Jul 14, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை...குற்றவாளியாக்கிய காவியம்-Part 1


ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் இரண்டாம் நாள்...
இரண்டாம் காட்சியில் காட்டப்பட்ட படம்... முதல் தரமாக இருந்தது.
மருத்துவமனையில் 14 வயது சிறுமியின் உயிர் பிரிகிறது.
பாதிரியார்கள்,டாக்டர்கள்,நர்ஸ்கள் கை தட்டுகின்றனர்.
இந்தக்காட்சி ஏற்படுத்திய அதிர்ச்சியை எழுத்தில் கொண்டு வர முடியாது.
கமினோவில்...அதிர்ச்சிகளை அடுக்கி கொண்டே போயிருக்கிறார் இயக்குனர்.
அதிர்ச்சிகள் அனைத்தும் நிஜம்.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக சப்-டைட்டில் வரவில்லை.
முதன் முதலாக... சப்-டைட்டில் இல்லாமல் ...பார்க்கும் பொன்னான வாய்ப்பு.
படத்தின் ஆன்மாவை... மிக நெருக்கமாக...சில சமயங்களில் முழுமையாக தரிசிக்க முடிந்தது.
கிடைத்த நீதி...இனி உலகசினிமாவை  ‘முதல் தடவை’ சப்-டைட்டில் இல்லாமல் பார்க்க வேண்டும்.

1985ல் Alexia Gonzalez-Barros என்ற 14 வயது வாழைக்குருத்தை  ‘நோயும்’...
‘கிருத்துவ தீவிரவாதமும்’ உருக்குலைத்த...உண்மை சம்பவத்தை படமாக்கி உள்ளார் இயக்குனர் Javier Fesser.

பிறப்பு...இறப்பு....இரண்டுக்கும் இடைப்பட்ட போராட்டமே வாழ்க்கை.
இப்போராட்டத்தை கடக்க, மதங்களும்...மருத்துவம் உள்ளிட்ட அறிவியல்களும்... உதவுகிறதா? என்ற கேள்விதான்,
இப்படத்தின் மையப்புள்ளியாக இயங்குகிறது.

 மருத்துவமனை...
உயிருக்கு போராடும் கமினோ... பாதிரியார்கள்,டாக்டர்கள்,நர்ஸ்கள்,உறவினர்கள் அனைவரும் கமினோவின் தாய் தலைமையில் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ட்ரீட்மெண்டை விட ஜெபிப்பதில்... நம்பிக்கை வைத்த கூட்டம்.

யாரிந்த கமினோ?
அவளுக்கு என்ன?
ஐந்து மாதம் பின்னோக்கி...பிளாஷ்பேக்கில் பயணிக்கிறது படம்.

பட்டாம்பூச்சிகள் படிக்கும் பள்ளிக்கூடம்.
சுறுசுறுப்பு+கலகலப்பு=கமினோ
தன் தோழியிடம் கண்ணடித்து பேசும் கமினோவை வர்ணிக்க நினைப்பதற்குள் அவளது தாயால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறாள்.
நட்ட நடு முதுகில் ஊசி ஏற்றி ரத்தம் எடுக்கப்படுகிறது.
 “டெஸ்ட் ரிசல்ட் வரட்டும்...ஒண்ணும் பயப்படத்தேவையில்லை.”
உலகம் முழுக்க டாக்டர்கள்...இதே டயலாக்தான்.

தோழியோடு டான்ஸ் கிளாசில் சேர ஆசைப்படுகிறாள்.
ஜவுளிக்கடை பொம்மை போட்டிருந்த  டிரஸ்சுக்கு ஆசைப்படுகிறாள்.
இரண்டுமே தாயால் நிராகரிக்கப்படுகிறது.
காரணம்... கர்த்தர்.
தாயார் தீவிரமான கர்த்தர் விசுவாசி.
மூத்த மகள் நூரியை, Opus Dei என்ற கிருத்துவ தீவிரவாத அமைப்பிடம் கொடுத்து விட்டாள்.
அவள்,  மூளைச்சலவை செய்யப்படுகிறாள்.
 “உன் பேமிலி நினைப்பே வரக்கூடாது...
அது பாவம்.
இனி நாங்கள்தான் பேமிலி.
இந்த எண்ணத்தை வளர்த்துக்கொள்... கர்த்தரை அடைய முடியும்.”

கமினோவுக்கு... அப்பா,அக்கா நூரி... என்றால் உயிர்.
கமினோவின் படுக்கைக்கு பக்கத்தில்,
மேரிமாதா சிலையும்,
கமினோ- நூரி இணைந்திருக்கும் புகைப்படமும் இருக்கிறது.
கமினோ தூங்கப்போகும் போது...
 “குட் நைட் அக்கா” என்பது... குறியீடு.

ஸ்டீரியோவில்... துள்ளல் இசை துடிக்க...கமினோ சுழன்றாடும் அழகை,
 மகள் அறியாமல்... சூப்பர்8 எம்.எம். கேமிராவில் படமாக்குகிறார் தந்தை.
நோய்... தனது முதல் சாட்டையை சொடுக்குகிறது.
 ‘சுளீர்’
வலியால் மகளின் நடனம் நின்று போனதை தந்தை கவனிக்கவில்லை.

