Dec 21, 2012

கமல் வாடகை வீட்டில் வசிக்கிறார்!


நண்பர்களே...
சமீபத்திய நக்கீரன் இதழ் அதிர்ச்சிகரமான தலைப்பிட்டு வெளி வந்தது.
                                         .சொந்த வீடு இல்லை !
கடன் நெருக்கடியில் உலக நாயகன்!

செய்தியின் முழு விபரம் இங்கே...


தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,இந்தி என பன்மொழிப்படங்களில்
50 ஆண்டுகளாக இருக்கும் கமல்,
சுமார் 30 ஆண்டுகளூக்கு மேலாக கதாநாயகனாக நடித்து வரும் கமல் இதுவரை குறைந்தபட்சம் நூறு கோடி...இருநூறு கோடி மதிப்பில்
சொத்து சேர்த்து வைத்திருக்க மாட்டாரா என்ன?
ஆனால் கமலிடம் இல்லை என்பதுதான் உண்மை.

நடனம், எடிட்டிங், மேக்கப், காஸ்ட்யூம், ஸ்கிரிப்ட் எழுதுவது, டைரக்‌ஷன் என சினிமாவில் பல வேலைகளையும் கமல் கற்றுக்கொண்டதற்கு காரணம்,
தன்னை மேதாவியாக காட்டிக்கொள்வதற்காக அல்ல.

நடிகனாக ஜொலிக்க முடியாமல் போனால் டான்ஸ் மாஸ்டர் ஆகிடணும்!.
அதுவும் இல்லன்னா எடிட்டர் ஆகிடணும்!.
இப்படி ஏதோ ஒரு வகையில் சினிமாவில் மட்டுமே இருக்கணும் என்கிற நோக்கம் மட்டுமே கமலுக்கு.
இதனால்தான் சினிமா மூலம் சொத்து சேர்க்க வேண்டும் என்கிற ஆசை கமலுக்கு என்றுமே இருந்ததில்லை.

1980களில் வந்த  ‘சகலகலா வல்லவன்’... 
தமிழ் சினிமா வரலாற்றில் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது.
தொடர்ந்து அப்படிப்பட்ட மசாலா படங்களை சொந்தமாக தயாரித்து
கோடி கோடியாய் லாபம் பார்த்திருக்க முடியும்.
ஆனால் கமலுக்கு வித்தியாசமான சினிமா மீதுதான் ஈடுபாடு.
மற்ற படாதிபதிகளுக்காகவே மசாலாவில் நடித்தார்.

கன்னட உலகில் மதிப்பு மிக்க இயக்குனர்களில் ஒருவரான புட்டண்ணா ‘சகலகாலா வல்லவன்’ பார்த்து விட்டு,
அப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கை கொடுத்தார்.
“பிரமாதமான பொழுதுபோக்கு படத்தை தந்தீட்டீங்க!
வசூலில் இப்படம் சாதனை புரியும்.
ஆனா அடுத்த தலைமுறை சினிமா ரசிகர்களின் அறிவை மழுங்கடிக்கிற வேலையை தொடங்கி வச்சிருக்கிங்க” எனச்சூடாக சொன்னார்.

இந்த விமர்சனம் கமலுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியைக்கூட அப்போது ஏற்படுத்தியது.

வித்தியாசமான சினிமாவின் தாக்கத்தால்,
கண் பார்வையற்ற இளைஞனின் கதையான ‘ராஜபார்வையை’
அடுத்தவர்கள் பணத்தில் தயாரிக்காமல்
‘ராஜ் கமல் இண்டர்நேஷனலை’ தொடங்கி  ‘முதல் படத்தை’ தயாரித்தார்.
இந்த வித்தியாச முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார்.

‘அபூர்வசகோதரர்கள்’  பெற்றவர்களை கொன்றவர்களை பழி வாங்கும் அரதப்பழசான கதை.
அதிலும் ‘குள்ள அப்பு’ கேரக்டரை புகுத்தி புதுமைப்படைப்பாக உருவாக்கினார்.
இந்த படத்தில் மிகப்பெரிய செலவில் 20 நாட்களாக எடுக்கப்பட்ட காட்சிகளை அப்படியே தூக்கி வீசினார்.
காரணம் கமலுக்கு திருப்தியில்லை.

