. நடிகவேள். எம்.ஆர்.ராதா அவர்கள்,
நாடக உலகில் போராளியாக விளங்கியவர்.
அவரது நாடகங்களை தடை செய்ய முயன்ற ஆதிக்க சக்திகளை,
மக்கள் சக்தியோடு அவர் எதிர் கொண்டது பொன்னெழுத்து வரலாறு.
அவரது மாஸ்டர் பீஸ்  ‘ரத்தக்கண்ணீர்’.
இன்றும் இந்த வசனங்களுக்கு ‘கை தட்டல்’ வெடிக்கும்.
அவரது வாரிசுகளான எம்.ஆர்.ஆர். வாசுவும், ராதாரவியும்
நடிகவேளின்  நாடகங்களை முன்னெடுத்து சென்றனர்.

திருஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகக்குழுவை,
அவரது வாரிசு ஒய்.ஜி.மகேந்திரா பொன் விழாக்காணச்செய்தது சாதாரண வரலாறு அல்ல.

எழுபதுகளில் திரைத்துறைக்கு வந்து சாதித்தவர்கள் பெரும்பாலும் நாடகப்பின்புலம் மிக்கவர்கள்.
திரு.பாரதிராஜா, கே.பாக்யராஜ், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனச்சொல்லிக்கொண்டே போகலாம்.


திரு.கோமல் சுவாமிநாதன் அவர்கள்  ‘தண்ணீர் தண்ணீர்’,  
‘ஒரு இந்தியக்கனவு’ போன்ற புரட்சி நாடகங்களை நடத்தி நாடக உலகிறகு புது ரத்தம் பாய்ச்சியவர்.

எழுத்தாளர் திரு.சுஜாதாவின் நாடக புதுமை உத்திகளை...
நாடகத்தில் புகுத்தி புகழ் பெற்றார் திரு.பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள்.எழுபதுகளில் நாடக உலகிற்கு வந்து இன்றளவும் கொடி கட்டிப்பறப்பவர்கள் எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும்தான்.
அடை மழையிலும், ரசிக வெள்ளத்தால் அரங்கை நிரப்பும் வல்லமை படைத்தவர்கள்.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை இன்றைய காலம் வரை உள்ள நாடக உலகை காட்டி இருக்கிறேன்.
நான் அறியாமல் விட்டு விட்ட நாடகப்பெருந்தகைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 22, 2013

நடிகன் காப்பியடிக்க வேண்டும்.


நண்பர்களே...
 தமிழை...  இயல், இசை, நாடகம் என மூன்று வகைப்படுத்தினர் முன்னோர்.
1964 ல் பதினேழு ஆண்டுகள் தன் வாழ்நாளை அர்ப்பணித்து,
நாடகத்திற்காக ஒரு கலைக்களஞ்சியத்தை...
திரு. அ.பாபநாசம் அவர்கள்  உருவாக்கியுள்ளார்.
_________________________________________________________________________________

நூலின் பெயர் : நாடக கலைக்களஞ்சியம் \ 1964 \  [ பதிவின் பாகம் - 1 ]
ஆசிரியர் : அ.பாபநாசம், பி.ஏ.பி.எல்.
வெளியீடு : நாடக பதிப்பகம்,
28, பெருமாள் மேல ரதவீதி,
திருநெல்வேலி சந்திப்பு.
_________________________________________________________________________________

திரு.அ.பாபநாசம் அவர்கள் தன்னுடைய நூலில்,
முன்னுரையாக குறிப்பிடுவது...
“ நான் இலக்கியப்பட்டறையில் தொழிலாளியாக சேர்ந்து இன்றைக்கு
17 ஆண்டுகள் ஆகி விட்டன.
பல நாடகங்களை பல பத்திரிக்கைகளில் எழுதி விட்டேன்.
நான் நாடகத்துக்கென்றே தமிழ்நாட்டில் ‘இளவேனில்’ என்று ஒரு பத்திரிக்கையும் நடத்தி விட்டேன்.

