Dec 30, 2011

நாளை நமதே!


நண்பர்களே! வணக்கம்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2012ல் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்...
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற கவிஞரின் வார்த்தைகளில் வாழ்த்தி புதிய ஆண்டில் புதிய உலக சினிமாவோடு சந்திக்கிறேன்.நன்றி.வணக்கம். 

Dec 16, 2011

மயக்கமென்ன...செல்வராகவனின் Beautiful mind


கடந்த ஒரு மாதமாக உலக சினிமா எதுவுமே பார்க்கவில்லை.
பார்க்கும் மன நிலையிலும் இல்லை.
கடந்த ஒரு மாத நிகழ்வை இரண்டு உலக சினிமா எடுத்து விடுவேன் என்னிடம் பணம் இருந்தால்.
இப்போது கூட நெருக்கடியில் இருக்கிறேன்.
சொந்த வீட்டில் வசிக்கும் இரண்டு பேர் எனக்கு ஜாமீன் தர முன் வர வேண்டும்.
உயர் நீதி மன்ற உத்தரவு அப்படி.
இப்போதுதான் தெரிகிறது எனக்கு உதவ முன் வருபவர்கள் யாருக்குமே சொந்த வீடு கிடையாது.
இருப்பவர்களுக்கு மனம் கிடையாது.
எனக்கு வாய்த்த நீதிபதி மிகவும் நேர்மையானவர்.
போலியான நபர்களை ஜாமீந்தாரர்களாக காட்டினால் என்னை உள்ளே தள்ளி விடுவார்.
இந்த நெருக்கடியில் என்னை உயிரோடு வைத்திருக்கும் நல்லவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

முதலில்திரு.ரகுநாதன் அவர்கள்.
எனது வாடிக்கையாளர்.
எனது பதிவை உடனே படிப்பவர்.
கூப்பிட்ட குரலுக்கு ஒடிவராதவர்கள் மத்தியில் கூப்பிடாமல் ஒடி வந்தவர்.
இவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் உலகசினிமாவால் வந்தது.
உலக சினிமாவின் அடிமை என்றே இவரைச்சொல்லலாம்.
இவருக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இன்னும் நல்ல உலக சினிமாவை
 தேடித்தேடி கொடுப்பதாகத்தான் இருக்க முடியும்.
நன்றி ரகு.

இரண்டாவது.... ரகுவின் நண்பர் கோவை ஆனந்தாஸ் ஹோட்டலில் பங்குதாரர்.
என்னை ஒட ஒட விரட்டிய போலிசை தடுத்து நிறுத்திய கண்ண பரமாத்மா.
இவரை ஒரே ஒரு தடவைதான் எனது கடையில் ரகுவோடு பார்த்திருக்கிறேன்.
ஒரு மாதமாக மூடிக்கிடந்த எனது கடையை திறந்த அப்பர் பெருமானாக இவரை பார்க்கிறேன்.
இவரது முகம் நினைவில் இல்லை.
ஒரு தடவைதானே பார்த்திருக்கிறேன்!
அட... அவரது பெயர் கூட எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறதே!
சமீப காலமாக மூளை வேலை நிறுத்தம் செய்து வருவதை நானறிவேன்.
பிளாக் படத்தில் வரும் அமிதாப்....தன்மாந்த்ரா படத்தில் வரும் மோகன்லால் போல் நான் மாறும் சாத்தியக்கூறுகள் என்னிடம் தென்படுவதை அவதானித்து வருகிறேன்.
அவரிடமே பெயரைக்கேட்டு நாளை தெரிவிக்கிறேன்.
அது வரை அவர் கோவை ஆனந்தாஸ் ஹோட்டல் பங்குதாரராகவே இருக்கட்டும்.
நன்றி ரகுவின் நண்பரே!