“இவ்வளவு செலவு செய்து அப்படியே தூக்கி வீசிட்டீங்களே” என
கமல் நண்பர்கள் ஆதங்கப்ப்ட்டனர்.

“கவிதை எழுதறவன் ஒரு நல்ல கவிதை அமையிற வரைக்கும் பேப்பர்ல எழுதி எழுதி சுருட்டி வீசுவான்.
அந்த பேப்பர் மாதிரிதான் எனக்கு ஃபிலிம்.
என்னையே திருப்தி படுத்தாத காட்சிகள் மக்களை எப்படி திருப்தி படுத்தும்?” 
என விளக்கம் சொன்னார் கமல்.

பெரம்பலூர் மாவட்ட கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் முத்துக்குமார்
ஒரு முறை கமலின் நண்பரான பட்டிமன்ற பேச்சாளரும் பேராசிரியருமான ஞானசம்பந்தனிடம்,
“சார் நீங்களாவது சொல்லக்குடாதா?
நேத்து வந்த நடிகர்கள் கூட கல்யாண மண்டபம், டீ எஸ்டேட்,
ஸ்டார் ஹோட்டல்னு ஏகப்பட்ட பிசினஸ் பண்ணுறாங்க.
எங்க தலைவர் சினிமாவுக்காக பொருளாதாரத்தை எப்பவும் இழந்துகிட்டே இருக்காரே!” என ஆதங்கப்பட்டார்.

கமலின் குணத்தை நன்கு அறிந்த ஞானசம்பந்தன்,
“அதுதான் கமல்” என்றார்.

ரசிகர்களின் கவலை அறிந்த கமல் ஒரு நிகழ்ச்சியில் விளக்கம் சொன்னார்.
“கார்ல வந்துகிட்டு இருக்கேன்.
தீடிர்னு மேம்பாலம் இடிஞ்சு விழுந்திருச்சு.
அதுக்காக என்கிட்டே கார் இருக்கு.
நான் பறந்து போவேன்னு சொல்லிகிட்டு இருக்க முடியுமா?
கார் எந்த அளவுக்கு தேவையோ, அதே போல் தேவைக்கேற்ப பணமும் போதும்”

 “ஒரு மனிதன் எந்தத்துறையில் சம்பாதிக்கிறானோ...அந்தத்துறையிலேயே பணத்தை செலவிடும்போது அந்தத்துறை வளர்ந்து கொண்டேயிருக்கும்.
இந்தியாவிலே வெகு சிலரே தான் சம்பாதித்த துறையிலேயே செலவிடுகிறார்கள்.
அதில் முக்கியமானவர் கமல்” என அகில இந்திய வர்த்தகர் சங்கம் கமலைப்பற்றி மதிப்பிட்டு ‘வாழும் வரலாறு’ என பாராட்டியது.

இப்படியெல்லாம் புகழப்படும் கமலின் இன்றைய நிலமை என்ன தெரியுமா?
கமலுக்கு ஒரு சொந்த வீடு கூட கிடையாது

வீட்டிலேயே திரையரங்க வசதியோடு கமலின் ரசனைக்கேற்ப இருந்தது அவரின் ஆழ்வார் பேட்டை வீடு.
அந்தப்பகுதியின்  'லேண்ட்மார்க்காக' விளங்கியது.
சினிமாவில் ஏற்பட்ட கடனுக்காக அந்த வீட்டை விற்று விட்டு நீலாங்கரையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

*********************************************************************************
கமல் தனது ஆழ்வார் பேட்டை வீட்டிலேயே உள்ள திரையரங்கில்
 ‘உலகசினிமா திரைப்பட விழா’ பத்து நாட்கள் தொடர்ந்து நடத்தினார்.
1993-1994 காலமது.
மறைந்த அனந்து, நடிகர் ராஜேஷ் உள்ளிட்ட மிக நெருக்கமான நண்பர்களை மட்டும் வரவழைத்து திரையிட்டார்.
பெர்க்மன்,  கோடார்டு, பெலினி, புனுவல் போன்ற  ஜாம்பவன்களை தேர்வு செய்து அவர்களது படைப்புகளை திரையிட்டு விவாதித்தார்கள்.
அதில் கலந்து கொண்டவர்களில் எனது நண்பரும் ஒருவர்.

