Jan 25, 2012

B S N L செய்யும் சதி

நண்பர்களே...நான் இணையத்தொடர்பு பி.எஸ்.என்.எல் வழங்கி வரும் சேவையை பயன்படுத்தி வருகிறேன்.
கடந்த ஒரு வாரமாக பிளாக்ஸ்பாட்டை தொடர்பு கொள்ள முடியாமல் சதி செய்து வருகிறது.
வேர்ட் பிரஸ், .காம் பதிவுகள் படிக்க முடிகிறது.
பிளாக்ஸ்பாட் மட்டும்தான் தகறாறு.
எனவே நண்பர்கள் யாருடைய பதிவையும் படிக்க முடிவதில்.
என்னுடைய டாஷ்போர்டு மட்டும் ஒப்பன் ஆகிறது.
வியூ பிளாக் ஓப்பன் ஆக மாட்டேன் என அடம் பிடிக்கிறது.
எனவே யாருடைய கமெண்டுக்கும் பதில் போட முடிவதில்லை.
மன்னிக்கவும்.

கடந்த மூன்று மாதமாக நான் பட்ட அவஸ்தைகள் ஒவ்வொன்றாக விலகி வருகின்றன.
நீதிமன்றத்தில் சிறு அபராதத்தொகை மட்டுமே செலுத்தி வழக்கிலிருந்து விடுதலையாகி விட்டேன்.
கடவுள் அனுக்கிரகமும்,நண்பர்கள் ஆசியுமே இவ்வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு வெளியேறி விட்டேன்.
பதிவுலக நண்பர்கள் காட்டிய பரிவு என்னை நெகிழ வைத்தது.
அனைவருக்கும் நன்றி.

திருப்பூர் புத்தகக்கண்காட்சி இன்றிலிருந்து தொடங்குகிறது.
பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறுவதால் ...ஆறாம் தேதி பதிவிடுகிறேன்.
அது வரை நன்றி கலந்த வணக்கங்கள்.

எனது இணையம் சரியாக வேலை செய்யாததற்க்கு காரணம்...
 இந்திரா அவர்கள்.... எனது பிளாக்கிற்க்கு சூனியம் வைத்து விட்டதாக நினைக்கவில்லை.

Jan 22, 2012

The Kid With A Bike-2011 [பிரெஞ்ச்] ஒடிப்போன அப்பாவை தேடிப்போன மகன்


File:Le-gamin-au-velo.png

2012ல் மிகச்சிறப்பான படத்துடன் துவங்க வேண்டும் எனது வேட்டைக்கு சரியான தீனியாக இப்படம் கிடைத்து விட்டது.
என் ரத்தத்தில் ஹீமோகுளொபினோடு இப்படம் கலந்து விட்டது.
ஒரு கொண்டாட்ட மன நிலையில் இப்பதிவை எழுதுகிறேன்.
இப்படத்தை எழுதி இயக்கி....
கேன்ஸ் பிலிம் பெஸ்டிவெலில் முதன்முதலாக திரையிட்டு கிராண்ட் பிரிக்ஸ் என்ற உயரிய விருதையும் பெற்று விட்டார்கள் இரட்டை சகோதரர்களான பெல்ஜியம் நாட்டு சகோதரர்கள் Jean Pierre & Luc Dardenne11 வயது சிரில் என்ற சிறுவனது பார்வையிலேயே படம் நகர்கிறது.
அப்பா பையனை சிறுவர்கள் இல்லத்தில் ஒப்படைத்து விட்டு ஒடிப்போய் விடுகிறான்.
சிரில் தனது தந்தை பற்றிய துப்பு கிடைக்காதா?என ஏங்கி அலைகிறான்.
ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது.
ஆனால் தனது தந்தை விற்றுச்சென்ற சைக்கிள் கிடைக்கிறது.....
சமந்தா என்ற பியூட்டி பார்லர் பெண்மணி மூலமாக...
சிரிலுக்கு அது சைக்கிள் அல்ல...தந்தையின் அன்பின் வடிவம்.