மூன்றாவது எனது நண்பன் உயர்நீதி மன்ற வக்கீல் முபாரக்.
உயிர் காப்பான் தோழன் என்ற மூதுரைக்கு வடிவம் கொடுத்தவன்...கொடுத்துக்கொண்டிருப்பவன்.
இவனுக்கு பீஸ் 12 Angry Man  டிவிடி வழங்க வேண்டும்....அவ்வளவே.
சென்னை உயர்நீதி மன்ற வக்கீல்களிலேயே அழகானவன்...
திறமையானவன்.
நடிகை ரோஜா செக் மோசடி வழக்கில் சிக்கி திணறிய போது காப்பாற்றியவன்.
ஆபத்பாந்தவன்.
அரபி தெரியும் என்பதால் அரபு நாடுகளில் துன்புறும் தமிழர்களுக்கு உதவ அடிக்கடி பறக்கிறான்.
நன்றி நண்பா...

நான்காவது கோவை நீதி மன்ற வக்கீல் ஆர்.கே.ராஜன்.
அதிமுகவில் பொறுப்பில் இருக்கிறார்.
புரட்சித்தலைவருக்கும்...தலைவிக்கும் பக்தர்.
முப்பதாண்டு கால நண்பர்.
தமிழ் மட்டுமே எழுத...படிக்க....பேசத்தெரிந்த மலையாளி.
இது வரை பீஸே வாங்கவில்லை.
வேறொரு வக்கீல் என்றால் முப்பதாயிரம் சுளையாக்கியிருப்பான்.

இவரது மகன் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக சேர.... அனைத்து தகுதிகளோடும்.... ஆசைப்படுகிறான்..
இவனை நீங்கள் விஜய் டிவியில் கனாக்காணும் காலங்கள் தொடரில் காணலாம்.
அச்சு... அசல்... அக்னிநட்சத்திர படத்தில் ஒரு பாடலில் மின்னி மறையும் பிரபுதேவாவை போலவே இருப்பான்.
தமிழ் சினிமாவில் இவனுக்கு ஒரு சிம்மாசனம் காத்திருக்கிறது.
அதற்க்கு அணிலாக உதவுவதே ராஜனுக்கு நான் தரும் பீஸ்.


கடந்த நவம்பர் மாதம் 2011ன் கறுப்பு மாதம்.
எதிர்பாராத துன்பங்கள்...துயரங்கள்...சுனாமியாக வந்து தாக்கியது.
ஒரே மாதத்தில் நாலு சுனாமி.
மூன்றை கடந்து விட்டேன்.
இரண்டாவதாக வந்த சுனாமியை மட்டும் உங்களிடையே இந்தப்பதிவில் பகிர்கிறேன்.
கடந்த நவம்பர் 18 அன்று பெங்களூரூ புத்தகக்கண்காட்சிக்கு ஸ்டால் போடப்போனேன்.
அன்று காலையிலேயே எனது டிவிடி கடையை போலீஸ் சோதனை செய்வதாக தகவல் கிடைத்தது.
கடையில் இருக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட டிவிடிக்களை சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.
ஒரு தமிழ்ப்படமோ, ஃபுளூ பிலிமோ கிடைக்கவில்லை.
அவற்றை நான் விற்ப்பது இல்லை.
இருந்தாலும் 500க்கும் மேற்ப்பட்ட ஆங்கில படங்களை பறிமுதல் செய்து கடை ஊழியரை கைது செய்து....
 என்னையும் குற்றவாளியாக சேர்த்து வழக்கு பதிவு செய்து விட்டார்கள்.
ஒரிஜினல் காப்பி ரைட் டிவிடி விற்க்க நான் தயார்தான்.
ஆனால் அதன் விலை?
599 ரூபாய்!.
35 ரூபாய்க்கு தமிழ்ப்படம் விற்க்கும் மோசர்பெயர் நிறுவனம் உலகசினிமாவை 500 ரூபாய்க்கு மேல் விற்க்கிறது.
என்ன கொடுமை இது?.
நல்லசினிமாவை நடுத்தரவர்க்கம் பார்க்க விடக்கூடாது என்ற அரக்கத்தன சிந்தனையே இந்த அதிக விலை.
நேற்று வந்த அவதாரும் 500 ரூபாய்.
1959ல் வந்த பென்ஹரும் 500 ரூபாய்.
கமர்சியல் குப்பை படங்களை 99 ரூபாய்க்கு விற்க்கும் கம்பனி....
 தரமான படங்களை மட்டும் 500 ரூபாய்க்கு....
 விற்க்கும் அயோக்கியத்தனத்திற்க்கு சட்டம் துணை போகலாமா?
99ரூபாய்க்கு உலகசினிமாவை தாருங்கள்.
நானும் விற்க்கிறேன்.
மக்களும் வாங்குவார்கள்.

