Oct 9, 2013

இப்போது மட்டுமல்ல...எப்போதுமே ‘நினைத்தாலே இனிக்கும்’!.நண்பர்களே...
நேற்று பதிவுலக நண்பர் ‘மின்னல் வரிகள்’ பால கணேஷ்  எச்சரிக்கையை புறக்கணித்து...
நானும் நண்பர் ‘கோவை நேரம்’ ஜீவாவும்  ‘நினைத்தாலே இனிக்கும்’
படத்தை பார்த்து விடத்துணிந்தோம்.
கோவை ராயல் தியேட்டரின்,  ‘சோமலியா பிரஜை’ போன்ற தோற்றம் அச்சமூட்டியது.
பால்கனி டிக்கெட் கட்டணமான  ‘30 ரூபாய்’ ஆச்சரியமூட்டியது.

பாதிக்கு மேல் இருக்கைகள் உடைந்து கிடந்தது.
மூட்டை பூச்சியும், கொசுவும் இணைந்து இடையறாமல் தாக்கிக்கொண்டு இருந்தது.
ஒரு வித ‘முடை நாற்றம்’ நாசியை பதம் பார்த்தது.
இவைகள் அனைத்தும் தங்கள் பணியைச்செய்ததை நான் உணர்ந்தது...
‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற டைட்டில் போடும் வரைதான்.
அதற்குப்பிறகு என்னைச்சுற்றி இருந்தது
‘இயக்குனர் கே.பாலச்சந்தரின் பரிவாரங்கள்தான்’.


எம்.எஸ்.வி, தன் நண்பரோடு இணைந்து...
என் காதுகளை நிரப்பிக்கொண்டு இருந்தார்.
இயக்குனர் கே.பாலச்சந்தர், மனம், மணம் எல்லாவற்றிலும் நிரம்பி ததும்பிக்கொண்டு இருந்தார்.
இப்படம் வெளியான தருணம் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன்.
இப்படத்தை கிட்டத்தட்ட பத்து தடவைக்கு மேலே நண்பர்களுடன் சென்று பார்த்து இருக்கிறேன்.
இப்படத்திலுள்ள ஒரு காட்சியை,  அப்போது புரியாமல் நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன்.
இன்று பார்க்கும் போது ‘எப்பேற்பட்ட குறியீடை’ துணிந்து அந்த காலத்தில் ரசிகப்பெருமக்களை நம்பி இயக்குனர் கே.பி. வைத்துள்ளார் என வியக்காமல் இருக்க முடியவில்லை.


ஜெயப்ரதா தனக்கு ரத்த புற்று நோயால் மரணம் நெருங்கி விட்டதை அறிந்து கமலிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறார்...
சாகும் வரை கமலின் இசைக்குழுவோடு இனைந்து பாடிக்கொண்டு இருக்க வேண்டும் என.
 ‘இனிமை நிறைந்த உலகம் இருக்கு...
இதுல உனக்கு கவலை எதுக்கு...
லவ்லி பேர்ட்ஸ்...’ என்ற கவிஞரின் வார்த்தைகளில்...
எம்.எஸ்.வியின் துள்ளல் இசை பிறக்கிறது.
வெவ்வேறு ஊர்களில் நிகழ்ச்சி நடைபெறுவதை பாடலின் இடையே வரும் பின்னணி இசையில் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர்.
பாடலின் நடுவில் ஜெயப்ரதா வலி தாங்க முடியாமல் திணறுவதை காட்சிப்படுத்துவார்.
அடுத்த ஷாட்டில் வெண் திரையில் ‘பிலிம்’ எரிந்து கருகி சுருள்வதை காட்சிப்படுத்துவார்.
அடுத்த ஷாட்டில் ‘ஜெயப்ரதா’ தவிர மீதி அனைவரும் கருப்பு ஆடை அணிந்து மேடையில் நின்று கொண்டு இருப்பார்கள்.
சில நொடிகள் ‘கனத்த மவுனம்’ இருக்கும்.
கருப்பு வண்னம் பிரதானப்படுத்தப்பட்ட மேடை அலங்காரத்தில்,
‘பாடலின் எஞ்சிய பகுதி’...
 மென் சோகம்+ துள்ளிசை கலந்த கவிதையாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

ஒரு மரணத்தை எவ்வளவு கவித்துவமாக கே.பி. காட்சிப்படுத்தி உள்ளார்!