வார கடைசி நாட்களில் சிரிலோடு வசிக்க விரும்புகிறாள் சமந்தா என்ற அன்புக்கரசி.
சமந்தா சிரில் தந்தையின் இருப்பிடம் அறிந்து அவனை அழைத்து செல்கிறாள்.
அவனது தந்தை அவனை ஏற்க மறுக்கிறான்.
தனது பொருளாதார சூழல் காரணமாகத்தான் அவனை சிறுவர் இல்லத்தில் விட்டு வந்ததாக கூறுகிறான்.
ஏமாற்றத்தோடு திரும்பும் சிரில் மீது அன்பை மழையென பொழிகிறாள் சமந்தா.
அதில் நனைய மறுக்கிறான் சிரில்.
அந்த வயதுக்கே உரிய சாகச பண்பின் ஆக்கிரமிப்பில்...
 கயவன் ஒருவன் நட்பில் கரைகிறான்.

கூடா நட்பின் கேடாய் ஒரு திருட்டில் முக்கிய பாத்திரமேற்கிறான்.
பேஸ்பால் மட்டையால் நியூஸ் ஏஜென்டையும் அவரது மகனையும் அடித்து வீழ்த்தி விட்டு திருடிய பணத்தை கயவனிடம் ஒப்பக்கிறான் சிரில்.
சிறிய பங்கை சிரிலுக்கு கொடுத்து விட்டு கம்பி நீட்டி விடுகிறான் கூடாநட்பன்.

திருடிய பணத்தை தந்தையிடம் கொடுக்கிறான்.
தந்தை திட்டி பணத்தை குப்பை போல் வீசி எறிகிறான்.
இந்த இடத்தில் பள்ளத்தாக்கில் இருந்த தந்தை கதாபாத்திரம்...
 இமயமலையாக விஸ்வரூபமெடுப்பதை படம் பார்த்தால்தான் உணர முடியும்.

திருடிய பணத்தை அநாதையாக விட்டு விட்டு மனம் திருந்தி சமந்தாவிடம் அன்புக்கரம் நீட்டுகிறான்.
அவள் போலிசிடம் ஒப்படைக்கிறாள்.
பாதிக்கப்பட்டவரிடம் நஷ்ட ஈடு தருவதாக காம்ப்ரமைஸ் பேசி வழக்கிலிருந்து விடுவிக்கிறாள்.
அவரிடம் மன்னிப்பு கேட்கிறான் சிரில்.
அவர் மன்னிக்கிறார்....அவரது மகன் மன்னிக்க தயாரில்லை.

இந்தக்காட்சியில் பிரெஞ்ச் லா சிஸ்டம் என்னை வியக்க வைத்தது.
நமது ஊரில் ‘சிறுவர் சீர்திருத்தப்பள்ளி’ என்ற பெயரில் விளங்கும்...
 குற்றவாளிகளை உற்ப்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தள்ளி....
 ஆட்டோ சங்கராக....வீரமணியாக உருமாற்றி விடுவார்கள்.சமந்தா தனக்கு மகன் கிடைத்த சந்தோஷத்தை நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாட திட்டம் போடுகிறாள்.
விருந்துக்கு தேவையான பொருளை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கி வரும் வழியில்... சிரில் தாக்கிய தந்தையும், மகனும் எதிரில் வருகிறார்கள்.
மகன் கொலை வெறியோடு சிரிலை துரத்துகிறான்.
தப்பிக்க மரத்தில் ஏறுகிறான் சிரில்.
அவனை கல்லால் குறி பார்த்து எறிந்து வீழ்த்துகிறான்.
கீழே விழுந்த சிரில் அசைவற்று கிடக்கிறான்.
சிரில் பிணமாகி விட்டதை உணர்ந்து தனது மகன் வீசி எறிந்த ரத்தக்கறை படிந்த கல்லை வீசி எறிந்து தடயத்தை மறைக்கிறார்.
கொலையை விபத்தாக சித்தரிக்கும் அத்தனை காரியத்தையும் செய்கிறார்.
ஆனால் சிரில் அடைந்தது மரணமல்ல...மயக்கம்.....
மயக்கத்திலிருந்து எழுந்து இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு போவான்...பாருங்கள்...
இந்த இடம்தான் இப்படத்தை உலக சினிமா உயரத்துக்கு தூக்கிய இடம்.
இந்த ஒரு காட்சி வைத்து ஆயிரம் அர்த்தங்கள்...தத்துவங்கள் நீங்கள் எழுதலாம்.