நான் எனது கொள்கையை விட்டு தமிழ்ப்படமும், ஃபுளு பிலிமும் விற்க்க ஆரம்பித்தால் ஒரே வருடத்தில் கோடீஸ்வரனாக முடியும்....
 போலிசில் சிக்காமலே.....அதற்க்குறிய தந்திரங்கள் அனைத்தும் அறிவேன்.

பியூட்டி புல் மைண்ட் திரைப்படத்தின் உரிமம் பெறாத டிவிடி விற்றதால் என் மீது வழக்கு.
அதே படத்தின் கதையை உரிமம் பெறாமல் திரைப்படம் எடுத்த செல்வராகவனுக்கு பாராட்டு....பரிசு.

பியூட்டி புல் மைண்ட் படத்தை அப்பட்டமாக காப்பியடிக்காமல் தனது
கற்பனை வளத்தால்....
மயக்கமென்ன படத்தை.... ஒரு புதிய படம் மாதிரி....
 மயக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டார் செல்வ ராகவன்.
பியுட்டி புல் மைண்ட்டை அணுஅணுவாக ரசித்தவன் நான்.
நானே.... மயக்கமென்ன படத்தில் மயங்கினேன்.

தனுஷின் நடிப்பும்...ஜி.வி.பிரகாஷின் பாடல்களும்...படமாக்கப்பட்ட விதமும் அனுபவித்து ரசித்தேன்.

செல்வராகவன் கிளிஷேக்கள் சற்று தூக்கலாக இருந்தது.
தவிற்த்திருந்தால் படம் ஒரு ஆடு களமாக பரிணமித்திருக்கும்.
இப்படத்தை முதல் நாள் முதல் காட்சி 300 ரூபாய் பிளாக்கில் வாங்கி பார்த்தேன்.
இரண்டரை மணி நேரம் என்னை குஷிப்படுத்தியதற்க்கு அந்த கட்டணம் குறைவுதான்.

Dec 14, 2011

கேரளாவில் நான் பட்ட பாடு

டிசம்பர் 2லிருந்து 19 வரை எர்ணாக்குளத்தில் கொச்சி புத்தகக்கண்காட்சியில் இருந்தேன்.
ஊடகங்கள் முல்லைப்பெரியார் பிரச்சனையை, தினமும் தலைப்பு செய்திகளாக்கி வெடிமருந்தை நிரப்பிக்கொண்டே இருந்தது.
மேடைகளில் பேச்சாளர்கள் மனிதவெடிகுண்டுகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் பேப்பர்களை பார்த்தால் இங்குள்ளவர்கள் அதே வேலையை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
தமிழ்நாட்டிலிருந்து பத்து பேர் ஸ்டால் போட்டிருந்தோம்.
உள்ளூர பயம் ரம்பம் போல் அறுத்து கொண்டிருந்தது.
ஆனால் கேரள மக்கள் எங்கள் பயத்தை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள்.
யாருமே எங்களை விரோதி போல் பாவிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் ஸ்டாலில்நல்ல கூட்டம்...
நல்ல வியாபாரம்.
‘கேரள கவுமதி’என்ற நூற்றாண்டு கண்ட பத்திரிக்கை ஆசிரியர் என்னை பேட்டி கண்டு பத்திரிக்கையில் பிரசுரித்து என் ஸ்டாலை பிரபல்யபடுத்தி விட்டார்.