கமல் பற்றி அவரது நினைவு கூறல்.
“ கமல் பொதுவாக, தனக்கும், நண்பர்களுக்கும், 
சில சமயம் ரசிகர்களுக்கும் பரிட்சை வைத்து வேடிக்கை பார்ப்பார்.
கற்றுக்கொள்வார்.

ஒரு நாள், 
பெலினியின்  'ஜூலியட் ஆப் த ஸ்பிரிட்ஸ்' [ Juliet Of the Spirits \ 1965 ],
'அமர்கார்டு' [ Amarcord \ 1973 ] என்ற திரைப்படங்களை தொடர்ச்சியாக திரையிட்டார்.
அதில் ‘அமர்கார்டு’ படத்தில் ஒரு காட்சி...
பனி நிறைந்த பிரதேசம்.
மயில் ஒன்று நடந்து வரும்.

பின்னால் இந்த காட்சி பற்றி பேச்சு வந்தது.
கமல் அமைதியாக இருந்தார்.
எல்லாம் எனக்கு தெரியும் என கமல் எப்போதும் ஆட மாட்டார்.
தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்றே கூறுவார்.
நண்பர்கள் எந்த மாதிரி கருத்தாக்குகிறார்கள் என அமைதியாக கவனிப்பார்.

பனிக்காலம்  ‘கஷ்டத்தை’ குறிக்கும்.
மயில் பசுமைப்பகுதிகளில் வசிக்கும் பறவை.
எனவே  மயில் ‘வசந்த காலத்தை’ குறிக்கிறது.
P. B. Shelley =  “Ode to the West Wind”= If Winter comes, 
can Spring be far behind?
என்ற ஷெல்லியின்  வரிகளை காட்சிப்படுத்தி 'நம்பிக்கையை' குறிக்கிறார் பெலினி எனச்சொன்னேன்.
இந்த  ‘வாசிப்பை’ கமல் பாராட்டினார்.

ஆழமான சினிமாவின் மாணவனாக தன்னை கருதுபவர்.
யாரையும் எப்போதும் குறைத்து மதிப்பிட மாட்டார்.
கற்றுக்கொள்வதில் என்றும் பெரும் ஆர்வம் கொண்டிருப்பவர்.
இன்று வரை சினிமாவில் கற்றதை பரிட்சித்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்.
கிரேட் பர்ஸன்”. 

*********************************************************************************

சினிமாவில் இருக்கும் கள்ளப்பணமும் கமலிடம் இல்லை.
வருமானத்தை உண்மையான கணக்கு காட்டி வருமான வரி கட்டுபவர்.

ஒரு பெரிய அரசியல் தலைவர் வீட்டு வாரிசு தயாரித்தப்படத்தில் இயக்கத்தை தவிர பல பொறுப்புகளை செய்தார்.
இதற்கான சம்பளத்தை பாதி கருப்பாகவும்....பாதி வெள்ளையாக மட்டுமே தருவோம் என அந்த நிறுவனம் சொல்லி விட்டது.

தலைவரை சந்தித்து தனது பாலிஸியை சொன்னார் கமல்.
வெள்ளையாக தந்த பிறகே அந்த சம்பளத்தை வாங்கினார்.
[ படம் : மன்மதன் அம்பு என நினைக்கிறேன் - உலகசினிமா ரசிகன்]

ஆந்திராவைச்சேர்ந்த பொட்லூரி வி. பிரசாத் தனது பி.வி.பி. நிறுவனம் மூலமாக  ‘விஸ்வரூபம்’ படத்தை துவங்கினார்.
படம் பட்ஜெட் 50 கோடியைத்தாண்ட சுணக்கம் காட்டியது பி.வி.பி.
“நானே தயாரித்து கொள்கிறேன்.
படம் ரீலிசுக்கு முன் உங்கள் பணம் செட்டில் செய்யப்படும்” எனச்சொல்லி பி.வி.பி.யுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் கமல்.

ஜனவரியில் ரீலிஸ் எனும் நிலையில் பி.வி.பி.க்கு செட்டில் பண்ண பணத்துக்கு அலைகிறார்.
பணம் செட்டில் பண்ணாவிட்டால் படத்தை ரீலிஸ் செய்ய முடியாது.