படத்தில் பின்னணி இசை மூன்று இடங்களில் பட்டுமே ஒலிக்கிறது.
அந்த இடங்களில் இசை எரிமலையாக வெடித்து கிளம்புவதை அனுபவித்து உணருங்கள்.

இப்படத்தை குடும்பத்தோடு பாருங்கள்.குழந்தைகளோடு பாருங்கள்.

இப்படத்தின் உரிமையை வாங்கி தமிழில் சப் டைட்டில் போட்டு ஒரிஜினல் டிவிடி விற்க ஆசைப்படுகிறேன்.
பிரான்சிலிருக்கும் நண்பர்கள் உதவுங்கள்.
சென்னை புத்தகக்கண்காட்சியில் விற்ற பணம்....  கரைவதற்க்குள் விரைந்து உதவுங்கள்.

மிஸ்டர் மிஷ்கின்....
இப்படத்தையும் காப்பியடித்து நந்தலாலா 2 எடுக்க முயற்சிக்க வேண்டாம்.
தமிழ்நாடெங்கிலும் இது வரை 2000 டிவிடி விற்கப்பட்டுவிட்டது.

Jan 21, 2012

மிஷ்கினுக்கு என் மேல் வந்த கோபம்சென்னை புத்தகக்கண்காட்சியில் இடம் பெற்றது பாக்கியமாகக்கருதினேன் ஜனவரி 5ம்தேதி வரை.
ஜனவரி 17ம்தேதி கண்காட்சி முடியும் போது அந்த எண்ணம் கரைந்து விட்டது.
இந்த கண்காட்சி அனுபவம் ஆயுசுக்கும் போதும்.

என் ஸ்டாலுக்கு வந்து என்னை கவரவப்படுத்திய பிரபல பதிவர்கள் ஜாக்கி சேகர்,பட்டர்பிளை சூர்யா,ரசனை சுந்தர்ஜீ,கொழந்த சரவணன்... அனைவருக்கும் நன்றி.
என்னையும் என் ஸ்டாலையும் படம் பிடித்து ஸ்பெஷல் பதிவு போட்டு நாறடித்த பதிவர்களுக்கு மிக்க நன்றி.
நாறடித்த நல்லவர்களுக்கு ஒரு வார்த்தை...
இயேசுபிரான் ஒரு விலைமாதை கல்லெறிந்தவர்களிடம் கூறுவாரே...அந்த பைபிள் வசனம்தான் எனது பதில்.

மிஷன் இம்பாசிபிள்4 போன்ற புதிய மசாலா படங்களின் டிவிடி விற்றிருந்தால் மேலும் ஒரு லட்சம் லாபம் கிடைத்திருக்கும்.
மாறாக பை சைக்கிள் தீவ்ஸ்,ரோஷமான்,பதேர் பஞ்சலி விற்று கிடைத்த 50000 ரூபாய் லாபம்... கோடி ரூபாயாக இனிக்கிறது.
ரெட் பலூனையும்,விண்ட் மைக்ரேசனையும் சொல்லி சொல்லி நூற்றுக்கணக்கான டிவிடி விற்றேன்.
அவற்றை குடும்பத்தோடு பார்த்தவ்ர்கள் என்னை பாராட்டி மகிழ்வதுதான் எனக்கு கிடைத்த வரம்.

இந்த கண்காட்சியில் ஒரிஜினல் காப்பி ரைட் டிவிடியும் வைத்திருந்தேன்.
599 ரூபாய் கொடுத்து அவதார் வாங்கியது ஒரே ஒருவர்தான்.
50 ரூபாய்க்கு அவதார் வாங்கியவர்கள் 60 பேர்.
599 ரூபாய் கொடுத்து சில்ட்ரன் ஆப் ஹெவன் ஒருவர் கூட வாங்கவில்லை.
50 ரூபாய் கொடுத்து அதே படத்தை 120 பேர் சந்தோஷமாக வாங்கிச்சென்றுள்ளனர்.