கேரளாவில் இன்றும் ஆட்டோ 15ரூபாய்க்கு வருகிறார்கள்.
அதே தூரத்திற்க்கு சென்னையில் 30ரூபாயும்...கோவையில் 40ரூபாயும் உரித்து விடுவார்கள்.
 தியேட்டரில் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் 50ரூபாய்க்கு புல் ஏசி போடுகிறார்கள்.


சரவணபவன் மாதிரி ஏ கிளாஸ் ஹோட்டலில் 45 ரூபாய்க்கு புல் மீல்ஸ் சாப்பாடு.
மொத்த கேரளாவே மிடில் கிளாஸ் சொர்க்கமாக இயங்கி கொண்டிருக்கிறது.
கேயிஸ் என்ற ஹோட்டல் பிரியாணி உலகின் டாப்10ல் அடங்கும்.
அவர்கள் உணவையே மருந்தாக்கி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
சாம்பார்,ரஸம் எல்லாவற்றிலும் பெருங்காயம்.
மீன் குழம்பில் இஞ்சி...
பாயாஸத்தில் சுக்கு...
இறால் வறுவலில் பூண்டு என சாமர்த்தியமாக இணைத்து விடுகிறார்கள்.

என்னடா ஒரே பாராட்டு மயமா இருக்கே....தலைப்புக்கு சம்பந்தம் இல்லியேன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே தலைப்புக்கு வந்துட்டேன்.
புதிய உலக சினிமா டிவிடி விற்ப்பதுக்கு படாதபாடு பட்டேன்.
இன்னும் அவர்கள் அகிரா குரோசுவா,சத்யஜித்ரே போன்ற இயக்குனர்களை தாண்டி வரவில்லை.
சமீபத்திய இயக்குனர்களில் கிம்கிடுக் மட்டுமே அறிந்து வைத்துள்ளனர்.
ரோடு ஹோம்,வே ஹோம் டிவிடி விற்ப்பதற்க்கு கதகளி ஆடவேண்டி வந்தது.
தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் புண்ணியத்தால் சர்வ சாதரணமாக உலக சினிமா அறிவுப்புரட்சியே நடந்துள்ளது என்பதை உணர முடிந்தது.

கடைசி நாள் கேரளத்து பைங்கிளி ஒன்று வந்து, ஹிரோசிமா மான் அமர் இருக்கா என்று கேட்டாள்.
சந்தோசமாக தேடி எடுத்து கொடுத்தேன்.
விஸ்காம் ஸ்டூடண்டா? எனகேட்டேன்.
ஆமாம் என்றாள் பெருமிதம் பொங்க...

மேன் வித் எ மூவி கேமரா டிவிடியை இலவசமாகக்கொடுத்தேன்....
வருங்கால மீரா நாயருக்கு... 

Dec 9, 2011

Beautiful-[Malayalam] 2011 சோதனையை சாதனையாக்கு...


நீண்ட நாட்களாக எழுத முடியவில்லை.
காரணம் விதி ஹெட் ஸ்பிரட்டிங்&டேன்சிங்.
பராசக்தி சிவாஜி கணேசனைப்போல ஒடினேன்...ஒடினேன்...வாழ்க்கையின் ஒரத்திற்க்கே ஒடினேன்.
அந்த துலாபார துயரத்தை தனிப்பதிவாக்குகிறேன்.
துன்ப தொடர் ஒட்டத்திலும் மூன்று சினிமா பார்த்து விட்டேன்.
1 மயக்கமென்ன
2 போராளி
3 பியூட்டிஃபுல்
மூன்றுமே என் துன்பத்தை கடக்க உதவிய காரணிகளாக இருந்த போதிலும்...
மொத்தமாக என் துன்பத்தை துடைத்து போட்டது பியுட்டிஃபுல்.
இப்படத்திற்க்கு மூலம்
Divingbell and the butterfly [நான் இப்படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்...காண்க]
My Left Foot [செழியன் ஆனந்த விகடனில் உலகசினிமா தொடரில் எழுதி உள்ளார்.] இருந்தாலும் அப்பட்டமாக காப்பியடிக்காமல்...சூரிய உதயத்தை பார்த்து ஒவியம் படைப்பது போல் காவியமாக்கி இருக்கிறார் இயக்குனர் வி.கே.பிரகாஷ்.