என்னுடைய இந்த 17 ஆண்டுகள் இலக்கியப்பணியில் நான் பல தேசத்து நாடகங்களையும், நாடக விமர்சன நூல்களையும் படித்தேன்.
இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
அப்போது அவற்றிலிருந்து முக்கியமானவற்றை குறிப்புகள் எடுத்துக்கொண்டேன்.
அது நாளடைவில் விரிவடைந்து இந்த ‘நாடகக்கலைக்களஞ்சியமாக’ உருவெடுத்திருக்கிறது” - அ.பாபநாசம்.
நெல்லை,
13 - 4 - 1964.
_________________________________________________________________________________

திரு.அ.பாபநாசம் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளின்
நாடகக்கலை தோற்றம், வளர்ச்சியை இந்நூலில் அடக்கியுள்ளார்.
அதில் நமது இந்தியாவை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.
_________________________________________________________________________________

இந்திய நாடகம் :
இந்திய நாடகம் ஆரம்ப காலம் பிரம்மனால் உண்டாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.
சொர்க்கத்தின் சிற்பியைக்கொண்டு பிரம்மன் இந்தியாவில் முதல் நாடக அரங்கொன்றை நிறுவினான் என கூறப்படுகிறது.
அதன் காரணமாக பரதர் தனது நாடகங்களை அரங்கேற்ற முடிந்திருக்கிறது.
பரதரை இந்திய நாடகத்தின் ஸ்தாபகர் என்று கூடச்சொல்லலாம்.
பாவத்துடன் கலந்த நடனம் ஆண்டவன் முன்னால் இந்திர சபையில் ஆடிக்காட்டப்பட்டது.
சிவபெருமான் நடனத்தில் இரண்டு புது நடனங்களை உண்டாக்கினார்.

நாடக வசனங்களை ரிக் வேதத்திலேயே காணலாம்.
கிரேக்கர்களுக்கு முன்பே இந்தியாவில் சிறந்த நாடகங்கள் இருந்திருக்க வேண்டும்.
இந்திய நாடகத்தின் உச்சஸ்தாயியாக கி.பி.4லிருந்து கி.பி.9ம் நூற்றாண்டு வரை கூறலாம்.

புராணக்கதைகளை அடிப்படையாக கொண்ட நாடகங்களே
இந்தியாவில் அதிகம்.
இந்திய நாடகத்தில், கதை அமைப்பில் குழப்பம் இல்லாமை,
மூவகை ஒற்றுமை, கவிதையும், வசனமும், மவுன நாடகமும், நகைச்சுவையும் மற்றும் பல் வகை சுவைகளும் கலந்திருந்தது.

வடமொழியில் 500 நாடகங்களும், தமிழில் 100 நாடகங்களும் உள்ளன.
மற்ற பிராந்திய மொழிகளிலும் உள்ளன.
_________________________________________________________________________________

காப்பிய காலம் - கி.மு.500 - கி.பி.320. [ The Epic Period ] :
இந்த காலத்தில்தான் இராமாயணமும், மகாபாரதமும் தோன்றியது.
இந்த இரண்டு இதிகாசங்களும் இந்திய நாடக ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் ஊற்றாக இருந்தது.
இந்தியாவின் முதல் நாடக ஆசிரியர் என்றழைக்கப்பட்ட  ‘அஸ்வகோஷா’ இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார்.
இவரது நாடகங்களில் மூன்று நாடகங்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது.
அதில் ஒன்று ‘ஷாரிபுத்ர பிரகனா’.
9 அங்கங்களை கொண்ட இந்நாடகம் ஷாரிபுத்ராவையும்,
அவனது நண்பன் மவுட்கலியானாவைப்பற்றியும்,
அவர்கள் புத்த மதத்திற்கு மாறியதைப்பற்றியும் கூறுகிறது.

இவ்வாறு இலக்கியகாலம் கி.பி.320- 800, கி.பி.800 -1000, கி.பி. 1000 -1300,
நவீன காலம் என எல்லா கால கட்டங்களிலும் உள்ள
இந்திய நாடக வளர்ச்சியை தொட்டுக்காட்டி உள்ளது இந்நூல்.