“அர்ப்பணிப்புகள் வீண் போகாது.
எத்தனை இடைஞ்சல் வந்தாலும் அதையெல்லாம் வென்று 
கமல் தொடர்ந்து  'விஸ்வரூபம்' எடுப்பார்” என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

அதையேதான் கமலும் சொல்கிறார்.
“ரசிகர்களின் அன்புதான் எனது ஆணி வேர்.
அச்சாணி பலம்.
இந்த பலம் இருக்கும் வரை நான் தொடர்ந்து புதிய முயற்சிகள் மேற்கொள்வேன்”

ஈடற்ற...இணையற்ற ஒரு மாபெருங்கலைஞன் சொந்த வீடற்ற நிலையிலும் துணிச்சலுடன் இப்படி  ‘தொழில் தர்மம்’ சொல்லியிருப்பது...
ஒவ்வொரு துறையிலும் தனித்துவமாக சாதிக்கத்துடிப்பவர்களுக்கான தூண்டுதல்.

நன்றி... நக்கீரன் பத்திரிக்கைக்கு.
காணொளி காண்க...

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

29 comments:

 1. விஸ்வரூபம் வெல்லட்டும் .......

  ReplyDelete
  Replies
  1. இந்த தருமியின் வாழ்த்து, ‘அன்பே சிவனுக்கு’ உவப்பாக இருக்கும்.

   Delete
  2. உவப்பாக இருக்குமா? உவகையாக இருக்குமா?

   Delete
  3. ///உவப்பாக இருக்குமா? உவகையாக இருக்குமா?///

   மகிழ்ச்சியாக இருக்கும் என்ற அர்த்தத்தில்தான் ‘உவப்பு’ என எழுதினேன்.
   மகிழ்ச்சி = உவப்பு,உவகை,ஆனந்தம்,களி
   எனக்குத்தெரிந்த தமிழ் வார்த்தைகள் இவ்வளவுதான்.

   Delete
 2. Good man always Win.
  thanam

  ReplyDelete
 3. Good man Always Win.
  thanam

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக...சத்தியமாக உங்கள் வாக்கு பலிக்கும்.

   Delete
 4. கமல் இனி வரும் தலைமுறையினருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்..!

  ReplyDelete
  Replies
  1. கமலைப்போல் தொழிலை காதலிக்க வேண்டும்.

   அந்த வெறித்தனமான ‘தொழில் காதல்’ இருந்தால்,
   இடையில் தடைகள் வந்தாலும்...
   இறுதியில் வெற்றியைத்தான் அடைவோம்.

   Delete
 5. நிச்சயமாக ஆச்சரியமான தகவல் இது ! பாராட்டுக்குரியதும் கூட !

  ReplyDelete
  Replies
  1. ராஜ பார்வை என்ற நல்ல படம் எடுக்க ஆசைப்பட்டு ஏற்கெனவே
   வீடு வாசல் இழந்தவர்தான்.
   ஒரு ஹமாம் சோப் வாங்க காசில்லாமல் தவித்ததை...
   ஒரு முறை தனது பிறந்த நாள் விழாவில் சொன்னார்.

   இப்போது மீண்டும் கஷ்டப்படுகிறார்.
   தமிழ் ரசிகர்கள் விஸ்வரூப வெற்றியை வழங்கி...
   ‘ஹாலிவுட் மாளிகையில்’ குடி அமர்த்துவர்.

   Delete
 6. வேறு யாராக இருந்தாலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கமர்ஷியல் படங்கள் எடுக்கத்தான் ஓடியிருப்பார். ஆனால் இவ்வளவு கடன்களுக்கு இடையிலும் தான் காதலிக்கும் சினிமாவுக்காக உழைத்துக்கொண்டே இருக்கும் ஓர் அற்புதமான கலைஞன் கமல். லவ் யூ கமல் சார்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பு மீண்டும் அவரை செல்வந்தராக்கும்.

   Delete
 7. இதுக்குத்தான் முன்னமே 'விடாமுயற்சி "விஸ்வரூப" வெற்றி'ன்னு சொல்லி வைச்சாங்களோ!

  ReplyDelete
  Replies
  1. விஸ்வரூபம் வெற்றியடையத்தான் போகிறது.
   ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிக்கத்தான் போகிறார்.
   அதற்குப்பிறகு ஹாலிவுட் அவரை விடாது.

   Delete
 8. விஸ்வரூபம் வென்று இதையெல்லாம் ஈடு கட்டும் ........
  அற்புத கலைஞனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .....

  ReplyDelete
  Replies
  1. நமது வாழ்த்து பலிக்கும்.

