May 13, 2013

இளையராஜா - பாகம் 5


நண்பர்களே...
பாரம்பரிய இசைக்கோட்பாடுகளை...விதிகளை மீறி இளையராஜா இசையமைப்பது பற்றி மிக விளக்கமாக செழியன் எடுத்துரைப்பதை இப்பதிவில் காண்போம்.

ஒரு முறை எனது இசை வகுப்பின் ஆசிரியர் மேற்கத்திய இசையின் கூட்டுச்சுரங்கள் [ chord ] பற்றிய பாடத்தில்  'C'  மேஜர் ஸ்கேல் பற்றிய பாடத்தை நடத்தினார்.
அப்போது 'C' மேஜர் ஸ்கேலின்... முதல் கார்டு 'C' மேஜர்.
இரண்டாவது கார்டு... 'D' மைனர் [ 'D' minor ].
ஒரு பாடலின்  'ஏற்பாட்டில்' [ arrangements ] இந்த இரண்டு 'கார்டு'களையும் அடுத்தடுத்து இசைப்பது தவறானது என்று சொன்னார்.

கர்நாடக சங்கீதத்திலும்  'ஸட்ஜமம்' என்கிற முதல் ஸ்வரத்திற்கு,
அதற்கு அடுத்து வருகிற இரண்டாவது ஸ்வரமான  'ரிஷபம்' பகை ஸ்வரம்.
இது போலவே மேற்கத்திய இசையிலும் முதல்  'கார்டு' அதற்கடுத்த இரண்டாவது  'கார்டு' உடன் இணைந்து வருவதில்லை.
[ முதல்  'கார்டு', 'டானிக் கார்டு' என்றும் [ tonic chord ],
இரண்டாவது 'கார்டு'...'சூப்பர் டானிக் கார்டு' [ super tonic chord ] என்றும் அழைக்க வேண்டும் ]

 ‘உதிரிபூக்கள்’ படத்தில்  ‘அழகிய கண்ணே’ பாடலைக்கேட்கும்போது
அந்தப்பாடலின் துவக்கமே 'C' மேஜர், 'D' மைனர் ...என இரண்டு 'கார்டு'களின் அடுத்தடுத்த தொடர்ச்சியோடு இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

இதைப்போல 'ஹார்மனி' [ harmony ] பற்றிய பாடத்தில் ஒரு இசையை இயற்றும்போது
ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்த ஸ்வரத்திற்கு நகருகையில் ஒரு ஒழுங்கான இயக்கம்  [ Movement ] இருக்க வேண்டும்.
முதல் ஸ்வரத்திலிருந்து, ஏழாவது ஸ்வரத்திற்கு தாவுதல் போன்ற
 'கிரேட் ஜம்ப்' [ great jump ] செய்யக்கூடாது.
அது இனிமையாக இருக்காது என்பது இசைக்கோட்பாடு.
இசை விதியும் கூட.
 ‘செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே’ என்ற  ‘16 வயதினிலே’ படப்பாடலை கேட்கும் போதும், 
‘என்னுள்ளே எங்கோ...ஏங்கும் கீதம்’  என்ற  ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படப்பாடலின் 'ஹம்மிங்' கேட்கும் போதும், 
இந்த விதி இவரால் எவ்வளவு அழகாக மீறப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது.

இவை மிகச்சிறிய உதாரணங்கள்.
இது போல மேலோட்டமாகப்புலப்படாத,
இசை விதிகளுக்கு முரணான மீறல்களை தனது பாடல்கள் பெரும்பாலானவற்றில் நிகழ்த்துவதன் மூலம் விதிகளை திருத்தி எழுதியுள்ளார்.

இது போலவே ‘மலர்களே...நாதஸ்வரங்கள்’ என்ற பாடலின் முடிவு அந்தரத்தில் ஒரு மணியோசையோடு முடியும்.
 'கேடன்ஸ்' [ cadence ] விதிகளின் இனிமையான மீறல் இது.

இசை கற்று, ஒரு பாடலை ஏதேனும் இசைக்கருவியில் வாசித்துப்பார்க்கும் போதுதான் ராகங்களை, அதன் கடினத்தன்மையை எப்படியெல்லாம் இவர் இனிமையாக்கியிருக்கிறார் என்பது புரியும்.
 'கார்டு புரோகிரஸ்ஸனில்' [ Chord progression ] 
 'டிஸ்கார்டு' [ dischord ] என்று ஒதுக்கப்படுபவைகளைக்கூட,
இவர் இனிமையாக கையாள்கிற விதம் ஆச்சரியமானது.
 ‘ என் வானிலே...ஒரே வெண்ணிலா’ என்ற ஜானி படப்பாடலின் ஸ்வரங்களின் முரனான தொடர்ச்சியும், 
அதன் போக்குகேற்ப புனையப்படும்  ‘கார்டு'களின் தொடர்ச்சியும் அலாதியானது.

பொதுவாக இவர் ஒரு மெட்டினை இயற்றுகிற விதமே தலைகீழானது.
ஒரு பாடலின் கட்டமைப்பை ஆய்ந்து பார்க்கிற போது இவ்வாறு தோன்றுகிறது.
எப்போதும் ஒரு மெட்டு இயற்றப்பட்டு,
அதன் பிறகு அதன் போக்குக்கேற்ப அதற்கான ஏற்பாடுகளை
[ arrangements ] எழுதுவதுதான் இயல்பு.
ஆனால் இவரது பாடல்களின் சூட்சுமத்தை அறிய நேர்கிற போது,
அவர் முதலில்  ‘கார்டு'களின் [ chord ] தொடர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டு அதன் போக்குக்கேற்ப பாடலின் மெட்டை வளைத்துக்கொள்வதாக தோன்றும்.
இவ்வாறான தலைகீழ் விகிதத்தினால் ராகங்களின் அநாயச மீறலும்,
கற்பனைக்கு எட்டாத மெல்லிசை இனிமையும் கூடி வருகிறது.