[ இந்நூலில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாட்டின் நாடக வளர்ச்சியை தனிப்பதிவாக தருகிறேன். ]

நடிப்பை பற்றி இந்நூலில் குறிப்பிட்டதை அப்படியே தருகிறேன்.
_________________________________________________________________________________

நடிப்பு : நடிப்பு ஒரு கலையாகும்.
வியாபாரமல்ல.
கலையாக இருப்பதால் நடிப்பை கற்பதற்கு நிறைய படிப்பும்,
உடல் உழைப்பும் தேவையாக இருக்கிறது.
ஹூயூபர்ட் [ Hubert ] என்பவர் ஒரு நல்ல நடிகனுக்கு தேவையானவை என கீழ்க்கண்டவைகளை குறிப்பிடுகிறார்.
_________________________________________________________________________________

1. நல்ல உடலமைப்பு.


2. பழுதில்லா ஜீரணத்தன்மை.


3. கவரக்கூடிய முகம்.


4. மனதை இழுக்கக்கூடிய குரல்.5. பாசாங்குத்தன்மை.


6. அழுத்தம் திருத்தமான பேச்சு.


7.சரித்திர ஞானம்.


8. நல்ல படிப்பு.


9. ஆடை விஷயத்தை பற்றிய ஞானம்.


10. ஆடையில் சிக்கன ஞானம்.
[ இந்த விஷயத்தில் நமது நடிகைகள் படு சிக்கனம்.]

11.வியாபார தந்திரம்.12. தளர்ச்சியில்லாத உழைப்பு.


13. நடுங்காத குறிக்கோள்.


14. விமர்சனத்தை, ஏச்சிலிருந்து பிரித்தெடுக்கும் தன்மை.


15. விளம்பர ஞானம்.


16. சந்தர்ப்பத்தை நழுவ விடாத தன்மை.


17. ஞாபக சக்தி.


18. அதிர்ஷ்டம்.

_________________________________________________________________________________

ஒரு நடிகனுக்கு மேலும் வேண்டியவை கீழ்க்கண்ட குணங்களாகும்...

1. கூர்ந்து நோக்கும் தன்மை, காப்பியடிக்கும் தன்மை :
நடிப்பு என்பது மனித நடத்தையை காப்பியடிப்பதாகும்.
அதற்காக நடிகன் தன்னுள்ளே கூர்ந்து நோக்கும் தன்மையை எப்போதும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


[ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திருவருட்செல்வர் படத்தில் திருஞான சம்பந்தராக நடிக்கும் போது காஞ்சி பெரியவாளை பிரதிபலித்தார்.]

ரயிலில், பஸ்ஸில், ஆபிசில், வீட்டில், கூட்டத்தில், கிளப்பில் இருக்கும் போது மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்,
எப்படி கொனஷ்டைகள் செய்கிறார்கள் என்பதை ஒரு நடிகன் கூர்ந்து பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

கூர்ந்து நோக்கும் தன்மை குணச்சித்திர நடிப்புக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.
உதாரணமாக 25, 55, 85 என பல்வேறு வயது மனிதர்களின்
நடக்கும் தன்மையையும், செய்கைகளையும் கூர்ந்து கவனிப்பது நல்லதாகும்.

முதலில் நடிகனொருவன் தான் நடிக்கும் பாத்திரத்தின் தன்மையை
தன் மனதில் படம் பிடித்து பார்க்க வேண்டும்.
அவன் எப்படி நடப்பான் ?
எப்படி பேசுவான் ?
அவனுக்கு எதெது பிடிக்கும் ?
என்பதையெல்லாம் மனதில் படம் பிடித்து பார்த்துக்கொண்ட பிறகு
நடிக்க வேண்டும்.

2 . நடையும் செய்கைகளும் [ Movement and gesture ] 
ஒப்பனை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்,
நடிப்போடு ஒப்பிடுகையில் ஒரு நடிகனுக்கு அது இரண்டாம் பட்சமே.
நடிகனின் நடைதான் மிக முக்கியம்.
சைகைகள் விஷயத்தில் மூன்று விதிகள் உள்ளன.
1. சைகை ஏதாவது அர்த்தத்தை அளிப்பதாக இருந்தால் மட்டுமே அதைச்செய்ய வேண்டும்.
2. செய்யும் சைகையை ஒழுங்காக செய்ய வேண்டும்.
3. அடுத்த பாத்திரங்கள் பேசும் போது சும்மா இருக்க வேண்டும்.
_________________________________________________________________________________

நண்பர்களே...
திரு.பாபநாசம் குறிப்பிடும் சில விதிகள்,
இன்றைய காலத்திற்கு பொருந்தி போகாமல் இருக்கலாம்.
ஏனென்றால், இன்று சினிமாவும், நாடகமும் எத்தனையோ மடங்கு
உயர்ந்த தளத்தில் இருக்கிறது.