   ஏனென்றால் நாம் நல்லவர்கள்.

   Delete
 9. கமல் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பிரமிக்க வைக்கின்றது...விஸ்வரூபம் வெற்றிபெற வாழ்த்துக்கள் நான் பெர்ஸ்ஸோ போய் பார்ப்பதாக இருக்கின்றேன்

  ReplyDelete
  Replies
  1. உலகமே அவரை வாழ்த்தும் போது அந்த அன்புக்கடலில் நீந்தி கரையேறி விடுவார்.

   நன்றி நண்பரே.

   Delete
 10. லேட்டா வந்தேன்..கடந்த பதிவை மிஸ் பண்ணதில் வருத்தம் அண்ணா...
  ஒரு உண்மை அண்ணா..பிளாகிங் உலகத்துக்கு காலடி எடுத்துவைக்கும் முன்பு கமல் அவர்களை எனக்கு அவ்வளவாக பிடிக்காது..ஒருவேளை "ஸ்டைல்" படங்களின் மீது ஆசைகள் இருந்ததாலோ என்னவோ..
  ஆனால், இந்த பிளாகிங் உலகம் குறிப்பாக தங்களது ஒவ்வொரு பதிவுகளும் என்னை ஒவ்வொரு விதத்தில் கவர்ந்து வருகிறது..கமல் ஹாசன் என்னைப்போன்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு இன்ஸ்பிரேஷன்..திரைத்துறையில் அவரது பங்களிப்பும் அர்ப்பணிப்பும் என்ன சொல்வது ?..இன்றுதான் மறுபடியும் சலங்கை ஒலி பார்த்தேன்..மனசுலேயே நிற்கிறாரு.
  இந்தப்பதிவு படித்தப்பிறகு என்னவோ மனசுல செய்யுது..வந்தோமா காசை பார்த்தோமானு இருக்கிற சினிமா உலகில் கமல் வைரம் மாதிரி..அவரை பொக்கிஷமாக பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்திய சினிமாவுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் உண்டு.விஸ்வரூபத்தை முழு மனதோடு ஆதரித்து வெற்றியடைய துணை நிற்ப்போம்.
  உண்மையான கலைஞன் + படைப்புகளுக்கு தோல்வி என்பது இல்லை..கமல் சினிமா வரலாற்றில் பலரும் முழுமையாக புரிந்து, அறிந்துக்கொள்ளாத அத்தியாயம்.பதிவுக்கு நன்றிகள் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தம்பி குமரா...எனது வீடு விற்கும்போது கூட நான் கவலைப்பட்டதில்லை.
   இச்செய்தி படித்ததும் கலங்கி விட்டேன்.
   அவர் பார்த்து பார்த்து கட்டிய வீடு.
   அவரைப்போலவே அந்த வீடும் தனித்துவமாக இருக்கும்.
   அந்த வீட்டை காதலித்த சினிமாக்காரர்கள் ஏராளம்.

   செய்தி கேட்டு,எனது நண்பர் நொறுங்கி விட்டார்.
   பத்து வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் உரிமையோடு புழங்கியவர்.
   அவர் அந்த வீட்டில்,கமல் குழந்தைகளுக்கு களிமண்ணில் பொம்மை செய்து விளையாட கற்றுக்கொடுத்தவர்.

   நாங்கள் இருவருமே சினிமாவைத்தாண்டி அவரை நேசிப்பவர்கள்.

