Dec 15, 2012

கடவுள் பாதி...மிருகம் பாதி...

நண்பர்களே...
நான் இந்த வலையுலகத்தில் எழுதிக்கொண்டிருப்பது யாருக்காக ?
எனக்காகத்தான்.
ஏனென்றால்,
எனது  ‘கிரியேட்டிவிட்டியை’ உயிர்ப்போடு இயங்க வைப்பது
வலையுலகம்தான்.

உலகசினிமாவின் கதையை சொல்லி வியாபாரம் செய்யும் சாதாரண வியாபாரி நான்.
 ‘உலகத்தமிழ் மாநாட்டுக்காக’ கோவை வந்திருந்த,
எனது நண்பர் திரு .செந்தில் ராஜ் கொடுத்த ஊக்கத்தில்தான்  பதிவெழுத ஆரம்பித்தேன்.
நண்பர் செந்தில் ராஜ் ‘இடுக்கண் களையும் நட்புக்கு’ இலக்கணமானவர்.
அவர் வலையுலகில்  ‘தமிழ் குறிஞ்சி’ என்ற இணைய பத்திரிக்கையை நடத்தி வருகிறார்.
நான் கமலைப்பற்றி  ‘சகலகலா வல்லவர்’ என்ற 52 வாரத்தொடரை தயாரித்து விளம்பரதாரர் சரியாக அமையாததால் நஷ்டம் அடைந்திருந்தேன்.
அவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,லண்டன் என உலகம் முழுக்க அத்தொடரை சாட்டிலைட் டிவி,கேபிள் டிவி என வியாபாரம் பண்ணி
நஷ்டத்தை ஈடு கட்டி சிறு லாபத்தையும் ஈட்டி கொடுத்தார்.

நண்பர் புண்ணியத்தால்,
வலையுலகத்தில் எழுத ஆரம்பித்த போது உலகசினிமாக்களை  ‘அறிமுகம்’ மட்டுமே செய்ய ஆரம்பித்தேன்.
விமர்சனம் செய்யவிரும்பவில்லை.
காரணம், அது மிகக்கடினமான பணி.
சொகுசாக உலகசினிமாவை அறிமுகம் செய்து கொண்டு பயணித்தேன்.

பதிவெழுத ஆரம்பித்தபோது வரவேற்று மிகப்பெரிய அறிமுகம் கொடுத்தது
பதிவர்  ‘கருந்தேள்’ ராஜேஷ்தான்.

மதி செய்த விதியால்,
ஹேராம் திரைப்படத்தை முதலில் விமர்சனம் எழுத ஆரம்பித்தேன்.
வந்தது வினை.
எதிர்ப்பு வரிசை கட்டி வந்து, வலையுலகத்திலுள்ள  ‘வசையுலகை’
புரிய வைத்தது..
அதே நேரத்தில், ஆதரவு  ‘ஏகே 47கள்’ அத்தனையையும் சிதறடித்தது.

இறுதியாக வந்த சண்டையில் ,
என்னுள் இருந்த  ‘கடவுளை’க்கடந்து... ‘மிருகம்’ மட்டும் வெளியே வந்தது.
எதிர்ப்பும் முடிவுக்கு வந்தது.
ஆனால் இந்த சண்டையில் என் கடையை நேற்று முதல் மூடி விட்டேன்.
இத்தருணத்தை மிகுந்த சந்தோஷமாக உணருகிறேன்.
10% வருத்தம்...90% மகிழ்ச்சி.
கடையை மூடி விட்டு  ‘சிவாஜியை’ 3டியில் பார்த்தேன்.
இன்று  ‘நீதானே என் பொன் வசந்தம்’.

10% வருத்தம்  =  எதையோ  ‘மிஸ்’ பண்ணிய உணர்வு .
காரணம்,
உலகசினிமாவை ஊர் ஊராகச்சென்று விற்ற போது எனக்கு கிடைத்த நட்பு வட்டாரம்.
பத்திரிக்கையாளர்கள், இலக்கியவாதிகள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், கம்யூனிஸ்ட் சித்தாந்த வாதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், குடும்பத்தலைவிகள் என... அடேயப்பா!.எவ்வளவு பேர்!!.
இன்று எனக்கு  ‘உலகசினிமா’ மூலம் உலகம் முழுக்க சொந்தங்கள் இருக்கின்றனர்.
பதிவுலகின் மூலமாக ‘உலகசினிமா சொந்தங்கள்’ இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கும்.


இனி...
நான் ‘ஜோர்பா’ போல வாழ விரும்புகிறேன்.
‘ஜோர்பா த க்ரீக்’ 
[ ZORBA The Greek \ 1964 \ Written by : Nikos Kazantzakis \ Directed by :Mihalis Kakogiannis ] என்ற உலகசினிமா அல்லது நாவல் படித்தவர்களுக்கு
சட்டென புரிந்திருக்கும்.
ஜோர்பாவுக்கு கடந்த காலமும் கிடையாது.
வருங்காலமும் கிடையாது.
நிகழ்காலத்தில் ரசித்து ருசித்து வாழ்பவன்.
“நேற்று இல்லை...நாளை இல்லை...எப்பவுமே ராஜா”.
நான்  ‘ஜோர்பா’ போல வாழ விரும்புகிறேன்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

3 comments:

  1. ஒரு பக்கம் நீங்க செஞ்சிக்கிட்டு இருந்த ஒரு செயலை ஒரு காரணத்தால் நிறுத்தியது வருத்தமா இருந்தாலும், அது ஒரு விதத்தில் உங்களுக்கு ஆறுதலை தரும் என்பதால் நிறைவு. ஆனா படங்களை பற்றி எழுதுவதை நிறுத்திடாதீங்கன்னே. குறிப்பா கமல் படங்கள். இன்னும் உங்க கிட்ட இருந்து அன்பே சிவம், மகாநதி, இன்னும் பல படங்கள் பற்றிய பதிவுக்காக காத்துக்கிட்டு இருக்கோம்.

    ReplyDelete
  2. கடந்த சில பதிவுகளுக்கு நான் வந்து வாசித்தும் கமெண்ட் ஏதும் கொடுக்க முடியவில்லை.. மன்னிக்கவும்! உங்களுக்க ஆதரவு தெரிவிக்க வேண்டிய தருணங்களிலும் சைலண்டாக வந்துவிட்டேன்.. எனக்கு இந்த சண்டைப் பதிவுகளிலேயே ஒரு குழப்பம். உங்களை சமாதானமாக்கும் வயதும், எழுத்தும் எனக்கு கிடையாது. சண்டையைத் தொடர்ந்து மூட்டுவதும் சரியாக இருக்காது. என்ன செய்வதென்றே தெரியாமல் இந்தப் பதிவுகளை தவிர்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் பெரிய சாரி!! :(

    சுமூகமாகவோ, இல்லையோ சண்டை முடிந்ததில் சந்தோஷம்!! மனக்கசப்புக்களும் 2.3 மாதங்களில் நீங்கும்.

    இன்று உங்கள் எழுத்திலேயே ஒரு சாந்தம் தென்படுகிறது.. அது நிறத்திலும் உங்கள் மனநிலையில் பிரதிபலிக்கிறதா என்று தெரியவில்லை.. அந்த சாந்தம் தொடர்ந்தும் உங்களிடம் நிலைகொள்ள வேண்டுகிறேன்!! :)

    ReplyDelete
  3. சுத்தமா புரியல.. எந்த கடைய மூடினீங்க??

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.