சினிமாவுக்கு தேவையான ‘ஸ்க்ரீன் ஆக்டிங்’ பற்றி ஹேராம் பதிவில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
‘ஸ்க்ரீன் ஆக்டிங்’ பற்றி குறிப்பிட்ட ஹேராம் பதிவிற்கு செல்ல...
_________________________________________________________________________________

நாடக கலைக்களஞ்சியம் உருவாக்க 17 ஆண்டுகள் உழைத்த திரு.பாபநாசத்திற்கு இப்பதிவை காணிக்கையாக்குகிறேன்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

Jun 18, 2013

ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் அஸ்திவாரம்.


நண்பர்களே...
இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமை ரித்விக் கட்டக்.
திரைப்படம், நாடகம், சிறுகதைகள் என பன்முகம் கொண்டவர்.
உலகம் முழுக்க,
திரைப்படக்கலையை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில்,
அவரது திரைப்படங்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

ரித்விக் கட்டக் படைப்பில் மாஸ்டர் பீஸ் ‘மேக தக்க தாரா’.
இப்படத்தின் பாதிப்பில்தான்‘அவள் ஒரு தொடர் கதையை’
கே.பாலச்சந்தர் உருவாக்கினார்.


தெலுங்கிலும் இக்கதையை படமாக்கி வெற்றி கண்டார்.
அவள் ஒரு தொடர் கதை \ 1974 \ தமிழ் \ இயக்கம் : கே.பாலச்சந்தர்.
அந்துலேனி கதா \ 1974 \ தெலுங்கு \ இயக்கம் : கே.பாலச்சந்தர்.

அவள் ஒரு தொடர் கதையை பின்னர் வங்காளம், ஹிந்தி, கன்னடம் மொழிகளில் பிற இயக்குனர்கள் படைத்து வெற்றி கண்டார்கள்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மூலமான மேக தக்க தாராவையும்,
ரித்விக் கட்டக்கையும் யாருமே கண்டு கொள்ளவில்லை.
Kabita \ 1977 \ Bengali \ Directed by : Bharat Shamsher.


கமல், தமிழில்  அவள் ஒரு தொடர் கதையில் ஏற்ற கதாபாத்திரத்தை... தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் ஏற்று சிறப்பித்தார்.
[இந்தியில் மட்டும் செய்யவில்லை.]

ரித்விக் கட்டக்கின் படங்கள்,
அவரது வங்காள நாட்டிலேயே புறக்கணிக்கப்பட்டது.
சத்யஜித்ரே கொண்டாடப்பட்டார்.
ரித்விக் கட்டக் புறக்கணிக்கப்பட்டார்.


ரித்விக் கட்டக்கின் மூன்று படங்களை
ஒரே நாளில் திரையிட்டது...‘கோணங்கள் பிலிம் சொசைட்டி’.
அந்நாள்  ‘கோவை சினிமா ரசிகர்களுக்கு’ பொன்னாள்.

[ 1 ] மேக தக்க தாரா \ 1960 \ வங்காளம் \ இயக்கம் : ரித்விக் கட்டக்.


[ 2 ] கோமல் கந்தார் \ 1961 \ வங்காளம் \ இயக்கம் : ரித்விக் கட்டக்.


[ 3 ] சுபர்ண ரேகா \ 1962 \ வங்காளம் \ இயக்கம் : ரித்விக் கட்டக்.


மூன்று படங்களும் அவரது ‘டிரையாலஜி’.
வங்காளப்பிரிவினையை மையமாக கொண்டது.
கிழக்கு வங்காளத்தில் பிறந்து, பிரிவினையின் போது...
மேற்கு வங்காளத்தில் நடப்பட்டவர் ரித்விக் கட்டக்.
எனவே அவரது படங்களில் பிரிவினையின் சோகம் அடிநாதமாக இருக்கும்.