 எதெற்கெடுத்தாலும் கர்த்தரை கொண்டாடும் அம்மாவிடம் பயம் மட்டுமே.
இருவருக்குமிடையே உள்ள வேறுபாட்டை காட்சி ரூபமாக சொல்லப்படுகிறது.
வீட்டிற்குள் சுதந்திரமாக வளைய வரும் சுண்டெலியை பிடிக்க பொறி வைக்கிறாள் அம்மா.
மாட்டிக்கொணட எலியை... “ மறுபடியும் மாட்டிக்கிட்டியா” என திறந்து விடுகிறாள் கமினோ.
தப்பித்து ஒடும் எலியிடம், “என்றாவது நீ எனக்கு திருப்பி நல்லது செய்வாய்” என்கிறாள்.
படத்தில் இந்த எலி மிக முக்கியமான குறியீடாக காட்டப்படுகிறது.

தோழியின் டான்ஸ் பிராக்டிஸ் கிளாசுக்கு போகிறாள் கமினோ.
அங்கே, அவளது கஸினை பார்த்தவுடன்....வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன...கமினோவுக்கு.
அவனை பார்த்ததும், கமினோவின் விழிகளில் ஏற்பட்ட மின்சாரத்தை சேமித்தால்...
தமிழ்நாட்டின் மின்வெட்டை தீர்த்து விடலாம்.

சமையல் கிளாசில்... தாள முடியாத தோள் வலி ஏற்படுகிறது.
கிளாஸ் முடிந்ததும்...அடைமழையில்....பிரியமானவனை காண...
 அவனது பேக்கரிக்கு வருகிறாள்.
காதலின் சின்னமான...ஹார்ட்டினை வரைந்து  ‘ஐ லவ் ஜீசஸ்’ என எழுதப்பட்ட காதல் கடிதத்தை வைத்திருக்கிறாள்.
ஜீசஸ்...அவனது பெயர்.
பேக்கரிக்குள்...கமினோவின் கிளாஸ்மேட்டோடு...
 ஜீசஸ் அன்னியோன்னியமாக பேசுவதைக்கண்டு...நாமும் உடைந்து போகிறோம்.
அடைமழை கூட.... கமினோவின் கண்ணீர் மழையை மறைக்க முடியாமல் தோற்றுப்போகிறது.

அடைமழையில் நனைந்து வந்த கமினோ...வலியால் துடிக்கிறாள்.
அம்மா: “ நனைஞ்ச டிரஸ்ஸை கழட்டிட்டு...வேற டிரஸ் மாத்தினா சரியாயிரும்.
காலை தூக்கு...”
கமினோ வலியால் கதற மட்டும் செய்கிறாள்.
அப்பா: “ ஏங்கண்ணு...இப்படி பண்ணுற...
காலை தூக்கினாத்தானே அம்மா டிரஸ் மாத்த முடியும்...”
கமினோ: “ இல்லைப்பா...காலைத்தூக்க  நினைக்கிறேன்.
என்னால முடியல....”

நோயின்... கொடூர ஆட்டத்தின்  அத்தியாயம் துவக்கப்பட்டு விட்டது...
மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு...விளக்கப்படுகிறது.
“ஸ்பைனல் கார்டில் ஆப்பரேஷன்...உடனே செய்யப்பட வேண்டும்.
பரலைஸ் ஆவதற்கு, வாய்ப்பிருக்கும்.... கிரிட்டிக்கலான ஆப்பரேஷன்.”

ஆப்பரேஷன் அப்பட்டமாக காட்டப்பட்டு...பார்வையாளனை அதிர வைக்கிறார் இயக்குனர்.
கமினோவின் வலியை... நம் மீது படரச்செய்யும் இயக்குனரின் உத்தி...மிகச்சரியாக வேலை செய்கிறது.
அதே சமயத்தில், ரசிகனை... கிளாஸ்ட்ரோ போபிக் சூழலில் வைத்து...
 அழுந்த வைக்காமல்...ஆசுவாசப்படுத்த, ஒரு தந்திரம் செய்கிறார்.
சர்ரியலிசப்பாணியில்...படம் முழுக்க கமினோவின் கற்பனை காட்சிகளை அமைத்து...அந்த பரவச உலகில் நம்மையும் பிரவேசிக்க செய்து வெற்றி காண்கிறார் இயக்குனர்.
சர்ரியலிஸக்கலையின் மாஸ்டர்... இயக்குனர் லூயி புனுவல் தரத்தில்... இப்படத்தின் சர்ரியலிஸக்காட்சிகள்.... மிகச்சிறப்பாக இருக்கின்றன.