ஐம்பது நாட்களை கடந்து விட்ட போதிலும் திங்கள் கிழமை இரவுக்காட்சியை ஹவுஸ்புல்லாக்கி அழகு பார்க்கின்றனர் கேரள மக்கள்.

படத்தின் நாயகன் ஜெய சூர்யா.
பல நூறு கோடி சொத்துக்களை படுத்திருந்து அனுபவிக்கிறான்.
ஆம்....கழுத்துக்கு கீழே எந்த பாகமும் இயங்காது.
பிறவிக்கோளாறு.
தன் நிலைமைக்கு கழிவிரக்கம் கொள்ளாமல் வாழ்க்கையை ரசித்து ருசித்து சாப்பிடுகிறான்.
அவனைக்கண்டு காலன்,எமன்,தூதன் மூவருமே பயந்து நடுங்கி ஒடிக்கொண்டே இருக்கிறார்கள்.

படுத்துக்கொண்டே ஜெயசூர்யா அடிக்கும் சிரிப்பு சிக்ஸர்கள்
மொத்த தியேட்டரை அதிர வைக்கின்றன.
தனக்கு நர்சாக பணி புரிய...
இண்டர்வியூக்கு வரும் பெண்களை...
 தலையிலிருந்து மார்பு வரை மட்டுமே பார்க்கிறான்.
 பார்ப்பவரை திணற வைக்கும் கவர்ச்சியான பெண்ணின்...
வெளியே தெரியும் பிரா பட்டையை பார்த்து....
 “கருத்த பிரா போட்ட பெண் தவிர மற்றவர்கள் போகலாம்”

ஏமாந்து திரும்பும் பெண்களில் ஒருத்தியின் கமெண்ட் இது...
 “20,000 சம்பளம் கிடைக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கருத்த பிரா வாங்கி வெளியே தெரியிற மாதிரி மாட்டியிருப்பேன்”
இக்காட்சிக்கு நரசிம்மராவ் கூட சிரித்திரிப்பார்.

இறந்து போன நண்பனின் குரலின் பிரதியாக ஒலிக்கும்... வருமானமற்ற...ஆனால் தன்மானமிக்க பாடகன்[நடிகர் அனுப் மேனன்] ஒருவனை பிரத்யேகமாக பாட பணிக்கிறான்.
பாடகன், ஜெயசூர்யாவின் கட்டற்ற அன்பில் கரைந்து போகிறான்.

கருத்த பிரா ஒடிப்போக... புதிய புயலாய் பாய்ந்து வருகிறாள் கதாநாயகி.... வேலைக்காரியாக....

அவளின் காதலை பெறுவதில் நண்பர்களுக்கிடையே போட்டி நடப்பது போல்... சொத்துக்காக... சொந்தங்கள் ஜெயசூர்யாவை தீர்த்து கட்ட போட்டி போடுகின்றனர்.
உணவில் விஷம் வைத்து கொல்லும் முயற்ச்சியில் சிக்கி உயிருக்கு போராடும் ஜெய சூர்யா தப்பித்தானா?
குற்றவாளி யார்?
என்று பறக்கும் திரைக்கதை...
இயக்குனருக்கு தியேட்டரில் ஸ்டேண்டிங் ஒயேஸ்
பாராட்டை பெற்று தருகிறது.

கட்டாயம் பார்க்கவேண்டிய கமர்சியல் கவிதை.