மெலினா,ஹோட்டல் ருவாண்டா,மோட்டார் சைக்கிள் டைரி,மீராநாயரின் மிசிசிபி மசாலா,தீபா மேத்தாவின் ஃபயர்,சத்யஜித்ரேவின் சில படங்கள்
99 ரூபாய்க்கு  ஒரிஜினல் டிவிடி வந்து விட்டது.
 அதைத்தான் திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் விற்கப்போகிறேன்.
இந்தப்படங்கள் 50 ரூபாய்க்கு வந்து விட்டால் இன்னும் அதிகம் விற்க்கும்.
இந்தவிலைக்கு இந்தக்கம்பெனி இறங்கி வந்து விற்றதுக்கு அடியேனும் ஒரு காரணம்.
அந்தக்கம்பெனியிடம் நான் கொடுத்த பிராமிஸ் இதுதான்.
 “50 ரூபாய்க்கு உலக சினிமா விற்றால் ஒவ்வொரு டைட்டிலுக்கும் ஆயிரம் டிவிடி நானே வாங்கி விற்க்கிறேன்”.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த விலைக்கு விற்க கீழே இறங்கி சத்தியமாக வராது.
அவர்கள் 599 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் இந்திய மக்களை
கொள்ளையடிக்கத்தான் விரும்புவர்.
ஒரிஜினல் டிவிடி என்ற பெயரில் கோடிக்கணக்கான இந்திய ரூபாய்கள் அமெரிக்காவுக்கு போகாமல் தடுப்பது என்னைப்போன்ற வியாபாரிகளே.
நியாயமாக பார்த்தால்.... அந்நிய செலாவணி சேமித்து கொடுக்கும் எங்களை ரிசர்வ் வங்கி மனசார பாராட்டவேண்டும்.

எனது ஸ்டாலுக்கு வந்து வாங்கி சந்தோஷப்பட்டட விஐபிக்கள் பலர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,இயக்குனர் விக்கிரமன்,
இயக்குனர் ரமணா,டாக்டர் ருத்ரன் ஆகியோர் என்னை அங்கீகரித்த நல் உள்ளங்கள்.
இயக்குனர் ரமணா தொண்டையில் புற்று நோய் வந்து அறுவை சிகிச்சை செய்து பேச முடியாமல் அவஸ்தைப்படுகிறார்.
அவர் மீண்டும் தனது குரலைப்பெற என்னோடு நீங்களும் பிரார்த்தியுங்கள்.

இயக்குனர் மிஷ்கின் ஸ்டாலுக்குள் வந்த உடனே எழுந்து நின்று வரவேற்றேன்.
புத்தகக்கண்காட்சியில் பைரேட்டட் டிவிடி நீ எப்படி விற்க்கலாம்?என கோபப்பட்டு உடனே வெளியேறி விட்டான்.
இதை பார்த்து கொண்டிருந்த மற்றோரு கஸ்டமர்...
 “ இந்த வார்த்தையை இவன் சொல்லக்கூடாது.
கிகுஜிரோவை திருட்டுத்தனமாக காப்பியடித்த இவன் உங்கள் மேல் கோவப்பட்டது நியாயமே இல்லை”.என என்னை சாமாதானப்படுத்தினார்.
என் ஸ்டாலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிகுஜிரோ டிவிடியை பார்த்ததும் இதுதான் நந்தலாலா என்கின்றனர்.
ஐ யாம் சாமை பார்த்து இதுதான் தெய்வத்திருமகள் என்கின்றனர்.
இப்படி நாடறிந்த படங்களை காப்பியடிப்பதற்க்கு பதில் நல்ல தமிழ்க்கதைகளை வாங்கி படமாக்குங்கள்.
நாடே போற்றும்.

சாகித்ய அகடமி பரிசு பெற்ற காவல் கோட்டம் நாவலின் ஒரு பகுதியை.... அரவான் என்ற திரைப்படமாக இயக்குனர் வசந்த பாலன் உருவாக்கி உள்ளார் என்ற நல்ல செய்தியை உங்களிடம் பகிர்வதுதான் ...
2012ல் ஆகச்சிறந்த ச்ந்தோஷம்.