Mar 11, 2013

சொர்க்கமே என்றாலும் சொந்த வீடைப்போல வருமா ?


நண்பர்களே...
சொந்த வீட்டின் அருமை...இல்லாதவனுக்குதான் தெரியும்.
பரம்பரை வீட்டில் வசிப்பவர்களுக்கு, வீடற்ற நாடோடி அனுபவம் இருக்காது.
‘மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு’... சொந்த வீடு என்பது நிரந்தரக்கனவு.
பலிக்காத கனவோடு வாழ்ந்து... ‘சமரசம் உலாவும் இடத்தில்’ மக்கிப்போனவர்கள்தான்  ‘மெஜாரிட்டி’.

‘ஐரோப்பிய திரைப்பட திருவிழா’...
கோவையில் குமரகுரு பொறியியல் கல்லூரியில் தினமும்   ‘பெண்களை கொண்டாடி’ வருகிறது.
தொடக்க விழவில் திரையிடப்பட்ட காவியம் ‘த ஹவுஸ்’.
‘ஹவுஸ் திரைப்படம்’ மாணவர்களால் மட்டுமே  ‘ஹவுஸ் புல்லாகியது’.

‘வீடு’  என்ற கனவு நனவாகும் அவஸ்தையை...
செல்லுலாய்டில் செதுக்கியவர்,
தமிழ்நாட்டில்...‘இயக்குனர் பாலுமகேந்திரா’.
ஸ்லோவாக்கியாவில்... 'இயக்குனர் ZUZANA LIOVA'.

இயக்குனர் பெண்ணாக இருப்பதால் ஸ்லோவாக்கியாவில் பெண்களை  எவ்வாறு சங்கிலி கட்டி சுதந்திரமாக ஆடவிட்டிருக்கிறார்கள் என்பதை சுதந்திரமாக சொல்லியிருக்கிறார்.பள்ளி மாணவி ஈவாவின் கனவு... ‘லண்டன் செல்ல வேண்டும்’.
மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும்
ஈவாவின் தந்தையின் கனவு...
‘வீட்டை கட்டி முடிக்க வேண்டும்’.


குறைந்த கூலிக்கு வேலை செய்ய ‘பீகார் மக்கள்’ அங்கு இல்லை.
ஈவாவின் தந்தையே சித்தாள்...பெரிய ஆள்...மேசன்...சகலமும்.


அப்பாவும் மகளும்  ‘உழக்கில் கிழக்கும் மேற்குமாக’ இருக்கிறார்கள்.

தந்தை... ‘பலாப்பழம்’ என்பது தெரியாமல்...
முள் குத்தும் என நெருங்க மறுக்கிறாள் ஈவா.


தந்தையின் கடமை...கண்ணியம்...கட்டுப்பாடை உடைத்தெறிய உழைக்கிறாள் ஈவா.
திருமணமான ஆங்கில வாத்தியாரிடம் ‘உடல் கல்வி’ பயிலுகிறாள்.

கணவனுக்கும்...மகளுக்கும் இடையில் மத்தளமாக தாய்.

ஏன் இந்த இடைவெளி ?
விடை கிடைக்கிறது...ஈவாவின் அக்கா மூலமாக.
பேரக்குழந்தைகளை கூட ஏறெடுத்தும் பார்க்காமல் விரட்டுகிறார் ஈவாவின் தந்தை.
“ வீட்டுக்குள்ளே காலை வைக்காதே ...ஓடு காலி நாயே ”.

அக்காவின் குடும்பம் படும் கஷ்டத்தைக்கண்டு இன்னும் மண்டைக்கு ஏறுகிறது ஈவாவுக்கு.
அப்பாவின் தப்புக்கு... தப்பு பண்ணுகிறாள் பதிலடியாக ஈவா.
மகளின் தப்புக்கு ‘அப்பு’...கொடுக்கிறார் உடனடியாக அப்பா.

[ இக்காட்சி என் தந்தையை நினைவு படுத்தியது.
“என்ன தப்பு செஞ்சாலும் பொட்டை புள்ளய கை நீட்டக்கூடாது” ]

ஆங்கில வாத்தியார் ஆலிங்கனம் செய்தது அம்பலத்துக்கு வருகிறது.
வாத்தியாருக்கு வேலை போகிறது.
ஈவாவுக்கு படிப்பு போகிறது.

