Jun 26, 2013

நாடகமே உலகம்.


நண்பர்களே...
திரு.அ.பாபநாசம் அவர்கள் உருவாக்கிய ‘நாடகக்கலைக்களஞ்சியம்’ என்ற நூலில் தமிழ்நாட்டின் நாடக வரலாறை எழுதி உள்ளார்.
அதை இப்பதிவில் காண்போம்.
_________________________________________________________________________________

நாடகக்கலைக்களஞ்சியம் \ 1964 \ ஆசிரியர் : அ.பாபநாசம் \
 [ பதிவின் பாகம் - 3 ]



பூர்வகாலத்தில் ஆடப்பட்ட நாடகங்கள் அனைத்தும் புராணக்கதைகளே ஆகும்.
புராணக்கத்தையை தழுவி நாடகமாக ஆடிய கூத்துகளில் ‘வள்ளிக்கூத்து’ என்பது மிகப்பழமையானது.
இதைப்பற்றி தொல்காப்பியத்தின் உரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முருகக்கடவுள் வள்ளியை மணந்த வரலாறே வள்ளிக்கூத்தின் கதையாகும்.

நாடகங்கள் பூர்வகாலத்தில் ‘நாட்டிய நாடகங்களாக’ இருந்தன என்று தெரிய வருகிறது.
இதில் ‘பாலசரிதை’ என்ற நாடகம் முக்கியமான ஒன்றாகும்.
இதற்குப்பிறகு வந்த நாடகம்  ‘ராஜராஜேஸ்வரம்’ என்ற நாடகமாகும்.
இதைப்பற்றிய செய்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வடக்குப்பிரகாரத்தின் வெளியிலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டு இருக்கிறது.

17ம் நூற்றாண்டின் கடைசியில் கி.பி.1695 முதல் சில நொண்டி நாடகங்கள் இருந்ததாக தெரிய வருகிறது.
‘திருக்கச்சூர் நொண்டி நாடகம்’ என்பது இதில் ஒன்றாகும்.
இது தவிர பழனி நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் போன்ற நாடகங்களும் இருந்தன.

கி.பி. 1712 - 1779ல் வாழ்ந்த அருணாசல கவிராயர் இயற்றிய ‘இராம நாடகம்’
முக்கியமான ஒன்று.
இவரது மற்றொரு நாடகம் ‘அசோமுகி’.
இராமச்சந்திர கவிராயர் மகாபாரதக்கதையை  ‘பாரத விலாசம்’ என்று இயற்றியுள்ளார்.
இவரது மற்ற நாடகங்கள் : இரங்கூன் சண்டை நாடகம், சகுந்தலை விலாசம்,
தாருகா விலாசம்.
இந்நாடகங்களுக்கு முன்பு ‘நீலி நாடகம்’ என்று ஒரு தமிழ் நாடகம் இருந்திருக்கிறது.

வேறொரு அருணாசல கவிராயர் ‘மதன சுந்தர பிரசாத சந்தான விலாசம்’ என்ற நாடகத்தை எழுதி உள்ளார்.
இந்த நாடகம் தஞ்சாவூரில் ஆட்சி புரிந்த ஒரு சோழ அரசன்,
தன் மகள் சுகமாக வாழ வேண்டி மதன சுந்தரேஸ்வரரை வழி பட்டு வரம் பெற்ற கதையைக்கூறுவதாகும்.

   ‘மறையவர் குல வீரலிங்க பாரதி’ எழுதிய அரிச்சந்திர நாடகம் புகழ் பெற்ற நாடகமாகும்.
இது போக ஆசிரியர் பெயர் தெரியாத அரிச்சந்திர நாடகங்கள் உள்ளன.
நாராயண கவி எழுதிய ‘பாண்டிகேளி விலாசம்’ குறிப்பிடத்தக்க ஒரு நாடகம்.

சென்னை துரைதனத்தார் ஏற்படுத்தி இருக்கும்,
பழைய ஏட்டு புஸ்தக சாலையில் முப்பது தமிழ் நாடகங்களுக்கு மேல் இருக்கின்றன.
இவைகளில் முக்கியமானவைகள் : இரணிய சம்ஹார நாடகம்,
இராம நாடகம், உத்தர ராமாயண நாடகம், கந்தர் நாடகம், காத்தவராய நாடகம்.
[ சென்னை துரைதனத்தார் = பிரிட்டிஷ்காரர்கள் ;
பழைய ஏட்டு புஸ்தக சாலை = ஆவணக்காப்பகம்.]