கலைடாஸ்கோப்பில் வண்ணவண்னமான வளையல் துண்டுகளின் சேர்க்கையை,
அவை வரையும் அழகான கோலங்களை,
கற்பனை மூலம் முன்னரே திட்டமிட முடியாது.
ஆனால் ஒரு சிறு அசைவின் மூலம்,
ஒரு சிறு இயக்கத்தின் மூலம்,
ஒரு சிறு  ‘கமகத்தின்’ மூலம் ஸ்வரங்களால் ஆன கலைடாஸ்கோப்பில் இவர் இயற்றும் இசைக்கோலங்கள் அற்புதமானவை.
ஏழு ஸ்வரங்களால் ஆன தகவமைவு [ probability ] மூலம்
தனது  கலைடாஸ்கோப்பின் கண்ணாடிப்பட்டகங்களை,
தேவைக்கேற்ப அதிகரிப்பது அல்லது குறைப்பதன் மூலம்,
கணக்கிட முடியாத பிம்ப அடுக்குகளை,
பரிமாணத்தை ஏற்படுத்துகிறார்.
‘இசையமைப்பது எளிதான வேலை’ என்று,
தனது நேர்காணலில் கூறுவதன் யுக்தி,
இந்த செயற்பாடுகளின் மூலம்தான் என்பதை நம்மால் உணர முடிகிறது.

ஒரு மைத்துளி நீர்ப்பரப்பில் உதிரும்போது,
உள்வரையும் சித்திரம் போல,
இவரது படைப்புச்செயல்பாடு தன்னிச்சையாக,
விதிகளை பொருட்படுத்தாமல் தனக்குள்ளாக,
ஒரு இயங்குதலோடு நிகழ்கிறது.


எழுதியவர் : செழியன்
நூல் : பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள் ]
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

நண்பர்களே...
இளையராஜா இலக்கியம், ஓவியம், புகைப்படம் போன்ற
பல்வேறு கலைகளில் பயன்படும் உத்தியை,
தனது இசைப்படைப்புகளில் புகுத்தும் பரிட்சார்த்த முயற்சிகளை,
செழியன் விளக்குவதை...
அடுத்தப்பதிவில் காண்போம்.

7 comments:

 1. செழியனின் 'பேசும் படம்' புத்தகம் இவ்வழியில் பலரை சென்றடைவது மகிழ்ச்சியாக உள்ளது.நானறிந்த வரையில் செழியன் அளவிற்க்கு சினிமாவை நேசிப்பவரை நான் கண்டதில்லை.

  ReplyDelete
  Replies
  1. செழியன் இசையை முறைப்படி கற்று...அதன் மூலம் இளையராஜாவை ஆய்வு செய்து எழுதி உள்ளார்.
   முடிந்தவரை எளிதாக அழகுத்தமிழில் படைத்துள்ளதே அவரது சிறப்பு.

   Delete
 2. அருமையான ஆய்வு செழியனுடையது.
  வெறுமனே துதிபாடலாக இருக்காது ராஜாவின் இசையை TECHNICAL ஆக ஆய்வு செய்துள்ளார். தமிழ் இசை உலகத்துக்கு அற்புதமான இசை ஞானம் உள்ள ஆய்வாளர் கிடைத்துள்ளார்.
  இசை தொடர்பான technical அறிவு சிறிதும் இல்லாத ஒரு ஒழுத்தாலர் தான் செய்வதுதான் சிறந்த இசை விமர்சனம் என்று சொல்லிவந்தார். அந்த காம எழுத்தாளர் இனி வாயை திறக்க கூடாது.
  (அவரின் இசை விமரிசனம் என்னவென்றால் ஒரு பாடல்/இசை குறிப்புக்கு லிங்க் தருவார்.அந்த பாடலை தெய்வீக இசை, தேவ இசை என்று குறிப்பு தருவார். அந்த இசையை கண்ணை மூடிக்கொண்டு கேட்க வேண்டும் என்று அரிய ஆலோசனையும் தருவார். இதுதான் அவரின் இசை அறிவு )

  ReplyDelete
 3. இதில் வரும் ஏதாவது ஒரு technical term நம்ம காம எழுத்தாளர் cum இசை விமர்சகருக்கு தெரிந்திருக்குமா ?
  minor, major மட்டும் தெரிந்திருக்கும் ஆனால் வேறு அர்த்தத்தில்

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...நீங்கள் சொல்லும் எழுத்தாளர் ஹார்மோனியம் வாசிப்பது போல் ஒரு பாடலுக்கு ஆடிப்பாடி நடித்தாரே...அவர்தானே !
   அவர், அந்த ஞானம் போதும் என்று நினைத்து இசை விமர்சனம் என்ற பெயரில் ஜல்லி அடிக்கிறார்.
   காலக்கொடுமை.

   வருகைக்கு நன்றி தோழரே.

   Delete
 4. தெளிந்தேன் இசை நுணுக்கும் பற்றி!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.