‘பிலிம் எரியும்’ குறியீட்டுக்கு வருகிறேன்.
அப்போது ‘பிலிம் எரியும்’ காட்சி வந்ததும் தியேட்டரே ‘ஓவென’ அலறி ஆப்பரேட்டரை திட்ட ஆரம்பிப்பார்கள். ஆனால் படம் தொடர்ந்து நடைபெறுவதைக்கண்ட பிறகு அமைதி காப்பார்கள்.
காரணம் அந்த காலத்தில் ‘கார்பன் சூட்டில்’ பிலிம் எரிந்து படம் தடை பட்டு நின்று விடும்.
இதை...ஜெயப்ரதாவின் மரணத்துக்கு குறியீடாக பயன்படுத்திய பாலச்சந்தரின் மகிமை அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இன்றும் சிலருக்கு தெரிவதில்லை.

இக்குறியீடை அன்று எனது நண்பர்களுக்கு நான் இப்படித்தான் விளக்கினேன்.
“ மாப்ளே...ஜெயப்ப்ரதா சாவுறது...
சுடுகாட்டுல வச்சு எரிக்கிறது...
இதை எல்லாத்தையும் விலாவரியா காட்டாம...பாலச்சந்தர் சிக்கனமா ஒரே ஒரு பிலிம் துண்டை எரிய வச்சு நமக்குக்காட்டிட்டாரு!”


இந்த பிலிம் துண்டு எரியும் காட்சி இயக்குனர் இங்மர் பெர்க்மன் இயக்கிய ‘பர்சோனா’ படத்தில் வரும்.
அவர் வேறு அர்த்தம் வருகின்ற வகையில் இக்காட்சியை அமைத்து இருப்பார்.
ஆனாம் நம்ம கே.பி. மிக அற்புதமாக இக்குறியீட்டை கையாண்டுள்ளார்.
பெர்க்மனை விட ‘பவர்புல்லாக’ கையாண்டு உள்ளார் கே.பி.
இது உண்மை.
நான் மிகைப்படுத்தவில்லை.

Persona | 1966 | Swedish | Directed by : Ingmar Bergman.
இப்போது இந்தப்படம் பார்க்கும் போது எத்தனை அழகாக
‘இயற்கையான நடிப்பை’ எளிமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்
ரஜினிகாந்த் என வியந்தேன்.
அற்புதமான நடிகனை ‘சூப்பர் ஸ்டாராக்கி’ சினிமாக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் ‘பின்னாள் இயக்குனர்கள்’.

இந்தப்படம் ‘தேனிசை மழை’ என விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகியது.
விளம்பரங்கள்  ‘உண்மை பேசியது’...இந்த படத்திற்கு மட்டும்தான்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

17 comments:

 1. ஃப்லிம் எரியும் காட்சியை குறிப்பிட்டமைக்கு நன்றி,அப்போதைய படங்களில் அது நிச்சயமாக எக்ஸ்பெரிமென்டல் முயற்சி,இங்மாரின் பெர்சோனாவின் காட்சியையும் குறிப்பிட்டமைக்கு நன்றி,ரஜினியின் இயல்பான நடிப்பு வெகுஜனத்துக்கு பிடிக்கவில்லை,ரஜினியின் சூப்பர்ஸ்டார் இமேஜ் தான் அவர்கள் ரசித்தனர்,ரஜினி அதையே தொடர்ந்து விற்றார்.ரஜினி பாசாங்கில்லாமல் தோன்றிய படங்களில் இது குறிப்பிடவேண்டியது

  ReplyDelete
  Replies
  1. இப்போதாவது...ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனுடன் ஆட்டம் போடுவதை நிறுத்தி விட்டு ‘அமிதாப் பாதையில்’ திரும்ப வேண்டும் ரஜினி.இன்றைய இளைஞர்களிடம் தன்னை முற்றாக அர்ப்பணித்து ஒரு தரமான ‘உலக சினிமாவை’ தமிழுக்கு தர வேண்டும்.

   Delete
 2. ம‌னிதா உன் ஜென்ம‌த்தில்
  என்னாளும் ந‌ன்னாளாம்...
  ம‌றுநாளை எண்ணாதே
  இன்னாளே பொன்னாளாம்...
  ப‌ல்லாக்கைத் தூக்காதே
  ப‌ல்லாக்கில் நீ ஏறு...
  உன் ஆயுள் 90 என்னாளும் 16...!

  அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்...
  தப்பென்னா...? சரியென்ன...?
  எப்போதும் விளையாடு...
  அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே...
  எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே....

  கல்லை நீ தின்றாலும்...
  செரிக்கின்ற நாளின்று...
  காலங்கள் போனாலோ...?
  தின்றாதே என்பார்கள்...
  ஆ...! மதுவுண்டு...
  பெண் உண்டு...
  சோர் உண்டு...
  சுகம் உண்டு...
  மனம் கொண்டு என்றாலே...
  சொர்க்கத்தில் இடமுண்டு...!
  ஹோ டும் டும் ட ட டி .. டிம் டிம் ட ட டி...ட..
  ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ...!
  நெஞ்சம் ஆலயம்....!
  நினைவே தேவதை...!
  தினமும் நாடகம்...! சிவசம்போ
  ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல சிவசம்போ...!
  ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல சிவசம்போ...!