இந்தியாவின் முதல் நியோ ரியலிசப்படமான ‘சின்னமோல்’ திரைப்படத்தில் அதை உருவாக்கிய நிமோய் கோஷுக்கு உதவியாளராக பணி புரிந்தார்.
அவரிடம் திரைப்படக்கலையை கற்றார்.
குருவைப்போலவே ‘ரஷ்ய படைப்பாளிகளின்’ படைப்புகளை ஆராதித்தார்.
ரித்விக் கட்டக் இயக்கி எட்டு படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது.

ரித்விக் கட்டக் பூனா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் துணை முதல்வராக பணியாற்றினார்.
அவர் உருவாக்கிய சிஷ்யர்கள்தான் இந்திய சினிமாவின் புகழை உலகறியச்செய்து வருகிறார்கள்.
அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள்,
அடூர் கோபாலகிருஷ்ணன், மீரா நாயர், மணி கவுல், ஜான் ஆப்ரஹாம்,
குமார் சஹானி, சயீத் அக்தார் மிர்ஸா.

அவரது முக்கிய சீடரான திரு.ஹரிகரன் அவர்கள் தனது குருவை பற்றி
கூறியதை பார்ப்போம்.
[ திரு.ஹரிகரன் அவர்கள் ‘ஏழாவது மனிதன்’ என்ற சிறந்த படத்தை உருவாக்கியவர்.
தற்போது பிரசாத் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் தலைவராக இருக்கிறார்.

“ இந்திய சினிமாவின் மிகவும் சக்தி வாய்ந்த கவிஞன் என்றால்,
அது ‘ரித்விக் கட்டக்’ காகத்தான் இருக்க முடியும்.
அதே நேரத்தில் தனி நபர் என்ற வகையில் இந்தியக்கலைஞர்களிலேயே மிகவும் புதிராக, புரிந்து கொள்ள முடியாதவருமாக விளங்கியவரும்
ரித்விக் கட்டக்தான்.

சிலரின் பார்வையில், ரித்விக் கட்டக் ஒரு வினோத மேதை.
ஆனால் அவர்கள் பார்க்கத்தவறுவது,
கீழ்மட்ட ஏழை மக்களின் மீது அவருக்கிருந்த அன்பும், அக்கறையும்,
ஆழமான நேசமுமாகும்.

இன்னும் சிலரின் பார்வையில், அவர் சோகம் மற்றும் நாடகத்தின் வல்லுனன்.
ஆனால், இவர்கள் தெரிந்து கொள்ளாதது...
அவரது ஒவ்வொரு ‘ஷாட்டின்’ பின்னால் உள்ள அன்னியோன்யமும், ஆழமான ஒழுங்கு முறையும் ஆகும்.

மற்றும் சிலருக்கோ, அவர் ஒரு கலைப்பட இயக்குனர்.
ஆனால் அவர்கள் அறியாதது,
தன்னுடைய படங்கள் பற்றிய சாதாரண மனிதனின் கருத்தின் மீது அவர் கொண்டிருந்த அக்கறை.

அவர் எப்போதுமே, தன் படங்களைப்பற்றி பேசுவது...
தன் படங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
அவரின் ‘மேக தக்க தாரா’ அல்லது ‘சுபர்ண ரேகா’ படத்தை இன்றும் ஒருவர் பத்தாவது முறை பார்க்கும் போதும் கண்கள் குளமாகும்.
அப்போது  ‘படங்களை பற்றி படங்கள்தான் பேச வேண்டும்’ 
என்ற அவரின் கருத்து நமக்கு புரிகிறது.

அதிர்ஷ்டவசமாக அவரின் மறைவுக்கு பின்பாவது இப்போது அவரது படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.
உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்கள் எத்தகைய ஒரு இந்திய சினிமா மேதையை அவரது சொந்த வாழ்நாளின் போது இழந்து விட்டோம் என்பதை உணர்கின்றனர்.
அவர் இருந்திருந்தால் இந்திய சினிமாவுக்கு இன்னும் செழுமை ஊட்டி இருப்பாரோ ?
நிச்சயம் செய்திருப்பார்”. - கே.ஹரிகரன் 
30 - 1 - 1990
சென்னை.

நூல் : ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகை \
முதல் பதிப்பு \ 1990.
வெளியீடு : சென்னை பிலிம் சொசைட்டி.