கமினோவின் எலி வருகிறது.
ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து எழுந்து... எலியை தொடர்ந்து ஒடுகிறாள்.
மருத்துவமனையிலிருந்து...அழகிய கடற்கரைக்கு தாவுகிறது. 
அக்கா நூரி...,அவளின் மடியில் ஒரு வாலிபன் படுத்திருக்கிறான்.
அருகில் கிட்டார் இருக்கிறது.
பாய் பிரண்ட் ஜீசஸ்... கமினோவை பார்த்து புன்னகை புரிகிறான்.
தந்தை, சூப்பர் 8 எம்.எம். கேமிராவோடு வந்து படம் பிடிக்கிறார்.
நூரி கிட்டார் வாசிக்கிறாள்.
தண்ணீரில் கமீனோ காலை நனைக்கிறாள்.
சிட்டுக்குருவிகள் சிறகடித்து பறக்கின்றன. 


சிட்டுக்குருவிகள் பறந்து கடப்பதை... மருத்துவமனை ஜன்னல் வழியே கமினோவின் தந்தை பார்க்கிறார்.
கமினோவின் தாய்... பரபரப்பாக ஆப்பரேஷன் தியேட்டரை நோக்கி வருகிறார்.
பின்னணி இசை பரபரப்பாக ஒலிக்கிறது.
காற்று கொடூரமாக வீசுகிறது.
எலி பயத்தில் பதுங்குகிறது.
எல்லோருமே மாயமாக மறைகிறார்கள்.
தண்ணீரில்... மிகப்பெரிய வட்டமாக.... பள்ளம் ஏற்பட்டு... அத்தனை நீரும் நயகரா நீர்வீழ்ச்சி போல் பாய்கிறது.
பள்ளத்திற்குள் கமீனோ இழுக்கப்பட்டு கதறிக்கொண்டே மறைகிறாள்.

இக்காட்சிகளின் குறியீட்டின் விளக்கத்தை அடுத்த பதிவில் காண்போம்.

இப்படம் மட்டுமல்ல...திருவிழாவின் அனைத்து படங்களயும், இணையத்திலிருந்து டவுண்லோடு செய்து தரும் நண்பருக்கு...
இப்பதிவை அர்ப்பணிக்கிறேன்.

டிரைலர் காண...

14 comments:

 1. அருமையாய் சொன்னிர்கள் அண்ணா அடுத்த பதிவுக்கு வெயிட் செய்கிறோம் ரொம்ப ஆவல்....

  ReplyDelete
  Replies
  1. கமினோவுக்கு...மூன்று பதிவுகள் தேவைப்படும் என நினைக்கிறேன்.
   படித்து விட்டு படம் பாருங்கள்.
   கமினோவை மறக்க முடியாதவளாகி விடுவாள்.

   Delete
 2. ரொம்ப நல்ல படம் போல படுகிறது.. அடுத்த பதிவுல விளங்கப்படுத்தி விட்டீங்கன்னா தைரியமா படத்தை தேடலாம்!!

  ReplyDelete
  Replies
  1. இப்பவே படத்தை தேடுங்கள்.
   நீங்கள் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கமினோ இருக்கும்.

   Delete
 3. விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது நண்பரே.
  டவுன்லோட் போட்டு இருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி...நண்பரே!
   படம் பாருங்கள்...கமீனோ உங்கள் தலைக்குள் அமர்ந்து கொள்வாள்.

   Delete
 4. எப்படிதான் இப்படி ரசிக்குறீங்க? பதிவ படிக்கும்போதே கிட்டத்தட்ட படம் பார்த்து விட்ட மாதிரி தோணுது..

  ReplyDelete
  Replies
  1. பி.எஸ்.ஜி.கல்லுரியில் திரையிடப்பட்டதால்...நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்தேன்.
   தினமும் கொண்டாட்டம்தான்.
   பி.எஸ்.ஜிக்கு நன்றி.

   Delete
  2. கலை கல்லூரி எனில் நிச்சயம் இருந்திருப்பேன். மேலாண்மை நிறுவனத்தில் நடந்ததால் வர இயலவில்லை.

   Delete
 5. அவனை பார்த்ததும், கமினோவின் விழிகளில் ஏற்பட்ட மின்சாரத்தை சேமித்தால்...
  தமிழ்நாட்டின் மின்வெட்டை தீர்த்து விடலாம்.

  வாய்பே இல்லாத வரி.......... முழு சினிமா உங்களுக்காக...........

  https://www.youtube.com/watch?v=gFfG4YVc_Uw&feature=related  செ. ஆனந்த்
  திருச்சி.

  ReplyDelete
 6. //அடைமழை கூட.... கமினோவின் கண்ணீர் மழையை மறைக்க முடியாமல் தோற்றுப்போகிறது.//

  //அவனை பார்த்ததும், கமினோவின் விழிகளில் ஏற்பட்ட மின்சாரத்தை சேமித்தால்...தமிழ்நாட்டின் மின்வெட்டை தீர்த்து விடலாம்.//

  நீங்க இவ்வளவு ரெகமண்ட் பண்ணியும் பார்க்காம இருப்பமா? இதோ புறப்பட்டுட்டேன் ... படத்தை தேடிக் கொண்டு. அருமையா எழுதியிருக்கிறீங்க நண்பா.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி நண்பா...

   கமினோ...பார்ப்பவர்களை கலங்கடித்து விடுவாள்.

   Delete

Note: Only a member of this blog may post a comment.