தந்தை அடிக்க பதிலடியாக ஈவா வீட்டை விட்டு ஓடுகிறாள்.

ஈவா திருந்தி & திரும்பி வந்தாளா ?
ஈவாவின் தந்தை மூத்த மகளை ஏற்றுக்கொண்டாரா ?
வீடு கட்டி முடிக்கப்பட்டதா ?
முக்கியமாக ஈவாவின் தந்தையை...
[குடும்பத்தினருக்கு தெரியாமல்  மறைத்த] இருதய நோய் பலி கொண்டதா ?
ஈவாவின்  ‘லட்சிய லண்டன்’ போனாளா ?
இத்தனை கேள்விகளுக்கும் விடையாக இருப்பது ‘கிளைமாக்ஸ்’.

இந்தக்கேள்விகள் அனைத்திற்கும்...  ‘விசுவல் ட்ரீட்மெண்ட் விடையை’
படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஐரோப்பிய திரைப்பட திருவிழா நடைபெறும் நகரங்களும் தேதிகளும்...
[ கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது ]நண்பர்களே... ‘ஹேராம்’, ‘டச் ஆப் ஸ்பைஸ்’ படங்களுக்கான விமர்சனத்தொடரை முடிக்கும் வரை புதிதாக இனி எந்தப்படத்துக்கும் விமர்சனம் எழுதப்போவதில்லை.
எனவே  ‘உலக சினிமா அறிமுகப்பதிவுகள்’ மட்டுமே தொடரும்.

 ‘த ஹவுஸ்’ படத்தின் காணொளி காண்க...


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

8 comments:

 1. சுருக்கமாக இருந்தாலும் நல்ல விமர்சனம்...

  ReplyDelete
  Replies
  1. இதுதானே என் ஸ்டைல்.

   நன்றி நண்பரே.

   Delete
 2. அருமையான விமர்சனம்..

  ReplyDelete
 3. உலக சினிமா என்ற பதத்தின் உண்மை அர்த்தத்தை HOUSE,ROADS AND ORANGES மற்றும் PIRNSESSA படங்கள் மூலம் நன்கு உணர்ந்தேன் சார்.கற்பூரத்தின் வாசனை அறிந்துகொள்ள மறுத்து திரியும் கோவை மக்களை நினைத்தால் தான் சிறிது கோபம் வருகிறது.ரத்தினச் சுருக்கமான விமர்சனம் !.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து படம் பார்க்க வரும் உன்னைக்கண்டால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
   ‘உலகசினிமாவுக்கு ஒரு அடிமை சிக்கி விட்டான்’

   ‘உலக சினிமா போதை’யில் மயங்கி கிடக்க வாழ்த்துகிறேன்.

   கோவை மக்களை உலகத்தமிழ் மாநாடு போல் விளம்பரம் செய்து உசுப்ப வேண்டும்.
   மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் திரையிடப்பட வேண்டும்.
   அப்போது பார் கூட்டத்தை.

   சுஜாதா சொல்வார்...இனி மெகா சைஸ் விளம்பரங்களால்தான் மக்களை திரட்டமுடியும் என்று.

   Delete
  2. அது தான் சார் என் கோபம் ."தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை,ஈரான் சினிமா துறையை பாருங்கள் ஹாலிவுட்டை பாருங்கள் "என்று கூப்பாடு போடும் இவர்கள் ஏன் நல்ல சினிமாவை நோக்கிச் செல்வதில்லை.ஆக இவர்களது நோக்கம் நல்ல சினிமாவை எதிர்நோக்குவதல்ல ,தமிழ் திரைத்துறையை வசை பாடுவது மட்டுமே.தமிழ் திரைத் துறையை குறை கூறும் யோக்கிதையை கோவை இழந்து விட்டது சார்.

   Delete
 4. சார்.. எனக்கு இதுவும், dark houseஉம் வேணும்.. dark house படம் கிடைச்சுது, subtitle கெடைக்கல.. ஹவுஸ் படமே கெடைக்கல.. உங்க கிட்ட dvd இருக்கா?

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.