முற்காலத்தில் ஒவ்வொரு ஆலயத்திலும் அந்த ஆலயத்தின் மகத்துவத்தை கூற அந்த ஆலய உற்சவத்தில் நாடகம் ஆடுவதுண்டு.
இதில் சேர்ந்ததுதான் ‘சுரகுரு’ நாடகம்.
இது திருக்கழுக்குன்றம் ஷேத்திரத்தின் கதையாகும்.


புராணக்கதைகளை தழுவி எழுதப்பட்ட நாடகங்கள் அநேகம் உள்ளன.
உ.ம் : கீசக நாடகம், பதினெட்டாம் போர் அலங்காரம், குசலவ நாடகம், ருக்மாங்கத நாடகம்.

பூர்விக கற்பனைக்கதைகளை தழுவி எழுதிய நாடகங்களும் உண்டு.
அவை : வீரகுமார நாடகம், காத்தவராய நாடகம், மதுரை வீர நாடகம், அதிரூபவதி நாடகம், அலங்கார ரூபவதி நாடகம்,
நந்தனார் சரித்திர கீர்த்தனை [ கோபால கிருஷ்ண பாரதியால் எழுதப்பட்டது].

சமூக நாடகத்தில் சிறந்தவை காசிவிஸ்வநாத முதலியார் எழுதிய ‘டம்பாச்சாரி விலாசம்’ என்னும் நாடகமாகும்.
கி.பி.1886ல் ‘சோழ விலாசம்’ என்ற நாடகத்தை அப்பாவுப்பிள்ளை என்பவர் எழுதி உள்ளார்.
அவர் கி.பி.1889ல் ‘இந்திரசபை’ என்ற நூதனமான நாடகத்தையும் இயற்றியுள்ளார்.

குறவஞ்சி நாடகங்களும் இருந்தன.
இதில் சிறந்தது ‘குற்றால குறவஞ்சி’.
கி.பி.1840ல் கவி குஞ்சரபாரதி அவர்கள் ‘அழகர் குறவஞ்சி’ என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

நவீன காலத்தில் எழுதப்பட்ட நாடகங்கள் : 
சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதிய மனோன்மணியம்.
இதை அகவற்பாவால் எழுதியுள்ளார்.
சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள் : லீலாவதி, சுலோசனா, மனோகரா,
பரிதிமாற்கலைஞன்  எழுதிய ரூபவதி, மானவிஜயம்.
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள்,
பி.எஸ்.ராமையாவின் பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், தேரோட்டி மகன்.
எஸ்.டி.சுந்தரத்தின் கவியின் கனவு,
அண்ணாத்துரையின் ஓர் இரவு, வேலைக்காரி,
ஜீவாவின் உயிரோவியம்,
அ.பாபநாசத்தின் உருகிய தாரகை, விசிறி, உதிரக்கிண்ணம்.
தி.ஜானகிராமனின் நாலுவேலி நிலம்.
_________________________________________________________________________________

நண்பர்களே...
இது முழுமையான தமிழ்நாட்டின் நாடக வரலாறாக இருக்க முடியாது.
திரு.அ.பாபநாசம் அவர்கள் அவர்  திரட்டிய தகவல் அடிப்படையில் மட்டுமே இதை எழுதி உள்ளார்.
நாம் இதை  படிக்கும் போதே உணர முடிகிறது.
இவருக்கு பின்னால் யாராவது இம்முயற்சியை மேற்கொண்டு இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்.
அது பற்றிய தகவல்களை நண்பர்கள் மூலம் பின்னால் தேடித்தருகிறேன்.


திரு.வி.கே.ராமசாமி அவர்கள் எழுதிய சுயசரிதை நூலில்,
அக்கால நாடகக்குழுக்கள், அவர்கள் போட்ட நாடகங்கள்,
நாடகங்களின் வெற்றி தோல்விகள், தொழில் போட்டிகள், நாடகக்குழுவினரின் வாழ்வியல் முறைகள் என ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.  

தமிழ் விக்கிப்பிடீயாவில் இன்னும் சிறப்பாக தகவல்கள் இருக்கின்றது.
விரிவான தகவல் பெற ‘தமிழ் விக்கிப்பீடீயாவிற்குள்’ செல்க...

36 நாடக சந்தர்ப்பங்களோடு,
 அடுத்தப்பதிவில் சந்திக்கிறேன்.

2 comments:

  1. நல்லதொரு தொகுப்பு...

    இணைப்பிற்கும் நன்றி...

    ReplyDelete
  2. சுட்டெரிக்கும் வெயிலோ...அடை மழையோ...
    திண்டுக்கல் தங்கத்தின் வருகையையும்...பின்னூட்டத்தையும்
    அசைக்க முடியாது.

    நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.