ரிதவிக் கட்டக் இயக்கிய படங்கள்,மற்றும் மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை அணுகவும்.

ரித்விக் கட்டக் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயா செல்க...

ரித்விக் கட்டக்கின் படைப்புகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லவும்...

ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் அஸ்திவாரமாக இருந்து விட்டார்.
அஸ்திவாரங்கள் தெரிவதில்லை.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 17, 2013

தீயா வேலை செய்திருக்கே...சுந்தர்.


நண்பர்களே...
நேற்று மாலை மெல்லிய மழையில்  'கோவை' நனைந்து கொண்டிருந்தது.
ஆனால் அர்ச்சனா தியேட்டர்  ‘வெள்ளத்தில்’ முழுகி விட்டது.
மொத்த ரசிகர்களும் ஆனந்தமாக நீச்சலடித்துக்கொண்டிருந்தார்கள்.
படம் முடிந்தும் வெளியேற மனசில்லாமல்,
கரையேறியது கண்கொள்ளா காட்சி.
வெள்ளத்தை உருவாக்க தீயாக வேலை செய்திருக்கிறார்கள் சுந்தர்.சி. குழுவினர்.


நகைச்சுவை படத்தை உருவாக்குவதுதான் மிக மிக கஷ்டமான காரியம்.
இந்த கஷ்டமான காரியத்தை இஷ்டப்பட்டு செய்து வெற்றி காண்பவர் சுந்தர்.சி.
இப்படத்தில் அவரும் அவரது குழுவினரும் நிச்சயம் உழைத்திருக்கின்றனர்.
‘கொரியன்’ படத்திலிருந்து காப்பியடித்து விட்டார் என்று காறி உமிழ்வதற்கு ஒரு கோஷ்டி இந்நேரம் தீயாக வேலை செய்து கொண்டிருக்கும்.
‘போங்கடா நொண்ணைகளா’ என அதை துடைத்தெறிந்து விட்டு இப்படம் வெற்றி நடை போடும்.
சந்தேகமே வேண்டாம்.


சுந்தர் .சி   ‘டாண்டிலைஸ்’ [ Tantalize ] செய்து படமெடுப்பதில் கில்லாடி.
டாண்டிலைஸ் = நம்பிக்கையூட்டி...அதை அடைய விடாது ஏங்க வைப்பது.
 ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில்,
தொடையழகி ரம்பாவை.... மர்லின் மன்றோவின் பேவரைட் ஷாட்டில் காட்டியிருந்தார்.

ஃபேனை அடியில் வைத்து, பாவாடையை பறக்க விட்ட போது...
மொத்த ரசிகர்களும்  தரையில் விழுந்து,
ரம்பாவை ‘அண்ணாந்து’ பார்த்தது வரலாறு.
இந்தப்படத்தில் ஹன்சிகாவுக்கு ‘சிக்கனமாக’ ஒரு கால் சட்டை தைத்து  உலவ விட்டிருக்கிறார்.
மொத்த தியேட்டரே சரிந்து விட்டது.


ஜப்பான் லொக்கேஷனில் பாடல் காட்சிகள்... ‘பிரஷ்’ கிளுகிளுப்பு.
வெள்ளிப்பனிமலை பின்னணியில்,
‘கருப்பு’ காஸ்ட்யூமில் ஹன்சிகா வரும் போது...
சத்தியமாக ‘அகிராகுரோசுவா,ஓசு’ எல்லாம் மறந்து போய் விட்டது.


சந்தானம் படம் முழுக்க வந்து கலாய்த்து இருக்கிறார்.
அவரது சம்பளம் இன்னும் எகிறும்.

விலைவாசி, கிரிக்கெட் சூதாட்டம், எம்.பி சீட்...குதிரை பேரங்கள்,
இவற்றை மறக்கடிக்க ஒரு படத்திற்கு அசாத்திய திறமை இருக்க வேண்டும்.
இப்படத்தில் இருக்கிறது.
அதற்கான உழைப்பு ‘சுந்தர்.சியிடம் தீயாக இருக்கிறது.
அவரது குரு ‘இயக்குனர் மணிவண்ணன்’ ஆசிர்வாதமும் இருக்கும்.
படம் வெற்றியடையும்.
வாழ்த்துக்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.