May 26, 2013

அடித்தது போலிஸ்...தடுத்தது டி.எம்.எஸ்.


நண்பர்களே...
அரை நூற்றாண்டுகளாக தமிழர்களின் செவிக்குணவளித்த...
‘அழகிய தமிழ் மகன்’ நேற்று தனது இசை மூச்சை அடக்கிக்கொண்டான்.
இரண்டு திலகங்களுக்கு குரல் கொடுத்த நாவுக்கரசன் அவன்.
இனியும் அவர்களுக்கு குரல் கொடுப்பேன் என விண்ணுலகம் ஏகி விட்டான்.
அவன் விட்டுச்சென்ற குரலில் பாடி, மண்ணுலகம் என்றும் மகிழ்ந்திருக்கும்.


நான் ஆறாவது வகுப்பு படித்த நேரம்.
திருச்செந்தூர் கோவிலில் ஆவணி மாதத்திருவிழா.
டி.எம்.எஸ். கச்சேரி என்றதும் நெல்லை மாவட்டமே திரண்டு வந்து விட்டது.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஆணைப்படி டி.எம்.எஸ் அவர்கள் பக்தி பாடல்கள் மட்டும் பாடினார்.
வந்திருந்த கூட்டமோ, சினிமா ரசிகர்கள் கூட்டம்.
 ‘சினிமாப்பாட்டு பாடு’ என ஆர்ப்பரித்தது.
கூட்டத்தினரின் வெறிக்கூச்சல் கட்டுக்கடங்காமல் போகவே,
போலிஸ் தடியடி நடத்தியது.
கூட்டம் கலைந்து ஓடியது.
உட்கார்ந்து பாடிய டி.எம்.எஸ் எழுந்தார்.
மைக்கை கையில் எடுத்தார்....பாடினார்.
“ லவ் பண்ணுங்க சார்...நான் வேணாங்கல...
அது லைப் பிரச்சனை சார்...அது விளையாட்டல்ல...”
லத்தியால் துரத்தி அடித்த காவல்துறையினர் நின்றனர்.
திகைத்தனர்.
ஓடிய ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்து திரும்ப வந்தது.

பாடலை பாடி முடித்த டி.எம்.எஸ்,
ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“ நீங்கள் அடிபடுவதை காணச்சகியாமல்தான் சினிமா பாட்டைப்பாடினேன்.
உங்களுக்காக சினிமாப்பாடலையும் பாடுகிறேன்.
ஆனால், அடுத்த பாடல் எனக்காக என் முருகப்பெருமானை துதித்து பக்திப்பாடல் பாடுவேன்.
ஒத்துழைப்பு தாருங்கள்” என்றார்.
அதே போன்று மாற்றிமாற்றி பாடி விழாவை நிறைவு செய்தார்.
அதிலும் எம்ஜியார்,சிவாஜி படப்பாடல்களை சம அளவில் கலந்து பாடினார்.

 “ பாட்டும் நானே...பாவமும் நானே...”
பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன்...
உச்சரித்து நடிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன்...
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த டி.எம். சவுந்தர் ராஜன்...”

ஆஹா...ஆஹா...பொற்காலத்தில் அல்லவா வாழ்ந்திருக்கிறோம் !
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த ‘சங்கங்களை’ ... 
என்றும் நினைவில் நிறுத்துவோம்.


14 comments:

 1. வசந்த மாளிகை..இவரின் குரலும் திலகத்தின் நடிப்பும்...இன்னும் காலத்தால் அழியாதவை..

  ReplyDelete
  Replies
  1. திருக்குறள் வாழும் வரைக்கும்...
   டி.எம்.எஸ்ஸின் ‘திருக்குரல்’ ஒலித்துக்கொண்டே இருக்கும்...
   தமிழ் இல்லங்களில்.

   Delete
 2. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
  இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. பாடலை பாடியவருக்கும்...
   பாடி நடித்தவருக்கும்...
   இவ்வரிகள் என்றும் பொருந்தி இருக்கும்.

   Delete
 3. அன்பின் உலக சினிமா இரசிகன் - அருமையான அஞ்சலியாக - மலரும் நினைவுகளைப் பகிர்ந்தது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. 1961ல் பிறந்தவன் நான்.
   கருவிலேயே டி.எம்.எஸ் குரல் கேட்டு வளரும் பாக்கியம் பெற்றவன்.
   எத்தனையோ மனம் கவர்ந்த பாடகர்கள் இருந்தாலும்,
   டி.எம்.எஸ் அவர்களை சற்று அதிகமான உயரத்தில் வைத்து கொண்டாடுவேன்.
   அந்த இசை மாமணிக்கு தமிழர்கள் அனைவரும் செஞ்சோற்றுக்கடன் பட்டவர்கள்.
   நண்பர் சீனா...நீங்களும் இக்கருத்தோடு உடன்படுவீர்கள்தானே!