   Delete
 11. உங்களின் பதிவை படிக்கும் முன்பே சில இணைய தளங்களில் நான் வாசித்த செய்தி இது. என்றாலும் நீங்கள் பல விஷயங்களோடு இதை சொல்லி இருப்பதால் ஒரு வித எதிர்பார்ப்போடு இதை படித்தேன். நான் ஏற்கனேவே கூறியபடி கமலஹாசனை பற்றி நான் விதமான விமர்சனங்களை எழுதி இருந்தாலும் தமிழ் சினிமா உலகில் சிவாஜி என்கிற மாபெரும் நடிகனுக்கு பிறகு இங்கே கமலை தவிர வேறு யாரும் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. கமலின் நடிப்பின் மீது எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் கமல் என்கிற மனிதனின் மீது எனக்கு ஒரு விஷயத்தில் மரியாதை உண்டு.இந்த தமிழ் சினிமாவில் ஒரு நடிகன் தான் சம்பாதித்த பணத்தை அதே சினிமாவிலேயே முதலீடு செய்வது கமல் மட்டுமே. தமிழ் சினிமாவை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற கலை தாகம் உள்ள நடிகன் கமல் மட்டுமே.இப்போது இந்த செய்தி மிகுந்த மனவருத்தத்தை கொடுக்கிறது. கமல் நினைத்திருந்தால் பல அட்டகத்தி வீரர்களை போல சொகுசு வாழ்கையை தொடர்ந்திருக்கலாம் . ஆனால் கமல் ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்யும் நடிகன், விஸ்பரூபம் ஓடுமா அல்லது வீழுமா என்பது தெரியவில்லை ஆனால் எது எப்படி இருந்தாலும் கமல் என்கிற இந்த நடிகன் நிற்கப்போவதில்லை என்பது மட்டும் எனக்கு தெரிந்த உண்மை. இந்த கலை பசி தான் இந்த நடிகனை இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...
   கமலை அறவே பிடிக்காதவர்கள் கூட,
   தமிழ் சினிமாவுக்காக அவர் நடத்தும் தேடுதல் வேட்டையை சிலாகிப்பார்கள்.

   நாம் அவர் வீட்டை விற்று விட்டதற்கு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
   அவர் அடுத்தப்படத்தை 48 பிரேம்களில் உருவாக்க சிந்தித்துக்கொண்டிருப்பார்.

   நன்றி.

   Delete
 12. அண்ணே என் வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன். இன்னும் அது தொடர்கதையாகத்தான் இருக்கிறது. மிகப் பெரிய உயரத்தில் உள்ள மனிதர்களை, அவரகளுடன் சரி சமமாக அமர்ந்து பேசும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது, அதே சமயம் மிக கீழ் நிலையில் உள்ள மனிதர்களால் கூட உதாசீனப்படுத்தப்படுவதும், அவமானபடுத்தப் படுவதும் எனக்கு நடந்து இருக்கிறது. வரவுகளும் இழப்புகளும் கூட அப்படித்தான். உடைந்து போகும் நிலையில் இருக்கும் போது நான் Reference point ஆக எடுத்துக் கொள்வது கமலை தான். எத்தனை வெற்றிகள், உயரங்கள், எத்தனை தோல்விகள், கேலிகள். ஆனால் துவளாமல் இன்னும் உயரம் நோக்கி ஓடிக்கொண்டே இருப்பது தான் கமலிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம். மகாநதியில் மிக அழகாக பாரதியின் இந்த பாடலை தன் வாழ்கையை பற்றிய கூற்றாக பயன் படுத்தி இருப்பார்.

  தேடி சோறு நிதம் தின்று பல
  சின்னஞ் சிறு கதைகள் பேசி மானம்வாடி
  துன்பம் மிக உழன்று பிறர்வாழ
  பல செயல்கள் செய்து நரைகூடி
  கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு
  இரையென மாயும்பல வேடிக்கை
  மனிதரை போல நான்
  வீழ்வேனென்று நினைத்தாயோ?

  கமலிடம் நான் ரசிப்பது இந்த போராட்ட குணம் தான். வெற்றி, தோல்விகள் தற்காலிகம். இயங்கிக் கொண்டே இருப்பது தான் நிரந்தரம். கமல் ஒரு நிரந்தரம்.

  ReplyDelete
  Replies
  1. வாவ்...சூப்பர்.
   அசத்தி விட்டீர்கள் பின்னூட்டத்தில்.
   படிக்கும் போதே எனர்ஜி ஏறுகிறது.
   நன்றி நண்பரே!

   என்னிடம் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
   அடுத்த வீட்டை ‘ஹாலிவுட்டில்’ கட்டுவார்.

   Delete
 13. கண்ணீர் வரவச்சுட்டிங்க சார்.... கமலுக்கு துணை நிற்போம்.

  ReplyDelete
 14. கணணீர் வரவச்சுட்டிங்க சார்.... கமலுக்கு துணை நிற்போம்.

  ReplyDelete
 15. கடின உழைப்பிற்கு என்றுமே உற்சாகமான உயர்வு கிடைக்கும் சார். பதிவு அருமை. உண்மையிலே கலங்கிட்டோம்.

  ReplyDelete
 16. வாவ் சல்யுட் கமல் சார்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.