  ReplyDelete
  Replies
  1. 'பாட்டாவே பாடிட்டீங்களா!’

   Delete
 3. Superb movie..Worst digitalization!!

  ReplyDelete
  Replies
  1. ராஜ் டிவிக்காரங்க இந்த அளவுக்கு பண்ணதே...உலக மகா அதிசயம்.
   மணிரத்னத்தின் ‘அஞ்சலியையே’...
   ராமநாராயணனின் ‘குட்டிப்பிசாசாக்கி’ விடுவார்கள்.
   பலே கில்லாடிகள்!

   Delete
 4. "இந்தப்படம் ‘தேனிசை மழை’ என விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகியது.
  விளம்பரங்கள் ‘உண்மை பேசியது’...இந்த படத்திற்கு மட்டும்தான்."

  உலக சினிமா ரசிகரே,
  மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். பாடல்களே இந்தப் படத்தின் வலிமை,இனிமை எல்லாமே.எம் எஸ் வி தான் ஒன்றும் ஓயாதவன் என்பதை அழகாக சொல்லிய படம் இது.

  ReplyDelete
  Replies
  1. சவுண்ட் ஆப் மியுசிக் போல் தமிழில் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் கே.பி.
   எம்.எஸ்.விக்கு கிடைத்த இந்த வாய்ப்பு பின் எந்த இசை அமைப்பாளருக்கும் கிடைக்கப்பெறவில்லை.

   Delete
 5. //இப்போது இந்தப்படம் பார்க்கும் போது எத்தனை அழகாக
  ‘இயற்கையான நடிப்பை’ எளிமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்
  ரஜினிகாந்த் என வியந்தேன்.
  அற்புதமான நடிகனை ‘சூப்பர் ஸ்டாராக்கி’ சினிமாக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் ‘பின்னாள் இயக்குனர்கள்’.//

  ரொம்ப சரியாகச் சொன்னீங்க.. இந்தப்படம், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுவது வரைனு இன்னும் கொஞ்சப்படங்கள் எல்லாத்துலயும் செமயா நடிச்சிருப்பாரு.. தமிழ் சினிமாவுக்கு ஒரு கமல் போதும்னு இயக்குனர்களும், ரஜினியும் முடிவு பண்ணிட்டாங்க போல.. பின் வந்த படங்களில் ஸ்டைலையும் மாஸ்-ஐயும் மட்டுமே பிரதானப்படுத்தி விட்டனர்.

  ReplyDelete
  Replies
  1. எஸ்.பி.முத்துராமன் கோடு போட்டார்.
   பின் வந்த சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார் வகையறாக்கள் ரோடே போட்டு விட்டார்கள்.
   ரஜினிக்கும் இது சவுகரியமாக போய் விட்டது.

   Delete
  2. விம்ர்சனம் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டு விட்டது - இங்மர் பெர்க்மன் இயக்கிய ‘பர்சோனா’ :)

   Delete
  3. /// விம்ர்சனம் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டு விட்டது ///

   நான் எழுதியது விமர்சனமா!
   அநியாயத்துக்கு குசும்புக்காரனய்யா நீர்!

   Delete
 6. சார், Happy Life அர்த்தம் சொல்லுங்க, யோசித்து தலை வெடிச்சிடும் போல இருக்கு. Please....................

  ஜமால் முஹம்மது

  ReplyDelete
 7. மூடர் கூடத்தை பற்றி கேட்டீர்கள்.ஸாரி...அப்போது சொல்ல மறந்து விட்டேன்.
  ஹேப்பி லைப் என்பது கம்யூனிச தத்துவத்தை குறிக்கிறது.
  ஏனென்றால் பொம்மையின் நிறம் சிவப்பு.
  கம்யூனிச தத்துவத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே உண்மையான ‘ஹேப்பி லைப்’.

  இப்போதைக்கு இது போதும்.
  விரிவாக, மூடர் கூடம் ஒரிஜினல் டிவிடி வந்ததும் எழுதுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Thanks. Waiting for brief article about Mooder Koodam.

   Delete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. நண்பரே என் மேல் உள்ள உரிமையோடு கோபித்து உள்ளீர்கள்.அதே உரிமையோடு நான் உங்கள் கமெண்டை நீக்கி விட்டேன்.
  ஏனென்றால் இது விவாதப்பொருளாக மாறுவதை விரும்பவில்லை.
  என்னை போனில் தொடர்பு கொள்ளுங்கள்.
  எனது அலை பேசி எண் 9003917667.
  விரிவாக பேசலாம்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.