   Delete
 4. இலங்கையில் இவருக்கு சிங்கள ரசிகர் பல்லாயிரம் பேர் உள்ளார்கள்.
  தமிழர் வாழ்வுடன் ஒன்றிய குரல்.
  அவர் ஆத்மா சாந்தியுறும்.
  //“ பாட்டும் நானே...பாவமும் நானே...”
  பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன்...//
  பல ஆண்டுகளுக்கு முன் படித்தது, இப்பாடலை எழுதியது வேறு ஒரு கவிஞர் அவர் ஒரு முஸ்லீம், அவர் ஒப்புதலுடன் இப்பாடல் கண்ணதாசன் பாடல் என படத்தில் இடப்பட்டது.
  இதன் உண்மை பொய் அறியேன், ஆனால் கண்ணதாசன் வாழும்
  காலத்தில் அச் செய்தி வந்தபோதும் , மறுப்பு ஏதும் எழவில்லை.

  ReplyDelete
  Replies
  1. >>> //“ பாட்டும் நானே...பாவமும் நானே...”
   பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன்...//
   பல ஆண்டுகளுக்கு முன் படித்தது, இப்பாடலை எழுதியது வேறு ஒரு கவிஞர் அவர் ஒரு முஸ்லீம், அவர் ஒப்புதலுடன் இப்பாடல் கண்ணதாசன் பாடல் என படத்தில் இடப்பட்டது.
   இதன் உண்மை பொய் அறியேன், ஆனால் கண்ணதாசன் வாழும்
   காலத்தில் அச் செய்தி வந்தபோதும் , மறுப்பு ஏதும் எழவில்லை.<<<

   நண்பர் யோகன் பாரிஸ்...கூறும் கருத்து எனக்கு புதிய செய்தியாக இருக்கிறது.
   இத்தகவலின் உண்மைத்தன்மையை அறிய எனது திரையுலக நண்பர்கள் மூலம் நிச்சயம் முயற்சிக்கிறேன்.

   Delete
  2. //////“ பாட்டும் நானே...பாவமும் நானே...”
   பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன்...//////

   இந்த இணைப்பை பாருங்களேன்

   Delete
  3. நண்பரே....
   நீங்கள் கொடுத்த இணைப்பில் சென்று பார்த்தேன்.
   இப்புதிருக்கு விடை கிடைக்கவில்லை.
   இனியும் விடை கிடைக்குமா என்பது தெரியவில்லை.

   எது உண்மை ? என்ற கேள்விக்கு பதில் இதுதான்.
   ஒவ்வொரு மனிதனும் தான் எதை உண்மையென்று நம்புகிறானோ...
   அதுதான் உண்மை.

   Delete
 5. இரு திலகங்களுக்கும் குரல் கொடுத்தவர் இனியும் குரல் கொடுக்க விண்ணுலகம் ஏகிவிட்டார்- அழகாகச் சொன்னீர்கள் ஸார். 1966ல் பிறந்த எனக்கும் சிறு வயதிலிருந்தே அவர் குரல் கேட்டு வளரும் பாக்கியம் கிடைத்தது என்பதிலும், அவர் எங்க ஊர்க்காரர் என்பதிலும் மகிழ்ச்சி. அவர் உடலுக்கு மட்டும் தான் மரணம் என்றே என் மனம் இப்போதும் சொல்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ‘நான் நிரந்தரமானவன்...அழிவதில்லை.
   எந்த நிலையிலும் எனக்கு...மரணமில்லை.’
   இவ்வரிகள் பாடலை எழுதியவருக்கும் மட்டுமல்ல...
   பாடியவருக்கும் பொருந்தும்.

   நண்பர் பாலகணேஷ் வருகைக்கு நன்றி.

   Delete
 6. மக்கள் திலகம் அவர்களி்ன் வாயசைப்பில் பல தத்துவப்பாடல்களுக்கு உயி்ர் கொடுத்தவர். இவர் பாட அவர் வாயசைக்க நிரந்தரமாக எம் உள்ளங்களில் உயிரோடு. இறவாவரம் பெற்ற பாடல்களாய் நிலைத்து நிற்கும்.

  ReplyDelete
 7. ஆம்...மிகச்சரியாகச்சொன்னீர்கள்.
  நூற்றாண்டுகள் கழித்தும் இப்பாடல்கள் அவர்களை,
  வாழ வைத்துக்கொண்டிருக்கும்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.